06-11-2008
என் இனிய வலைத்தமிழ் மக்களே..
மனித வாழ்வில் அனைத்துவித இயக்கங்களிலும், செயல்பாடுகளிலும் நல்லது, கெட்டது இரண்டுமே இணைந்துதான் உள்ளன. அதிலும் சில நல்லவைகளில் கெட்டவைகளும், கெட்டவைகளில் நல்லவைகளும் இணக்கமாக பிணைந்தும் இருக்கின்றன.
மக்களுக்கு போதனை தருவதற்காக தருவிக்கப்பட்ட ஒரு துறை என்று கலைத்துறையை இப்போது நாம் நினைத்துக் கொண்டாலும், துவக்கத்தில் அது கூத்தாடிகளின் குறுகிய கால கூத்தாட்டம். அவ்வளவுதான்.. பின்பு போகப் போகத்தான் நல்லவைகளை தேனோடு கலந்து தரும் மருந்தாக அதனை மாற்றியது காலம் தவிர வேறல்ல..
மக்களுக்கு மிக நெருக்கமான வாழ்க்கையின் பல பதிவுகளைப் படம் பிடித்துக் காட்டும் ஊடகங்கள், கெட்டவைகளை அம்பலப்படுத்தி மக்களுக்கு எச்சரிக்கை விடுவது, நல்லவைகளை வெளிச்சம் போட்டுக் காண்பித்து மக்களை நல்லவைகளின்பால் ஈர்ப்பு ஏற்படுத்த வைப்பது என்ற இரண்டு கூறுகளைக் கொண்டு செயல்பட்டு வருகின்றன.
ஹிந்தி திரைப்பட இயக்குநர் மதுர் பண்டார்கரின் தொடர்ச்சியானத் திரைப்படங்கள் அனைத்துமே பல்வேறு துறைகளில் இருக்கும் கெட்டவைகளை மட்டுமே சொல்லி வருகின்றன என்பதாக அவருடைய தொடர்ச்சியான திரைப்படங்களை பார்த்து வருபவர்களுக்குக் கண்டிப்பாகத் தெரிந்திருக்கும்.
அந்த வரிசையில் இப்போது FASHION. சண்டிகரை அடுத்த ஒரு சிறு நகரில் இருந்து மாடலிங் துறையில் நுழைந்து புகழ் பெற வேண்டும் என்கிற ஒற்றை இலக்க வெறியோடு மும்பையில் குடியேறும் மேக்னா மேத்தா என்கிற இளம்பெண்ணின் ஆசை நிறைவேறியதா? இல்லையா என்பதுதான் திரைப்படத்தின் கதை.
வண்ண, வண்ண விளக்குகளும், அலங்கார மேடைகளும், ஒய்யாரமான ஒப்பனைகளும், மிகுதியான முகப்பூச்சுக்களும் சூழ்ந்து ஒரு கனவுலகத்தைப் படைத்துக் கொண்டிருக்கும் மாடலிங் துறையின் வெளிச்சத்துக்கு வராத இன்னொரு புறத்தை இத்திரைப்படத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார் மதுர்.
மாடலிங் துறையில் பெண்களின் பங்குதான் அதிகப்பட்சமாக உள்ளது. ஆண்களுக்கான உள்ளாடைகளைக்கூட யாரோ ஒரு பெண் காதலியோ, நண்பியோ அதன் நாடாவை இழுத்துப் பார்த்து “அழகாக உள்ளது” என்று சொல்வதைப் போலத்தான் விளம்பரங்களை அமைத்திருக்கிறார்கள். இதில் பெண்களுக்கானது என்றால் சொல்லவே வேண்டாம்.
குறைந்த கால உழைப்பு, கை நிறைய பணம், சொகுசான வாழ்க்கை, நிரம்ப உயர்வர்க்க நட்பு என்று ஒரு காஸ்மாபாலிட்டன் வாழ்க்கைக்கு தங்களை இட்டுச் செல்லும் என்கிற நினைப்பில்தான் மாடலிங் துறைக்குள் வரும் அனைத்துப் பெண்களும் நினைக்கிறார்கள்.
இத்துறையில் அனைவரும் ஒரே நாளில் இரவோடு இரவாக புகழ் வெளிச்சத்துக்கு வர முடிவதில்லை. நிறைய உழைக்க வேண்டும். இந்த ‘உழைப்பு’ என்பதில்தான் நிறைய சமூக மீறல்கள், ஒழுக்கக் கேடுகள் என்று சொல்லப்படும் கொண்டாட்டங்கள் இருப்பது அனைவரும் அறிந்ததே.
தன்னுடைய தந்தையின் எதிர்ப்பையும் மீறி தாயின் ஆசியுடன் மும்பை வந்து சேரும் மேக்னா தனது உறவினர் ஒருவரின் இல்லத்தில் தங்கி மாடலிங் துறையில் நுழைய முயல்கிறாள். முயற்சியில் அவளுக்குக் கிடைக்கும் புதுப்புது அனுபவங்கள் அவளுக்குக் கிளர்ச்சியையும், உத்வேகத்தையும், நட்பையும், துரோகத்தையும், அப்போதைய சந்தோஷத்தையும் அளிக்கின்றன.
இந்த சந்தோஷங்கள் அனைத்தும் தான் நினைத்ததை அடைய நினைத்த நேரத்தில் காணமால் போகும்போதுதான் அவளுக்குள் ஒன்று தெரிகிறது.. எந்த உச்சியை அடைந்தாலும் எதுவோ ஒன்றை இழந்துதான் தீர வேண்டும் என்பது. அந்த உணர்வை அவள் அடைவதுதான் படத்தின் இறுதிக்கட்டம்.
மேக்னா மேத்தாவாக நடித்திருக்கும் பிரியங்கா சோப்ராவின் நடிப்பை இப்போதுதான் முதல் முறையாக செல்லூலாய்டில் பார்க்கிறேன். நேர்த்தியான நடிப்புதான். மதூரின் கதாநாயகிகள் அனைவரும் எப்போதும் அளவாக அழுவார்கள்.. ஆனால் நிறைய சிரிப்பார்கள். நிரம்ப சந்தோஷம் கொள்வார்கள் என்பதை அவருடைய திரைப்படங்கள் அனைத்தையும் பார்த்ததிலிருந்து தெரிகிறது. இதிலும் அப்படியே.
படத்தில் வருகின்ற கதாபாத்திரங்களில் அத்துறையில் நீக்கமற நிறைந்திருக்கும் தற்போதைய இளைய சமுதாயத்தினரின் இன்னொரு புற கட்டற்ற சுதந்திரத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
ஓரினச் சேர்க்கை பிரியர்கள், சதா சிகரெட் பிடித்தபடியே இருக்கும் பெண்கள், கிளாஸ் என்றில்லாமல் பாட்டிலையே வாயில் கவிழ்த்து தங்களது ஸ்டேட்டஸை காட்டத் தயங்காத மாடலிங் தாரகைகள் என்று அனைத்துப் பகுதிகளையும் விட்டுவிடாமல் காட்டியிருக்கிறார் மதூர்.
போதைப் பழக்கத்திற்கு உள்ளாகி சமீபத்தில் மும்பையில் தெருவோரமாக மீட்டெடுக்கப்பட்ட கீதாஞ்சலி என்கிற முன்னாள் தேவதையான பெண்ணின் கதையும் இதில் உண்டு.
இந்தக் கேரக்டரில் நடித்திருக்கும் கொங்கணா ரணவத்தின் மாடலிங் அழகு சொக்க வைக்கிறது. எப்போதும் முகத்தில் ஒரு சோகத்தை அப்பிக் கொண்டிருக்கும் இந்த அழகை முதல் முறையாகக் காட்டும்போதே ஏதோ அந்தப்புர காரணம் இருக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றிவிட்டது.
இடைவிடாத போதை பழக்கம், புகைப் பழக்கம் என்று தனக்குத்தானே வேதனையை வரவழைத்துக் கொண்டாலும் நிகழ்ச்சி அமைப்பாளர்களுக்கு செல்லமாக சொன்னதை செவ்வனே செய்யும் கேரக்டர்தான் சோனாலி என்கிற இந்தப் பெண்.
போதையை விட முடியாமலும், தொழிலில் முனைப்பு காட்ட முடியாமல் ஒரு கட்டத்தில் அனைத்தையும் இழந்து சினிமா தியேட்டர் வாசலில் கண்டெடுக்கப்பட்டு தனது பழைய எதிரியான மேக்னாவால் அரவணைக்கப்படும் சூழல் சினிமாத்தனமானதுதான் என்றாலும் அதில் உருக்கம் இருந்தது.
இந்த சோனாலியின் முடிவுடன் மேக்னாவின் ஒளிவட்டம் துவங்குவது ஒருவருக்கு இறப்பு என்றாலும், ஒருவருக்கு இழப்பு என்றாலும் அது மற்றொருவருக்கு பிறப்பாகவும், வெகுமதியாகவும் இருக்கக்கூடும் என்கிற வாழ்க்கைச் சக்கரத்தை உணர்த்துகிறது.
தான் நேசித்து படுக்கையை பகிர்ந்து கொண்ட முதல் காதலனை புகழும், பணமும் கிடைத்த காரணத்தால் பிரிந்து சென்று பின்பு இரண்டாவது வாழ்க்கையும் தன்னை விட்டுப் போன பின்பு அவனிடமே வந்து நிற்கும் சூழலில் ஏற்பட்ட பரிதாப உணர்ச்சியில் உண்மையான காதல் அதுவரையில் அவளிடத்தில் இல்லை என்பதை வெளிக்காட்டியிருக்கிறார் இயக்குநர்.
எப்போதும் புகைக்கும் பெண்களும், குடிக்கும் பெண்களும் இத்துறையில்தான் சாத்தியம் என்பது புரிகிறது என்றாலும் எதற்காக இத்துறையை அந்தப் பெண்கள் தேர்ந்தெடுக்கிறார்கள் என்று பார்த்தால் அது நான் முன்பே சொன்னது போலவை குறைந்த கால உழைப்பு, கை நிறைய பணம் என்பதைத்தான். (அன்புமணி இத்திரைப்படத்தை பார்க்காமல் தவிர்க்கலாம்).
பல்வேறு துறைகளிலும் மறைமுகமாக இருந்து வரும் பரஸ்பரம் பண்டமாற்றுதல் போல பெண்களிடம் சுகத்தை அனுபவித்துவிட்டு, ஆண்களுக்கு அவர்கள் கேட்பதைத் தந்துவிட்டு.. பின்னர் எதுவுமே நடக்கவில்லை என்பதைப் போல் செல்வதற்கு இன்றைய இரு பால் இளம் வர்க்கத்தினரும் மிக, மிகத் துணிந்து விட்டனர்.
கெட்டவர்கள் மட்டுமே நிரம்பியிருப்பதல்ல உலகம். நல்லவர்களும் இருப்பார்கள். அந்த நல்லவர்கள் வெளிப்படுத்தும் நல்லவைகள் என்பதும் சதவிகிதக் கணக்கில்தான் என்பதனை இன்னொரு கேரக்டரின் மூலமாக வெளிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர். நிகழ்ச்சி அமைப்பாளரான நண்பர் மூலமாகவே தன்னை புகழ் வெளிச்சத்திற்கு கொண்டு வந்து காட்டிவிட்டு தனது நண்பிக்காக வாய் விட்டு அழும் மேக்னாவின் மேல் பரிதாபம்தான் வருகிறது.
தன்னுடைய நிறுவனத்தின் பிராண்டுக்கு பயன்படுத்தும் மாடலை தானும் பயன்படுத்திக் கொண்டு, அவளைவிட அழகிலும், இணக்கத்திலும் கூடுதலாக ஒரு பெண் கிடைத்தவுடன் ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு இரவோடு இரவாக வேறு மலர் தாவும் வண்டாக இருக்கும் ஒரு தொழிலதிபர்.. கணவன் செய்யும் துரோகத்தை தெரிந்து வைத்திருந்தும் தனக்குக் கிடைத்திருக்கும் சமூக அங்கீகாரத்திற்காகவும், புகழுக்காகவும் அவனுடன் குடும்பம் நடத்தும் மனைவி, எது எப்படி வேண்டுமானாலும் நடக்கட்டும். தனக்கு கமிஷன் கிடைத்தால் போதும் என்று வேலை செய்யும் கோ-ஆர்டினேட்டர் பெண்மணி என்று உயர்தர வகுப்பினரின் கவலையில்லாத வாழ்க்கையும் இப்படத்தில் உண்டு.
ஓரினச் சேர்க்கையில் பிரியமுள்ள ஆண்களைக் காட்டும்போதும் அது பற்றிய எந்தவித எச்சரிக்கையும் தேவையில்லாதது போல் மிக இயல்பாக காட்சிகளை அமைத்திருப்பதை பாராட்டத்தான் வேண்டும்.
ஓரின முத்தக் காட்சிகள் படத்தில் இடம் பெற்றிருந்தன. ஆனால் சென்ஸார் போர்டு வழக்கம்போல நீக்கியே தீர வேண்டும் என்று அடம் பிடிக்க வேறு வழியில்லாமல் நீக்கியிருக்கிறார் இயக்குநர். ஆனால் டிவிடியில் அது நிச்சயம் இடம் பெறும் என்று உறுதியளித்திருக்கிறார்.
அது எந்த அளவிற்கு இத்திரைப்படத்திற்கு சிறப்பு சேர்க்கும் என்று எனக்குத் தெரியவில்லை. அக்காட்சிகள் இல்லாமலேயே படம் இப்போழுதே சிறப்பாகத்தான் உள்ளது.
பெண்களை மையமாக வைத்தே மதூர் இதுவரை எடுத்த திரைப்படங்களின் அழகியலே அந்தப் பெண்கள் மூலமாக இவர் வைக்கின்ற பிரச்சினைகளில் ஆணாதிக்கம் சார்ந்தியங்கும் சமூகச் சூழல் அதிகம் தென்படுவதைக் காணலாம்.
‘சாந்தினி பாரில்’ இரவு நேர நடன விடுதிப் பெண்ணின் வாழ்க்கை, ‘PAGE 3’-ல் சமூக சேவகர்களாகத் தங்களைக் காட்டிக் கொள்ளும் ஒரு வர்க்கத்தின் இன்னொரு புறம்.. ‘கார்ப்பரேட்’ திரைப்படத்தில் மிகப் பெரிய வணிக நிறுவனங்கள் தங்களது வளர்ச்சிக்காக பணத்தை வைத்து நடத்தும் நாடகங்கள் என்று தெரிந்த வீடுகளில் தெரியாத விஷயங்களை வெளிக்கொணரும்வகையில் மதூரின் இந்தப் படமும் அதே வரிசையில் ஒன்று.
மாடலிங் துறையைப் போலவே மிக அழகாக, ஜொலிக்கிறது. உள்ளுக்குள் இருக்கும் சோகத்தை மறந்துவிட்டு நாமும் பார்த்துவிட்டு எழுந்து வரலாம்.
இயக்குநருக்கு எனது பாராட்டுக்கள்.
கொசுறு :
இத்திரைப்படத்தின் இடைவேளையில் வரப் போகின்ற திரைப்படம் என்று சொல்லி ஒரு ரீல் ஓட்டினார்கள்.
பத்தாண்டுகளுக்கு முன்பாக நமக்கெல்லாம் கிரிக்கெட் பற்றிச் சொல்லிக் கொடுத்த மந்த்ராபேடிதான் கதாநாயகி. அனுபம்கெர்ரும் உடன் இருக்கிறார். யாரோ ஒரு புதுமுகம் ஹீரோவாக அறிமுகம் என்று நினைக்கிறேன். கடைசியாக அனில் கும்ப்ளேயும் பந்துவீச வந்தார். முதல் நடிப்போ..
ஒரு கிராமம் போன்ற குடியிருப்பு. நட்ட நடுவில் மைதானம். மந்த்ராபேடி பேட் பிடிக்கிறார். பந்து வீசுகிறார். காதலருடன் பேசுகிறார். காதலர் பந்தை அடிக்கிறார். கமெண்ட்ரியும் செய்கிறார். சிறுசுகளுடன் அவுட் இல்லை என்று சத்தம் போடுகிறார். இடையிடையே தனது பேவரைட் மந்தகாச புன்னகையை வீசுகிறார். திருமண விழா போன்ற தோரணையில் அனைவரும் காத்திருக்கிறார்கள். மந்த்ரா அக்கா மைதானத்தின் நடுவில் சோகத்துடன் அமர்ந்திருக்கிறார். பின்பு தலையில் கட்டுடன் காதலரைத் தேடி ஓடுகிறார்.
மறுபடியும் கதை ஆரம்பத்திற்கே வந்துவிட்டதால் இனி படம் பார்த்த பின்புதான் சொல்ல முடியும்..
படத்தின் பெயர் MEERABAI NOT OUT. ஹிந்தி திரைப்படம். பிரித்தீஷ் நந்தியின் தயாரிப்பாம். டிரெய்லரே பார்க்கத் தூண்டுகிறது.
டிவியில் கற்றுக் கொடுத்தது போதாது என்று சினிமாவிலும் கற்றுக் கொடுக்க வருகிறார் மந்த்ராபேடி. பார்ப்போம்..