13-11-2008
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
இந்தக் கட்டுரையும் இன்றைக்கு வந்த பின்னூட்டம்தான்..
ஒரே பார்வையில் ஈழத்து மக்களின் பிரச்சினை சென்று கொண்டிருப்பது போல் தோன்றுகின்ற நேரத்தில் மாற்றுக் கருத்துள்ள ஈழத்து தமிழ் மக்களும் களத்தில் இருக்கிறார்கள் என்பதனை நாம் உணர்தல் வேண்டும்.
அவர்களின் கட்டுரை இது..!
தமிழக உறவுகளே! வன்னி மக்களை பாதுகாப்பாக வெளியேற அனுமதிக்கும்படி புலிகளிடம் வலியுறுத்துங்கள்!!
– வன்னியூரான்
இந்தியத் தமிழ்நாட்டின் அரசியல்வாதிகள் இலங்கை அரசுக்கும் புலிகளுக்கும் இடையில் போர்நிறுத்தம் ஒன்றை கொண்டுவந்துவிட, திரும்ப திரும்ப குரல் எழுப்பியவண்ணம் உள்ளதாக இங்கு வன்னி மக்கள் அறிகின்றனர்.
மேலெழுந்த ரீதியாக பார்க்கும்போது உங்களது நோக்கம், இங்குவன்னியில் வாழுகின்ற சுமார் 4 லட்சம் அப்பாவி தமிழ் மக்களை பாதுகாப்பதுதான் என்பது போலத்தோன்றும்.
தா.பாண்டியன் முதல் முதலமைச்சர் கருணாநிதி வரை இந்த போர் நிறுத்தத்தை வலியுறுத்துகின்றனர். தமிழக அரசியல் தலைவர்கள் எல்லோரும் இப்படி ஏகோபித்த குரலில் போர்நிறுத்தத்தை வலியுறுத்துவதால், அதில் ஏதோ விடயமிருப்பதாக தமிழக மக்களும் நம்ப வைக்கப்படுகின்றனர். இதற்கு மேல் தமிழக மக்களிடம் அதிகம் எதிர்பார்க்க முடியாதுதான்.
எனினும் வன்னியில் வாழுகின்ற தமிழ் மக்களின் உண்மையான நிலை என்ன என்பதை, திரும்ப திரும்ப நமது தமிழக உறவுகளுக்கு விளக்குவது இலங்கைத் தமிழ் மக்களின் தவிர்க்கவியலாத கடமையாக இருக்கின்றது. ஏனெனில் தமிழக மக்களுக்கு வன்னி நிலவரம் பற்றி சொல்லப்படும் தகவல்கள் அனைத்தும், தமிழக அரசியல்வாதிகளால் சொல்லப்படுகின்றது.
இந்தத் தமிழக அரசியல்வாதிகளுக்கு புலிகளினால் ஒழுங்கு முறையாக பணம் வழங்கப்படும் என்பது, தமிழக மக்களுக்கு தெரிய வருவதில்லை.
அண்மைக்காலங்களில் கனடாவிலும் ஐரோப்பாவிலும் வாழுகின்ற தமிழ் மக்களிடம் பணம் சேகரிக்கும் புலி முகவர்கள், தமிழ்நாட்டில் தமக்கு ஆதரவாக கூட்டங்கள், ஊர்வலங்கள் நடாத்துகின்ற அரசியல்வாதிகளுக்கு பெரும்தொகை பணம் வழங்கவேண்டியிருப்பதால், புலிகளுக்கு அதிகளவு பணம் வழங்கும்படி வெளிப்படையாகவே கோரிவருகின்றனர். இதுவும் தமிழக மக்களுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை.
வன்னி நிலைமைகள் தமிழக அரசியல்வாதிகள் சொல்வதற்கு எதிர்மாறானது என்பதை, தமிழக மக்கள் புரிந்துகொள்வது அவசியம்.
வன்னியில் உணவுக்கு தட்டுப்பாடு, மருந்துக்கு தட்டுப்பாடு, மக்கள் வகைதொகையில்லாமல் கொல்லப்படுகிறார்கள், பெண்கள் இலங்கை இராணுவத்தால் மானபங்கப்படுத்தப்படுகிறார்கள் என்றெல்லாம் தமிழக அரசியல்வாதிகள் பிரச்சாரம் செய்கிறார்கள்.
இவ்வாறெல்லாம் பிரச்சாரம் செய்யும் தமிழக அரசியல் தலைவர்கள், தினமும் வன்னி யுத்தமுனையில் இலங்கை இராணுவத்தால் டசின் கணக்கில் கொல்லப்படும் புலி உறுப்பினர்கள் (சிறுவர்கள் முதல் இளைஞர்கள், இளம் யுவதிகள் வரை) குறித்து எதுவும் சொல்லாமல் மௌனம் காக்கிறார்கள்.
புலிகள்தான் இலங்கை தமிழ் மக்களின் பாதுகாவலர்கள் என்றால் புலிகள் கொல்லப்படுவதற்கும் கண்டனக்குரல் எழுப்பலாம்தானே? இங்குதான் தமிழக அரசியல்வாதிகளின் கபடத்தனம் அம்பலத்துக்கு வருகிறது. அதாவது புலிகளுக்காக வெளிப்படையாக குரல் எழுப்பினால், தமிழக அரசியல் தலைவர்களது அந்தரங்க நோக்கம் அம்பலமாகிவிடும். அதாவது ஈழத்தமிழர்களை பாதுகாப்பது இவர்களது நோக்கமல்ல, புலிகளைப் பாதுகாப்பதே இவர்களது நோக்கம் என்பது தெரிய வந்துவிடும்.
புலிகளைப் பாதுகாப்பதுதான் இவர்களது நோக்கம் என்றால், தமிழகமக்கள் இவர்களுக்கு ஆதரவு வழங்காமல் தூரவிலகிவிடுவார்கள் என்பது தமிழக அரசியல் தலைவர்களுக்கு நன்கு தெரியும்.
தமிழக அரசியல்வாதிகள் சொல்வதுபோல, வன்னியில் உணவுத் தட்டுப்பாட்டால் எந்தவொரு நபரும் இதுவரை இறந்துவிடவில்லை. இனிமேலும் இறக்கப்போவதும் இல்லை. இங்கு இலங்கை அரசாங்கமும் ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்புகளும் வாராவாரம் போதிய உணவுப்பொருட்களை அனுப்பி வருகின்றன.
தமிழக அரசியல்வாதிகளை தவிர, இலங்கையில் செயல்படுகின்ற சர்வதேச நிறுவனங்களோ,அல்லது வேறு நாடுகளில் உள்ள எந்தவொரு அரசாங்கங்கமோ, வன்னியில் உணவுத்தட்டுப்பாடு நிலவுவதாக இதுவரை சொல்லவில்லை.
மேலும் இலங்கை இராணுவம் இங்கு எந்தவொரு தமிழ் பெண்களையும் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கவுமில்லை. 1995ல் இராணுவம் யாழ்ப்பாணத்தை விடுவித்த பொழுதோ, சென்றவருடம் கிழக்கு மாகாணத்தை விடுவித்தபோதோ,இலங்கை இராணுவம் தமிழ்ப்பெண்களிடம் ஒழுங்கீனமாக நடந்துகொண்டதாக ஒரு முறைப்பாடுதன்னும் வரவில்லை. புலிகள்கூட அவ்வாறு ஒரு குற்றச்சாட்டை இதுவரை இலங்கை இராணுவம் மீது சுமத்தவில்லை. தவிரவும் இலங்கை இராணுவம் தற்போது வன்னியில் கைப்பற்றியுள்ள இடங்களில் பொதுமக்கள் எவரும் இல்லாதபடியால், இராணுவம் எவ்வாறு பாலியல் வன்செயல்களில் ஈடுபட முடியும்?
ஆனால் தொல்.திருமாவளவன்,வை.கோபாலசாமி,
அளவுக்கதிமாக பொதுமக்கள் கொல்லப்படுகிறார்கள் என்ற தமிழக புலி ஆதரவாளர்களின் பிரச்சாரத்திலும் எவ்வித உண்மையுமில்லை. இதுவரை நடந்த விமானப்படையின் தாக்குதல்களின்போது மிகக்குறைவான அளவில் பொதுமக்கள் கொல்லப்பட்டது உண்மையே.
அதற்கு காரணம் புலிகள் தமது பாதுகாப்புக்காக, வன்னி மக்கள் செறிவாக வாழும் பகுதிகளில் முகாம் அமைத்துப் பதுங்கியிருப்பதாகும். புலிகளின் முகாம்கள் இலங்கை இராணுவத்தால் தாக்கப்படும்போது சில வேளைகளில் பொதுமக்களும் அதில் அகப்பட்டு விடுகிறார்கள். (புலிகளின் முகாம்கள் பற்றிய தகவல்களையும் புலிகளின் அதிருப்தியாளாகளும் வன்னிப் பொதுமக்களுமே இராணுவத்துக்கு வழங்குகின்றனர்) அதற்காகத்தான் யுத்தம் ஆரம்பித்தவுடனேயே, வன்னி மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வருமாறு இலங்கை அரசாங்கம் அழைப்பு விடுத்தது. ஆனால் வன்னி மக்கள் பாதுகாப்பாக வெளியேறிச் செல்லமுடியாதபடி புலிகள் இங்கு தடைவிதித்ததுடன், மக்களை தமது பாதுகாப்பு கேடயமாக வைத்திருக்கிறாhகள். மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறிச் செல்ல அனுமதிக்குமாறு ஐக்கிய நாடுகள் சபையும் பிரித்தானிய அரசாங்கமும் வேண்டிக்கொண்டபோதும், புலிகள் செவிமடுக்கவில்லை.
அதன்பின்னரே இலங்கை அரசாங்கம் வன்னிக்குள்ளேயே விசுவமடுவிலிருந்து ஒட்டிசுட்டான் வரையிலான பகுதியை பாதுகாப்பு வலயமாக அறிவித்தது. பொதுமக்களின் உயிர்கள்மீது இலங்கை அரசாங்கத்திற்கு அக்கறையில்லையெனில், இலங்கை அரசாங்கம் இவ்வாறெல்லாம் செயல்படுமா?
இலங்கை அரசாங்கம் வன்னிக்குள்ளேயே பாதுகாப்பு வலயத்தை அறிவித்தபின்பும், மக்களை அங்குசென்று வாழமுடியாதபடி புலிகள் தடுத்து வருகின்றனர். உதாரணமாக அண்மைக் காலங்களில் பரந்தனில் உள்ள குமரபுரம் கிராமம் மீது, விமானப்படை மூன்று தடவைகள் குண்டு வீசியது. இதில் நான்கைந்து பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன், சிலர் காயமும் அடைந்தனர். இதற்குக்காரணம் புலிகள் அந்தப்பகுதியில் முகாம்கள் அமைத்திருப்பதால், தமது பாதுகாப்புக்காக அங்குள்ள மக்களை வெளியேறாதபடி தடுத்து வைத்திருக்கின்றனர். ஆனால் இலங்கை இராணுவத்தின் முன்நகர்வைப் பொறுத்தவரையில், பரந்தன் அவர்களுக்கு முக்கியமான ஒரு இடம்.
இப்பொழுது கிளிநொச்சி மாவட்டத்தின் மேற்குப்பகுதியில் பூநரியை நோக்கி முன்னேறும் இராணுவம், பூநகரியை கைப்பற்றிய பின்னர், குடமுறுட்டி ஆற்றை ஊடறுத்து, பரந்தனை நோக்கி நகர்வதற்கான வாய்ப்புகள் அதிகமுண்டு. அதேவேளை விரைவில் கிளிநொச்சியை கைப்பற்றப்போகும் இராணுவம், அடுத்ததாக பரந்தனை நோக்கியே முன்னேறும்.
இந்த இரண்டு இராணுவங்களும் ஒன்று சேர்ந்தபின், ஒரு பிரிவு ஆனையிறவை நோக்கி நகர, இன்னொரு பகுதி முல்லைத்தீவை நோக்கி விசுவமடு –புதுக்குடியிருப்புக்கூடாக நகரும் சாத்தியக்கூறுகள் உண்டு. எனவே எப்படிப் பார்த்தாலும் இலங்கை இராணுவத்தைப் பொறுத்தவரையில், பரந்தன் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு இடம்.
இந்த இடத்தில் புலிகள் பொதுமக்களை பலவந்தமாக தடுத்து வைத்திருப்பது தமது பாதுகாப்புக்கேயொழிய, மக்களின் பாதுகாப்புக்கல்ல. இதிலிருந்தே புலிகளால் தமிழ் பொதுமக்களுக்கு பாதுகாப்பா அல்லது ஆபத்தா என்பதை தமிழக மக்கள் நன்கு புரிந்தகொள்ள முடியும். புலிகள் தமது தமிழக ஆதரவாளர்கள் மூலம் யுத்த நிறுத்தத்தை கோருவது தம்மை அழிவிலிருந்து பாதுகாத்துக் கொள்ளவே.
வன்னியிலுள்ள பொதுமக்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக்கொள்ள தயாராக இருப்பதால், அவர்களுக்கு போர்நிறுத்தம் ஒன்றும் தேவையில்லை. அவர்கள் கோருவது எல்லாம் பிரபாகரனும் அவரது கூட்டமும், வன்னி மண்ணை விட்டு நீங்கிவிட்டால் யுத்தமும் நின்றுவிடும், இலங்கை இராணுவமும் விலகிவிடும் என்பதாகும்.
புலிகள் அவ்வாறு விலகத் தயாராக இல்லாவிடின், தங்களையாவது பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அனுமதிக்கும்படி புலிகளிடம் வன்னி மக்கள் வேண்டுகிறார்கள். ஆனால் புலிகள் வன்னி மக்களது வேண்டுகோளை ஏற்க மறுப்பதுடன், வன்னி மக்களின் பிள்ளைகளையும் பலாத்காரமாப் பிடித்து போர்முனைக்கு கொண்டு செல்கிறார்கள். இந்தக் கொடுமையை தமிழக அரசியல்வாதிகள் யாரும் தட்டிக்கேட்காதது,வன்னிமக்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.
ஏறக்குறைய 13 ஆண்டுகளாக புலிகளின் கொடுமைக்குக்கீழ் வாழும் வன்னித்தமிழ் மக்களுக்காக, தமிழக சகோதர உறவுகள் குரலெழுப்பாதது மிகவும் வேதனைக்குரிய விடயம் என வன்னி மக்கள் கருதுகிறார்கள்.
புலிகள் வீசியெறியும் வெறும் எலும்புத் துண்டுகளுக்காக தமிழக அரசியல்வாதிகள் இந்த மக்களின் வேதனையை கண்டும்காணாமல் இருப்பது கொடுமையிலும் கொடுமை. எனவேதான் வன்னி மக்கள் இன்று தமிழக அரசியல்வாதிகளைவிட்டு, தமிழக மக்களிடம் தமது வேதனையையும் வேண்டுகோள்களையும் நேரடியாக சமர்ப்பிக்க வேண்டியுள்ளது.
வன்னி மக்களின் கோரிக்கை ஒன்றேயொன்றுதான். போரை நிறுத்துவதும் தொடர்வதும் இலங்கை அரசாங்கத்தையும் புலிகளையும் பொறுத்தவிடயம். போர் புரியும் இரு பகுதியினரும் ஒரு முடிவுக்கு வரும்வரை, நாம் வீடுவாசல்களை இழந்து அனாதைகளாக மரங்களின் கீழும் திறந்த வெளிகளிலும் எத்தனை காலம்தான் வாழ்வது? புலிகள் வேறு, வன்னி மக்கள் வேறு என்றே, வன்னி மக்கள் குரலெழுப்புகின்றனர்.
எனவே இந்தப்போர் முடியும்வரை வன்னியைவிட்டு வெளியேறி, யாழ்ப்பாணத்திலோ, வவுனியாவிலோ,கொழும்பிலோ இருக்கின்ற தமது உறவுகளிடம் சென்றுவாழ உதவிசெய்யுங்கள் என அனைத்துநாட்டு அரசாங்கங்களிடமும்,குறிப்பாக தமது தமிழக உறவுகளிடமும் வேண்டுகின்றோம்.
புலிகளுக்கு கடுமையான நிர்ப்பந்தம் கொடுக்காவிட்டால், வன்னி மக்களை இந்த யுத்தகளத்திலிருந்து புலிகள் விடுவிக்கப்போவதில்லை. இந்த யுத்தத்தில் புலிகள் தப்பிப்பிழைப்பதற்கு எவ்வித வழியுமில்லாமல் இருப்பதால், தங்களுடைய அழிவுடன் வன்னி மக்களையும் பிணைத்து வைத்திருக்க முயல்கின்றனர் என எமது மக்கள் கருதுகின்றனர். அதை உணர்ந்துதான் தினமும் ஒரு சில வன்னி மக்களாவது புலிகளது பிடியிலிருந்து கடலுக்கூடாகவும் காடுகளுக்கூடாகவும் தப்பிச்செல்கின்றனர். இதுவொன்றே வன்னி மக்களின் இன்றைய உணர்வைக்காட்டபோதுமானதாகும்.
எனவே தமிழக உறவுகளே! நாங்களும் நீங்களும் தொப்புள்கொடி உறவுள்ளவர்கள் என நீங்கள் பேசுவது உண்மையானால், இந்தப்போர் முடியும்வரை எம்மை வன்னியிலிருந்து வெளியேறி, பாதுகாப்பான இடங்களில் தங்குவதற்கு அனுமதிக்கும்படி புலிகளிடம் தொடர்ந்து வலியுறுத்துங்கள்.
அத்துடன் அதற்கான முயற்சிகளில் ஈடுபடும்படி தமிழக அரசையும், இந்திய நடுவண் அரசையும் வலியுறுத்துங்கள். இதைத்தவிர நீங்கள் வெறுமனே நடாத்தும் ஆர்ப்பாட்டங்களால் எமக்கு எவ்வித பயனும் விளையப்போவதில்லை.
http://www.thenee.com/html/121108-1.html
நன்றி : வதா