Archive for ஜூன், 2007

எல்லாரும் ஜோரா கை தட்டுங்க! – பாகம்-1

ஜூன் 30, 2007

30-06-2007

என் இனிய வலைத்தமிழ் மக்களே…

எல்லாரும் ஜோரா கை தட்டுங்க.. தட்டிட்டீங்களா.. இன்னும் கொஞ்சம் நல்லாத் தட்டுங்க.. டெல்லிவரைக்கும் கேக்க வேணாம்..

வார்டு கவுன்சிலர் தேர்தல்ல நிக்குறதுக்கே ஆள் பலம், படை பலம், இதோட புஜ, கஜ பலம்.. கடைசியா போலீஸ் ஸ்டேஷன் ரெக்கார்டு எல்லாமே ஒரு வேட்பாளருக்குத் தேவைப்படுது. இதுல ஜனாதிபதி தேர்தல்ன்னா.. சும்மாவா..

யாரோ ஒரு அம்மாவைத் தேர்ந்தெடுத்து பெண்களுக்கு வாழ்க்கையில்தான் சம உரிமை கொடுக்க முடியவில்லை.. பாராளுமன்றத்தில்தான் 33 சதவிகிதம் கொடுக்க முடியவில்லை. இதிலாவது 12 ஆண்களுக்குப் பிறகு ஒரு பெண்ணிற்கு வாய்ப்புக் கொடுத்துள்ளோம் என்ற ரீதியில் அறிவிப்பை வெளியிட்டுவிட்டார்கள்.

அந்தம்மா முக்காடு அணிந்து கேமிராக்கள் முன்னிலையில், முக்காலியில் அமர்ந்தபோதே தெரிந்துவிட்டது, ரப்பர் ஸ்டாம்ப்பை கையில் எடுத்தால் ஒரு பத்து இடத்திலாவது குத்தாமல் விட மாட்டார் என்று..

“அந்தம்மா யாரு? அரசியல்வாதியா? என்ன அரசியல் பண்ணிருக்காங்க..? அரசியல்ன்னா என்னன்னாவது தெரியுமா? இந்திய அரசியல்வாதிகளுக்குன்னே உலகத்துல ஒரு தனி மரியாதை இருக்கு.. அது அந்தம்மாவுக்கு இருக்கா..? இல்லையே..? பின்ன எதுக்கு ‘பிரதிபா..’ ‘பிரதிபா..’ ‘பிரதிபா’ன்னுட்டு ஒப்பாரி வைக்குறானுக எல்லா சேனல்காரனும்..?” என்று சொக்கலால் பீடி குடித்தபடியே நம்ம கபாலி அண்ணேன், கபாலி தியேட்டர் வாசல்ல, ஓசில சரக்கடிச்சு புலம்பிக்கிட்டிருந்தாருங்கோ..

இது எப்படியோ நம்ம அரசியல்வாதிகளின் பாசக்காரப் பயல்களுக்கு.. அதாங்க… பத்திரிகைகாரங்களுக்குத் தெரிஞ்சு போய் “அந்தம்மா யாரு? எவரு? குலம் என்ன? கோத்திரம் என்ன?”ன்னு நோண்ட ஆரம்பிச்சிட்டாங்க.. ஒண்ணொண்ணா வெளில வந்துக்கிட்டிருக்கு..

அதுல இதுவும் ஒண்ணு சாமி.. படிச்சுப் பாருங்க.. இன்னிக்கு ‘தினமணி’ பேப்பர்ல பத்திரிகையாளர் திரு.அருண்செளரி எழுதிருக்கார்.. இதுக்கும் ஜாதி சாயம் பூசிராதிங்க சாமிகளா.. ‘மேட்டர்’ என்னன்னு மட்டும் பாருங்க..

“என்னைத் தேர்வு செய்திருப்பது மற்றப் பெண்களுக்கு ஊக்குவிப்பாக இருந்து அவர்களும் அதிகாரம் பெற வழிவகுக்கும்” – இது குடியரசுத் தலைவர் பதவிக்கு ஐக்கிய முற்போக்குக் கூட்டணியால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் பிரதிபா பாட்டீலின் அடக்கமான ஏற்புரையாகும்.

மகளிர் முன்னேற்றத்திலும், பெண் கல்வியிலும் ஆர்வம் உள்ள சமூகத் தொண்டர், கிராமப்புற பொருளாதார வளர்ச்சி, மகளிர் நலன் ஆகியவற்றுக்காக அயராது பாடுபடுகிறார் என்று பிரதிபா பற்றிய வாழ்க்கைக் குறிப்பில் கூறப்படுகிறது.

மகிளாவிகாஸ் மகா மண்டல் ஆதரவில், “பிரதிபா மகிளா சஹகாரி வங்கி, மகாராஷ்டிரம்” என்ற பெயரில் கூட்டுறவு வங்கியை ஜலகாமில் அவர் தொடங்கியது இதற்கு ஆதாரமாகக் காட்டப்படுகிறது. ஷரம் சாதனா அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர், ஜலகாம் மாவட்டத்தில் உள்ள சர்க்கரை ஆலையின் முதன்மை ஊக்குவிப்பாளர், தலைவர், ஏழை கிராமப்புற இளைஞர்களின் நலனுக்காக பொறியியல் கல்லூரியை நிறுவியவர் என்ற பட்டங்களும் பிரதிபாவுக்கு உண்டு.

மற்றப் பெண்களுக்கு உதவ, தன்னுடைய பெயரிலேயே அவர் தொடங்கிய பிரதிபா மகிளா சஹகாரி கூட்டுறவு வங்கியின் கதையை முதலில் பார்ப்போம்.

அவருடைய வாழ்க்கைக் குறிப்பிலும் பத்திரிகைகளின் செய்திகளும் இந்த வங்கி குறித்து இடம் பெற்றுள்ளது. ஆனால் அந்த வங்கி தொடர்ந்து செயல்பட்டால், முதலீட்டாளர்களின் நலன் முற்றிலும் பாழ்பட்டுவிடும் என்ற எச்சரிக்கையோடு ரிசர்வ் வங்கி அதை இழுத்து மூடிவிட்டது என்ற தகவல் எதிலும் இல்லை.

தன்னைத் தலைவராகவும், தன்னுடைய உறவினர்கள் சிலரை இயக்குநர்களாகவும் கொண்டு 1973-ல் இந்த கூட்டுறவு வங்கியை பிரதிபா பாட்டில் தொடங்கினார். அவர் இயக்குநராகப் பல முறை தொடர்ந்திருக்கிறார். அவருடைய உறவினர்கள் ஒவ்வொரு தேர்தலுக்குப் பிறகும் மாறி, மாறி வங்கியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தனர். அந்த வங்கி தொடங்கியது முதல் இழுத்து மூடப்படும்வரை அதன் நிறுவனம், தலைவர் என்ற அந்தஸ்திலேயே பிரதிபா தொடர்ந்து செயல்பட்டார்.

அந்த வங்கி முறையாக நிர்வகிக்கப்படாததால் 1995-ல் ரிசர்வ் வங்கி அதை நலிவடைந்த வங்கிகளின் பட்டியலில் சேர்த்தது. 1994-மார்ச்சில் கிடைத்த ஆய்வறிக்கையின்படி அதன் மூலதன ஆதாரம் வெகுவாகச் சிதைந்துவிட்டதால், அதை மறுசீரமைப்புக்கான வங்கிகளின் பட்டியலில் ரிசர்வ் வங்கி சேர்த்தது.

2002-ல் மீண்டும் அந்த வங்கியின் நிதி இருப்பு, இதர செயல்பாடுகள் குறித்து ஆழ்ந்த ஆய்வை மேற்கொண்டது ரிசர்வ் வங்கி. அதன் நிர்வாக இயக்குநர் பி.பி.மாத்தூர் அந்த ஆய்வுக்குப் பிறகு பின்வரும் நிதி முறைகேடுகளைப் பட்டியலிட்டுள்ளார்.

1. வங்கியின் உண்மையான அல்லது மாற்றத்தக்க செலுத்தப்பட்ட மூலதனம், ரொக்கக் கையிருப்பு ஆகியவற்றின் மதிப்பு மைனஸ் ரூ.197.67 லட்சமாக இருக்கிறது. இந்த வங்கியின் சொத்து மதிப்பு அது செலுத்த வேண்டிய கடனை முழுமையாக அடைப்பதற்கு பற்றாத நிலையில் இருக்கிறது. ரிசர்வ் வங்கி நிர்ணயிக்கும் குறைந்தபட்ச மூலனதப் பங்கு அதன் வசம் இல்லை. இது மொத்த டெபாசிட் தொகையின் மதிப்பில் 26% சதவீதம்.

2. வங்கியின் மொத்தச் சொத்து மதிப்புக்கும் அது செலுத்த வேண்டிய கடனுக்கும் உள்ள விகிதாச்சாரத்தைக் கணக்கிட்டால் சொத்தைப் போலவே கடன் 312.4% இருக்கிறது. அதாவது கடனை அடைக்க முற்பட்டால் வங்கியின் மூலதனம் முழுக்கத் தீர்ந்து அது திரட்டியுள்ள டெபாசிட்டுகளிலிருந்தும் ரூ.197.67 லட்சம் தேவைப்படும். அதாவது கால்பங்கு டெபாசிட்டுகளைத் தியாகம் செய்தால்தான், கடனே அடையும் என்ற நிலைமை.

3. அந்த வங்கி அளித்தக் கடனில் 65.8% அளவு வாராக்கடன்களாக, அதாவது திரும்ப வசூலிக்க முடியாத கடனாகப் போய்விட்டது.

4. வங்கி நிர்வாகம் இந்தக் கடன்களைத் திரும்ப வசூலிக்கவோ, அதன் நிதியாதாரத்தை வலுப்படுத்தவோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த நிலையில் இந்த வங்கியைத் தொடர்ந்து செயல்பட அனுமதித்தால் இப்போதுள்ள டெபாசிட்தாரர்கள் மட்டுமல்ல. இனி எதிர்காலத்தில் விவரம் தெரியாமல் இதில் முதலீடு செய்யும் டெபாசிட்தாரர்களின் நலனும் பாதிக்கப்படும் என்பதால் வங்கியை உடனடியாக மூடிவிடுமாறு உத்தரவிடப்படுகிறது. வங்கி நடத்துவதற்கு அளித்த உரிமமும் ரத்து செய்யப்படுகிறது என்று ரிசர்வ் வங்கி தனது உத்தரவில் கூறியிருக்கிறது.

இந்தக் கூட்டுறவு வங்கியில் பிரதிபாவைத் தவிர, இதர இயக்குநர்கள் அனைவரும் அவருடைய சகோதரர்கள் அல்லது உறவுக்காரர்கள். அதாவது அனைவருமே ஆண்கள். மகளிருக்கு அதிகாரம் வழங்க மூடு திரைக்குள் ஆண்கள் என்று இதை கருதலாம்.

ஒரு குடும்பத்தாரால் நிர்வகிக்கப்படும் இந்த வங்கி தொடர்ந்து மக்களின் பணத்தைத் தவறாகப் பயன்படுத்தி வங்கியை போண்டியாக்கிக் கொண்டிருக்கிறது. இதன் உயர் நிர்வாக அமைப்பைக் கலைக்க வேண்டும் என்று மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் சங்கம் தொடர்ந்து அறிக்கை மேல் அறிக்கை மாநில கூட்டுறவுத் துறை, மாநில அரசு, மத்திய அரசு, உள்துறை அமைச்சகம் ஆகியவற்றுக்கு அனுப்பி கொண்டேயிருந்தது.

பிரதிபா பாட்டீலை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றுகூட தனது மனுவில் வலியுறுத்தியிருந்தது. மகாராஷ்டிரத்தில் உரிய அரசு அமைப்புகளுக்கும் குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் அப்போதைய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சோனியாகாந்திக்கும்கூட புகார் மனுக்கள் அனுப்பப்பட்டிருந்தது.

03.12.2002-ல் அனுப்பியிருந்த விரிவான புகாரில் வங்கியின் நிர்வாகியும், தலைவருமான பிரதிபா பாட்டீல், வங்கியின் பணத்தைத் திட்டமிட்டு சுயலாபத்துக்குப் பயன்படுத்த, எந்தவித ஜாமீனும் இல்லாமல் தனது உறவினர்கள், அவர்களுடைய குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் ஆகியோருக்கு லட்சணக்கணக்கில் எப்படி கடன் அளித்து வருகிறார் என்று தொழிலாளர்கள் சங்கம் பட்டியல் இட்டிருந்தது.

வங்கியின் நிதி நிலைமை படு மோசமாக இருந்த நிலையிலும் தனது உறவினர்கள் வாங்கிய லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள கடன்களுக்குச் செலுத்த வேண்டிய வட்டி, மற்றும் அபராத வட்டி போன்றவற்றை பிரதிபா பாட்டீல் தள்ளுபடி செய்ததையும் சங்கம் தனது புகாரில் சுட்டிக் காட்டியிருந்தது.

பிரதிபாவின் உறவினர்களான அஞ்சலி திலீப் சிங் பாட்டீலுக்கு ரூ.21.86 லட்சமும், கவிதா அரவிந்த்பாட்டீலுக்கு ரூ.8.59 லட்சமும், ராஜ்கெளர் திலீப்சிங் பாட்டீலுக்கு ரூ.2.47 லட்சமும் கடன் தள்ளுபடி அனுமதிக்கப்பட்டது.

அதன் பிறகு அந்த வங்கிக் கணக்குகளை அவருடைய உறவினர்கள் மூடி விட்டனர். இவ்வாறாக இந்த ஒரு விஷயத்தில் மட்டும் ரூ.32.93 லட்சம் மக்களுடைய பணம் ஏப்பம் விடப்பட்டது என்று சங்கம் சுட்டிக் காட்டுகிறது.

ஊழியர் சங்கங்களின் புகார்கள் குறித்து வங்கியில் யாரும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. வங்கியின் சட்ட ஆலோசகர் பிரதிபாவின் அண்ணன் திலீப்சிங் பாட்டீல்தான். இந்தக் கடன் தள்ளுபடியில் பலன் அடைந்ததே திலீப்சிங்கின் மனைவிதான். இந்த வகையில் மட்டும் பிரதீபாவும் அவருடைய உறவினர்களும் ரூ.2 கோடி பணத்தை ஏப்பம் விட்டுவிட்டதாக ஊழியர்கள் சங்கம் தெரிவிக்கிறது.

கடன் பெற்ற பிரதிபாவின் உறவினர்கள்

1. திலீப்சிங் என்.பாட்டீல் – அண்ணன் – ரூ.3,09,562

2. திலீப்சிங் என்.பாட்டீல் – அண்ணன் – ரூ.5,62,840

3. ராஜேஸ்வரி கிஷோரி சிங் பாட்டீல் – சகோதரரின் மருமகள்-ரூ.45,82,670

4. கிஷோர் திலீப்சிங் பாட்டீல் – அண்ணன் மகன் – ரூ.51,02,183

5. கிஷோர் திலீப்சிங் பாட்டீல் – அண்ணன் மகன்
உதவ்சிங் தக்டு ராஜ்புத் – உறவினர் – ரூ.43,87,680

6. உதவ்சிங் தக்டு ராஜ்புத்
ஜெயஸ்ரீ உதவ்சிங் தக்டு ராஜ்புத் – உறவினர்கள் – ரூ.42,89,602

7. ரந்தீர்சிங் திலீப்சிங் ராஜ்புத்
உதவ்சிங் தக்டு ராஜ்புத் – உறவினர் – ரூ.21,44,800

8. ஜோதி விஜயசிங் பாட்டீல்
கிஷோர் திலீப்சிங் பாட்டீல் – உறவினர் – ரூ.10,69,893

இப்பச் சொல்லுங்க.. திருமதி பிரதிபா பாட்டீல் அரசியல்வாதியா..? இல்லையா..? ஜனாதிபதி பதவிக்குப் பொருத்தமானவரா..? இல்லையா? யோசிங்க.. யோசிச்சுக்கிட்டே இருங்க..

இரண்டாம் பாகம்

மூன்றாம் பாகம்