Archive for ஏப்ரல், 2007

எந்தப் பகுத்தறிவைப் பயன்படுத்துவது?

ஏப்ரல் 30, 2007
என் இனிய தமிழ் மக்களே…
உண்மைத்தமிழனுக்கும், சோதனைகளுக்கும் நெருங்கிய நட்புண்டு. அந்த வகையில் இப்பொழுது உங்களது அன்பு உண்மைத்தமிழனுக்கு, இன்னுமொரு சோதனை வந்துள்ளது. “நீயே எங்களுக்கொரு சோதனைதாண்டா..” என்று நீங்கள் அனைவரும் கோரஸாகச் சொல்வது என் காதில் விழுகிறது என்றாலும், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் மேலே தொடர்கிறேன்.. இனி சீரியஸாக..
“பகுத்தறிவு என்றால் என்ன?” இந்தக் கேள்வி என் மனதுக்குள் நீண்ட நாட்களாகவே இருந்து வருகிறது.. ஏனெனில் ஆண்டவனோ, அல்லது இயற்கையோ-இவை படைத்தவற்றில் மிகச் சிறந்தது, உயர்ந்தது மனிதப் பிறவிதான் என்று பலரும் சொல்லி, எழுதிப் படித்திருக்கிறேன்.
அப்படிச் சொன்னவர்கள் அனைவருமே ஒருமித்தக் குரலில் சொல்லியிருப்பது “மனிதர்களுக்கும் மற்றப் படைப்புகளுக்கும் இருக்கும் வித்தியாசம், மனிதனிடம் இருக்கும் பகுத்தறிவுதான்..” என்று எழுதியிருந்தது எனது இளமைக் கால ‘கனவுக்கன்னியான சில்க்ஸ்மிதா’ பற்றிய எனது ஞாபகத்தினைத் தொடர்ந்து இரண்டாவதாக நினைவில் இருக்கும் ஒரு விஷயம்..
பகுத்தறிவு என்றால் ‘பகுத்து+அறிவு=பகுத்தறிவு’ என்று எனது தமிழ் ஆசிரியர்கள் சொல்லிக் கேட்டிருக்கிறேன். ‘அறிவையே பகுத்து அறிவது’ என்றார்கள் இன்னும் சுருக்கமாக.. “அதெப்படிங்கய்யா.. அறிவைப் பகுத்து அறிவது..?” என்ற எனது கேள்விக்கு “குறுக்க குறுக்க பேசாதடா பல்லழகா..” என்று 9-ம் வகுப்பு கணபதி ஐயா, பிரம்பால் ‘பேசியது’ எனக்கு இன்றைக்கும் ஞாபகமிருக்கிறது.
“எந்த விஷயமாக இருந்தாலும் அது அறிவுடையதுதானா? அறிவூப்பூர்வமானதுதானா? கற்றவர்கள் அறிவார்ந்த செயல் என்று ஏற்றுக் கொள்ளும் அளவுக்குத் தகுதியுடைய விஷயம்தானா? என்று பல்வேறு டைப்புகளில் ‘எலிக்குட்டி’ சோதனை செய்து பார்த்துவிட்டு, பின்பு அதனை ஏற்றுக் கொள்வதுதான் அல்லது ஏற்றுக் கொள்ள வைப்பதுதான் பகுத்தறிவு..” என்றார்கள் நான் படித்தச் சில புத்தகங்களை எழுதியிருந்த சில ‘பெரியவர்’கள்.
“சரி.. அதுக்கென்ன இப்போ” என்கிறீர்களா? கதை இங்கே.. இங்கேதான் ஆரம்பிக்கிறது..
என் வலைத்தளத்தின் முகப்புப் பக்கத்தில் நானே என்னைப் பற்றிச் சொல்லியிருக்கிறேன் இப்படி: “பிறந்து வளர்ந்ததில் சொல்லிக் கொள்ளும்படியான எந்தச் சாதனையும் இல்லை; உயிருடன் இருப்பதைத் தவிர..” என்று..
உண்மைதான். ஒன்றுமே செய்யாமல், எதையுமே முயற்சி செய்யாமல் சும்மாவே இருந்தால் என்ன வரும்? தூக்கம்கூட வராது. ஆகவே, எதையாவது செய்து சரவணன் என்ற இயற்பெயரைக் கொண்ட இந்த உண்மைத்தமிழனின் பெயரை, தமிழ்ச் சமுதாயத்தின் வரலாற்றில் நீங்காத இடமாக பொறித்து வைத்துவிட வேண்டும் என்ற வெறி என் மனதுக்குள், எனக்குப் ‘பகுத்தறிவு’ என்ற ஒரு ‘வஸ்து’ தோன்றிய நாளிலிருந்தே இருந்து வருகிறது.
அதைச் செயல்படுத்தும்விதமாக எனக்குப் பிடித்தத் துறையான சினிமாவின் முதல் படியாக குறும்படம்(Short Film) ஒன்றை இயக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். பட்ஜெட் மிகக் குறைவாக இருந்தாலும் தயாரிப்பாளர் கிடைக்காமல் அல்லல்பட்டு கடைசியில் ஒரு அன்புச் சகோதரி, “உன்னைப் பார்த்தா ரொம்பப் பாவமா இருக்குடா.. ஒரு வருஷத்துக்கு பிச்சைக்காரங்களுக்கு போடுற காசை, மொத்தமா உனக்குப் போட்டுட்டதா நினைச்சுக்குறேன்.. இந்தா பிடிச்சுத் தொலை..” என்று தயாரிப்புப் பணத்திற்கான செக்கை என் கையில் பாசத்துடன் திணித்தார்.
இன்றே, இப்போதே, அடுத்த நொடியே ஷ¥ட்டிங் என்று பீலா விட்டுக் கொண்டு சுற்றியவன், இன்றைக்கு தலைசுற்றி விழும்படியான நிலைமையில் இருக்கிறேன். காரணம், எனக்கு இருப்பதாக நான் நினைத்துக் கொண்டிருக்கும் ‘பகுத்தறிவு’.
கதையின்படி மேடை போன்ற அமைப்பு வேண்டும். அதற்காக இடம் தேடத் துவங்கினேன். ஏஸி வசதி செய்யப்பட்ட அரங்குகளின் வாடகைக் கட்டணங்கள் நான் போட்டிருக்கும் பட்ஜெட்டின் மொத்தத்தையும் சுருட்டிவிடுவதால் அதைவிடக் குறைந்த கட்டணத்திற்கு இடம் தேடினேன். எங்கும் கிடைக்கவில்லை. இருக்கின்ற இடங்களும் உண்மைத்தமிழனின் ‘ராசி’ப்படி “இப்போது நாங்கள் ஷ¥ட்டிங்கிற்கு தருவதில்லை..” என்று அடித்துச் சொல்லிவிட்டார்கள்.
பள்ளிகளைத் தேடத் தொடங்கினேன். “முதலில் டொனேஷனாக பத்தாயிரம் ரூபாய் கொடுங்கள். பின்பு நீங்கள் எடுக்கப் போகும் ஸ்கிரிப்ட்டை கொடுங்கள். நாங்கள் படித்துப் பார்த்துவிட்டு எங்களுக்கு ஏற்புடையதாக இருந்தால், இடம் கொடுக்கிறோம்..” என்றார்கள். சினிமா உலகில் யாருக்குமே பிடிக்காத விஷயம் “சப்ஜெக்ட் என்ன..?” என்று கேட்பதுதான். உண்மைத்தமிழனும் அதற்கு விதிவிலக்கல்ல.. “வேண்டாம்..” என்று புறக்கணித்துவிட்டேன்.
கடைசியாக, “மாநகராட்சி சமுதாய நலக்கூடம் ஒன்று இருக்கிறது. அங்கே மேடை போன்ற ஒரு அமைப்பு இருக்கிறது. சென்று பாருங்கள்..” என்றொரு தகவல் கிடைத்தது. சென்றேன். பார்த்தேன். எனக்குப் பிடித்திருந்தது. ‘சரி இதையே முடித்துவிடலாம்..’ என்று நினைத்து என் வேலைகளை ஆரம்பித்தேன். உண்மைத்தமிழனின் உடன் பிறவா சகோதரனான, ‘சனி’ பகவான் தன் ‘வேலை’களை இங்குதான் ஆரம்பித்தான்.
முதலில் மாநகராட்சி மண்டல அலுவலகத்திற்கு சென்றேன். “குறும்பட ஷீட்டிங். வாடகைக்கு வேண்டும். கட்டணம் எவ்வளவு?” என்றேன். “3000 ரூபாய்..” என்றார்கள். “மின்சாரச் செலவும், சேர்களுடைய கட்டணமும் தனி..” என்றார்கள். “சரி..” என்று ஒத்துக் கொண்டு “பணத்தை எங்கே கட்ட வேண்டும்..?” என்றேன்.. “மொதல்ல இந்த வார்டு கவுன்சிலரைப் போய் பார்த்துட்டு வாங்க..” என்றார் அங்கிருந்த அலுவலர். “அவரை எதற்கு பார்க்க வேண்டும்..?” என்றேன். “இல்ல ஸார்.. அவர் சொல்லாம யாருக்கும் வாடகைக்கு கொடுக்கக்கூடாதுன்னு சொல்லிருக்காங்க ஸார்..” என்றார் அலுவலர்.
“என்ன இது பைத்தியக்காரத்தனமா இருக்கு..? அது ஒன்றும் கவுன்சிலரின் சொந்த அரங்கம் கிடையாதே.. பின்பு எதற்கு நான் அவரைப் போய் பார்க்க வேண்டும்..?” என்றேன். “ஸார்.. இத்தனை நாளா எந்த நாட்ல இருந்தீங்க? ஆஸ்திரேலியாலயா?” என்றார் அலுவலர். நான் முறைத்தேன். “பின்ன என்ன ஸார்? நாட்டு நடப்புத் தெரியாம இப்படி காலங்கார்த்தால வந்து கழுத்தை அறுக்குறீங்க.. போங்க ஸார்.. மொதல்ல அவரைப் பார்த்துட்டு வாங்க ஸார்..” என்றார்கள்.
‘சரி.. இவ்ளோ தூரம் வந்தாச்சு.. அவரையும் பார்த்துத்தான் தொலைவோமே?’ என்ற எண்ணத்தில் கவுன்சிலரைத் தேடத் துவங்கினேன். காலையில் தொடங்கிய எனது தேடுதல் வேட்டை, மாலையில்தான் முடிந்தது. “அவர் இப்ப ரொம்ப பிஸி ஸார்.. மக்கள் பணியில் மும்முரமாக இருக்கிறார். உங்களுடைய பிரச்சினை என்னன்னு சொல்லுங்க.. எங்களால முடிஞ்சா நாங்க உதவி செய்றோம்..” என்றார்கள் கவுன்சிலரைப் பார்க்கப் போன இடத்தில் இருந்த கரை வேட்டிகள்.
சொன்னேன்.. “அவ்ளோதான… இதுக்குத்தான் இம்புட்டு தூரம் அண்ணனைத் தேடி அலைஞ்சீங்களா…?” என்ற ஒரு மீசைக்கார அண்ணன் தன் கைப்பேசியை எடுத்து ஒரு தட்டு தட்டினார். மறுமுனையில் இருப்பவரிடம், “ஏம்ப்பா ஒரு ‘கலெக்ஷன்’ வந்திருக்கு.. உடனே சொல்ல வேணாமா? என்னய்யா வேலை பார்க்குறீங்க நீங்க…?” என்று எகிறினார். மறுமுனையில் இருந்தவர் எதையோ சொல்ல.. இவரும் என் இருப்பிடத்திலிருந்து சற்றுத் தள்ளிப் போய் நின்று, திட்டித் தீர்த்துவிட்டு என்னருகில் வந்தார்.”ஸார் நீங்க இப்பவே ஆபீஸ¤க்கு போங்க.. உங்களுக்குத் தரச் சொல்லிட்டேன். தருவாங்க.. வாங்கிக்கங்க..” என்றார். ‘ஆஹா.. உண்மைத்தமிழா.. இன்னிக்கு சனீஸ்வரன் தோத்துட்டான்..’ என்ற சந்தோஷத்தில் அலுவலகத்திற்குச் சென்றேன். கோபப் பார்வையுடன் அந்த அலுவலர் என்னை எதிர்கொண்டார்.
“ஏன் ஸார்.. நீங்க படிச்சவர்தான.. ஒரு மேட்டரை எப்படி முடிக்கணும்னு தெரியாதா? இதெல்லாம் தெரியாம எப்படி ஸார் நீங்க படம் எடுக்குறேன்னு சொல்லிட்டு வர்றீங்க..” என்று ஏகத்துக்கும் எகிறினார். நானும் பதிலுக்கு “நீங்க சொன்னதுனாலதான அவரைப் பார்க்கப் போனேன்..” என்றேன். “சரி ஸார்.. ‘அவரைப் பார்க்கப் போறேன்’னு என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லி¢ருந்தா.. ‘என்ன செய்யணும்?’ ‘எப்படிப் பேசணும்’னு நான் சொல்லிக் கொடுத்திருப்பேன்ல.. இப்படி திடுதிப்புன்னு நீங்களா நேர்ல போய் ‘அம்பானி’ மாதிரி டீலிங்கை முடிச்சா எப்படி?” என்று கடுகடுவென்று பேசி முடித்தார்.
நான் எதுவும் பேசவில்லை. இப்போது வீறாப்பு பேசினால் இந்த இடமும் கிடைக்காமல் போய்விடுமே என்று நினைத்தேன். “சரி.. சரி.. 4500 ரூபாய் கட்டிட்டு ரசீதை வாங்கிட்டுப் போங்க..” என்றார். எனக்குத் திக்கென்றானது. “என்ன ஸார் இது? காலைலதான் 3000 ரூபாய்னு சொன்னீங்க.. இப்போ 4500 ரூபாய்ன்னு சொல்றீங்க?” என்றேன் அதிர்ச்சி விலகாமல்.
“இதுக்குத்தான் சொன்னேன். என்கிட்ட சொல்லிட்டுப் போயிருக்கலாம்னு..” என்றவர் “நீங்க பார்த்துப் பேசினவர் ஒண்ணுமே சொல்லலியா..?” என்றார். “இல்லையே.. ‘போங்க.. தருவாங்க.. வாங்கிக்கங்க’ன்னு மட்டும்தான் சொன்னார்..” என்றேன். “அந்த xxxx மகன்களுக்கு வேற வேலை இல்லை.. செய்ற பாவத்தை முழுசா, அவனுகளே செஞ்சு தொலைய வேண்டியதுதான.. இதுக்கெதுக்கு எங்களை இழுக்குறானுக..” என்று மீண்டும், மீண்டும் தனது அன்பை வெளிப்படுத்த ஆரம்பித்தார்.
நான் அவரை அவசரமாகத் தடுத்து, “ஸார்.. நீங்க நல்லா தமிழ் பேசுறீங்க.. எனக்குத் தெரியுது. ஆனா முழுசையும் கேட்க எனக்கு நேரமில்லை.. என்ன விஷயம்னு சொல்லுங்க..” என்றேன்.. ஒரு நிமிட தாமதத்துக்குப் பின்னர் “உட்காருங்க..” என்றார். அதுவரையில் நின்று கொண்டிருந்த நான் ‘இப்போதாவது கண்ணு தெரிஞ்சுச்சே மனுஷனுக்கு’ என்ற நினைப்போடு அமர்ந்தேன்.
“ஸார் இதப் பாருங்க.. நான் நேரடியாவே சொல்லிடறேன்.. இங்க வாடகை 3000 ரூபாய்தான். 3000 ரூபாய்க்குத்தான் நாங்க பில்லும் கொடுப்போம். நீங்க கூட கொடுக்கிற 1500 ரூபாய், கவுன்சிலருக்குப் போகும். இதான் மேட்டர்..” என்றார்.சுற்றி வளைத்து ‘லஞ்சம்’ என்பது எனக்குப் புரிந்தது. “அதெப்படி ஸார் லஞ்சம் தர முடியும்?” என்று நான் கேட்க, “அதான் கேக்குறாங்கள்லே” என்று பட்டென்று பதில் வந்தது. “இது என்ன கணக்கு ஸார்? இடம் மாநகராட்சியோடது. நானும் மாநகராட்சி எல்லைக்குள்ளதான் குடியிருக்கிறேன். மாநகராட்சித் தேர்தல்ல ஓட்டும் போட்டிருக்கேன். மாநகராட்சில எனக்கும் ஒரு பங்கு இருக்கு.. நான் முறையா மாநகராட்சி அனுமதித்திருக்கும் கட்டணத்தைத்தான் கட்ட வேண்டும். கூட கவுன்சிலர் கேட்டார்னு, நீங்க எப்படி என்கிட்ட கேக்கலாம்..” என்றேன் கோபமாக.
நிறைய பேர் உடன் இருக்க.. அனைவரும் எங்களைப் பார்ப்பது எனக்குத் தெரிந்தது. அலுவலர் சற்று சங்கடத்துடன் “கொஞ்சம் வெளில வர்றீங்களா? பேசலாம்..” என்றார். ‘சரி’ என்று அமைதியாக அவருடன் வெளியில் வந்தேன். ஒரு மரத்தடிக்கு வந்ததும் ‘வெண்குழல்’ ஒன்றைப் பற்ற வைத்து ‘இழு இழு’ என்று இழுத்தார். பக்கத்தில் இருந்து புகையை இழுத்தக் காரணத்தால் சத்தியமாக எனக்கு கேன்சர் வர வாய்ப்புண்டு. அவ்ளோ புகை.. அவ்ளோ ஸ்பீடு.
கையில் நெருப்பு சுட்ட பிறகுதான், தீர்ந்துவிட்டது என்ற சுயநினைவுக்கு வந்தவர் அந்த ‘பிட்’டை கீழே போட்டார். பின்பு என்னை ஏறெடுத்துப் பார்த்தவர், “உங்க வயசென்ன?” என்றார். “37..” என்றேன் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு. “கல்யாணம் ஆயிருச்சா?” என்றார். “இல்லை..” என்று உண்மையைச் சொன்னேன். “நினைச்சேன். அதான் இப்படி இருக்கீங்க..” என்றார். பின்பு பெருமூச்சு ஒன்றை விட்டவர் பேசத் தொடங்கினார்.
“நான் சொல்றதை குறுக்கிடாம கடைசிவரைக்கும் கேளுங்க.. அப்புறமா உங்க பதிலைச் சொல்லுங்க.. நாங்க கவர்ன்மெண்ட் ஸ்டாப் கிடையாது. மாநகராட்சி ஊழியர்கள். எங்களுக்கு மேலதிகாரிகள் மாநகராட்சி அலுவலகத்தில் இருந்தாலும், நிஜமான மேலதிகாரிகள் அந்தந்தப் பகுதி கவுன்சிலர்கள்தான். அவங்க சொல்றதை நாங்க கேட்டுத்தான் ஆகணும்.. இல்லேன்னா நான் சரியா வேலை பார்க்கலைன்னு சொல்லி இன்னிக்கே, இப்பவே அவுங்களால என்னை வீட்டுக்கு அனுப்ப முடியும். எங்களுக்குன்னு ஒரு வலு வாய்ந்த ஊழியர்கள் சங்கமோ, அமைப்போ இன்றுவரை இல்லை. இது ஒரு விஷயம்.
அடுத்தது என்னன்னா.. இப்ப புதுசா ஜெயிச்சு வந்திருக்கிற கவுன்சிலர்கள்ல நிறைய பேரு கோர்ட்டு உத்தரவால் ரெண்டு தடவை காசை செலவு பண்ணி போஸ்ட்டுக்கு வந்திருக்காங்க.. இப்ப இருக்குற கவர்ன்மெண்ட்டு ஓரளவுக்கு வெளிப்படையா செயல்பட்டு வர்றதால, இவுங்களால போட்ட காசை அள்ள முடியலை. பார்த்தாங்க.. அதுக்குத் தோதா கிடைச்சதுதான் இந்த மாதிரி இடைல புகுந்து அள்ளுற டெக்னிக்..
இப்ப நான் அவுங்களை எதிர்த்து உங்ககிட்ட பணத்தை வாங்கிட்டு ரசீது போட்டுக் கொடுத்திருவேன். ஆனா அதுக்கப்புறம் என்ன நடக்கும்னா.. கரெக்ட்டா உங்க நிகழ்ச்சி நடக்கிற அன்னைக்கு, அந்த பில்டிங்குக்கு மட்டும் கரெண்ட் வராது.. கேட்டால் “மின் சப்ளையில் பிரச்சினை” என்பார்கள். இல்லாட்டி அங்க வேலை பார்க்குற எங்க ஊழியரே, ‘இல்லாத பாட்டி ஒண்ணு செத்துப் போச்சு’ன்னு அலகாபாத்துக்குக்கூட பிளைட் ஏறிப் போயிருவான். அதுவும் இல்லாட்டி.. அன்னிக்குன்னு பார்த்து கவுன்சிலர் தன் கட்சியோட செயல் வீரர்கள் கூட்டத்தைத் திடீர்ன்னு அங்க கூட்டிருவாரு.. உங்களால ஒண்ணும் செய்ய முடியாது.
மிஞ்சிப் போனா கமிஷனர்கிட்ட புகார் செய்யலாம். கமிஷனர் மின் வாரியத்துக்கிட்ட விளக்கம் கேட்பாரு. அதுவும் எப்படி? கடிதம் மூலமா.. அங்க லெட்டர் போயி.. அது மின் வாரிய ஆபீஸையே சுத்தோ சுத்துன்னு சுத்திட்டு எங்க கமிஷனருக்குப் பதில் கடிதம் வர்றதுக்கு எப்படியும் ஒரு மாசம் ஆயிரும். அப்படியே கடிதம் வந்தாலும் அதுல என்ன இருக்கும்னு என்னால இப்பவே சொல்ல முடியும்.. “தவிர்க்க முடியாத காரணத்தால் அந்தக் கட்டிடத்திற்கு அன்றைக்கு மின் சப்ளை துண்டிக்கப்பட்டது. தடங்கலுக்கு வருந்துகிறோம்..” என்று இருக்கும். கமிஷனரும் உங்ககிட்ட இதைத்தான் சொல்வார். உங்களால என்ன செய்ய முடியும்? சொல்லுங்க..
இல்லாட்டி.. நீங்க நுகர்வோர் கோர்ட்ல கேஸ் போடலாம். அதுனால எங்களுக்கு எந்த விதமான பிரச்சினையும் இல்லை. ஏன்னா எப்படியும் நாங்க கோர்ட், கேஸ¤ன்னு அலையப் போறதில்லை. நீங்கதான் அலையணும்.. எங்க ஆபீஸ்லேர்ந்து லெட்டர்தான் வரும். மின் வாரியத்துக்கு ஒரு நோட்டீஸ், வேலை பார்த்தவனுக்கு ஒரு நோட்டீஸ், கவுன்சிலருக்கு ஒரு நோட்டீஸ்ன்னு பறக்கும்.. எல்லாருமே சாமான்யத்துல பதில் சொல்ல மாட்டாங்க. ஆளுக்கொரு ரெண்டு, ரெண்டு மாசம் இழுத்துதான் தங்களோட பதிலை தாக்கல் செய்வாங்க.. அதுக்கே ஒரு வருஷம் ஓடிரும். அப்புறம் அடுத்த ஒரு வருஷத்துக்குள்ள தீர்ப்பு வந்திரும். எப்படின்னா.. நீங்க கட்டின பணத்தைத் திருப்பித் தரச் சொல்லி.. அதுக்குள்ள நீங்க எடுக்கப் போற குறும்படத்தோட கதையே உங்களுக்கு மறந்து போனாலும், போயிரும்..
இல்லேன்னா.. லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸ்ல புகார் செய்யுங்க.. மொதல்ல அவுங்க இந்தப் புகாரை வாங்குவாங்கலான்றதே சந்தேகம். ஏன்னா கவுன்சிலர் இருக்குற கட்சியோட தலைவர்தான் இந்தத் துறைக்கு சுப்ரீம் லீடர். ஆட்சில இருக்குற கட்சியோட பேர் கெடுற மாதிரியான ஒரு காரியத்தை எந்தப் போலீஸ்காரனும் செய்ய மாட்டான் ஸார்.
இந்த லஞ்சத்தை நீங்க proof பண்றதும் ரொம்பக் கஷ்டம்தான்.. ஏன்னா, இப்ப நான் உங்களுக்கு 3000 ரூபாய்க்குத்தான் ரசீது தருவேன். மீதி 1500 ரூபாயையும் நான் என் கையால வாங்க மாட்டேன். இந்த ரசீதோட 1500 ரூபாய் பணத்தைக் கொண்டு போய் அந்த கவுன்சிலர் கை காட்டுற ஆளுகிட்ட கொடுத்திட்டு அவர் அங்க இருந்து எனக்கு ஒரு போன் போட்டு ‘ஓகே’ன்னு சொன்ன பின்னாடிதான் ரிஜிஸ்தர்ல உங்க பேரையும், அட்ரஸையும் எழுதி பதிவு செய்வேன். ‘ஓகே’ன்னு போன் வரலைன்னா.. அந்த ரசீது ‘கேன்ஸல்’ன்னு எழுதி வைச்சிருவேன். உங்களுக்குப் பணம் வேணும்னா, நீங்களே திரும்பி வந்து பணம் கேட்பீங்கள்லே… அப்ப அந்த ரசீதை வாங்கி வைச்சிட்டு பணத்தைப் பத்திரமா திருப்பிக் கொடுத்திருவேன்..
கவுன்சிலருக்கு லஞ்சப் பணம் கிடைக்காம மாநகராட்சிக்கு மட்டும் பணம் வருதுன்னா, அது தேவையில்லைன்னு அவுங்களே முடிவு பண்ணிட்டாங்க. இதுல இந்தக் கட்சியோட கவுன்சிலர்ன்னு இல்லை ஸார்.. போன தடவை இருந்த கட்சியோட கவுன்சிலரும் இதைத்தான் செஞ்சார்.. இந்த விஷயத்துல மட்டும் எல்லாக் கட்சிக்காரர்களும் ஒண்ணுதான்.. இதுல என்னை மாதிரி சாதாரணமான கூலிக்கு மாரடிக்கிற நாய்க என்ன செய்ய முடியும்? சொல்லுங்க..
நீங்க இன்னொன்னும் செய்யலாம். மினிஸ்டர்கிட்ட போகலாம்.. பத்திரிகைகள்ல பேட்டி தரலாம். என்ன வேண்ணாலும் பண்ணலாம். ஆனா ஒண்ணு மட்டும் ஞாபகம் வைச்சுக்குங்க.. போன்ல எப்படி ஒட்டுக் கேக்குறதுன்னு சிபிஐக்கே கத்துக் கொடுத்தது நம்ம தமிழ்நாட்டு அரசியல்வாதிகள்தான்.. இதெல்லாம் அவுங்களுக்கு ஒரு சாதாரண விஷயம். ‘கட்சியின் செயல்வீரர்கள் கூட்டத்தைக் கூட்டிட்டோம். அங்க பங்ஷன் இருந்தது எனக்குத் தெரியாது’ன்னு கவுன்சிலர் கூலா அவுங்க கட்சி மேலிடத்துல சொல்லித் தப்பிச்சிருவாரு.. அங்கேயும் ஒண்ணும் நடக்காது.
பத்திரிகைல சொன்னீங்கன்னா.. அவுங்களும் தன் பங்குக்கு பக்கம் நிரம்புதேன்னு வெளியிட்டிருவாங்க.. கமிஷனரும் விசாரிக்கிறேன்னு சொல்வாரு. கவுன்சிலரும் நான் அரிச்சந்திரன் வீட்டுக்குப் பக்கத்து வீட்டுக்காரன்னு சொல்வாரு. அதுக்காக நீங்க அரிச்சந்திரனையா போய் பார்க்க முடியும்? சொல்லுங்க..”
– இப்படி நீட்டமாக ஒரு மகாபாரதத்தைச் சொல்லி முடித்தார் அந்த அலுவலர்.
வாய் மூடாமல் கேட்டுக் கொண்டிருந்த நான் “ஏன் ஸார்.. இவ்ளோ விஷயத்தையும் தெரிஞ்சு வைச்சிருக்கீங்களே.. லஞ்சம் வாங்குறதும் தப்பு.. அதை வாங்கிக் கொடுக்கிறதும் தப்புன்னு உங்களுக்குத் தெரியுமே ஸார்.. நீங்க முடியாதுன்னு உறுதியா நிக்கலாமே..” என்றேன்.
“நிக்கலாம்தான்.. யார் இல்லேன்னா.. அப்புறம் என் குடும்பம் நிக்க முடியாதே.. என் டேபிள்ல இருக்கிற பைல்ஸ்ல ஏதோ ஒண்ணு என் கண்ணு முன்னாடியே காணாமப் போகும்.. சில பைல்ஸ்ல சில பக்கங்கள் கிழித்து எறியப்பட்டிருக்கும். மறுநாள் என் மேல டிபார்ட்மெண்ட் என்கொயரி நடக்கும். உண்மை தெரியறவரைக்கும் நான் சஸ்பெண்ட் ஆவேன்.. இப்பவே கொடுக்குற சம்பளம் பிச்சைக்காரத்தனமா இருக்கு. இதுலயே பாதின்னா வடபழனி முருகன் கோவில் வாசல்ல இருக்குற பிச்சைக்காரனுக்கு, ஒரு நாள்ல கிடைக்கிற காசைவிட கம்மியாத்தான் என் சஸ்பெண்ட் சம்பளம் இருக்கும். அதை வைச்சு நான் என்ன பண்றது?
எனக்கும் பேமிலி இருக்கு ஸார்.. நானும் ஆசைக்கு ஒண்ணு, ஆஸ்திக்கு ஒண்ணுன்னு பெத்து வைச்சிருக்கேன். ஆசைக்கு பெத்தது +2 படிக்குது. அடுத்த வருஷம் அவளை காலேஜுக்கு அனுப்பணும்.. அதுக்கு காசு யார் தருவா? ஆஸ்திக்குப் பெத்தது இப்பத்தான் பத்தாம்கிளாஸை மூணாவது தடவையா படிச்சிட்டிருக்கு.. அவனுக்கு ஆஸ்தின்னு நான் கொடுக்கப் போறது என் இன்ஷியல் மட்டும்தான்னு தெரிஞ்சா, என் எழவுக்குக்கூட வர மாட்டான் ஸார் அவன்.. நான் என்ன செய்றது? சொல்லுங்க..
இந்தப் பாவப் பொழைப்பே வேண்டாம்டா சாமின்னுட்டுத்தான் லஞ்சமா கொடுக்கிற காசை நான் மட்டும்.. இந்த ஆபீஸ்லயே நான் மட்டும்தான் கைல வாங்காம ‘எவன்கிட்டயாவது கொண்டு போய் கொடுங்க.. எவனோ எடுத்துத் தொலைங்க’ன்னு சொல்லி ஓரமா ஒதுங்கி நின்னுக்கிட்டிருக்கேன்.. என்னால முடிஞ்சது இவ்ளோதான் ஸார்..” என்று சொன்னவர் மூச்சு வாங்கியபடியே ஒரு ஓரமாகச் சென்று அமர்ந்துவிட்டார்.
எனக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை. “இதுல வேற ஏதாவது வழியிருக்கா..?” என்றேன். ஒரு நிமிடம் ஏறெடுத்துப் பார்த்தவர், “ஒண்ணே ஒண்ணு இருக்கு..” என்றவர், “பேசாம ஒரு கத்தியை எடுத்துட்டுப் போய் அவன் வயித்துல சொருகிறுங்க.. போலீஸ் வரும். பின்னாடி பத்திரிகைக்காரங்க வருவாங்க. மேட்டரைச் சொல்லுங்க.. பரபரப்பாகும். உங்க கோபத்துக்குப் பின்னாடி இருக்கிற சோகத்துல நியாயம் இருக்குன்னு நினைச்சு, எல்லாரும் உங்களைப் பாராட்டுவாங்க.. பேட்டி எடுப்பாங்க.. பொன்னாடை போர்த்தி விழா எடுப்பாங்க.. என்ன ஒரு விஷயம்.. அதுக்கு முன்னாடி குறைந்தபட்சம் ஒரு மூணு மாசமாச்சும் நீங்க ஜெயில்ல களி திங்கணும்.. எது உங்களுக்கு நல்லதுன்னு நீங்களே முடிவு பண்ணிக்குங்க. அப்புறமா இந்த சினிமா, short film-ன்னு சொன்னீங்கள்லே.. அதை எடுங்க…” என்றவர் திரும்பிப் பார்க்காமல் போய்விட்டார்.
இனிமேலும் வீணாகச் சென்று அவரைத் தொந்திரவு செய்வது நாகரிகமல்ல என்பதால் திரும்பிவிட்டேன். இரவு படுக்கையில் தலையைச் சாய்த்தவுடன், அவர் பேசிய பேச்சுக்களில் இருந்த அரசியல் நியாயம், அரசியல் அநியாயம் இரண்டுமே எனக்குப் புரிந்தது..
‘லஞ்சம் கொடுப்பது குற்றம். அது ஒரு பாவச்செயல் அதைச் செய்யாதே’ என்கிறது எனக்குள் இருக்கும் பகுத்தறிவு. ‘கொடுக்காவிட்டால் அந்த இடத்தில் ஷ¥ட்டிங் செய்ய முடியாது..’ என்கிறது இன்னொரு எச்சரிக்கை பகுத்தறிவு. ‘நீ ஒரு இந்தியக் குடிமகன். நியாயம், நேர்மை, நீதி என்பவற்றை போராடித்தான் எதையும் பெற வேண்டும். போராடு’ என்கிறது இன்னொரு பகுத்தறிவு..
லஞ்சம் வாங்குவது என்பதே இப்போது சட்டப்பூர்வமாகிவிட்டதைப் போல் அரசியல்வாதிகள் நடந்து கொண்டிருக்க.. ‘லஞ்சம் கொடுக்காமல் எதுவுமே நடக்காது. இதெல்லாம் ஜனநாயகத்துல சர்வசாதாரணம்’ என்ற மனரீதியில் பொதுமக்களும் இருக்க.. இவர்களிடம் பகுத்தறிவு என்ற ‘வஸ்து’ இருக்கிறதா? இல்லையா? அல்லது இருப்பதைப் போல் நடிக்கிறார்களா? இந்தக் குழப்பம் இப்போது உண்மைத்தமிழனை தூங்க விடாமல் செய்துள்ளது.
எனக்கோ இந்த மாதத்திற்குள் இந்தக் குறும்படத்தை எடுத்தேத் தீர வேண்டும் என்ற கட்டாயம் உண்டு. காரணம், இந்தக் குறும்படத்தில் நடிப்பதற்கு ஒத்துக் கொண்டவர்கள் அனைவரும் மிகவும் பரபரப்பாக வேலை செய்து கொண்டிருப்பவர்கள். இந்த உண்மைத்தமிழனுக்காக ஊதியமாக ஒரு பைசா கூட கேட்காமல் ஒத்துக் கொண்டவர்கள். கொஞ்சம் பிரபலமானவர்கள். அவர்களது மனம் நோகாமல் அனைவரையும் ஒன்றிணைத்து ஒரே நாளில் படத்தை முடித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் வெறியாகச் சுற்றிக் கொண்டிருக்கிறேன்.
இப்போது உண்மைத்தமிழனின் முன்னால் இருப்பது கீழ்க்கண்ட ‘பகுத்தறிவு வழிகள்’தான்.
1. லஞ்சப் பணத்தைக் கொடுத்துவிட்டு சப்தமில்லாமல் ஷ¥ட்டிங்கை எடுத்து முடித்து விடுவது என்ற நடைமுறை வாழ்க்கையோடு ஒத்துப் போகும் பகுத்தறிவு.
2. லஞ்சம் தர மாட்டேன் என்று உறுதி கொண்டு, லஞ்ச ஊழல் ஒழிப்புத் துறையிடம் புகார் செய்ய வேண்டும் என்று பேப்பரில் எழுதி வைத்ததைப் படிக்கும் பகுத்தறிவு.
3. மாநகராட்சி ஆணையரிடம் புகார் செய்து, அவரது முடிவுக்காகக் காத்திருக்கச் சொல்லும் பகுத்தறிவு.
4. வழக்கறிஞர் உதவியுடன் நீதிமன்றம் சென்று நியாயம் கேட்கச் சொல்லும் பகுத்தறிவு.
5. டெஹல்கா போன்ற பத்திரிகைகளைப் போல் லஞ்சம் கேட்பதையும், லஞ்சம் கொடுப்பதையும் பதிவு செய்து வெளியிட்டு பரபரப்பு பார்க்கலாம் என்ற பகுத்தறிவு.
6. கட்சிக்காரர்களைப் பகைத்துக் கொள்ள விரும்பாத, குறும்படத்தில் நடிக்கவிருக்கும் பிரபலங்களைத் தூக்கிவிட்டு, சாதாரண நடிகர்களை கூடுதல் சம்பளத்திற்கு புக் செய்ய நினைக்கும் பகுத்தறிவு.
7. விஷயம் வெளியானால் படத்தில் நடிக்க இருப்பவர்களுக்கு ஏற்படும் மனச்சங்கடங்களை உறுதியுடன் எதிர் கொள் என்று சொல்லும் பகுத்தறிவு.
8. இப்போது நடிக்க இருப்பவர்களின் வீடுகளுக்கு அழைக்காமல் சென்று சாப்பிட்டு விட்டு வரும் பாசத்தின் அடிப்படையிலான உரிமை, இந்த விஷயத்தால் கை நழுவிப் போகும் அபாயம் உண்டு என்றாலும் துணிந்து செய்தியை வெளியிடு என்று சொல்லும் பகுத்தறிவு.
9. மாநகராட்சி முன்னர் திடீர் உண்ணாவிரதம் இருந்து பரபரப்பை உண்டாக்கச் சொல்லும் பகுத்தறிவு.
10. ‘எதற்கும் அஞ்சாதே.. துணிந்து நில்.. வருவது வரட்டும்.. யாரிடமும் பயம் வேண்டாம்.. கவுன்சிலரை எதிர்த்து தனியொரு மனிதனாகப் பிரச்சாரம் செய்…’ என்ற வாலிப முறுக்கை ஞாபகப்படுத்தும் பகுத்தறிவு.
11. ‘இந்தப் பகுத்தறிவுன்ற விஷயமே வேண்டாம்டா உண்மைத்தமிழா. அதெல்லாம் இருக்கிறவங்கதான் கவலைப்படணும்.. உனக்கில்லை.. குறும்படமும் வேண்டாம்.. ஒரு மண்ணும் வேண்டாம்.. இருக்கின்ற வேலையைப் பார்…’ என்று சொல்லும் ஸ்பெஷல் பகுத்தறிவு.
உண்மைத்தமிழன் இதில் எந்தப் பகுத்தறிவைப் பயன்படுத்த வேண்டும்?
நீங்களே சொல்லுங்கள்..
ஜெய்ஹிந்த்!!!