Archive for the ‘விடுதலை’ Category

“ராஜீவ் காந்தியைக் கொன்றது சி.ஐ.ஏ.” – திருமாவளவனின் உளறல் பேச்சு

நவம்பர் 10, 2008

11-11-2008

என் இனிய வலைத்தமிழ் மக்களே..

ஈழத்து மக்களுக்கு ஆதரவு தரும் பொருட்டு கலைத்துறையினர் நடத்தி வரும் போராட்டங்களில் ஒரு பகுதியாக சின்னத்திரை கலைஞர்களின் கூட்டமைப்பு நேற்று சென்னை சேப்பாக்கம் விருந்தினர் விடுதி முன்பாக உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தியது.

இதில் நெடுந்தொடர்கள், குறுந்தொடர்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கு பெறும் நடிகர், நடிகைகள், கதாசிரியர்கள், இயக்குநர்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள் என்று பல பிரிவுகளிலிருந்தும் கலைத்துறையினர் கலந்து கொண்டனர். கூட்டமைப்பில் நானும் ஒரு உறுப்பினர் என்பதால் கலந்து கொண்டிருந்தேன்.

காலையில் தற்போது பாரதீய ஜனதாவில் இருக்கும் திருநாவுக்கரசர் உண்ணாவிரதத்தைத் துவக்கி வைத்தார். கூட்டமைப்பின் தலைவரும் இயக்குநருமான விடுதலை துவக்கத்திலேயே சட்டத்திற்கு உட்பட்டு, கட்டுப்பாட்டுடன் பேசும்படி சொன்னதைக் கேட்டபோதே மீறிப் பேசுவார்கள் என்பதை எதிர்பார்த்திருந்தேன். ஆனால் இவ்வளவு அப்பட்டமாக அரசியல் சார்பான நிகழ்ச்சியமாக மாறும் என்று எதிர்பார்க்கவில்லை.

கூட்டத்தில் பேசிய பலரும் அந்தக் கட்டுப்பாடு பற்றி விமர்சித்துவிட்டுத்தான் போனார்கள். விமர்சனங்களுக்கு சூட்டோடு சூட்டாக அப்போதே பதிலளித்த விடுதலை “கட்டுப்பாடு தேவைதான். எந்த விஷயத்திற்கும் ஒரு கட்டுப்பாடு தேவை..” என்றெல்லாம் பேசியவர் கொஞ்சம் தனது பேச்சிலும் ஆளும்கட்சிக்கு அடிமைத்தனம் போல பேசியதுதான் சற்று நெருடலைத் தந்தது.

விடுதலைப்புலிகள் வேறு; ஈழப் பிரச்சினை வேறு என்று ஒரு சாராரும், இவை இரண்டுமே ஒன்று என்று ஒரு சாராரும் போட்டி போட்டுக் கொண்டு தொடர்ந்தாற்போல் பேசிக் கொண்டுதான் இருந்தார்கள். இதிலும் ஒருவர் “உலகத்தில் நடுநிலைமை என்ற ஒன்றே இல்லை. ஒன்று இந்தப் பக்கம் இரு. இல்லாவிடில் அந்தப் பக்கம் போ.. நடுவில் நிற்பதாக நீ சொன்னால் நீ இரண்டு பக்கத்திற்கும் துரோகிதான்” என்று பொரிந்துவிட்டார்.

விடுதலைப்புலிகளை ஆதரிப்பவர்கள் எவ்வித தயக்கமும் இல்லாமல் உலகத்தில் ஒரே மாவீரன் பிரபாகரன்தான் என்று கூச்சநாச்சமில்லாமல் சொல்லிவிட்டுப் போனார்கள். மறு பிரிவினர் முதலில் அங்கே போர் நிறுத்தம் செய்யப்பட்டாக வேண்டும். பின்பு அனைத்து தமிழ்க் குழுக்களும், கட்சிகளும் ஒன்றிணைந்து சிங்கள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றார்கள்.

புலிகளை எதிர்த்துப் பேசினால் எப்படி ரியாக்ட் கிடைக்குமோ என்று தயக்கம் கொண்டவர்களெல்லாம் இந்தக் கட்டுப்பாட்டிற்குள் பேசுவதாகச் சொல்லிவிட்டு சுருக்கமாக பேச்சை முடித்துக் கொண்டார்கள். இந்திய ராணுவம் நடத்திய அத்துமீறலால்தான் அன்றைக்கு புலிகள் இந்திய ராணுவத்தை எதிர்த்துப் போராட வேண்டியிருந்தது என்று அடித்துச் சொன்னார்கள் சிலர்.

ராஜீவ்காந்தி கொலையை விசாரித்த சிறப்பு புலனாய்வுக் குழுவின் தலைவர் திரு.கார்த்திகேயனைத்தான் முதலில் இந்த உண்ணாவிரதத்தை துவக்கி வைக்க தான் அழைத்ததாகவும், அவருக்கு அன்றைக்கு பெங்களூரில் நிகழ்ச்சி இருந்ததால் வர இயலாது என்று சொல்லிவிட்டதாகவும் திரு.விடுதலை தெரிவித்தார்.

கூடவே “திரு.கார்த்திகேயன் இந்தப் பணியை கையில் எடுத்தபோது “கடவுளே.. இந்தக் கொலையைச் செய்தது அவர்களாக இருக்கக் கூடாது..” என்று வேண்டிக் கொண்டதையும் சொன்னவர், “ஆனால் உண்மை தலைகீழாக மாறி அவரை வருத்தப்பட வைத்துவிட்டது.. புலிகள்தான் ராஜீவ்காந்தியை கொலை செய்தார்கள் என்கின்ற வரலாற்று உண்மை வெளிவந்தது..” என்றார் விடுதலை.

ஆனால் இதே கூற்று மரியாதை நிமித்தமாக தன்னால் அழைக்கப்பட்டவராலேயே பொய் என்று விமர்சிக்கப்படும் என்று திரு.விடுதலையே எதிர்பார்த்திருக்கவில்லை.

உண்ணாவிரத்தை முடித்து வைக்க அழைக்கப்பட்டிருந்தார் திருமாவளவன். அவர் வருவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பே அவருடைய தம்பிமார்கள் சிலர் அங்கே வந்து குழுமி நிலைமையை அவ்வப்போது யாருக்கோ செல்போனில் தெரிவித்துக் கொண்டிருந்தார்கள்.

திருமாவளவன் வந்தபோது கூட்டமும் கூடி விட்டது. அவருடனேயே வந்தவர்களும் நிறைய பேர்.
வழமைபோல கணீரென்ற வசீகரிக்கும் குரலில் பேச்சைத் துவக்கிய திருமா, ராஜீவ்காந்தியைப் பற்றிய பேசத் துவங்கியபோது வழியில் போய், வந்து கொண்டிருந்த பேருந்துகளின் சத்தத்தைத் தவிர வேறு ஒரு சத்தமும் இல்லை. அவ்வளவு அமைதி.

“ராஜீவ்காந்தி. நல்லவர். வல்லவர். துடிப்பான தலைவர். சர்வதேச அளவில் ஆற்றல்மிக்கத் தலைவர்களில் ஒருவராக இருந்தவர்” என்றெல்லாம் பாராட்டிப் புகழ்ந்து தள்ளினார்.

தொடர்ந்து பேசுகையில், “ராஜீவ்காந்தி கொலையான சமயத்தில் தளபதி கிட்டு ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் ராஜீவ்காந்தியின் படுகொலைக்கும், விடுதலைப்புலிகளுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்று அதில் அவர் கூறியிருந்தார். அவர் சொன்னது சரி என்று அடித்துச் சொல்ல நான் கடமைப்பட்டிருக்கிறேன்.

நான் சொல்கிறேன்.. ராஜீவ்காந்தியை கொலை செய்தது அமெரிக்காவின் சி.ஐ.ஏ.தான். இதற்கு உடந்தையாக இருந்தது சுப்பிரமணியம் சுவாமியும், சந்திராசாமியும்தான்..” என்ற ஒரு மிகப் பெரிய கண்டுபிடிப்பை வெளிப்படுத்தினார்.

என்ன கைதட்டல்ன்னு நினைக்குறீங்க..?

நம்ம தமிழ்நாட்டு மக்கள் எவ்வளவு வெள்ளந்தியானவங்கன்னுதான் நமக்குத்தான் தெரியுமே..?

அதற்கான காரணங்களாக அவர் சொன்ன அபத்தமான காரணங்களில் ஒன்று, குவைத் ஆக்கிரமிப்பை எதிர்த்து ஈராக் நாட்டின் மீது அமெரிக்கா போர் தொடுத்தபோது அமெரிக்காவின் போர் விமானங்களுக்கு பெட்ரோல் கொடுக்க இந்தியா மறுத்ததாம். இதற்கு முக்கியக் காரணம் ராஜீவ்காந்திதான் என்பதால் அவரே அடுத்தத் தடவையும் பிரதமராக வந்தால் தங்களுடைய ஏகாதிபத்திய பரவலுக்கு தடைக்கல்லாக அவர் இருக்கக்கூடும் என்ற அச்சமும் அமெரிக்காவுக்கு இருந்தது என்றார் திருமா.

இன்னொரு காரணமாக இலங்கை, திருகோணமலை அருகே அமெரிக்கா படைத்தளத்தை அமைக்க விருப்பப்பட்டு காய் நகர்த்தி வந்தது. இலங்கை அரசை மிரட்டி அப்படிச் செய்யவிடாமல் தடுத்து வந்தவர் ராஜீவ்காந்திதான் என்பதால்தான் அமெரிக்கா தன்னுடைய சி.ஐ.ஏ. உளவாளிகளை வைத்து இப்படுகொலையைச் செய்ததாக உளறினார் திருமா.

எதைப் பற்றியும் கவலைப்படாமல் பொய்யுரைகளை அள்ளிவிடுவது தமிழக அரசியல்வியாதிகளுக்கு ஒன்றும் புதிதில்லை. ஆனாலும் அந்தப் படுகொலையில் சம்பந்தப்பட்டு, கொலையைச் செய்தவர்களே “அதை விடுங்க.. மறந்திருங்க..” என்கிற அர்த்தத்தில் “அது ஒரு துன்பியல் சம்பவம்” என்று சொன்ன பிறகும் மறுபடியும், மறுபடியும் ஒரு பொய்யையே ஏன் இப்படிச் சொல்லிக் கொண்டு பைத்தியமாகத் திரிகிறார்கள் என்பது புரியவில்லை.

மனித வெடிகுண்டுத் தாக்குதல் என்று சொன்னவுடனேயே அது நிச்சயம் புலிகள் வேலையாகத்தான் இருக்கும் என்று தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு இளைஞனும் நினைத்தான். நாங்கள் நினைத்தது போலவேதான் அது நடந்திருந்தது.

குற்றவாளிகளைத் தேடிப் பிடித்த சம்பவங்களும், முழுக் கதையையும் கோர்ட்டுக்கு கொண்டு வந்து சமர்ப்பித்த கதையையும் பாவம் திருமாவளவன் அப்போது வன்னி காடுகளில் பதுங்கியிருந்ததால் படிக்கவில்லை போலும்..

அந்தக் கொலைச் சம்பவத்திற்காக பல கோடிகள் செலவிட்டு அரும்பாடுபட்ட குற்றவாளிகளைத் தேடிப் பிடித்த சம்பவங்களே இந்திய வரலாற்றில் காவல்துறை மீதிருந்த ஒரு எதிர்பார்ப்பை பல மடங்கு உயர்த்திக் காட்டியிருந்தது.

வழக்குகளில் உச்சநீதிமன்றம் வரையிலான இறுதி தீர்ப்பும் சொல்லப்பட்டுவிட்ட நிலையில் ஒரு பொய்யை.. ஒரே பொய்யை.. மீண்டும், மீண்டும் திருப்பித் திருப்பிச் சொல்வதையும் ஒரு பெரிய உண்மை என்றெண்ணி கை தட்டிச் சிரிக்கிறதே ஒரு கூட்டம். இவர்களை என்னவென்று சொல்வது..?

திருமாவளவனுக்கு தமிழகத்து பிரபாகரன் என்று பெயரெடுக்க ஆசை. அவருடைய அடிப்பொடிகளுக்கும் அதேபோல் பொடியன்கள் என்று பெயெரடுக்கவும், தலையெடுக்கவும் மென்மேலும் முயற்சி செய்கிறார்கள் போலும்..

உணர்ச்சிகளைத் தூண்டிவிடுவது மிக எளிது. ஆனால் அவற்றைக் கட்டுப்படுத்துவது மிக, மிக கடினம். அரசியல்வாதிகளுக்கு என்ன..? மிக எளிதாகத் தூண்டிவிட்டுச் சென்றுவிடுகிறார்கள். ஆனால் அதைக் கேட்டு குழப்பமாகும் இளைய தலைமுறையினருக்கு என்ன தெரியும்? மேற்கொண்டு என்ன செய்வார்கள்..? உண்மையாகவே என்ன நடந்தது என்பதை அறியும்பொருட்டு அது பற்றிய செய்திகளைப் படிக்குத் துவங்கும் கூட்டத்தினர் எத்தனை பேர் இருந்திருப்பார்கள். 100-க்கு 10 பேர் படித்தாலே அதிகம். மீதி 90 பேரின் கதி..?

அரசியல் என்பது முழுக்க, முழுக்க பொதுநலம் சார்ந்தது என்பதை தலைகீழாக மாற்றி தன்னலமாக மாற்றிக் கொண்டு இளைய சமுதாயத்தினரை திசை மாற்றிக் கொண்டிருக்கும் திருமாவளவன் போன்றவர்கள் நடத்தும் அரசியல் என்பது கேவலமான, நூற்றுக்கு நூறு அக்மார்க் ஓட்டுப் பொறுக்கி அரசியலைத் தவிர வேறில்லை.

இவர் போன்ற அறிவுஜீவிகள்தான் தமிழகத்தின் அடுத்த தலைமுறையை எட்டாத உயரத்துக்குக் கொண்டு போகப் போகிறார்களாம்..

எல்லாம் நம் தலையெழுத்து..

கொசுறு :

நிகழ்ச்சிக்கு இலங்கைத் தமிழர்கள் சிலர் வந்திருந்தார்கள். அவர்கள் இலங்கையிலிருந்து சென்னை வழியாக பாரீஸ் பயணமாக வந்தவர்கள். வந்தவர்களை அமர வைத்து நன்றாகவே கவனித்தோம்.. திருமாவளவனின் பேச்சுக்கு நிமிடத்துக்கு நிமிடம் கை தட்டவும் செய்தார்கள்.

ஆனால், நிகழ்ச்சி முடிந்ததும் அவர்களும் தொலைக்காட்சி நட்சத்திரங்களுடன் புகைப்படம் எடுக்க ஆலாய்ப் பறந்ததை பார்த்து அந்த நட்சத்திரங்களே அரண்டு போனார்கள். அதிலும் புகைப்படத்திற்கு அனுமதி மறுத்த நடிகை மெளனிகாவை பின் தொடர்ந்து, “மேடம் ப்ளீஸ்.. மேடம் ப்ளீஸ்..” என்று கெஞ்சிக் கொண்டே சென்ற ஒரு 40 வயது மதிக்கத்தக்க ஒருவர், கடைசியில் மெளனிகாவை வழிமறித்து அவரைத் திரும்ப வைத்து புகைப்படம் எடுத்த பின்புதான் போகவேவிட்டார்.

ஒரு புறம் துக்கத்தையும், சாவையும் எதிர்கொள்ளும் மக்கள்..

மறுபுறம் இப்படியும் ஒரு சில மக்கள்..

யாரைக் குற்றம் சொல்வது..?