Archive for ஜனவரி, 2009

முத்துக்குமார் எதிர்பார்த்தது நடக்கிறதா..?

ஜனவரி 30, 2009


31.01.2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..

முத்துக்குமார். அதுவரையில் முன்பின் பார்த்திராத இந்த இளைஞர் ஒரு பின்னரவில் ‘பெண்ணே நீ’ அலுவலகத்தில் எனக்கு அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டார். கைகுலுக்கல்.. ஒரு “ஹலோ..” வேலை மும்முரத்தில் இருந்தவர் அவ்வப்போது ஏதேனும் ஒரு சின்ன சந்தேகம் என்றால் மட்டுமே தலை திரும்புதலும்.. சன்னமான குரலில் சந்தேகம் கேட்பதுமாக தொடர்ந்தது அவரது வேலை..

இரவு 2 மணி தாண்டியும் களைப்பு தெரியாமல் உழைத்துவிட்டு, மறுபடியும் இணையத்தைத் துழாவிக் கொண்டிருந்ததைப் பார்த்து எனக்கு ஆச்சரியம். அந்தத் துழாவுதல்.. தேடலின்போது எதை, எதையெல்லாம் முத்துக்குமார் கற்றுக் கொண்டாரோ, தெரிந்து கொண்டாரோ தெரியவில்லை.. ஆனால் இந்தத் தற்கொலை முடிவை எங்கேயிருந்து கற்றுக் கொண்டார் என்பது தெரியவில்லை.

இரவில் அலுவலகத்தில் அமர்ந்து சிறுகதை எழுதப் போகிறேன் என்று சொல்லிவிட்டு கண்விழித்து தனது இறுதியறிக்கையைத் தயார் செய்திருக்கிறார். அலுவலகக் குறிப்பேடுகளில் காலை 6.10 மணிக்கு உள்ளே வந்ததாக பதிவு செய்துவிட்டு மறுபடியும் 9.20 மணிக்கு வெளியேறியவர், நேராக சென்றது நுங்கம்பாக்கத்தில் தான் தேர்ந்தெடுத்து வைத்திருந்த குருஷேத்திரத்திற்கு.

5 லிட்டர் கேனின் வாய்ப்பகுதி முழுவதையும் அறுத்தெறிந்துவிட்டு பெட்ரோலை தன் மேல் ஷவர்பாத் மாதிரி கொட்டுவதற்கு ஏற்பாடு செய்து எப்படியும் தான் உயிருடன் பிழைக்கவேகூடாது என்று கங்கணம் கட்டிக் கொண்டு தீக்குளித்திருக்கும் முத்துக்குமாருக்கு தனக்கென்று ஒரு குடும்பம் உண்டு. தந்தை உண்டு. அக்காள் உண்டு என்பது ஏன் புரியாமல் போய்விட்டது?

முட்டாள்தனமானது.. மூடத்தனமானது.. என்றெல்லாம் ஒருவகையில் சொல்லிவிடலாம். ஆனால் அந்தத் தற்கொலை எண்ணம் அவர் மனதில் ஏற்பட்டு செத்து மடி என்று உத்தரவு பிறப்பித்த அந்தக் காரணி யார் என்பது அவருக்கே புரியாத நிலையில் அவரைக் குற்றம் சொல்லிப் புண்ணியமில்லை.

14 பக்க அளவில் அவர் எழுதியிருக்கும் இறுதிக் கடிதம் பல நூறு அரசியல் கதைகளை வெளிப்படையாக்கினாலும், இத்தனையையும் யாரோ ஒருவரிடமோ, நெருங்கிய நண்பரிடமோ அல்லது கருத்துப் பரிமாற்றம் செய்யக்கூடிய அளவுக்கான இடத்திலோ அவர் பரிமாறியிருந்தால் அவரது உள்ளத்து குமுறல்களுக்கு கொஞ்சமாவது வடிகால் கிடைத்திருக்கும்.

அனைத்தையும் உள்ளே வைத்து அடக்கிக் கொண்டு வெளியில் எதையும் காட்டிக் கொள்ளாமல் “செத்தாவது தொலைவோம்.. அப்போதாவது இந்தப் பிரச்சினை விஸ்வரூபமெடுக்கிறதா என்று பார்ப்போம்..” என்று அவர் நினைத்து அதனையே செயல்படுத்தியிருக்கிறார்.

“ஈழத் தமிழர்களுக்காக உயிரையும் கொடுப்பேன், உள்ளத்தையும் கொடுப்பேன்..” என்று கூக்குரல் இடுபவர்களே சும்மா இருக்கும்போது இந்த எண்ணம் இந்தத் தம்பிக்கு எப்படி வந்தது என்பது தெரியவில்லை.

தலைமுறை, தலைமுறையாக அரசியலில் பழம் தின்று கொட்டை போட்ட அரசியல்வியாதிகளின் குடும்பத்து பிள்ளைகளுக்கே வராத இந்தத் தீக்குளிப்பு எண்ணம் முத்துக்குமார் போன்ற சாதாரண ஒரு தொண்டனுக்கு மட்டும் வருகிறதே.. ஏன்..?

மிக, மிக வருந்துகிறேன்.. வேதனைப்படுகிறேன்.. இவருடைய செயலை எந்தவிதத்திலும் என்னால் நேர்மைப்படுத்த முடியவில்லை.

அதனைவிட வேதனை இங்கே அவரது பூதவுடலும், அடக்க ஏற்பாடுகளும் படுகின்ற பாடு.

கொளத்தூர் ஏரியாவில் கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருக்கின்றன. கொளத்தூர் பகுதி வியாபாரிகள் தாங்களே முன் வந்து கடையடைப்பு செய்திருக்கிறார்கள். ஏதோ கலவர பூமி என்பதைப் போல் திரும்பிய பக்கமெல்லாம் காவல்துறையினர் அணிவகுப்பு.

முத்துக்குமாரின் வீட்டில் கால் வைக்கக்கூட இடமில்லாத அளவுக்கு புத்தகங்கள் குவிந்திருக்க.. அங்கே அவரது உடலை வைத்து கூட்டத்தை சமாளிக்க முடியாது என்பதால் கொளத்தூர் வியாபாரிகள் சங்க அலுவலகத்திற்கு அருகில் மெயின் ரோட்டிலேயே ஒரு மேடை போட்டு அதில் அவரை படுக்க வைத்திருக்கிறார்கள்.

கீழ்ப்பாக்கம் அரசினர் மருத்துவமனையில் அவருடைய உடல் இருந்தபோதே முதலில் வந்து குவிந்தவர்கள் வழக்கறிஞர்களும், சட்டக் கல்லூரி மாணவர்களும்தான்.. அவர்களே நேற்று இரவோடு இரவாக பல தட்டிகளையும், போர்டுகளையும், போஸ்டர்களையும் தயார் செய்து வைத்திருக்க ஏரியாவில் திரும்பிய பக்கமெல்லாம் முத்துக்குமார் காட்சியளிக்கிறார்.

இதில் அசிங்கப்படுத்தும்விதமாக சரத்குமார் ஏதோ ஒரு கல்யாண வீட்டில் கையெடுத்துக் கும்பிடுவதைப் போன்ற போஸில் ஒரு தட்டியை அவரது கட்சிக்காரர்கள் வைத்து கொடுமைப்படுத்தியிருக்கிறார்கள்.

காவல்துறையினருக்கு ஒரு எல்லைக்கோடைக் காட்டி அதனைத் தாண்டி வந்தால் எதுவும் நடக்கும் என்று ஒரு எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாம். காவலர்களும் அதனை மதித்து அங்கேயே நின்றிருந்தார்கள்.

அஞ்சலி செலுத்த வந்தவர்கள் அனைவருமே அந்த இடத்தில் அங்கிருப்பவர்களிடம் “முத்துக்குமார் செய்தது சரியானது அல்ல.” என்று சொன்னால் திரும்பி உயிருடன் போவார்களா என்பது சந்தேகமே.. அந்த அளவுக்கு கூடியிருக்கும் இளையோர் பட்டாளம் கொதிப்புடன் காட்சியளிக்கிறது. ஊடகத் துறையின் பல்வேறு பிரிவுகளிலும் இருந்தும் நண்பர்கள் திரளாக குழுமியிருந்தார்கள்.

சட்டக் கல்லூரி மாணவர்களும் அதிகம் பேர் வந்திருந்தார்கள். சூடாக இருப்பதும் இவர்கள்தான். இதுவரையில் முத்துக்குமாரை யார் என்றே தெரியாதவர்கள் இதில் அதிகப்பட்சம். உணர்வுகளால் ஒன்றுபட்ட இவர்களது கோரிக்கை, முத்துக்குமாரின் இறுதி சாசனத்தில் இடம் பெற்றிருக்கும் “தனது உடலை உடனேயே புதைக்காமல் போராட்டத்தைத் தொடர வேண்டும்..” என்பதுதான்..

“முத்துக்குமாரின் உடலை ஊர், ஊராக எடுத்துச் சென்று கடைசியாக தூத்துக்குடிக்கு அவர் பிறந்த மண்ணில் அடக்கம் செய்யலாம்..” என்றுகூட பேசினார்கள். பின்பு பேச வந்தவர்களால் இத்திட்டம் வேண்டாம் என்று நயமாகச் சொல்லி திசை திருப்பப்பட்டது.

முத்துக்குமார் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்திலும் ஒரு உறுப்பினர் என்பதால் துணை இயக்குநர்கள், மற்றும் உதவி இயக்குநர்களும் பெருமளவில் கூடியிருக்கிறார்கள்.

காலையில் அஞ்சலி செலுத்த வந்த இயக்குநர் ஆர்.கே.செல்வமணி காங்கிரஸ் தலைவர்களையும், அதன் தற்போதைய மாநிலத் தலைவர் தங்கபாலுவையும் கடுமையான வார்த்தைகளால் அர்ச்சித்து ஆரம்பித்து வைத்த துவக்க விழா இப்போதுவரையில் கனஜோராக நடந்து வருகிறது.

மதியம் 1 மணி வரை காத்திருந்தும் கலைஞரிடமிருந்து இரங்கல் செய்தி வராததால் மேலும் கொதிப்பு கூடியது. எப்படி வரும்..? கலைஞரின் 70 வருட அரசியல் வாழ்க்கையின் உண்மையை, வெறும் ஒரு வரியில் சொல்லி முடித்திருக்கும் முத்துக்குமாரின் அந்த இறுதியறிக்கையை கலைஞர் நிச்சயம் படித்திருப்பாரே…? (மாலையில்தான் கலைஞரின் அறிக்கை வெளியானதாக பின்பு தெரிந்தது) “கற்றது தமிழ்” இயக்குநர் ராம், “கருணாநிதி இங்கே நேரில் வந்து மன்னிப்பு கேட்க வேண்டும். மன்னிப்பு கேட்காவிட்டால், நாம் முத்துக்குமாரின் உடலை இங்கேயிருந்து எடுக்கக் கூடாது. யார் எடுத்தாலும் அதை அனுமதிக்கவும்கூடாது” என்று ஒரு வீராவேச உரையை நிகழ்த்திவிட்டார்.

அதுவரையில் மதியம் 3 மணிக்கு தூக்கிவிடலாம் என்ற நினைப்பில் அடக்க ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தவர்களுக்கு அதிர்ச்சி தரும் விதமாக “இன்றைக்கு வேண்டாம்.. முடியாது.. கூடாது..” என்றெல்லாம் கூக்குரல்களும், கொந்தளிப்பான பேச்சுக்களும் பொறி கலங்க வைத்துவிட்டன.

2 மணி சுமாருக்கு மேடைக்கு வந்த இயக்குநர் சேரன் முத்தாய்ப்பாக ஒரு முடிவைச் சொன்னார். “முத்துக்குமாரே தனது உடலை வைத்து போராட்டம் நடத்தச் சொல்லியிருக்கிறார். நாம் இன்னும் ஒரு நாள் உடலை வைத்திருக்கக் கூடாதா..?” என்று கேட்டவர் “உடல் அடக்கத்தை நாளை வைத்துக் கொள்வோம்..” என்று சொல்லிவிட கூட்டத்தினரின் கை தட்டலில் கொளத்தூர் ஏரியாவே அரண்டுவிட்டது.

இதன் பின்பு வந்த வைகோ, நெடுமாறன், திருமாவளவன், உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் போன்றோர் “இன்றைக்கே உடல் அடக்கத்தை செய்யலாம்..” என்று சொல்லியும் அது அங்கே இருந்தோரிடம் எடுபடவில்லை. “இதில் நீங்கள் தலையிடாதீர்கள்.. நாங்களே பார்த்துக் கொள்கிறோம்..” என்று கூடியிருந்த இளைஞர்கள் சொல்லிவிட.. அவர்கள் போக்கிலேயே விட்டுவிடலாம் என்று முடிவு செய்து அவர்களும் சம்மதித்துவிட்டார்கள்.

இடையில் நமது காவல்துறை அன்பர்கள் ஒரு அரிய காரியத்தைச் செய்து தொலைத்து, அதன் விளைவையும் அனுபவித்துவிட்டார்கள்.

புரசைவாக்கம் தொகுதி தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.எஸ்.பாபு தனது கட்சிக்காரர்களுடன் வந்தவர் அப்படியே வந்திருக்கலாம். கூடவே இரும்புத் தொப்பி அணிந்த போலீஸாரை துணைக்கு அழைத்துக் கொண்டு முத்துக்குமாரின் உடல் அருகில் வர.. கூட்டம் கொதித்துப் போய்விட்டது..
“வெளியே போ..” என்று ஆரம்பித்த கோபவேசங்கள் எல்லை மீறிப் போக.. பாபு தப்பித்தோம், பிழைத்தோம் என்று ஓடினார். துணைக்கு வந்தவர்கள் அவரை இழுத்துக் கொண்டு ஓட.. செருப்புக்களும், கல்வீச்சுக்களும் அவரை நோக்கி பறந்தன. தெருமுனை வரையிலும் சென்று அவரை வழியனுப்பிவிட்டுத்தான் ஓய்ந்தார்கள் இளைஞர்கள். பாவம்.. தனது உட்கட்சி பிரச்சினையில்கூட இப்படியொரு எதிர்ப்பை சந்தித்திருக்க மாட்டார் பாபு. இத்தனைக்கும் அவர் இதே ஏரியாவில்தான் பல ஆண்டுகளாக குடியிருக்கிறாராம்.

வைகோ பல முறை மைக்கில் பேசினார். “இனியும் வேறொரு முத்துக்குமார் உருவாகவே கூடாது..” என்று மன்றாடிக் கேட்டுக் கொண்டார். தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் நடேசன், முத்துக்குமாரின் தீக்குளிப்புக்கு இரங்கல் தெரிவித்து சொல்லியிருந்த செய்தியை யாரோ ஒருவர் செல்போனில் சொல்ல.. அதனை வைகோ சத்தமாக மறுஒலிபரப்பு செய்தார்.

பத்திரிகையாளர்களிடம் பேசிய முத்துக்குமாரின் தந்தையும், மைத்துனரும் முத்துக்குமாரின் இந்த முடிவு குறித்து தாங்கள் பெருமையடைவதாக பத்திரிகையாளர்களிடம் சொல்லியிருக்கிறார்கள்.

ஈழப் போராட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்று நடைபெறுவதாக இருந்தது. இது நாளை(31-01-09) நடக்கவிருப்பதாக வைகோ அறிவித்தார். கூடவே “நாளை மூலக்கொத்தள சுடுகாட்டில் நடக்கவிருப்பது தமிழகத்தில் நடைபெறப் போகும் ஈழப் போராட்டத்திற்கு முதல் அத்தியாயம்..” என்றார்.

நல்லகண்ணு “இந்த நேரத்தில் இளைஞர்கள் கட்டுக்கோப்புடன் இருக்க வேண்டும். உணர்ச்சிவசப்படக் கூடாது. அப்படி செய்தால் அது வேறுவிதமாக திசை திரும்பிவிடும் அபாயம் உண்டு..” என்று எச்சரிக்கை செய்தார். இதனையே பின்பு பேச வந்த அனைவருமே சுட்டிக் காட்டி பேசி முடித்தார்கள்.

ஒரு எம்.எல்.ஏ.வை அடித்துத் துரத்திய பின்பு, கொடும்பாவி எரிப்புகள் தொடர்ந்து மாலை வரையில் இடைவெளிவிட்டு நடைபெற்றது.

ராஜபக்சே, சோனியாகாந்தி, ஜெயலலிதா என்று மூவரையும் கொடும்பாவியாக போட்டு எரித்துவிட்டார்கள். வேறொரு இடமாக இருந்திருந்தால் நடந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் இங்கே போலீஸாரின் கண் முன்பாகவேதான் இது நடந்தது. தடுக்கத்தான் யாருக்கும் உணர்வில்லை.

“கொஞ்சம் ஒத்துப் போங்கள்.. தகராறு வேண்டாம்..” என்று காவல்துறையினரிடம் மேலிடத்தில் இருந்து சொல்லியிருப்பார்கள் போலும்.. ஒதுங்கியே இருந்தார்கள். இருக்கிறார்கள்..

பேச வந்த அனைவருமே மத்திய சர்க்காரையும், மாநில அரசின் கையாலாகதத்தனத்தையும் சுட்டிக் காட்டி காய்ச்சி எடுத்தார்கள். மருந்துக்குக்கூட பாட்டாளி மக்கள் கட்சியைத் தொடவில்லை. அவர்களும் தட்டி போர்டுகளையும், போஸ்டர்களையும் வைத்துவிட்டு ஏனோ பட்டும், படாமல் ஒதுங்கியிருக்கிறார்கள்.

மதியம்வரைக்கும் இது தமிழ் உணர்வாளர்களுக்கான போராட்டமாக சென்று கொண்டிருந்தது. மதியத்திற்குப் பிறகு முழுக்க, முழுக்க அரசியலாக மாறிவிட்டது. மாலையில் தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆதரவுக் கூட்டமாக மாறிவிட்டது. மாலையில் வைகோ தனது பேச்சை முடித்தபோது “பிரபாகரன் வாழ்க..” என்று முழுக்கமிட.. பதில் முழக்கமும் அமோகமாக இருந்தது. என்னதான் கொள்கையை தூக்கிப் பிடித்துக் கொண்டிருந்தாலும் உள்ளுணர்வுகளை கட்டுப்படுத்துவது என்பது மிக, மிக கஷ்டம் என்பதை இந்த இடத்தில்தான் நான் உணர்ந்தேன்.

காலையிலேயே நடிகர் வடிவேலு, நடிகர் சத்யராஜ், இயக்குநர் சீமான் போன்றோர் அஞ்சலி செலுத்திவிட்டுச் சென்றிருக்கிறார்கள். மாலையில் இயக்குநர் பாரதிராஜா தனது சக நிர்வாகிகளோடு வந்து அஞ்சலி செலுத்தினார். தோழர் சி.மகேந்திரன், மற்றும் புதிய பார்வை ஆசிரியர் நடராஜனும் பேசினார்கள். வர்த்தகர் சங்கத் தலைவர் த.வெள்ளையன் காலையில் இருந்து இரவு வரையிலும் இருந்து ஏற்பாடுகளைக் கவனித்து வருகிறார்.

உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இளைஞர்களும், பரிதாபப்படும் நிலையில் தமிழக மக்களும் நமது முத்துக்குமாரின் சோகத்தை அனுபவித்துக் கொண்டிருக்க, நமது ஊடகத் துறைகள் தங்களுடைய அரசியல் அரிப்புகளை இதில் பயன்படுத்திக் கொண்டார்கள்.

ஜெயா டிவி செய்திகளில் மதியம்வரை முதல் விளம்பரம் முடிந்து அடுத்த segment-ல் முத்துக்குமார் விஷயத்தைச் சொன்னார்கள். மதியத்திற்கு மேல் சட்டமன்ற உறுப்பினர் பாபு தாக்கப்பட்ட சம்பவத்திற்குப் பின்பு இது ஒன்றையே திரும்பத் திரும்ப இப்போதுவரையிலும் காட்டி வருகிறார்கள். வாழ்க இவர்களது அரசியல் நியாயம்.

மதுரையில் தங்களது அலுவலகம் தாக்கப்பட்டபோது அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துவிட்டு ரவுடி பட்டம் சூட்டி பரபரப்பை ஏற்படுத்திய சன் டிவி போனால் போகிறதென்று நினைத்து பத்தோடு பதினோறாவது செய்தியாக இதனைச் சொன்னார்கள்.

கலைஞர் டிவியில் நேற்றே ஒரு கொடுமை நடந்தது. பத்திரிகையாளர் என்ற செய்தியைக்கூட போடாமல் “ஈழப் பிரச்சினைக்காக சென்னையில் ஒருவர் தீக்குளிப்பு..” என்று ஒரு வரி செய்தியை மட்டுமே ஓடவிட்டார்கள். பத்திரிகையாளர் என்பதையும், ஈழப் பிரச்சினைக்காக என்பதையும் செய்திகளில் அதிகம் இடம் பெறாமல் கவனமாகப் பார்த்துக் கொண்டார்கள் இதன் செய்திப் பிரிவு ஆசிரியர்கள்.

மக்கள் டிவியில் ராமதாஸ் மாலை போடுவதை மட்டுமே திரும்பத் திரும்ப காட்டி அதனை சாதாரணமான ஒரு அஞ்சலி செய்தியாக்கி தன்னைக் காப்பாற்றிக் கொண்டுவிட்டார்.

முத்துக்குமார் தான் இறந்த பின்பு என்ன நடக்கும் என்று எதிர்பார்த்தாரோ அதில் ஒரு கால்வாசியாவது இந்த இரண்டு நாட்களில் நடந்தேறும் என்று நான் நினைக்கிறேன்.

நாளை என்ன நடக்குமோ தெரியவில்லை.. பார்ப்போம்..