Archive for the ‘வலைப்பதிவர் சந்திப்’ Category

ஆகஸ்ட்-5 – வலைப்பதிவர் பட்டறை – எனது டைரி குறிப்புகள்-5

ஓகஸ்ட் 17, 2007

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

அறிமுகம்

முதல் பாகம்

இரண்டாம் பாகம்

மூன்றாம் பாகம்

நான்காம் பாகம்

இடையில் வரவணையான் என் கையில் சிக்காமல் எஸ்கேப்பாகிக் கொண்டேயிருந்தார். மனுஷன் பின்னாடியே போய் பேச வேண்டியிருந்துச்சு.. இதுக்குத்தான் ஒத்த கருத்துள்ள மனுஷங்களையா பிரெண்ட்ஷிப் பிடிக்கணும்ன்றது..

மிதக்கும் வெளி போய்விட்டார் என்று வரவணையான் என்னிடம் சொல்ல வெளியில் மரத்தடியில், ரிப்போர்ட்டர்கள், லிவிங்ஸ்மைலுடன் ஒரு மினி கான்ப்ரன்ஸ் நடத்திக் கொண்டிருந்தார் மிதக்கும்வெளி.

வண்டியைக் கிளப்பிக் கொண்டு போகும்போது அவரை வழி மறித்து “என்னை மறந்திராதீங்க ஸார்..” என்றேன். “உங்களைப் போய் மறப்பனா..? நாளைக்கே உங்க பேர்ல நாலு கமெண்ட் நானே போட்டுடறேன். ஓகேவா..?” என்று அன்பாகச் சொல்லிவிட்டு எஸ்கேப்பானார் சுகுணா. ம்.. எம்புட்டு நக்கலு..?

இந்த போலி கமெண்ட்டு மேட்டருக்கு, நான் எத்தனை கஷ்டப்பட்டு பதிவு போட்டு, அழுதிருக்கேன்னு எனக்குத்தான தெரியும்..

தம்பி செந்தழல் ரவி ஒரு நேரத்தில் ஒழுக்கமாக அரங்கத்தில் அமர்ந்து கருத்தரங்கை கேட்டுக் கொண்டிருந்தார். பக்கத்தில் சென்று அமர்ந்தேன்.

“வாங்க ராயல் பாருக்குப் போயிட்டு வரலாம்..” என்றார். சரி.. ஏதோ சாப்பிடத்தான் சொல்றாரோ என்று நினைத்து “சரி போகலாம்..” என்றேன்.. வெளியில் வந்தோம்..

வரவனையான், லக்கிலுக், ரவி என்று கிளம்பும்போது ரவி சொன்னார்.. “அண்ணே நீங்க ஒரு half-ஆவது அடிப்பீங்கள்லே..” என்று.. “தம்பி நீ இதுக்குத்தான் கூப்பிட்டியா ராசா..” என்றேன். “பின்ன பாருக்கு எதுக்கு கூப்பிடுவாங்க..? டீ குடிக்கவா..?” என்றார். “இல்லப்பா.. ஒரு சிப் குடிச்சாலும் நான் அங்கேயே மட்டைய போட்டிருவேன். என் உடம்புக்கு அது ஒத்துக்காது. நீ கிளம்பு..” என்று சொல்லிவிட்டு திரும்பி உள்ளே வந்துவிட்டேன்.

ஆனாலும் எல்லா இடத்திலும்தான் ஒற்றர்கள் இருக்கிறார்களே. இப்படி ஒரு டீம் வெளில கிளம்புதுன்னு யாரோ உள்ள போய் யார்கிட்டயோ பத்த வைச்சிட்டாங்க போலிருக்கு..

வரவணையான், ரவி – அவரவர் காரிலும் லக்கிலுக் பைக்கிலும் கிளம்பி நின்னுக்கிட்டிருக்காங்க.. வாசல்லேயே செல்போன்ல மடக்கிட்டாங்க.. என்ன சொன்னாங்களோ தெரியலே.. ரெண்டு காரும் திரும்பி உள்ளே வந்து.. தொங்கிப் போன முகத்தோடு புள்ள ரவி, முனங்கிக்கிட்டே முன்னாடி வந்து உக்காந்துச்சு..

அப்புறம் தெரிஞ்சது, உள்ள ஒரு மேட்டரு ரவிக்கு இருக்குன்னு.. “வலைத்தளத்தில் வேலை வாய்ப்புகள்” அப்படின்ற தலைப்புல ரவி பேசுச்சு.. பேசுச்சு.. பேசி முடிச்சுச்சு.. அவ்வளவுதான்.. லக்கிலுக்கை பார்த்து ஒரு லேசா லுக்குவிட்டுட்டு அப்படியே நைஸா நழுவிக்கின்னு எஸ்கேப்பு..

இந்தப் பக்கம் நம்ம ஓசை செல்லா ஒலி, ஒளி பத்தி பேசப் போறேன்னு ஆரம்பிக்க.. குறைந்த நேரம்தான் என்று பத்ரி ஸார் இழுத்தார். விக்கியும் குறித்த நேரத்தில் முடித்தாக வேண்டும் என்பதில் உறுதியாக இருக்க..

செல்லாவுக்கு மனம் கொள்ளாத வருத்தம், அஞ்சு நிமிஷத்துல முடிக்க வேண்டியதாகிப் போச்சேன்னு.. சரி விடு சாமி.. அதான் டெய்லி நாலு போட்டோ, ரெண்டு வீடியோன்னு ஏத்திக்கிட்டே இருக்கியே.. அது போதும் உனக்கு..

மாடியில் அனைத்து செய்முறைப் பயிற்சிகளையும் முடித்துவிட்டு தம்பி வினையூக்கியும், பொன்ஸ¤ம் கீழ்த் தளத்திற்கு வந்து கலந்து கொண்டனர்.

பொன்ஸ் வலைத்தளத்தில் உலா வரும் ஒளிக்கதிர்களான மங்கையர்களின் பங்கு குறித்து பேசினார். நேரமின்மையால் அவசரம், அவசரமாக முடிக்க வேண்டிய கட்டாயத்தில் பேசினது எனக்கு வருத்தம்தான்.. பாவம்.. நிறைய பேசணும்னு இருந்தார்.. கெடுத்தது மா.சி.தான்..

அவர்தாம்பா பட்டறைலேயே நிறைய நேரம் மைக்கை யார்கிட்டேயும் தராம வைச்சிருந்து அவரே பேசிக்கிட்டாரு.. அடுத்தப் பட்டறைல அவர்கிட்ட நன்றி உரையையும், பாலபாரதிகிட்ட கட்டி மேய்க்கிற வேலையையும் விடணும்.. (எத்தனை தடவை ‘ங்கொய்யால’ன்னு சொல்றதை எண்ணுறதுக்கு ஒரு ஆளையும் போட்டிரலாம்)

சொல்லி வைத்தாற்போல் நன்றியுரை நிகழ்த்த வந்த பாலபாரதி, “நான்… பாலபாரதி..” என்றவுடன் சட்டமன்றத்தில் நடக்கும் மேசை தட்டுதல்களைப் போன்ற ஓசை எழும்பியதைச் சொல்லித்தான் ஆக வேண்டும். பொய் சொன்னா நல்லாயிருக்காது பாருங்க..

அதையும் பத்தே பத்து வரில சொல்லி முடிச்சு பட்டறைக்காக இரண்டு மாத காலமாக உழைத்த அத்தனை நல்ல உள்ளங்களையும் ஊர், உலகத்துக்கு காண்பித்துவிட்டு விடைபெற்றார்.

இது எப்படா முடியும் என்று ஆவலுடன் காத்துக் கொண்டிருந்த தம்பி லக்கிலுக் விட்டால் போதும் என்று ராயல் பாருக்கு உடனேயே கிளம்பிவிட்டார். அங்கேயும் ஒரு பதிவர் பட்டறையை ரவி, வரவணையான், முகுந்த் ஆகியோரோடு லக்கிலுக் நடத்தியதாக பின்னாளில் கேள்விப்பட்டேன்.

பத்ரி ஸார் முதலில் கிளம்பி ‘ஹாய்’, ‘பை..’ சொல்லி வெளியேறினார்.

இதற்காகவே காத்திருந்தார்போல் தம்பி நந்தா நேற்று இரவு வாங்கியிருந்த அந்த ஸ்வீட் பாக்ஸை திறக்க, நிமிடத்தில் காலி.

இந்த நேரத்தில்தான் ஒரு மடிக்கணினி எனக்கு முன்பாக ஆசை காட்டிக் கொண்டே சும்மா கிடந்தது. எடுத்து “யாருடையது..?” என்று கேட்டேன். செல்லா “தெரியாது..” என்றார். நந்தா “தெரியாது..” என்றார். ஜே.கே. “தெரியாது..” என்றார்.

சரி.. கைல வைச்சுக்குவோம். அப்பால பார்த்துக்கலாம் என்று சொல்லி வெளியே கொண்டு வந்து டேபிளில் வைத்து பக்கத்தில் பாதுகாவலாக நின்றிருந்தபோது, என் அருகில் அமர்ந்திருந்த சிவஞானம்ஜியிடம் வந்த தருமி ஐயா, “உங்களை எங்கயோ பார்த்த மாதிரியிருக்கே.. யார் ஸார் நீங்க..?” என்றார். இதே கேள்வியை கிட்டத்தட்ட ஒரு பதினைஞ்சு பேர்கிட்டயாச்சும் கேட்டிருக்கும் இந்த பெரிசு. எல்லாம் மதுரை ரவுசு..

சிவஞானம்ஜி ஐயா தான் சென்னைப் பல்கலைக்கழக ஆட்சி மன்றக் குழு உறுப்பினராகப் பணியாற்றிய சம்பவத்தைச் சொன்னார். பெருமையாக இருந்தது.

பொன்ஸ் வந்து மடிக்கணினி என்னுடையது என்று சொன்னபோது எனக்கு சப்பென்று ஆனது.. தெரிந்திருந்தால் அப்படியே தூக்கிட்டு எஸ்கேப்பாயிருப்பேனே.. யாருமே சொல்லலைப்பா..

லிவிங்ஸ்மைல் வித்யா அம்மணி இப்போதும் அடக்கமாக அமைதியாக காட்சியளித்தார். நான் விடைபெற்றபோதும் ஒரு சின்ன தலையசைப்பு. அவ்ளோதான்.. ‘கோடம்பாக்கம்’ எப்படியெல்லாம் மாத்துது பாருங்க..

குசும்பன் என்ற கோவி கண்ணன் என்ற நாமக்கல் சிபி கடைசிவரைக்கும் என் உடன் இருந்து பார்ப்பவர்களிடமெல்லாம் என்னைக் காட்டி இவர்தான், “உண்மையான உண்மைத்தமிழன்..” என்று சொல்லிக் கொண்டிருந்தார். ஒண்ணும் சொல்ல முடியலப்பா..

இதுல வெண்குழல் பத்த வைக்க துணைக்கு செல்லாவையும் அழைத்துக் கொண்டு ஓரமாக ஒதுங்கியபோது நான் கேட்டேன், “யோவ் இது உனக்கே நல்லாயிருக்கா.. நான் சிகரெட்டை விட்டுட்டேன்னு பதிவே போட்டியே.. இப்ப இழுத்து இழுத்து விடுற.. அப்ப அந்தப் பதிவைப் படிச்ச நாங்கள்லாம்..” என்று சொல்லி முடிப்பதற்குள்ளாக பதில் வந்தது.. “சந்தேகமேயில்லை.. லூஸ¤கதான்.. யார் உங்களைப் படிக்கச் சொன்னா..” என்றார் சிபி. துணைக்கு நம்ம செல்லாவும் சேர்ந்து கொள்ள அருகில் நின்று புகையைப் பிடிக்கத்தான் முடிந்தது என்னால்.

இதில் எனக்கு பெரிய வருத்தம் தந்த விஷயம் என்னவெனில், சக பதிவர் திரு.பாலராஜன்கீதா அவர்கள் 3, 4 முறை என்னுடன் பேசுவதற்கு முயன்றும் என்னால் அவருடன் தொடர்ந்து பேச முடியாத சூழல் ஏற்பட்டுவிட்டது. கடைசியில் பேசிக் கொள்ளலாம் என்று நினைத்திருந்தபோது, அவர் சென்றுவிட.. ஸாரி ஸார்.. வெரி வெரி ஸாரி..

நண்பர் முத்துக்குமார் திடீரென்று வந்து அறிமுகம் செய்து கொண்டார். புகைப்படத்தில் பார்ப்பதைவிடவும் மிக இளமையாக இருந்தார். எனக்கு அடையாளம் தெரியவில்லை.

“காலையிலேயே சென்னைக்கு வந்துவிட்டாலும், வேலை இருந்ததால் கடைசி நேரத்தில்தான் வந்தேன்..” என்று பத்து தடவையாச்சும் வருத்தப்பட்டுச் சொன்னார். “சரி விடுங்க.. அடுத்த பட்டறை உங்க ஊர்லதான் இருக்கும்.. அப்ப பார்த்துக்கலாம்..” என்றேன்.

இதே நேரம் தருமி ஐயா, மதுரை பட்டறை குறித்து பாலபாரதியிடம் குசுகுசுவென கிசுகிசு பாணியில் பேசிக் கொண்டிருந்தார்.

ஆக மொத்தம், உண்மைத்தமிழனுக்கு இன்னொரு 6 பதிவுக்கு மேட்டர் வருது.. வாழ்க பாலபாரதியும், பெருசு தருமியும்..

நண்பர் காசி ஆறுமுகத்திடமும் தனியே பேச வேண்டும் என்று நினைத்திருந்தேன். காசி ஸார் எப்போதும் நான்கு, ஐந்து பேர் இருக்கும் கூட்ட ஜோதியுடனேயே இருக்க.. முடியவே இல்லை..

கிளம்புகின்றபோது நண்பர் கிருபாசங்கரும், ஹாய் கோபியும் என்னிடம் சிக்கினார்கள்.

கிருபாசங்கரிடம் பேசினேன்..

“நீங்கதான் இட்லிவடையா..?

இல்லையே..

அப்ப நீங்க யாரு?

கிருபாசங்கர்..

நீங்கதான் இட்லிவடைன்னு எல்லாரும் சொல்றாங்களே..

அது வேற கிருபாசங்கர்..

அப்ப அவர்தான் இட்லிவடைன்னு நீங்க சொல்றீங்களா..?

இல்ல.. இல்ல.. எனக்குத் தெரியாது..

இப்பத்தான் தெரியும்னீங்க..

அவர் பேர் கிருபாசங்கர்ன்னு தெரியும்னு சொன்னேன்..

உங்களைத்தான எல்லாரும் கை காட்டுறாங்க..

தப்பா சொல்லிருப்பாங்க.. நான் விருகம்பாக்கம்.. அவர் சைதாப்பேட்டை..

அப்ப சைதாப்பேட்டைதான் இட்லிவடையா..?

நோ கமெண்ட்ஸ்..

ஒத்துக்கவே மாட்டீங்களா..?

எழுதினாத்தான ஒத்துக்குறது..?

நீங்க கிழக்கு பதிப்பகத்துல வேலை பார்க்குறதா சொன்னாங்களே..?

அது சைதாப்பேட்டை..

அப்ப நீங்க..?

நான் விருகம்பாக்கம்..

அப்ப இட்லிவடை..

அது நான் இல்லே..”

சத்தியமா எனக்குப் புரியலை சாமிகளா..

இதுனால நான் என்ன சொல்றேன்னா.. அடுத்த கூட்டமோ, பட்டறையோ எங்க நடந்தாலும் சரி.. யார் மடிக்கணினியைப் பயன்படுத்தினாலும் அவரோட பிளாக்கர் அட்ரஸ் கேட்டுட்டு, கூட ஒரு ஆளையும் காவலுக்குப் போட்டிரணும்.. அப்பத்தான் இந்த இட்லி வடை யாருன்னு கண்டுபிடிக்க முடியும்..

அந்த நேரத்திலும் பாலபாரதியும், மா.சி.யும் மிகவும் பரபரப்பாகவே இருந்தார்கள். காபி மெஷினை ஆட்டோவில் ஏற்றி அனுப்பியதில் இருந்து தண்ணீர் கேன்களை அனுப்புவதுவரை ஒரு கல்யாணத்தை நடத்தி முடித்த திருப்தி அவர்களுக்கு.

தருமி ஐயா, சிவஞானம்ஜி, பொன்ஸ், லிவிங்ஸ்மைல், தம்பி வினையூக்கி, தம்பி சிபி, நண்பர் அதியமான் ஆகியோரிடமெல்லாம் சொல்லிவிட்டு மா.சி.க்கும், பாலபாரதிக்கும் ஒரு ஸ்பெஷல் தேங்க்ஸ் சொல்லிவிட்டு, செல்லாவுடன் அவருடைய ஹோட்டலுக்குக் கிளம்பினேன்.

ஹோட்டல் அறையில் பாட்டில் கையில் இல்லாமலேயே செல்லா தள்ளாட்டத்துடனேயே இருந்தார். எனக்கும் அப்படித்தான் இருந்தது. அவ்வளவு டயர்டான சூழ்நிலையிலும் பேசினோம்.. பேசினோம்.. பேசிக் கொண்டேயிருந்தோம்..

இரவு டிபனை அவருடனேயே சாப்பிட்டுவிட்டு செல்லா சொன்ன ‘அட்வைஸ்கள்’ அனைத்தையும் காதில் வாங்கிக் கொண்டு, இரவு 9 மணிக்கு அங்கிருந்து கிளம்பினேன்..

செல்லா அறைக் கதவைச் சாத்துவதற்கு முன் கடைசியாக எனக்கு சொன்ன அட்வைஸ், “முதல்ல பொழப்ப பாருங்க.. அப்புறமா பிளாக்ல எழுதலாம்..” என்பதுதான்..

எனக்குத் தேவையான அட்வைஸ்தான்..!