Archive for the ‘விமானம்’ Category

எனது ஆகாசக் கனவு!

ஓகஸ்ட் 11, 2008

11-08-2008

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


சிறு வயதுக் கனவுகள் பெரும்பாலும் நிச்சயம் பலித்துவிடும். அது ‘பொய் சொல்லாத பிரதி’ என்பார்கள். அதில் ஒரு பிரதி எனக்கு மட்டும் இன்றுவரை நிறைவேறாமலேயே இருக்கிறது.

நிலாச் சோறு ஊட்டி வளர்ந்த பிள்ளைகளில் நானும் ஒருவனாக இருந்தும், நிலாவைவிட ஆடிக்கொரு தடவை, அமாவாசைக்கு ஒரு முறையாக வீட்டின் மீது பறந்து செல்லும் விமானங்களின் மீதான கவனம் என்னை அதிக அளவில் ஈர்த்திருந்தது.

என்னுடைய வீட்டில் எனது அண்ணனுக்காக வாங்கிய விளையாட்டு பொருட்கள், எனது அக்காக்கள் இருவரிடமும் சென்று, விளையாடப்பட்டு நசுங்கி அடையாளமே தெரியாத நிலையில் இருந்தபோதும் மறக்காமல் என்னையும் வந்தடைந்தது. அந்தக் கூட்டத்தில் ஒரு சிறிய இறக்கைகளைக் கொண்ட சிவப்பு கலர் விமானம் ஒன்றும் இருந்தது.

என்னை மிகவும் கவர்ந்திருந்த அந்த விமானத்தின் ஸ்பெஷலே அதனுடைய சைஸ்தான். இரண்டு கரப்பான் பூச்சி சைஸில் மட்டுமே இருந்த அந்த விமானம் எனது இணை பிரியாத் தோழனாக இருந்து வந்தது. அந்த விமானத்தின் இரண்டு கருப்பு கலர் சக்கரங்களும் உடைந்து போய் மொன்னையாகத்தான் இருந்தது. ஆனாலும் அதனைத் தரையில் தேய், தேய் என்று தேய்த்து எடுத்துக் கொண்டிருந்தேன். இரவு தூங்கும்பொழுது பொம்மைக்கு பதிலாக அந்த விமானம் எனது கைகளுக்குள் சிறைபட்டுக் கிடந்தது.

கொஞ்சம் வளர்ந்ததும் விமானத்தின் மீதான ஆசையும், பரபரப்பும் அதிகமானது எனக்குள். முதன்முதலாக நான் விமானத்தைப் பார்த்தது எந்த வயதில், எந்தத் திரைப்படத்தில் என்பது தெரியாவிட்டாலும், சிவாஜி நடித்த ஒரு திரைப்படத்தின் இறுதிக் காட்சியில் செளகார் ஜானகி ஒரு குழந்தையுடன் விமானத்தில் இருந்து இறங்கி வருவார். திருச்சி விமான நிலையம் என்று நினைக்கிறேன். அப்போதுதான் விமானம் என்னும் பூதம் எனக்குள் ஒருவித கிளர்ச்சியை உண்டு பண்ணியதாக எனது மூளையின் நினைவகம் தெரிவிக்கிறது.

குழந்தைகளுக்கே உரித்தான குணத்தோடு வீடு திரும்பி எனது அப்பாவிடம் “அவ்ளோ பெரிசா இருந்துச்சு.. பெரிய படிக்கட்டு வைச்சு இறங்குனாங்கப்பா..” என்று என் அப்பாவிடம் திக்கித் திணறி சொன்னதையும், வீட்டு வாசப்படியில் அமர்ந்து நகம் வெட்டிக் கொண்டிருந்த எனது தந்தை அதனை அவ்வளவு சிரிப்போடு கேட்டதையும் இப்போதும் நினைத்துப் பார்க்க முடிகிறது.

அதன் பின் விமானம் பற்றிய பலவித செய்திகளும் என்னை பரவசமாக்கிக் கொண்டிருந்தன. பேப்பரில், புத்தகத்தில் என்று எந்த இடத்திலும் விமானம் என்ற பெயருடன் புகைப்படம் இருந்தால் அடுத்த நிமிடம் கிழித்துவிடுவேன். கிழித்தவைகளை பத்திரமாக வைப்பதற்காக எழுதி மக்கிப் போயிருந்த ஒரு நோட்டைத் தேர்ந்தெடுத்து அதனுள் பத்திரமாக பாதுகாத்து வைத்திருந்தேன்.

பள்ளியில் விமானம் பற்றி மாணவர்களுடன் பேசப் பேச அதன் உருவத்தைப் போலவே எனது கனவும் பிரம்மாண்டமாகிக் கொண்டே போனது.

வீட்டிற்குள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது திடீரென்று வானத்தில் விமானத்தின் சப்தம் கேட்ட உடனேயே அப்படியே தாவிக் குதித்து வாசலுக்கு ஓடி வந்து தலையை 360 டிகிரியிலும் திருப்பி எங்கோ தூரத்தில் பின்புறத்தில் புகையைக் கக்கிக் கொண்டு செல்லும் எனது கனவைப் பார்த்துவிட்டுத்தான் வருவேன். பால்ய பருவத்தில் இதைவிட வேறு என்ன ஆச்சரியம் இருக்கக் கூடும்?

திண்டுக்கல் அருகே ஒரு முறை வெள்ளம் சூழ்ந்து நல்லமனார்கோட்டை என்னும் ஊர் அழிந்தபோது அதனைப் பார்ப்பதற்காக அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். வந்தார்.

அன்றைய பத்திரிகைகளில் எம்.ஜி.ஆர் வருவதைப் பற்றி ஏற்கெனவே படித்திருந்த தெரு மக்களோடு நானும் எனது அம்மாவும் வீட்டு வாசலில் ஏறக்குறைய 4 மணி நேரம் காத்திருந்தது மறக்க முடியாதது.. மதியவாக்கில் 3 மணியிருக்கும்.. வானத்தில் சிறிய அளவு சப்தத்தோடு ஆரம்பித்த அந்த விமானத்தின் அழைப்பால் தெருவே பரபரத்தது.

எனது தெருவில் குடியிருந்த அ.தி.மு.க. கிளைச் செயலாளர் மூக்கம்மா என்பவர் தனது வீட்டு முன்பாக திரளாக பெண்கள் கூட்டத்தைக் கூட்டியிருந்தார். ஒட்டு மொத்தத் தாய்க்குலங்களின் கூட்டமும் விமானத்தைப் பார்த்து கைதட்டலைத் துவக்க..

விமானம் வீட்டு மேலேயே பறந்து வந்து கொண்டிருந்தது. கழுத்தை அங்கிட்டும், இங்கிட்டுமாகத் திருப்பி ஒட்டு மொத்தக் கூட்டமும் அந்த விமானம் தங்களது விழிப்பார்வையில் இருந்து மறையும்வரை பார்த்துக் கொண்டிருந்தது. இதுதான் அந்த கனவை நேரில் பார்த்த முதல் அனுபவம்.

“சின்னதா இருக்கு.. கருப்பா இருக்கு.. எங்க போகுது? திரும்பி வருமா? எப்ப வரும்?” என்றெல்லாம் நான் கேட்டுத் துளைத்த கேள்விகளுக்கு பொறுமையாகப் பதிலளித்த எனது அப்பாவின் நினைவு இப்போதும் எந்த ரூபத்தில் விமானத்தைப் பற்றி யோசிக்கும்போதும் உடன் துணைக்கு வரத்தான் செய்கிறது.

விமானம் படம் போட்ட நோட்டுக்கள்தான் வேண்டும் என்று சொல்லி ஆறாம் வகுப்பில் சேரும்போது எனது அண்ணனிடம் போட்ட சண்டையும், அந்த பாழாய்ப் போன கனவினால்தான் வந்தது.. என்னைச் சமாளிக்கவேண்டி எனது அண்ணன் லைப்ரரியில் இருந்து ஒரு புத்தகத்தை எடுத்து வந்து அதில் இருந்த ஒரு விமானப் புகைப்படத்தை கிழித்து எனது நோட்டில் ஒட்டி “இதை மட்டும் தமிழ் நோட்டுக்கு வைச்சுக்க..” என்று சொல்லிக் கொடுத்தது எனக்கு இன்றும் நினைவிற்கு வருகிறது.

தொடர்ந்து நான் பார்த்தத் திரைப்படங்களும் இந்த விமானம் என்னும் பூதத்தை பூதாகாரமாக்கிக் கொண்டே சென்றது. ‘நினைத்தாலே இனிக்கும்’ திரைப்படத்தில் கமலஹாசனும், ஜெயப்பிரதாவும் விமானத்திற்குள் பேசிக் கொள்ளும் காட்சியில் விமானம் என்றால் இப்படித்தான் இருக்குமோ என்ற எனது எண்ணத்தில் முதல் பிள்ளையார் சுழி போட்டது.

எனக்கு அப்போது புரியாத ஒரே விஷயம், விமானம் தரையிறங்குவதும், புறப்படுவதும்தான். இது விஷயமாக எனது சக மாணவர்களுடன் நான் நடத்திய சண்டைகளும், சச்சரவுகளும் இப்போதும் சிரிப்பை வரவழைக்கிறது.

விமானத்தின் சக்கரங்கள் விமானம் புறப்பட்டதும் உட்புறம் மறைந்து போகும் என்ற வாதத்தையே அப்போதைய எனது வகுப்பு மாணவர்கள் பலரும் ஏற்றுக் கொள்ளவில்லை. அது அப்படியேதான் இருக்கும் என்று ஒரு சிலரும், “இறங்கும்போது அந்தச் சக்கரத்தை வைச்சுத்தான் பிளைட்டு உருண்டு வருமாம்.. இல்லாட்டி நம்ம சைக்கிள் மாதிரி குப்புறடிச்சு விழுந்திரும். அதுனால சக்கரம் அப்படியே நீட்டிக்கிட்டுத்தான் இருக்கும்.” என்றெல்லாம் வாதங்கள் எழும்.

ஆனாலும் எனக்கு இதில் நம்பிக்கையில்லை. விமானத்தை பஸ் மாதிரி ஸ்டார்ட் செய்து ஓட்டுவார்கள்.. கொஞ்ச தூரம் ஓடியதும் ஒரு கம்பியை வைச்சு இழுப்பாங்க. அவுங்க இழுக்க, இழுக்க அது அப்படியே மேல உயர ஆரம்பிச்சிரும். அப்புறம் எந்தப் பக்கம் போகணுமோ அந்தப் பக்கமா ஸ்டியரிங்கை பிடிச்சு வளைப்பாங்க.. பிளைட் போக ஆரம்பிச்சிரும்..” என்றெல்லாம் என் தரப்பு வாதப்பிரதிவாதங்களைத் தயங்காமல் அள்ளி வீசியிருக்கிறேன்.

இதையெல்லாம் அப்போது வேறுவழியில்லாமல் பொறுமையாகக் கேட்டு, என்னையும் சமாளித்து, இன்றும் என்னுடன் நட்புடன் இருக்கும் நண்பன் ஜன்னல்கார முத்தையாவிற்கும் எனக்குமான இன்றைய நட்பில் சிரிப்பை வாரி வழங்குவது இதுதான்.

“அதெப்படி.. அப்படியே மேல எந்திரிச்சு ஸ்டியரிங்கை திருப்பி அப்படியே போயிருமாக்கும்.. மவனே.. இதையெல்லாம் இப்ப எழுதினேன்னு வைச்சுக்க, உன் பொழப்பு நாறிப் போயிரும்..” என்று அவ்வப்போது மிரட்டிக் கொண்டிருக்கிறான். சொல்லவிருப்பவன் சொல்வதற்குள் நாம் முந்திக் கொள்வது நல்லது என்பதால்தான் நான் இங்கே சொல்லிவிட்டேன்.

இப்படி, நாளொறு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக எனது விமானக் கனவு எனது எண்ணத்தை ஊத்திவிட்டுக் கொண்டிருக்க.. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிந்த விடுமுறை நாளில் அந்த அதிசயம் ஒன்று நடந்தது.

அன்றைய காலைப் பொழுதொன்றில் எம்.எஸ்.பி. பள்ளியின் மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தேன். அப்போதுதான் ஒரு விமானம் மிகத் தாழ்வாக பறந்து வந்து கொண்டிருந்தது.. ஆட்டத்தைக்கூடக் கவனிக்காமல் விமானத்தையே ஆச்சரியத்துடன் பார்த்து பிரமித்துப் போனேன்.

நண்பர்களிடம் மிட்டாய்க் கடையை முறைத்துப் பார்த்த கதையாகச் சொன்னபோது “ஆமடா.. இந்த ரோட்டுல கடைசில திருமலைக்கேணி பக்கத்துல ஒரு ஏர்போர்ட் இருக்காம்.. எங்கப்பா சொன்னாரு. அங்கதான் இந்த பிளைட் இறங்கப் போகுதாம்..” என்றார்கள்.

ஆஹா.. எனது நீண்ட நாள் கனவு நனவாகும்போல இருக்கே என்றெண்ணி அப்போதே எனது நண்பர்களுடன் பேசினேன். “விமானத்தை நேரில் போய் பார்க்க வேண்டும். வருகிறீர்களா..?” என்று.. சிலர் ஒத்துக் கொள்ள.. வாடகை சைக்கிளில் போய் வருவது என்று முடிவு செய்து கொண்டோம்.

வீட்டில் சொன்னால் விடமாட்டார்கள் என்பதால் “நாளைக்கு செமிபைனல் மேட்ச் இருக்கு..” என்று பொய் சொல்லிவிட்டு இரவெல்லாம் தூங்காமல் விழித்துக் கொண்டிருந்தேன். அந்த விமானம் என்னும் பேய் எப்படியிருக்கும்? பெரிசா? சிறிசா? உள்ள விடுவானா? மாட்டானா? பக்கத்துல போய் பார்க்க முடியுமா? முடியாதா என்றெல்லாம் கனவு கண்ட நிலையில்தான் உறங்கிப் போனேன்.

விடிந்தது. YMR-பட்டிக்கு வந்து அங்கிருந்த எங்களது சந்திப்பு சென்டரான தாஸ் டீக்கடையில் ஆளுக்கொரு டீ அடித்துவிட்டு அருகில் இருந்த சண்முகம் சைக்கிள் கடையில் சைக்கிளையும் எடுத்துக் கொண்டு கிளம்பினோம்.

மொத்தம் எட்டு பேர். எட்டு சைக்கிள்கள்.. வண்டிகள் பறந்தன. எங்கும் நிற்காமல் செல்ல வேண்டும் என்ற நிபந்தனையுடன்தான் சைக்கிளை அலுத்த ஆரம்பித்திருந்தோம். கிட்டத்தட்ட 13 கிலோ மீட்டர் தூரம். அந்த சிறிய ரக விமானத்திற்கான விமான நிலையத்தை தூரத்திலிருந்து பார்த்தபடியே “வந்திருச்சு டோய்..” என்ற சந்தோஷக் கூச்சலுடன் சைக்கிளை மிதி, மிதி என்று மிதித்தோம்.

மூச்சு வாங்கி சைக்கிளை கேட் அருகே போட்டுவிட்டு பார்த்தபோது எனது 15 ஆண்டு கால கனவு ஒன்று, பிரம்மாண்டமான தனது உருவத்துடன் எங்களைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தது.

இதைத்தானே சரவணா பார்க்கத் துடித்தாய்..? இதுதானே உனக்குள் ஒரு களவாட்டம் ஆடிக் கொண்டிருந்தது..? என்ற ஆசையில் கேட்டைப் பிடித்துத் தொங்கியபடியே பேச்சு மூச்சில்லாமல் பார்த்துக் கொண்டிருந்தேன்.

அப்போது உடன் வந்திருந்த நண்பன் கெளரிசங்கர் ஒரே ஜம்ப்பில் கேட்டின் மீதேறி தாண்டிக் குதித்தான்.. அருகில் இருந்த ஒரு சிறிய கொட்டகையில் கட்டில் போட்டு வாட்ச்மேன் அமர்ந்திருந்ததை அவனும் கவனிக்கவில்லை. நாங்களும் கவனிக்கவில்லை.

எங்களையும் “வாங்கடா..” என்று அவன் சொல்லும்போதே வாட்ச்மேன் அரக்கப் பரக்க ஓடி வந்தான்.. அவனைப் பார்த்து நாங்கள் கெளரியை எச்சரிக்க மீண்டும் ஒரே ஜம்ப்பில் ஏறி எங்கள் பக்கம் வந்திறங்கினான்.
வாட்ச்மேன் “யாரும் உள்ளே வரக்கூடாது” என்று எச்சரித்தார்.

இவ்ளோ பெரிசை பக்கத்தில் போய் பார்க்க முடிந்தால் எப்படியிருக்கும் என்கிற அப்போதைய வயதின் காரணமாக அந்த வாட்ச்மேனிடம் எவ்வளவோ கெஞ்சினோம்.. ம்.. பலனில்லை. “முடியவே முடியாது..” என்றார். இன்னொரு நண்பன் விளையாட்டாக தன்னிடமிருந்த கடலை மிட்டாயை லஞ்சமாக கொடுக்க நீட்ட.. அதை அவர் வாங்காமல் முறைத்துக் கொண்டார்.

உள்ளே போக வழியில்லை என்பதால் ஆளுக்கொரு திசையாக சென்று ஒவ்வொரு கோணத்திலும் பார்க்க ஆரம்பித்தோம். எந்தத் திசையில் இருந்து பார்த்தாலும் அதன் பிரம்மாண்டமும், வடிவமும் எங்களுக்கு யானையை ஒத்த அதிசயத்தை அளித்தன.

மொட்டை வெயிலில், வியர்வை பொங்கி வழியும் நிலையில் நின்றிருந்த எனக்கு அந்தக் கணம் கொடுத்த பரவசத்தை, மீண்டும் பல ஆண்டுகள் கழித்து சென்னையில் முதன் முதலாக மெரீனா பீச்சில் கணக்கிலடங்கா தண்ணீருடன் வங்காளவிரிகுடாவைப் பார்த்து “ஆத்தாடி.. எம்புட்டு தண்ணி..” என்று வாய்விட்டுச் சொன்னபோதுதான் மீண்டும் கிடைத்தது.

பார்த்துக் கொண்டேயிருந்துவிட்டு நண்பர்கள் ஒவ்வொருவராக தங்களது சைக்கிளை எடுத்துக் கொண்டு நிழல் தேடி போய் அமர்ந்த பின்பும் கீழே கிடந்த சைக்கிளை எடுக்கக்கூட மனமில்லாமல் கேட்டை பிடித்துத் தொங்கியபடியே நின்றிருந்தது மிக, மிக இனிமையான அனுபவம்.

கால் சோர்ந்து போய் தளர, அந்த கேட்டின் அருகிலேயே தரையில் அமர்ந்து அதையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த கிறுக்குத்தனமும் தொடர்ந்தது. சாயந்தரம்வரையிலும் உட்கார்ந்து, உட்கார்ந்து பேசி முடித்து மாலை 5 மணியானவுடன் சண்முகம் அண்ணனை நினைத்து பயந்து போய் அங்கிருந்து கிளம்பினோம்.

மீண்டும் ஒரு முறை எனது கனவுலகின் நாயகனை கேட் அருகே சென்று ஆசை தீரப் பார்த்துவிட்டு வீடு திரும்பியபோது 26 கிலோ மீட்டர்கள் சைக்கிளை அழுத்திய கால்வலியைக்கூட மறக்கடித்தது அந்த கனவின் அழகும், பிரம்மாண்டமும்.

நீண்ட நாட்கள் கழித்து ஊர் விஷயங்களையும், உலக விஷயங்களையும் நண்பர்களுடன் பெட்டிக் கடைகளிலும், சினிமா தியேட்டர்களிலும் விவாதித்துக் கொண்டிருக்கும்போதுதான் அந்த விமான நிலையம் எனது ஊருக்கு வந்ததின் பின்னணியில் இருந்த ‘உண்மைக் கதை’ என்று சொல்லி ஒரு ‘கதை’ எனக்குச் சொல்லப்பட்டது.

அன்றைய காலக்கட்டத்தில் தமிழ்ச் சினிமாவில் கொடி கட்டிப் பறந்து கொண்டிருந்த ஒரு ‘நடிப்புத் தாரகை’க்காகவே அந்த விமான நிலையம் கட்டப்பட்டு, விமானமும் வாங்கப்பட்டதாக எனது நண்பர்கள் சொன்னபோது என்னால் நம்ப முடியவில்லை. அது உண்மையா, பொய்யா என்றுகூட இன்றுவரையிலும் என்னால் சொல்ல முடியவில்லை.

அந்த ‘நடிப்புத் தாரகை’ வார இறுதி நாட்களில் சென்னையில் இருந்து திண்டுக்கலுக்கு வருவாராம். அப்போதைய திண்டுக்கல் நகரின் மிகப் பெரிய செல்வந்தரின் வீட்டில் தங்கிவிட்டு, திங்கட்கிழமை காலை மீண்டும் சென்றுவிடுவார் என்று மேலதிகத் தகவல்களைக் கொட்டினார்கள். நம்புவதா வேண்டாமா என்கிற குழப்பத்தில் இருந்தேன் நான்.

எனது வீட்டில் கேட்டேன். சிரித்தார்கள். அக்கம்பக்கம் வீடுகளில் கேட்டேன். “அதுதான் ஊருக்கே தெரியுமே?” என்றார்கள். ஆனால் உண்மைதானா என்பதைத்தான் யாரும் சொல்லவில்லை. அனைவரும் சொல்கிறார்கள். ஆகவே நாங்கள் நம்புகிறோம் என்றனர். திண்டுக்கல்வாழ் மக்கள் வழி, வழியாகத் தங்களது பரம்பரையினரின் காதில் இடும் ஒரு அற்புதச் செய்தி இது ஒன்றுதான்..

காதலுக்காக எதை, எதையோ அடைந்தார்கள் அல்லது இழந்தார்கள் என்பதெல்லாம் காற்றோடுபோய், ஒரு விமான நிலையமே கட்டினார்கள் என்கிற கதைதான் திண்டுக்கல் நகர மாந்தர்களின் மிகப் பெரிய பெருமூச்சு.

உண்மையோ, பொய்யோ எப்படியோ எங்களது ஊரில் ஒரு விமான நிலையம் இருக்கிறதே என்கிற பெருமை திண்டுக்கல் மக்களின் மிகப் பெரிய சொத்து. மறுப்பதற்கில்லை.

இந்த பால்ய வயது கனவுக்குத்தான் எவ்வளவு வலிமை..? சுலபத்தில் மனதை விட்டு இறங்க மறுக்கிறது. இந்த வயதிலும் இன்னும்கூட ஊருக்குப் போகும்போதும் சரி. வரும்போதும் சரி.. மீனம்பாக்கம் விமான நிலையம் வந்தவுடன் உடல் தானாக எழும்பி கண்கள் விமானங்களைத் தேடுகிறது. இது ஒரு அனிச்சை செயலாக தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருக்க.. அந்த கனவை ஒரு நாள் அடையும்வரையிலும் இப்படித்தான் இருக்கும் என்று என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்டே வருகிறேன்.

எந்தத் ‘தாரகை’ எனக்கு உதவுவாரோ தெரியவில்லை.. காத்திருக்கிறேன்..!