Archive for the ‘ரிபிசி வானொலி’ Category

புலிகளுக்கு மாற்றுக் கருத்து – ரி.பி.சி. வானொலி தாக்கப்பட்ட கதை

நவம்பர் 12, 2008

12.11.2008

என் இனிய வலைத்தமிழ் மக்களே..

வழக்கம்போல நேற்றைய இந்தப் பதிவுக்கு வந்த ஒரு நீண்ட பின்னூட்டம் இது.. விடுதலைப் புலிகளுக்கு மாற்றாக கருத்து தெரிவித்து வந்த ரி.பி.சி.வானொலி தாக்கப்பட்ட கதையை விலாவாரியாக அதன் தோற்றத்திலிருந்து விளக்கியிருக்கிறார்கள்.

பதிவில் பின்னூட்டமாக இட்டால் சிலர் படிக்காமலேயே போய்விடக் கூடும் என்பதினால் தனிப்பதிவாகவே இட்டுள்ளேன்..

நானெல்லாம் இவர்களிடம் பிச்சை வாங்கணும் போலிருக்கு.. பதிவின் நீளத்தை மட்டும் சொன்னேன்..

அந்த ராத்திரிக்கு என்ன சாட்சி ? – ரிபிசி பகுதி 2 : ரி கொன்ஸ்ரன்ரைன் & த ஜெயபாலன்

≡ Category: கட்டுரைகள்/ஆய்வுகள், கொன்ஸ்ரன்ரைன் ரி, ஜெயபாலன் த | ≅

தொண்ணூறுக்களின் இறுதிப் பகுதிகளில் விடுதலைப் புலிகளின் ஊடகங்கள் மட்டுமே கோலோச்சி இருந்த தமிழ் ஊடகச் சூழலில், குறிப்பாக ஐரோப்பா மற்றும் மேற்கு நாடுகளில் விடுதலைப் புலிகளுக்கு மாற்றான கருத்துக்களுக்கான தளம் இருந்திருக்கவில்லை. அப்படியான ஒரு சூழலில் மாற்றுக் கருத்துக்கான தளமாக 1998ல் ஆரம்பிக்கப்பட்ட ரிபிசி வானொலி குறிப்பிடத்தக்கது என்பது 1997ல் இருந்து மாற்று கருத்து தளத்தை ஏற்படுத்த போராடிவரும் எமக்கு தெரியும்.

அன்று விடுதலைப் புலிகளின் கருத்துக்கு மாற்றான கருத்துக்கள் யாவும் மௌனமாக்கப்பட்ட நிலையில் மாற்றுக் கருத்துக்கான ஊடகம் ஒன்றை வெளிக்கொணர்வது அவ்வளவு இலகுவான விடயமாக இருக்கவில்லை. அப்படியான சூழலில் இவ் ஊடகமே மர்மமாக, இரகசியமாக இயங்காமல் தம்மை இனம்காட்டி வெளிக்கொணர்ந்தது மாற்றுக் கருத்துக்களை கொண்டிருந்தவர்ளுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

இலங்கைத் தமிழர்களைப் பொறுத்தவரை ‘யாழ்ப்பாணம்’ மூளை என்ற எண்ணம் கொண்ட ‘புத்திஜீவிகள்’க்கு பஞ்சமில்லாத நிலையிருக்க புலம்பெயர் நாடுகளில் உள்ள பாரம்பரிய ஊடகங்கள் பெரும்பாலும் யாழ்ப்பாணச் சிந்தனைப் போக்கின் – யாழ் மேலாதிக்கத்தின் பிடியிலேயே உள்ளது. ரிபிசி வானொலி அதிலிருந்து மாறுபட்டு, யாழ்ப்பாண மேலாதிக்கத்தின் பிடியில் இல்லாமல், மாற்றுக் கருத்துக்களுக்கான தளமாக கடந்த பத்து ஆண்டுகளாக இயங்கி வருவது குறிப்பிடத்தக்க விடயம்.

விடுதலைப் புலிகளுக்கு மாற்றான கருத்துடையவர்கள் யாவரும் ஒற்றைக் கருத்துடையவர்களும் அல்ல. அவர்களிடையேயும் பல்வேறு மாறுபட்ட கருத்துக்கள் உண்டு. அவ்வகையில் ரிபிசி வானொலியுடன் நாங்கள் உட்பட பலருக்கும் பல்வேறு அரசியல் மற்றும் முரண்பாடுகள் இருந்து உள்ளது. ஆனால் இம்முரண்பாடுகள் அனைத்தும் பகை முரண்பாடுகளாக ஆனதில்லை. அதேதருணம் சிலருடைய முரண்பாடுகள் பகை முரண்பாடுகளாக அமைந்தததும் எமக்கு வியப்பில்லை.

அன்றைய சூழலில் மாற்றுக் கருத்துக்கான தளங்கள், நபர்கள் மீது வன்முறை பிரயோகிக்கப்பட்ட சம்பவங்கள் ஐரோப்பிய மற்றும் மேற்கு நாடுகளிலும் இடம்பெற்று உள்ளது. அதனிலும் மோசமாக தாயகப் பகுதிகளில் இடம்பெற்று உள்ளது.

இந்த பகை முரண்பாடுகளுக்கு மத்தியில் -அச்சத்திற்கு மத்தியில் செயற்பட்ட ரிபிசி ஊடகம் மீண்டும் மீண்டும் மூன்று தடவைகள் தாக்கப்பட்டு உள்ளது. அடையாள மோசடிகள் செய்யப்பட்டு வானொலி மூடப்பட்டது. வானொலி மிரட்டல்களுக்கு உள்ளானது என பல சம்பவங்கள் இடம்பெற்று உள்ளது.

இவற்றுக்கு ‘ஜனநாயக சக்திகள்’ தங்கள் கடுமையான கண்டனங்களை தெரிவிப்பதை விட்டுவிட்டு நட்பின் அடிப்படையில் மௌனம் காப்பதும், ஏதாவது வகையில் அச்சம்பவங்களில் தொடர்புபட்டு இருப்பதும், அதனை மூடிமறைக்க முயல்வதும் ஜனநாயகவிரோதச் செயலே. சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பில்லாத ஜனநாயகம், சந்தர்ப்பவாத ஜனநாயகம் எவ்வகையிலும் ஜனநாயகத்தை வளர்த்திட உதவாது.

ரிபிசி வானொலி உடைப்பில் பலர் சம்பந்தப்பட்டு இருந்தனர். தங்களை ‘ஜனநாயக சக்திகள்’, ‘மாற்றுக் கருத்தாளர்கள்’, ‘மறுத்தோடிகள்’ என்றெல்லாம் கட்டமைக்கின்ற, புனைகின்ற சிலரும் இதில் தொடர்புபட்டு இருந்தமையே இச்சம்பவத்திற்கு இவ்வளவு அழுத்தம் கொடுக்க வேண்டிய தேவையை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் இதனை பற்றிய உரையாடலை, விமர்சனத்தை ‘ஜனநாயக சக்திகளிடையே பிளவை ஏற்படுத்துகின்ற ஒரு செயலாகவும்’ ‘அவதூறாகவும்’ கட்டமைப்பதன் மூலம், அந்த உரையாடலையும் விமர்சனத்தையும் தவிர்க்க முனைவது எவ்வகையில் ஜனநாயம் சார்ந்ததாக இருக்க முடியும்.

விமர்சனங்களுக்கு முகம்கொடுக்காமல் கட்டமைக்க விரும்பும் ஜனநாயகம் எங்கு போய் நிற்கும் என்பதற்கு, மீண்டும் ஒரு அனுபவத்தைப் பெற வேண்டிய அவசியம் தமிழ் மக்களுக்கு இல்லை என்றே நினைக்கிறோம். அதனால் இது ‘அவதூறு, ஜனநாயக சக்திகளிடையே பிளவை ஏற்படுத்தும், இது புலிகளையே பலப்படுத்தும்’ என்று ரீல் சுற்றாமல் நாம் அறிந்ததை, தெரிந்து கொண்டதை வாசகர் முன் வைப்பதே பொருத்தமானதாக அமையும் என்பது எமது எண்ணம்.

ரிபிசி வானொலிக்கு எதிரான வன்முறைகள் எழுந்தமானமானவை அல்ல. அவை நன்கு திட்டமிடப்பட்டு சங்கிலித் தொடராகவே இடம்பெற்று உள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் தாங்கள் தான் என்பதை ரிபிசிக்கும் தமது நண்பர்களுக்கும் தெரியப்படுத்தி, அதேநேரம் தங்களை சட்டத்தின் பிடியிலும் சிக்கி விடாமல், இந்த வன்முறைகளை நிகழ்த்தி உள்ளனர்.

ரிபிசி பணிப்பாளர் வி ராம்ராஜ் குறிப்பிட்டது போல இவர்கள் பெரும்பாலும் ரிபிசி வானொலியுடன் தொடர்புபட்டவர்களாகவே இருந்தனர். வானொலி கலையகப் பகுதியைச் சுற்றி வாழ்ந்தவர்களாகவும் இருந்து உள்ளனர். இச்சம்பவங்களில் பலர் சம்பந்தப்பட்டு இருந்த போதும், ரிபிசி உடைப்பில் அவர்கள் அனைவரும் ஒரே பங்கினை வகித்திருக்கவில்லை. வேறு வேறு அளவுகளில் தொடர்புபட்டு இருந்தனர். அதனால் ஒருவரை ஒருவர் இனம் காட்டுவது தம்மையும் காட்டிக் கொடுத்துவிடும் என்பதால் தம்மைப் பாதுகாப்பதற்காக மற்றவர்களையும் பாதுகாக்க வேண்டியவர்களாக உள்ளனர். தனிப்பட்ட முறையில் என்ன நடந்தது என்பதை விரிவாக விளக்கினாலும் பொதுத்தளத்தில் அவர்கள் அதனை முன் வந்து சொல்வது அவர்களுக்கு எதிராக சட்டம் நடவடிக்கை எடுப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தும் என்ற அச்சம் அனைவரிடமும் உள்ளது.

ரிபிசி வானொலி உடைப்பில், ரிபிசி வானொலிக்கு எதிரான வன்முறைகளில், அதனை நிறுத்துவதற்கான சதிகளில் ரிபிசி வானொலியில் பணி புரிந்தவர்களே ஈடுபட்டு இருந்ததாக அதன் பணிப்பாளர் வி ராம்ராஜ் உறுதியாக தெரிவிக்கிறார். சந்தர்ப்ப சாட்சியங்களும் அதில் ஈடுபட்டவர்களுடைய தகவல் கசிவுகளும் அதனை உறுதிப்படுத்துகின்றன. குறிப்பாக 2003 நடுப்பகுதி முதல் 2006 இறுதிப்பகுதி வரை இடம்பெற்ற ரிபிசியை அழித்தொழிக்கும் – ரிபிசிக்கு எதிரான (அன்ரி ரிபிசி) சங்கிலித் தொடரான தாக்குதல்கள் குறிப்பிட்ட நபர்களாலேயே மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இவர்கள் அன்ரி ரிபிசி அணியாகினர். இந்த அன்ரி ரிபிசி அணி 2003 நடுப்பகுதியில் ரிபிசி வானொலியில் இடம்பெற்ற பிளவைத் தொடர்ந்தே உருவாகிறது. இந்த அன்ரி ரிபிசி அணியினர் முற்றிலும் தனிநபர் சார்ந்த நட்பு சார்ந்த விருப்பு வெறுப்புகளின் அடிப்படையிலேயே ரிபிசிக்கு எதிராகச் செயற்பட்டனர். இதில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான, எதிரான சக்திகளும் இருந்து உள்ளது.

2003 நடுப்பகுதியில் ரிபிசியில் இருந்து வெளியேறியவர்கள் கீரன், ராஜன், வாசு, தீபன், காண்டிபன் ஆகியோர். இவர்களது செயற்பாடுகள் பின்னர் ரிபிசிக்கு எதிராக அமைந்ததால் இது அன்ரி ரிபிசி அணியாகியது. இவர்கள் பெரும்பாலும் ரிபிசி கலையகத்திற்கு அண்மையாகவும் வாழ்ந்ததால் கோபமும் பழிவாங்கும் உணர்வும் மிகையாக இருந்து உள்ளது. மற்றையவர்களில் ரமணன் அரசியல் தஞ்சம் நிராகரிக்கப்பட்டு இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டார். நந்திராயன் கனடாவில் குடியேறிவிட்டார்.

எமது நோக்கம் நாம் முன்னைய கட்டுரையில் ( அந்த ராத்திரிக்கு என்ன சாட்சி? – ரிபிசி_பாகம் 1 http://thesamnet.co.uk/?p=2172 ) குறிப்பிட்டது போல் இதனை ஒரு கிரிமினல் குற்ற விசாரணையாக மேற்கொள்ளவதல்ல. அதற்கு மெற்றோ பொலிட்டன் பொலிசாரும் ஏனைய நீதித்துறையும் உள்ளது. அது எமக்கு அப்பாற்பட்டது.

ஸ்ரீலங்கா டெமொகிரசி போறம் – எஸ்.எல்.டி.எப். முக்கிய உறுப்பினர்கள் அல்லது அதனுடன் இணைந்து செயற்பட்ட ‘ஜனநாயகவாதிகள்’ ரிபிசி உடைப்பில் ஏதாவது வகையில் தொடர்புபட்டு இருக்கிறார்களா? இல்லையா? என்பதை அறிவதே தமது நோக்கம் என்று சில இணைய ஊடகங்கள் குற்றம்சாட்டியது நியாமானதே. குறிப்பாக எஸ்.எல்.டி.எப். உறுப்பினராக அறியப்பட்ட ராகவன், எஸ்.எல்.டி.எப். உடன் நெருக்கமாகச் செயற்பட்ட அதன் கூட்டங்களுக்கு தலைமை தாங்கிய நீதிராஜா, எஸ்.எல்.டி.டிப்.க்காக அறிக்கை வெளியிட்ட கீரன் ஆகியோர் இந்த ரிபிசி உடைப்பில் எந்த அளவில் தங்களை ஈடுபடுத்தினர் என்பதே தற்போது சர்ச்சைக்குரியதாகி உள்ளது. இதற்கு முக்கிய காரணம் இவர்கள் தங்களை ‘ஜனநாயகவாதிகள்’, ‘மாற்றுக்கருத்தாளர்கள்’, ‘மறுத்தோடிகள்’ என்ற அடைமொழிகளுக்குள் அடையாளப்படுத்துவதும் ரிபிசி உடைப்பில் இவர்களுடைய தொடர்பும் தொடர்ந்த மௌனமும் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதுமாகும்.

இவற்றுக்கு அப்பால் இது ஒரு கிரிமினல் குற்ற விசாரணை அல்ல. ஜனநாயகக் கோட்பாடு சார்ந்தது மட்டுமே. ஜனநாயகம் பேசிக் கொண்டு ஒரு ஊடகத்திற்கு எதிரான வன்முறைக்கு துணை போக முடியுமா? என்ற மிக எளிமையான கேள்விக்கான பதில் மட்டுமே.

ரிபிசி உடைப்புப் பற்றி அதன் பணிப்பாளர் ராம்ராஜ் என்ன கூறுகினறார் என்பதை அறிய அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்.

ஒன்றுக்கு மேற்பட்ட தொடர்ச்சியான வன்முறைத் தாக்குதல் இடம்பெற்றதால் அவர்கள் தங்கள் கலையகத்தை பாதுகாக்க நிர்ப்பந்திக்கப்பட்ட நிலையை அவர் இதில் விளக்கி உள்ளார். வாயில்களுக்கு இரும்புத் தடுப்புகள் போட்டு தங்களை வன்முறையில் இருந்து பாதுகாக்க வேண்டிய நிலை ஐரோப்பிய நாடொன்றிலும் உள்ளது என்ற யதார்த்தத்தை இது வெளிப்படுத்தி உள்ளது.

ரிபிசிக்கு எதிரான இந்த சங்கிலித் தொடரான வன்முறைகளின் பின்னணியை விளங்கிக் கொள்ள ரிபிசி கடந்து வந்த காலத்தினூடாக நாம் பயணித்துப் பார்ப்பது பல கேள்விகளுக்கு பதிலளிக்கும் என நம்புகிறோம்.

ரிபிசி : தோற்றம் – பிளவு – உடைப்புகள்

1998 :

யூனில் ரிபிசி ஆரம்பிக்கப்பட்டது. எஸ் கே ராஜன், ஜி எஸ் குமார், எஸ் பி ஜெயக்குமார், வி ராம்ராஜ் ஆகியோர் இணைந்து ரிபிசி வானொலியை ஆரம்பித்தனர்.

ஏற்கனவே ராம்ராஜின் நண்பர்களாக இருந்த தயா இடைக்காடர், ராஜன் ஆகியோர் ராம்ராஜ்க்கு பக்க துணையாக இருந்தனர். இப்போது கவுன்சிலராக உள்ள தயா இடைக்காடரை முதற்தடவை தேர்தலில் வெற்றியடையச் செய்ததில் ராம்ராஜ்க்கு முக்கிய பங்கு இருந்தது. இவர் ரிபிசியின் கணக்காளராக ரிபிசியின் முக்கிய ஆவணங்களுடன் தொடர்புடையவராகவும் இருந்தார்.

பிற்காலத்தில் ரிபிசி ராஜன் என்று அறியப்பட்ட ராஜன், ரிபிசி வானொலி ஆரம்பிக்கப்பட முன்னரேயே தயா இடைக்காடரால் ராம்ராஜ்க்கு அறிமுகப்படுத்தப்பட்டு நண்பர்களாக இருந்தனர்.

1999 :

எஸ் கே ராஜன் ரிபிசியில் இருந்து விலகிக் கொண்டார். அல்லது விலக்கப்பட்டார். அவர் தற்போது விடுதலைப் புலிகளின் பிரச்சார ஊடகமாகிய ஐபிசி யில் முக்கிய அறிவிப்பாளராக பணியாற்றுகிறார்.

இக்காலப் பகுதியில் கீரன் ரிபிசியில் இணைந்து கொள்கிறார். அவர் தன்னுடைய நெருங்கிய நண்பர் வாசுவையும் பின்னர் ரிபிசியில் இணைத்துக் கொண்டார். கீரனுடைய இன்னுமொரு நெருங்கிய நண்பர் ராகவன். ஆனால் இவர் நேரடியாக ரிபிசியில் எக்காலத்திலும் இணைந்து செயற்பட்டிருக்கவில்லை. கீரனூடாக ரிபிசியின் ஏனைய உறுப்பினர்களுடைய நட்பு இவருக்கு கிடைத்தது. இக்கால கட்டங்களில் ராகவன் வெளிப்படையாக அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கவில்லை.

இன்னும் சில மாதங்களில் எஸ் பி ஜெயக்குமார் சுந்தர் ஆகியோர் ரிபிசியில் இருந்து விலகி ஈரிபிசி என்ற வானொலியை உருவாக்கினர். பிற்காலத்தில் எஸ்பி ஜெயக்குமாரை சுந்தர் ஈரிபிசியில் இருந்து கழட்டிவிட்டார். இப்போது ஈரிபிசி என்ற ஊடகம் இல்லாமல் போய்விட்டது. தற்போது சுந்தர் விடுதலைப் புலிகளின் மற்றுமொரு பிரச்சார ஊடகமான தென்றல் தொலைக்காட்சியில் பணியாற்றுனகிறார். எஸ் பி ஜெயக்குமார் மத நிழச்சி தொலைக்காட்சி ஒன்றை நடத்துகிறார்.

ஜி எஸ் குமாரும் பின்னர் வெளியேறினார்.

எஸ் கே ராஜன், எஸ் பி ஜெயக்குமார், ஜி எஸ் குமார் வெளியேறியதை அடுத்து வி ராம்ராஜ் மட்டுமே அதனை உருவாக்கியவராக ரிபிசியை கொண்டு நடத்த்தினார்.

ரிபிசியின் தேன்நிலவு

2000 :

இக்காலப் பகுதியில் இலங்கையில் இருந்து ரிபிசியால் அழைக்கப்பட்ட ரமணன் ரிபிசியில் இணைந்து கொண்டார். அவரைத் தொடர்ந்து சுதன், சீவகன் பரமேஸ்வரி ஆகியோரும் இணைந்து கொண்டனர். ரமணன், சுதன் ஆகியோரின் நண்பரான காண்டிபனும் ரிபிசியில் இணைந்து கொண்டார்.

2001 :

வீரகேசரி செய்தியாளராக இலங்கையில் பணியாற்றிய சேது ரிபிசியில் இணைந்து கொண்டார். பிரித்தானியாவில் அவரது அரசியல் தஞ்சம் மறுக்கப்பட்ட நிலையில் இவர் பின்னர் நோர்வேக்கு புலம்பெயர்ந்தார்.

2002 :

இக்காலப் பகுதியில் இர்பான் ரிபிசியில் இணைந்து கொண்டார்.

தேன்நிலவின் முடிவு:

2002 :

இறுதிப் பகுதியில் சேது ரிபிசி வானொலியை விட்டு வெளியேறினார். 2002 ஒஸ்லோ பேச்சுவார்த்தையின் போது ரிபிசிக்கு செய்தி சேகரிப்பிற்கு சென்ற சேது புலிகளுடன் நெருங்கி விட்டதாக ரிபிசி பணப்பாளர் ராம்ராஜ் குற்றம்சாட்டியதைத் தொடர்ந்து ஏற்பட்ட முரண்பாட்டில் ரிபிசியில் இருந்து வெளியேறினார்.

2003 :

ரமணன், அரசியல் தஞ்சம் நிராகரிக்கபட்ட நிலையில் 2003 நடுப்பகுதியில் பிரித்தானிய உள்துறை அமைச்சால் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.

அவர் திருப்பி அனுப்பப்பட்ட அன்று ரிபிசி வானொலியில் நெருக்கடிநிலை உருவாகியது. வானொலி நிகழ்ச்சிகள் வழமைக்கு மாறாக ஒலிபரப்பப்பட்டது. வானொலியை ஏனைய ரிபிசி அறிவிப்பாளர்கள் கையிலெடுக்கும் நிலை உருவானது. வானொலி பற்றிய ஆவணங்கள் வைக்கப்பட்டு இருந்த அலுமாரி உடைக்கப்பட்டு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது.(இது கதவை உடைத்து உள்ளே நுளைந்து செய்யப்பட்ட உடைப்பல்ல. தெரிந்தவர்கள் கதவை திறந்து உள்ளே சென்று நிகழ்த்திய உடைப்பு என்பதை கவனிக்க).

சீவகனிடம் ராம்ராஜ் பொறுப்பை ஒப்படைத்து விட்டுச் சென்றதால், ராம்ராஜ் வரும்வரை சீவகன் வானொலியை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார்.

அப்போது இலங்கையில் இருந்த வானொலியின் பணிப்பாளர் ராம்ராஜ் உடனடியாக லண்டனுக்கு வந்தார். லண்டன் வந்தவர் விமான நிலையத்தில் இருந்து நேரடியாக ரிபிசி கலையகத்திற்கு விரைந்து, அங்கிருந்த சுதனையும் காண்டீபனையும் கலையகத்தை விட்டு வெளிறேறும்படி பணித்தர்.

அதனைத் தொடர்ந்து ஏனையவர்களும் ரிபிசிக்கு வருவதை நிறுத்திக் கொண்டனர். இதில் சுதன், காண்டிபன், வாசு, ராஜன், கீரன் ஆகியோர் முரண்பட்டு நின்றனர்.

ஓகஸ்ட் 2003ல் ரிபிசி வானொலி புலிஎதிர்ப்பு வானொலி என்றும் ஈஎன்டிஎல்எப் வானொலி என்றும் குற்றம்சாட்டி அதிலிருந்து வெளியேறுவதாக ஒரு அறிக்கையை தயாரித்து அதில் ரிபிசியின் உறுப்பினர்களான கீரன், ராஜன், வாசு, சுதன், காண்டிபன், ரமணன், நந்திராயன் ஆகியோர் கையெழுத்திட்டு ஈபிடிபியின் தினமுரசு பத்திரிகைக்கு அனுப்பி வைத்தனர். அப்பத்திரிகையில் அது பிரசுரமாகியும் இருந்தது.

**இந்தப் பிளவே பின்நாட்களில் தொடர்ந்த ரிபிசிக்கு எதிரான வன்முறைக்கு அடிப்படையாகியது. இதுவே அன்ரி ரிபிசி அணியின் தோற்றமாகும்.**

கீரனைத் தவிர இவ்வறிக்கையில் கையெழுத்திட்டவர்கள் அனைவரும் விடுதலைப் புலிகளின் அரசியலுடன் தங்களை அடையாளம் காண்பவர்கள். ஆனால் அதில் கையெழுத்திட்ட கீரன் விடுதலைப் புலிகளுக்கு எதிரான கருத்துடையவர். மாற்று கருத்துடையவர் என அடையாளம் காண்பவர்.

முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்த இர்பானும் கிழக்கைச் சேர்ந்த சீவகனும் பரமேஸ்வரியும் இவ்வறிக்கையில் கையெழுத்திடவில்லை. இதில் கையெழுத்து இட்டவர்கள் எவருமே கிழக்கைச் சாராதவர்கள் பெரும்பாலும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் என்பது சந்தர்ப்பவசமானதா இல்லையா என்பது விவாதத்திற்கு உரியது. புறோ புலிகளும் அன்ரி புலிகளும் இணைந்த புள்ளியில் யாழ்ப்பாணமும் கிழக்கும் இணைய முடியாதது பற்றி பின்நவீனத்துவ முன்னோடிகள் ஒரு மறுவாசிப்புச் செய்வது அவசியமாக இருக்கும்.

ஆனாலும் வி சிவலிங்கம் தொடர்ந்தும் ரிபிசியில் தனது கருத்தக்களுக்காக கேட்போருடன் மட்டுமல்ல ரிபிசி உடனும் முட்டி மோதி வருவது குறிப்பிடத்தக்கது. அவர் எஸ்எல்டிடிப் இலேயே அங்கம் வகிக்கும் போது ரிபிசியில் கருத்த மோதல் செய்வது ஒன்றும் பெரியவிடயமும் அல்ல.

ஆனால் இவ்வறிக்கை கீரனின் கொம்பியூட்டர் கடையில் வைத்து தயாரிக்கப்பட்டதாகவும் அதன் தயாரிப்பில் கீரன் ஈடுபட்டு இருந்ததாகவும் சேது தெரிவிக்கிறார். கீழுள்ள சேதுவின் உரையாடலின் ஒலிப்பதிவு இணைக்கப்பட்டு உள்ளது. அதில் சேது இது பற்றி கூறுவதை கேட்கலாம்.

சேது 2003ல் ஏற்பட்ட பிளவுக்கு முன்னரேயே ராம்ராஜ் உடன் முரண்பட்டு வெளியேறியவர். ரிபிசியில் பணியாற்றிக் கொண்டிருந்தவர்களுடன் நெருங்கிய தொடர்புடையவர். தான் ரிபிசியில் இருந்து வெளியேறிய பின்னரும் ரிபிசியில் இருந்தவர்களுடன் தொடர்புகளைப் பேணி வந்தவர். இவரும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான பிரிவினருடனேயே தன்னை அடையாளம் காட்டியவர். ரிபிசி மீதான கோபம் இவருக்கு இருந்ததால் அன்ரி ரிபிசி அணியில் இவரும் அணி வகுத்து நின்றார்.

இந்நிலையில் இவ்வறிக்கை வெளியானதும் கீரன் ஒரு மாற்றுக் கருத்தாளர் என்ற வகையில், ரிபிசி பணிப்பாளர் ராம்ராஜ் கீரனை அணுகி அந்த அறிக்கை பற்றி விசாரித்ததாகவும் கீரன் ‘அதனுடன் தனக்கு தொடர்பு இல்லை’ என்றும் தெரிவித்ததாக கூறினார். ராம்ராஜ் தொடர்ந்தும் கூறுகையில், அப்படியானால் மறுப்பறிக்கை ஒன்றை விடுமாறு கேட்டதாகவும் கீரன் அதற்கு மறுத்துவிட்டதாகவும் தெரிவித்தார்.

ஓகஸ்ட் 10, 2003ல் இவ்வறிக்கை பற்றிய செய்தியும் இச்செய்தியை ஒட்டிய பின்னூட்டங்களும் யாழ் இணையத்தில் பதிவிடப்பட்டு இருந்தது. அதனைப் பார்க்க அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும். ( TBC_appendix_01 ) இவ்வறிக்கை தொடர்பாக யாழ் இணையத்தில் இடம்பெற்ற அன்ரி ரிபிசி அணியின் பின்னூட்ட உரையாடல்கள் ரிபிசி உடைப்பை முன் கூட்டியே அறிவித்து உள்ளன. ‘வாள் வெட்டு கத்திக்குத்து எண்டு முடியும் எண்டு பொடியள் நிக்கிறாங்களாம்.’ என்று ரிபிசி தாக்கப்படுவதற்கான சமிஞ்சை சில வாரங்களுக்கு முன்னரேயே யாழ் இணையத்தில் வெளியாகி உள்ளது. ‘வானொலி வெகு விரைவில் தானாக அடித்து மூடப்பட வேண்டும் அல்லது கட்டாயமாக அடித்து மூடப்படும் என பலர் சுளுரைத்துள்ளனர்.’ என்ற பதிவு சம்பந்தப்பட்டவர்களின் நோக்கத்தை மிகவும் தெளிவுபடுத்துகிறது.

ஓகஸ்ட் 11, 2003 அன்று ராஜன் தங்களைப் பயமுறுத்தியதாக இர்பான், ராம்ராஜ் ஆகியோர் பொலிஸில் முறையிட்டு இருந்தனர். “நான் உன்னைக் கொல்லப் போறேன். நான் அங்க வாறன்” என்று ராஜன் தொலைபேசியில் கூறியதாக இர்பான் வாக்குமூலம் கொடுத்திருந்தார். “அங்கேயே நில். அங்க வந்து நான் யாரெண்டு காட்டுறன்” என ராஜன் தொலைபேசியில் கூறியதாக ராம்ராஜ் தனது வாக்கு மூலத்தில் கொடுத்திருந்தார். பின்னர் அதே தினம் ஓகஸ்ட் 11ல் ராஜன் வானொலி நிலையத்துக்குச் சென்று இப்ரான், ராம்ராஜ் ஆகியோரை நோக்கி சத்தமிட்டுள்ளார். அதனை இப்ரான் பொலிசுக்குத் தெரிவிக்கும் போது ராஜன் அவ்விடத்தை விட்டுச் சென்றுவிட்டார்.

ஓகஸ்ட் 13, 2003 அன்று ராஜனின் வீட்டுக்குச் சென்ற பொலிசார் ராஜனைக் கைது செய்தனர். விசாரணையில் தான் தொலைபேசியில் இர்பானுடன் பேசியதாகவும் வானொலி நிலையத்துக்குச் சென்றதாகவும் கூறிய ராஜன் ஆனால் யாரையும் பயமுறுத்தவில்லை எனத் தெரிவித்தார். விசாரணையின் பின் ராஜன் பிணையில் விடுவிக்கப்பட்டார். விடுவிக்கப்பட்ட ராஜன் இரவு 11:30 மணியளவில் தொலைபேசியில் இப்ரான், ராம்ராஜ் ஆகியோரை மீண்டும் மிரட்டியதாகக் குற்றம்சாட்டப்பட்டது. இப்ரான் ராஜனுடன் நடந்த உரையாடலைப் பதிவு செய்து பொலிஸில் ஒப்படைத்தார்.

ஓகஸ்ட் 14, 2003 – ல் ராஜன் மீண்டும் கைது செய்யப்பட்டார். விசாரணையில் ராஜன் தனது தவறை ஒப்புக் கொண்டார். நண்பர்கள் என்ற முறையில் இந்த வழக்கைக் கைவிடும்படி கேட்பதற்காகவே அவர்களுடன் தொடர்பு கொண்டதாக ராஜன் பொலிசாருக்த் தெரிவித்தார். பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

செப்ரம்பர் 15, 2003 இராத்திரி ரிபிசி வானொலிக்கு எதிரான சூளுரை வழங்கப்பட்டு சில வாரங்களில் ரிபிசி வானொலி முதற் தடவையாக உடைக்கப்பட்டு பொருட்கள் களவாடப்பட்டது. வான் ஒன்றை நிறுத்தி, பதிவான முதல் மாடியில் உள்ள யன்னலை தெண்டி திறந்து, வானொலி நிலையத்திற்குள் புகுந்ததாக ராம்ராஜ் தேசம்நெற்றுக்கு தெரிவித்து இருப்பதை மேலுள்ள அவருடைய ஒளிப்பதிவில் பார்க்கலாம். இதனை சேது தனது ஒலிப்பதிவிலும் உறுதிப்படுத்தி இருக்கிறார். எடுத்துச் செல்லப்பட முடியாதவை அடித்து நொருக்கப்பட்டது. இச்செயலில் ஈடுபட்டவர்கள் அந்த ராத்திரியிலும் எந்த சாட்சியங்களையும் விட்டுச் செல்லவில்லை. அவதானமாக கையுறைகள் எல்லாம் அணிந்து தான் தான் இதனைச் செய்துள்ளதாக மெற்பொலிசார் தெரிவித்து உள்ளனர்.

‘வானொலி வெகு விரைவில் தானாக அடித்து மூடப்பட வேண்டும் அல்லது கட்டாயமாக அடித்து மூடப்படும்’ என்பது ஒரளவு நிரூபிக்கப்பட்டது. இத்தாக்குதலைத் தொடர்ந்து சில தினங்களுக்கு ரிபிசி வானொலி ஒலிபரப்புத் தடைப்பட்டது.

பயன்பாட்டில் இருக்கும் எந்தப் பொருட்களுக்கும் இரண்டாம் பாவனை மதிப்பு குறைவானதே. ஆனால் அவற்றை கொள்வனவு செய்வதற்கு ஏற்படும் செலவீனம் அபாரமானதே. ரிபிசி வானொலி முதற் தடவையாக உடைப்பின் போது ரிபிசி வானொலிக்கு ஏற்பட்ட நட்டம் மொத்த 42,000 பவுண்கள் என பணிப்பாளர் ராம்ராஜ் தேசம்நெற் க்குத் தெரிவித்தார். சேத விபரங்களைப் பார்க்க அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும். ( TBC_appendix_02 )

2004 :

மேற்கூறப்பட்ட வெளியேற்றத்திற்குப் பின் வெளியேறியவர்களும் அச்சுற்றாடலிலேயே வாழ்ந்ததால், ரிபிசி வானொலிக்கு பலத்த அச்சுறுத்தல் இருந்தது. தங்களது அச்சுறுத்தல் நிஜமானது என்பதையும் செப்ரம்பர் 15 அன்ரி ரிபிசி அணி நிரூபித்து உள்ளது. இந்த அச்சுறுத்தல் தொடர்பாக நாம் லண்டன் உதயன் பத்திரிகையில் வெளியிட்ட செய்தியின் ஒரு பகுதி ” மாற்றுக் கருத்துக்களுக்கு ஒரு தளமாகச் செயற்பட்டு வரும் இவ்வானொலியின் நேரடி ஒலிபரப்புகளில் கலந்து கொள்ளும் சில விசமிகள் பல நூற்றுக்கணக்கானோர் கேட்டுக் கொண்டிருக்கும் வானலையில் தகாத வார்த்தைகளைப் பேசி கொலை மிரட்டல்களை விடுவதாக அதன் பணிப்பாளர் ராம்ராஜ் உதயனுக்குத் தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில், தங்கள் வீட்டுக்கும் தொலைபேசியில் மிரட்டல்கள் வருவதாகவும் தனது மனைவியை வெள்ளைச் சீலை வாங்கி வைக்குமாறு மிரட்டுவதாகவும் அவர் கூறினார். இம்மிரட்டல்கள் பற்றி ஸ்கொட்லன்ட்யாட்டுக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனை அவர்கள் உறுதிப்படுத்தினர்.” என நாம் செய்தி ஒன்றினை உதயனின் 37வது இதழில் ஏப்ரல் 2004ல் வெளியிட்டு இருந்தோம்.

யூன் 28, 2004ல் ராஜனுக்கு எதிராக ரிபிசி தொடர்பாக பொலிஸார் தாக்கல் செய்த வழக்கு விசாரணைக்கு வர இருந்தது. இவ்வழக்கை ராம்ராஜ் கைவிட வேண்டும் என்ற அபிப்பிராயம் ராஜனுக்கு நெருக்கமான நண்பர்களான அன்ரி ரிபிசி அணியின் மத்தியில் இருந்தது. அவ்வழக்கை பொலிசாரே முன்னெடுத்ததாலும் ஏற்கனவே வானொலி உடைக்கப்பட்டு இருந்தாதாலும் அவ்வழக்கை வாபஸ் பெறுவது எதிர்காலத்தில் இவ்வாறான தாக்குதல்கள் இடம்பெற்றால் பொலிசாருடைய ஆதரவைப் பெற முடியாத நிலையை ஏற்படுத்தும் என ராம்ராஜ் அப்போது தெரிவித்து இருந்தார். ஆனால் ராம்ராஜ் உடைய இந்நிலையை ராஜனின் நண்பர்கள் வட்டம் – அன்ரி ரிபிசி அணி ஏற்றிருக்கவில்லை. இதற்கிடையே ராஜனும் அவருக்கு சாட்சியாக வந்த முன்னால் பா உ மகேஸ்வரனின் சகோதரர் பொபியும் இர்பானை நீதிமன்றத்தில் வைத்து மிரட்டியதால் இருவரும் கைது செய்யப்பட்டு வழக்கு முடியும் வரை தடுத்து வைக்கப்பட்டனர்.

யூலை 5, 2004 வழக்கில் ராஜன் நிரபராதியாக விடுவிக்கப்பட்டார். ராஜன் கொலை செய்யும் நோக்கத்துடன் சென்றிருக்கவில்லை என்ற வாதத்தை நீதிபதி ஏற்றுக்கொண்டார். ராஜனுக்கு சாட்சியாக வாசு சாட்சியமளித்து இருந்தார்.

2005 :

அன்ரி ரிபிசி உறுப்பினர்களைக் கொண்ட புலி அனுதாப அணி ஒன்று தீவிரமானது. அதில் வாசு, ராஜன், சேது ஆகியோர் தீவிரமாகச் செயற்பட்டனர். வாக்கு வேட்டைக்காக கவுன்சிலரான தயா இடைக்காடரும் அன்ரி ரிபிசி அணியில் இணைந்து கொண்டார். இந்த அன்ரி ரிபிசி அணியில் புலி ஆதரவான நெருப்பு.ஓர்க் இணையத்தை நடத்துபவராக குற்றம்சாட்டப்படும் மதி போன்ற ரிபிசியில் அங்கம் வகிக்காதவர்களும் தங்களை இணைத்துக் கொண்டனர். இவர்களது பிரதான தாக்குதல் மையமாக ரிபிசி இருந்ததில் ஆச்சரியம் இல்லை. இவர்கள் ராம்ராஜ்யை மட்டுமல்ல அங்கு வந்து செல்லும் விமர்சகர்களையும் தாக்கினர். அதில் மோசமாகப் பாதிக்கப்பட்டவர் ரீபிசி யின் நீண்டகால அரசியல் விமர்சகரும் எஸ்எல்டிஎப் இன் உறுப்பினருமான வி சிவலிங்கம். ஆர் ஜெயதேவன், விவேகானந்தன், பசீர் போன்றவர்களும் அன்ரி ரிபிசி இணைய ஊடகங்களால் மோசமாகத் தாக்கப்பட்டு உள்ளனர். ராஜேஸ் பாலாவும் மோசமாகத் தாக்கப்பட்டு உள்ளார்.

அன்ரி ரிபிசி அணியில் இருந்த நட்புக் காரணமாகவும் மற்றும் ஒத்துழைப்புகளுக்காகவும் கீரன், ராகவன், நீதி மற்றும் அவர்களுக்கு நெருக்கமான அன்ரி புலிகள் மீது பொதுவாக அன்ரி ரிபிசி அணி இணையத் தாக்குதல்களைச் செய்வதில்லை. அதனாலேயே ஆர் ஜெயதேவன் நிதர்சனம், புலி ஆதரவு நெருப்பு போன்ற இணையங்கள் எஸ்எல்டிஎப் இனரால் நடத்தப்படுவதாக தனது கட்டுரையில் குற்றம்சாட்டி இருந்தார். இக்குற்றச்சாட்டு மிகைப்படுத்தப்பட்ட ஒன்றாகவேபடுகிறது. ஆனால் தற்போது எஸ்எல்டிஎப் குறைந்தபட்சம் ஒரு பினாமி இணையத்தை மட்டுமாவது இயக்கி தனக்கு எதிராக விமர்சனங்களை வைப்பவர்களை தெரிவு செய்து இணையத் தாக்குதலை மேற்கொள்கிறது என்ற சந்தேகம் இதிலிருந்து எழுவது தவிர்க்க இயலாததாக உள்ளது.

மே 22, 2005 இராத்திரியில் வழக்கு மற்றும் ஏற்கனவே இருந்த முரண்பாடுகளை வைத்துக் கொண்டு அன்ரி ரிபிசி அணியின் சிலர் வானொலி நிலையத்திற்குள் மீண்டும் நுழைந்து பொருட்களைக் களவாடியதுடன் பொருட்களையும் சேதப்படுத்தினர். இதன் போது வானொலி நிலையத்தின் திறப்பை எப்படியோ பெற்றுக் கொண்டவர்கள் இந்த இராத்திரிக்கும் சாட்சிகள் இன்றி தங்கள் கைவரிசையை காட்டி உள்ளனர். இச்சம்பவத்தில் 14,300 பவுண்கள் சேதம் ஏற்பட்டதாக ராம்ராஜ் தெரிவிக்கிறார். இதிலிருந்து ரிபிசியை வானலைகளில் கொண்டு வருவதற்கு ஆர் ஜெயதேவன் ரிபிசிக்கு 3000 பவுண்களை வழங்கியதாக ராம்ராஜ் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். இரண்டாவது உடைப்பில் ஏற்பட்ட சேத விபரங்களைப் பார்க்க அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும். ( TBC_appendix_03 )

இந்த காலகட்டத்தில் எஸ்எல்டிஎப் உறுப்பினரான ராகவனின் காரை ராஜன், காண்டிபன் ஆகியோர் பயன்படுத்துவதாகவும், உடைப்பின் போது இவ்வாகனம் பயன்படுத்தப்பட்டதாகவும் இச்சம்பவங்களில் சம்பந்தப்பட்ட முக்கியமான ஒருவர் தேசம்நெற் க்குத் தெரிவித்தார். இக்காலத்தில் ராஜனிடமோ காண்டீபனிடமோ சொந்தமாக கார் இருக்கவில்லை. அவர் மேலும் தெரிவிக்கையில் களவாடப்பட்ட சிடிக்களில் சில அவருடைய காரிற்குள் விடப்பட்டதாகவும் தெரிவித்தார். இதனை சேதுவின் ஒலிப்பதிவும் உறுதிப்படுத்துகிறது.

இந்த உடைப்புப் பற்றியே ரமிழ்அபையர்ஸ், ஸ்ரீலங்கா கார்டியன், நெருப்பு.கொம் ஆகிய இணையத்தளங்கள் எஸ்எல்எடிப் உறுப்பினர்கள் ரிபிசி உடைப்பில் சம்பந்தப்பட்டதாக குற்றம்சாட்டி இருந்தன. இது பற்றி பின்னர் சற்று விரிவாக பார்ப்பதற்கு முன்.

மே 22, 2005ல் இடம்பெற்ற இரண்டாவது உடைப்பிற்கு சில மாதங்களின் பின் கீரன், வாசு, ராஜன், சுதன், காண்டிபன் மற்றும் இவர்களுடன் நெருக்கமாக இருந்த ராகவன் நீதி ஆகிய அன்ரி ரிபிசி ( அன்ரி ரிபிசி = அன்ரி புலி + புறோ புலி ) அணியிடையே இருந்த தேன்நிலவு சுட ஆரம்பித்தது.

அழைக்கப்பட்டவர்கள் மட்டும் கலந்து கொள்ளும் எஸ்எல்டிஎப் கூட்டத்தில் ராஜனும் கலந்துகொள்ளும் நிலை மாறத் தொடங்கியது. புலிகளின் அனுதாபிகளாக இருந்த வாசுவும் ராஜனும் தீவிர புலி ஆதரவுச் செயற்பாட்டாளர்களாக மாறினர். கீரன், ராகவன், நீதி தங்கள் புலி எதிர்ப்பு நிலையில் இவர்களுடனான உறவை தொடர்ந்தும் பேண முடியாதவர்களாக ஆயினர். அன்ரி ரிபிசி அணியில் இருந்து அன்ரி புலிகள் விலக (அன்ரி ரிபிசி – அன்ரி புலி = புறோபுலி ) அது புறோ புலியாக மாறியது. ( அன்ரி ரிபிசி = புறோ புலி )

2006 :

யூன் 8 தயா இடைக்காடரின் உண்ணாவிரதம் மற்றும் போராட்டங்களை முன்னின்று நடாத்திய ராஜன், ரைம்ஸ் ரவல்ஸ் நிறுவன உரிமையாளர் கந்தையா சுதாகரனின் சகோதரர், கந்தையா உதயசேகரன், ஒஸ்லோ வொய்ஸ் இணைய த்தளத்தை இயக்கி வரும் சேது ஆகியோர் இரவு ரிபிசியில் அரசியல் ஆய்வு இடம்பெற்றுக் கொண்டிருந்த வேளையில் கலையயத்திற்கு வந்து தகாத முறையில் அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டதற்காக பொலிசாரால் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது குற்றம் பதிவு செய்யப்பட்டது.

நோர்வெயில் வாழும் சேது கவுன்சிலர் இடைக்காடரின் உண்ணாவிரதத்தில் பங்கேற்க லண்டன் வந்திருந்த வேளையிலேயே பொலிசாரிடம் அகப்பட்டார்.

நவம்பர் 25, 2006 இராத்திரியில் அன்ரி ரிபிசி அணி, ரிபிசியை மூன்றாவது தடவையாகத் தாக்கியது. இத்தாக்குதலின் போது வானொலி நிலையத்தின் கதவை உடைத்தே இவர்கள் உள்ளே நுழைந்தனர். இந்த தாக்குதலின் போது மட்டுமே அன்ரி புலிகள் இல்லாத அணியாக அன்ரி ரிபிசி அணி காணப்பட்டது. இந்த உடைப்பில் தொடர்புடைய அன்ரி ரிபிசியினர் அனைவருமே புறோ புலிகளாகவே இருந்து உள்ளனர். இந்த உடைப்புச் சம்பவத்தினால் ரிபிசி வானொலி நிலையத்திற்கு 14,300கள் நட்டம் ஏற்பட்டதாக ராம்ராஜ் தேசம்நெற் க்குத் தெரிவித்தார். மூன்றாவது உடைப்பில் ஏற்பட்ட சேத விபரங்களைப் பார்க்க அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும். : ( TBC_appendix_04 )

முன்னைய உடைப்புகளில் மௌனம் காத்த எஸ்எல்டிஎப் இந்த மூன்றாவது உடைப்பில் விழித்தெழுந்து அறிக்கை வெளியிட்டது. தேன்நிலவு சுட்டிராவிட்டால் இந்ந அறிக்கையும் வந்திருக்குமா என்ற சந்தேகத்தை யாரும் எழுப்பினால் அதில் தவறேதும் இல்லை.

2007 :

யூன் 2007ல் ரிபிசி வானொலி கலையகத்தின் அலுவலர்களை மிரட்டியது தொடர்பான வழக்கில் குற்றவாளிகள் மீதான தண்டனை ஹரோ நீதிமன்றத்தினால் அறிவிக்கப்பட்டது. குற்றம் நிரூபிக்கப்பட்ட ராஜனுக்கு 100 மணிநேர சமூக வேலையும் அபராதமும் விதிக்கப்பட்டது. ரிபிசி தொடர்பான வழக்கில் சேது தனது தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்து உள்ளார்.

ரிபிசி உடைப்பில் ஜனநாயக சக்திகள்

2003 நடுப்பகுதி முதல் 2006 இறுதிப் பகுதி வரையான காலகட்டம் ரிபிசிக்கு எதிரான மிக மோசமான வன்முறைகள் இடம்பெற்ற காலகட்டம் என்பதை இங்கு மேலும் ஒரு முறை அழுத்திக் கூற வேண்டியதில்லை. இந்த வன்முறை நேரடியான தாக்குதலாகவும் இணைய ஊடகங்களுடான தாக்குதலாகவும் அமைந்திருந்தது. இவற்றினால் வானொலிக்கு பாரிய பொருளாதார இழப்பு ஏற்பட்டு உள்ளது என்பது ஒரு புறம் இருக்க உளவியல் ரீதியான தாக்கமும் குறைத்து மதிப்பிட முடியாதது.

ரிபிசி வானொலி உடைப்பில் 2005 செப்ரம்பர் 15ல் இடம்பெற்ற தாக்குதல் கூடுதல் கவனத்திற்கு கொள்ளப்பட்டு உள்ளது. அதற்கு முக்கிய காரணம் அதில் தொடர்புடையவர்கள் என்று குற்றம்சாட்டப்படுவோர் ஜனநாயகவாதிகளாக அறியப்பட்டு இருப்பதே. குறிப்பாக அன்ரி ரிபிசி அணி தொடர்ச்சியாக ரிபிசி மீது தாக்குதலைத் தொடுத்த போது மௌனம் சாதித்தது மட்டுமல்ல அதற்கு மேல் சென்று அதனுடன் ஒரு வகையில் தொடர்பபட்டு இருப்பதும் இப்போது வெளிவந்து உள்ளது.

ரிபிசியின் மூன்று உடைப்புச் சம்பவங்களிலும் சேது நேரடியாக தொடர்புபட்டு இருக்கவில்லை. அவர் உடைக்கப்பட்ட காலப் பகுதிகளில் நோர்வேயிலேயே இருந்து உள்ளார். இதனை சேது மட்டும் தெரிவிக்கவில்லை. இந்த மூன்று உடைப்புச் சம்பவங்களிலும் சம்பந்தப்பட்ட ஒருவர் உறுதிப்படுத்தி இருக்கிறார். அதனால் சேது ரிபிசிக்கு அனுதாபமானவர் என்பது அர்த்தமல்ல. அன்ரி ரிபிசி அணியில் தீவிரமான ஒருவர். வெளிப்படையாக கருத்துக்களைத் தெரிவிப்பதாலும் ஒஸ்லோ பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இவர் புலியாக ரிபிசியால் காட்டப்பட்டதாலும் உடைப்புச் சம்பவங்களில் சேதுவைத் தொடர்புபடுத்தவது ரிபிசிக்கும் ராம்ராஜ்க்கும் கடினமாக அமையவில்லை. மேலும் சேது ரிபிசி உடைப்புப் பற்றிய விடயங்களை உடனுக்கு உடன் அறிந்திருந்தார் என்பதும் உண்மை.

அதுமட்டுமல்ல சேது விடுதலைப் புலிகளின் முகவர் என்று கூறுவதும் ரிபிசியை விடுதலைப் புலிகளே தாக்கினார்கள் எனக் கூறுவதும் உள் முரண்பாடுகளை மறைக்கவும், பெரிய எதிரியுடன் மோதுகிறோம் என்ற தோற்றத்தை ஏற்படுத்துவதும் வானொலியை தக்க வைப்பதற்கு உறுதுணையாக இருந்து உள்ளது. விடுதலைப் புலிகள் மீதும் சேது மீதும் பழிபோடுவதால் ஏற்பட்ட அனுகூலத்தினால் ராம்ராஜ் ‘ஜனநாயக சக்திகள்’ உடன் ஒரு மோதல் ஏற்படுவதை தவிர்த்துக் கொண்டார். இன்று இந்த வலைப் பின்னலுக்குள் இருந்து வெளியேற முடியாதவராகவும் உள்ளார்.

ஒரு உடைப்புச் சம்பவத்தின் போது ரிபிசி உடைக்கப்பட்ட செய்தி யாழ் இணையத்தின் பின்னூட்டத்தில் உடைப்பு நிகழ்ந்து சில நிமிடங்களிலேயே பதியப்பட்டு விட்டது. அச்சம்பவம் பற்றி ரிபிசி நிர்வாகமே அறிந்திருக்கவில்லை. இந்த பின்னூட்டம் சம்பந்தப்பட்டவர்களைக் காட்டிக் கொடுத்துவிடும் என்பதால் உடனடியாக நீக்கப்பட்டதாக தேசம்நெற் க்கு இதனுடன் தொடர்புடைய ஒருவர் தெரிவித்தார்.

ரிபிசியின் முதலாவது உடைப்பில் கீரன் நேரடியாக தொடர்புபட்டு இருந்ததாகவும் இரண்டாவது உடைப்பில் ராகவனின் கார் பயன்படுத்தப்பட்டதாகவும் சேது தெரிவிக்கிறார். ரிபிசி வானொலி உடைக்க்பட்ட பொருட்கள் ரிபிசி உடைப்பில் சம்பந்தப்பட்ட ஒருவரின் வீட்டில் கொண்டு வந்து இறக்கப்பட்ட போது அங்கு அன்று வழமையான பார்ட்டி நடந்துகொண்டு இருந்ததாகவும் அவர் கூறுகிறார். அந்தப் பார்ட்டியில் கீரன் ராகவன் நீதி இருந்ததாக சேது தெரிவித்தார். மேலும் ரிபிசியில் களவாடப்பட்ட சிடிக்களில் சில பழைய பாடல் சீடிக்கள் ராகவனின் காரில் விடப்பட்டதாகவும் சேது கூறுகிறார். இது தொடர்பாக சேதுவின் உரையாடலைக் கேட்க அருகில் உள்ள இணைப்பை அழுத்தவும்.

சேதுவுடன் உரையாடல்

ரிபிசியின் உடைப்புச் சம்பவங்களில் சம்பந்தப்பட்ட நபர் தனது முன்னாள் நண்பர்களைக் காட்டிக்கொடுக்க விரும்பாதது மட்டுமல்ல பல படிகள் சென்று அவர்களைக் காப்பாற்றும் முயற்சியிலேயே தீவிரமாக இருக்கிறார். அவரை ரிபிசி தொடர்பாக விசாரிக்கையில் அவர் என்னைக் கேட்டுக் கொண்ட ஒரு விடயத்தை இங்கு குறிப்பிடுவது பொருத்தமானதாக இருக்கும், ‘உமக்காக உம்முடைய பிள்ளை ஒரு தவறிழைத்திருந்தால், நீர் உம்முடைய பிள்ளையை காட்டிக்கொடுப்பீரா?’ என்பதே அவர் என்னிடம் கேட்டது. இதற்கு நான் அவருக்கு பதில் கொடுத்தாலும் அவரிடம் புதைந்துள்ள முழுமையான உண்மையையும் அவரின் சம்மதத்துடன் வெளிக்கொணர முடியவில்லை. அதனால் அவ்வுரையாடலை இங்கு பதிவிட முடியவில்லை.

ஆனால் பல்வேறு குறுக்கு விசாரணைகளில் அவர் ஒருவிடயத்தை ஒப்புக்கொண்டார். ரிபிசி வானொலியின் பொருட்கள் கொண்டுவந்து இறக்கப்பட்டபோது கீரன், ராகவன், நீதி ஆகியோர் அங்கிருந்து உள்ளனர். ராகவன் சில பழைய பாடல் சீடிக்களை எடுத்துச் சென்றார் எனபதை அந்நபர் ஒப்புக் கொண்டார். இச்சந்திப்பின் போது நியூஹாம் கவுன்சிலர் போல் சத்தியநேசனும் உடனிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இச்சந்திப்பு ஓகஸ்ட் இறுதிப் பகுதியில் ஈஸ்ஹாமில் சிந்துமஹாலில் இடம்பெற்றது.

ரிபிசியின் இரண்டாவது உடைப்பில் களவாடப்பட்டு சம்பந்தப்பட்ட நபரின் வீட்டில் இறக்கப்பட்ட பொருட்கள் அன்ரி ரிபிசி அணியின் தீவிர செயற்பாட்டாளர்களில் ஒருவரான வாசுவினால் ஈபெயில் விற்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.

ஆனால் இவர்கள் அனைவருமே தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து உள்ளனர்.

இது பற்றி கீரன் வெளியிட்டு உள்ள குறிப்பில் ”நிதர்சனம் பாணியில் இணையும் இன்னும் சில இணையங்கள்” : கீரன் (லண்டன்) : http://thesamnet.co.uk/?p=2077

, ”SLDF க்கும் அதில் உள்ள சில உறுப்பினர்களுக்கும் எதிராக திட்டமிட்டு சிலரால் கிளப்பப்பட்ட படுபொய்யான வதந்திக்கு மறுப்பறிக்கை தரவேண்டிய தேவை SLDFக்கும் இல்லை, அதன் உறுப்பினர்களுக்கும் இல்லை, என் போன்ற அதன் ஆதரவாளர்களுக்கும் இல்லை.” என்று தெரிவித்து இருந்தார்.

இச்சர்ச்சைகளுக்கு முன்னரே கீரன், ராகவினிடம் இவை பற்றி கேட்ட போது அவர்கள் இதனை மறுத்து இருந்தனர். ஏனையவர்களும் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து உள்ளனர்.

ரிபிசி தொடர்பாக தேசம்நெற் சேகரித்த தகவல்கள், உரையாடல்களை தெரிவு செய்து பொதுத் தளத்திற்குரிய வகையில் வைத்துள்ளோம். குறுக்கு விசாரணைகள் உங்களுடையது. தீர்ப்பை பொதுத் தளத்திற்கே விட்டுவிடுகிறோம்.

ஏன் தேசம்நெற் பொறுப்பாக்கப்பட்டது

ரிபிசி உடைப்பில் எஸ்எல்டிஎப்யை தொடர்புபடுத்தி எந்த ஒரு செய்தியையோ கட்டுரையையோ தேசம்நெற் (இந்தக் கட்டுரையைத் தவிர) வெளியிட்டு இருக்கவில்லை. அப்படி இருக்கையில் தேசம்நெற் இது தொடர்பாக அவதூறு பரப்பியதாக சில எஸ்எல்டிப் உறுப்பினர்களால் குற்றம்சாட்டப்படுவது வேடிக்கையானதாக இருந்தாலும் அதன் பின், பலமான ஒரு நோக்கம் உள்ளது என்றே கருதுகிறோம். ரிபிசி உடைப்பில் எஸ்எல்டிஎப் இன் தொடர்பு சம்பந்தமாக Sri Lanka Democratic Forum (SLDF) members accused of involvement in the radio station burglary : http://www.tamilaffairs.com/news/sri-lanka-democratic-forum-sldf-members-accused-involvement-radio-station-burglary – Aug 01, 2008 என்ற கட்டுரையே முதன் முதலில் எஸ்எல்டிஎப் அமைப்பு இணைந்து செயற்பட்ட தமிழ் டெமொகிரட்டிக் கொங்கிரஸ் தலைவர் ஆர் ஜெயதேவனால் எழுதி வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து பின்வரும் கட்டுரைகள் செய்திகள் முறையே நெருப்பு.கொம், இனியொரு.கொம், ரமிழ்அபையர்ஸ்.கொம், ஸ்ரீலங்காகார்டியன்.ஓர்க் ஆகிய இணையத்தளங்களில் வெளிவந்தது.

ரி..பி.சி.வானொலி நிலையம் மீதான தாக்குதலில் ஜனநாயக சக்திகள்! : http://www.neruppu.com/?p=3909 – Aug 01, 2008,

SLDF உறுப்பினர்கள் TBC வானொலி நிலையக் கொள்ளையில் பங்கு?! : http://inioru.com/?p=534 – Aug 2, 2008,

Reply to the public statement on the accusation of SLDF involvement in the TBC break-in : http://www.tamilaffairs.com/news/reply-public-statement-accusation-sldf-involvement-tbc-break – Aug 12, 2008,

SLDF In Crisis : http://www.srilankaguardian.org/2008/09/sldf-in-crisis.html – Sep 14, 2008,

SLDF men engaged in harassment campaign : http://www.tamilaffairs.com/news/sldf-men-engaged-harassment-campaign – Sep 27, 2008.

ஆனால் தேசம்நெற்றில் எவ்வித செய்தியோ கட்டுரையோ வெளியாகாமல் இருந்தும் இவற்றுக்கான பொறுப்பு தேசம்நெற் மீது சுமத்தப்பட்டது மட்டுமல்ல, தேசம்நெற் அவதூறு செய்வதாக குற்றம்சாட்டப்பட்டு முக்கியமாக எஸ்எல்டிஎப் முன்னணி உறுப்பினர்கள் சிலரால் ஒரு அறிக்கை தயாரிக்கப்பட்டு தாங்கள் உட்பட 74 பேரிடம் ஒப்புதல் பெற்றனர். இது தொடர்பாக ஒப்புதல் வழங்குவதற்கு முன், ‘ரிபிசி உடைப்பு தொடர்பான குற்றச்சாட்டு உட்பட தனித்தனி குற்றச்சாட்டுகள் சிலரைக் காப்பாற்றுவதற்காக அறிக்கை தயாரிக்கப்பட்டது’ போல் அமைந்து உள்ளதாக ஒப்புதல் அளித்தவர்களில் ஒருவரான சோலையூரான் சுட்டிக்காட்டி உள்ளார். அது ‘அறிக்கையின் பலவீனம்’ எனவும் அவர் தெரிவித்தார். (அவதூறுகளுக்குப் பெயர் கருத்துச் சுதந்திரமல்ல என்ற அறிக்கை தொடர்பான பதிலை விரைவில் வெளிவரவுள்ள தேசம்நெற் அறிக்கையில் பார்க்கவும்.)

தேசம்நெற் அவதூறு செய்வதாக எஸ்எல்டிஎப் உறுப்பினர்கள் சிலர் புலம்புவது ‘ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுகிறது’ என்ற கதையையே ஞாபகத்திற்கு கொண்டு வருகிறது. தேசம்நெற் அவதூறு செய்கிறது என்ற குற்றச்சாட்டுக்கு முக்கிய காரணம் தேசம்நெற் எஸ்எல்டிஎப் தொடர்பான விமர்சனங்களுக்கும், எஸ்எல்டிஎப் இன் சில முக்கிய உறுப்பினர்களின் அரசியல் செயற்பாடுகளை விமர்சிக்கவும் களம் அமைத்துக் கொடுத்ததே. குறிப்பாக எஸ்எல்டிஎப் செயற்பாடுகளில் நீண்டகாலமாக தம்மை ஈடுபடுத்திய பாண்டியன் தம்பிராஜா, யோகன் கண்ணமுத்து மற்றும் சபா நாவலன் ஆகியோர் எஸ்எல்டிஎப் மீது வைத்த விமர்சனங்களுக்கு பதிலளிக்க எஸ்எல்டிஎப் மறுத்தனர்.

”1. நீங்கள் தன்னார்வ சமூக சேவை நிறுவனமா அல்லது சிக்கலான ததுவார்த்தப் பின்புலத்தைக் கொண்ட கட்சியா என்பதை முடிபுசெய்து முன்வையுங்கள்.
2. 20 பேர் கொண்ட செலுத்துனர்களை அவர்கள் யார் என்று தெளிவுபடுத்துங்கள்.
3. ஜனநாயக அடிப்படையிலான உறுப்பினர்களைக் கொண்டு தெரிவு செய்யப்படும் குழுவை செலுத்துனராக்குங்கள்.” போன்ற கருத்துக்களை முன்வைத்து ஏப்ரல் 5, 2008ல் ஒரு விமர்சனத்தை முன்வைத்தார் பாண்டியன் தம்பிராஜா. மூன்றாவது பாதையும் ஜனநாயகமும் http://thesamnet.co.uk/?p=817

யாரொடு நோவது? யார்க்கெடுத்துரைப்பது? -SLDF இடம் ஒரு கேள்வி : http://thesamnet.co.uk/?p=2049 என்ற தலைப்பில் சபா நாவலன் ஓகஸ்ட் 9, 2008ல் ஒரு விமர்சனத்தை முன்வைத்து இருந்தார்.

ஓகஸ்ட் 15ல் ‘சேராத இடம்சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தோமோ………’ : http://thesamnet.co.uk/?p=2095 என்ற தலைப்பில் அசோக் எஸ்எல்டிஎப் தொடர்பாக எழுதிய விமர்சனத்தில் ”இலங்கை ஜனநாயக ஒன்றியத்தின் (SLDF) தலைமை நபர்களுக்கு இடதுசாரி மரபோ ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வு பற்றிய எந்தக் கரிசனையும் இருப்பதாய் நாம் அறியவில்லை. இவர்களின் வரலாறு ஒடுக்கப்பட்ட மக்களை வதைத்த வரலாறாகவும் எல்லா வன்முறைகளுக்கும் மனித உரிமை மீறல்களுக்கும் துணைபோன வரலாறாகவே அமையப் பெற்றுள்ளது. இவர்கள் என்றாவது தங்களது கடந்தகால நிகழ்கால வன்முறை அரசியலுக்கு வெளிப்படையாக வருத்தம் தெரிவித்திருக்கிறார்களா? ” என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.

இவ்வாறு தம்மீது வந்த அனைத்து விமர்சனங்களுக்கும் ‘ஜனநாயக மௌனம்’ காத்தவர்கள், சுற்றி வளைத்து அந்த விமர்சனங்களுக்கு களம் கொடுத்ததற்காக தேசம்நெற் மீது நேரடியாகவும் பினாமி இணையங்களுடாகவும் தங்கள் கைவரிசையை காட்ட விளைகின்றனர். தேசம்நெற் ஆசிரியர்களையும் வாசகர்களையும் ‘குவாலிபிகேசன்’ கொண்டவர்களைக் கொண்ட எஸ்எல்டிஎப் இன் சில உறுப்பினர்கள் குறி வைத்து கொச்சைப்படுத்தலில் ஈடுபட்டு உள்ளனர்.

இவற்றில் காட்டும் ஆர்வத்தில் சிறிதளவையாவது நேரான வழியில் பயன்படுத்தி இருந்தால், யூலை 25 2008க்குப் பின் எவ்வித பதிவுகளும் இன்றி இருக்கும் எஸ்எல்டிஎப் இன் உத்தியோகபூர்வ இணையத்தில் தங்கள் அரசியல் நிலைப்பாடுகள் பற்றி மற்றவர்களுக்கு தெளிவுபடுத்தி இருக்க முடியும். தமிழிலும் சிங்களத்திலும் சில ஆக்கங்களைக் கொண்டு வரும்படி பல தடவை கேட்டுக் கொண்ட எம் போன்றவர்களின் ஆதங்கத்தை தீர்த்து இருக்க முடியும். யூன் 2003 முதல் இன்று வரை ஜந்து ஆண்டுகளாக 75க்கு உட்பட்ட கட்டுரைகளே முழுமையாக ஆங்கிலத்தில் வெளியாகி உள்ளது. இவற்றில் தமது அமைப்பு பற்றிய கட்டுரைகளையாவது தமிழிலும் சிங்களத்திலும் அவர்களால் மொழிபெயர்க்க முடியவில்லை.

அதிகாரத்தில் உள்ளவர்களை மட்டும் நோக்கித் தான் எஸ்எல்டிஎப் இன் உரையாடல்களும் பணிகளும் தொடரப் போகின்றது என்றால் ஆங்கிலம் படித்த மேட்டுக்குடியினரின் நலனுக்காகத்தான் எஸ்எல்டிஎப் இயங்குகிறது என்றால் தமிழ், சிங்கள மொழிகள் பற்றி எஸ்எல்டிஎப் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. ஆங்கிலம் தெரியாதவர்கள் எஸ்எல்டிஎப் பில் உறுப்பினராக இருக்கமுடியாதா? உறுப்பினராக சேர்வதற்கு என்ன குவாலிகேசனுகள் சமர்ப்பிக்கவேண்டும்? சமூகத்தின் கீழ் தளங்களில் இருந்து வரும் விமர்சனங்களை கண்டுகொள்ள வேண்டிய அவசியமில்லை. எஸ்எல்டிஎப் ஒரு ‘புத்திஜீவிகள் குழு’, எஸ்எல்டிஎப் ‘தமிழர்களின் மூளை’, எஸ்எல்டிஎப் ‘திங் ராங்க்’ என்று சொல்லிக் கொள்ளலாம். அப்படி சொல்லிகொள்பவர்கள் மக்களிடம் வரவேண்டிய அவசியம் இல்லை.

நாம் எஸ்எல்டிஎப் யை ஒரு ஜனநாயக அமைப்பாக கணித்து எமது ஊடகங்களுக்கு ஊடாகவும் தனிப்பட்ட முறையிலும் எஸ்எல்டிஎப்யை தமிழ் மக்களிடம் கொண்டு சென்று உள்ளோம். தமிழ் மக்கள் மத்தியில் எஸ்எல்டிஎப் அறியப்பட்ட அமைப்பாக இருப்பதில் தேசம்நெற் உட்பட நாம் சார்ந்த ஊடகங்களான தேசம் சஞ்சிகை, லண்டன் குரல், உதயன் ஆகியவை முக்கியமானவை. தமிழில் பதிப்பு ஊடகம் ஒன்றில் எஸ்எல்டிஎப் பற்றிய செய்தி வந்ததாக இருந்தால் அது பெரும்பாலும் நாம் சார்ந்த ஊடகமாகத்தான் இருக்க முடியும். அவ்வாறு அவ்வமைப்பை ஒரு ஜனநாயக அமைப்பாக பிரச்சாரப்படுத்திய, நாம் அது தொடர்பான விமர்சனங்கள் வரும்போது அவற்றை இருட்டடிப்பு செய்வது ஒரு ஜனநாயக செயன்முறையாகாது. பல விமர்சனங்கள் எஸ்எல்டிஎப் கூட்டங்களிலும் தனிப்பட்ட முறையில் அதன் உறுப்பினர்களிடமும் முன்வைக்கப்பட்டு இருந்தது. ஆனால் விமர்சனங்களை முன்வைப்பவர்களை கூட்டங்களுக்கு அழைக்காமல் தவிர்ப்பதும் விமர்சனங்களை முன்வைப்பவர்கள் பற்றி தொலைபேசியில் வசைபாடுவதும், பினாமி இணையங்களைத் திறந்து விமர்சிப்பவர்களைத் தூற்றுவதும் எவ்வித ஜனநாயக் சூழலையும் தோற்றுவிக்க உதவாது.

விமர்சனங்கள் ஜனநாயக சக்திகளிடையே பிளவை ஏற்படுத்தும் என்பதற்காக விமர்சனத்தை தவிர்க்க முடியாது. விமர்சனத்தை எதிர்கொள்ளாத ஜனநாயகம் உயிரற்ற ஜனநாயகம். அதில் எமக்கு உடன்பாடில்லை. விமர்சனத்தை காத்திரமாக எதிர்கொள்ளும் அமைப்புகளே மக்கள் நலன்சார்ந்ததாக இயங்க முடியும். அவ்வமைப்புகளே மக்களுக்கு வெளிப்படையாகவும் அவர்களுக்கு பொறுப்புடையவர்களாகவும் செயற்படுவார்கள்.

குழந்தைகளுக்கு பூச்சாண்டி காட்டுவது போல் எடுத்ததற்கு எல்லாம் தமிழ் மக்களுக்கு புலியைக் காட்டி இரகசியமாக இயங்குகிறோம் என்று ரீல் விடும் மாற்றுக் கருத்து ஜனநாயகப் பருப்பு நீண்ட நாளைக்கு மக்களிடம் வேகாது என்பதனை சம்பந்தப்பட்டவர்கள் உணர்ந்து, தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். தங்கள் அமைப்புகளை இயலுமானவரை ஜனநாயகப்படுத்த வேண்டும்.