என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
மனித நேயத்தில் மனிதர்களை மிஞ்ச ஆளில்லை என்றுதான் நாமே நம்மைப் பற்றிப் பெருமையாகச் சொல்லிக் கொண்டிருக்கிறோம். பணம், புகழ் இவை இரண்டையும் பெறுவதற்கு சக மனிதர்களையே பலிகடாவாக்கும் உன்னத செயலில் ஈடுபட்டிருக்கும் நமக்கு ஒன்றுமறியாத அப்பாவி விலங்குகள் மீது மட்டும் இரக்கம் வருமா என்ன..?
சில தினங்களுக்கு முன்பாக நண்பர் ஒருவரின் வீட்டிற்கு விருந்துக்கு சென்றிருந்தபோது நேஷனல் ஜியாக்ரபிக் சேனலை பார்க்க வேண்டிய கட்டாயம் வந்தது.
பச்சைப் பசேல் என்ற புல்வெளி எங்கும் பரந்து விரிந்திருக்க ஒரு தினுசாக இருந்த சில வேட்டை நாய்கள், தங்களது வழக்கமான ஸ்டைலில் பாய்ந்தோடி வந்துகொண்டிருந்தன.
தூரத்தில் ஒரு மாடு தன் பசியைப் போக்க புல்லைத் தின்று கொண்டிருந்தது. இன்றைக்கு இதுதான் இரை என்பதை வேட்டை நாய்களும், இன்றைக்கு இவர்களால்தான் உனக்கு சாவு என்று இறைவன் தீர்மானித்துவிட்டான் என்பதாலும் இரண்டும் ஒன்றையொன்று பார்த்துக் கொண்டன.
மாடு ஓடத் துவங்கியது.. நாய்களும் விரட்டத் துவங்கின. எண்ணிக்கை அதிகமாக இருந்ததினாலும், பசி என்கிற வெறியோடு இருந்ததாலும் மாட்டை மிக எளிதாக சுற்றி வளைத்து தாக்கத் தொடங்கின. மாடோ தனக்கிருந்த ஒரே ஆயுதமான கொம்பை வைத்து முட்டி மோதித் தள்ளிப் பார்த்தது.. ஆனாலும் முடியவில்லை.
எப்படியும் ஆள் சரண்டராகிவிடும் என்ற நம்பிக்கையில் முழு பலத்தையும் உபயோகிக்காமல் மாட்டை களைப்படைய வைக்க வேண்டும் என்ற குயுக்தியில் வேட்டை நாய்கள் சுற்றி, சுற்றி சும்மா விளையாட்டு காட்டிக் கொண்டிருந்தன.
இந்த நேரத்தில்தான் அதுவரையில் தூரத்தில் இருந்து படம் பிடித்துக் கொண்டிருந்த நமது கேமிராகாரர்கள் அந்த மாட்டின் மிக அருகில் சென்று தங்களது ஜீப்பை நிறுத்தினார்கள்.
மாடு என்ன நினைத்ததோ தெரியவில்லை.. விருட்டென்று ஜீப்பின் மிக அருகில் வந்து உரசியதுபோல் நின்று கொண்டது. வேட்டை நாய்கள் சற்று தள்ளிப் போய் நின்று கொண்டன. என்னதான் காடாக இருந்தாலும், அவர்களுடைய ராஜ்ஜியமாக இருந்தாலும், மனிதர்களை கண்டால் சிறிது பயம் இருக்கத்தான் செய்கிறது.
எனக்குள் ஒரு சந்தோஷம்.. ஆஹா.. மாடு தப்பிச்சிருச்சு.. பாவம்.. பொழைச்சுப் போகட்டுமே என்று.. ஜீப்பில் இருந்த கேமிராமேனும் மற்றவர்களும் அந்த மாட்டைத் தொட்டுப் பார்த்து, தடவிக் கொடுத்து தங்களது பாசத்தைக் கொட்டினார்கள்.
வேட்டை நாய்களோ சுற்றுமுற்றும் பார்த்து கண்ணுக்கெட்டிய தூரம்வரை எந்த இரையும் கண்ணுக்குத் தெரியாததால், இன்றைக்கு இதைவிட்டால் தங்களுக்கு பிரியாணி இல்லை என்பதை புரிந்து கொண்டுவிட்டன.
மெதுவாக ஜீப் நகரத் துவங்கியது.. மாடும் புரிந்து கொண்டு ஜீப்போடு ஓடத் துவங்கியது.. வேட்டை நாய்களும் பின்னாலேயே ஓடத் துவங்கின..
திடீரென்று ஜீப் மிக அசுர வேகத்தில் வேட்டை நாய்களின் பக்கமே திரும்பிப் போக மாடு யோசிக்க அவகாசமே இல்லாமல் மறுபடியும் நாய்களின் கூட்டத்தில் சிக்கிக் கொண்டது..
இப்போது எனக்கு சுத்தமாகப் புரியவில்லை. எதுக்கு இப்படி சுத்தி சுத்தி வந்து படம் எடுக்கிறானுக.. மாட்டைக் கூட்டிட்டு வேற இடத்துக்கு போயாவது தொலையலாமே என்று அப்பாவியாய் நினைத்துக் கொண்டேன்..
இப்போதும் நாய்கள் மாட்டை ரவுண்ட் கட்டி கடிக்கத் துவங்க.. மாட்டின் உடலிலிருந்து ரத்தம் சிந்தத் துவங்கியது. கேமிரா நாய்களின் ஆக்ரோஷத்தைக் காட்டியபடியே இருக்க..
திடீரென்று அந்த இடத்தை நோக்கி சீறியது ஜீப்.. நாய்கள் சிதறி ஓடத் துவங்க.. மாடு சற்று ரிலாக்ஸாகி மீண்டும் ஜீப்பின் அருகே வந்து நின்று கொண்டு மூச்சு வாங்கியது.
என்னமோ, நம்மூர் போலீஸ் கலவரத்துல செய்ற மாதிரி விரட்டுற மாதிரி விரட்டி, அடிக்கிற மாதிரி அடிக்கிற கதையால்லா இருக்குன்னு நினைச்சேன்.
அதேதான்.. மறுபடியும் ஜீப் மாட்டை விட்டுவிட்டு வேகமாக பின்புறமாகச் செல்லத் துவங்க.. மாடும் ஜீப்பின் கூடவே ஓடத் துவங்க.. ஜீப்பின் வேகத்திற்கு மாடால் ஓட முடியவில்லை. பாவம் ஏற்கெனவே கடிபட்டு அரை உயிர் போய் பரிதாபத்தில் இருந்தது. அதற்குள்ளாக பின்னால் விரட்டி வந்த நாய்களின் ஆக்ரோஷ வேகத்தில் கீழே படுத்தேவிட்டது.
ஜீப் இப்போது நின்றுவிட்டது. கேமிரா திரும்பி கூட்டத்தைக் காட்ட.. வாய் திறந்த நிலையில் அனத்தக்கூட முடியாத பாவத்துடன் மாடு படுத்திருக்க நாய்களின் கோரப் பற்கள் அதன் வயிற்றைக் கிழித்துக் கொண்டிருக்க.. கொஞ்சம், கொஞ்சமாக அந்த மாடு தன் உயிரை இழந்து கொண்டிருந்த கொடூரம் நடந்து கொண்டிருந்தது.
இப்போதுதான் புரிந்தது இப்படியொரு விரட்டி கொலை செய்யுதல் போன்ற காட்சிகளை எடுக்க வேண்டி இவர்களே அந்த மாட்டிற்கு சிறிது நேர உயிர்ப்பிச்சை கொடுத்து பின்பு தங்களது படப்பிடிப்பிற்காக அதனை பலி கொடுக்கிறார்கள் என்று..
இயல்பாக நடப்பதைப் படம் பிடித்து காட்டுவது சரிதான் என்றாலும், தங்களது சுயலாபத்துக்காக இப்படியெல்லாமா விலங்குகளை வதைப்பது?
கொடுமைடா சாமிகளா.. ஏதோ ஆறாவது அறிவுன்னு ஒண்ணு இருக்கு. அதுதான் விலங்குக்கும், மனுஷனுக்கும் இருக்குற ஒரே வித்தியாசம்னு சொன்னாங்க.. இதுல அந்த ஆறாவது அறிவு யாருக்கு இருக்குன்னு எனக்குத் தெரியல..