Archive for நவம்பர், 2009

நான் அவன் இல்லை-2 – சினிமா விமர்சனம்

நவம்பர் 30, 2009

30-11-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

என்னை மாதிரி ‘யூத்’துகளுக்கான ‘யூத்புல்’லான திரைப்படம் இது.


உண்மையாகச் சொல்லப் போனால் ‘நான் அவனில்லை’ என்கிற டைட்டிலில் இது மூன்றாவது பாகம். முதல் பாகத்தில் ‘காதல் மன்னன்’ ஜெமினிகணேசன் தன்னால் முடிந்த அளவுக்கு பெண்களைக் கவிழ்த்து நமது வீரபராக்கிரமத்தை காட்டியிருந்தார்.

ஜீவன் இதற்கு முந்தைய பாகத்தில் 5 பெண்களை ஏமாற்றி தனது வீரதீரச் செயலைக் காட்டியிருந்தார். சென்ற பாகத்தில் சென்னையில் இருந்து தனது லொள்ளு அண்ட் ஜொள்ளு வேலையைச் செய்திருந்து சந்தேகத்தின் பலனால் நீதிமன்றத்தின் மூலம் தப்பித்த காரணத்தால் இந்த முறை மலேஷியாவுக்கு பறந்துவிட்டார். இதிலும் ஒரு சிறிய மாற்றம்.. கதை முடிவில் இருந்து முதலுக்கு வந்ததுதான்.

மகேஷ் என்னும் ஜீவன் நான்கு பெண்களை ஏமாற்றிப் பணம் பறித்துவிட்டு, ஐந்தாவது பெண்ணுக்கு உதவி செய்து கொஞ்சூண்டு நல்லவனாக இருப்பதுதான் கதை. இப்போதும் அவன் நான் அவனில்லை என்று சொல்லிவிட்டு லாஜிக்கை உதைத்துத் தள்ளிவிட்டு எஸ்கேப்பாவதுடன் படம் முடிகிறது. எப்படியும் அடுத்த பாகம் வரலாம் என்று நம்புவோம்..

இயக்குநர் செல்வா மினிமம் கியாரண்டி கமர்ஷியல் இயக்குநர் என்று பெயரெடுத்தவர். இதிலும் அப்படியே.. நான்கு பெண்களுக்கும் சமமான தனி டூயட்டுகள்.. கலகலப்பான திரைக்கதை.. ஷார்ப்பா, அவ்வப்போது சிரிக்க வைக்கும், புன்முறுவல் பூக்க வைக்கும் வசனங்கள்.. சின்னச் சின்ன டிவிஸ்ட்டுகள் என்று போரடிக்காமல் கொண்டு சென்றிருக்கிறார். மாத நாவல் எழுதும் எழுத்தாளர்களெல்லாம் சினிமா எழுத்துக்கு சரிப்பட்டுவர மாட்டார்கள் என்பது பொய்யாகிக் கொண்டே வருகிறது.. இதில் பட்டுக்கோட்டை பிரபாகரின் வசனங்கள் பல இடங்களில் சிரிக்கவும், சில இடங்களில் ‘அட’ போடவும் வைக்கிறது..

முதல் பெண் தெலுங்கில் மாடலாடும் தெலுங்கச்சி.. தன்னுடைய அப்பனை போலவே வீட்டுக்கு அடங்கிய பையனை புருஷனாக்கத் துடிக்கிறாள். ‘இங்கேயே இரு’ என்று சாயந்தரம் சொல்லியும் மறுநாள் காலைவரை அதே இடத்தில் தனக்காகக் காத்திருக்கும் மகேஷை நம்பிவிடுகிறாள்.. நிச்சயத்தார்த்தன்றே வீட்டில் இருக்கும் நகைகள், பணத்தை அள்ளிக் கொண்டு மகேஷ் எஸ்கேப்.

அடுத்து ஒரு கிரிமினலான பெண்ணிடமே தனது கிரிமினல்தனத்தைக் காட்டுகிறான். ஆசை வார்த்தைளைக் கொட்டி, அசத்தலான தனது உடலைக் காட்டி படுக்கைக்கு அழைத்து, கூடவே வந்தவனின் மனைவிக்கும் தகவலைக் கொடுத்து வரவழைத்து அங்கேயே பஞ்சாயத்து செய்து முடிந்த அளவுக்கு இருப்பதைப் பறிக்கும் கெட்டிக்காரத் தமிழச்சி.. இவளிடமே ஆட்டையைப் போடுகிறார் நம்மாளு..

அடுத்து கொலை, கொள்ளைக்கு அஞ்சாத கொள்ளைக்காரியான ஒரு தமிழச்சியிடம் நமது ‘வாலிபக் கவிஞர்’ வாலியின் வரைவரிகளான திரைப்படப் பாடல்களைச் சொல்லியே கவிழ்க்கிறார். ஆசை வார்த்தையில் குப்புறக் கவிழும் அப்பெண் தனது திருட்டுத் தொழிலையே கைவிட்டுவிட்டு சன்னியாசினி ஆகிவிடுகிறார். தனது குரு மகேஷ்தான் என்று சொல்லி பேப்பரில் விளம்பரம் கொடுக்க அதனை வைத்துத்தான் கதையே துவங்குகிறது.

இடையில் தமிழ்த் திரைப்பட நடிகையான லஷ்மிராயுடன் உடான்ஸைத் துவக்குகிறார். டபுள் ஆக்ட்.. மிகப் பெரிய பணக்கார பேமிலி.. தன் அண்ணன் லஷ்மிராயின் தீவிர ரசிகன். அவளுடைய மானசீகமான காதலன் என்பதை தம்பி தானே முன் வந்து லஷ்மிராயிடம் சொல்கிறான். கூடவே, “அவனைக் காதலிச்ச.. மவளே காணாப் போயிருவ..” என்று நேரடியாகவே மிரட்டுகிறான். அடுத்து அண்ணன்காரனைப் போல மாறுவேடம் போட்டு சாந்தமாக வந்து அவளிடம் குஷாலாகப் பேச, வீம்புக்காகவே அண்ணன்காரனைக் காதலிக்கிறாள் நடிகை லஷ்மிராய். இந்தக் கதை கடைசியில் லஷ்மிராயின் முழுச் சொத்தையும் அபகரிக்கும் அளவுக்குச் செல்கிறது.

கடைசியாக சங்கீதா என்னும் பாவப்பட்ட ஒரு கேரக்டர். கொஞ்சம் திக்குவாய். இது எப்படி ஏற்பட்டது என்பதற்கு இலங்கை பிரச்சினை திணிக்கப்பட்டிருக்கிறது. சங்கீதாவின் காதல் கணவர் இலங்கைத் தமிழர்கள்மேல் அக்கறை கொண்டவராகி இலங்கைக்கு உதவிகள் செய்ய சென்ற இடத்தில் சிங்களப் படையினரின் குண்டுவீச்சில் பலியாக.. சங்கீதாவுக்கு அந்த அதிர்ச்சியில்தான் பேச்சுத் திணறிப் போய்விட்டது என்கிறது கதை.

இவளை எப்படி ஏமாற்றலாம் என்று யோசித்து அவள் மனதில் இடம் பிடிக்கும் நம்ம ஹீரோவுக்கு கடைசியில் மனம் மாறிவிடுகிறது. சங்கீதாவின் குழந்தையை பிரித்து தங்களிடத்தில் வைத்துக் கொள்ளும் அவளுடைய மாமனாரின் குடும்பம் மிகப் பெரும் அளவுக்குப் பணம் கொடுத்தால் குழந்தையைத் தருவதாகப் பேரம் பேசுகிறது.. நடிகையிடம் சுட்ட பணத்தை மகேஷ், சங்கீதாவுக்குத் தெரியாமல் அவளுடைய மாமனார் குடும்பத்திடம் கொடுத்து குழந்தையை மீட்டு அவளிடம் தரும் சமயத்தில் அவனைப் பிடித்துவிடுகிறார்கள் மற்ற நான்கு அபலைப் பெண்களும்.

அடுத்த இருபது நிமிடத்தில் நூற்றிப் பத்து தடவை ‘நான் அவனில்லை..’ ‘நான் அவனில்லை.’ ‘நான் அவனில்லை..’ என்று தொண்டை கிழிய கத்திவிட்டு எஸ்கேப்பாகுகிறான் மகேஷ். முடிந்தது கதை.. முழுக் கதையையும் சொல்லக் கூடாது என்றுதான் பார்த்தேன். ஆனால் முடியவில்லை. பரவாயில்லை. தியேட்டருக்கு சென்று பாருங்கள்.. கலகலப்பாகத்தான் இருக்கிறது..

கொஞ்சமாக இருக்க வேண்டிய கமர்ஷியல் மேட்டர்கள் இங்கே அதிகமாகிவிட்டதையும் குறிப்பிட்டாக வேண்டும். சங்கீதாவைத் தவிர மீதி நான்கு பேர் அணிந்த ஆடையையும் ஒரே ஆள் கையில் தூக்கிக் கொண்டு வந்துவிடலாம். அவ்வளவு சிக்கனமான துணிகள். இதில் மூன்று பேர் முற்றிலும் புதுமுகமாக இருக்க.. புதுமுகங்கள் என்பதால் எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு ஆடையைக் குறைத்து வாய்ப்பு தேடியிருக்கிறார்கள். கிடைக்குமா என்பது முருகனுக்குத்தான் தெரியும். பாடல் காட்சிகள் அத்தனையிலும் கிளாமர் கொடி கட்டிப் பறக்கிறது.. யார் அதிகம் ஆடை குறைப்பது என்பதில் நான்கு பேருக்கு இடையிலும் போட்டி நடந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

ஆனால் நடித்தவர்கள் யார் என்று பார்த்தால் சங்கீதாவும், லஷ்மிராயும்தான்.. ஏதோ கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். சந்தடிச்சாக்கில், “நடிகைகள் என்றால் இளக்காரமா? அவர்களும் ஆபீஸ் வேலை மாதிரி ஒரு தொழில்தான் செய்றாங்க..” என்று தனது தரப்பு வாதத்தை வைக்க லஷ்மிராய்க்கு வாய்ப்பளித்திருக்கிறார் இயக்குநர்.

ஒளிப்பதிவைப் பற்றி ஒன்றும் சொல்ல வேண்டியதில்லை.. முழுக்க முழுக்க வெளிநாட்டிலேயே படமாக்கப்பட்டிருப்பதால் அழகு இடங்களாக பார்த்தே அமர்க்களப்படுத்தியிருக்கிறார்.. இசையமைப்பில் மரியா ஓ மரியா என்றொரு பாடல் கேட்க நன்றாக இருந்தது. ஆனால் பாடல் காட்சிதான்.. கண்ணைக் கூச வைக்கிறது.

ஒரேயடியாக ஆம்பளைங்களை காமாந்தக்காரனா, வில்லனாக, ஏமாற்றுக்காரனாகவே காட்டிக் கொண்டிருந்தால் நன்றாக இருக்காதே.. அதனால்தான் இந்த முறை கொஞ்சம் நல்லவனாகக் காட்டி ‘நமது குலத்திற்கு’ கொஞ்சூண்டு பெருமை சேர்த்திருக்கிறார் இயக்குநர். இந்த ஒரு விஷயத்துக்காகவே செல்வாவுக்கு எனது தேங்க்ஸ்.

‘நான் அவனில்லை..’ பார்க்கவேகூடாத திரைப்படமல்ல.. நேரம் கிடைத்தால் ‘தனியாகச்’ சென்று பார்க்கலாம்.