Archive for ஜூலை, 2008

ஜோதிடம் – உண்மையா? பொய்யா? – செந்தழல் ரவிக்கு எனது பதில்!

ஜூலை 12, 2008

13-07-2008

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

கடந்த சில நாட்களாகவே என் அப்பன் முருகப் பெருமானின் திருவிளையாடலால், தமிழ்மணத்தின் பக்கமே என்னால் வர முடியாமல் போய்விட்டது. ஜிமெயிலில் கமெண்ட்டுகள் வந்தால் அதனை அனுமதிப்பது மட்டுமே என்னால் முடிந்த ஒன்றாக இருந்தது.

அப்பன் முருகனின் தூண்டுதலால் அலுவலகத்தில் போடப்பட்டிருந்த பலத்த கட்டுக்காவலையும் மீறி, இரண்டு பதிவுகளை சில தவறுகளுடன் போட்டிருந்தேன். மாலை நேரத்தில் கொரியா நாட்டுத் திரைப்படங்களோடு ஐக்கியமாகியிருந்த காரணத்தால், இணையத்தள கடைகளுக்கும் செல்ல முடியாத சூழல்.

நேற்றுதான் கொஞ்சம் இடைவெளி கிடைத்து தமிழ்மணத்தின் முன் அமர்ந்தேன். சர்ச்சைகளும், சண்டைகளும், வாதங்களும், பிரதிவாதங்களும் நமக்குப் புதிதல்ல. இருந்தாலும் என் கண் முன்னே தெரிந்த ஒரு வாக்குவாதம் எனக்கு ஆச்சரியத்தைத் தந்தது.

“ஜோதிடம் பொய்யா அல்லது உண்மையா?” என்ற நோக்கில் கேள்விகளை வீசியிருக்கிறான் அருமைத் தம்பி செந்தழல் ரவி. யாரிடம்..? செந்தழல் ரவியின் அகில உலக ரசிகர் மன்றத் தலைவரான திரு.சுப்பையா வாத்தியார் அவர்களிடம்.. இதுதான் எனக்கு ஆச்சரியம்..

ஏனெனில் செந்தழல்ரவி மீதான சுப்பையா வாத்தியாரின் ‘காதல்’ எப்படிப்பட்டது என்பதை நேரில் கண்டவன் நான்.

கோவையில் ஓசை செல்லா ஏற்பாட்டின்பேரில் கடந்த 2007, மே 20-ம் தேதியன்று வலைப்பதிவர் சந்திப்பு நடந்தது. அந்தக் கூட்டத்தில்தான் வாத்தியாரையும், ரவியையும் நான் முதல் முறையாக நேரில் சந்தித்தேன். அன்றைய கூட்டத்தில் உடல்நலக் குறைவால் செல்லா பங்கேற்க முடியாமல் போய், தோழர் பாமரன் ‘சபாநாயகர்’ வேலையை மேற்கொண்டிருந்தார்.

கூட்டத்தில் யார், யார் என்ன சப்ஜெக்ட்டை எவ்வளவு நேரம் பேசுவது என்றெல்லாம் திட்டமிடல் எதுவும் இல்லாமல் போய்க் கொண்டிருந்த நேரத்தில், சுப்பையா வாத்தியார் தனது வலைப்பதிவு ஈடுபாடுகள் பற்றி பேசத் துவங்கினார். பேசினார்.. பேசினார்.. பேசிக் கொண்டேயிருந்தார்.. எப்போது முடிப்பார் என்று எங்களில் யாருக்கும் தெரியவில்லை.

நேரம் ஓடிக் கொண்டிருந்ததைப் பார்த்து தம்பி பாலபாரதிக்கு கோபமான கோபம். தன் கண் முழி பிதுங்கி விடும் அளவுக்கு அருகில் இருந்த மா.சிவக்குமாரை பார்த்து முறைத்தார். ஆகஸ்ட்-5, சென்னை வலைப்பதிவர் பட்டறையில் ‘பின்னவீனத்துவ பிடாரி’ வளர்மதியிடமிருந்து மைக்கை பிடுங்கும் அளவுக்குத் தைரியமானவராக இருந்த மா.சிவக்குமாருக்கு, இங்கே வாத்தியாரிடம் எப்படி பேசுவது என்று தெரியாமல் சங்கடமாகி என்னைப் பார்த்தார். நான் அவர்கள் இருவரையும் பார்த்தேன்.

இப்படி நாங்கள் மூவரும் ஒருவரையொருவர் பார்த்து ‘இளிப்பதைக்’ கண்டு எங்கள் மூவருக்கும் நடுவில் அமர்ந்திருந்த ‘பெங்களூர் மைனர்’ மோகன்தாஸ், தன் வாயில் கை வைத்து பொத்திக் கொண்டு குலுங்கி, குலுங்கி சிரித்தான். தோழர் பாமரனோ, ‘ஐயா எப்போது முடிப்பார்?’ என்பது தெரியாததால் வெண்குழல் பற்ற வைக்க எழுந்தோடி விட்டார்.

பார்த்தேன்.. ஏற்கெனவே பதிவுகள் வாயிலாக ரவிக்கும், வாத்தியாருக்குமான நட்பு எனக்குத் தெரிந்திருந்ததால் ரவியைப் பார்த்து கையெடுத்துக் கும்பிட்டு வாத்தியாரைக் காட்டி “என்னப்பா..?” என்று கண்களாலேயே கெஞ்சினேன். ‘தற்போதைய துணைவியார்’ அப்போது உடனிருந்ததால் ‘மிதப்பில்’ இருந்த ரவி, போட்டிருந்த மைனர் பனியனை உலுக்கிவிட்டுக் கொண்டு திடீரென்று இடையில் புகுந்து எதையோ சொல்லி வாத்தியாரின் பேச்சை நிறுத்தி, எங்களுக்கு வழியை ஏற்படுத்திக் கொடுத்தான். (வாத்தியாரே, மன்னிக்கணும்.. மன்னிக்கணும்.. மன்னிக்கணும்.. அன்றைக்கு இருந்த சூழல் அப்படி.. வேறு வழியில்லை..)

இந்த சந்திப்பின்போதுதான் வந்திருந்த 40 பதிவர்களையும் விட்டுவிட்டு, வாத்தியார் தனது ‘காதலன்’ செந்தழல் ரவிக்கு மட்டும் தான் வாங்கி வந்திருந்த துண்டை, ‘பொன்னாடை’ என்று சொல்லி அணிவித்து மகிழ்ந்தார். அந்தளவிற்கு ரவி மீதான பாசம் வாத்தியாருக்கு இருந்தது என்பது நீண்ட நாள் பதிவாளர்கள் அனைவருக்கும் நன்கு தெரியும்.

வாத்தியார் நீண்ட நாட்களாகவே தனது வகுப்பறையில் ஜோதிடம் பற்றிய பாடங்களை கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். பிடித்தவர்கள் படித்துக் கொண்டிருக்கிறார்கள். இதிலும் அவ்வப்போது ரவி வந்து கமெண்ட் போட்டுச் செல்வதுண்டு.

ஆனால், இப்போது திடீரென்று ‘பொங்கியிருப்பதுதான்’ சந்தேகத்தைக் கிளப்புகிறது. அதிலும் இப்போது கல்யாணம் ஆனதில் இருந்தே இந்தப் பய ஒரு ‘மார்க்கமாக’த்தான் இருக்கிறான்.. என்னவென்று தெரியவில்லை.

ரவி கேட்டிருக்கும் கேள்விகளால் வாத்தியார் வருத்தமடைந்திருப்பதை அவருடைய பதிவைப் படித்துப் பார்த்ததில் இருந்தே தெரிந்தது. அவருடைய வருத்தமெல்லாம், இத்தனை வருடங்களாகத் தன்னை நன்கு தெரிந்து வைத்திருந்த ரவி, இப்படி சண்டைக்காரனைப் போல் தனி பதிவு போட்டு பிரச்சினையைக் கிளப்பலாமா என்பதே..!

இதுவரையில் வாத்தியார் எழுதியிருந்த ஜோதிடம் பற்றிய பதிவுகளிலெல்லாம் கேள்வி கேட்காமல், இப்போது முக்கால் கிணறு தாண்டிய பின்பு அருமைத் தம்பிக்கு திடீரென்று ஞானதோயம் எதற்கு, எங்கிருந்து வந்தது என்றுதான் எனக்கும் தெரியவில்லை. அப்படியே வந்திருந்தாலும் கொஞ்சம் நாசூக்காக அவர் பதிவிலேயே போய் கேட்டிருந்திருக்கலாம். இப்படி தனிப்பதிவு போட்டு, படிச்ச எல்லாரும் தனியா போய் ‘சுண்டக்கஞ்சி’ அடிக்கிற அளவுக்கு வைச்சுப்புட்டான்..

இரு தரப்புப் பதிவுகளிலும் வந்திருந்த பின்னூட்டங்கள், வாதங்கள், அது தொடர்பான பிரதிவாதங்களால் என்னைப் போன்ற அடிமுட்டாள்கள் தெரிந்து கொள்ள நிறைய விஷயங்கள் இருந்தன. கிடைத்தன. நன்றிகள் அப்பதிவர்களுக்கு.

ஜோதிடத்தை நம்புகிறவர்கள் யார்..? ஜோதிடத்தால் வெற்றியடைந்தவர்கள் அல்லது வெற்றியடைந்த கதையைக் கேட்டவர்கள். நிச்சயம் தோல்வியடைந்தவர்கள் ஜோதிடம் மற்றும் இன்ன பிற துறைகளின் பக்கம் போகவே மாட்டார்கள். ஆக ஜோதிடத்தால் வெற்றியடைந்தவர்கள் ஜோதிடத்தை நம்பத்தான் செய்வார்கள்..

தெற்குத் திசை நோக்கிய நிலையில் அப்ளிகேஷனை நிரப்பி அனுப்பிவிட்டு, யாரும் படிக்காமல் இருக்கப் போவதில்லை. அப்படி ஜோதிடத்தை நம்பி ஒன்றுமே செய்யாமல் குப்புறப் படுத்து தூங்குபவர்கள் நிச்சயம் முட்டாள்கள்தான்.. ஆனால் இந்த முட்டாள்களால் ஜோதிடத்தை பரப்புவது முடியவே முடியாது. ஏனெனில் தோல்வியடைந்தவன் ஒருபோதும் மற்றவர்களுக்கு முன் உதாரணமாகத் திகழ முடியாது. யாரும் நம்பவும் மாட்டார்கள்.

ஜோதிடம் என்பதே ஏமாற்றுவேலை என்று சொல்வதற்கு எவ்வளவு ஆதாரங்கள் கிடைக்குமோ, அதே அளவு ஆதாரங்கள் ஜோதிடம் உண்மை என்பதற்கும் கிடைக்கும். இரண்டுமே வாழ்க்கையில் காணக்கிடைக்கும் விஷயங்கள்தான். பரந்துபட்ட மனிதர்கள் ஒவ்வொருவரும் தினுசு, தினுசாக வாழ்வதற்கு அவர்களது எண்ணங்கள் எப்படி உதவுகிறதோ, அதே அளவு நாமும் யோசித்தால் மனிதர்களை முற்றிலும் வகைப்படுத்திவிட முடியுமா என்ன..?

“கிரகம், ராசி, லக்கினம் என்று உப்புப் பெறாத விஷயங்களை வைத்து வகுப்பறை நடத்துகிறீர்களே? இவற்றில் எல்லாம் மருந்துக்குக்கூட பகுத்தறிவு என்பதே இல்லையே? யோசிக்க மாட்டீங்களா வாத்யாரே?” என்றிருக்கிறான் ரவி.

அப்படி பார்த்தால் இந்தியாவில் நடக்கும் 65 சதவிகிதத் திருமணங்கள் இந்தப் பகுத்தறிவு இல்லாத முறையில்தான் நிச்சயிக்கப்பட்டு நடத்தப்படுகின்றன.. இதில் யோசிக்க வேண்டியது யார்..?

திருமணத்திற்கு ஜாதகப் பொருத்தம் பார்ப்பது அவரவர் திருப்திக்காக மட்டுமே. ஜாதகப் பொருத்தம் 10-க்கு 9 மிகச் சரியாக இருப்பதினாலேயே அத்தம்பதிகள் Made for each other என்பதைப் போல் வாழ்ந்துவிடப் போவதில்லை. பொருத்தம் பார்க்காமல் திருமணம் செய்பவர்களும் அதே போல் இருப்பதுமில்லை. இவை இரண்டிலுமே கொஞ்சம், கொஞ்சம் வில்லங்கங்கள் ஏற்பட்டுக் கொண்டுதான் உள்ளன.

“முன்னாடியே ஜாதகம் பார்த்தோமே அப்படியும் இப்படி ஆயிருச்சே..” என்று யாரும் அழப் போவதில்லை. அவர்களுக்குத் தெரியும்.. வாழ்க்கையில் எதுவும் நிரந்தரமில்லை என்று..! அப்போதுதான் அனைவரும் ஒரு வார்த்தையை வீசுகின்றனர், “இப்படித்தான் நடக்கணும்னு இருந்திருக்கு. அது நடந்திருச்சு.. என்ன செய்ய..?” என்று..

இதைத்தான் வாத்தியாரும் தனது பதிவுகளில் அடிக்கடி சொல்லி வருகிறார், “எல்லாம் விதிப்படிதான் நடக்கும்” என்று.. அந்த நடந்துவிட்ட ஒரு நிகழ்வுக்கு காரணமான, கண்ணுக்குப் புலப்படாத ஒரு வஸ்துவுக்கு பெயர்தான் ‘விதி’ என்கிறார்.

“செவ்வாய் தோஷம் என்று கல்யாணத்தைத் தள்ளிப் போட்டு பெண்களை முதிர்கன்னியாக்கும் கொடுமை இன்னும் வேண்டுமா?” என்கிறான் தம்பி..

“வேண்டாம்” என்றுதான் அனைவரும் சொல்கிறோம். தோஷத்தை நம்புபவர்களை மாற்றுவது யாரால் முடியும்? அதுதான் முதலிலேயே சொல்லிவிட்டேன்.. ஜெயித்தவர்கள்தான் நம்புகிறார்கள். அது முதலில் அவர்களுக்குள் இறங்கி ஜெயித்துக் காட்டியிருக்கிறது. தோஷ பரிகாரம் என்று அவர்கள் சொல்வதுகூட அவர்களை, அவர்களே சமாதானப்படுத்திக் கொள்ளும் நோக்கத்தில்தான்.

ஊர், உலகமே அந்த தோஷத்தில் சிக்கியிருக்க ஒருவர், இருவர் மட்டும் ஊரையே மாற்ற வேண்டும் என்று கோஷம் போட்டால், அது எத்தனை பேரின் காதுகளை எட்டும்?

இப்போதெல்லாம் இந்தத் தோஷமுள்ளவர்கள் அதே தோஷமுள்ளவர்களைத் தேடிப் பிடித்து கல்யாணம் செய்து கொள்கிறார்கள். முடியாதவர்கள்கூட தோஷத்தைப் புறக்கணித்துவிட்டுத் திருமணம் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

எனது தம்பி ஒருவனுக்கும் சின்ன வயதிலேயே திருமணமானது. காரணம் செவ்வாய் தோஷம். அவனுக்குக் கிடைத்த பெண்ணுக்கும் செவ்வாய் தோஷம். “அந்தப் பெண்ணை இப்போதுவிட்டால் இவனுக்கு வேறு பெண் கிடைக்காது. முடித்துவிடுவோம்” என்று சொல்லி முடித்துவிட்டார்கள். வேறு வழி..?

அறிவுரை சொல்வது எளிது.. அதன் பின் அந்த அறிவுரையின் பலனால் அக்குடும்பத்தில் ஏற்படும் நிகழ்வுகளுக்கும் நாம்தான் பொறுப்பேற்க வேண்டும். இந்த இயந்திரமயமான உலகத்தில் அது முடிகிற காரியமா? “ஏன் சின்ன வயதில் திருமணம் செய்து வைக்கிறீர்கள்?” என்று மட்டும் கேட்டுவிட்டு சமர்த்துப் பிள்ளையாக கல்யாணத்திற்குப் போய் சாப்பிட்டுவிட்டு வந்தேன். அக்குடும்பம் இன்றைக்கும் நிம்மதியாகத்தான் உள்ளது.

மாப்பிள்ளையோ, பெண்ணோ கிடைக்காதவர்கள் எனில் கஷ்டம்தான்.. ஆனால் தோஷமுள்ள பெண்தான் வேண்டும் என்று சொல்வது அதீதமான குருட்டு நம்பிக்கை என்பது எனது கருத்து. காலப்போக்கில் இது போன்ற சின்னச் சின்ன தடங்கல்கள் காணாமல் போய்விடும் என்றே நான் கருதுகிறேன்.

“வாஸ்துவுக்காக அவ்வளவு காசை வீணாக்க வேண்டுமா?” என்கிறான் தம்பி.

இது படித்த முட்டாள்கள் செய்யும் முட்டாள்தனமான செலவு. உனக்கு எது கிடைக்க வேண்டும் என்று ஆண்டவன் நினைத்திருக்கிறானோ, அது நிச்சயம் கிடைக்கும். இவ்வளவுதான் விஷயம். தோல்வியடைந்தவர்களைத் திசை திருப்ப மனிதன் கண்டுபிடித்த சுருக்கு வழி இது என்று நான் நினைக்கிறேன்.

நாயர்களின் டீக்கடையைப் போல் நம்மவர்களின் கிளி ஜோஸியம் புகழ் பெற்றதாகிவிட்டது. வாய்வழியாகக் கிடைத்த பாடத்தைக் கற்றுத் தெரிந்து கொண்ட ஒரு கூட்டம் ஊர், ஊராகச் சென்று மக்களுக்கு வாழ்க்கையின் மீதான நம்பிக்கையை கூட்டிக் கொண்டிருந்த காலத்தில், இந்த கிளி ஜோஸியம் பரவியிருக்கலாம் என்று நான் நினைக்கிறேன்.

ஆனால் எனக்கு இதில் நம்பிக்கையில்லை. இதுவும் ஒரு சூதாட்டம் போலத்தான்.. கிளிக்கு எத்தனை ஆப்பிள் துண்டுகளை கொடுத்திருக்கிறானோ அதற்கேற்றாற்போலத்தான் சீட்டுக்களை தூக்கிவீசிவிட்டு ஒரு சீட்டை எடுக்கும். அதில் வரும் புகைப்படத்திற்கெல்லாம் அந்த ஜோஸியக்காரனின் பேரன்வரைக்கும் ஒரே கதைதான்.. என் பால்ய வயதில் எனக்குக் கிடைத்த சீட்டில் அப்பன் முருகன் வள்ளி, தெய்வானையுடன் காட்சியளித்தான். ஜோஸியக்காரன் சொன்னது “இவனுக்கு ரெண்டு பொண்டாட்டி நிச்சயம்” என்று! கூடியிருந்த கூட்டம் சிரித்தது. ஆனால் ‘நிஜ வாழ்க்கை’ என்னைப் பார்த்து இன்றைக்கும் சிரித்துக் கொண்டிருக்கிறது.

போகிறபோக்கில் முட்டாள்தனமான கேள்வி ஒன்றையும் ரவி இங்கே கேட்டிருக்கிறான்..

பேயை பார்த்து சிறுவன் பயப்படுகிறான் எனில் அதற்கு ஜாதகமும், ஜோஸியமுமா காரணம்..? தனியாக எங்கேயும் போய்விடக்கூடாது என்பதற்காக எல்லார் வீட்டிலும் சின்னப் பிள்ளைகளிடம் “அங்க பேய் இருக்கு.. இங்க பிசாசு இருக்கு.. தனியா போயிராத..” என்று பயமுறுத்தி வைப்பது வழக்கம்தான். ஏன்?! தம்பிக்கும் இந்த அனுபவம் நிச்சயம் கிடைத்திருக்கும். இதற்கும் வாத்தியாரின் ஜோதிடத்திற்கும் என்ன சம்பந்தம்..?

இப்போது எனது சொந்தக் கதைக்கு வருகிறேன்.

எனக்கும் ஜோதிடம், மற்றும் ஜாதகத்தில் ஆர்வம் இல்லாமல்தான் இருந்தது. அது ஒரு காலக்கட்டம் வரைக்கும். எப்படி எனக்குக் கிடைத்த அனுபவங்களே நாத்திகனாக இருந்த என்னை ஆத்திகனாக மாற்றியது. அதேபோல் எனக்குக் கிடைத்த தோல்விகளே, என்னை இந்த வஸ்துகளை நம்ப வைத்தது. காரணம், எனக்கு வேறு வழியில்லை.

முதலில் அப்பாவும், பின்பு அம்மாவும் இறக்கிறார்கள். அண்ணனின் திருமணம் முடிந்தபின். வீட்டில் ஒரு அனாதை.. இருந்தும் நல்வழிப்படுத்தவோ, வழி காட்டவோ யாருக்கும் அக்கறையில்லை. அவரவர் பாடு அவரவர்க்கு என்று ரெண்டுகெட்டான் வயதான எனக்குத் தண்ணி காட்டியது.

தனித்தியங்க சென்னை வந்தேன். பலப் பல அனுபவங்கள் கிடைத்தபடியே இருந்தன. பணம் கவலையில்லாமல் கிடைத்தவரை என்னைப் பற்றிய அக்கறையே எனக்கில்லாமல் இலக்கில்லாமல் சுற்றிக் கொண்டிருந்தேன். தொலைநோக்குப் பார்வை என்ற வார்த்தையையோ, வாழ்க்கையில் எதை அடையப் போகிறாய்? என்னவாக விரும்புகிறாய் என்றெல்லாம் எவரும் என்னிடம் கேட்க முடியாத அளவுக்கு ஊராரோடு விலகியிருந்தேன். இது எனது தவறுதான். ஒத்துக் கொள்கிறேன். ஆனால் இதனை தவறு என்று எனக்கு யாரும் புரியவைக்கவில்லையே.. அல்லது புரியும்படியான அறிவு எனக்குள் இருக்கவில்லையே.. அதற்கு நான் எப்படி பொறுப்பாக முடியும்?

எல்லா வசந்த காலத்திற்கும் ஒரு முடிவு உண்டே! வந்தது. உடன் படித்தவர்களும், நண்பர்களும், துணையாயிருந்தவர்களும் திருமணம், மனைவி, பிள்ளைகள், வீடு என்று பிரிந்து சென்று, வாழ்க்கை ஜோதியில் தங்களை ஐக்கியமாக்கிக் கொண்ட பின்புதான் எனது சொந்த புத்தி விழித்துக் கொண்டது.

எங்கே தவறு நடந்தது..? ஏன் அவர்களைப் போல் என்னால் இருக்க முடியவில்லை. ஏன் முன்பே யோசிக்கவில்லை..? என் எனது உடன்பிறந்தோர் எனக்கு மட்டும் வழி காட்டவில்லை..? என்றெல்லாம் யோசித்தேன். விடை கிடைத்தது.

நான் மாட்டிக் கொண்டது குடும்பச் சூழலில். குடும்பத்திற்காக நான் செய்த முதல் தியாகத்தால் எனது பள்ளி மேற்படிப்பு பாதியில் முடிந்தது. அடுத்தத் தியாகத்திற்காக நான் இழந்தது எனது காதுகளை.. மூன்றாவது தியாகம் எனது அப்பாவிற்காக நான் மேற்கொண்ட படிப்பின் மீதான காதலை.. நான்காவது எனது அம்மாவிற்காக நான் வீட்டில் அமைதியாக இருந்த 3 பொன்னான வருடங்கள்.. ஐந்தாவது எனது இரண்டாவது அக்காவின் திருமணத்திற்காக நான் காத்திருந்த 2 வருடங்கள்.. அனைத்தும் என்னைக் கடந்து போன பின்புதான் எனக்கு ஞானதோயம் வருகிறது..

இதெல்லாம் எதற்கு? எனக்கு மட்டும்தானே இது வந்தது? என்னுடைய உயிர் நண்பர்களுக்கோ, எனது எதிர்வீட்டு, பக்கத்து வீட்டு நண்பர்களுக்கோ வரவில்லையே..? ஏன்..? நான் மட்டும்தான் விளையாட்டுப் பொருளா..?
இப்போது யோசித்து என்ன புண்ணியம்.. ஆக வேண்டியதைப் பார் என்றவுடன், இப்போதுதான் வாழ்க்கை என்றால் என்ன என்பதே எனக்குப் புரியத் துவங்கியது..

‘சனி’ என்பதை அனைவரும் ஒரு சம்பவத்தைச் சொல்லிப் புரிய வைப்பார்கள். ஆனால் அதனை நான் எனது அன்றாட நிகழ்விலேயே தினமும் என் தோளிலேயே தூக்கிச் சுமந்தேன்.

சொந்தக் காலில் நிற்கத் துவங்கி முடிவெடுத்து அதற்கான முயற்சியில் நான் ஈடுபட்ட 5-வது நாளிலேயே, அதுவரையில் எனக்காக இயன்றளவு உதவிகள் செய்து கொண்டிருந்த எனது சின்னக்கா காலமானார். அன்றைக்கு ஆரம்பித்ததுதான் எனக்கும், என் அப்பன் முருகனுக்குமான போராட்டம்..

உப்பு விற்கப் போனால் மழை பெய்கிறது.. உமி விற்கப் போனால் காத்தடிக்கிறது என்பார்களே.. அது எனக்கு நிஜமாகவே ஆரம்பித்தது. டைப்பிங் செய்ய உட்கார்ந்தால் கரண்ட் போய்விடும். கரண்ட் இருந்தால் பிளாப்பி வேலை செய்யாது. பிளாப்பியும் வேலை செய்துவிட்டால், பிரிண்டர் ஒர்க் ஆகாது. பிரிண்டர் சரியாக இருந்தால் பேப்பர்கள் இருக்காது. பிரிண்ட் அவுட் வந்தாலும், கேட்ரிட்ஜ்ஜில் மை இல்லாமல் இருக்கும். இது அனைத்தும் நான் சந்தித்த தினசரி நிகழ்வுகள்.

கோபமென்றால் கோபம்.. ஆத்திரமென்றால் அவ்வளவு ஆத்திரம் வரும். யாரை நோவுவது..? யார் மேல் கோபப்படுவது..? 150 பக்கத்தை கை வலிக்க டைப்பிங் செய்து முடித்துவிட்டு வேலை கொடுத்தவருக்கு போன் செய்தால் பாதி ரேட்டை குறைப்பார். அல்லது இப்போது பணமில்லை என்பார். பாதி பணமாவது வருகிறதே என்று சொல்லி விட்டுக் கொடுத்திருக்கிறேன் வேறு வழியில்லாமல்.

வீட்டுக்கு வாடகை கொடுக்க முடியாமல் தெரிந்தவர்கள், நண்பர்கள் வீடுகளுக்கு இரவு லேட்டாகச் சென்று, தவிர்க்க முடியாமல் அங்கேயே தங்கிவிட்டு செல்வதாகப் பொய் சொல்லி தங்கியிருந்திருக்கிறேன்.

சாப்பிட காசில்லாமல் இருந்தபோது ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ரத்ததானம்கூட செய்திருக்கிறேன்.. 5 நாள் இடைவெளியில் 4-வது முறையாகச் சென்றபோது வாங்க மறுத்துவிட்டார்கள். “உங்க உடம்புக்கே ரத்தம் வேணும் தம்பி.. போயிட்டு வாங்க..” என்று அன்பாகச் சொல்லியனுப்பினார்கள்.

பக்கத்து வீடுகளில் நேரடியாக சாப்பாடு கேட்க கூச்சப்பட்டுக் கொண்டு “என்ன வாடை தூக்குது?” என்று நைச்சியமாகப் பேசி பிச்சையெடுத்திருக்கிறேன். எனது உயிராக இருந்த புத்தகங்களை விற்றுவிட்டு வீட்டிற்கு வந்து குமுறி, குமுறி அழுதிருக்கிறேன்.

தினந்தோறும் ஏதாவது பிரச்சினைகள் புதிது, புதிதாக அவதாரம் எடுத்து வரும்போதுதான் நண்பர்கள் கழன்று ஓடினார்கள். “இவன் சரியான நொச்சுடா.. எப்ப பார்த்தாலும் ஏதாவது பிரச்சினைம்பான்” என்றார்கள். ஆனால் பிரச்சினைகள் கண் முன்னே வந்து பூதாகரமாக நிற்பதை, நான் காட்டும்போது சத்தம் காட்டாமல் ஓடிவிடுவார்கள்.

நல்ல நண்பர்களைத் தேடினேன். கிடைக்கவில்லை.. சிறந்த ஆசிரியர்களைத் தேடினேன். கிடைக்கவில்லை. உற்ற உறவினர்களைத் தேடினேன்.. “வராதே..” என்றார்கள்.. என் குடும்பத்தினரிடம் கேட்டேன்.. “வேடசந்தூரில் பஞ்சு மில்லில் வேலையிருக்காம்.. போய்ச் சேரு..” என்றார்கள் எனது லட்சியம் அறியாமல்.. “லட்சியமா பெரிசு.. சோறுதான் பெரிசு.. டைப் வேலையை மட்டும் பார்த்திட்டுப் போவியா..?” என்று கூசாமல் அட்வைஸ் சொன்னவர்கள், ஒரு காலத்தில் ராத்திரி 11 மணிக்கு போன் செய்து “இன்னைக்கு எபிஸோட் நல்லாயிருந்தது” என்று புகழ்ந்தவர்கள்தான்..

ஏதாவது வேலை விஷயமாகச் செல்கின்றபோது தினமும் ஏதோ ஒன்றை மறந்துவிட்டுப் போயிருக்கிறேன். எப்படி என்பது எனக்கு இன்றுவரையிலும் தெரியவில்லை. பேப்பரில் நோட் செய்து வைத்தும் பார்த்தேன். மறுநாள் அந்த பேப்பரைகூட மறந்து தேடிய அனுபவமும் உண்டு. எப்படி மறதி வந்தது என்பதே எனக்குத் தெரியவில்லை என்பதுதான் சோகம்.

இப்படி முருகனின் திருவிளையாடல்கள் அளவுக்கு அதிகமாகப் போய்க் கொண்டிருக்க எனக்கு நானே சமாதானம் செய்து கொள்ள நான் நாடியதுதான் ‘என் விதி இதுவே; எனக்கு வாய்த்தும் இதுவே’ என்கிற வார்த்தை. இந்த விதியின் கயிற்றைச் சுண்டிவிடுவது முருகப் பெருமானும், அவனது அடிப்பொடி சனி பகவானும் என்பது எனது நம்பிக்கை. அதன் பின்புதான் இவர்கள் இருவரையும் உடும்புப் பிடியாகப் பிடித்துக் கொண்டிருக்கிறேன்.

வீட்டிற்குப் பக்கத்தில் இருக்கும் கடையில் பிரிண்ட் அவுட் எடுப்பது வழக்கம். 20 KB அளவே உள்ள ஒரேயொரு பைலை 2 சிடிக்களில் ‘முன்ஜாக்கிரதை முத்தண்ணாவாக’ கொண்டு செல்வேன். கடைக்காரன் சிரிப்பான்.. “உங்களை மாதிரி ஒருத்தரை பார்த்ததே கிடையாது ஸார்..” என்பான். அவன் சொல்லி முடிப்பதற்குள் கடையில் கரண்ட் கட்டாகிவிடும்.

மறுநாளில் இருந்து நான் கடைக்குள் செல்வதற்குள் அவனே வாசலுக்கு வந்து விஷயத்தைக் கேட்டு சிடியை வாங்கிச் செல்வான். அடுத்து அவனது கம்ப்யூட்டர் படுத்துவிடும். இன்ன பிற ‘விளையாட்டுக்களும்’ அரங்கேற.. ஒரு கட்டத்தில் “தயவு செஞ்சு இங்க வராதீங்க ஸார்..” என்று சொல்கின்ற அளவுக்கு ஆகிப் போனது ‘சனி பகவானின்’ வேலை.

இதுபோலத்தான் இன்றுவரையிலும் நான் எந்தக் காரியத்தை எடுத்தாலும், செய்தாலும் அதில் ஒரு தடங்கல் வந்து நின்றுவிடும். அதனைச் சமாளித்துவிட்டு போவதற்குள் அடுத்தத் தடங்கல் வரும். இப்படித்தான் நானும் சனி பகவானும் தினந்தோறும் தொட்டுப் பிடித்து விளையாடிக் கொண்டிருக்கிறோம்.

இங்கே முருகப் பெருமானையும், சனி பகவானையும் ஏன் பெயர் குறிப்பிட்டு குற்றம் சொல்கிறேன்?

அவர்கள் இருவரையும் என்னால் பார்க்க முடியாது. பேச முடியாது. எனது வாழ்க்கையில் எனக்குக் கிடைக்கும் தோல்விகள், சோகங்கள் அனைத்தையும் அவர்கள் மீது சுமத்துவதற்கு காரணம், எனது கோபப்பார்வை எனது குடும்பத்தினர் மீதோ, என் சறுக்கல்களின் மீது உடனடிருந்த சக மனிதர்கள் மீதோ வந்துவிடக் கூடாதே என்பதற்காகத்தான். வந்துவிட்டால்..?

ஸ்டேட் பேங்க் ஆ·ப் இந்தியாவில் கிளார்க் வேலைக்கு நேர்முகத் தேர்விற்காகச் சென்றேன். வரிசையாக அமர்ந்திருந்த பலருக்கும் காபி கொடுத்தபடியே வந்த ஊழியர், மிகச் சரியாக வெள்ளை வெளேர் சட்டையில் வந்திருந்த என் மீது மொத்த காபியையும் கொட்டினார். வெலவெலத்துப் போனேன். இந்தச் சலசலப்பில் உடனேயே அழைப்பும் வர.. பதட்டத்தில் மிக, மிக எளிமையான கேள்வி ஒன்றுக்கு பதில் சொல்லாமல் சொதப்பி.. வாய்ப்பில் இரண்டாமிடத்தில் இருந்த எனக்கு 8 இடங்களில் ஒரு இடம்கூட கிடைக்கவில்லை என்பது எப்போதும் மறக்க முடியாத சோகம்.

இருபது பேர் அமர்ந்திருக்க மிகச் சரியாக என் மீதுதான் வந்து விழ வேண்டுமா? இதற்கு நான் யாரை நோவுவது..? “ஏண்டா காபியை என் மேல வந்து கொட்டின..? அதனாலதான டென்ஷன்ல பதில் சொல்ல முடியாம வேலை கையைவிட்டுப் போயிருச்சு..” என்று இப்போதும் போய் அந்த ஊழியரின் சட்டையைப் பிடித்தால் என்னவாகும்..? தார்மீக உரிமை இருக்கிறது.. ஆனால் செய்ய முடியுமா..?

இதற்குத்தான் நான் முருகனைத் திட்டுகிறேன். அவனை நொந்து கொள்கிறேன். “எனக்கு அந்த இடம் வேண்டாம் என்று முருகனே முடிவு செய்திருக்கிறான்..” என்று எனக்கு நானே முடிவு செய்து அமைதி காக்கிறேன். இதைத்தான் வாத்தியார் மீண்டும், மீண்டும் சொல்கிறார் அவருடைய அனுபத்தினாலே.. “எல்லாம் விதிப்படிதான் நடக்கும்” என்று.

அறிவுஜீவிகளைப் போல அந்த நேரத்திலும் டென்ஷன் ஆகாமல் நான் பேசியிருக்க வேண்டும் என்று சொன்னால், டென்ஷன் உருவாகி பெயர் ஹைப்போதலாமஸில் இருந்து பாய்ந்து வாய்வரைக்கும் வந்தும், உச்சரிக்க முடியாமல் போனது யார் குற்றம்..?

என் வாழ்க்கை என் கையில் என்று சொல்லி ஒதுக்கினார்களே எனது குடும்பத்தினர்.. அவர்களது நல்வாழ்வுக்காக நான் எவ்வளவோ அழுதிருக்கேனே.. அதற்கெல்லாம் பதிலாக எனது வாழ்க்கையை அவர்கள் செப்பனிட்டுத் தந்திருக்கலாமே.. தரவில்லையே.. இப்போது அவர்களிடம் போய் சட்டையைப் பிடித்து சண்டையிட்டு பேசுவதால் என்ன நடந்துவிடப் போகிறது..? அப்படிப் பேசுவதுதான் சரியானதாக இருக்குமா?

ஒரு தொலைக்காட்சி நிறுவனத்தில் நான் எழுதிய மர்மக்கதை கதை ஒன்றை கொடுத்திருந்தேன். ‘அப்புறம் கூப்பிடுறேன்.. ஒரு மாசமாகட்டும். ஒரு வாரமாகட்டும்..’ என்று இழுத்தடித்தார்கள். எனக்கு ஒன்று புரிந்து போனது. அப்போதைய கிரியேட்டிவ் இயக்குநர் இருக்கின்றவரையில் என் கதை அங்கே எடுக்கப்படாது என்பதுதான். விட்டுவிட்டேன்.

ஒன்றரை வருடங்கள் கடந்தன. புதிய கிரியேட்டிவ் டைரக்டர் வந்திருப்பதாகச் சொன்னார்கள். சென்றேன். அதே கதையைக் கொடுத்தேன். படித்தார். ஆச்சரியத்துடன், “என்ன ஸார் இது? இந்தக் கதையைத்தான் நாங்க எடுத்து முடிச்சு, ரிப்பீட்டும் ஓடி முடிஞ்சிருச்சு ஸார்..” என்றார். “நீங்க எழுதியிருந்ததுல ஹீரோயின்தான் மெயின். நாங்க ஹீரோதான் மெயின்னு எடுத்திருந்தோம்..” என்று சொல்லிவிட்டு நாக்கைக் கடித்துக் கொண்டார்.

என்ன செய்வது? இப்போது அந்த பழைய கிரியேட்டிவ் டைரக்டரைத் தேடிப் பிடித்து உதைக்கலாம். ஆனால் ஆதாரம் வேண்டுமே? என்ன செய்ய?

பலரையும் வீட்டிற்கு வந்து தூக்கிச் சென்று வேலை கொடுக்கிறார்கள். இப்படி நாம் வாட்ச்மேன் மாதிரி வாசலில் தவம் கிடக்கிறோம். நமக்கு வாய்ப்பு வர மறுக்கிறதே என்று பல நாட்கள் தூங்காமல் குமுறியிருக்கிறேன். என்ன செய்து என்ன புண்ணியம்? என் தேடலில், உழைப்பில் எந்த இடம் தவறு என்று யாரும் சொல்லக்கூட மறுக்கிறார்கள் என்பதுதான் மிகப் பெரிய சோகம்.

இங்கேதான் எனக்குக் கிடைத்த ஒரேயொரு பிடிமானமாக ஆன்மிகம் கிடைத்தது. ஆன்மிகத்தின் ஒரு பிரிவாக ஜோதிடம் கிடைத்தது. அதன் பயனாய் எனது ஜாதகம் அலசப்பட்டு நான் பார்த்து வந்த வாழ்க்கையையே இப்போது எனக்குப் பதிலாக சொல்கிறது..

“இந்த ஜாதகக்காரருக்கும், அவருடைய சகோதரருக்கும் 15 வயதிலிருந்தே முரண்பாடுகள் துவங்கிவிடும்” என்ற முதல் ஆருடமே எனக்கு ஜெயித்திருக்கிறது.

“குடும்பத்திற்கு பலம் சேர்ப்பார். ஆனால் அவர்களால் இவருக்கு பலனில்லாமல் போகும்” என்ற அடுத்த வார்த்தை அட்சரச் சுத்தமாக நடந்திருக்கும் உண்மை.

ஜோதிடத்தில் முழுக்க, முழுக்க 100 சதவிகிதமும் உண்மையாகவே நடக்க வாய்ப்பில்லை என்றாலும், கொஞ்சமாவது நடக்கத்தான் செய்கிறது என்கிறார்கள் என்னைப் போன்ற அனுபவஸ்தர்கள். அந்த அனுபவம்தான் தோல்வியடைந்தவர்களுக்கு கிடைக்கின்ற நம்பிக்கை. அந்த நம்பிக்கைதான் அவர்களை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்துகின்ற உழைப்பிற்கு கொண்டு செல்கிறது. இது சுழற்சியாக நடந்து வருவதால்தான் மனநோய் மருத்துவரிடம் செல்ல வேண்டியவர்களெல்லாம் ஜோதிட நோட்டை கையில் வைத்து திருப்தியடைந்து கொண்டிருக்கிறார்கள்.

பதிவுலகிலும் இதுதானே எனக்கு நடந்திருக்கிறது. நான் உள்ளே வரும்போதே இங்கே ஒரு அநாகரிக அரசியல் நடக்கிறது என்று வெளிப்படையாகச் சொல்லியிருந்தால் “எனது அம்மா ஒரு விபச்சாரி” என்ற வார்த்தையை நானே படிக்க வேண்டிய துர்ப்பாக்கியம் எனக்கு வந்திருக்காதே..?

“முன்பே சொல்லவில்லையே” என்று சம்பந்தப்பட்டவரிடம் போய் சட்டையைப் பிடித்தால் என்னாகும்? நீங்களே கும்மிவிட மாட்டீர்கள்.. ஆனாலும் பொறுக்கமாட்டாமல் கேட்டேன்.

“உங்களை யார் அப்படி எழுதச் சொன்னது?” என்றார். “அது எனது சுதந்திரம்..” என்றேன். “அப்படியானால் அதுவும் அவரது சுதந்திரம். யாரும் இதில் தலையிட முடியாது..” என்றார். “ஆனால் அது என்னை அவமானப்படுத்துகிறது..” என்றேன். “உண்மைதான். ஆனால் யாராலும் தடுக்க முடியாது.. முடியவில்லை..” என்றார். “இதற்கு முடிவுதான் என்ன?” என்றேன்.. “ஒன்றும் செய்ய முடியாது. நீங்கள் எழுதாமல் இருந்திருக்கலாம்..” என்றார். “நீங்கள் முன்பே வெளிப்படையாகச் சொல்லியிருக்கலாம்.. எனது வயது 36. எதையும் கிரகித்துக் கொள்ளும் ஆற்றல் எனக்குண்டு. சொல்லாதது உங்களது தவறு..” என்றேன். “வருபவர்களுக்கெல்லாம் முழுதையும் சொல்லி கிளாஸ் எடுப்பதற்கு எங்களுக்கு நேரமில்லை..” என்றார். முடிந்தது.

எனது குடும்பத்துப் பெயர் அண்டார்டிகாவரைக்கும் பரவியதுதான் இந்த வலைத்தளத்தால் நான் பெற்ற ஒரே புண்ணியம். இருப்பவர்களிடத்தில் எல்லாம் முரண்பட்டு நின்று வெறும் 7 பேரோடு சுடுகாட்டுக்கு போகக்கூடாது என்பதற்காகத்தான் இதையும் முருகன் செயல் என்று சொல்லி ஜீரணித்துக் கொண்டேன்.

இதையும் எனது விதிப்பயன் என்று நான் எடுத்துக் கொண்டால், நீங்கள் மகிழ்வீர்கள் என்றே நான் நம்புகிறேன்.

இந்த விதிப்பயன், ஜாதகத்தை அப்படியே முழுமையாக நம்பிக் கொண்டு வீட்டிலேயே அமர்ந்திருக்கவில்லை. முயற்சிகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் வாய்ப்புகள் கிடைக்கின்றபோது வருகின்ற இடைஞ்சல்கள்தான் பெரிதும் துன்புறுத்துகின்றன. ஆனாலும் ஒரே ஒரு ஆறுதல் நமக்கு இன்னமும் நேரம் வரவில்லை என்பதுதான்.

இதைத்தான் ஜாதகக்காரர்களும் சொல்லிச் சொல்லி நம்பிக்கையூட்டுகிறார்கள். இந்த நம்பிக்கை உள்ளவர்களுக்கு அதுதான் ஒரே நம்பிக்கை. நம்பிக்கை இல்லாதவர்களும் உழைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்குமென்றாலும், பலன் கிடைக்காமல் போனவர்கள் பாதியிலேயே தங்களது வாழ்வை முடித்துக் கொள்கின்ற சோகங்களும் நடக்கின்றன. அப்படியொரு சோகத்தை அணுகாதவண்ணம் இருப்பவர்களிடத்திலும் கடைசிக் கட்ட நம்பிக்கையை கொடுப்பது ஆன்மீகமும், அது சார்ந்த ஜோதிடமும்தான்..

இதுவரையிலும் உனக்கு நடக்க வேண்டியதுதான் நடந்திருக்கிறது. யாரையும் வையாதே.. நிந்திக்காதே.. நிமிர்ந்து நில்.. தொடர்ந்து செல்.. முருகன் இருக்கிறான் துணைக்கு. துணிந்த உன் வழியில் உனது உழைப்பைத் தொடர்ந்து செய்.. உனது உண்மையான உழைப்பு என்றைக்கு 99 சதவிகிதத்தைத் தொடுகிறதோ, அன்றைக்கு அவனது கிருபையான 1 சதவிகிதம் என்னும் அந்த அதிர்ஷ்டத்தைக் கொடுப்பான். பெற்றுக் கொள்.. வாழ்ந்துவிடு.. என்கிறது எனது மனம்.

கடைசியாக ஒன்று..

எனது வலைத்தளம் பலருடைய சிஸ்டத்திலும் திறக்க மறுப்பதாகப் பலரும் பல முறை புகார் தெரிவித்து வந்திருக்கிறார்கள். நானும் பலவித வழிகளைச் செய்து பார்த்துவிட்டேன். முடியவில்லை. முடியவே இல்லை. நேற்றைக்குக்கூட ஒரு சிறிய திருத்தம் செய்து வைத்திருக்கிறேன். இப்போதும் திறக்க மறுக்கிறது என்று புகார் வருகிறது..

யோசித்துப் பார்த்தேன். எனக்குப் புரிந்துவிட்டது. 15 வருட அனுபவமாச்சே.. உங்களுக்குப் புரியாது என்று நினைக்கிறேன். இதன் உண்மையான காரணம் என்ன என்று யாராவது சொல்ல முடியுமா..? சவாலே விடுகிறேன்.. முடியவே முடியாது.. ஒன்றை நிவர்த்தி செய்தால், வேறொன்றால் தடங்கல் வரும்..

ஏனெனில்,

இந்த வலைப்பதிவு திண்டுக்கல் மாநகரில் கன்னி ராசி, அஸ்த நட்சத்திரத்தில் ஒரு உச்சி வெயில் பொழுதில் சவடமுத்து-திருமலையம்மாள் என்கிற தம்பதிகளுக்கு 4-வது குழந்தையாக பிறந்து தொலைத்த, உருப்படாத ஜாதகக்காரனான சரவணன் என்பவனுக்குச் சொந்தமானது.

இதுதான் உண்மையான காரணம்..!

பொறுமையாகப் படித்து முடித்த அனைவருக்கும் எனது நன்றிகள்.. !

வாழ்க வளமுடன்!