Archive for the ‘SETC’ Category

ஒரு பயணியின் கோபக்குரல்..!

பிப்ரவரி 16, 2009


17-02-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

திடீரென்று திருச்சிவரையிலும் செல்ல வேண்டியிருந்தது. வெள்ளிக்கிழமை இரவு கோயம்பேடு சென்று திருச்சி செல்லும் பேருந்தில் ஏறினேன்.

SETC Super Deluxe Bus. பெயர்தான் சூப்பர் டீலக்ஸ்.. உள்ளே நுழைந்தவுடன் டாஸ்மாக் கடைக்குள் நுழைந்ததுபோல் இருந்தது வாடை. பஸ்ஸை கழுவியே பல நாட்கள் ஆகியிருக்கும்போலிருந்தது.

இருக்கைகளில் இருக்கும் அழுக்கை சுரண்டி எடுத்தாலே இரண்டு பஸ்களை நிரப்பலாம்போல் இருந்தது. இருக்கைகளுக்கு நடுவில் இருந்த கைப்பிடி ஓமக்குச்சி நரசிம்மன் ஸ்டைலில் ஒடிந்து விழுந்தாற்போல் காணப்பட்டது.

கண்ணாடி ஜன்னல்களை இழு, இழு என்று இழுத்த பின்பு, போனால் போகிறதென்று இரண்டு ஸ்டெப்கள் முன்னாடி வந்தது. அவ்வளவுதான்.. கண்ணாடியில் என் முகத்தை பார்த்தபோது இந்திய வரைபடமே தெரிந்தது. திடுக்கிட்டுப் போய் சற்று உற்றுப் பார்த்த பின்புதான் அதிலிருக்கும் தூசிகளும், அழுக்குகளும் தெரிந்தன.

வருகின்ற அனைத்துப் பிரயாணிகளுமே ஜன்னலோர இருக்கைகளே நாடுவதால் பெண் பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகுகின்றனர். “யாராவது இடம் மாறி உட்காருங்கள்..” என்று கேட்டாலும் ஈகோ பிரச்சினையை ஏற்படுத்தி, “அவரை இங்க வரச் சொல்லு.. முடியாது அவனை இங்க வரச் சொல்லு” என்று மாறி, மாறிச் சொல்லி.. உட்கார்ந்த இரண்டு நிமிடங்களிலேயே டென்ஷனை ஏற்படுத்திவிட்டார்கள்.

திருச்சிக்கு பேருந்து கட்டணம் 125 ரூபாய்.. “சில்லரையாக வைத்துக் கொள்ளுங்கள்” என்றார் நடத்துனர். என்னிடம் 500 ரூபாய் நோட்டு ஒன்றுதான் இருந்தது. நீட்டினேன்.. அதைக் கையில்கூட வாங்காமல் தனது பணப்பையைத் திறந்து காட்டினார். இது என்ன பதில்..? நானும் சட்டென்று உஷ்ணமாகி, “இந்த பைக்கு 500 ரூபா தர முடியாது..” என்றேன்.. கோபத்துடன் அடுத்த ஆளிடம் சென்றார். இப்படி ஆரம்பித்த எங்களது நட்பு மறுநாள் காலை திருச்சி சென்று சேரும்வரையில் பலவித பிரச்சினைகளைக் கிளப்பிவிட்டது.

——————————–

கொஞ்ச நேரம் கழித்து அத்தனை பேருக்கும் கட்டணச் சீட்டு அளித்த பின்பு என்னிடம் வந்து பணத்தை வாங்கினார். மீதிப் பணமாக 370 ரூபாய் கொடுத்தார். “5 ரூபாய் குறைகிறதே..” என்றேன்.. “என்னிடம் இல்லை..” என்றார். “அஞ்சு ரூபா காயின் தர்றேன்.. பத்து ரூபாயா தாங்க..” என்றேன்.. “வேற யாருக்காவது பத்து ரூபாய் கொடுக்கணும்னா நான் எங்க போறது..?” என்றார். “அப்போ அந்த 5 ரூபாயை நான் எங்க போய் வாங்குறது?” என்றேன் கோபத்தோடு. “அப்புறமா தர்றேன்..” என்று சொல்லிவிட்டுப் போனார். பின்புதான் தெரிந்தது பல பயணிகளிடமும் இதேபோல் 5 ரூபாய் கடன் வைத்திருக்கிறார் என்று.. ஆனாலும் விடவில்லை. திருச்சியில் இறங்கும்போது பஸ் படிக்கட்டில் நின்று கொண்டு “கொடுத்தால்தான் இறங்குவேன்” என்று மிரட்டி வாங்கியேவிட்டேன்..

நான் ஜன்னலோரத்தில் அமர்ந்திருந்தேன். அருகில் ஒரு வயதானவர் அமர்ந்திருந்தார். திடீரென்று அவர் எழுந்து முன் சீட்டில் போய் உட்கார்ந்து கொண்டார். வண்டி கிளம்புகின்றபோது ஒரு இளம் பெண் பேருந்தில் ஏறினார். அவரை வழியனுப்பிவிட அவருடைய தந்தையார் வந்திருந்தார். அனைத்து இருக்கைகளிலும் ஜன்னலோரத்தில் ஆண்கள் அமர்ந்திருக்க.. இந்தப் பெண் ஒரு பெண்ணின் அருகில் போய் அமர்ந்தார்.

உட்கார்ந்த வேகத்தில் எழுந்து வந்து தனது தந்தையின் காதோரத்தில் கிசுகிசுத்தார். அவர் நடத்துனரின் காதில் கிசுகிசுத்தார். நடத்துநர் என்னிடத்தில் வந்து, “நீங்க அந்த சீட்டுக்குப் போங்க..” என்று சொல்லி ஒரு இருக்கையைக் காண்பித்தார். “ஏன்?” என்றேன்.. “இல்ல.. அந்தப் பொண்ணு தனியா வருது..” என்று இழுத்தார் நடத்துனர். “அதான் அங்க ஒரு லேடி உக்காந்திருக்காங்களே.. பக்கத்துல உக்காரலாமே..?” என்றேன். அதற்குள் அந்தப் பெண்ணின் தந்தை வந்து, “இல்ல.. அது ரொம்ப பின்னாடி இருக்கு..” என்றார். “அதுக்கு நான் என்ன பண்றது?” என்றேன் பட்டென்று. நடத்துநர் என்னைப் பார்த்தார். நான் அவர்கள் இருவரையும் பார்த்து புருவத்தை உயர்த்த..

அந்த இளம் பெண் வேறு வழியில்லாமல் கிடைத்த இடத்தில் போய் உட்கார்ந்தார். நடத்துனர் இப்போதும் என்னை முறைத்துக் கொண்டே சென்றார். கீழே இறங்கியவுடன் அந்தப் பெண்ணின் தந்தை ஒரு 50 ரூபாயை நடத்துனரின் கையில் திணித்துவிட்டு பி.எஸ்.வீரப்பா ஸ்டைலில் என்னைப் பார்த்து ஒரு ‘லுக்’ விட்டுவிட்டுச் சென்றார்.

இப்படியெல்லாமா சம்பாதிக்கணும்..?

—————————

பேருந்து கோயம்பேட்டில் இருந்து வெளியில் வருவதற்கே 20 நிமிடங்கள் ஆனது.. தலையைச் சுற்றி மூக்கைத் தொடும் விதமாக கோயம்பேட்டில் இருந்து வடபழனி வந்து அசோக்பில்லர் வந்து கிண்டி வழியாக எனது ஒரு காலத்திய டியூஷன் சென்டரான ஜோதி தியேட்டரை தரிசனம் செய்தபடியே சென்றபோது பாலத்தின் இறக்கத்திலேயே வண்டி நின்றுவிட்டது. திடீரென்று என்ஜின் சுவிட்ச் ஆப்.

நடத்துனரும், ஓட்டுனரும் மாறி, மாறி சுவிட்ச்சை ஆன் செய்து பார்த்தார்கள். முடியவில்லை. ஒரு நிமிடத்தில் பின்னால் வரிசையாக வந்து நின்ற வாகனங்களில் இருந்து வகை, வகையாக ஹாரன்களின் சப்தம் காதைக் கிழித்தது. நடத்துனர் பயணிகளிடம் இறங்கி வந்து பேருந்தைத் தள்ளும்படி சொன்னார். ‘விதியே’ என்று நினைத்து கீழேயிறங்கி ‘ஐலேசா’ பாடியபடியே பேருந்தை தள்ளினோம். மூன்று முறை விட்டு, விட்டுத் தள்ளியும் ஸ்டார்ட் ஆகாமல் என் அப்பன் முருகனை அழைத்து “ஆரம்பத்துலேயே ஏண்டா கடுப்பேத்துற?” என்று நான் மனதுக்குள் திட்டியபிறகே பேருந்து ஸ்டார்ட் ஆனது..

“இதுக்கு எதுனாச்சும் நமக்கு டிஸ்கவுண்ட் குடுப்பாங்களா..? இல்லாட்டி டிக்கெட்டுல காசைக் குறைப்பானுங்களா..?” என்று வழக்கம்போல கொழுப்பெடுத்து போய் நான் சொன்ன டயலாக்கைக் கேட்டு நடத்துனர் கோபப்பட்டுவிட்டதை அவர் கதவைச் சாத்தியதில் இருந்து அறிந்து கொண்டேன்.

மறுபடியும் தாம்பரம் பேருந்து நிலையத்தில் வண்டி மக்கர். மறுபடியும் கீழே இறங்கி நான்கு முறை தள்ளிய பின்புதான் வண்டி ஸ்டார்ட் ஆனது. அப்போதே நான் அங்கிருந்த நேரக் கட்டுப்பாட்டு அதிகாரியிடம் இது பற்றி புகார் செய்தேன். “திருச்சிவரைக்கும் போகணும் ஸார்.. வழில எங்கயாவது நின்னா இப்படி இறங்கி, இறங்கித் தள்ள முடியாது ஸார்..” என்றேன்.. “என்னால ஒண்ணும் பண்ண முடியாது. போறதுன்னா போங்க.. வேண்டாம்னா இறங்கிக்குங்க..” என்றார் பொறுப்பாக..

நானும் பல ஆண்டுகளாகப் பார்த்து வருகிறேன்.. இந்த நெடுந்தொலைவு செல்லும் பேருந்துகளில் என்ஜின் கோளாறு, பிரச்சினை என்று வழியில் நின்று போகக்கூடியவைகளில் 99 சதவிகிதம் அரசு பேருந்துகள்தான். தனியார் பேருந்துகள் இது மாதிரி பிரச்சினைகளால் நின்று போய் நான் பார்த்ததே கிடையாது. விபத்து ஏற்பட்டுத்தான் பார்த்திருக்கிறேன். ஏன் தனியார் பேருந்துகளைப் போல் அரசுப் பேருந்துகளை பராமரிக்க முடியவில்லை..?

——————————-

வழியில் விக்கிரவாண்டி என்கிற இடத்தில் சாப்பிடுவதற்காக வண்டியை ஓரங்கட்டினார்கள். அங்கே ‘கிளாஸிக்’ என்ற பெயரில் ஒரேயொரு ஹோட்டல். வண்டி நின்றவுடனேயே பேருந்தின் இருபுறமும் ஆட்கள் நின்று கொண்டு “பாத்ரூம் அங்க இருக்கு.. இங்க இருக்கு..” என்று மார்க்கெட்டிங் செய்து கொண்டிருந்தார்கள். இவர்களிடம் தப்பி ஓரமாக ஒதுங்க நினைத்தவர்களை, “டேய்..” “ஓய்..” “யார்யா அவன்..?” என்றெல்லாம் மிக மரியாதையாகப் பேசி அழைத்து பாத்ரூம் பக்கம் திருப்பிவிட்டார்கள்.

பாத்ரூம் எனது பள்ளிக் காலத்தில் நான் அனுபவித்ததைவிட மிகக் கொடுமையாக இருந்தது. இதற்கு 2 ரூபாய் கட்டணமாம். சுவற்றில் 1 ரூபாய் என்றுதான் இருக்கிறது. அதனை மிக லாவகமாக சுரண்டியெடுத்திருக்கிறார்கள். சுரண்டலைத் தாண்டியும் எழுத்து தெரிகிறது என்பது வேறு விஷயம்.

“ஒரு ரூபாய்னுதானே போட்டிருக்கு” என்றேன்.. பதிலே சொல்லாமல் நாணயங்களை எண்ணத் துவங்கினார் அந்தக் காசாளர். “வந்தியோ.. அவுத்து விட்டியா..? போனியான்னு இருடா மவனே..” என்பது அதன் அர்த்தமாக எனக்குப் புரிந்தது. அமைதியாகத் திரும்பிவிட்டேன்..

பெரும்பாலும் இந்த உணவு விடுதி ஒப்பந்ததாரர்கள் ஏதாவதொரு கட்சிக்காரராகத்தான் இருப்பார்கள். சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் இது போன்ற 10-க்கும் மேற்பட்ட உணவு விடுதிகள் உள்ளன. எந்த உணவு விடுதியில் பேருந்துகளை நிறுத்த வேண்டும் என்பதை அந்தந்த போக்குவரத்துக் கழகக் கோட்ட அலுவலகத்தில்தான் தீர்மானித்து ஓட்டுநர்களிடம் சொல்கிறார்கள். அந்தக் கோட்ட அலுவலகத்தின் தலைமையாளரை எந்த உணவு விடுதிக்காரர்கள் அதிகமாகக் ‘கவனிக்கிறார்களோ.’. அவர்களது உணவு விடுதியில் பேருந்துகள் நிறுத்தப்படும்.

அதிலும் அதிகமான பேருந்துகள் இயக்கப்படுவதால் 10 உணவு விடுதிகளிடமும் ‘வாங்க’ வேண்டியதை வாங்கிக் கொண்டு, ஒரு விடுதிக்கு இத்தனை பேருந்துகள் என்று சம அளவில் ஒதுக்கீடு செய்து பிழைத்து வருகிறார்களாம் நமது அதிகாரிகள்.. ஓட்டுனர்களுக்கும், நடத்துனர்களுக்கும் இரவுச் சாப்பாடு இலவசம் என்பதோடு ஒரு டிரிப்பிற்கு 200 ரூபாய் இனாமும் கிடைக்கிறதாம்.

ஆனால் இங்கே சாப்பாட்டின் விலை ரொம்ப, ரொம்ப அநியாயம்.. நமது சரவண பவன் அளவிற்கு விலை வைத்துள்ளார்கள் பாவிகள்.. ஒரு தோசை 16 ரூபாய்.. சைவத்திற்கும், அசைவத்திற்கும் தனித்தனி உணவு விடுதிகளாக மாற்றிவிட்டார்கள். அசைவத்தில் முன்பெல்லாம் புரோட்டா 8 ரூபாய் என்று சொன்னார்கள். இப்போது புரோட்டாவிற்கு கறி சால்னாதான் வாங்க வேண்டுமாம். அதற்குத் தனியாக 4 ரூபாயாம். ஆக ஒரு புரோட்டாவிற்கு 12 ரூபாய். தோசையும் கிடைக்கும். ஆனால் அதற்கும் சால்னா தனி.. 4 ரூபாய்.. ஆக மொத்தம் இதுவும் ஒருவகையில் கொள்ளைதான்.

அந்த அத்துவானக்காட்டில் ஒரேயொரு உணவு விடுதியிருக்குமிடத்தில் பேருந்தை நிறுத்தினால் மக்கள் என்ன செய்வார்கள்..? அந்த ஓரிடத்தில் சாப்பிட்டுத்தானே ஆக வேண்டும்.. பசியோடு பயணிக்க முடியுமா என்ன..? இதற்குப் பதிலாக திண்டிவனம், விழுப்புரம், உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையங்களில் பேருந்தை நிறுத்தினால் மக்கள் விரும்பிய கடைகளில் சாப்பிடலாமே..? ஏன் அதனைச் செய்ய மறுக்கிறார்கள் ஓட்டுநர்களும், போக்குவரத்துக் கழகங்களும்..? என்ன காரணம்? அதேதான் முன்பே சொன்ன சம்திங்.. சம்திங்.. சம்திங்..

——————————-

நான் சாப்பிட்டு முடித்து வெளியில் வந்து காத்து வாங்கிக் கொண்டிருக்கும்போது ஒருவர் அவசரமாக நடத்துனரிடம் வந்து, “கிளம்பறதுக்கு இன்னும் எவ்ளோ நேரமாகும்?” என்றார். “கால் மணி நேரமாகும் ஸார்..” என்றார் நடத்துனர். “அதுக்குள்ள ஒரு தோசை சாப்பிட்டு வந்திரவா?..” என்றார். நடத்துனரும் தலை அசைத்து ஆமோதிக்க.. தனது மனைவியை பேருந்தில் இருந்து இறக்கி ஹோட்டலின் உள்ளே அழைத்துச் சென்றார் அவர்.

அந்த நபரின் மனைவி பேருந்தில் இருந்து இறங்கி, ஹோட்டலின் உள்ளே சென்று அமர்ந்தது முதல் தோசையை வாங்கி பிட்டு சாப்பிடும்வரையில் வாயில் ஜொள்ளுவடிய ‘சைட்’ அடித்த அந்த நடத்துனர், ஓட்டுனர் அருகில் வந்து “போலாமா..?” என்றதும் ஒரு வார்த்தைகூட மறுக்காமல் தலையாட்டிவிட்டு வண்டியில் ஏறினார்.

ஓட்டுனர் வண்டியில் ஏறி கதவைச் சாத்தி என்ஜினை ஸ்டார்ட் செய்தவுடன் வண்டியில் அமர்ந்திருந்த சாப்பிடப் போன தம்பதிகளின் பெரிய பெண் பதறிவிட்டாள். “அப்பா”, “அம்மா” என்று பதற்றத்துடன் சீட்டில் இருந்து எழுந்து முன் வாசலுக்கு வர.. அதைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாமல் ஓட்டுநர் வண்டியை பின்னால் எடுக்க.. அந்தப் பெண் பதற.. இந்தக் கூத்தைப் பார்த்தபடியே நானும் இன்னொரு நண்பரும் வண்டியில் ஏறாமல் நடந்து வந்தோம். வண்டி திரும்புகிற இடத்தில் நான் கதவைத் திறந்து ஓட்டுனரிடம் “கொஞ்சம் இருங்க.. ஒருத்தங்க சாப்பிட்டுக்கிட்டிருக்காங்க..” என்றேன்.

ஓட்டுனருக்கு சட்டென்று கோபம் வந்தது.. “எவனுக்காகவும் நான் நிக்க முடியாதுங்க..” என்றார். அதற்குள்ளாக அந்தப் பெண் வண்டியிலிருந்து குதித்து இறங்கியோடினாள். நானும், நண்பரும் பொறுமையாக “உங்க கண்டக்டர்கிட்ட சொல்லிட்டுத்தான் போனாங்க..” என்றதும் ஓட்டுநர் அமைதியானார். நடத்துனரோ அதைக் காதில் வாங்காதவரைப் போல் அமைதியாக இருந்தார்.

இப்போது ஹோட்டலில் இருந்து அந்தத் தம்பதிகள் அரக்கப் பரக்க ஓடி வந்தார்கள்.. அந்தப் பெண் கையைக் கழுவக்கூட இல்லை. அவசரமாக பேருந்தில் ஏற.. அவர்களுடைய சின்ன வயது மகன் உள்ளே அழுது கொண்டிருந்தான். அந்தக் கணவர் வண்டியில் ஏறிய உடனேயே கோபமாக நடத்துனரிடம் “ஏங்க உங்ககிட்ட சொல்லிட்டுத்தான போனேன்.. நீங்கதான கால்மணி நேரமாகும்னு சொன்னீங்க?” என்று கேட்க நடத்துனர் அமைதியாக, “சரி.. சரி.. உள்ள போங்க..” என்றார்.

அந்த மனிதருக்கு வந்த கோபத்திற்கு அளவேயில்லை.. ஆனாலும் என்ன செய்றது..? அதற்குள்ளாக நானும், நண்பரும் வண்டியில் ஏறி அவரது முதுகில் தட்டிக் கொடுத்து கோபத்தைக் குறைத்து அமர வைத்தோம். இப்படியெல்லாம்கூட சில மனிதர்கள்..!

—————————–

எங்களுக்குக் கிடைத்த ஓட்டுனர் அற்புதமான ஓட்டுனர். ஓட்டுதல் பற்றி இவரிடம் வந்துதான் அனைவரும் பயிற்சியெடுக்க வேண்டும்.. இவருடைய ஓட்டுனர் திறமை இரவு நேரத்தில் தெரியவில்லை.. ஆனால் விடிகின்றபோது கண் முழித்து ஒரு வேளை திருச்சியைத் தாண்டிவிட்டதோ என்று பதற்றத்தோடு அருகில் இருந்தவரிடம் கேட்டபோது, அவர் சலிப்போடு “இன்னும் பெரம்பலூரையே தாண்டலை ஸார்..” என்றார்.

அரைகுறைத் தூக்கத்தில் அக்கம்பக்கம் நோட்டம்விட்டபோது அனைவரும் ஏகக் கடுப்போடு இருந்தது அவர்களது முகத்திலேயே தெரிந்தது. ஒரு மத்திய வயதுக்காரர் பொறுமையிழந்துபோய் “ஏங்க.. மதியத்துக்குள்ளயாவது திருச்சி போய் சேர்ந்திருவீங்களா..?” என்று கத்தினார்.

வழக்கமாக சென்னையிலிருந்து திருச்சி செல்ல ஆகும் நேரம் 7 மணி நேரம்தான். வழியில் எங்காவது சாப்பிடுவதற்காக வண்டியை நிறுத்தினால் அந்த 20 நிமிடத்தைக் கூட்டிக் கொள்ளலாம். ஆனால் ஓட்டுநர்களோ வண்டியை மிக மெதுவாகச் செலுத்தி கிட்டத்தட்ட 9 அல்லது 10 மணி நேரம் கழித்துத்தான் திருச்சி வந்தடைகிறார்கள். எங்களது டிரைவர் 3 இடங்களில் வண்டியை நிறுத்தியிருந்தாராம். நான்தான் தூங்கிவிட்டேன். “அவன் பாட்டுக்கு நிறுத்திட்டு உள்ள போயிட்டான் ஸார்.. நாங்க சத்தம்போட்ட பின்னாடிதான் எந்திரிச்சு வந்தான்..” என்றார் என் பக்கத்து இருக்கை நண்பர்.

திருச்சிவரை மட்டும் செல்லக்கூடிய பேருந்துகள் காலையானதும் பெரம்பலூருக்குள் கால் வைத்து சில நிமிடங்கள் நின்ற பின்புதான் மறுபடியும் கிளம்புகின்றன. இங்கேயும் ஒரு முக்கால்மணி நேரம் வீணாகிறது. கேட்டால் “மேலிடத்து உத்தரவு” என்கிறார்கள். திருச்சியைத் தாண்டி செல்கின்ற பேருந்துகள் மட்டும்தான் பெரம்பலூருக்குள் வராமல் நேர் பாதையிலேயே சென்றுவிடுகின்றன.

“அந்தா”, “இந்தா” என்று போக்குக் காட்டிய ஓட்டுனர், வழியில் சென்ற, வந்து கொண்டிருந்த சைக்கிள்கள், மாட்டு வண்டிகளுக்குக்கூட மரியாதையாக ஒதுங்கி வழிவிட்டது மிகக் கொடுமை. இதையெல்லாம் அனுபவிச்சாத்தான் தெரியும்.. அவர் ஒவ்வொரு முறையும் வழிவிடும்போது பின் வரிசையிலிருந்து பலத்த கைதட்டல் ஒலித்தது. அந்தக் கோபத்தில்தான் ஓட்டுனரும் வேண்டுமென்றே மிக, மிக மெதுவாக வந்து சேர்ந்தாற்போலும்..

சென்னையில் இரவு 8.30 மணிக்கு நகர ஆரம்பித்த பேருந்து, திருச்சி மத்திய பேருந்து நிலையத்தை அடைந்தபோது காலை மணி 9.10.. கிட்டத்தட்ட 13 மணி நேரம்.. எங்கேயாவது இந்தக் கொடுமை நடக்குமா..? இது போன்ற நேரத் திருடிகளால்தான் நீண்ட தூரப் பேருந்து பயணம் என்பதே பலருக்கும் பிடிக்காமற்போகிறது..

——————————————————-

ரயில்களைப் போல வரும், புறப்படும் நேரங்கள் கட்டாயமாக இல்லாததாலும், எதிர்பாராமல் நிகழ்ந்துவிடும் விபத்துக்களாலும்தான் பேருந்துகள் தாமதமாவதாக பலரும் சொன்னாலும், ஓட்டுனர்கள் மனம் வைத்தால் எப்படியும் மிகக் குறைந்த நேரத்தில் வந்து சேரலாம் என்பதை நான் மறுபடியும் திருச்சியில் இருந்து சென்னை வரும்போது அறிந்து கொண்டேன்.

மதியம் 3.45 மணிக்கு திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் அதே மாதிரியான SETC Super Deluxe பஸ்ஸில் ஏறி இரவு 10.35 மணிக்கு அசோக்பில்லரில் வந்து இறங்கினேன். கிட்டத்தட்ட 7 மணி நேரம்தான். இது எப்படி சாத்தியமானது..? இந்த நேரத்தில் சாலைகளில் போக்குவரத்து அதிகமில்லை என்றாலும் இரண்டு இடங்களில் விபத்துக்களால் சில நிமிட நேரங்கள் பேருந்து ஊர்ந்துதான் நகரத் தொடங்கியது.. அப்படியிருந்தும் இந்த ஓட்டுனர் எப்படி இவ்வளவு சீக்கிரமாக கொண்டு வந்து சேர்த்தார் என்று தெரியவில்லை..

போகும்போது அல்லல்பட்டு போய்ச் சேர்ந்ததால் வரும்போது அந்தத் துக்கம் நிகழக்கூடாது என்று எனது அப்பன் முருகனை வேண்டிக் கொண்டே வந்தேன். என் வேண்டுகோளுக்கிணங்க அவனது திருவிளையாடலால் அவன் தேடிக் கொடுத்த ஒரு புத்தகத்தை படித்தபடியே வந்து சேர்ந்ததால் நேரம் போனதே தெரியவில்லை. புத்தகமும் அவ்வளவு சூடு. என்ன புத்தகம் என்பதை அடுத்தப் பதிவில் எழுதுகிறேன்.

(தொடரும்)