Archive for the ‘ரேணுகா’ Category

ரேணுகாஜியிடம் எனக்குப் பிடித்த தைரியம்

செப்ரெம்பர் 13, 2007

13-09-2007

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


“உடல் பாதுகாப்பு விஷயத்தில் கணவர்களை நம்பக்கூடாது. தங்கள் பாதுகாப்புக்கு பெண்களே ஆணுறையை வாங்கிக் கொள்ள பழக வேண்டும்..” என்று மத்திய பெண்கள் நலன் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரேணுகா சவுத்ரி அட்வைஸ் செய்துள்ளார்.

சுகாதாரம் மற்றும் செக்ஸ் கல்வி உட்பட பல பிரச்சனைகளில் தன் கருத்தை வெளிப்படையாகத் தெரிவித்து முன்னர் சர்ச்சையை ஏற்படுத்தியவர் ரேணுகா சவுத்ரி. தற்போது ஆணுறை குறித்து பெண்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும்வகையில் பேசியுள்ளார்.

சமீபத்தில், எச்.ஐ.வி. மற்றும் எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்ட பெண்களின் தேசிய அமைப்பின் சார்பில் டில்லியில் நடந்த கூட்டத்தில்தான் மத்திய அமைச்சர் ரேணுகா இப்படி பேசியுள்ளார்.

“பெண்கள் எய்ட்சிலிருந்து தங்களைப் பாதுகாப்பதில் ஆண்களை நம்பக்கூடாது. இந்த விஷயத்தில் அவர்கள் ஆண்களை சார்ந்திருக்காமல், தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டும். பெண்கள் ஆணுறையை வாங்கி வர தெரிந்து கொள்ள வேண்டும். ஆணுறையால் மட்டுமே நோயிலிருந்து ஒருவருக்கு பாதுகாப்பு அளிக்க முடியும். கடைகளிலோ அல்லது மருந்து கடைகளிலோ ஆணுறைகளை வாங்குவது குறித்து பெண்கள் கூச்சப்படக்கூடாது.

ஆண்களையோ அல்லது கணவன்களையோ பெண்கள் நம்புவது கூடாது. இந்த விஷயத்தில் ஆண்கள் கவனமாக இருப்பார்கள் என்று நம்பினால், நீங்கள் நோயிலிருந்து உங்களைப் பாதுகாக்க மறந்து விட்டீர்கள் என்று அர்த்தம்.

ஆண்கள் ஆணுறைகளை வாங்க மாட்டார்கள். குடித்துவிட்டு வீட்டுக்கு வரும் கணவர்களால் ஆணுறைகளை எப்படி வாங்க முடியும்? எனவே பெண்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்வது நல்லது. இதில் கணவர்கள் சந்தேகப்பட்டால் சந்தேகப்பட்டுக் கொள்ளட்டும்..

பாலியல் தொடர்பான பிரச்சினைகள் பற்றி சிறு வயதிலேயே அனைவரும் அறிய வேண்டும். இல்லாவிடில் எதிர்கால சந்ததியினர் பெரிதும் பாதிக்கப்படுவர். இதை உணர்ந்துதான் பள்ளி பாடத் திட்டத்தில் பாலியல் கல்வி பாடத்தைச் சேர்க்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆனால், இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதை எதிர்ப்பவர்கள் கபடதாரிகள் என்றுதான் அர்த்தம்..” என்றெல்லாம் அட்வைஸ் மழை பொழிந்திருக்கிறார்.

எய்ட்ஸ் நோய் பொதுவாகவே 15 முதல் 49 வயதுக்கு உட்பட்டவரையே தாக்குகிறது. இந்நோயைத் தடுக்க முடியும் என்றாலும் விரைவில் கண்டறியப்பட முடிவதில்லை. நோய்க்கான அறிகுறிகள் அவ்வளவு எளிதில் ஒருவருக்கு நோய் இருப்பதை உணர்த்துவதில்லை.

கடந்தாண்டு ஆய்வுப்படி உலகில் 3.95 கோடி பேரும், இந்தியாவில் 25 லட்சம் பேரும் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சர்வதேச அளவில் நைஜீரியாவைத் தொடர்ந்து இந்தியாவில்தான் எய்ட்ஸால் பாதிக்கப்பட்டோர் அதிகம் உள்ளனர்.

இந்நோய் உடலுறவால் 85.34 சதவீதமும், பெற்றோரிடமிருந்து குழந்தைகளுக்கு 3.80 சதவீதமும், ரத்தம் சார்ந்த வகையில் 2.05 சதவீதமும், போதை ஊசி மூலம் 2.34 சதவீதமும் பரவுகிறது. இதில் ஆச்சரியப்படும் விஷயமாக 6.46 சதவீதம் நோய் பரவும் விதமே தெரியவில்லை என்கிறார்கள்.

தினமும் 1500 குழந்தைகள் உட்பட 11,000 ஆயிரம் பேர் எய்ட்ஸால் பாதிக்கப்படுகின்றனர். இவர்களில் 95 சதவீதத்துக்கு மேல் ஏழை மற்றும் நடுத்தர மக்களே அதிகம்.

ஆனாலும் எய்ட்ஸ் பாதித்த ஒருவர், பல ஆண்டுகள் பாதுகாப்பான வாழ்க்கை வாழ முடியும். குணப்படுத்த முடியாது என்றாலும் அவரின் ஆயுள் காலத்தை நீட்டிக்க முடியும். அவருடன் பணியாற்றுவதாலோ, பயன்படுத்திய பொருட்களை மற்றவர்கள் பயன்படுத்துவதாலோ பாதிப்பு ஏற்படுவதில்லை. எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்குள் திருமணங்கள்கூட நடந்து வருகின்றன.

எய்ட்ஸ் நோய் முறையற்ற உடலுறவால்தான் மிக அதிகமாகப் பரவி வருகிறது என்பதால்தான் அதைத் தடுக்க ஆணுறை அவசியம் என்ற பிரச்சாரம் வலுப்பட்டு வருகிறது.

இப்போது ஆணுறைகளை வாங்குவதே யாருடைய வேலை என்கின்ற அளவிற்கு பேச்சு எழுந்துள்ளது ஆச்சரியமான விஷயம்தான்..

“ஆண்களையோ அல்லது கணவன்களையோ பெண்கள் நம்புவது கூடாது. இந்த விஷயத்தில் ஆண்கள் கவனமாக இருப்பார்கள் என்று நம்பினால், நீங்கள் நோயிலிருந்து உங்களைப் பாதுகாக்க மறந்து விட்டீர்கள் என்று அர்த்தம்..” என்று ரேணுகா பேசியதிலிருந்தே தெரிகிறது.. இது யாருக்கான அட்வைஸ் என்று..

மத்திய அமைச்சரே என்றாலும் எதற்கு பொய் சொல்ல வேண்டும்? எதற்கு வீணாக பெண்ணியத்தைப் பற்றிப் பேச வேண்டும் என்று முடிவெடுத்து நிகழ்கால வாழ்க்கையோடு ஒத்துப் போகத்தான் வேண்டும் என்கின்ற நல்ல நோக்கத்தில் தெளிவாகத்தான் சொல்லியிருக்கிறார் ரேணுகா.

“ஆண்கள் ஆணுறைகளை வாங்க மாட்டார்கள். குடித்துவிட்டு வீட்டுக்கு வரும் கணவர்களால் ஆணுறைகளை எப்படி வாங்க முடியும்? எனவே பெண்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்வது நல்லது. இதில் கணவர்கள் சந்தேகப்பட்டால் சந்தேகப்பட்டுக் கொள்ளட்டும்..” — இப்படிப் போட்டுத் தாளித்திருக்கிறார்.

குடிகார கணவர்களை ஒதுக்கும்படியோ, அவர்களிடமிருந்து விலகும்படியோ பெண்களுக்கு புத்தி சொல்ல முன் வரவில்லை அமைச்சர் ரேணுகா. “அவர்கள் அப்படித்தான் வருவார்கள். நாம்தான் புத்திசாலித்தனமாக இருக்க வேண்டும்..” என்பதைத் தெளிவுபடுத்தியிருக்கிறார்.

ஏற்கெனவே ஒரு முறை இந்தியா டுடே பத்திரிகைக்கு அவர் அளித்த பேட்டியன்றில் “செக்ஸை நான் வெறுக்கவும் இல்லை. ஆதரிக்கவும் இல்லை. அதற்காக நான் இப்போது சாமியாரிணியாகவும் இல்லை” என்று கண் சிமிட்டிச் சொல்லி அசர வைத்திருந்தார்.

இந்தத் தைரியம்தான் ரேணுகாஜிகிட்ட எனக்கு ரொம்பப் புடிச்சது..