Archive for ஒக்ரோபர், 2009

இட்லி-தோசை-பொங்கல்-வடை-சட்னி-சாம்பார்-30-10-2009

ஒக்ரோபர் 29, 2009

30-10-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

கேசரி

இந்த ‘டிஸைன்’ நல்லாயிருக்குல்ல.. சத்தியமா ‘டிஸைனை’த்தான் சொன்னேன்.. யாருன்னு யோசிச்சு வையுங்க..!!!

இட்லி

ஸ்பெக்டரம் ஊழல் தொடர்பாக தொலைத்தொடர்புத் துறையின் தலைமை அலுவலகத்தில் சிபிஐ அடித்த அதிரடி சோதனை ஒரு எச்சரிக்கை மணிதானாம். பொழுது விடிந்து பொழுது போனால் தமிழகத்தின் உறவுகள் ஆளுக்கொருவராக ‘சிபாரிசு’ என்று சொல்லி உயிரை வாங்குவதாகத் தனது புரட்சித் தலைவி அம்மாவிடம் சொல்லிப் புலம்பியிருக்கிறாராம் கழகத்தின் அடக்கமான ஒரே தொண்டரான மன்னமோகனசிங் அவர்கள்.

தன்னை எதிர்த்து கட்சியைவிட்டு விலகிப் போன சரத்பவாரே டெல்லியில் கொடுத்த வீட்டை எதிர்ப்பேச்சில்லாமால் வாங்கிக்கொண்டு போகும்போது கேவலம் செகரட்டரியை மாற்றியே தீர வேண்டும். இல்லாவிடில் வேலைக்கு வர மாட்டேன் என்று ஒரு தமிழகத்து கேபினட் மந்திரியே ஸ்கூல் பையன் மாதிரி அடம்பிடித்ததும் டெல்லியை கொஞ்சம் கோவப்படுத்திவிட்டதாம்..

இதற்கு முன்னதாக இந்தக் களேபரத்துக்கு பிள்ளையார் சுழி போட்ட ஜெய்ராம்ரமேஷை குறி வைத்து அவரைக் கண்டித்து மதுரையில் பொதுக்கூட்டம் நடத்தப் போவதாக அறிவித்ததும் டெல்லியை உசுப்பிவிட்டதாம். பாவம் ரமேஷ்.. அவர் என்ன செய்வார்..?

எப்போதும் கேரளாவில் ஒரு முறை கம்யூனிஸ்ட்டுகள் என்றால் அடுத்த முறை காங்கிரஸ்தான் ஆட்சிக்கு வரும். இது தொடர்ந்து நடந்து வருவதுதான். இதன்படி அடுத்து கேரளாவில் ஆட்சிக்கு வர காங்கிரஸ் தயாராக இருக்கும் நிலையில் ஆளுகின்ற கம்யூனிஸ்ட் ஒரு நப்பாசையாக அடுத்த முறையும் ஆட்சிக்கு வரத் துடிக்கிறது. அதனால்தான் நம்மூர் கழகங்களின் அடிச்சுவடைத் தொட்டு முல்லை பெரியாறு பிரச்சினையைத் தோள் கொடுத்துத் தூக்கியிருக்கிறது.

இப்போது இந்தப் பிரச்சினைக்கு நாம் தோள் தூக்காவிட்டால் அடுத்த தேர்தலில் நம்மைத் தூக்க ஆள் இருக்காது என்பதை கேரளத்து காங்கிரஸ்காரர்கள் வேப்பிலை அடிக்காத குறையாக டெல்லிக்கு காவடி எடுத்து புலம்பியதன் பலன்தான் ஜெய்ராம்ரமேஷின் அந்த ஒப்புதல் உத்தரவு.

இது தமிழகத் தலைமைக்கும் நன்கு தெரியும். ஆனாலும் அதை தெரியும் என்று வெளிப்படையாகச் சொல்ல முடியுமா? மாமியாருக்கு இடுப்புல அடி என்றாலும் அடிபட்டுச்சா அத்தை என்று அக்கறையாக விசாரிப்பதுதான் மருமகளின் கடமை. அதைத்தான் தமிழக அரசு இப்போது செய்திருக்கிறது. டெல்லியையும் கூல் செய்ததுபோல் கடைசி நேரத்தில் கோர்ட்டில் உங்களது தரப்பைத்தான் நாங்களும் சொல்லப் போகிறோம் என்று மத்திய அரசு வக்கீல் கொடுத்த உறுதிமொழியை நம்பி கண்டனப் பொதுக்கூட்டத்தை ரத்து செய்திருக்கிறது.

உண்மையான காரணம் அதுவல்ல என்பது இப்போது தெரிகிறது. இப்படி ஆளாளுக்கு பச்சைப் புள்ளை மாதிரி அழுதா ஆத்தா என்ன செய்வா? கைல கிடைக்கிறதை தூக்கி நாலு சாத்து சாத்த மாட்டா..? அதான் சோனியா ஆத்தா செஞ்சிருக்காங்க.. ஒரே கல்லுல நாலு மாங்கா.. சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்த ஆண்டியாட்டம் ஸ்பெக்டரத்தை கிளப்பிவிட்டாச்சு. இனி பதில் சொல்லி மாள வேண்டியது ஆ.ராசாவும், தி.மு.க.வும்தான். ‘மவனுகளா ஏதாவது ஆய்.. போய்.. ஊய்..ன்னீங்க.. அவ்ளோதான்.. ஸ்பெக்ட்ரம் ஊழல் அம்பலத்துக்கு வந்திரும். அடக்கமா எங்களுக்கு ஒத்து ஊதுங்க’ என்கிற எச்சரிக்கைதான் இந்த சிபிஐ ரெய்டும், கொஞ்சூண்டு பரபரப்பும்.

தோசை

கோடம்பாக்கத்தில் மூலைக்கு மூலை இப்போதே நாலைஞ்சு பேர் கோட்டைச் சுவத்துல சாய்ஞ்சு நின்னுக்கிட்டு பெட் கட்டுறானுக..


‘கோவா’ படம் ‘ஹேங்க் ஓவரோட’ காப்பிதான்னுட்டு.. இப்படிச் சொல்றவனுக ‘ஹேங்க்ஓவரை’ பார்த்திருப்பானுகளான்றதே சந்தேகம். ஆனா சினிமாக்காரங்கள்லாம் இப்படித்தான். ஒரு மேட்டர் கிடைச்சா போதும்.. வாய்ல ரத்தம் வர்ற அளவுக்கு பேசிட்டுத்தான் ஓய்வாங்க..

அவங்களுக்குத் தெரியாமயே இன்னொரு படமும் பரபரப்பா அடுத்த வாரம் வருது. ‘அதே நேரம் அதே இடம்’ அப்படீன்ற படம். இது ஒரு கொரியன் படத்தோட ரீமேக்தானாம்.. ‘My Sassi Girl’ என்கிற கொரிய படத்தின் ரெண்டு வரி ஸ்டோரியை வைச்சுத்தான் இந்தப் படம் அப்படீன்றாங்க..

ஆனா பாருங்க.. இந்தப் படத்தோட கதையை வைச்சு மூணு டைரக்டர்களுக்கு மூணு ஸ்கிரிப்ட்டை நானே என் கையால டைப் பண்ணிக் கொடுத்திருக்கேன். மூச்சு விடுவேனா நானு..? இப்பல்லாம் நான் ரொம்ப நல்லவனா திருந்திட்டேன் சாமிகளா.. எனக்கு காசுதான் முக்கியம்.. வாங்கிக் கல்லால போட்டுட்டு வாய்க்கு பூட்டு போட்டுக்கிட்டேன்..

பொங்கல்

இந்த மாசத்து ‘காலச்சுவடு’ புத்தகத்தை லேட்டா இப்பத்தான் படிச்சேன். அதுல ஆஷ்துரை பத்தின கட்டுரை ரொம்ப நல்லா இருக்குது.. ஆ.இரா.வெங்கடாசலபதி எழுதியிருக்கிறார். அவருடைய கடின உழைப்புக்கும், எழுத்திற்கும் தலைவணங்குகிறேன். ஆஷ் துரை கொலை செய்யப்பட்டது, விசாரணை, அவருடைய கடிதங்கள், குடும்பத்தினர், என்று 180 டிகிரி கோணத்துல எழுதியிருக்காரு.. படிக்கப் படிக்க ரொம்ப ஆர்வமா இருந்தது. ‘காலச்சுவடு’ படிக்கும் பழக்கம் இல்லாதவர்கள் இந்த ஒரு விஷயத்துக்காகவே வாங்கிப் படிங்க.. கொஞ்சம் பொது அறிவை வளர்த்துக்குங்கப்பா..

வடை

பத்திரிகையாளர்களுக்கு எதிராகத் திரையுலகினர் பொங்கியெழுந்த கூட்டத்தில் நடிகை ரோகிணி பேசியதை கேட்டேன். அதுல ஒரு விஷயம் சொல்லிருக்காங்க.. ரொம்ப நல்லாயிருக்கு.


“ரகுவரன் இறந்தன்னைக்கு என் பையனை ஸ்கூல்ல இருந்து கூட்டிட்டு வர்றேன்.. ஒரு அரைமணி நேரத்துக்கு என்னையும், என் பையனையும் ரகு உடலோட கொஞ்சம் தனியா விடுங்க.. எங்களுக்கு பிரைவஸி தேவைப்படுது”ன்னு பத்திரிகையாளர்கள்கிட்ட முன்கூட்டியே பேசியிருக்காரு. ஆனா பத்திரிகைக்காரங்க மாட்டேன்னுட்டாங்களாம்..

வேற வழியில்லாம அவரோட பையன் ஸ்கூல்ல இருந்து ஒண்ணுமே தெரியாம வீட்டுக்குள்ள வந்து சவப்பெட்டிக்குள்ள இருந்த அப்பாவை பார்த்ததும் திடீர்ன்னு ஏதோ ஒரு பயம் வந்து அழுததை கச்சிதமா படம் புடிச்சு நினைச்சதை சாதிச்சுக்கிட்டாங்க பத்திரிகைக்காங்க.. பையனுக்கு அந்த நேரத்துல ஏதாவது ஆகிருமோன்னு ரோகிணி பயந்தாங்களாம். அதுனாலதான் பத்திரிகையாளர்கள்கிட்ட அப்படி கேட்டுக்கிட்டாங்களாம். நம்மாளுகளா விடுறவங்க..?


அன்னிலேர்ந்து வைராக்கியமா ஒரு முடிவுல இருக்காங்களாம் ரோகிணி.. இனிமே ஒரு பத்திரிகைக்கும் பேட்டி கொடுக்கிறதில்லைன்னு.. இன்னிவரைக்கும் அதை பாலோ பண்ணி வந்திட்டிருக்காங்களாம்..

குட்.. வெரிகுட்.. வெரிவெரிகுட்.. இது மாதிரி எல்லாரும் செய்ய ஆரம்பிச்சா நல்லத்தான் இருக்கும்..

இது தொடர்பான இன்னுமொரு விஷயம் பின்னாடி வருது..

சட்னி

ICAF அமைப்பு வருஷா வருஷம் நடத்துற உலகத் திரைப்பட விழா இந்த வருஷமும் சென்னைல நடக்கப் போகுது.. டிசம்பர் 16ம் தேதியிலிருந்து 24-ம் தேதிவரையிலும் 9 நாட்கள் நடக்கப் போகுது.. கிட்டத்தட்ட 110 படங்களுக்கும் மேல காட்டப் போறாங்க.

இந்த வருஷம் புதுசா சிறந்த தமிழ்ப் படங்களுக்கு விருது கொடுக்கப் போறதா சொல்லி நம்ம வயித்துல அடிச்சிருக்காங்க.. எப்படீன்னா குத்துமதிப்பா முப்பது தமிழ்ப் படங்கள் போட்டிக்கு வருதுன்னு வைங்க.. அந்த 110-ல இந்த 30 கழிச்சு மிச்சம்தான் மத்த வெளிநாட்டுப் படங்கள்.. நமக்கு படம் குறையுதுல்ல சாமி..

எஸ்.வி.சேகர் என்கிற ஒரு எம்.எல்.ஏ.வை இழுப்பதற்கு சென்ற ஆண்டு அரசு செலவிட்ட தொகை 25 லட்சம் ரூபாய்.. என்ன புரியலையா..? ICAF அமைப்பின் துணைத் தலைவர் நடிகர் எஸ்.வி.சேகர்தான். போன வருஷம் தமிழக அரசிடமிருந்து 25 லட்சம் ரூபாயை மானியமாக பெற்றுக் கொடுத்தார் சேகர். இது விஷயமாக முதல்வரை சந்திக்கப் போய் அப்படியே உடன்பிறப்பாகவும் மாறிப் போய்விட்டார் சேகர். இது நடந்த கதை..

சேகரின் கட்சி தாவலுக்கு அஸ்திவாரம் போட்டதும் 2007-ம் ஆண்டு நடந்த உலகத் திரைப்பட விழாதான். அன்றைய துவக்க விழாவில் அப்போதைய மத்திய அமைச்சர் தயாநிதி மாறனோடு சேகரும் விழாவில் கலந்து கொண்டதுதான் போயஸ் தோட்டம் அவரோடு நடத்திய கபடி, கபடி விளையாட்டின் துவக்கம்.

சரி விடுங்க.. போன தடவை நம்ம பணம் 25 லட்சத்தை வாங்கிட்டும் பார்வையாளர்களிடம் 500 ரூபாயை வசூலிச்சாங்க… இந்த முறை 50 லட்சம் ரூபாய் மானியமாக கேட்டிருக்கிறார்களாம்.. முதல்வர் கொடுத்துவிட்டால் பார்வையாளர்களுக்கு கட்டணத்தைக் குறைப்பார்களா..? ம்ஹூம்.. சத்தியமா நடக்காது.. அப்புறம் எதுக்குங்க மக்களுடைய பணத்தை எடுத்து தனியார் அமைப்புக்குக் கொடுக்கணும்? அதுக்கு பதிலா தமிழக அரசே கேரள அரசு செய்வதைப் போல் தனியாக விழா நடத்திவிடலாமே..?

சாம்பார்

இந்த போட்டால இருக்கிறவரை நல்லா உத்துப் பாருங்க..


யாருன்னு கண்டுபிடிச்சிட்டீங்கன்னா நீங்க கொஞ்சம் வயசானவரு.. புத்திசாலின்னு ஒத்துக்குறேன்..

கொத்தமல்லி சட்னி

மீண்டும் சினிமாவுக்கே வருவோம்.. இந்த வருஷம் தெலுங்கு மணவாடுகள் ராஜ்ஜியத்துல சூப்பர்டூப்பர்ஹிட் ‘மகாதீரா’தான்.. கிட்டத்தட்ட 60 கோடி வசூல் என்கிறார்கள். சிரஞ்சீவியின் மகனுக்கு அப்படியொரு மார்க்கெட்டை ஏத்திவிட்டிருக்கு இந்தப் படம்.. ஆனால் இந்தப் படத்துக்கு பின்னால ஒரு சோகம் இருக்குன்றது இப்பத்தான் தெரிய வந்திருக்கு.


தமிழகத்தைச் சேர்ந்த ஒரு கதாசிரியர் இரண்டாண்டுகளுக்கு முன்பாக சிரஞ்சீவியின் மைத்துனர் அல்லு அரவிந்தை சந்தித்து இந்தக் கதையை கையெழுத்துப் பிரதியாகவும், திரைக்கதையை ஒரு டேப்பில் பதிவு செய்தும் கொடுத்துவிட்டு வந்திருக்கிறார். இப்போது அவர் சொன்ன கதையில் சாமியார்களின் பெயர்களையும், ஊர்களையும் மட்டும் மாற்றிவிட்டு அப்படியே எடுத்திருக்கிறார்கள். விழி பிதுங்கிப் போய் நிற்கிறார் கதாசிரியர். பாவம்.. கஷ்டப்படுபவர். இதுவரையில் சினிமாவில் அடையாளம் இல்லாமல் இருப்பவர். இப்படியா செய்வார்கள்..?

விஷயம் இப்போது ‘பெப்ஸி’யிடம் போயிருக்கிறது.. பார்ப்போம்.. ஏதோ ஒன்று நடந்தாக வேண்டும். ஏன்னா தயாரிப்பாளர் தாணு ஒன்றரை கோடி கொடுத்து ரீமேக் உரிமையை வாங்கி வைத்திருக்கிறார். அவருக்கும் இந்த விவகாரம் சிக்கலை உருவாக்கும் என்கிறார்கள்.

மிளகாய் சட்னி

தாணு ஸார் சிக்கலை தானாவே உருவாக்கிக்குவார் போல.. தாணு எவ்ளோ பெரிய தயாரிப்பாளர்? அவரே இப்படி செய்யலாமா என்று குமுறுகிறார்கள் நடிகர், நடிகைகள் வட்டாரத்தில்..


‘தினமலமும்’ ஸாரி ‘தினமலரும்’, சினிமாக்காரங்களும் ஒருவருக்கொருவர் ‘டூ’ விட்டுக் கொண்டபின்பு வந்த வெள்ளிக்கிழமையன்று ‘தினமலர்’ ரோஷப்பட்டு ‘வெள்ளித்திரை’யை வெளியிடவில்லை.

தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு பலரும் போன் போட்டு குடைய ஆரம்பித்தார்கள். எல்லாம் சின்ன பட்ஜெட் படத் தயாரிப்பாளர்கள்தான். அவர்களுக்கு பத்திரிகை விளம்பரத்தை வைத்துத்தான் மார்க்கெட்டிங்கே செய்ய முடியும். இப்படி முடக்கிப் போட்டால் அவர்களது படத்திற்கு ஓசி விளம்பரம் யார் கொடுப்பது..?

‘பூனைக்கு யார் மணி கட்டுவது?’ என்று தயாரிப்பாளர்கள் சங்கத்தில் யோசித்துக் கொண்டிருக்க தாணுவோ ஒரு படி மேலே போய் பூனையைத் தூக்கி மடியிலேயே வைத்துக் கொண்டார்.

‘தினமலர்’ பத்திரிகைக்கு ‘கந்தசாமி’யின் மெகா ஹிட் பற்றி இரண்டு பக்கங்களுக்கு ஒரு பேட்டியை கொடுத்து அசத்திவிட்டார். இது சென்ற வார ஞாயிறு ‘வாரமலரில்’ பிரசுரம் ஆகியிருக்கிறது..


“இப்படி கலையுலகத்துக்குள்ள ஒற்றுமை இல்லாம இருக்கிறதாலதான் போறவன், வர்றவன் எல்லாம் நம்மளை காறித் துப்புறான்..” என்று நடிகர் சங்கத்தில் கோபக் குரல் எழும்பியுள்ளது..

இது ஒரு புறமிருக்க இன்னொரு பக்கம் “மக்களோட விஷயங்கள்ல நாம நேரிடையா கலந்துக்கிட்டு போராடணும்..” என்ற சத்யராஜின் ஆவேசப் பேச்சைக் கேட்டு மூன்றாம் தரப்பினர் மகிழ்ச்சியடைந்தார்கள். குசும்பு புடிச்ச பத்திரிகையாளர்கள் சிலரின் உள்ளடி வேலையில் சத்யராஜ் வசமாக மாட்டத் தெரிந்து கடைசி நிமிடத்தில் தப்பித்தாராம்..

சைதாப்பேட்டையில் ஒரு பள்ளி அருகே டாஸ்மாக் கடை இருப்பதால் அதனை அகற்ற வேண்டும் என்று கோரி அந்தப் பகுதி மக்கள் போராட்டத்தில் குதித்திருக்கிறார்கள். அவர்களில் ஒரு சிலரை சத்யராஜின் வீட்டுப் பக்கம் அனுப்பி வைத்து “எங்க போராட்டத்துக்கு துணைக்கு வாங்க..” என்று கேட்க வைத்துள்ளார்கள் குசும்பான பிரஸ்காரர்கள் சிலர். மிளகாப் பொடியை தானே எடுத்துக் கண்ணுல கொட்டிக்க அவருக்கென்ன கோட்டியா புடிச்சிருக்கு..? ‘அது..’ ‘இது..’ என்று சொல்லி தப்பிப்பதற்குள் மனிதருக்கு வேர்த்து விறுவிறுத்துவிட்டதாம்.

அந்த மீட்டிங்கிற்கு கொங்கு பெல்ட்டின் மருமகளும், தமிழகத்தின் ஒரே தைரியமான பெண்ணுமான குஷ்பக்கா ஏன் வரவில்லை என்று அனைவரும் கேள்விமேல் கேள்வி கேட்டு குடைந்து கொண்டிருக்க.. அக்காவோ ரொம்ப கூலாக, “இதையெல்லாம் கண்டுக்காமத்தான் போகணும்.. ஏன்னா எல்லா பத்திரிகைகளும் இப்படி எழுதறதில்லை. ஒருத்தர் ரெண்டு பேர்தான எழுதுறாங்க. அப்புறம் எதுக்கு எல்லாரையும் திட்டணும்..?” என்று திருவாய் மொழிந்திருக்கிறார். அக்காவோட ரூட்டு எப்பவும் தனிதான்..

பனியாரம்

கொஞ்சம் பிளைட் ஏறி போவோமா..? உலகப் புகழ் பெற்ற மூக்கழகி ஏஞ்செலீனா ஜூலியைப் பற்றி ஒரு பகீர் மேட்டர் இன்னிக்கு ரிலீஸாயிருக்கு.


அதாகப்பட்டது என்னவெனில் அம்மணி அவரோட 16 வயசுல ஒரு ஆணோட உறவு வைச்சுக்கிட்டாராம். இது என்ன பெரிய விஷயமா அப்படீங்குறீங்களா..? அதுவல்ல விஷயம். அந்த ஆண், ஜூலியின் அம்மா மார்செலின் பெர்ட்ராண்ட்டின் அப்போதைய காதலராம்.. அந்த சமயத்துல ஜூலியோட அம்மாவும், அவரோட காதலரும் சேர்ந்து வாழ்ந்துக்கிட்டிருந்தாங்களாம். இது எப்படி இருக்கு..?

இந்த விஷயம் அப்போதே ஜூலியின் அம்மாவுக்குத் தெரிஞ்சு மகளோட ‘கா’ விட்டுட்டாங்களாம். கூடவே அந்தக் காமாந்தக் காதலனையும் கழட்டிவிட்டுட்டாங்களாம்.. ஆண்ட்ரூ மார்ட்டன் அப்படீன்றவரு ஜூலியின் வாழ்க்கை வரலாற்றை புத்தகமா எழுதியிருக்காராம். அதுலதான் இந்த மேட்டரும் வந்திருக்கு அப்படீன்றாங்க..

ம்.. இதெல்லாம் தனி மனித சுதந்திரம்ங்க.. எவனுக்கு கேள்வி கேட்க ரைட் இருக்கு.? என்ன நான் சொல்றது..?

துவையல்

பதிவின் துவக்கத்தில் இருக்கும் அந்தப் போட்டால இருக்கிறது யாருன்னு தெரியலையா..?

|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|

இவுங்கதான்..


சாப்பிட்டாச்சா? வயிறு நிறைஞ்சிருச்சா..?

சரி.. அடுத்த டிபன்ல சந்திக்கலாம்..!

குட்பை அண்ட் குட்நைட்..!!!