Archive for the ‘வரதட்சணை’ Category

‘கல்லானாலும் கணவன்; புல்லானாலும் புருஷன்’

ஒக்ரோபர் 5, 2007

05-10-2007

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

எவ்வளவுதான் படித்திருந்தாலும் இந்தப் பெண்கள் திருந்த மாட்டார்கள் போலிருக்கிறது.

‘கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன்’ என்பதை உலகத்திலேயே அதிகமாக நம் நாட்டுப் பெண்கள்தான், அப்படியே அட்சரப் பிசகாமல் பின்பற்றி வருகிறார்கள் போலும்.

இது இன்றைய ‘தினத்தந்தி’ நாளிதழில் வந்துள்ள ஒரு செய்தியின் சுருக்கம்.

சென்னை, பாரிமுனை அங்கப்ப நாயக்கன் தெருவில் வசித்து வருபவர் 31 வயதான பாத்திமா சுல்தானா. இவரது கணவர் பெயர் அமீர் அலி மெகதி. இவர்களது திருமணம் கடந்த 2001-ம் ஆண்டு ஜனவரி மாதம் நடந்தது.

பாத்திமா பி.ஏ.பட்டதாரி ஆவார். அமீர் அலி மெகதி எம்.காம். பட்டப்படிப்பை முடித்து தற்போது துபாயில் உள்ள தனியார் நிறுவனமொன்றில் மாதம் ரூபாய் 1 லட்சம் சம்பளத்தில் வேலை செய்து வருகிறார்.

பாத்திமா தரப்பினர் திருமணத்திற்காக 50 பவுன் நகைகளை வரதட்சணையாகக் கொடுத்து, 5 லட்சம் ரூபாய் செலவில் நட்சத்திர ஓட்டலில் இவர்களது திருமணம் நடந்துள்ளது.

திருமணம் நடந்த போது அமீர் அலி சென்னையில் ஒரு தனியார் கம்பெனியில் 5000 ரூபாய் மாதச் சம்பளத்திற்கு வேலை பார்த்து வந்துள்ளார்.
பின்பு பாத்திமாவின் அண்ணன் 50 ஆயிரம் ரூபாய் செலவு துபாயில் அமீர் அலி மெகதிக்கு வேலை வாங்கிக் கொடுத்துள்ளார்.

வேலை கிடைத்து அமீர் துபாய் போன பிறகு மாமியார் சித்திகாவும் மாமனார் அமீர் அலி உசேனும் தன்னை சித்ரவதை செய்ததாக போலீஸில் புகார் செய்துள்ளார் பாத்திமா.

அந்தப் புகார் மனுவில், “தனது பெற்றோர் வீட்டுக்குச் செல்வதற்கு தனக்குத் தடை விதித்தார்கள். தனது கணவர் வருடத்திற்கு 10 நாட்கள் விடுமுறையில் சென்னை வரும்போது அவருடன் இருக்க விடுவதில்லை..” என்று குற்றம் சுமத்தியுள்ளார்.

“மாமனார், மாமியாரை மீறி தனது பெற்றோர் வீட்டிற்குச் சென்றதைக் காரணம் காட்டி தன்னை பெற்றோர் வீட்டிற்கே அடித்து விரட்டி விட்டதாகவும், தற்போது கணவர் சென்னை வந்தபோது அவரைப் பார்க்கவே தன்னை அனுமதிக்கவில்லை” என்றும் சொல்லியுள்ளார் பாத்திமா.
“கூடுதலாக இன்னும் 2 லட்சம் ரூபாய் கொடுத்தால்தான் என் கணவரோடு சேர்ந்து வாழ முடியும்..” என்று தனது மாமனார், மாமியார் நிபந்தனை விதிப்பதாகச் சொல்லியிருக்கிறார்.

தனது கணவரோடு சேர்த்து வைத்து, மாமனார், மாமியார் கொடுமையிலிருந்து தனக்கு விடுதலை வாங்கித் தரும்படி கேட்டு போலீஸிடம் புகார் மனு கொடுத்துள்ளார்.

மனுவை வாங்கிய போலீஸார் அமீர் அலியின் பெற்றோரையும், அவரையும் அழைத்து விசாரித்துள்ளார்கள்.

வழக்கம்போல் முதலில் கவுன்சிலிங் முறையில் ஆலோசனைகள் சொல்லியுள்ளார்கள்.

எல்லாவற்றையும் கேட்டுக் கொண்ட அமீர் அலி மெகதி தனது மனைவி பாத்திமா தன்னுடன் சேர்ந்து வாழ வேண்டுமெனில் சில நிபந்தனைகள் உள்ளது. அதை அவள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று சொல்லி 20 நிபந்தனைகள் அடங்கிய பட்டியலை தயாரித்து அளித்துள்ளார்.

அதில் சில நிபந்தனைகள் கீழே..

“1. இந்த ஒப்பந்தம் அமலுக்கு வந்த மறுநிமிடம் முதல் பாத்திமா அவரது பெற்றோர்களை மறந்துவிட வேண்டும்.

2. செல்போனிலும் பாத்திமா அவரது பெற்றோர்களையோ, உறவினர்களையோ தொடர்பு கொண்டு பேசக்கூடாது.

3. நான் துபாயில் இருக்கும்போது எனது பெற்றோரின் அனுமதியின்றி பாத்திமா வீட்டை விட்டு வெளியே போகக்கூடாது.

4. அவ்வாறு வெளியில் போகும்போது மற்ற ஆண்மகன்களை ஏறெடுத்துப் பார்க்கக்கூடாது.

5. நான் துபாயில் இருக்கும்போது பாத்திமா ஒழுக்கமாக நடந்து கொண்டாள் என்று எனது பெற்றோர் நற்சான்றிதழ் வழங்கினால்தான் தொடர்ந்து அவளோடு வாழ்வேன்.

6. எனது 6 வயது மகள் தற்போது கான்வென்ட் பள்ளியில் படிக்கிறாள். அதற்கான செலவை நான் ஏற்றுக் கொள்வேன்.

7. நான் சென்னை வரும்போது என்னுடைய விருப்பப்படிதான் பாத்திமா உடை அலங்காரம் செய்து கொள்ள வேண்டும். என்னுடைய விருப்பப்படிதான் அவள் சாப்பிட வேண்டும். என்னுடன் மட்டும்தான் அவள் வெளியில் வர வேண்டும். என்னோடு வரும்போது மற்ற ஆண் மகன்களை திரும்பிப் பார்க்கக் கூடாது.

8. இரவு படுக்கை அறைக்குள் என்னுடைய அனுமதி பெற்ற பின்புதான் பாத்திமா உள்ளே வர வேண்டும். அவளாக விருப்பப்பட்டு செக்ஸ் உறவுக்கு என்னை வற்புறுத்தக்கூடாது. நான் விரும்பினால் மட்டுமே அவளோடு செக்ஸ் உறவு வைத்துக் கொள்வேன். செக்ஸ் உறவில் என்னுடைய விருப்பப்படி பாத்திமா நடந்து கொள்ள வேண்டும்.

9. நான் எங்கு செல்கிறேன், யாரைப் பார்க்கிறேன் என்பது போன்ற கேள்விகளை பாத்திமாவோ அவரது பெற்றோர்களோ என்னிடம் கேட்கக் கூடாது.

10. பாத்திமாவை நான் வேலை பார்க்கும் துபாய் நாட்டிற்கு கண்டிப்பாக அழைத்துச் செல்ல மாட்டேன். அவள் கடைசிவரை சென்னையில்தான் வசிக்க வேண்டும்.

11. உலகத்தில் எந்த நாட்டிலும், எந்த இடத்திற்கும் எந்த பெயருடனும் தங்குவதற்கு எனக்கு உரிமை உள்ளது. அது பற்றி யாரும் கேள்வி கேட்கக் கூடாது..”

– இவை போன்ற 20 நிபந்தனைகள் அடங்கிய ஒரு ஒப்பந்தப் பத்திரத்தைத் தயாரித்த அமீர் அலி மெகதி அதில் தனது கையெழுத்தையும் போட்டார்.

பின்பு, “தனது மனைவியான பாத்திமாவும் இந்த ஒப்பந்தப் பத்திரத்தை ஏற்று அதன்படி நடப்பேன் என்று சம்மதித்து கையெழுத்துப் போட்டால்தான் நான் அவளுடன் குடும்பம் நடத்துவேன்..” என்று அமீர் அலி மெகதி போலீஸாரிடம் கண்டிப்போடு கூறியுள்ளார்.

இந்த நிபந்தனைகளுடன் கூடிய ஒப்பந்த பத்திரத்தை பார்த்த போலீஸார் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். பாத்திமாவோ இதற்கும் ஒப்புக் கொண்டுள்ளார்.

அடுத்து, “தனது காலில் விழுந்து வணங்கி இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்வதாகச் சொல்ல வேண்டும்..” என்று திடீர் நிபந்தனை விதித்துள்ளார் அமீர் அலி. இதையும் செவ்வனே செய்திருக்கிறார் பாத்திமா.

கடைசியாக எனது பெற்றோர் பாத்திமாவை ஏற்றுக் கொள்கிறார்களா என்பதை அவர்களிடம் கேட்டுவிட்டு பின்பு நானும் ஒத்துக் கொள்வதாக அமீர் அலி சொல்லியுள்ளார்.

இதன் பிறகுதான் ஆன்ட்டி கிளைமாக்ஸ¤ம் நடந்தேறியுள்ளது.

இதுவரை பொறுத்தது போதும் என்றிருந்த பாத்திமா, “இனி பொறுக்க முடியாது. எனக்கு இவர் இனி வேண்டாம். நீங்கள் சட்டப்படி நடவடிக்கை எடுங்கள்” என்று போலீஸாரிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதன்பின் வேறு வழியில்லாமல் போலீஸார் அமீர் அலி மெகதியையும், அவருடைய அம்மா சித்திகாவையும் வரதட்சணைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அமீர் அலியின் அப்பா 60 வயதைத் தாண்டியவர் என்பதால்(!!!) அவர் மீது வழக்கு மட்டுமே போட்டுள்ளார்களாம்.

என்னத்த சொல்றது..?

கல்வியறிவு என்பதே வாழ்க்கையை மேம்படுத்தத்தான்.. இதில் யாருடைய படிப்பறிவு யாருக்குப் பயன்பட்டிருக்கிறது..?

படிப்பதினால் பெற்ற கல்வி வாழ்க்கைக்கு உதவாதெனில் அது என்ன வாழ்க்கை..?

எவ்வளவு படித்திருந்தாலும், என்ன படித்திருந்தாலும் அது சமூகம் உருவாக்கியுள்ள மதம், ஜாதி, மொழி, திருமணம், சடங்குகள், கட்டுப்பாடுகள் போன்ற விலங்குகளுக்குள் உட்பட்டதுதானா..?

பின்பு எதற்கு படிப்பு..? கல்வியறிவு..?

தன்னை ஒரு மனுஷியாகவே நடத்த முடியாது என்பதை நிபந்தனைகளைப் போட்டு சொல்பவனிடம் எதற்காக இந்தப் பெண் ஒத்துக் கொள்கிறாள்..?
தனது மகளுக்காகவா..? அல்லது இந்த சமூகத்தின் முன் தனியே நிற்க முடியாது என்று போதையூட்டி வரும் நமது வாழையடி வாழையான குடும்ப போதனைக்காகவா..?

இவ்வளவு படித்தவனுக்கே இப்படியெல்லாம் கவுன்சிலிங் நடத்த வேண்டியுள்ளது..

அந்தப் பெண்ணை மனைவி என்று நினைத்தானா அல்லது அடிமை என்று நினைத்தானா..?

புனிதமான குடும்ப உறவுகள் என்பதையே ஆண்டான்-அடிமை என்ற இலக்கணத்திற்குள் கொண்டு வந்து அதற்கு கொடூரமான தனது சாடிஸ்ட் மனப்பான்மையை வெளிப்படுத்தி நிபந்தனைகளை போட்டிருக்கிறானே.. இவனையெல்லாம் என்ன செய்வது..?

ரோட்டோரமாக கிடக்கும் தண்ணீர் குழாய்களை இருப்பிடமாக ஆக்கிக் கொண்டு, கிடைப்பதை குடும்பத்துடன் பகிர்ந்து கொண்டு, எதிர்காலம் பற்றிய கவலையில்லாமல் இன்றைய பொழுதுக்கு தன் குடும்பத்தை பட்டினி போடாமல் உழைத்துக் கொண்டிருக்கும் ஒரு படிப்பறிவில்லாத ஆணுக்கு முன் இந்த அமீர் அலி மெகதியை போன்ற ஜென்மங்கள் எல்லாம் வெறும் விலங்குகள்தான்..