04-06-2007
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
ஹெல்மெட் விஷயத்தில் ஆரம்பத்திலிருந்தே தினமும் ஒரு செய்தியை தெரிவித்து வரும் தமிழக அரசு இன்றைக்கு மேலும் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
நேற்று தமிழக முதல்வர் வெளியிட்ட அறிக்கையின்படியே, “ஹெல்மெட் போடலாமா..? வேண்டாமா..?” என்றெல்லாம் சென்னையில் யாருக்கும் புரியாத நிலையில், இன்றைய செய்திக் குறிப்பில், “வாகனங்களில் பின்னால் அமர்ந்து செல்பவர்கள் ஹெல்மெட் அணிவதும், அணியாததும் அவர்களுடைய இஷ்டம்..” என்று சொல்லி முடித்திருக்கிறார்கள்.
தமிழக அரசு இன்றைக்கு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு :
“மத்திய அரசு உருவாக்கியுள்ள மோட்டார் வாகன சட்ட விதிகளின்படி ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டுமென்பது கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் தொடர்ச்சியாக 01.06.2007 முதல் இந்த விதி, சென்னை உள்ளிட்ட ஆறு மாநகராட்சிகளில் இரு சக்கர வாகனங்களை ஓட்டுபவர்களும், அந்த வாகனங்களின் பின்னே அமர்ந்து செல்பவர்களும் ஹெல்மெட் அணிந்து செல்வது கட்டாயமாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இதற்கிடையே வாகனங்களின் பின்னே அமர்ந்து செல்லும் தாய்மார்கள், மற்றும் குழந்தைகள் ஹெல்மெட் அணிந்து செல்வதால் ஏற்படும் இடையூறுகளைப் பற்றி முறையீடுகள் அரசுக்குத் தொடர்ந்து வந்து கொண்டேயிருப்பதன் பேரில்,
வாகனங்களின் பின்னே அமர்ந்திருப்பவர்களுக்கும் அவ்வாறு அணிந்து செல்வதுதான் அவர்களுடைய உயிருக்குப் பாதுகாப்பாக அமையும் என்ற போதிலும்,
அதனை அணிந்து கொள்ள அவர்களில் பலர் எதிர்ப்புத் தெரிவிக்கின்ற நிலையில்,
இதனை அணிந்து கொள்ள வேண்டுமென்பதை வாகனங்களில் பின்னே அமர்ந்து செல்லும் பெண்கள், மற்றும் குழந்தைகளின் விருப்பத்திற்கே விட்டுவிடலாம் என்று தெரிவிக்கப்படுகிறது..”
இப்போதைக்கு இதுதான் ஹெல்மெட் விஷயத்தில் தமிழக அரசின் நிலைமை. நாளை எப்படியோ?
அது ஆண்டவனுக்குத்தான் தெரியும்..