Archive for the ‘லாடம்’ Category

லாடம் – சினிமா விமர்சனம்

பிப்ரவரி 20, 2009

21-02-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


முன்னுரை

‘கொக்கி’, ‘லீ’ திரைப்படங்களின் இயக்குநர் பிரபு சாலமோனின் மூன்றாவது திரைப்படம் இது என்று சொன்னதால் கொஞ்சம் ஆர்வத்துடன் போனேன்.

ஒரு கால் லூஸான ரவுடிக் கூட்டத் தலைவர்கள்.. ஒரு அரை லூஸான ஹீரோயின்.. ஒரு முக்கால் லூஸான கதாநாயகன்.. முக்காலே மூணு வீச லூஸு அடியாட்கள்.. அரைக்கால் வீச லூஸான இன்ஸ்பெக்டர், மற்றபடி படத்தில் ஆங்காங்கே தென்படும் அனைத்து ஒன்றரை லூஸுகள்.. இதுகளையெல்லாம் சேர்த்து வைத்து படம் எடுத்தால் எப்படி இருக்கும்..? இந்தத் திரைப்படம் அப்படித்தான்..

கதைக்கரு

இரண்டு ரவுடிக் கூட்டத் தலைவர்களுக்கிடையில் ஒரு அப்பாவி மாட்டிக் கொள்வது. மீண்டானா.. இல்லையா.. என்பதுதான் கதைக் கரு..

திரைக்கதை

முதல் ஷாட்டை பார்த்தவுடனேயே தெரிந்துபோய்விட்டது படம் எப்படியிருக்கும் என்று..?

எதிரெதிரே இருக்கின்ற பணக்காரத்தனமான வீடுகள்.. வீட்டின் மொட்டை மாடியில் ஆளுயர அரிவாள்களை வைத்து அடியாட்கள் சகிதம் இரண்டு ரவுடித் தலைவர்களும் நின்று கொண்டு “ஆய்..!” “ஊய்..!” என்று ஆர்ப்பரித்து தங்களது புஜபராக்கிரமத்தைக் காட்டுகிறார்கள். புரிந்திருக்குமே..?

ஆனால் ஒரு விஷயம். ‘சரோஜா’ டைப்பில் காட்சிக்கு காட்சி நகைச்சுவை இழையோட கதையை கொண்டு போயிருக்கிறார்கள். அதனால் தப்பித்தார்கள் என்று சொல்லலாம்..

‘பாவாடை’.. பயந்து விடாதீர்கள்.. இது ஒரு ரவுடிக் கும்பல் தலைவனின் பெயர். நம்ம கோட்டா சீனிவாசராவ். மற்றொரு வில்லன் ‘வேம்புலி’. ஜெயப்பிரகாஷ் நடித்திருக்கிறார்.(மாயக்கண்ணாடியில் சேரனை போதை மருந்து கடத்தலுக்கு பயன்படுத்துவாரே அவர்தான்..) இருவருக்கும் ஜென்மப் பகை. ஒருவர் மாற்றி ஒருவர் வெட்டு, குத்து, கொலை என்று தொழில் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

படத்தின் துவக்கத்தில் கோட்டாவின் மகனை வேம்புலியின் ஆட்கள் சுட்டுக் கொலை செய்கிறார்கள். இதற்குப் பழிக்குப் பழி வாங்கத் துடிக்கும் கோட்டா வேம்புலியின் மகனை கொலை செய்ய உத்தரவிடுகிறார். இதனைத் தெரிந்து கொள்ளும் வேம்புலி முன்னெச்சரிக்கையாக கோட்டாவின் ஆட்களை கொலை செய்துவிட்டு, தனது மகனை பத்திரமாக கேரவன் வேனிலேயே பவனி வர வைக்கிறார்.

இப்போதுதான் நமது ஹீரோ. இதுவரையிலும் நாம் கேள்விப்பட்டிராத வகையில் புதுமையாக ஹீரோவுக்கு பெயர் வைத்திருக்கிறார்கள். ‘குஞ்சிதபாதம்’. நல்லாயிருக்குல்ல.. அப்பாவின்னா அப்பாவி.. அப்படியொரு அப்பாவி.. MCA Gold Medalist.. முதன் முதல்லா சென்னைக்கு வேலை தேடி வர்றான்.. வேலையும் கிடைக்குது.. அவன் நேரம்.. சொல்லச் சொல்ல கேட்காமல் அவன் அண்ணனின் பிளாட் வீட்டில் தங்குகிறான்.

கோட்டாவிடம் ஹீரோவின் அண்ணன் வாங்கிய கடனுக்காக அவனைத் தூக்கிச் செல்ல வரும் ரவுடிக் கூட்டம், நம்ம ஹீரோதான் கடன்காரன் என்று நினைத்து அவனைத் தூக்கிச் செல்கிறார்கள். கோட்டோவின் அரண்மனையில் வட்டி கட்டவில்லையெனில் பல்லைப் பிடுங்கும் தண்டனை வழங்குவார்களாம். அப்படியொரு தண்டனைக்கு உள்ளாகும் நிலையில் ஹீரோ தவிக்கும்போது.. ஏற்கெனவே தனது மகனும், ஆட்களும் ஒருவர் பின் ஒருவராக பரலோகத்திற்குப் போகிறார்களே என்ற கடுப்பில் வரும் கோட்டா தனது அடியாட்களை திட்டித் தீர்க்கிறார்.

அப்போதுதான் நமது ஹீரோவுக்கு குரு பெயர்ச்சியால் சனி பகவான் நாக்கில் வந்து ஒட்டிக் கொள்கிறான்.. சைக்காலஜிக்கலாக கோட்டாவிடம் அவருடைய ஆட்களுக்கு உடலில்தான் வலு இருக்கிறது.. மூளையில் ஒன்றுமே இல்லை என்றெல்லாம் பேசி அவரை மயக்கிவிடுகிறான். கோட்டா ஒரு நிமிடத்தில் மயங்கியவர், வேம்புலியின் மகனை கொலை செய்யும் பணியை அவனிடம் ஒப்படைக்கிறார். “18-ம் நாள் காரியம் முடியறதுக்குள்ள அந்தக் காரியம் முடிஞ்சாகணும்.. இல்லைன்னா 19-வது நாள் உனக்கு சங்குதான்..” என்று அடித்துச் சொல்கிறார்.

இப்போதைக்குத் தப்பித்தால் போதும் என்று தப்பியோடும் ஹீரோவுக்கு விதி தானே விளையாட்டு காட்டுகிறது. இடுப்பில் கட்டியிருக்கும் ஒரே துண்டோடேயே ரோட்டில் ஓடுபவன் வேம்புலியின் ஆட்களிடம் மாட்டுகிறான். அவர்களிடமும் விகல்பமில்லாமல் தான் பாவாடையை சந்தித்ததை சொல்லிவிட.. அவன் குண்டுகட்டாகத் தூக்கப்பட்டு வேம்புலியின் முன்னால் நிறுத்தப்படுகிறான்.

“உங்க மகனை கொலை பண்ணிருன்னு என்கிட்ட சொல்லிருக்காரு” என்ற நமது அறிவாளி ஹீரோவின் ஒளிவு மறைவில்லாத பேச்சைக் கேட்டு ஹீரோவை உயிரோடு புதைக்கும்படி உத்தரவிடுகிறார். குரு 7-ம் இடத்தில் இருந்து அவனை பார்த்ததால் கிடைத்த ஓரக்கண் அனுக்கிரஹத்தால், அதிலிருந்து தப்பித்தவன் மேறொரு குழியில் மாட்டிக் கொள்கிறான்.

ஏஞ்சல் என்னும் இளம் பெண்.. பகலில் மார்க்கெட்டிங் செய்வதைப் போல் வீட்டை நோட்டம் விட்டுவிட்டு அந்தி சாயும் நேரம் வந்தவுடன் ஆள் இல்லாத வீட்டில் கள்ளச் சாவி போட்டு உள்நுழைந்து அந்த இரவில் மட்டும் தானே சமைத்து, சாப்பிட்டு, உறங்கி, எழுந்து செல்லும் ஒரு வித்தியாசமான கேரக்டர்.. பெரிய லொட.. லொட வாய்..

இவனது வீ்ட்டில் ஏஞ்சல் வந்து தங்கியிருக்கிறாள். ஹீரோ வந்துவிட இருவருக்குள்ளும் அறிமுகமாகி அது நட்பாகிறது. நட்பு செம ஸ்பீடு போங்க..

உயிரோடு புதைத்தவன் பொழைத்துவிட்டான் என்பதையறிந்து வேம்புலியின் ஆட்கள் அவனைத் தேடத் துவங்க.. பையனோ பொறுப்பாக ஏஞ்சலிடம் பணத்தை வாங்கிக் கொண்டு பாவாடையிடம் வந்து பணத்தைக் கொடுத்து தனது அண்ணனை இனியும் தொந்திரவு செய்ய வேண்டாம் என்கிறான். இவ்வளவு அப்பாவியாக இருக்கிறாரானே என்று நினைத்த பாவாடை அவனது கையில் துப்பாக்கியையும், கத்தையாக பண நோட்டுக்களையும் கொடுத்து 18-ம் நாளுக்குள் வேம்புலியின் பையனை தீர்த்துக் கட்டிவிடும்படி சொல்கிறான்.

தப்பிக்க முடியவில்லையே என்கிற தவிப்பில் ஹீரோ.. உடன் துணைக்கு ஹீரோயின்.. ஆபத்துக்கு பாவமில்லை என்று நினைத்து வேம்புலியின் மகனிடமே போய் தான் அவனைக் கொல்லத்தான் பாவாடையால் அனுப்பப்பட்டவன் என்பதை வெளிப்படையாய் சொல்லி மரணத்தின் வாசல்வரைக்கும் போய் திரும்புகிறான்.

இரண்டு கும்பலிடமும் மாட்டிக் கொண்டவன் சொன்னதை செய்தானா..? அல்லது தப்பித்தானா என்பதுதான் கிளைமாக்ஸ்..

நடிப்பு

அறிமுக நடிகர் அரவிந்த் ஹீரோவாக நடித்திருக்கிறார். பரவாயில்லை ரகம்.. முற்பாதியில் 4 ரீல்கள் முக்கால் நிர்வாணத்தில் வெறும் துண்டுதான் இவருடைய காஸ்ட்யூம். இது ஒன்றுக்காகவே பெரிய நடிகர்கள் இப்படத்தில் நடிக்க மறுத்திருக்கலாம்..

நன்றாகத்தான் நடித்திருக்கிறார். அப்பாவியாய் யாரிடம் எதைச் சொல்லக் கூடாதோ அதையெல்லாம் அவர்களிடம் சொல்லி பிரச்சினையை இழுத்துக் கொண்டு போவதில் சரளமாக இருக்கிறது அவரது நடிப்பு. அவர் மேல் இரக்கப்படுவதைப் போல் காட்சியில்லா விட்டாலும் நடிப்பால் அதனைக் கொண்டு வந்துவிட்டார்.

கோட்டாவிடம் முதல் சந்திப்பில் அவர் எறும்பை உதாரணமாகச் சொல்லியும், காற்றில் கை வைத்து வரைந்து காண்பித்து பேசுகின்றவிதமும் ரசிக்கும்படியாகத்தான் இருந்தது. ஆனாலும் போகப் போக அவருடைய அப்பாவித்தனம் ஒருவித எரிச்சலைத் தந்ததை சொல்லத்தான் வேண்டும். அதிலும் வேம்புலியின் மகனிடம் போய் கரப்பான்பூச்சி என்று பட்டப் பெயரை வாங்கிக் கொண்டு பேசுவது கொஞ்சம் அறுவையாக இருந்தது எனக்கு..

கிளைமாக்ஸில் அவர் மனம் மாறுகின்ற காட்சியில் அழுத்தம் இல்லாததால் அவருடைய நடிப்புக்கு ஸ்கோப் இருக்க வேண்டிய இடம் கை நழுவியிருக்கிறது..

இவர் இப்படியென்றால் ஹீரோயினை.. சொல்லவே வேண்டாம்.. காதல் அழிவதில்லை’ என்ற படத்தோடு ஆந்திரா பக்கம் போய் ஐக்கியமான அம்மணி இந்தப் படத்துக்காகத்தான் திரும்பி வந்திருக்கிறாராம்.

முகம் சினிமாத்தனமானது அல்ல.. ஆனால் உடல்வாகு கவர்ச்சியாக உள்ளது. முடிந்த அளவுக்கு கவர்ச்சி காட்டியும், ஆபாசத்தின் முதல் கதவு வரையிலும் போய் திரும்பியிருக்கிறார். முதல் இரவு அறையில் அவர் ஆடும் ‘நாக்க முக்க’ டான்ஸை பார்த்தபொழுது ஆந்திர மணவாடுகள் ஏன் அம்மணியைத் தலையில் தூக்கி வைத்திருக்கிறார்கள் என்பது புரிந்தது.

ஆனாலும் கதைப்படி அவருடைய பேச்சும், செய்கையும் படு செயற்கையாக அமைந்துவிட்டதில் அவரை பார்க்க பாவமாக இருக்கிறது. பல்வேறு நடிகர்களின் குரல்களில் நடித்த விதம் ஓவர் ஆக்ட் என்று தெளிவாகப் புரிந்தது. கொஞ்சம் தலைவலியையும் சேர்த்தே குடுத்தது இவரது நடிப்புதான். எந்தக் கோணத்தில் பார்த்தால் அசிங்கமாகத் தெரிவாரோ, அதே கோணத்திலேயே இவரைப் படம் பிடித்திருக்கும் ஒளிப்பதிவாளரின் தைரியத்திற்கு ஒரு சல்யூட் அடிக்கலாம். அம்மணி இன்னும் ஒரு படத்தில் இதே போல் ‘காட்டினால்’, தமிழிலும் ஒரு ரவுண்ட் வரலாம்..

கோட்டா வழக்கம்போல சிற்சில இடங்களில் கத்தினாலும் பல இடங்களில் ஏற்ற இறக்க வசனத்தால் கலகலக்க வைக்கிறார். தனது பசங்களுக்கு ரிவீட் அடிக்கிற இடத்திலும், ஹீரோவிடம் தேன் தடவிப் பேசும் சாமர்த்தியமும் நயவஞ்சக வில்லத்தனத்திற்கு இவரை விட்டால் வேறு ஆளில்லை என்பது போல் தெரிகிறது.

இன்னொரு வில்லனுக்கு வேலையே இல்லை.. மரத்தடி இல்லையெனில் வீட்டு ஹால்.. கேரம் போர்டு இல்லையெனில் செஸ்போர்டு.. ஆனால் கைகளில் நிச்சயமாக செல்போன் உண்டு.. எப்படியோ இவரும் நடித்து முடித்துவிட்டார்.

சிட்டிபாபு சப்இன்ஸ்பெக்டர்.. தப்பியோடி வரும் ஹீரோவையும், ஹீரோயினையும் காதலர்கள் என்று நினைத்து போலீஸ் ஸ்டேஷனில் திருமணம் செய்து வைத்து புண்ணியம் தேடும் கேரக்டர்.. ஒரே ஒரு காட்சியில் மனோரமா வந்து போகிறார். அவ்வளவுதான்..

அபத்தமான திரைக்கதை என்று அழுத்தம், திருத்தமாகச் சொல்லலாம் என்றாலும் அதையெல்லாம் பிட்டு, பிட்டு வைத்தால் பக்கங்கள் கூடி பார்க்கவிருப்பவர்களும் பார்க்க முடியாத சூழலுக்குப் போய்விடும் என்பதால் அதனைத் தவிர்க்கிறேன்..

இசை

ஒரே இரைச்சல்.. ஒரு பாடல்கூட மனதில் நிற்கவில்லை. இன்று முதல் என்று துவங்கும் பாடல் ஒன்றுதான் ஏதோ என்று கேட்டது.. மற்றவைகள் எல்லா வாத்தியங்களையும் மிக்ஸியில் போட்டு அரைத்ததுபோல் இருந்தது.. கொடுமை.. பாடல் காட்சிகளை திரைக்கதையில் வலுக்கட்டாயமாக திணித்திருப்பது கொடுமையின் உச்க்கட்டம். முதல் இரண்டு பாடல்கள் எதற்காக வருகின்றன என்பதைக் கண்டுபிடித்தால் அவர்களுக்கு அதே படத்திற்கு இன்னொரு முறையும் டிக்கெட் எடுத்துக் குடுக்கலாம்..

ஒளிப்பதிவு

நன்று.. மிகத் திறமையாகத்தான் செய்திருக்கிறார். படம் முழுவதையுமே இவர்தான் நிஜமாகவே தாங்கியிருக்கிறார் என்பது புரிகிறது. படம் முழுக்க காமிராவை ஸ்டாண்ட்டில் மாட்டாமலேயே இருந்திருப்பார் என்று நினைக்கிறேன். முழுக்க, முழுக்க கையில் தூக்கியபடியே காமிரா மூவ் ஆகியிருக்கிறது.. இதற்கெல்லாம் மிகப் பெரிய பொறுமை வேண்டும்.. அந்த வகையில் கடின உழைப்பை உழைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்.

இயக்கம்

ஹீரோ புதுமுகம். ஹீரோயினும் கிட்டத்தட்ட அதேதான் என்பதால் நடிப்பை விட்டுவிடுவோம். இருப்பதுதானே அகப்பையில் வரும். சார்மியின் நடிப்பில் ஓவர் ஆக்ட்டிங்கை வரவழைத்தது.. லாஜீக் இல்லாத கேரக்டர் ஸ்கெட்ச்சை சார்மியிடம் திணித்தது.. இருவரின் சந்திப்பும், அவர்களது தொடர்பும், நெருக்கமும் நம்ப முடியாதது என்பததால் அவர்களது கல்யாணமே காமெடியாகிவிட்டது.

இறுதியில் வரும் சண்டைக் காட்சியின் மூலம்தான் ஹீரோவுக்கு சண்டை தெரியும் என்பது நமக்குத் தெரிகிறது.. அதுவரையில் பவ்யமான பையனாக கொண்டு போயிருப்பது கொஞ்சம் பாராட்டுக்குரியதுதான்.. திரைக்கதையில் அவ்வளவு வலுவில்லாத நிலைமை இருந்ததால், இயக்கத்தை யார் பார்த்துக் கொண்டிருந்தது..?

ஆனாலும் முதல் ரீலில் வெடிக்கத் துவங்கும் துப்பாக்கி சத்தம்.. நம்மூர் தீபாவளி பொம்மை துப்பாக்கியைப் போல் படம் நெடுகிலும் வெடித்துக் கொண்டேயிருக்கிறது.. ஏன்.. எதுக்கு.. எப்படின்னு யாருமே கொஸ்டீன் கேக்கப்படாதுன்னு இயக்குநர் சொல்லிட்டாரு.. அதுனால நீங்களும் கேக்காதீங்க..

முடிவுரை

உட்லண்ட்ஸ் சிம்பொனி திரையரங்கு பாதியளவு நிரம்பியிருந்தது. ஆனாலும் 4 பெண்கள் மட்டுமே வந்திருந்தார்கள் என்பதைப் பதிவு செய்தே தீர வேண்டும்.. என்ன கொடுமை பாருங்க..?

படத்துக்குப் போனா அனுபவிக்கணும்.. ஆராயக் கூடாது என்று சொல்லும் வலைஞர்கள் தாராளமாக படத்திற்குச் செல்லலாம். அனுபவித்துவிட்டு வரலாம்..

நல்ல சினிமாவைத் தேடியோ, லாஜிக்கை தேடியோ, மெஸேஜை தேடியோ.. இல்லாட்டி வேற எதை, எதையோ தேடுபவர்கள் அங்கு சென்று ஏமாந்து திரும்பி வந்து என்னைக் கடிக்க வேண்டாம்..

கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம்..! அப்புறம் தியேட்டரோடு மறந்துவிடலாம்..!

டிஸ்கி : இத்திரைப்படத்திற்கு அழைத்துச் செல்கிறேன் என்று சொல்லிவிட்டு கடைசி நிமிடத்தில் டேக்கா கொடுத்து ஏமாற்றிய தோழர் கேபிள் சங்கருக்கு இப்பதிவு சமர்ப்பணம்..