Archive for the ‘வைகோ’ Category

தி.மு.க. தலைவராக வர ஆசைப்பட்டவர் யார்? கலைஞரின் கவிதை..!

மார்ச் 29, 2009


29-03-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

தமிழினத் தலைவர், தன்மானத் தலைவர், தமிழர் தலைவர், சிங்கத் தலைவர், தமிழர்களின் தன்னிகரல்லாத தலைவர், உலகத் தமிழர்களின் ஒப்பற்றத் தலைவர், டாக்டர் கலைஞர் (அப்பாடா முழுசும் சொல்லிட்டேன்னு நினைக்கிறேன்..! என்னை யாரும் திட்டமாட்டீங்களே..!) பல வருட ரகசியம் ஒன்றை தன் மனதுக்குள்ளேயே வைத்திருந்து புழுங்கிக் கொண்டிருந்தவர், நேற்றைய தினம்வரையில் நடந்த தேர்தல் கூத்துக்களால் மனம் வெதும்பிப் போய் நேற்றைக்கு தனது மனம் திறந்து, அந்த ரகசியத்தை தனது வழக்கமான கவிதைத் தமிழில் கொட்டித் தீர்த்திருக்கிறார். படித்துப் பாருங்கள்..!

இனி கலைஞர் எழுதியது :

எல்.ஜி., செஞ்சி, ஆகியோரைத் தொடர்ந்து மு.கண்ணப்பன், கம்பம் ராமகிருஷ்ணன், டி.கே.சுப்பு ஆகியோர் மீண்டும் தாய்க்கழகத்திற்கு வந்து இணைந்தபோது அவர்களுடன் தனித்து உரையாடிய நேரத்தில் எழுந்த நினைவலைகள் இவை..

குமரிமுனை கடற்கரை விருந்தினர் மாளிகையில்
குறட்டைவிட்டு தூங்கிக் கொண்டிருந்தேனாம்;
அந்த நள்ளிரவில் நமது தம்பிமார்கள்
ஆற்காட்டார், துரைமுருகன் இன்னொருவர்
மாடி தாழ்வாரத்தில் தி.மு.க. வருங்காலம் பற்றி
வானம் வெளுக்கும்வரை உரையாடினாராம்;
அப்போது நான் பேர் சொல்லா அந்தத் தம்பி
ஆற்காட்டாரையும், துரைமுருகனையும் பார்த்து
கலைஞருக்குப் பின் கழகத் தலைவர் ஸ்டாலினா? என
வெகுண்டெழுந்து கேட்டாராம்;
எப்படிச் சொல்கிறாய் என தம்பியர் கேட்டவுடன்
பேராசிரியர் புகழுரைகள் ஸ்டாலினைப் பற்றி
மழையாகப் பொழிகிறதே என்றாராம் அந்தத் தம்பி;
அன்பழகனார் பேசுவதில் என்ன தவறு..?
கலைரையே உறைத்துப் பார்த்து
பிறகுதான் ஒப்புக் கொண்டார் தலைவராக
இப்போது கலைஞருக்குப் பிறகு ஸ்டாலின்
என்ற பேச்சுக்கு நீர் ஏன் நெருப்பை
தொட்டதுபோல் துடிக்க வேண்டும்..?
கலைஞரே உம்மை போர்வாள் என்று புகழ்கிறார்;
மாநிலங்களவை பதவியை உமக்கு
தொடர்ந்து வழங்கியிருக்கிறார்;
தனக்குப் பிறகு உம்மைத்தான்
தலைவராக்குவார் இயக்கத்திற்கு என்று கூறி
அந்தத் தம்பியின் முகத்தில் ஒளிபிறக்க
செய்தார்கள் ஆற்காட்டாரும், துரைமுருகனும்;
புன்னகை தவழ்ந்த அந்தத் தம்பியின் முகத்தில்
புதியதோர் சிந்தனை கேள்வியாக மாறியது;
ஒருவேளை கலைஞரும் பெரியார் ராஜாஜி போல
தொண்ணூறு வயதுக்குமேல் வாழ்ந்தால்
நான் எத்தனை வருடம் காத்திருப்பது..?
இதைக் கேட்ட மற்ற இரு தம்பியரும்
தேள் பிலிற்றும் விஷமாக எண்ணிக் கலங்கி
ரகசியமாக சத்தியம் செய்து கொண்டார்கள்;
இந்தச் செய்தியை தலைவரிடம் சொல்வதில்லையென்று
துரைமுருகன் ரகசியம் காப்பதில் இரும்புப் பெட்டி;
ஆற்காட்டாரோ கண்ணாடிப் பிழை;
எனினும் ஆண்டுகள் கடந்த பிறகே
குமரிமுனையில் குமுறிய எரிமலையின்
குட்டைமன பேராசையை கூறினர் எனக்கு;
செப்பின் புண்ர்ச்சிபோற் கூடினும் கூடாதே
உட்பகை உற்றகுடி
(செப்பு எனப்படும் சிமிழில் அதன் மூடி பொருந்தியிருப்பது போல வெளித் தோற்றத்துக்கு மட்டுமே தெரியும். அவ்வாறே உட்பகை உள்ளவர்கள் உளமார பொருந்தியிருக்க மாட்டார்கள்)
என்பது ‘குறளோவியம்’ நூல் தொகுப்பில் நான் குறிப்பிடாமல் விட்டுப் போன குறட்பா..!

டிஸ்கி : இந்தக் கவிதைக் கதை உண்மையா? பொய்யா?ன்னு சின்னப்புள்ளத்தனமால்லாம் கொஸ்டீன் கேக்கக் கூடாது.. சொல்லிப்புட்டேன்..! ‘போர்வாளின்’ பதில் கவிதை இன்னமும் வரவில்லை.. வந்தா தெரிஞ்சிருமே..!