Archive for the ‘ஹாத்வே கேபிள்’ Category

பதினைந்து நாட்கள் வலைப்பதிவுக்கு விடுமுறை – நடந்தது என்ன..?

ஓகஸ்ட் 10, 2009

10-08-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


கடந்த பதினைந்து தினங்களுக்கு முன்பாக ஆழ்வார்பேட்டையில் ஒரு நண்பரின் வீட்டில் மதிய உணவுக்காக போயிருந்தபோது அவரது வீட்டு கேபிள் கனெக்ஷன் கட் செய்யப்பட்டுவிட்டதாக புலம்பினார். அது ஹாத்வே நிறுவனத்தாரின் கனெக்ஷன்.

இது வருடக்கணக்காக நடப்பதுதானே என்று அலட்சியமாக நினைத்தேன். அந்த நண்பரே வருத்தத்துடன் சொன்னார், “இனிமேல் ஹாத்வே கேபிள் கனெக்ஷன் மெட்ராஸ்ல இருக்காதாம். பிஸினஸை மூடிட்டோம்னு சொல்லிட்டாங்க..” என்றார். இது முதல் அதிர்ச்சி.

அடுத்த அதிர்ச்சி அடுத்த இரண்டாவது நாளே வட சென்னை முழுவதும் கோலோச்சிக் கொண்டிருந்த ஹாத்வேயின் கேபிள்கள் இரவோடு இரவாக அறுத்தெறியப்பட்டன. ஒரே நாளில் அளவுக்கதிகமாக கேபிள்கள் துண்டிக்கப்பட்டதால் அன்றோடு ஹாத்வே நிறுவனத்தாரின் கேபிள் டிவி கனெக்ஷனும் முடக்கப்பட்டு உடனுக்குடன் அப்பகுதி கேபிள் டிவிக்காரர்கள் சுமங்கலி கேபிளில் உறுப்பினராக்கப்பட்டு அவர்களுக்கு கேபிள் கனெக்ஷன் தங்குத் தடையில்லாமல் வழங்கப்பட்டு பொதுமக்களுக்கு நிம்மதியும், ஆனந்தமும் அளிக்கப்பட்டது.

அதற்கடுத்த இரண்டாவது நாள் மூன்றாவது அதிர்ச்சி. ஹாத்வேயின் இண்டர்நெட் கேபிள்கள் பலவும் நகரின் பலவிடங்களிலும் புயல் வேகத்தில், அசுர பலத்துடன் அறுத்தெறியப்பட்டன. எனது வீட்டிலும் ஹாத்வே இண்டர்நெட் கேபிள்தான் இருந்தது. அன்றோடு தொலைந்தது இண்டர்நெட் கனெக்ஷன்.

நெருங்கி, நெருக்கி விசாரித்தபோது அடுத்த ஒரு மணி நேரத்தில் பதில் சொல்வதாகச் சொன்ன கஸ்டமர் கேர் அதிகாரிகள் பின்பு லைனுக்கு வரவேயில்லை. இரண்டு நாட்களாகத் தகவல் தெரியாமல் அல்லாடிய பின்பு மூன்றாவது நாள்தான் லைன் கிடைத்து பதிலும் வந்தது.

“எங்க ஆபீஸ்ல பிஸினஸை மூடிட்டாங்க ஸார்.. இனிமே ஹாத்வே வராது ஸார்.. நீங்க வேற எந்த கம்பெனி இண்டர்நெட் கனெக்ஷனாவது வாங்கிக்குங்க..” என்று வருத்தத்தோடு சொல்லி போனை வைத்தார்கள்.

கடந்த பதின்மூன்றாண்டுகளாக ஆளும்கட்சி ஆதரவுடனும், அரசியல் ரவுடிகளின் பக்க பலத்துடனும், காவல்துறையின் கண்ணாமூச்சி ஒத்துழைப்புடனும் போராடி பார்த்து, சக்தியில்லாமல் தற்போது ஓய்ந்து, ஒழிந்தே போய்விட்டது ஹாத்வே.

அவர்களுடைய கருவிகளை வாங்கக்கூட வரவில்லை. வருவார்களா என்பதுகூட சந்தேகம்தானாம்..

துவக்கக் காலத்தில் ஒரு மும்பை கம்பெனியிடம் இருந்த இந்த ஹாத்வேக்கு ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தில் மட்டும்தான் காக்கிச் சட்டைகளின் உதவி கிடைத்ததால் அப்போது மட்டும்தான் கொஞ்சம் மூச்சு விட்டுக் கொண்டிருந்தார்கள்.

அம்மையாரின் ஆட்சி போய் ஐயாவின் ஆட்சி வந்ததும் பேரன்களின் முதல் குறிக்கோளே ஹாத்வேயை ஓட, ஓட விரட்டிவிட வேண்டும் என்பதுதான். ஏனெனில் தமிழ்நாடு முழுவதிலுமே கிட்டத்தட்ட முக்கால்வாசி மார்க்கெட்டைக் கைப்பற்றியிருக்கும் சுமங்கலி கேபிள் விஷனுக்கு சென்னையில் ஒரு புறத்தில் இடமில்லாமல் இருப்பது அவர்களுக்கு கவுரவக் குறைச்சலாகத் தெரிந்தது.

இதனால் இனியும் இவர்களோடு கண்ணாமூச்சி ஆடுவதில் அர்த்தமில்லை என்று நினைத்து அதிரடிப் பாய்ச்சல் காட்டியிருக்கிறார்கள் மீடியா பிரதர்ஸ். இன்னொரு காரணம், வாய்ப்புள்ளபோதே தூற்றிக் கொள்வோம். மறுபடியும் ஆட்சி இல்லாமல் போனாலோ, அல்லது மேலிடத்துடன் ராசி இல்லாமல் போனாலோ ஹாத்வேயை விரட்ட முடியாது என்று உறுதியுடன் நம்பிவிட்டார்கள்.

இதற்கிடையில் ஹாத்வேயை நடத்திக்கொண்டிருந்த மும்பை நிறுவனத்திடமிருந்து ஸ்டார் டிவி ஹாத்வேயை விலைக்கு வாங்கி ‘ஸ்டார் ஹாத்வே’ என்று பெயரிட்டு நடத்தத் துவங்கியது. ஆனாலும் சோழ சக்கரவர்த்தியின் வாரிசுகள் தமிழகம் தங்களுடைய ஆளுகைக்குட்பட்ட மண். தாங்களே அதிபதிகள் என்பதை நிரூபித்துக் காட்டுவதில் உறுதியாகவே இருந்தார்கள்.

கோபாலபுரம் வீட்டில் சகோதரர்களும், மாமன், மச்சான்களும் ஒன்று சேர்ந்து காட்சியளித்த மறுநாளில் இருந்தே ஹாத்வே கேபிள்களை கட் செய்வது அதிகமாகிவிட்டதாம். கடந்த இரு மாதங்களில் அது உச்சக்கட்டத்திற்குப் போய்விட்டது.

என் வீட்டருகே சென்ற மாதம் என் கண் முன்பாகவே கேபிளை வெட்டினார்கள். வெட்டியவர்கள் லோக்கல் கேபிள் சேனல்காரர்கள். ஏன் என்று கேட்டால் வெட்டச் சொன்னார்கள். வெட்டினோம். அவ்வளவுதான் பதில்..

அடுத்த நாள் காலை வரையிலும் எனக்கு இண்டர்நெட் கனெக்ஷன் இல்லை. மறுநாள் காலையில் அதே இடத்தில் வைத்து போலீஸாருடன் வாக்குவாதமும், சண்டையும் நடந்தது. “என்னால ஒண்ணும் செய்ய முடியாது.. கம்ப்ளையிண்ட்டைகூட வாங்க முடியாது.. உங்களால முடிஞ்சா என்ன செய்யணுமோ செஞ்சுக்குங்க..” என்று சைரன் காரில் சொகுசாக வந்த ஒரு சப்-இன்ஸ்பெக்டர் கூலாகச் சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

பொறுத்துப் பொறுத்துப் பார்த்து இந்த அக்கிரமத்திற்கு முடிவு கட்டவே முடியாது என்பதை உணர்ந்துதான் ஹாத்வே தனது தொழிலை நிறுத்திக் கொண்டுவிட்டது.

பாவம்.. அவர்களும் என்னதான் செய்வார்கள்..? ஒரு நாள் வடபழனியில் கட் செய்தால் மறுநாள் சாலிக்கிராமம். அடுத்த நாள் விருகம்பாக்கம் என்று தினந்தோறும் புகார்கள் சொல்லியே ஓய்ந்துவிட்டார்கள் ஹாத்வே சந்தாதாரர்கள்.

குறைந்தபட்சம் ஒரு 300 தமிழர்களாவது அந்த நிறுவனத்தின் மூலம் வேலை வாய்ப்பு பெற்று வந்தார்கள். இப்போது அவர்கள் வேலை கோவிந்தா..

தங்கள் வீட்டு கஜானா நிறைய வேண்டும் என்பதற்காக சக தமிழர்களின் வாயில் மண்ணையள்ளிப் போட்ட இந்த முடிசூடாத அரசாளர்கள்தான் வாய் வலிக்க கூசாமல் தங்களுக்குத் தாங்களே சொல்லிக் கொள்கிறார்கள் நியாயமான ஆட்சியை மக்களுக்கு அளிக்கிறோம் என்று..!

வெட்கங்கெட்ட ஜென்மங்கள்..!