Archive for the ‘லோகிததாஸ்’ Category

அவள் பெயர் தமிழரசி – சினிமா விமர்சனம்..!

மார்ச் 7, 2010

07-03-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

முதலில் இப்படியொரு திரைப்படத்தைத் தயாரிக்க முன்வந்த மோஸர்பேர் நிறுவனத்திற்கு எனது நன்றி..

தமிழ்ச் சினிமாவிற்கு மீண்டும் ஒரு பெருமை சேர்க்கும் இயக்குநரொருவர் கிடைத்திருக்கிறார் இத்திரைப்படத்தின் மூலம்..

ஒரு இரண்டே கால் மணி நேரத்தை என்னிடமிருந்து என் அனுமதியுடனேயே கொள்ளையடித்துக் கொண்டது இத்திரைப்படம்.

இத்திரைப்படத்தின் எந்தவொரு பாடல் காட்சியிலும் நான் பார்த்த திரையரங்கில் ஒரு ரசிகர்கூட இருக்கையில் இருந்து எழவில்லை என்பது நான் பார்த்த சினிமா அதிசயங்களில் ஒன்று..

வழக்கமான தமிழ்ச் சினிமாவின் இலக்கணத்தை ஒத்திருக்கும் திரைப்படங்களை அதனுடைய போஸ்டரிலேயேகூட அடையாளம் காண முடியும்.. ஆனால் தலைப்பிலேயே ஒரு வித்தியாசத்தைப் புகுத்தி படம் பற்றிய எதிர்பார்ப்பை ஏகத்துக்கும் எகிற வைத்திருந்தார் இயக்குநர் மீரா கதிரவன்.

கடந்த இரண்டாண்டுகளாக படத்தின் தயாரிப்புப் பணியில் இருக்கும்போது வெளியான செய்திகளும், புகைப்படங்களுமாக ஏதோ ஒன்று இதில் இருக்கிறது என்கிற ஆர்வத்தைத் தூண்டியிருந்தது.

வழக்கமான சினிமாத்தனம் இதில் இருக்காது என்பதை முதலிலேயே நான் உணர்ந்திருந்ததால் எனது எதிர்பார்ப்பு வீண்போகவில்லை. நிச்சயம் பார்க்க வேண்டிய திரைப்படம்தான்.

“குடிப் பழக்கம் உடல் நலனுக்குத் தீங்கானது” – இது குடியை மக்களிடத்தில் பரப்பிவரும் அரசே தனது தவறை மறைக்க வேண்டி செய்யும் ஏமாற்றுப் பிரச்சாரம்..

குடி குடியைக் கெடுக்கும். இது அனுபவஸ்தர்களின் பிரபலமான சொற்றொடர்.

தமிழ்நாட்டின் எந்த ஊராக இருந்தாலும், தெருவுக்கு நான்கு பேர் இந்த பாழாய்ப்போன குடியினால் தங்களது வாழ்க்கையை இழந்தவர்களாக இருப்பார்கள். இது உலகின் தொன்மையான, நாகரிகமான, மூத்தக் குடியான தமிழ்ச் சமூகத்திற்குக் கிடைத்திருக்கும் சாபக்கேடு.

அதில் ஒரு சாம்பிள்தான் இந்த தமிழரசியின் கதை..

ஆனால் திரைப்படத்தில் அந்தப் பகுதி மிகக் கவனமாகக் கையாளப்பட்டு குடி பின்னுக்குத் தள்ளப்பட்டு, பதின்ம வயதின் வேகத்தினால் தூண்டப்பட்ட சம்பவமாக இதனை நகர்த்தியிருப்பது இயக்குநரின் கைவண்ணம்.

தனது ஊரில் தோல்பாவைக் கூத்து நடத்த வரும் ஒரு குடும்பத்துடன் ஒன்று விடுகிறார் ஜெய். அந்தக் குடும்பத்தில் இருக்கும் சிறுமியான ஹீரோயின் மீது ஏற்படும் பாசத்தில் தனது தாத்தாவிடம் சொல்லி அந்தக் குடும்பத்தை தனது ஊரிலேயே வாழ வைக்கிறார். சிறுவயதில் இருந்தே தனக்கு நெருக்கமானவளாக இருந்துவரும் தோழியை தான் காதலிப்பதாக நினைத்தே வருகிறார் ஜெய்.

ஆனால் ஜெய் பள்ளிப் படிப்பில் தோல்வியடைந்த பின்பு தோழியான காதலி வேறு மாநிலத்தில் பொறியியல் படிப்பிற்குச் செல்லும்போது அந்த வயதுக்கேற்ற உணர்ச்சியில் அவர் செய்துவிடும் விஷமத்தினால் அந்தத் தோழியின் எதிர்காலக் கனவு அழிந்ததோடு ஜெய்யின் வாழ்க்கையிலும் ஒரு சறுக்கல் ஏற்படுகிறது.

அதுவரையில் தன் கண் முன்னால் இருந்த காதலி காணாமல்போக.. அவளைத் தேடிக் கண்டுபிடித்தே தீருவது என்கிற நோக்கில் ஜெய் செல்கின்ற பயணத்தைத்தான் மீதி திரைப்படம் சொல்கிறது.

இத்திரைப்படத்தில் நுணுக்கமாக இரண்டு விஷயங்கள் இருக்கின்றன. ஒன்று நான் மேலே சொன்ன பதின்ம வயதின் வீரியத்திற்கு கிடைக்கும் குடியின் ஊக்கம். அடுத்தது நீண்ட நெடுங்காலமாக நமக்குள்ளேயே இருக்கும் நம்முடைய கலாச்சாரத்தின் அடையாளங்கள், இன்றைய நுகர்வு கலாச்சாரத்தின் நேரடித் தாக்குதலால் அடையாளம் தெரியாமல் அழிக்கொழிந்து போனது.


தோல்பாவைக் கூத்து என்பது நாம் இன்று பார்த்துக் கொண்டிருக்கும் சினிமாவின் முன்னோடி. கூத்து என்பது காலில் சலங்கை கட்டி ஆண், பெண்ணாக உருமாறியும், பெண் ஆணாக உருமாறியும், தெருமுனைகளில் உடுக்கை அடித்துக் கொண்டு இரவு நேரங்களில் தீப்பந்த வெளிச்சத்தில் தொண்டை கிழிய பாடலும், வசனமுமாக பாடித் தீர்த்த ஒரு வரலாற்று நிகழ்வுகள்.


இந்தக் கூத்துக் கட்டுவதின் அடுத்த படியாக நகர்ந்த தோல்பாவைக் கூத்துக்களை படம் முழுவதும் விரவியிருக்கிறார் இயக்குநர். இது பற்றிய செய்திகளை சேகரிப்பதற்கும், அது தொடர்பான விஷயங்களைக் கொடுப்பதற்கும் மிகுந்த பிரயத்தனப்பட்டிருக்கிறார் இயக்குநர். இதற்காகவே இவருக்குத் தனியாக ஒரு சபாஷ் போட வேண்டும்.

அதே ஊரில் சர்க்கஸ் என்கிற மாயாஜாலம் வந்ததும் நமக்கு முன்பு கதை சொன்ன ஆசிரியனைத் தூக்கியெறிந்துவிட்டு மக்கள் அந்த மாயாஜாலத்தை நோக்கி ஓடுகின்றவிதத்தை கதையோடு நகர்த்தி நமது கலை எப்படி அழிந்தது.. என்பதை கண்முன்னேயே காட்டுகிறார் இயக்குநர்.

பாடல் காட்சிகள் முழுவதிலும் ஷாட் பை ஷாட் வித்தியாசமான கோணங்கள்.. காட்சியமைப்புகள் என்று நிச்சயம் பாராட்டத்தக்க விஷயங்களைப் புகுத்தியிருக்கிறார்.

“கூட்ஸ் வண்டி” பாடல் மீண்டும் மீண்டும் முணுமுணுக்க வைத்தது. மிகச் சமீபகாலமாக என்னிடம் அதிகம் நெருங்கிய பாடல் இதுதான். இது மட்டுமில்லாமல் இத்திரைப்படத்தின் அனைத்துப் பாடல்களும், இசையும் அருமை. விஜய் ஆண்ட்டனிக்கு நிச்சயம் பெயர் வாங்கித் தரும் இத்திரைப்படம்.

முத்தையாவின் ஒளிப்பதிவில் கிராமம் கிராமமாகவே காட்டப்பட்டிருக்கிறது. புனே நகரத்தின் விடியற்காலை பொழுதையும், அங்கே காட்டப்படும் மேடை நடனத்தையும், ஹீரோயினின் தம்பியைத் தேடிப் பிடிக்கும்போது அலைகின்ற மனதைப் போல கேமிரா அசத்தியிருக்கிறது.


எழுத்தாளர் தியோடர் பாஸ்கரனும், ஓவியர் வீர சந்தானமும் இருவீட்டுப் பெரியவர்களாக வாழ்ந்திருக்கிறார்கள். இப்போதெல்லாம் தொழில் முறை நடிகர்கள் இல்லாமல் விமர்சகர்களும், மற்றக் கலைஞர்களும் நடிப்புக்குள் கால் வைப்பது நல்வரவு என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

ஹீரோவாக நடித்திருக்கும் ஜெய் இன்னும் கொஞ்சம் நடிப்பைக் காட்ட மெனக்கெட வேண்டும் போல் தோன்றுகிறது. அதே முறுக்கான முகத்தோடு எத்தனை காட்சிகளில்தான் பார்ப்பது..? ஆக்ஷன் கதாநாயகர்கள் என்றால் நடிக்க வேண்டாம் என்று இவர்களுக்கு யார் சொல்லிக் கொடுத்தது..? ஹீரோயினின் வீட்டில் நடக்கும் அந்த உயிர்ப்பான காட்சியில், ஜெய்யின் முகம் காட்டும் ரியாக்ஷனில்…! முடியவில்லை..


ஹீரோயின் நந்தகி மிக இயல்பாகத்தான் இருக்கிறார். கிராமத்துப் பெண் போலவும் இருக்க வேண்டும் என்பதால் இத்தனை நாட்கள் பொத்திப் பொத்தி வைத்திருந்தாற்போல் தெரிகிறார். நடிக்க வேண்டிய காட்சிகளில் புதுமுகத்தின் நடிப்பு தென்பட்டது. எந்தச் சோகத்தையும் தனக்குள் வாங்கிக் கொண்டு வெளிப்படுத்தும்போது பார்வையாளனுக்குள் புகுத்திவிடும் நடிப்புதான் அத்தனை கதாநாயகிகளையும் கரை சேர்க்கும்.. நந்தகி இன்னும் கொஞ்சம் மெனக்கெடத்தான் வேண்டும்.

அத்தனை காட்சிகளிலும் அத்தனை கேரக்டர்களும் வசனங்களை பேசிக் கொண்டேயிருப்பதால் வெறும் முக பாவனையிலும், உடல் மொழியிலுமே காட்டியிருக்க வேண்டிய பல விஷயங்கள் இதில் சொல்லப்படாமலேயே போய்விட்டது என்பது வருத்தத்திற்குரியது.

தனது சிறு வயது தோழி மீது தான் காதலாய் இருக்கிறேன் என்று ஜெய் தன் மனதை வெளிப்படுத்தும் காட்சிகள் எதுவும் வெளிப்படையாய் இல்லாமல் வெறும் குறியீடுகளாய் மட்டுமே இருந்துவிட்டதினால் ஜெய் செய்த கொடுமையின் தாக்கம் பார்வையாளர்களைத் தாக்கவில்லை என்பது நிதர்சனமான உண்மை.

சிற்சில இடங்களில் குறியீடுகளால்தான் படத்தினை புரிந்து கொள்ள முடிகிறது. பள்ளியில் பரிசினை வாங்கிக் கொண்டு வீடு திரும்பிய பின்பு ஹீரோயினுக்கு திருஷ்டி சுத்திப் போடும்போது ஜெய் தன்னைச் சந்திக்க வரவில்லை என்ற சோகத்தைச் சொல்கிறாள் ஹீரோயின். ஜெய்யின் பெயரைச் சொன்னவுடன் ஹீரோயினின் அம்மா “துப்புடி..” என்று மிகச் சரியாக தனது திருஷ்டியை முடிப்பது ஒரு டாப்கிளாஸ் சீன்.

கண்ணைக் கட்டிக் கொண்டு விளையாடுகின்ற அந்தக் காட்சியில் மொட்டை மாடியில் இருந்து நெல்குழி வழியாக நெல்மணிகளை அறைக்குள் தள்ளிவிட உள்ளேயிருக்கும் ஹீரோயின் ஹீரோவிடம் மாட்டிக் கொள்வதுமாக இயக்கத்தில் தனது பங்களிப்பை நிறைவாகவே செய்திருக்கிறார் இயக்குநர்.

கூத்து முடிந்த மறுநாள் வீடு, வீடாகச் சென்று அரிசி கேட்டு கூத்துக் கலைஞர்களான தாத்தாவும், பேத்தியும் வரும்போது பின்னணியில் சர்க்கஸ் கம்பெனியின் விளம்பரம் ஒலிப்பதும், தியோடர் பாஸ்கரன் பேரனை அடிக்கின்றபோதுகூட வலிக்காமல் இருப்பதற்காக துணி போன்ற ஒன்றை பயன்படுத்தியிருப்பதும், பாடல் காட்சியின் ஊடேயே கஞ்சா கருப்பு கரண்ட் பீஸ் கட்டையை உருவிக் கொண்டு போவதும், ஜெய்யிடம் கரண்ட் பில்லை காட்டிவிட்டுச் செல்வதும், ஹீரோயின் ஊரைவிட்டுச் செல்லும்போது ஜெய் கொடுத்த அன்புப் பரிசான அந்த கல் உடைந்து சிதறுவதுமாக சிற்சில இடங்களில் குறியீடுகள்தான் கதையாக காட்சியளிக்கிறது.

கஞ்சா கருப்பு சிற்சில இடங்களில் வாய்விட்டுச் சிரிக்க வைத்தாலும் அவரை இன்னும் கொஞ்சம் பயன்படுத்தியிருக்கலாமோ என்று தோன்றுகிறது.

நல்ல கதைக்கரு.. நல்ல இயக்கம் என்று இருந்தும் திரைக்கதையில் வேகம் இருந்திருந்தால் இன்னும் கொஞ்சம் நன்றாக இருந்திருக்குமோ என்ற எண்ணம் தோன்றுகிறது.

ஒரு படத்தினை இயக்கிக் காட்டுவது ஒரு அனுபவம் என்றால் இந்த அனுபவத்தில் இருந்து தன்னை மேம்படுத்திக் கொண்டு அடுத்து இதைவிடச் சிறந்த படைப்பை இயக்குநர் மீரா கதிரவன் வழங்குவார் என்று நினைக்கிறேன்..

பாலுமகேந்திரா, தங்கர்பச்சான், லோகிததாஸ் என்கிற பிரபலமான சமூக இயக்குநர்களிடம் மாணவராக இருந்த காரணத்தால் மீராகதிரவனின் படைப்புகள் அர்த்தமுள்ளவைகளாக இப்படித்தான் இருக்கும் என்பதில் எனக்கு எந்தவிதச் சந்தேகமும் இல்லை.

எவ்வளவுதான் திறமையையும், ஆக்கத்தையும் தனக்குள்ளே வைத்திருந்தாலும் பாழாய்ப்போன நமது இன்றைய கலாச்சாரத்தின்படி தமிழ்ச் சினிமாவில் வெற்றி பெற காதல் கதையைத்தான் தொட வேண்டியிருக்கிறது. இல்லாவிட்டால் குடும்பக் கதைகளைத்தான் எடுக்க வேண்டும்.

குடும்பத்தை டிவி சீரியல்கள் தற்போது கொத்து புரோட்டோ போட்டுவிட்டதால் காதலைவிட்டால் வேறு நாதியில்லை என்கிற நிலைமைக்குத் தள்ளப்பட்டுவிட்டது தமிழ்ச் சினிமா.

வெறி கொண்டலையும் களியாட்டத்தையும், வெறும் உடல் கவர்ச்சியையும், அர்த்தமற்ற பாடல்களையும், காமசூத்திரா கலைகளைப் பரப்பும் பாடல் காட்சிகளையும் தவறாமல் ஒவ்வொரு படத்திலும் வெளிப்படுத்திவரும் இன்றைய தமிழ்ச் சினிமா சூழலில் இந்தத் திரைப்படம் காட்டுகின்ற ஒரு விஷயம்.. இப்படியும் படம் எடுக்கலாம் என்பதே.

ஒரு நல்ல தயாரிப்பாளரும், சிறந்த இயக்குநரும் ஒன்று சேர்ந்து தமிழுக்குத் தரமான திரைப்படம் ஒன்றினைத் தந்திருக்கிறார்கள்.

அவர்கள் இருவருக்கும் எனது வாழ்த்துக்கள்.

புகைப்படங்கள் உதவிக்கு நன்றி : indiaglitz.com, dinamalar.com