29-02-2008
அன்புத் தங்கை தமிழச்சிக்கு
இணையத்தளம் கட்டற்றத் தளம்தான் ஒத்துக் கொள்கிறேன்.
வலைத்தளம் என்பது நமது கருத்தை வெளிப்படுத்துவது. விரும்பினால் மற்றவர் கருத்தை எதிர்பார்ப்பது.. அல்லது மற்றவரின் கருத்துக்கு பதில் சொல்வது என்பது அவரவர் விருப்பம்தான்.
ஆனால் எல்லாவற்றிலும் ஒரு நாகரிகம் வேண்டும்..
சக வலைப்பதிவர்கள் என்பவர்கள் மனிதர்கள்தான்.
ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு சுயமரியாதை உண்டு. அவன் கைதியாகவே இருந்தாலும் சரி.. அல்லது காவல்துறைத் தலைவராக இருந்தாலும் சரி..
உங்களது வீட்டுக்குள் இருந்து கொண்டு உங்களது வீட்டு உறுப்பினர்களை அவர்கள் ஏற்றுக் கொள்ளும்பட்சத்தில் நீங்கள் என்ன வேண்டுமானாலும் திட்டலாம்.. யாரும் கேள்வி கேட்பார் இல்லை..
ஆனால் ஒரு பொதுத்தளத்தில் வந்து சக மனிதர்களை இப்படி ஏக வசனத்தில், ‘டா’ போட்டு பேசுவதும், ‘போங்கடா’ என்றும் ‘பொறம்போக்குகளா’ என்று ஏசுவதும் எந்த விதத்திலும் நாகரீகமில்லை.
தாங்கள் சொல்ல வந்த கருத்தை தவறு என்று நான் சொல்லவே இல்லை.
அது உங்களது தளம்.. உங்களது இல்லம். நீங்கள் என்ன வேண்டுமானாலும் எழுதிக் கொள்ளுஙகள். கூடாது என்று சொல்வதற்கு யாருக்கும் உரிமையில்லை.
ஆனால் சக மனிதர்களை, அதிலும் உங்களது பதிவுகளை படிக்கப் போகும் சக வலைப்பதிவர்களை எழுதும்போதும் இப்படித்தான் எழுதுவதா..?
அப்படியானால் தங்கள் மனதைப் பாதித்தச் சம்பவங்களை எழுதிய பதிவர்கள் அனைவரும் முட்டாள்களா..?
இனி எந்தப் பதிவு எழுதினாலும் தங்களைக் கேட்டுக் கொண்டு எதை எழுதலாம், எதை எழுதக்கூடாது என்று அப்ரூவல் வாங்கிக் கொண்டு எழுத வேண்டுமா?
உங்களது பேச்சைக் கேட்காவிட்டால், உங்களது கொள்கைக்கு ஒத்துவராவிட்டால், உடனே ‘போடா’.. ‘வாடா’.. ‘பொறம்போக்கு’.. என்றெல்லாம் பேசுவீர்களா..?
எந்த ஊர் நாகரிகம் இது..?
எங்களுக்கு குறைந்தபட்ச மரியாதையையாவது கொடுங்கள் தாயே..
‘சுஜாதா செத்த அன்று ரஜினியும் செத்துப் போயிருந்தால்..’ என்றெல்லாம் எழுதியிருக்கிறீர்கள். ‘நெருப்பு என்றால் வாய் வெந்துவிடுமா?’ என்று வழக்குமொழி ஒன்றைச் சொல்வார்கள். அதற்கு உதாரணப்படுத்தியதைப் போல் சொல்லியிருக்கிறீர்கள்.
இது என்ன நாகரிகம் தங்கையே..?
இதுதான் நீங்கள் கற்றுக் கொண்ட பகுத்தறிவா?
அடுத்த மனிதரையும் எப்போது சாகப் போகிறாய் என்று கேட்பதுதான் நாகரிகமோ..?
உங்களுக்குப் பிடிக்கவில்லையெனில் தங்களது கருத்துக்களை வெளியிடலாம்.. ஆனால் வீடு தேடி வந்து சட்டையைப் பிடித்து அடித்து கேட்பது போல் அநாகரிகமாக உள்ளது உங்களது இந்தப் பதிவு.
தயவு செய்து நீக்கி விடுங்கள். அல்லது பதிவை திருத்தி எழுதுங்கள்.