Archive for the ‘BSNL’ Category

பி.எஸ்.என்.எல்.-தீபிகா படுகோனே – கூட்டணி வைத்து எனக்கு செய்த கொடுமைகள்..!

ஓகஸ்ட் 11, 2009

11-08-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

அரசு அலுவலகமும், மாமனார் வீடும் ஒன்று என்பது நமது இந்தியத் திருநாட்டுக்கே உரித்தான சொலவடை. இந்தியாவில் உள்ள அத்தனை அரசு ஊழியர்களும் இந்த விஷயத்தில் ஒருவருக்கொருவர் சளைத்தவர்களில்லை.

அரசு அலுவலகம் என்பது மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்யும் சேவை அமைப்புகளாக இருந்துவிட்டால் நாட்டில் முக்கியப் பிரச்சினைகள் பலவும் தீர்ந்து தொலையும். நமது துரதிருஷ்டம் நமது அரசியல் அமைப்பும், நிர்வாக அமைப்பும் அப்படியல்ல..

பேச்சு எதுக்கு? விஷயத்துக்கு வரேன்..

என்னிடம் செல்போன் இருந்து தொலைந்தாலும் லேண்ட்லைன் போன் ஒன்று வாங்கியாக வேண்டிய கட்டாயம் ஒன்று வந்தது. காரணம் பல்வேறு இடங்களில் வீட்டு முகவரிக்காக பி.எஸ்.என்.எல். பில்லை ஏற்றுக் கொண்டார்கள். அதே நேரம் மற்ற தனியார் தொலைபேசி நிறுவனங்களின் அத்தாட்சியை ஏற்றுக் கொள்ள மறுத்தது மத்திய, மாநில அரசுத் துறைகள்.


இந்த ஒரு காரணத்துக்காகவே பி.எஸ்.என்.எல். போனை வாங்கித் தொலைத்தேன். முதல் நாளே ஆரம்பித்தது சண்டை.

போனை கொடுப்பதற்காக ஊழியர்கள் என் வீட்டிற்கு வந்தபோது நான் அலுவலகத்தில் இருந்தேன். எனது அக்கா பையன்தான் வீட்டில் இருந்தான். அவனிடத்தில் “300 ரூபாய் வேண்டும். வயர் வாங்க வேண்டும்..” என்று கேட்டிருக்கிறார்கள். அவன் எனக்கு போன் செய்து விஷயத்தை சொன்னான்.

தொடர்ந்து நானே அந்த சாய் என்கிற தொலைபேசி ஊழியரிடம் பேசினேன். “உங்க வீடு ரோட்டுல இருந்து ரொம்ப உள்ள இருக்கு ஸார்.. எங்ககிட்ட இப்ப நீளமான வயர் இல்லை. அதுனால உங்ககிட்ட வாங்கிக்கச் சொன்னாங்க. மொத மாச பில்லுல இந்த 300 ரூபாயை மைனஸ் பண்ணிருவாங்க..” என்று உறுதியுடன் சொன்னார்.

எனக்கும் போன் வாங்கியாக வேண்டுமே என்பதால் “சரி” என்று கொடுத்துத் தொலைத்தேன். போனும் ஆக்டிவ்வானது.. சந்தோஷமாக பேசினோம்.. கொஞ்சினோம்.. குலாவினோம்.. முதல் மாச பில்லை பார்க்கின்றவரையில்.

அந்த 300 ரூபாய் முதல் மாத பில்லில் கழிக்கப்படவே இல்லை என்பது தெரிந்து அந்த அலுவலகத்திற்குச் சென்று கேட்டேன். “அப்படியொரு சிஸ்டமே இல்ல ஸார்.. நீங்க ஏன் கொடுத்தீங்க..? எவ்ளோ நீளமா இருந்தாலும் எங்க ஆபீஸ்ல இருந்துதான் கொடுப்பாங்க.. அவர் சும்மா வாங்கியிருப்பாரு..” என்று சப்பைக் கட்டு கட்டினார்கள்.

நானும் விடவில்லை. “உங்காளுதான் வாங்கினாரு.. அப்படித்தான் சொன்னாரு.. எனக்கு பில்லுல மைனஸ் பண்ணிக் கொடுங்க..” என்று சவுண்ட் விட்டேன். ஒரு பெண் அஸிஸ்டெண்ட் இன்ஜீனியர் வந்தார். வெளிப்படையாகப் பேசினார். “ஸார் அவர் உங்ககிட்ட பொய் சொல்லி லஞ்சமா அந்தப் பணத்தை வாங்கிருக்காரு.. நீங்களும் ஏமாந்து கொடுத்திட்டீங்க.. அதுனால இந்த விஷயத்துல எங்களால ஒண்ணும் செய்ய முடியாது. வேண்ணா ஒரு கம்ப்ளையிண்ட்டா எழுதி கொடுங்க.. அவர்கிட்ட கேட்டு வாங்கித் தர்றோம்..” என்றார்.

எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.. எப்படி சுலபமாக நான் ஏமாற்றப்பட்டுள்ளேன் என்பதை நினைத்து எனக்கே அவமானமாக இருந்தது. அந்த சாய் என்கிற லைன்மேனை போனில் பிடித்து விளக்கம் கேட்டேன். “நீங்க எனக்காக சும்மா கொடுக்குறீங்கன்னு நினைச்சேன் ஸார்..” என்றார். எனக்கு வந்த கோபத்துக்கு மொத்த அலுவலகமும் என்னைத் திரும்பிப் பார்க்கும்விதமாக கத்தித் தீர்த்துவிட்டேன்.

கடைசியாக அந்த நபரும் சொன்னது இதுதான்.. “ஆமா ஸார்.. நான் லஞ்சம்தான் வாங்கினேன்.. உங்களால முடிஞ்சதை பாருங்க..”

வேறென்ன செய்ய முடியும்..? வாங்கியதற்கு ஆதாரம் இல்லை என்கிற தைரியத்தில் தெள்ளத் தெளிவாகப் பேசுகிறார் அந்த நபர். “அவர் மீது இலாகாபூர்வமான நடவடிக்கை எடுங்கள்..” என்று சொல்லி ஒரு புகார் மனுவை கொடுத்தேன். அதை வாங்கிய அந்த பெண் இன்ஜீனியர் “ஆதாரத்தையும் சேர்த்துக் குடுங்க..” என்றார். “அது எப்படிங்க..? அன்னிக்கு கொடுத்ததுக்கு என் மாப்ளைதான் ஆதாரம்.. அவன் வந்து உண்மையைச் சொல்வான்..” என்றேன்.

“அதெல்லாம் இங்க நிக்காது ஸார்.. எங்க ஆபீஸ்ல ஏதாவது ஆதாரம் கேப்பாங்க. இல்லாட்டி மனுவை தொடவே மாட்டாங்க..” என்றார். நானும் கோபத்தில் அந்த மனுவை வாங்கி அவர் முன்பாகவே கிழித்துப் போட்டுவிட்டு “நாசமாப் போங்க..” என்று திட்டிவிட்டு வந்துவிட்டேன்.

இதன் பின்பு என் அப்பன் முருகப் பெருமான் புண்ணியத்தில் போன் பில் சரிவர கட்ட முடியாமல் போய்விட்டதால் 1000 ரூபாய் பாக்கித் தொகை வைத்து போனை முடக்கிவிட்டார்கள். இந்த வேலையை மட்டும் மிகச் சரியாகச் செய்கிறார்கள்.

அத்தோடு அந்த போனை மறந்து தொலைத்துவிட்டு சும்மா ஷோகேஷுக்காக வீட்டில் வைத்து அழகு பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு ஒரு நாள் தொலைக்காட்சியில் நம்ம புதிய அழகு தேவதை தீபிகா படுகோனே பி.எஸ்.என்.எல்.லின் மாடலாக வந்து “வாங்கிக்கோ.. வாங்கிக்கோ..” என்று சொன்னது தூக்கத்தை துறக்க வைத்தது.

நம்ம எப்படி ஆளு..? தேவி, ஜெயப்ரதா, மாதுரி, ரவீணா டாண்டன், ராணி முகர்ஜி என்று வரிசை கட்டி சொன்னதால் பதினைந்து வருஷத்துக்கு முன்னாடி ஆரம்பிச்ச லக்ஸ் சோப்பையே இன்னமும் விடமுடியாம தடவிக்கிட்டிருக்குற ஆளு.. புது பாப்பா காட்டின அழகு ஷோக்குல மதி மயங்கிப் போய் அடுத்த நாளே ஓடிப் போய் ஆயிரம் ரூபாயை கட்டிட்டு வந்து “சீக்கிரமா என் வீட்டு போனை ஆக்டிவ் பண்ணிருங்க.. நானும் நாளைல இருந்து தீபிகா படுகோனே கிளப்ல ஒரு ஆளு”ன்னு சொல்லாம சொல்லிட்டு வந்தேன்.

நானும் ஒரு மிதப்புலதான் இருந்தேன். அந்த போன் கம்பெனிக்காரங்களும் ஒரு மிதப்புலதான் இருந்திருக்காங்க.. 2 நாளாச்சு.. 4 நாளாச்சு.. 6 நாளாச்சு.. 12 நாளாச்சு.. போனை எடுத்தா செத்துப் போய் கிடக்கு.. பணம் கட்டி இம்புட்டு நாளாச்சேன்னு போன் பண்ணி கேட்டா.. அப்புறமா வாயைத் தொறந்து வக்கனையா சொல்றானுக கேப்மாரிக.. “நீங்களே நேர்ல வந்து போனை ஆக்ட்டிவ் பண்ணிக் கொடுங்கன்னு எழுதிக் கொடுக்கணும் ஸார்..”ன்னு..

“சரி எங்க வரணும்..”னு கேட்டா.. “நீங்க பணம் கட்டினீங்களே அதே ஆபீஸ் மாடில ஸார்..”ங்கிறாங்க.. “அன்னிக்கே அதைச் சொல்லித் தொலைஞ்சிருந்தா எனக்கு வேலை மிச்சமாயிருக்கும்ல”ன்னு கேட்டா, “இது கஸ்டமர் கேர் ஸார்.. சொல்லியிருக்க வேண்டியது கவுண்ட்டர்ல பணத்தை வாங்கினவங்கதான்.. அங்க போய் கேளுங்க..”ன்னு சொல்லி டொக்குன்னு முகத்துல அடிச்சாப்புல போனை வைக்குறானுங்க.. இவங்கள்லாம் பொதுமக்களின் சேவகர்களாம்.. கொடுமை..

நம்ம தலையெழுத்தை நொந்துகிட்டே போய் எழுதிக் கொடுத்திட்டு வந்தேன். மறுபடியும் 10, 15 நாள் கழிச்சும் கனெக்ஷன் வரலை.. மறுபடியும் போன்ல கேட்டா “நேரா வந்து கேளுங்க”ன்னு கூலா சொல்றானுங்க.. நேர்ல போய் கேட்டா.. “அந்த லெட்டரை எங்க வைச்சோம்னு தெரியலை.. நீங்க வேற ஒண்ணு புதுசா எழுதிக் கொடுங்க”ன்னாங்க.. மறுபடியும் தலைவிதியேன்னு எழுதிக் கொடுத்திட்டு வந்தேன்..

அப்புறமும் போனுக்கு உசிரு வந்தபாடில்லை. மறுபடியும் போனை போட்டு கேட்டா.. என் வீட்டுக்கு பக்கத்துல இருக்குற எக்ஸ்சேஞ்சுக்கு போய் கேக்கச் சொன்னாங்க. அங்கதான் நமக்கு வெட்டு ஒண்ணு, துண்டு ரெண்டுன்னு சண்டையாகிப் போச்சே.. அதுனால அந்த இன்ஜீனியர் அம்மாவை பார்க்கணுமான்னு மனசுக்குள்ள சண்டை போட்டுக்கிட்டே போய்த் தொலைஞ்சேன்.

அந்த அம்மா என்னடான்னா “நீங்க அங்கதான் போய் கேக்கணும் ஸார்.. எங்களுக்குத் தகவல் இன்னும் வரலை.. வந்தாத்தான் நாங்க கனெக்ஷன் கொடுக்க முடியும்..” என்றார். “ஒரு போனுக்காக ஏங்க பொண்ணு பார்க்குற மாதிரி இப்படி லோ, லோன்னு அலைய விடுறீங்க.. நீங்களே பேசி வாங்கிக் கொடுக்கக் கூடாதா..”ன்னே கேட்டுட்டேன்.

“இல்லீங்க.. கவர்ன்மெண்ட் ரூல்ஸ் அப்படி.. நாங்க என்ன செய்ய.. நாங்க சாதாரண சர்வென்ட்தான்..” என்றார். இந்த வேலைக்கு கழுதை மேய்க்கப் போலாமே என்று என் மனதுக்குள்ளேயே சொல்லிவிட்டு மீண்டும் மாம்பலம் ஆபீஸுக்கு வந்து மாடில போய் ஒரு கத்து கத்தினேன்..

பின்ன.. நான் ஒரு பெரிய மனுஷன் ஆபீஸ்ல நுழையறேன்.. ஒரு மட்டு, மரியாதை வேண்டாம்.. ஆளாளுக்கு காதுல போனை எடுத்து பேசிக்கிட்டே இருக்காங்க.. கண்டுக்கவே இல்லை. அத்தனை பேருமே பொம்பளைங்கதான்.. எவ்வளவு நேரம்தான் பார்த்துக்கிட்டே இருக்குறது..

“டீ குடிக்கலாம்னு வந்தேன். டீ கிடைக்குமா..?” என்றேன். ஒரு அம்மா முறைத்துப் பார்த்தார். “ஏம்மா.. ஒரு கஸ்டமர் வந்திருக்கேன். வாங்க ஸார்.. என்ன ஸார் வேணும்’னு ஆர்வமா கேட்டு சீக்கிரமா முடிச்சுக் கொடுத்து அனுப்பாம, இப்படி எல்லாரும் ஊர்க்கதையை பேசிக்கிட்டிருந்தா என்னம்மா அர்த்தம்..? யார் உங்க அத்தாரிட்டி ஆபீஸர்.. கூப்பிடுங்க அவரை.. கம்ப்ளையிண்ட் பண்றேன்.. ஆபீஸா இது.. என்ன நினைச்சுக்கிட்டிருக்கீங்க..”அப்படி இப்படின்னு கத்தித் தீர்த்துட்டேன்..

ஒரு அம்மா என்னவோ ஏதோன்னு நினைச்சு ஓடி வந்து “சார் சாப்பிட்டீங்களா.. தண்ணி குடிக்கிறீங்களா?”ன்னு கேட்டு தண்ணியெல்லாம் கொடுத்துட்டு, “சொல்லுங்க ஸார்.. என்ன பிரச்சினை..” என்றார்.. என் சோகக் கதையை முழுசாகச் சொல்லி முடித்துவிட்டு நிமிர்ந்து பார்த்தேன். அத்தனை பெண்களும் என்னைச் சுற்றித்தான் இருந்தார்கள்.

ஒருத்தரும் மூச்சு விடலை.. என்னிடம் விசாரித்த பெண் கம்ப்யூட்டரில் எதையோ நோண்டிவிட்டு “ஸார் உங்களுக்கு ஐஓஎன் போட்டாச்சு ஸார்.. நாளைக்கு காலைல உங்களுக்கு கனெக்ஷன் வந்திரும்..” என்றார். “நம்பலாமா..” என்று உறுதியுடன் கேட்டுவிட்டு கொஞ்சம் பந்தாவோடு வீடு வந்து சேர்ந்தேன்.

மறுநாள் தெரு நாய்கூட வீட்டுக்கு வரவில்லை. பிறகெப்படி போன் வரும்..?

அடுத்த இரண்டு நாட்கள் விடுமுறை தினங்களாகிவிட ஒண்ணும் செய்ய முடியலை. திங்கட்கிழமை அதே பழைய ஆள் வந்தார். கனெக்ஷனை கொடுத்துவிட்டு நூறு ரூபாய் கேட்டிருக்கிறார். இப்போதும் நான் வீட்டில் இல்லை.

“லஞ்சம் கேட்டா செருப்பால அடிப்பேன்னு சொல்லு..”ன்னு மாப்ளைகிட்ட சொல்லி வைச்சிருந்ததால பயலும் அதை அப்படியே சொல்லிட்டான் போலிருக்கு.. பேசாம போயிட்டாராம்.. ஆனாலும் விடலையே.. அவனவனுக்கு ஒரு பவர் இருக்குல்ல.. காட்டிட்டான்..

சென்ற பதிவில் புலம்பியதைப் போல ஹாத்வே வீட்டில் செத்துப் போய்விட வேறு வழியில்லாமல் பி.எஸ்.என்.எல்லில் பிராட்பேண்ட்டிற்கு எழுதிக் கொடுத்தேன். முதலில் 5 நாள் என்றார்கள். பின்பு 10 நாள் என்றார்கள். 13 நாளானது..

மறுபடியும் படையெடுப்பு.. இந்த முறையும் அதே பெண் என்ஜீனியர். “ஸார்.. மோடம் ஸ்டாக் கம்மியா இருக்கு.. ஒவ்வொருத்தருக்காராத்தான் கொடுத்திட்டிருக்கோம். கொஞ்சம் வெயிட் பண்ணுங்க..” என்றார். “மொதல்ல லிஸ்ட்டை காட்டுங்க.. யார், யார் என்னைக்கு பதிவு பண்ணாங்க. அதுல எத்தனை பேருக்கு கொடுத்திருக்கீங்கன்னு பார்க்கணும்..” என்றேன்.

பெவிகால் போட்டு ஒட்டியதைப் போல் சேரில் அமர்ந்திருந்ததால் வேண்டாவெறுப்போடு அந்த லிஸ்ட்டை காட்டினார் என்ஜீனியர். எனக்கு பின்பு பணம் கட்டியவர்களுக்கெல்லாம் கனெக்ஷன் கொடுத்திருக்க எனக்கு மட்டும் ‘பெப்பே’ என்றது லிஸ்ட்..

“என்ன மேடம் இது..?” என்றேன்.. அவரோ ரொம்பவே சங்கோஜப்பட்டு “இது லைன்மேன் செய்ற வேலை ஸார்.. ‘அங்க போங்க’.. ‘இங்க போங்க’ன்னுதான் எங்களால சொல்ல முடியும.. டெய்லி ஏதாவது சாக்குப் போக்குச் சொல்லிட்டுப் போயிடறாங்க.. நாளைக்கு கண்டிப்பா கொண்டு வந்து கொடுக்கச் சொல்றேன்.. கோச்சுக்காதீங்க..” என்றார்.

தான் ஒரு பெண்ணாகவும் இருப்பதால் தன் பேச்சை அந்த அலுவலகத்தில் இருக்கும் சக ஆண் ஊழியர்கள் கேட்க மறுப்பதாக ஆஃப் தி ரெக்கார்டாக சொன்னார். எனக்கும் பாவமாக இருந்தது.. வந்துவிட்டேன்.

இன்னும் இரண்டு நாட்கள் கழித்துத்தான் ஒரு மதிய வேளையில் நெட் கனெக்ஷனுக்காக மோடத்தை கொண்டு வந்தார்கள். அதே லைன்மேனும், வேறொரு ஆளும். இன்னிக்கு திருவிழாதான் என்று முடிவு செய்து தயாரானேன்.

“ஏன் லேட்டு? எதுக்கு லேட்டு..? எல்லாருக்கும் கொடுத்திட்டு கடைசியா கொடுக்க நான் என்ன இளிச்சவாயனா..? தனியார் கம்பெனின்னா 2வது நாளே கொண்டு வந்து மாட்டிடறாங்க.. நீங்க கவர்ன்மெண்ட்டு ஆபீஸ்ங்கிறதால இத்தனை லேட் பண்றீங்க.. உங்க ஆபீஸையெல்லாம் தனியார் மயமாக்குறதுல தப்பே இல்லை..” அப்படி இப்படின்னு போட்டுத் தாக்கிட்டேன்..

நான் கத்தின கத்துல லஞ்சம் கேக்க மறந்துட்டாங்க போலிருக்கு.. ஒரு வார்த்தைகூட பேசாம திரும்பிப் போயிட்டாங்க..

சந்தோஷம்டா சாமின்னு இருந்தாலும் இந்த அரசு ஊழியர்களின் அலட்சிய மனப்போக்கால் எத்தனை, எத்தனை பேர் தினமும் அல்லல்படுகிறார்கள்.. அவஸ்தைப்படுகிறார்கள் என்பதையெல்லாம் நினைத்துப் பார்க்கின்றபோது இது மாதிரியான நிறுவனங்களையெல்லாம் பேசாமல் தனியார் மயமாக்கினால்தான் என்ன என்றுதான் தோன்றுகிறது.

ஏர்டெல், டாட்டா இண்டிகாம், ரிலையன்ஸ் என்று மற்ற நிறுவன ஊழியர்கள் இணைப்பு கொடுத்துவிட்டு தலையைச் சொரிவதில்லை. ஆனால் இவர்கள் மட்டும் ஏன் வெட்கமில்லாமல் இப்படி நிற்கிறார்கள். அதான் சுளையாக மாதாமாதம் சம்பளமும் வருகிறது.. அனைத்து வசதிகளையும் செய்து தருகிறார்கள். எத்தனை வசதிகள் செய்து கொடுத்தாலும், எவ்வளவு ஊதிய உயர்வை கொடுத்தாலும் லஞ்சப் பிசாசுகள் லஞ்சம் கேட்கத்தான் செய்வார்கள்.

அதனால்தான் இந்த ஒரு காரணத்துக்காகவே சொல்கிறேன். அரசுத் துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கிவிடலாம்..

என்ன நான் சொல்றது..?

அதுக்கெதுக்குடா இப்படி நீட்டி முழக்குறன்னு நினைக்குறீங்களா..?

இனிமே யாராவது உங்ககிட்ட லஞ்சம் கேட்டா ஆதாரத்தோட கொடுத்து அவங்களை மாட்டிவிட்ருங்க.. அப்பத்தான் நீங்க ஒரு இந்தியன்.. இல்லாட்டி ஒரு அந்நியனா மாறிடுங்க..

டிஸ்கி :

தீபிகா படுகோனே பேச்சைக் கேட்டு எத்தனை அலைச்சல்..? எவ்வளவு கஷ்டங்கள்..?

ஜொள்ளுவிட்டா விட்டதைத் துடைச்சுட்டு அப்படியே போயிரணும்.. ஒழுக விட்டுக்கிட்டே ஓடக் கூடாது.. இதுதாங்க இதுல இருந்து எனக்குக் கிடைச்ச பாடம்..