Archive for the ‘1977 திரைப்படம்’ Category

1977-திரை விமர்சனம்

மார்ச் 7, 2009

07-03-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..

எத்தனை நாளாச்சு இது மாதிரி ஒரு சினிமா பார்த்து..?

அடுத்தடுத்த காட்சிகளையும், வசனங்களையும் நாமளே சொல்ற மாதிரி, எந்தப் படமும் சமீபமா வரலையேன்னு நினைச்சுக்கிட்டே இருந்தேன்.. வந்திருச்சு..

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் அண்ணன் சரத்குமார், எம்.ஜி.ஆரின் புகழ் பெற்ற ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தினைப் போல் ஒரு ஜேம்ஸ்பாண்ட் படத்தினை உருவாக்க நினைத்திருக்கிறார். முயற்சித்திருக்கிறார்.

தமிழ்நாட்டில் ஏதோ ஒரு கடற்கரையோரத்தில் வசிக்கும் மீனவக் குடும்பங்களுக்கு காவலனாக இருக்கும் ராசையா என்ற முதியவருக்கு, வெற்றிவேல் என்ற பொறுப்பான பையன். விஞ்ஞானியாகி ஜனாதிபதியிடம் பதக்கம் வாங்கும் அளவுக்கு புத்திசாலி.

திடீரென்று ஒரு நாள் பேப்பரில் வந்த ஒரு செய்தியைப் பார்த்துவிட்டு ராசையா எங்கோ கிளம்ப முற்பட்டு, அந்த இடத்திலேயே மரணித்துப் போகிறார். கொள்ளி வைக்க வந்த மகன் வெற்றிவேலிடம் அந்த பேப்பர் சிக்குகிறது. ஆராய்கிறான். அப்பாவின் பீரோவைக் குடாய்ந்தால் மலேஷிய சம்பந்தப்பட்ட செய்திகள் கிடைக்கின்றன.

மலேஷியா பறக்கிறான். அங்கே போன பின்புதான் தெரிகிறது அவனது அப்பா மலேஷியாவில் ஒரு தேடப்படும் தூக்குத் தண்டனைக் குற்றவாளி என்று.. தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் சிறையில் இருந்து தப்பித்து ஓடியதால், அவரது தலைக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு என்றும் அறிவித்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் தமிழ்ச் சினிமாவின் 1001-வது முறையாக கதாநாயகனும், கதாநாயகியும் மோதிக் கொண்டும், உருண்டு, புரண்டும், முத்தம் கொடுத்தும் ஒரு சந்திப்பு ஏற்பட.. அது காதலாகிறது.

பொறுப்பாக டூயட்டெல்லாம் பாடிக் கொண்டே தனது அப்பாவின் கதையைத் தேடுகிறான் மகன். அப்போது அந்த வழக்கை விசாரித்த அரசு வக்கீலின் மகளிடம் வழக்கு பற்றி விசாரிக்க வருகிறார். முதலில் கோபப்படும் அந்த பெண் வக்கீல் பின்பு ஹீரோவை தமிழ்ச் சினிமாவின் பார்முலாப்படி ஒரு தலையாய் காதலிக்க.. ஒரு டூயட்டுக்கு வழி கிடைக்கிறது..

இப்போது இந்த மூவரும் சேர்ந்து துப்புத் துலங்க முயல.. அது தானாகவே எல்லாம் நடக்கும் என்பதைப் போல் அவனது அம்மா அவன் கண்ணில் படுகிறாள். அவள் மீதிக் கதையைச் சொல்லி முடிக்கிறாள். முழுசும் புரிந்த பின்பு பின்னணியில் இருந்தவர்களைக் கண்டுபிடித்து தன் குடும்ப எதிரிகள் மீது பாய்கிறான் மகன். எப்படி அவர்கள் ‘கதை’யை முடிக்கிறான் என்பதுதான் கதை.

முதலில் இப்படியொரு கதையில் நடிக்க ஒப்புக் கொண்டு, பின்பு தயாரிக்கவும் செய்திருக்கும் அண்ணன் சரத்குமாரை நான் மனதாரப் பாராட்டுகிறேன்.. யாரும் செய்ய முன் வந்திருக்காத சாதனை விஷயம் இது.

‘திரிசூலம்’ படத்தின் கதையில் ரெண்டு வரியை எடுத்துக் கொண்டு, அப்படியே ‘உலகம் சுற்றும் வாலிபன்’ டைப்பில் படமாக்கியிருக்கிறார்கள். அதாவது உருப்படியாக இருந்ததா..?

‘நான் கடவுள்’ படத்தில் ஷாட் பை ஷாட்டாக அதில் இருக்கும் குறியிடூ என்ன? சொல்லப்பட்டிருக்கும் விஷயம் என்ன..? எப்படிச் சொல்லியிருக்கிறார்? என்று மேய்கிற அளவுக்கு தமிழ்ச் சினிமா ரசிகர்களின் அறிவுத்திறன் மேம்பட்டிருக்கும் சூழலில் இப்படியொரு 1977-ம் ஆண்டு காலத்திய கதையை அப்படியே அந்த ஆண்டு வெளிவந்த திரைப்படங்களின் திரைக்கதையையும், வசனத்தையும் வைத்துக் கொண்டு எடுத்திருக்கும் இந்த இயக்குநரின் தைரியத்தை எப்படி பாராட்டாமல் இருப்பது..?

“நீ சாதிப்பன்னு எனக்குத் தெரியும் தம்பி..” என்று அப்பன் சரத், மகன் சரத்திடம் சொன்னபோதே எனக்குப் புரிந்துவிட்டது நமக்கு சோதனைதான்னு.. நிசமாவே அதுதான்..

அடுத்தடுத்த காட்சிகள் வரிசையாக எப்படி இருக்கும் என்று நினைத்தேனோ அப்படியேதான் இருந்தது. திரைக்கதைக்காக கொஞ்சமும் மெனக்கடவில்லை போலும்..

அப்பா சரத்தின் அமைதியான வசனத்தைக் கேட்டவுடன் ரவுடிகள் மன்னிப்பு கேட்டு சரண்டராவதில் தொடங்கும் அபத்தம், கடைசிவரையிலும் நம்மை ரவுண்டு கட்டி அடிக்கிறது. தப்பித் தவறி எந்தக் காட்சியிலும் லாஜிக் பார்க்கவே கூடாது. பார்த்தீர்களானால் முழுசுக்கும் விளக்கம் கேட்டு முடிக்கவே ஒரு வருஷமாயிரும்.


ஏர்போர்ட்டில் அறிமுகமாகும் விவேக் துண்டு, துண்டு காட்சிகளில் நடித்து ஏதோ ஒப்பேற்றியிருக்கிறார். வெறும் 4 நாட்கள் கால்ஷீட்டில் அவரது போர்ஷனை முடித்து அனுப்பியிருப்பார்களோ என்று நினைக்கிறேன்.. 4-வது ரீலில் வந்து 7-வது ரீலில் விடை பெறுபவர் பின்பு மீண்டும் 13-வது ரீலில்தான் தலையைக் காட்டுகிறார். பெண்களின் உள்ளாடையை வைத்து செய்திருக்கும் காமெடி உவ்வே.. இதுக்கு ‘சின்ன கலைவாணர்’ என்ற பெயர் விவேக்கிற்கு கண்டிப்பாக தேவையா..? கொடுமை.. மலேஷிய சின்னப் பெண்ணிடம் அவர் நடத்தும் காமெடி நாடகம் ஏற்கெனவே பல திரைப்படங்களில் பார்த்துதான் என்பதால் புன்னகைக்க மட்டுமே செய்தது..


பர்ஸானா டிவி ரிப்போர்ட்டர். ஏர்போர்ட்டில் சரத்தின் மீது மோதி, உருண்டு, புரண்டு உதட்டில் முத்தம் கொடுத்த பின்பு வழக்கமாக காதலித்து பாட்டு பாடி, கொடுத்த துணிகளை முகம் சுழிக்காமல் வாங்கிப் போட்டுக் கொண்டு வஞ்சகமில்லாமல் ஆடித் தீர்த்திருக்கிறார். கொஞ்சுண்டு நடிப்பிலும் காட்டியிருக்கலாம். வசனத்தை கடித்து, மென்று, துப்புவது தெளிவாகத் தெரிகிறது.. இன்னும் நான்கைந்து வாய்ப்புகள் கிடைத்தால் தேறலாம். கிடைக்குமா..?

அடுத்து நமது தங்கத் தலைவி நமீதா. அம்மணியை பார்த்தவுடனேயே தியேட்டரில் கரகோஷம் காதைப் பிளந்தது. சரத்தே நமீதாவை நம்பித்தான் வியாபாரம் செய்திருக்கிறார் போலும்.. அம்மணி 70 MM திரையையே ஆக்கிரமிக்கும் காட்சியைப் பார்க்க பயமாகத்தான் இருக்கிறது. அறிமுகக் காட்சியில் கடலில் குளிக்கிறார். பின்னர் கரைக்கு வருகிறார். ஷோ காட்டுகிறார். பின்பு மீண்டும் கடலுக்குள் இறங்குகிறார். பாதி பாடலுடன் காட்சி முடிகிறது. மீதி எங்கே? அடுத்தப் படத்தில் வருமா..?


வழக்கறிஞர் வேடம் அவருக்கு.. ஒரே ஒரு காட்சியில் மட்டுமே அதற்கான காஸ்ட்யூமில் இருந்தார். கோர்ட் வாசல் மிதிப்பதுபோல் ஒரு காட்சிகூட இல்லாதது கொடுமை.. நமீதா எப்படி வாதாடுவாங்கன்னு பார்க்கலாம்னு நினைச்சேன். இயக்குநரு ஏமாத்திட்டாரு..


தப்பித் தவறிகூட நடிப்பைக் காட்ட மாட்டேன் என்று சொல்லி அதைத் தவிர மற்ற அனைத்தையும் பஞ்சமில்லாமல் காட்டுகிறார். ஒரு காட்சியில் சேலையணிந்து வந்து பயமுறுத்துகிறார். பாடல் காட்சிகளில் வாங்கின காசுக்கு வஞ்சகம் செய்யவில்லை. துணிமணிகள் அளவாகத்தான் இருந்தது. நடனத்தின்போது அவர் படும் கஷ்டத்தை பார்த்து எனக்கு நெஞ்சு வலி வருகிறது.. முதலில் நமீதாவை நடமாடச் சொல்லும் இயக்குநர்களை நாடு கடத்த வேண்டும்.. ஸோ நமீதாவின் திரைப்பட சாதனையில் ஒரு படம் கூடுதல்.. அவ்வளவுதான்..

ஜெயசுதாதான் அம்மாவாம்.. ஜெயசுதாவின் புகைப்படத்தைக் காட்டியவுடனேயே கதை புரிந்துவிட்டது.. அதுக்கு எதுக்கு இம்புட்டு பில்டப்பு..?


இயக்குநர் திரைக்கதைக்காக ரொம்ப மெனக்கெடவில்லை.. கதாபாத்திரங்களை ஆங்காங்கே, அப்படியே நேருக்கு நேராக, சைடாக என்று அறிமுகப்படுத்திவிட்டார். “நீங்க யாரு?” என்று மகன் கேட்க, “நான் யாரா..? நான் உன் அம்மாடா?” என்று ஜெயசுதா சொல்கின்ற காட்சியில் தியேட்டரில் நக்கல் சிரிப்பு எழுந்தது.

சரத் படம் என்றாலே முதலில் சண்டைக் காட்சிகள் தீவிரமாய் இருக்கும். இதிலும் இருக்கிறது. ஆனால் காமெடியாய் இருந்து தொலைக்கிறது.. நல்ல வேளை.. ஸ்பீட் ஆக்ஷனில் காட்டுவதால் சரத்தின் கஷ்டம் நமக்குத் தெரியவில்லை.. பத்து, இருபது பேரின் துப்பாக்கிக் குண்டு மழையில் சிங்கிள்மேனாக தப்பித்து ஓடுவதில் கில்லாடியாக இருக்கிறார் சரத்.. இதுக்குத்தான் முதலிலேயே சொன்னேன் லாஜிக் பார்க்கவே கூடாதுன்னு..

அப்பா சரத்தின் மேக்கப்பும், நடிப்பும் மிக, மிக செயற்கை.. ஓல்டு மேக்கப்பிலேயே இளமை தெரிகிறது. ஏற்கெனவே சரத் இதே போல் நடித்துவிட்டதால் ஒன்றும் வித்தியாசம் தெரியவில்லை..

காலததிற்கேற்றாற்போல் இருக்கின்ற அனைத்துவித தொழில் நுட்பத்தையும் பயன்படுத்தியிருக்கிறார்கள். கொஞ்சூண்டு டெக்னாலஜியைக் காட்டினால் சரத்தின் ரசிகர்கள் சந்தோஷப்படுவார்கள் என்று நினைத்து நிறையவே காட்டியிருக்கிறார்கள். ராதாரவியின் அலுவலகத்திற்குள் இருக்கும் கம்ப்யூட்டர் செட்டப் அவரது ரசிகர்களுக்காக.. ஆனால் அதையாவது புரிகிறாற்போல் சொல்லியிருக்கலாம். எல்லாவற்றையும் கிளைமாக்ஸ் காட்சியில் வந்து சொல்ல.. நெல்லிக்காய் மூட்டையை அவிழ்த்துவிட்டது போல் ஆகிவிட்டது..

பாடல் காட்சிகள் முற்பகுதியில் அடுத்தடுத்து 5 நிமிடங்களுக்கு ஒரு முறை வந்து தொலைக்க.. தியேட்டரில் இருந்து எழுந்து வெளியே ஓடுபவர்களை பார்க்க தமாஷாக இருந்தது. முதல் பாடல் காட்சியிலேயே சரத் எம்.ஜி.ஆர். பாணியில் ஆடத் தொடங்கியபோதே படம் எதற்கு? யாருக்காக? என்பதும் புரிந்தது. பர்ஸானா கனவு கண்டாலே ஐயையோ பாட்டா என்று நினைக்க வைத்தது தொடர்ச்சியான அவரது பாடல் காட்சிகள். படத்தில் இடம் பெறும் டூயட் காட்சிகளையும் அதன் முன், பின் இருக்கும் காட்சிகளையும் பார்த்தால் எடிட்டிருக்கு சுத்தமாக வேலையே இருந்திருக்காது என்று நினைக்கிறேன். ஏதோ தெலுங்கு படம் பார்த்தது போல் இருந்தது..

வித்யாசாகரின் இசை என்றார்கள். பாடல் வரிகளே மனதில் நிற்கவில்லை. பின்பு இசை எப்படி நிற்கும்..? இசை என்றதும் பின்னணி இசை நினைவுக்கு வருகிறது.. 1977-ல் மதுரை வெள்ளைக்கண்ணு தியேட்டரில் நான் பார்த்த தேவர் பிலிம்ஸின் ராம்லஷ்மண் படத்தில் கேட்டதுதான் இந்தப் படத்தின் பின்னணி இசை.. அவ்வளவு ஓல்டு.. ஏன் சாமி இந்த கொலை வெறி..?

ஒருவரை அடித்து வீழ்த்திவிட்டு கேமிரா கோணம் மாறும்போது இரண்டு பேர் தரையில் விழுந்து அழுது கொண்டிருக்கிறார்கள்.. மலேஷியா கடற்கரையில் இருந்து தமிழ்நாட்டுக்கு படகிலேயே வந்து சேர்ந்த காட்சி, படத்தில் மொத்தம் 200 பேரை கொலை செய்திருக்கும் திரைக்கதை, எல்லாம் முடிந்து கடைசியில் தமிழ்நாட்டு போலீஸ் மாதிரி வந்து நிற்கும் மலேசிய போலீஸ்.. வாக்கிடாக்கியிலேயே கொஞ்சமும் உணர்ச்சியில்லாமல் ஏர்போர்ட்ல குண்டு வைச்சுட்டாங்களாம் என்று போலீஸ் சொல்வது.. இப்படி எக்கச்சக்க லாஜிக்காக நினைத்துக் கூடப் பார்க்க முடியாத காட்சிகளை வைத்து ஏதோ ஒப்பேற்றியிருக்கிறார்கள்.

கிட்டத்தட்ட 3 வருடத் தயாரிப்பு. 16 கோடி செலவு என்கிறார்கள். இந்தப் பணத்தில் நேரடியாகவே 16 சீரியல்களைத் தயாரித்திருக்கலாம். ஒரு சீரியலுக்கு 16 கோடி ரூபாய் என்பது டூ மச்..