17-02-10
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
சென்ற ஆண்டுதான் லோகிததாஸ், ராஜன் பி.தேவ், முரளி என்று முத்தான மூன்று கலைஞர்களை இழந்திருந்த மலையாளத் திரையுலகத்திற்கு இந்தாண்டு துவக்கமே மோசமானதாக இருந்துவிட்டது. வி.எம்.சி.ஹனீபா என்னும் பாசக்கார மனிதரின் மரணம் மலையாள திரையுலகத்தினரை ரொம்பவே அப்ஸெட்டாக்கியிருக்கிறது.
கல்லீரல் புற்றுநோய் காரணமாக கடந்த 2-ம் தேதியன்று சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் மரணமடைந்த வி.எம்.சி.ஹனீபாவின் மரணத்தை இத்தனை சீக்கிரம் யாரும் எதிர்பார்க்கவில்லை.. திருமணமாகி 16 வருடங்களுக்குப் பிறகு மூன்றாண்டுகளுக்கு முன்புதான் குழந்தைகள் பிறந்ததில் மனிதர் உச்சிகுளிர்ந்து போயிருந்தார். அதுவும் இரட்டை பெண் குழந்தைகள். சந்தோஷத்தின் உச்சியில் இருப்பதாக பெருமிதத்துடன் பேட்டிகள் கொடுத்துக் கொண்டிருந்தார். அதற்குள் இந்தத் துயரம்..
மாதத்தில் 30 நாட்களும் கேரளாவில் ஷூட்டிங்கில் இருக்க வேண்டியிருந்தாலும் சென்னையில் சாலிக்கிராமத்தில்தான் குடியிருந்து வந்தார். கடைசியாக தமிழில் ‘வேட்டைக்காரனில்’ நடித்திருந்தார். ‘மதராஸபட்டினம்’, ‘கற்றது களவு’ ஆகிய திரைப்படங்களில் நடித்து முடித்திருக்கும் ஹனீபா மிகச் சமீபத்தில்தான் தன்னை கேன்ஸர் தாக்கியிருக்கிறது என்பதை உணர்ந்து நடிப்பதை குறைத்துக் கொண்டார்.
சென்னையிலேயே தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்தவர் கடந்த 28-ம் தேதிதான் ராமச்சந்திரா மருத்துவமனையில் அட்மிட் ஆகியிருக்கிறார். 2-ம் தேதி காலையில் ஏற்பட்ட கடும் மாரடைப்பு அவருடைய உயிரைப் பறித்திருக்கிறது.
1951-ம் ஆண்டு கொச்சியில் பிறந்த கொச்சி ஹனீபாவின் இயற்பெயர் சலீம் அஹமத் கெளஸ். தாவரவியலில் பட்டப் படிப்பை முடித்த சலீமுக்கு நடிப்பின் மீது ஆர்வம் ஏற்பட.. நடிகர் ஜெயராம், பிந்து பணிக்கர், ஹரிஅசோகன், காலாபாவன் மணி என்ற கலைஞர்களெல்லாம் நடித்துக் கொண்டிருந்த புகழ்பெற்ற நாடகக் குழுவான கலாபாவனில் ஒரு உறுப்பினராக சேர்ந்தார். ‘காலாபாவன்’ அமைப்பு நடத்தும் நாடகங்களில் நகைச்சுவை நடிகராக வலம் வந்து கொண்டிருந்தபோது ஒரு நாடகத்தில் அவர் ஏற்றிருந்த ‘ஹனீபா’ என்றொரு கேரக்டர் டாப்கியருக்கு செல்ல.. இந்தப் பெயரும் பிறந்த ஊரான கொச்சியும் சேர்ந்து கொச்சின் ஹனீபா என்பதே இவரது பெயராக நிலைத்துப் போய்விட்டது.
1976-களில் சென்னை வந்த ஹனீபா அப்போதைய நமது வில்லன் நடிகரான ஆர்.எஸ்.மனோகரின் தம்பி சீனிவாசன் தயாரித்த மலையாளத் திரைப்படங்களுக்கு ஸ்கிரிப்ட் எழுதியபடியே நடிக்கத் தொடங்கினார்.
1979-ல் ‘அஷ்தவக்ரம்’ என்னும் மலையாளப் படத்தின் மூலம் மலையாளத் திரையுலகத்திற்கு அறிமுகமான ஹனீபாவுக்கு முதலில் சில சிறிய வேடங்களே கிடைத்தாலும் பிற்பாடு அவருடைய முகத்தோற்றம் வில்லனுக்குரியதாக இருந்ததால் ‘மாமாங்கம்’ என்னும் படத்திலிருந்து வில்லனாக நடிக்கத் துவங்கினார்.
இதுவரையிலும் 300-க்கும் மேற்பட்ட மலையாளத் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். 17 மலையாளத் திரைப்படங்களுக்கு கதை எழுதியிருக்கிறார். 7 மலையாளத் திரைப்படங்களை இயக்கியிருக்கும் ஹனீபா தமிழிலும் 6 திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். இதில் ‘பாடாத தேனீக்கள்’, ‘பாசப் பறவைகள்’ இரண்டு படங்களுமே அவர் மலையாளத்தில் இயக்கிய திரைப்படங்களின் தமிழ் ரீமேக்தான். இந்த இரண்டிற்குமே கலைஞர்தான் வசனம் எழுதினார்.
1985-ல் இவர் இயக்கிய முதல் திரைப்படமான ‘ஒரு சந்தோஷம் கூடி’ இன்றைக்கும் மலையாள திரையுலகில் மிகப் பிரபலமான திரைப்படம். மம்முட்டியும், ரோகிணியும் நடித்தது. 2001-ம் ஆண்டு ‘சூத்ரதாரன்’ திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகருக்கான மாநில அரசின் விருதைப் பெற்றிருக்கிறார்.
பழகுவதற்கு மிகவும் இனிமையானவர். எளிமையானவர்.. ஈகோ இல்லாத மனுஷன்.. ஒரு இயக்குனருக்கு எந்த மாதிரியாகவும் செட்டாகக் கூடியவர் என்பதால்தான் தமிழ், மலையாளம், இந்தி என்று மூன்று மொழிப் படங்களிலுமே களைகட்டியவர். இவருடைய மிக நெருங்கிய நண்பரான இயக்குநர் பிரியதர்ஷனின் திரைப்படங்கள் அத்தனையிலும் தவிர்க்க முடியாத நபர் ஹனீபாதான். வில்லத்தனத்தில் இருந்து நகைச்சுவை கேரக்டருக்கு இவரை மாற்றியது பிரியதர்ஷன்தான்.
ஒரு பத்தாண்டுகளுக்கு முன்பாக இயக்குநர் பிரியதர்ஷனிடம் ஸ்கிரீன் அவார்டு விஷயமாக பேசுவதற்காக சந்திக்கச் சென்றிருந்தேன். ஒரு காலைப் பொழுதில் வாகினி ஸ்டூடியோவில் ஒரு விளம்பரப் படத்தின் ஷூட்டிங்கில் இருந்தார் பிரியதர்ஷன். நான் சென்ற நேரம் என் அதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும். அங்கே வி.எம்.சி.ஹனீபாவுடன், சீனிவாசனும் உடன் இருந்தார். நிமிடத்திற்கு ஒரு ஜோக் அடித்தபடியே நான் எதிர்பார்த்திருந்த வில்லன் கதாபாத்திரமும், இயக்குநர் கதாபாத்திரமும் இல்லாமல் சக தோழனைப் போல் பார்த்த நிமிடத்தில் தோளில் கை போட்டு பேசிய அந்த நேசத்தை நான் அப்போது எதிர்பார்க்கவில்லை.
நான் என்றில்லை.. அவருடன் இணைந்து பணியாற்றிய அத்தனை தமிழ்நாட்டு டெக்னீஷினியன்களும் இதைத்தான் சொல்கிறார்கள். கொடுத்தப் பணத்தை வாங்கிக் கொண்டு மிச்சம், மீதியிருந்தாலும் பின்னாடி வாங்கிக்கிறேன் என்று சொல்லிவிட்டு தயாரிப்பாளர்களுக்கும் பிடித்தமானவராக இருந்திருக்கிறார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு நடிகர் திலகன் மீது முன்னணி மலையாள நடிகர்கள் கோபம் கொண்டு அவரைப் புறக்கணிப்பு செய்திருந்தபோதிலும், சமீபத்தில் நடந்த திலகனின் மகள் திருமணத்திற்கு ஹனீபா ஓடோடிச் சென்று வாழ்த்தியதை மலையாளப் பத்திரிகைகள் பெரும் செய்தியாக வெளியிட்டிருந்தன.
ஹனீபா தமிழில் முதலில் பிரபலமானது கே.பாலசந்தரின் ‘வானமே எல்லை’ படத்தில்தான். மகளின் காதலைத் தடுக்க மகள் விரும்பியவனின் தாயையே திருமணம் செய்து கொண்டு வரும் அதிவில்லத்தனமான கேரக்டர்.. யார் இந்த ஆளு என்று புருவத்தை உயர்த்த வைத்தது இவருடைய பாடி லாங்வேஜூம்.. டயலாக் டெலிவரியும்.. அடுத்த வருடமே வெளிவந்த ‘மகாநதி’ இவரை எங்கயோ கொண்டு போனது.. அந்த அலட்சியத்தனமான, நம்ப முடியாத வில்லத்தனம் இது போன்ற கேரக்டர்களுக்கே இவரை இழுத்து வந்தாலும். ‘சிறைச்சாலை’, ‘காதலுக்கு மரியாதை’ போன்ற படங்களில் குணச்சித்திர வேடங்கள் பக்கம் திசை திரும்பிவிட்டார்.
அவருடைய உடல் வாகுக்கு ஏற்றாற்போல் வில்லனாகவும், அதே சமயம் மாட்டிக் கொள்ள விரும்பாத காமெடியனாகவும் அவருடைய அவதாரங்கள் பல பல.. ‘கிரீடம்’ படத்தில் ரவுடி போன்று கைகளை வீசிக் கொண்டு அவர் நடந்து வரும் தோரணை பயமுறுத்துவதற்கு பதிலாக சிரிப்பைத்தான் வரவழைத்தது. இதையேதான் மலையாள இயக்குநர்கள் விரும்பினார்கள். சப்பையான வில்லன் என்றால் அது ஹனீபாதான் என்பதற்கு ஏற்றாற்போல் அவருக்குள் இருந்த நகைச்சுவைத்தனத்தை மலையாள உலகம் கச்சிதமாகவே பயன்படுத்திக் கொண்டது.
மலையாள சேனல்களில் தமாஷ் நிகழ்ச்சிகளில் வலம் வந்து கொண்டிருக்கும் ஹனீபாவை இப்போது பார்க்கின்றபோது இறைவன் அவசரப்பட்டுவிட்டானோ என்று திட்டத்தான் தோன்றுகிறது. எத்தனையோ நடிப்புகள் அவரிடமிருந்து திரையுலகத்திற்கு தேவையிருக்கும்போது சாவிற்கு என்ன அவசரம்..? இது நிச்சயம் கொடுஞ்சாவுதான்..!
காரணம், இறப்புக்குக் காரணமாக இருந்த கல்லீரல் கேன்சர் இவருக்கு ஏன் வந்தது என்பதும் தெரியவில்லை. மனிதர் திரையில்தான் நிறைய குடித்தது போல் நடித்திருக்கிறார். நிஜத்தில் குடிப்பழக்கம் இல்லாதவர். சிகரெட்டுகளைக்கூட தனது மகள்கள் பிறப்பிற்குப் பின் பெருமளவு குறைத்துக் கொண்டதாக அவருடைய பல வருட நண்பரான இயக்குநர் சசிமோகன் தெரிவித்தார். (பதிவர்களின் பின்னூட்டங்களுக்குப் பின்பு விசாரித்தபோது தெரிந்தது)
எர்ணாகுளத்தின் ஜூம்மா மசூதியில் போலீஸ் மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்ட ஹனீபா, வந்தாரை வாழ வைக்கும் சென்னைதான் தன்னையும் வாழ வைத்தது என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பார். அதே சென்னையில்தான் அவருடைய மரணமும் நிகழ்ந்து உடல் மட்டும் கேரளாவுக்குக் கொண்டு செல்லப்பட்டது காலத்தின் கொடூரம்.