Archive for ஏப்ரல், 2009

கலைஞரின் ஈழ ஆதரவுப் போராட்டங்கள் உண்மையானதா….!?

ஏப்ரல் 30, 2009

30-04-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


எத்தனை எத்தனை அரசியல்வாதிகள் புதிது புதிதாக படையெடுத்து வந்தாலும், எத்தனை பேர் தங்களது வாய்ப்பேச்சுக்களையும், வீறாப்புக்களையும் காட்டி எகத்தாளமிட்டாலும் அரசியல் சதிராட்டத்தில் தன்னை மிஞ்ச ஆளில்லை என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறார் கலைஞர்.

ஏதோ தான் சொன்னால்தான்.. சொன்னவுடன்தான் மத்திய அரசு போர்க்குணத்துடன் செயல்படும்.. முடிவெடுக்கும்.. என்று அவர் தனக்குத்தானே வஞ்சப் புகழ்ச்சி பாடிக் கொள்வது அவரது வாழ்க்கையில் 11 கோடியே 11 லட்சத்து 1 ஆயிரத்து 111-வது முறை என்பது அவரது அரசியல் வாழ்க்கையை பின் தொடர்ந்து வந்தவர்களுக்கு நன்றாகவே தெரியும்.

இப்போது ஒரு நாளில் 6 மணி நேர உண்ணாவிரதத்தினால் போர் நிறுத்தம் ஏற்பட்டது என்று புளகாங்கிதமடைந்து வெற்றியோடு அவர் வீடு போய் சேர்ந்திருக்கிறார். அடுத்த 3 மணி நேரத்தில் மீண்டும் தாக்குதல் தொடுத்துள்ளது இலங்கை ராணுவம். அன்றைக்கு மட்டும் 272 பேர் பலியாகியிருக்கிறார்கள். இதில் எங்கே போர் நிறுத்தம் இருக்கிறது என்று தெரியவில்லை. அவர்தான் தமிழ் கற்றறிந்த தமிழராச்சே.. சொல்லட்டும்..!

ஐயாவின் வெற்றிச் செய்தியும், “யார் சொன்னது போர் நிறுத்தம் என்று..?” என்று ராஜபக்சே கொக்கரிக்கும் செய்தியும் ஒரே பத்திரிகையில் ஒரே பக்கத்தில்தான் வெளியாகியிருந்தது.. படித்தாரோ படிக்கவில்லையோ.. அல்லது “வனவாசத்தை” படிக்கவே இல்லை என்று உலகமகா புரூடா விட்டதுபோல் இதையும் படிக்கவில்லை என்று சொல்வாரோ தெரியவில்லை.

ஆனாலும் எனக்கு இதில் புரியாத இன்னொரு விஷயம்.. எதிர்க்கட்சிகளின் பல்வேறு வகையான போராட்டங்கள்.. பொதுமக்களின் எதிர்ப்புகள்.. மாணவர்களின் ஆர்ப்பாட்டங்கள்.. எல்லாவற்றிற்கும் மேலாக 14 வீரத் தமிழர்கள் தங்களது உயிரை தீக்கு இரையாக்கியிருக்கிற கொடுமைகள். இவை எல்லாமே நடந்தும் அசைந்து கொடுக்காத மத்திய அரசு, முதல்வருக்கு மட்டுமே இந்த அளவுக்காவது அசைந்து கொடுக்கிறது என்றால் போராடிய மக்களையும், போராட்டம் நடத்திய எதிர்க்கட்சிகளையும், தீக்குளித்த அப்பாவிகளையும் இந்த அரசுகள் என்னவென்று நினைக்கிறார்கள்.?

இறந்தவர்களெல்லாம் விலங்குகள் என்றா..? எதிர்க்கட்சியினர் அனைவரும் மனிதர்களே அல்ல.. வேற்று நாட்டவர் என்றா..? சென்ற தேர்தலில் ஓட்டுப் போட்டு இந்தியக் குடிமகன் என்ற பொறுப்பைச் செய்திருக்கும் பல்வேறு தரப்பட்ட மனிதர்களும்தான் இந்தக் கொடுமையை எதிர்த்துக் குரல் கொடுத்தபடியே வந்திருக்கிறார்களே.. அவர்களெல்லாம் யாராம்..?

தி.மு.க.வும், அதன் தலைவரும் மட்டும்தான் மனிதர்கள்.. இந்தியர்கள்.. தமிழர்கள்.. மற்றவர்களையெல்லாம் கண்டு கொள்ளவே வேண்டாம் என்று மத்திய அரசு நினைப்பது இதிலிருந்தே தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.. இதிலிருந்தே இவர்களது ஆட்சியின் லட்சணமும், மக்கள் பற்றிய அவர்களது மிருகத்தனமான நிலைப்பாடும் தெரிகிறது, புரிகிறது..

இதேபோல் அதே இடத்தில் நான் ஒரு இந்தியன்.. நான் ஒரு தமிழன் எனக்கும் உண்ணாவிரதம் இருக்க உரிமை உண்டு.. நான் இருப்பேன் என்று சொல்லி நான் மேடை போட்டு அமர்ந்தால் அரசு என்ன செய்யும்..? அனுமதிக்குமா..? ஆள்பவருக்கு ஒரு சட்டம்..! பொதுமக்களுக்கு ஒரு சட்டமா..? எந்த ஒரு போராட்டமாக இருந்தாலும் 3 நாட்களுக்கு முன்பாகவே அனுமதி பெற்றாக வேண்டும் என்று சொல்லி போராட்டக் குணங்களையும், போராட்டக்காரர்களையும் நெருக்கி வரும் இந்த அதிகார வர்க்கம், இப்போது மட்டும் வாய் மூடிவிட்டது ஏனாம்..?

“நான் சொன்னால் மட்டும்தான் அங்கே சாவு நிக்கும்.. நான் சொன்னால் மட்டும்தான் படுகொலைகள் மட்டுப்படுத்தப்படும்.. நான் சொன்னால் மட்டும்தான் உதவித் தொகைகள் வழங்கப்படும் என்று எதற்கெடுத்தாலும் நான்.. தான்.. நான்தான்.. என்னால்தான்..” என்று மண்டைக் காய்ச்சலால் கலைஞரால் நடத்தப்படும் அனைத்து நிகழ்ச்சிகளையும் பார்க்கின்றபோது இந்த மாதிரியான ஒரு தற்பெருமைக்காரரை உலகத்தில் எந்தவொரு மூலையிலும், எந்தவொரு இனத்திலும் பார்த்திருக்கவே முடியாது என்றே தோன்றுகிறது..

“ஈழத் தமிழர்களுக்காக பழ.நெடுமாறன் அனுப்பிய உதவித் தொகைகளை ஏற்க முடியாது.. அதை யாரிடம் கொண்டுபோய் கொடுப்பது..?” என்று எகத்தாளமாகச் சொன்ன கலைஞர், பின்பு தி.மு.க.வின் சார்பில் அனுப்பப்பட்ட உதவிகளை மட்டும் பக்குவமாக இலங்கை அரசிடம் கொண்டு போய்ச் சேர்த்தாரே.. இது மட்டும் எப்படியாம்..?

இந்த இரண்டு நிகழ்வுகளுக்கும் இடையில் பசி, பட்டினியால் இறந்து போனவர்களுக்கு கலைஞர்தானே பொறுப்பாளி.. அந்த நேரத்தில் பட்டினியால் இறந்து போன தமிழர்களைச் சாகடித்த பெருமையும் இவரைத்தானே போய் சேர்கிறது.. ‘தமிழர்களை பட்டினி கொண்டான்’ என்ற பட்டத்தையும் இனிமேல் இவர் தன்னுடன் பெருமையாகச் சேர்த்துக் கொள்ளலாம். 1111-வது பட்டமாக இருந்துவிட்டுப் போகட்டும்..!

தற்போது நடப்பவைகளைப் பாருங்கள்.. ஏதோ தன்னுடைய ஆட்சியில் மனித உரிமைகள் மிகவும் மதிக்கப்படுகின்றன என்றும், அம்மா ஆட்சியில் அது காணாமல் போயிருந்தது என்றும் எகத்தாளமிடும் இவர் என்ன செய்து கொண்டிருக்கிறார்..?

ஈழப் போராட்டத்திற்கான ஆதரவை யார் எந்த ரூபத்தில் நடத்தினாலும் ஆதரிப்பதை விட்டுவிட்டு அதை ஒடுக்கி, மத்திய அரசுக்கு ஒரு விசுவாசமான ஊழியனாக, இனத் துரோகியாகத் தன்னைக் காட்டிக் கொள்வதிலேயே 24 மணி நேரத்தையும் செலவழித்து வருகிறார் இந்தப் புண்ணியவான்.

ஈழத்தில் நடப்பது என்ன என்கின்ற முழக்கத்தோடு ஈழப் போரில் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் புகைப்படங்களோடு, உண்மை நிலவரத்தை வெளிப்படுத்தும் நோக்கத்தில் பல்வேறு குழுக்களால் தமிழ்நாட்டில் வெளியிடப்பட்டுள்ள பிரச்சார சிடிக்களை பறிமுதல் செய்து அதை வைத்திருந்தவர்களை, தயாரித்தவர்களை கூண்டோடு கைது செய்து சிறையில் அடைக்கிறார். இவரா ஈழத்தமிழர்களுக்கு உதவுபவர்..?

கேட்டால் “தேர்தல் கமிஷனிடம் அனுமதி பெறவில்லை” என்கிறார். என்ன முட்டாள்தனம் இது..? ஈழப் போராட்டத்திற்கும், தேர்தலுக்கும் என்னங்கய்யா சம்பந்தம் இருக்கு..?

பாரதிராஜா நடத்திய போராட்டத்திலேயே இந்த சிடிக்கள் விநியோகம் செய்யப்பட்டன. அதை வாங்குவதற்காக மக்கள் முண்டியடித்து ஓடத் துவங்க.. மேடையில் பேசிக் கொண்டிருந்த தமிழருவி மணியன் தனது பேச்சை நிறுத்த வேண்டிய கட்டாயம் வந்தது. அப்போது மைக்கிற்கு முன்னால் ஓடி வந்த பாரதிராஜா, “சிடியை நிகழ்ச்சி முடிந்த பின்பு கொடுங்கள்” என்று கேட்டுக் கொண்ட பின்பும், சிடிக்கள் ரகசியமாக வரிசைக்கிரமமாக பாஸ் செய்யப்பட்டது. அவ்வளவு ஆர்வத்துடன் இருந்தனர் ஈழத்து ஆர்வலர்கள்.

அந்த சிடிக்களில் அப்படியொன்றும் எந்தவிதமான ஆட்சேபணையான கருத்துக்களும், இந்திய இறையாண்மைக்கு எதிரான கருத்துக்களும் இல்லவே இல்லை. என்னிடம் கிடைத்த சிடியை போட்டுப் பார்த்ததில் அதில் முழுக்க முழுக்க ஈழப் போரில் பாதிக்கப்பட்டு, சிதைந்து போன தமிழ் மக்களின் புகைப்படங்களும், இந்தப் போருக்கு பின்புலமாக, பக்கபலமாக, ஆயுதங்களயும், பண உதவியையும், ஆள் உதவியையும் வழங்கி வருவது இந்திய அரசுதான் என்கிற தகவலும், புகைப்படங்களும் மட்டுமே இருக்கின்றன.

இதைத்தானே வீதி, வீதியாக ஈழப் போராட்டத்துக்கு ஆதரவான தலைவர்கள் சொல்லி வருகிறார்கள். இதில் என்ன தவறு இருக்கிறது..? மேடை போட்டுச் சொல்லலாம்.. பேசலாம்… கத்தலாம். ஆனால் அதையே சிடிக்களாகத் தரக்கூடாது என்றால் இதற்கு என்ன அர்த்தம் என்று புரியவில்லை. எதற்காக இந்தக் கைதுகள்..? சித்ரவதைகள்.. பறிமுதல்கள்.?

கலைஞர் உண்மையான உணர்வோடு இருந்திருந்தால் இந்த சிடிக்களை அவரே வெளியிட்டிருக்க வேண்டு்ம்.. அதுதான் முறையானது..

எம்.ஜி.ஆர். அமெரிக்காவில் மருத்துவமனையில் இருந்தபோது “அவர் கிட்டத்தட்ட செத்துவிட்டார்..” என்றும், “உயிரோடு வந்தாலும் இனிமேல் அவரால் பேச முடியாது.. எழுத முடியாது.. நடக்க முடியாது.. முடமாகிவிட்டார்.. இதோ பாருங்கள் ஆதாரங்கள்..” என்று முரசொலியில் புகைப்படங்களை வெளியிட்டு அதனை நோட்டீஸாகவும் அச்சடித்து வெளியிட்டார்களே.. இது எந்த வகையான ஜனநாயகமாம்..? இதற்கு ஐயா யாரிடம் அனுமதி வாங்கினாராம்..?

வி.பி.சிங் பிரதமர் ஆன தேர்தலின்போது தெருத்தெருவாக போபர்ஸ் ஊழல் வழக்குகள் பற்றி புத்தகங்களையும், நோட்டீஸ்களையும் வெளியிட்டார்களே.. அப்போது எந்த உரிமையில், எந்த சட்டத்தின்கீழ் இதை செய்தார் கலைஞர்.. அவருக்கு ஒரு நியாயம்.. மற்றவர்களுக்கு ஒரு நியாயமா..?

ஜெயலலிதாவின் கொடூரமான முதல் ஐந்தாண்டு கால ஆட்சிக்குப் பின் வந்த தேர்தலின்போது அம்மாவும், உடன்பிறவா சகோதரியும் நகை, நட்டுக்களுடன் போஸ் கொடுத்த காட்சியை தேடியெடுத்து ஊர், ஊராக நோட்டீஸ் அடித்து ஒட்டினார்களே தி.மு.க.காரர்கள்.. இதற்கு யாரிடமாவது அனுமதி வாங்கினாரா கலைஞர்..?

சென்ற தேர்தலின்போது தனது ஆட்சிக் காலத்தில் செய்த சாதனைகள் என்று சொல்லி புத்தகங்களையும், சிடிக்களையும் தொகுதி, தொகுதியாக தி.மு.க.வினர் வெளியிட்டார்களே.. அப்போது எங்கே போனது இவரது சட்டம்..? அப்போது மட்டும் தேர்தல் கமிஷன் அனுமதி வாங்கிவிட்டுத்தான் அதனை செய்தாரா அவர்..?

மக்கள் பணத்திலேயே கூட்டுக் கொள்ளையடித்துவிட்டு அதனையே சாதனையாக்கி வெளியிடுதைவிட, ஈழத்தில் அல்லல்படும் அப்பாவி மக்களின் துயரங்களை பட்டியலிடுவதும், இதனை உலக மக்களின் பார்வைக்குக் கொண்டு போவதும் பாவமான செயல் என்று கருதுகிறாரா இந்த உத்தமத் தலைவர்..?

ஜெயலலிதாவை தாக்கி பேசினார்கள் என்ற காரணத்திற்காக விடுதலைவிரும்பி மற்றும் வெற்றி கொண்டானை கைது செய்து சிறையில் வைத்தபோது, பொங்கியெழுந்து தி.மு.க. தொண்டர்களுக்கு கடிதமெழுதி அவர்களை போராட வைத்து.. அவர்களது மண்டைகளை உடைக்க வைத்து.. அவர்களது ரத்தங்களை சிதற வைத்து.. அவர்களை சிறையில் தள்ள வைத்து.. அவர்களது குடும்பத்தினரை பதற வைத்து.. கடைசியில் அவர்கள் இருவரும் வெளியில் வந்தவுடன் எல்லாம் என்னுடைய போராட்டத்தினால்தான் என்று மார்தட்டிக் கொண்டாரே.. அப்போது மட்டும் அரசுக்கு எதிரான எதிர்ப்பை போராட்டமாகக் காட்டினால் அது தவறாக படவில்லையா இவருக்கு..?

இவருடைய ஆதரவு ஆட்கள்தான் தமிழர்கள்.. மற்றவர்களெல்லாம் மயிருகளா..?

இப்போது என்ன செய்கிறார் இந்த தமிழர் தலைவர்..? முறையான அனுமதியோடு நாகரிகமான பேச்சுக்களோடு, ஆழமான, உண்மையான கருத்துக்கள் அடங்கிய நோட்டீஸ்களோடு காங்கிரஸ் கட்சிக்கு எதிரான எதிர்ப்புக்களை தொகுதி மக்களிடத்தில் கொண்டு சென்ற தனி அமைப்புகளைச் சேர்ந்த தமிழர்களை.. பொறியியல் படிப்பு படித்த அந்த தமிழ் இளைஞர்களை.. கைது செய்து சிறையில் தள்ளியிருக்கிறாரே.. இதுவா ஜனநாயகம்..?

தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் தலைமையில் இனி ஒரு கூட்டம் காங்கிரஸுக்கு எதிராக களமிறங்கப் போவதையறிந்து அவர்களை வரவிடாமல் செய்வதற்காகவும், பயமுறுத்துவதற்காகவும் தமிழ்நாட்டின் பல இடங்களிலும் கைதுகள் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன. இதுவான ஜனநாயகம்..?

ஜனநாயகம் என்ற பெயரில் இந்த தலைவர் நடத்துகின்ற சர்வாதிகாரம்தான் இது.. கேட்டால் நான்தான் உலகத் தமிழர்களின் ஒப்பு விருப்பற்ற ஒரே தலைவன் என்கிறார். நான் சொல்வதுதான் தமிழர்களின் வேதவாக்கு என்கிறார்.

என்ன நடிப்புய்யா நடிக்கிறாரு மனுஷர்..? கவிதை எழுதும்போது ஒரு நடிப்பு.. பேசும்போது ஒரு நடிப்பு.. உறங்கும்போது ஒரு நடிப்பு. இப்போது உண்ணாவிரத்திலும் ஒரு நடிப்பு என்று சகலத்திலும் கை வைத்து நடிகர்களுக்கு வேலையில்லாமல் செய்துவிட்டார் இந்த மகா நடிகர்.

இந்த செட்டப் உண்ணாவிரத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு புன்னகையுடன் வீடு திரும்பியிருக்கிறார் கலைஞர்.

கிட்டத்தட்ட அத்தனை தமிழர்களையும் ஒரு சேர பிடித்து முகாம்களில் அடைத்தாகிவிட்டது, என்கிற திருப்தியில் இருக்கிறார் நவீன கால ஹிட்லர் ராஜபக்சே.

எப்படியோ தனது தாலிக்கயிறு பறி போனதுக்கு முக்கால்வாசி பழிக்குப் பழி வாங்கிவிட்டு கூடவே, எல்லாரையும் திருப்திப்படுத்தி பிரச்சினையை முடிச்சாச்சு என்ற அகோர திருப்தியில் இருக்கிறார் அன்னை சோனியா..

இவர்களுடைய வெட்கங்கெட்ட அரசியலுக்கு நடுவில் உற்றார், உறவினரை இழந்து, தாய், தகப்பனை இழந்து, குடும்பத்தினரை இழந்து, தாய் மண்ணை இழந்து தினந்தோறும் நூறு தமிழராவது செத்துக் கொண்டேயிருப்பார்கள்.. இதுதான் தமிழனின் சாபம்..!

போங்கடா நீங்களும் உங்க கேடுகெட்ட அரசியலும்..!