Archive for the ‘வல்வெட்டித்துறை’ Category

ஈழத்தில் இந்திய இராணுவத்தின் வெறியாட்டம் – பாகம்-1

நவம்பர் 16, 2008

16-11-2008

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

எனது இந்தப் பதிவிற்கு நண்பர் கொழுவி அவர்கள் அனுப்பியிருந்த பின்னூட்டம் இது.

அவருடைய விருப்பப்படியே தனிப்பதிவாகப் போடப்பட்டுள்ளது.

“கொழுவி said…

//இப்போது ராஜபக்சே செய்வதைப் போல் கொத்து, கொத்தாக குண்டுகளை மக்கள் மத்தியிலும், வீடுகளின் மேலும் அமைதி காப்புப் படை வீசவில்லை. முதலில் இதனைப் புரிந்து கொள்ளுங்கள்..//

🙂 🙂 🙂

1919ம் ஆண்டு, ஏப்ரல் 13ம் நாள் இந்தியாவில் அமிர்தசரஸ் நகரத்தில் ஜாலியான்வாலாபாக் படுகொலை நடந்தது. மைதானத்தில் கூடியிருந்த அப்பாவிப் பொது மக்களைப் பிரித்தானிய இராணுவம் கண்மூடித்தனமாகச் சுட்டுப் படுகொலை செய்தது. அந்தப் படுகொலையைத் தலைமை தாங்கி நடத்திய பிரித்தானிய ஜெனரல் டையர் ‘சுட்டேன், சுட்டேன் குண்டுகள் தீரும் வரை சுட்டேன்’ என்று கொக்கரித்தான்.////

இனி….

வல்வெட்டித் துறையைச் சுற்றி இருந்த மூன்று இராணுவ முகாம்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான இந்திய இராணுவத்தினர் வெறியுடன் புறப்பட்டு வந்து வல்வெட்டித் துறையைச் சுற்றி வளைத்தனர். உடனடியாக ஊரடங்குச் சட்டத்தைப் பிரகடனப்படுத்தினர். தொடர்ச்சியாக மூன்று நாள்களுக்கு ஊரடங்குச் சட்டம் நீடிக்கப்பட்டது. வீடுகளை விட்டு வெளியே வராமல் அச்சத்துடன் பதுங்கியிருந்த மக்களை வீட்டுக் கதவுகளை உடைத்து உள்ளே புகுந்து பதறப் பதறச் சுற்றுக் கொன்றார்கள். மொத்தம் 63 பேர் இவ்விதம் படுகொலை செய்யப்பட்டனர்.

நூற்றுக்கணக்கானவர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு மருத்துவ உதவி செய்வதற்கு முன் வந்த பிரான்சு மருத்துவக் குழுவினரை ஊருக்குள் நுழையவே இந்திய இராணுவம் அனுமதிக்கவில்லை. தொடர்ந்து மூன்று நாள்களாக இராணுவத்தினர் ஊரைச் சுற்றி முற்றுகையிட்டு இருந்ததால் இறந்து போனவர்களின் பிணங்களைக் கூட அப்புறப்படுத்த முடியவில்லை. பிணங்கள் அழுகிப் போன நிலையில் அந்தந்த வீடுகளுக்குள்ளேயே வைத்து உறவினர்களால் எரிக்கப்பட்டனர். கணவர் உடலை மனைவியும், மனைவியின் உடலைக் கணவரும் பெற்றோர் உடலைப் பிள்ளைகளும் பிள்ளைகளின் உடலைப் பெற்றோரும் எரிக்க வேண்டிய அவலத்திற்கு ஆளாயினர்.

மொத்தம் 123 வீடுகள் அடியோடு நாசமாக்கப்பட்டன. 45 கடைகள் முழுமையாக எரிக்கப்பட்டுச் சாம்பலாயின. சில கடைகளில் அவற்றின் முதலாளிகளையும் உயிருடன் உள்ளே தள்ளி எரித்தார்கள். மொத்தமாக 62 போக்குவரத்து வாகனங்கள் எரிக்கப்பட்டன. 12 மீன்பிடி படகுகள் நாசம் செய்யப்பட்டன. 176 மீன்பிடி வலைகள் எரிக்கப்பட்டன. பல வீடுகளில் தங்க நகைகள், பணம், மின்னணுப் பொருள்கள் இந்திய இராணுவத்தினரால் கொள்ளையடிக்கப்பட்டன. ஏராளமான பெண்கள் மிக மோசமான முறையில் கற்பழிக்கப்பட்டார்கள்.

இந்த நிகழ்ச்சி நடப்பதற்குச் சில மாதங்களுக்கு முன்னர் இந்திய இராணுவ பிரிகேடியர் சங்கர் பிரசாத் என்பவர் மக்கள் குழு உறுப்பினர்களைக் கூட்டிப் பின் வருமாறு கொக்கரித்தாராம்.

‘இந்திய இராணுவம் மீது புலிகள் தாக்குதல் மேற்கொண்டால் உங்கள் ஊரை அடியோடு எரிப்பேன். நூற்றுக்கணக்கில் மக்களைச் சுட்டத் தள்ளுவேன். இராமாயணத்தில் இலங்கை எரிக்கப்பட்டதைப் போல மீண்டும் இலங்கை எரியும். எங்களை யாரும் எதுவும் செய்ய முடியாது. நாங்கள் உலகில் 4-வது பெரிய இராணுவம்’.

அவர் மிரட்டியதைப் போலவே விரைவில் நடந்தது. அழகிய வல்லவை நகரம் சுடுகாடானது.–

——————

இத்தகைய சம்பவங்களின் தொகுப்பை நீண்ட பின்னூட்டங்களாக இட்டால் கருத்து சுதந்திரத்தின் பால் நீங்கள் கொண்டுள்ள பெருமதிப்பின் பேராலும் மாற்றுக் கருத்தின் மேல் கொண்டுள்ள பற்றுதலாலும் – நான் அனுப்பும் பின்னூட்டங்களை ஈழத்தில் இந்திய இராணுவத்தின் வெறியாட்டம் – பாகம்-1 பாகம்-2 என உங்களது பதிவில் பதிவாகவே வெளியிட முடியுமா….”

கொழுவி ஸார்.. உங்களது விருப்பத்தின்படியே வெளியிட்டு விட்டேன்..

நடந்தது உண்மை என்பதை பலரும் சொல்லுவதாலும், புத்தகங்களில் பதிவு செய்யப்பட்டிருப்பதாலும் இந்தக் கொடூரத்தை இந்திய அமைதி காப்புப்படைதான் செய்துள்ளது என்பதனை நான் ஒத்துக் கொள்கிறேன்..

மேலே முதலில் தாங்கள் குறிப்பிட்டிருக்கும் மூன்று வரிகளையும் நான்தான் எனது இந்தப் பதிவின் பின்னூட்டத்தில் எழுதியிருக்கிறேன் என்பதையும் ஒப்புக் கொள்கிறேன்..

இந்த ஒரு சம்பவத்தையும், கூடுதலாக புலிகளால் கேடயமாக்கப்பட்டு தாக்குதலில் இறந்து போன மக்களையும்தானே உங்களால் எண்ணிக்கை கூட்டப்பட்டுச் சொல்ல முடியும்.. இது இன ஒழிப்பா..

அமைதிக் காப்புப் படை தமிழ் மக்களுக்கு ஒரு உதவிகூட செய்யவில்லையா.. உங்கள் மனசாட்சியையே கேட்டுப் பாருங்கள்..

ஆனாலும் இப்போதும் இதற்காகத்தான் ராஜீவ்காந்தியை கொலை செய்தோம் என்று நீங்கள் சொன்னீர்களானால், அதன் தொடர்ச்சியான நடவடிக்கைகளையும் நீங்கள் எதிர்கொண்டுதான் ஆக வேண்டும்.

இது சங்கிலித் தொடர் போல.. ஒருவருடன் முடியாது..

நீங்கள் எழுதிய ஜாலியன் வாலாபாக்கில் நிகழ்த்திய துப்பாக்கிச் சூட்டை நடத்தியது பிரிட்டிஷ் தளபதியின் தலைமையிலான ராணுவம்.. இதை வருடக்கணக்கில் நாங்களும் படித்துதான் வந்திருக்கிறோம்.. இது பொருத்தமான ஒப்பீடு அல்ல..

எங்களது ராணுவத்தினரும், போலீஸாரும் முற்றிலும் யோக்கியமானவர்கள் என்று நான் சொல்லவில்லை.

நான் அண்ணன் வைகோவுக்கு எழுதிய கடிதத்தில் 2-வது மற்றும் 3-வது யோசனைகளைப் படித்துப் பாருங்கள். உங்களுக்கே தெரியும்..

எல்லாம் சரி.. புலிகள் எதிர்ப்பு என்றவுடனேயே வரிந்து கட்டிக் கொண்டு சண்டைக்கு வருகிறீர்களே கொழுவி..

இதே வைகோவுக்கு எழுதிய கடிதத்தில் நான் எழுதியுள்ள 21-லிருந்து 25 வரையிலான யோசனைகளை படித்தீர்களா இல்லையா..

அதைப் பற்றி ஏன் ஒன்றுமே சொல்ல மறுக்கிறீர்கள்..

உங்களைப் பொறுத்தவரையில் புலிகள் மட்டும்தான் ஈழத் தமிழர்கள்.. அவர்களே ஈழத்தின் பிரதிநிதிகள். அப்படித்தானே..

புலிகளை எதிர்க்கும் மற்றவர்களெல்லாம் தமிழர்கள் இல்லையா.. அவர்களெல்லாம் சிங்கள ராணுவத்தால் பாதிக்கப்படவில்லையா..

இந்திய அமைதிக் காப்புப் படையால் கொல்லப்பட்ட மக்களுக்காக நீதி கேட்கிறீர்கள்.

இதே புலிகளால் வகை, தொகையில்லாமல் கொன்றழிக்கப்பட்டார்களே சக போராளி இயக்கத்தின் தோழர்கள்.. அவர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்.

கிட்டுவின் மீது வெடிகுண்டு வீசியதற்காக புலிகளின் சிறைகளில் இருந்த மற்ற இயக்கப் போராளிகள் 57 பேரை தாக்கியே கொலை செய்திருக்கிறார்களே புலிகள்.. ஏன் இது மட்டும் இன அழிப்பு இல்லையா..

கொழுவியாரே.. இலங்கைப் பிரச்சினையில் தவறுகளைச் செய்துள்ளது ஒருவர், இருவரல்ல.. சம்பந்தப்பட்ட அனைவரும்தான்.. இடையில் மாட்டிக் கொண்டு செத்துக் கொண்டிருப்பது அப்பாவி பொதுமக்கள்தான்..

எல்லாவற்றிகும் அடிப்படை காரணம் ஆயுதம்தான்.. அதனை முதலில் புரிந்து கொள்ளுங்கள்..

புலி ஒருவனைக் கொல்லும். அந்த ஒருவன் பதிலுக்கு வேறொரு புலியைக் கொல்லும்.. அந்தப் புலி, இன்னொருவனைக் கொல்லும்.. அந்த இன்னொருவன் மற்றொரு புலியைக் கொல்லும்..

இது சக்கரம் போல சுழன்று கொண்டேதான் இருக்கும். விடிவு காலம் கிடையாது..

ஏனெனில் இது அதிகார வேட்கைக்கான ஆயுதப் போராட்டம். முடிவே கிடையாது..

குறிப்பு : “ஈழத்தில் இந்திய இராணுவத்தின் வெறியாட்டம் – பாகம் 2”-ஐ எதிர்பார்க்கிறேன்.. அனுப்பினால் நிச்சயம் இடுவேன்.. (தாங்களே தனித்தளம் வைத்திருக்கிறீர்கள். இதனை முன்பே போட்டிருக்கலாமே..)

வாழ்க வளமுடன்

நன்றி..