Archive for the ‘வேஷ்டி’ Category

வேஷ்டியில் இருக்கிறதா கவுரவம்?

மே 30, 2007

May 30, 2007

என் இனிய வலைத்தமிழ் மக்களே…!

‘தமிழர் என்றோர் இனமுண்டு; அவருக்கோர் தனியே குணமுண்டு!’ என்று தமிழர் பெருமையைப் பெருமையாகச் சொல்லியே, இரண்டாயிரம் ஆண்டுகள் ஓடிப் போய்விட்டது.

ஆதி காலத்துத் தமிழன் எப்படியிருந்திருப்பான் என்றெல்லாம் நாம் கற்பனை செய்து பார்க்கத் தேவையில்லை. அந்தந்தக் காலக்கட்டத்திற்கேற்ப பிறப்பின் அர்த்தத்தைப் புரிந்து கொண்டு, அதன்படியே வாழ்ந்து தன் காலத்தை முடித்துக் கொண்டிருப்பான்.

இந்தத் தமிழன் எப்படிப்பட்ட கலாச்சாரத்தில் வாழ்ந்திருப்பான் என்பதெல்லாம் இப்போது கேள்வியல்ல. கலாச்சாரம் என்பதெல்லாம் அந்தந்தக் காலக்கட்டத்தில் மக்களுடைய பயன்பாட்டுப் பொருட்களாக எது இருக்கிறதோ, எது கிடைக்கிறதோ அதை வைத்து அவர்கள் வாழும் வாழ்க்கை, அல்லது வாழ்ந்த வாழ்க்கையின் ஒரு தொகுப்புதான் என்று நான் அறிகிறேன்.

இந்தக் கலாச்சாரத்தில் மிக முக்கியமாக உடனடியாக பிடிபடுவது உடைகள்தான். “அந்தக் காலத்துல..” என்று 90 வயது முதியவர் ஆரம்பித்தாலும் உடையில்தான் தன் சோகக் கதையை ஆரம்பிப்பார். எனக்குத் தெரிந்து நான் முதலில் பார்த்த உடை வேஷ்டியும், சட்டையும் ஆண்களுக்கு. சேலை, ஜாக்கெட் பெண்களுக்கு. பின்பு சினிமாவில் மட்டும்தான் ஜிகினா உடைகள், பேண்ட் என்றழைக்கப்பட்ட ஆதி காலத்து குழாய் டைப் சராய்கள்..

எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்தே எனது தந்தை அலுவலகம் புறப்படும்போது மட்டும்தான் பேண்ட் அணிவார். மீதி நேரமெல்லாம் வேஷ்டிதான்.. இந்த வேஷ்டியை எதற்காக அணிகிறார்கள் என்ற ஆராய்ச்சியிலெல்லாம் நான் இறங்கவில்லை. அது பெரியவர்கள் அணியும் ஒரு உடுப்பு என்பதாகத்தான் எனக்குப்பட்டது.

ஆனால் வேஷ்டி தங்களுக்கு வசதியானதுதானா என்று என் தந்தையும், என் அண்ணணும் ஒரு போதும் தங்களுக்குள் பேசியிருந்து நான் பார்த்ததில்லை. அயர்ன் செய்து வைத்திருப்பதை எடுக்கிறார்கள். பிரிக்கிறார்கள். ஒரு தக்கையின் மீது அடிபடுவதுபோல் சப்தம் வரும் அளவுக்கு அதை உதறுவார்கள். இந்த சப்தம் எனக்கு மிகவும் பிடித்தது. எனக்கு மட்டுமல்ல.. என் வீட்டில் அதற்குப் பிறகு வளர்ந்த சிறு குழந்தைகளுக்குக்கூட பிடிக்கும்.

என் அக்காவின் மகன் தவழும் குழந்தையாக இருந்தபோதெல்லாம் என் அண்ணன் வேண்டுமென்றே வேஷ்டியை இரண்டு, மூன்று முறை உதறுவார். பால் குடித்துக் கொண்டிருந்தால்கூட அந்த சப்தம் கேட்டு ஓரக்கண்ணால் திரும்பி என் அண்ணனைப் பார்த்துச் சிரிப்பான். என் அண்ணனுக்கு அப்படியரு பூரிப்பு.. ஒரு குழந்தையை பைசா செலவில்லாமல் சிரிக்க வைத்தோமே என்று..

இந்த வேஷ்டி தமிழர்களின் கலாச்சாரமான உடை என்று இப்போது பலரும் சொல்கிறார்கள். மெட்ரோபாலிட்டன் சிட்டியைத் தவிர தமிழ்நாட்டின் மற்ற ஊரகப் பகுதிகள், கிராமங்களில் அதிகமானோர் இன்னமும் வேஷ்டியைத்தான் பயன்படுத்துகிறார்கள்.

இந்த அரசியல் கட்சிகளால் தமிழ்ச் சமுதாயத்திற்கு கிடைத்த ஒரே ஒரு பயன் கட்சிக்காரர்கள் வேஷ்டியை தேசிய உடையைப் போல் அணிய.. இன்றைய தலைமுறையினருக்கு இது எனது அப்பாவின் உடை. தாத்தாவின் உடை என்று நாங்கள் அறிமுகப்படுத்தி வைக்க ஏதுவாக உள்ளது.

இந்தக் கலாச்சார உடைக்கு மாற்றாக நாம் வெளிநாட்டிலிருந்து தருவித்த பேண்ட் என்னும் உடை, தமிழர்களை ராஜாக்கள் போல் காட்டியதோ இல்லையோ.. அந்த மாதிரியான உடை தயாரிப்பவர்களை நிஜமான ராஜாக்களாக மாற்றிவிட்டது.

பேண்ட் ஒரு நவீன மனிதனின் சிம்பல்.. அடையாளம்.. அதை அணிவதுதான் அழகு.. என்றெல்லாம் எழுத்தும், பேச்சும் வர.. இன்னும் தமிழ்நாட்டு மிருகக்காட்சி சாலையில் இருக்கும் மிருகங்கள் மட்டும்தான் அந்த உடையை அணியவில்லை. மற்றபடி சகலமும் இங்கே அதுதான்..

இதை அணிந்தால்தான் மனிதர்.. இல்லையேல் மனிதர் இல்லை என்று சொல்கின்ற அளவுக்கு ஒரு தரம் தாழ்ந்த நம்பிக்கை, மனித நம்பிக்கையின் ஊற்றாக கருதப்படும் தமிழ்நாட்டிலேயே உருவாகியிருப்பது வருத்தத்திற்குரியது.

சென்னை கிரிக்கெட் கிளப்பில் ஒரு மீட்டிங்கில் பேச சென்ற ஒருவரை, அவர் வேஷ்டி அணிந்து வந்திருக்கிறார் என்ற ஒரே காரணத்திற்காக உள்ளே அனுமதிக்க மறுத்திருக்கிறார்கள் கிளப் நிர்வாகிகள். வந்தவரோ கிரிக்கெட் கிளப்பில் வேலை கேட்டு வரவில்லை. அங்கே நடந்த ஒரு கருத்தரங்கில் பேசுவதற்காக வந்த ஒரு பேச்சாளர்தான்.

மத்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் துறையில் கெளரவ ஆலோசகராகப் பணியாற்றி வருகிறார் நாராயணன் என்பவர். இவர்தான் அந்தப் பிரமுகர். பெயருக்கு முன்னால் சும்மா ‘அமெரிக்கா’ என்று சேர்த்து ‘அமெரிக்கா நாராயணன்’ என்று சொன்னால் தமிழக அரசியல் கட்சிக்காரர்கள், அரசியல் நோக்கர்கள் அனைவருக்குமே தெரியும். அந்தளவுக்கு முக்கியமானவர்தான்.

அமெரிக்காவில் படித்து, வேலை பார்த்துக் கொண்டிருந்தவர் திடீரென்று தாய் நாடு திரும்பி சமுதாயப் பணி செய்யப் போகிறேன் என்று சொல்லி ஒரு நல்ல நாளில் சென்னையில் கால் வைத்தவரை, கட்சிப் பணிக்கு இழுத்து இந்தியப் பிரதமரிடமே நேரிடையாகப் பேசுகின்ற அளவுக்கு இந்த நாராயணனை செல்வாக்கு பெற வைத்தவர் அன்றைய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் ஸ்தாபகர் திரு.கருப்பையா மூப்பனார்தான்.

அப்போதைய தமிழ் மாநில காங்கிரஸின் கொள்கைகளை வடிவமைத்ததில் தற்போதைய மத்திய நிதியமைச்சர் திரு.ப.சிதம்பரத்துடன் இணைந்து பணியாற்றியவர் இவர்.

கிராமங்கள்தோறும் கிராமத் தொழில் மையத்தைத் துவக்க தொழிலதிபர்களைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருக்கும் நாராயணன், அது தொடர்பான ஒரு கருத்தரங்கில் கலந்து கொள்ளத்தான் சென்னை கிரிக்கெட் கிளப்பில் இருக்கும் உள்ளரங்கிற்கு வந்துள்ளார். நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது சென்னை ரோட்டரி கிளப்.

கருத்தரங்கு நாட்டு நலன் சம்பந்தப்பட்டது. பேச வேண்டியவரோ இப்படிப்பட்ட குறிப்பிடத்தக்க மனிதர். அவர் பேசப் போவதும் நாட்டு நலனின் முன்னேற்றத்திற்காக ஒரு துறையில் வளர்ச்சியை எப்படிப் பெருக்குவது என்பதைப் பற்றியதுதான்.. இதில் வேஷ்டி என்ன பாவம் செய்தது? அதைக் கட்டிக் கொண்டு ஒரு அரங்கத்திற்குள் நுழைவது என்ன பாவப்பட்டச் செயலா?

தில்லி, ராஷ்டிரபதி பவன், அசோகா ஹாலில் இந்தியாவின் தலையெழுத்தை மாற்றிய பல தலைவர்களும் இதே வேஷ்டி சட்டையில்தான் அதற்கான பதவிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளார்கள். இதில் என்ன அழுக்கு இருக்கிறது? இதில் என்ன கவுரவக் குறைச்சல் இருக்கிறது?

‘கிங் மேக்கர்’ என்று பெயரெடுத்த கர்மவீரர் காமராஜர் தன் கடைசிக் காலம்வரையிலும் இதே வேஷ்டியில்தான் உலா வந்தார். பீஜிங் விமான நிலையத்தில் அந்த மாமனிதருக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளித்தபோது அந்தக் கடும் குளிரிலும் வேஷ்டி அணிந்த அந்த கம்பீர உருவம், நாற்பது தப்படிகள் நடந்து மரியாதையை ஏற்றுக் கொண்டபோது கிடைத்த பெருமை தமிழ்நாட்டுக்குத்தானே..

லால்பகதூர்சாஸ்திரி என்ற பரம பரதேசியான இந்தியப் பிரதமர் ஒருவர் ‘பிரதமர்’ என்ற பதவிக்கே பெருமை சேர்த்தவர். தாஷ்கண்ட்டில் இந்திய-பாகிஸ்தான் போர் நிறுத்த உடன்பாட்டில் கையெழுத்திடுவதற்காகச் சென்றவரிடம் இரண்டே இரண்டு வேஷ்டிகள்தான் இருந்தது. ஹோட்டல் அறையில் தினமும் இரவு தன்னுடைய வேஷ்டியை தானே துவைத்து காய வைத்து மறுநாள் அதையே அணிந்து கொண்ட வரலாற்றையும் இந்தியா பார்த்திருக்கிறது..

அன்றைய தினம் நாராயணனால் அந்த நிலைமையில் யாரிடமும் பேச முடியவில்லை. “Naaraaayaaanaan…” என்று ஸ்டைலாக பத்திரிகையாளர்கள் முன்பாகவே அன்றைய பிரதமர் ராஜீவ்காந்தியால் செல்லமாக அழைக்கும் அளவுக்குச் செல்வாக்கில் இருந்த இந்த நாராயணன், இன்றைக்கு அந்தக் கருத்தரங்கில் பேசியே தீர வேண்டுமே என்பதற்காக அருகில் இருக்கும் ஒரு கடைக்கு ஓடிப் போய் புதிதாக ரெடிமேட் பேண்ட் ஒன்றை அணிந்து வந்து கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிவிட்டு வந்திருக்கிறார்.

பாவம் அவர் என்ன செய்வார்? நாடு முழுவதும் நடக்கும் இந்தக் கருத்தரங்குகள் பற்றிய செய்திகளை வாரந்தோறும் பிரதமருக்கு அனுப்பி வைக்கும் பணி அவருக்குக் காத்திருக்கிறது. கருத்தரங்கில் பேசி முடித்துவிட்டு மறுநாள்தான் இதுபற்றி பத்திரிகையாளர்களிடம் தனது வருத்தத்தைத் தெரிவித்திருக்கிறார்.

அந்த கிளப் நிர்வாகியோ இதற்கு சமயோசிதமாக ஒரு பதிலைச் சொல்லியிருக்கிறார். “எங்களுக்கு முன்னால் இருந்த நிர்வாகிகள் இந்த விதிமுறையை இங்கே விட்டுச் சென்றிருக்கிறார்கள். அதனால் அதனை நாங்கள் அப்படியே பின்பற்றுகிறோம்..” என்று.. ஏன் அந்த நிர்வாகியின் பெயரைக் கொண்டவர்கள் யாரும் அங்கே பணியாற்றக் கூடாது என்று ஒரு நிபந்தனையை விதித்திருந்தால், இந்த நபர் சும்மா விட்டிருப்பாரா?

அப்படியென்ன அந்த வேஷ்டியில் ஒரு கறையைக் கண்டார்கள் இந்தக் கயவர்கள் என்பது எனக்குத் தெரியவில்லை. புரியவில்லை. கருத்தரங்கம் ஏற்பாடு செய்வதே பேசுவதற்காகத்தான்.. யார், யார் எந்த மாதிரி உடையில் வருகிறார்கள் என்பதை பார்ப்பதற்காக யாரும் அங்கே வரப் போவதுமில்லை. பிறகென்ன?

இந்த கிளப் நிர்வாகிகள் பலரும் வெளிநாடுகளில் சென்று படித்து முடித்துவிட்டு இந்தியாவிற்கு ஓய்வெடுப்பதற்காக வந்தவர்கள். வீட்டில் ஓய்வெடுப்பது போதாது என்று இது மாதிரியான கிளப்பிற்கும் வந்து ஓய்வெடுக்கிறார்கள். இவர்களது பார்வையில் வேஷ்டி கட்டிய ஒருவன் கிராமத்தான், பட்டியான், முட்டாள், அருவெருக்கத்தக்கவன் என்பதுதான்..

இப்படியரு முட்டாள்தனமான விதிமுறை இன்றோ, நேற்றோ இவர்கள் வைத்திருக்கவில்லை. ஏற்கெனவே இதேபோல் இதே கிளப்பிற்கு ஒரு மீட்டிங்கிற்கு வந்த இந்தியத் திருநாட்டின் ஒரு முக்கியப் பிரமுகரை அனுமதிக்க மறுத்து சர்ச்சையைக் கிளப்பினார்கள். அவர் யார் தெரியுமா?

இந்திய சுதந்திரப் போராட்ட தியாகி, மூதறிஞர் ராஜாஜியின் சீடர், கர்ம வீரர் காமராஜரின் அமைச்சரவையில் விவசாயத் துறை மந்திரியாக பதவி வகித்தவர். மத்தியில் பண்டித நேரு அவர்களின் அமைச்சரவையிலும் அமைச்சராகப் பதவி வகித்தவர், காங்கிரஸ் கட்சியின் பெருந்தலைவர்களில் ஒருவர், இந்தியாவில் பசுமைப் புரட்சியை ஏற்படுத்திய புண்ணியவான், ஹிந்தி மொழி பிரச்சினைக்காக தன் மத்திய அமைச்சர் பதவியைத் தூக்கியெறிந்த தூயவர், மகாராஷ்டிர மாநில கவர்னராக பதவி வகித்தவர், எல்லாவற்றிற்கும் மேலாக ‘பாரதரத்னா’ விருதையும் பெற்றவர். அவர் அமரர் திரு.சி.சுப்ரமணியம்.

அப்போதும் அந்த கிளப் நிர்வாகிகள் சொன்ன பதில், “இது எங்களது கிளப்பின் விதிமுறைகளுக்கு முரணானது..” அவ்வளவுதான் சிம்பிளான பதில். அப்போது ஆட்சியிலிருந்த திராவிட முன்னேற்றக் கழகத்தினருக்கு சி.எஸ். என்றழைக்கப்படும் இந்தப் பெரியவர் மீது கிண்டல் எழுப்ப ஒரு சமயமும், காரணமும் கிடைத்ததால் அதை அவர்கள் கண்டு கொள்ளவில்லை. அலட்சியப்படுத்தினார்கள்.

இந்த கிளப் இப்போதும் சொசைட்டிஸ் ஆக்ட்டின்கீழ் செயல்படும் ஒரு அமைப்புதான். சொஸைட்டிஸ் ஆக்ட்டின் கீழ் செயல்படும் அமைப்புகளின் விதிமுறைகள் அரசியலமைப்பு சட்டத்திற்கும், மக்கள் பொது நலனுக்கும் விரோதமாக இருந்தால் அந்த அமைப்பைத் தடை செய்யும் அதிகாரம் அரசுக்கு உண்டு. அப்போதே அந்த வேலையைச் செய்திருந்தால் இந்த உயர்குடி கனவான்கள் இப்படி ஒரு முட்டாள்தனமான வேலையைச் செய்திருக்க மாட்டார்கள்.

ஆனால் யார் கேட்பது? அங்கே உறுப்பினர்களாக இருப்பவர்களெல்லாம் ஆட்சியாளர்களின் ‘கற்பகத்தரு’க்கள்.. பெரும் செல்வந்தர்கள். தமிழ்நாட்டின் விரல் விட்டு எண்ணக்கூடிய முக்கியப் புள்ளிகள். எப்போது வேண்டுமானாலும் எந்தக் கட்சிகளுக்கு வேண்டுமானாலும் வாரி, வாரி நன்கொடை வழங்கும் பழக்கமுள்ள எட்டப்பர்கள். எந்தக் கட்சிக்காரர்கள் அவர்களைப் பகைத்துக் கொள்வார்கள்? சொல்லுங்கள்..

அவர்களும் சாமான்யப்பட்டவர்களல்ல.. அரசியல்வாதிகளை அழைப்பதாக இருந்தால் வேஷ்டியுடன்தான் வருவார்கள் என்பது அவர்களுக்கு நன்கு தெரியும். அவர்களுக்கு மட்டும் கிரிக்கெட் மைதானத்தில் ஒரு விழா வைத்து நடத்தி முடித்தி அனுப்பிவிடுவார்கள். அல்லது அலுவலக வாசலில் ஒரு மேடை போட்டு நடத்தி முடித்து வணக்கம் போட்டுவிடுவார்கள். தப்பித்தவறிக்கூட உள்ளேயிருக்கும் உள்ளரங்கில் மட்டும் மீட்டிங் வைக்கவிட மாட்டார்கள். அந்தளவிற்கு தங்களுடைய கொள்கையை விட்டுக் கொடுக்காமல் இன்றுவரை நீடித்து வருகிறார்கள்.

அந்த வேஷ்டி உடை என்ன அவ்வளவு மோசமானதா? எதற்காக அவர்கள் வேஷ்டி அணிந்து உள்ளே வரக்கூடாது என்கிறார்கள் என்பது தமிழ்நாட்டில் இருப்பவர்களுக்கே தெரியவில்லை. இன்றுவரை அந்த ரகசியத்தை அவர்கள் பொத்திப் பொத்தி பாதுகாத்து வருகிறார்கள். யார் கேட்பது..?

வேஷ்டி என்பது தமிழர்களின் கலாச்சார உடை. அதை அணிவதுதான் தமிழர்களின் கடமை என்று நான் சொல்லவில்லை. விருப்பம் இருப்பவர்கள் அணியலாம். அசெளகரியமாக இருப்பவர்கள் அணியாமலும் இருக்கலாம். அது அவரவர் விருப்பம்.

ஆனால் பொது விழாக்களுக்கு வரும்போது வேஷ்டி அணிந்திருக்கிறார்கள் என்ற ஒரே காரணத்திற்காக தமிழ்நாட்டில் ஒரு இடத்திற்குள் அனுமதிக்க முடியாது என்று சொல்வது தென்னாப்பிரிக்காவில் ‘இங்கே இந்தியர்கள், கருப்பர்களைத் தவிர மற்றவர்கள் நுழையலாம்’ என்று போர்டு எழுதி மாட்டி இனவெறியைக் கண்ணும், கருத்துமாக பார்த்துக் கொண்டார்களே, அந்தக் கொடுமைக்குச் சமமானது.

இப்போதும் அந்த கிளப் நிர்வாகிகள் வெளியில் சொல்கிறார்கள். “எங்களிடம் மட்டும் இந்த அரசியல்வாதிகள் விளையாட முடியாது. ஏனெனில் அவர்கள் அனைவருமே எங்களது பாக்கெட்டில்தான் இருக்கிறார்கள்..” என்று..

மதுரை அருகே புகைவண்டியில் சென்று கொண்டிருந்த மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி என்பவர், இந்த வேஷ்டிகூட இல்லாமல் கோவணத்தைக் கட்டிக் கொண்டு வயலில் உழுது கொண்டிருந்த ஒரு தமிழனைப் பார்த்துத்தான் தன் கோலத்தையும் மாற்றிக் கொண்டு ‘மகாத்மா’ என்று பெயரெடுத்தது இந்த உயர்குடி கனவான்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லைதான்.

வேறென்ன சொல்வது…?