Archive for the ‘வக்கீல்-போலீஸ் மோதல்’ Category

உயர்நீதிமன்ற மோதல் விவகாரம்-தாமதமான நீதி..!

மார்ச் 18, 2009

18-03-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

சென்னை உயர்நீதிமன்ற சரித்திரத்தில் பொதுமக்கள் தாங்களே வழக்கறிஞர்களாக வாதாட வேண்டிய முதல் சூழலை ஏற்படுத்தி, அனைத்துத் தரப்பினரையும் எப்போது இந்தப் பிரச்சினை முடிந்து தொலையும் என்று ஏக்கப்பட வைத்த உயர்நீதிமன்றக் கலவர வழக்கில் ஒரு இடைக்கால உத்தரவினை நீதியரசர்கள் இன்று பிறப்பித்துள்ளனர்.

இத்தனை நாட்களாக பலரையும் தூங்கவிடாமல் வைத்திருந்த மில்லியன் டாலர் கேள்வியான உயர்நீதிமன்றத்திற்குள் தடியடி நடத்த உத்தரவிட்ட போலீஸ் அதிகாரி யார் என்ற கேள்விக்கு இன்றைக்குத்தான் தமிழக அரசு பதில் அளித்துள்ளது.


தனது உடல்நலக் குறைவையும் பொருட்படுத்தாமல் பிரச்சினையைத் தீர்க்க வேண்டி மூத்த நீதியரசர் முகோபாத்யா இன்று சேம்பருக்கு வந்ததால் தடியடி வழக்கை விசாரிக்கும் நீதியரசர் தனபால், நீதியரசர் சந்துரு அடங்கிய டிவிஷன் பெஞ்ச் இன்று கூடியுள்ளது.

காலையில் இருந்து இரு தரப்பிலும் மூத்த வழக்கறிஞர்கள் வாதாடியிருக்கிறார்கள். காவல்துறை கோர்ட்டு வளாகத்திற்குள் வந்ததினால்தான் வழக்கறிஞர்கள் எதிர்ப்பு காட்டியிருக்கிறார்கள். அதன் விளைவுதான் எல்லாமே என்பதுதான் வழக்கறிஞர்கள் தரப்பு வாதம்.. இந்த வாதத்தின்போதுதான் சென்னை மாநகர கூடுதல் ஆணையர் திரு.விசுவநாதன்தான் தடியடிக்கு உத்தரவிட்ட அதிகாரி என்று அரசு வழக்கறிஞர்கள் மூலம் சொல்லியுள்ளது மாநில அரசு.

வழக்கினை விசாரித்த டிவிஷன் பெஞ்ச் இடைக்காலத் தீர்ப்பாக விசுவநாதனையும், கூடுதலாக ‘களப்பணியில்’ ஈடுபட்ட இணை ஆணையர் ராமசுப்பிரமணியத்தையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளனர். மேலும் அன்றைய தடியடியில் ஈடுபட்ட காவல்துறையினர் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டுள்ளது. வழக்கறிஞர்கள் தங்களது போராட்டத்தினை விலக்கிக் கொண்டு உடனடியாக மக்கள் சேவைக்கு வர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.

இந்த உத்தரவினை ஏற்று உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சஸ்பெண்ட் உத்தரவு அரசுத் தரப்பில் இருந்து பிறப்பிக்கப்பட்டுள்ளது. கூடவே இந்த அரசு நீதித்துறையை மதித்துச் செயல்படும் என்று வழக்கமான அறிக்கையையும் வெளியிட்டுள்ளார் முதல்வர்.

இதற்காகத்தானே வழக்கறிஞர்கள் இத்தனை நாட்களாய் நாயாய் தொண்டை கிழிய கத்திக் கொண்டிருந்தார்கள். போராட்டம் நடத்திக் கொண்டிருந்தார்கள். இதனால் எத்தனை பேர்களுக்கு பாதிப்பு..? எத்தனை எத்தனை சிரமங்கள் மக்களுக்கு..? ஏன் இதனை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டால்தான் இவர்கள் செய்வார்களா..? அன்றைக்கு கண் முன்னே நடந்ததை பார்த்த பின்பும் அதனைச் செய்யாமல், தவறு செய்தவர்களை இத்தனை நாட்கள் தாங்கிப் பிடித்தது இந்த அரசுக்குத் தவறாக தெரியவில்லையா..?

வழக்கறிஞர்களோ, “இந்த வாய்ப்பை நழுவவிட்டால் வேறு வாய்ப்பு கிடைக்காது.. எங்களையே தாக்கிவிட்டோமே என்கிற மிதப்பில், பொதுமக்களை மேலு்ம் வதைப்பார்கள் போலீஸார்..” என்கின்றனர். இந்தக் கூற்றில் எனக்கும் உடன்பாடு உண்டு. இது பற்றி நான் முன்பு எழுதிய பதிவிலேயே ‘போலீஸார் இந்த ஒரு சந்தர்ப்பத்திற்காக காத்திருந்ததைப் போலத்தான் நடந்து கொண்டிருக்கிறார்கள்..’ என்று குறிப்பிட்டிருக்கிறேன்..!

இந்த இடைக்கால உத்தரவைக் கேட்டு நீதிமன்றத்திற்கு எதிரே பட்டாசு கொளுத்தி மகிழ்ந்துள்ளனர் வழக்கறிஞர்கள். “இதுக்குத்தான்.. இதுக்காகத்தான் நாங்க இவ்வளவு கஷ்டப்பட்டோம்..” என்கிறார்கள்.

நாளைய தினம் வழக்கறிஞர்கள் பேரணி நடத்தத் திட்டமிட்டுள்ளனர். அந்தப் பேரணி திட்டமிட்டபடி நடைபெறும் என்றும், அதன் முடிவில்தான் போராட்டத்தை தொடர்ந்து நடத்துவதா அல்லது விலக்கிக் கொள்வதா என்பது பற்றி நாங்கள் முடிவு செய்வோம் என்று வழக்கறிஞர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். போராட்டத்தை விலக்கிக் கொண்டு பணிக்குத் திரும்ப வேண்டும் என்பதுதான் மக்களின் ஆசை.. என்னுடைய அவாவும்கூட..!

ஏற்கெனவே நீதிமன்றங்களில் லட்சக்கணக்கான வழக்குகள் தூங்கிக் கொண்டிருக்கின்றன. இதில் இந்தப் போராட்டத்தால் அதிகம் பாதிக்கப்பட்டது அப்பாவி பொதுமக்கள்தான்.. கடந்த 3 நாட்களாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுமக்களே நீதியரசர்கள் முன் ஆஜராகி தாங்களே வாதாடியிருக்கிறார்கள். சிறிய வழக்குகளிலும், ஜாமீன் வழக்குகளிலும் மட்டுமே நீதியரசர்கள் தீர்ப்பு வழங்கியிருக்கிறார்கள். மற்றவைகளை ஒத்திதான் வைத்துள்ளனர்.

ஏனெனில், அவர்களுக்குத் தெரியும்.. வழக்கறிஞர்களின் வாதமில்லாமல் மேற்கொண்டு வழக்குகளை நடத்துவது எவ்வளவு ஆபத்து என்று..! கூடவே தினமும் போராட்டம், பேரணி என்று தமிழ்நாடு கதறிக் கொண்டிருக்கிறது.

வழக்கறிஞர்கள் முதல் கட்டத் தீர்வாகக் கேட்டது “தடியடிக்குக் காரணமான காவல்துறை அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்” என்றுதான்..!


இதனை ஈகோ பிரச்சினையாக எடுத்துக் கொண்ட அரசு, இன்றைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டவுடன் வேறு வழியில்லாமல் நடவடிக்கை எடுத்து தான் முழித்துக் கொண்டிருப்பதாக ஷோ காட்டுகிறது..

வழக்கின் இறுதியான உத்தரவில் அரசின் மெத்தனப் போக்கும், காவல்துறை அதிகாரிகளின் திறமையின்மையும்தான் இதற்குக் காரணம் என்று நீதிமன்றம் தீர்ப்பு சொன்னால், என்ன செய்வார்கள்..? ஒட்டு மொத்தமாக ராஜினாமா செய்வார்களா..? அல்லது தலைமைச் செயலாளரையும், உள்துறை செயலாளரையும் கை காட்டுவார்களா..?

இந்த வழக்கில் வேறொரு விஷயத்தையும் நான் மிக ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.. அது தடியடியில் ஈடுபட்ட அனைத்துக் காவல்துறையினர் மீதும் நடவடிக்கை எடுக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனை எப்படி காவல்துறை மேலிடம் செயல்படுத்தப் போகிறது என்று தெரியவில்லை..

வீடியோ டேப்புகள், புகைப்படங்கள் ஆகியவை மறுக்க முடியாத ஆதாரங்களாக இருக்கின்றன. அவைகளை வைத்து தடியால் அடித்து வீரம் காட்டிய இரும்புத் தொப்பியணிந்த அதிரடிப் படை காவலர்களைத் தேடி சஸ்பெண்ட் செய்து.. பின்பு விசாரணை செய்து.. கடைசியில் அவர்களை டிஸ்மிஸ் செய்வார்களா..? அல்லது கண்டு பிடிக்க முடியவில்லை என்று சொல்லி பைலை குளோஸ் செய்வார்களா..?

பார்க்கத்தானே போகிறோம்..!