05-03-2009
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
சென்ற மாதத்தில் விஜய் டிவியில் ‘இயேசு வருகிறார்’ பாணியில் ‘விரைவில் நமீதா தோன்றுகிறார்’ என்று விளம்பரங்களை போட்டுத் தாக்கிக் கொண்டிருந்தார்கள். ஜோடி நம்பர்-1 நிகழ்ச்சியின் அடுத்த அவதாரமாக ‘பாய்ஸ் அண்ட் கேர்ள்ஸ்’ நிகழ்ச்சியாம்.. நடன நிகழ்ச்சி என்று சொல்லாமலேயே தெரிந்தது.
நான் பார்த்த அன்றைக்கு கேர்ள்ஸ் பிரிவில் இருந்து ஒரு சின்னப் பொண்ணு.. மிஞ்சிப் போனா வயசு 4 இல்லாட்டி 5 இருக்கும்.. ஒரு டான்ஸ் ஆடுச்சு பாருங்க.. அரண்டு போயிட்டேன்.. ‘சோளி கீ பிச்சே’ பாட்டு..!
அந்தப் பாட்டோட துவக்கத்துல நீனாகுப்தா திரையில் காட்டிய அதே மூவ்மெண்ட்ஸ்ஸை அந்தச் சின்னப் பொண்ணும் தன்னால முடிஞ்ச அளவுக்கு ஆடிக் காட்டுது. அப்படி ஒரு கைதட்டல். பாட்டு முழுவதிலும் அந்தச் சின்னப் பொண்ணு அப்படியொரு ஆர்வத்தோடு ஆடுது.. அது கூட இருக்குறவங்க, பாக்குறவங்க, விசிலடித்து உற்சாகப்படுத்துறாங்க. நம்ம கனம் நீதியரசரும், நீதியரசியும் இதை ‘ஆஹா.. ஓஹோன்னு’ பேசி “பெரியவங்களாலேயே இப்படி ஆட முடியாது”ன்னுட்டாங்க..!
டான்ஸ் முவ்மெண்ட்ஸ் எந்த லட்சணத்துல இருந்ததுன்னு படம் பார்த்த நமக்குத் தெரியும்.. இதை ஏதோ இளம் வயதுப் பெண்கள் ஆடியிருந்தால்கூட, அதனை சினிமா ஆர்வம்னு சொல்லிக்கலாம். ஆனா 4 வயசுப் பொண்ணு ஆடுறதை என்னன்னு பேசுறது..? பாட்டு செலக்ட் பண்றவங்க கொஞ்சமாச்சும் யோசிக்க மாட்டாங்களா..! அந்தப் பாட்டோட அர்த்தம் என்னன்னு அந்தப் பொண்ணுக்குத் தெரியுமா..? ஒரு சின்னக் குழந்தை அபிநயம் பிடிக்கக் கூடிய பாட்டா அது..? தப்பித் தவறி இந்தப் பொண்ணு பெரியவளானப்புறம் இதை பார்க்க நேர்ந்தா என்ன நினைப்பா அவளோட அம்மா, அப்பாவை..!
இதையெல்லாம் எப்படி கலை, ஆர்வம், நடிப்பு, நடனம்னு சேர்க்குறாங்கன்னு தெரியலை..?
ரஷ்யால சின்ன வயசுலேயே ஜிம்னாஸ்டிக்குன்னு சொல்லி சின்னப்புள்ளைகளுக்கு டிரெயினிங் கொடுக்குறதை அதே நாள்ல டிஸ்கவரி சேனல்ல பார்த்தேன்.
உடலை வில்லாய் வளைத்து, சுழன்று, அந்தரத்தில் மிதந்து, ஒடிந்து, ஒடித்து குதித்தோடி தரையில் உள்ளங்கால் ஊன்றி நின்று கைகளை உயர்த்தி பார்க்கும் பார்வையில் இருந்தது உடல்கட்டு நேர்த்தி. கொஞ்சமும் தாமதிக்காமல் கை தட்டத் தோன்றுகிறது, அது ஒரு வித்தையென்று..!
இது..!?