Archive for the ‘ராமன் தேடிய சீதை’ Category

ராமன் தேடிய சீதை – ஒரு உள்ளார்ந்த அனுபவம்

செப்ரெம்பர் 19, 2008

20-09-2008

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

ஆண்கள், பெண்கள் என்று இரு தரப்பினராலும் மறக்க முடியாதது தங்களது முதல் காதலையும், காதலி அல்லது காதலரையும்தான்.. பின்னர் கால வரிசைப்படி அவர்களுக்குக் கிடைக்கும் காதலையும்தான்..

இதைத்தான் தனது “ஆட்டோகிராப்” என்னும் காதல் ஓவியத்தின் மூலம் கிளறிவிட்டு, அடுத்த ஒரு வாரத்திற்கு மனதை என்னமோ செய்ய வைத்திருந்தார் இயக்குநர் சேரன்.

இப்போது அவருடைய சீடர் முறை.. இம்முறை காதலை ஓரங்கட்டிவிட்டு கல்யாணத்திற்குள் நுழைந்திருக்கிறார் சேரனின் சீடர் ஜெகன்னாத்.

காதலின் முதல் முத்தம் எந்த அளவுக்கு மறக்க முடியாததோ அதே அளவு மீள முடியாத ஒரு சுகானுபவத்தை ஆண், பெண் இருபாலருக்கும் கொடுப்பது, திருமணத்திற்கு முன் தங்களது துணையை நேரில் பார்த்த நாளாகத்தான் இருக்கும்..

அந்த நாளில் ஆரம்பிக்கும் கதை அதே போன்ற வேறொரு நாளில் அதே இடத்தில் முடிவதுதான் படத்தின் ஹைலைட்டான சிறப்பு.

சுயத்தொழில் செய்து தற்போது தொழிலதிபராக இருக்கும் வேணுவிற்கு லேசான திக்குவாய்.. பள்ளியில் நன்கு படித்திருந்தும் விதியின் சுழற்சியால் மன அழற்சி நோய்க்கு ஆளாகி படிப்பைக் கைவிட்டு சிறிது காலம் மனநலப் பயிற்சி பெற்று வீடு திரும்பிய சோக அனுபவத்தைக் கொண்டவன்.

அதன் பின் படிப்பில் கவனம் போய் சுயத்தொழிலில் ஆர்வமாகி திருமண அழைப்பிதழ்கள் டிஸைன் செய்யும் தொழிலில் மிக வேகமாக முன்னேறி இன்று பெரியதொரு பணக்காரனாகத்தான் இருக்கிறான். கார், வீடு என்று வசதிகளுடனும் அம்மாவுடனும் இருப்பவன் தனக்கு துணை வேண்டுமென நினைத்துப் பெண் பார்க்கத் துவங்குகிறான். இதில்தான் படம் துவங்குகிறது.

முதல் பெண்ணான ரஞ்சனியின் அழகான மறக்க முடியாத முகம் அவனுக்குள் ஆழமாகப் பதிந்துவிட்டாலும் தன் உண்மைக் கதையைச் சொல்லிவிடுகிறான். வந்தது வினை. “எனக்கு உங்களைக் கல்யாணம் பண்ணிக்கணும்னு தோணலை..” என்ற ஒரு வார்த்தையைக் கேட்டுவிட்டு முதல் முயற்சியே தோல்வியில் முடிந்து திரும்புகிறான்.

மீண்டும் முயற்சிக்கிறான். பல பெண்களும் அவனுடைய திக்குவாயையும், மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதையும் குறிப்பிட்டுச் சொல்லி நோகடித்து அனுப்புகிறார்கள். மணிவண்ணனின் மகள் வித்யா மட்டும் அவனை ஏற்றுக் கொள்ள கல்யாணத்திற்கு முதல் நாள் மண்டபம் வரைக்கும் திருமணம் வந்துவிடுகிறது.

அன்றைய தினம் வித்யா தனது காதலனோடு ஓடிவிட, வருங்கால மாமனாரையும், மாமியாரையும் காப்பாற்ற வேண்டி பழியைத் தன் மேல் போட்டுக் கொண்டு “திருமணம் பிடிக்கவில்லை.. நிறுத்தவும்..” என்று எழுதிவைத்துவிட்டு வெளியேறுகிறான் வேணு.

அன்றைய தினத்தின் மூட் அவுட்டினால் வெளியில் காலார நடந்து போகும்போது விபத்தொன்றில் சிக்கப் போய் கண் பார்வை இல்லாத வானொலி அறிவிப்பாளர் நெடுமாறனால்(பசுபதி) காப்பாற்றப்படுகிறான் வேணு. இனி கதை நெடுமாறனைச் சுற்றி வருகிறது.

இருவரும் காபி ஷாப்பில் இருக்க.. கஜாலா காரில் வந்து நிற்க.. கஜாலாவைப் பார்த்துச் சொக்கிப் போய் வேணு பார்க்க.. “கார்ல ஒரு பொண்ணு இருக்காளா..? அழகா இருப்பாளே.. நம்மை பார்த்து சிரிப்பாளே..?” என்றெல்லாம் கேட்டுவிட்டு “அது என்னோட வொய்ப்..” என்று நெடுமாறன் சொல்லும்போது வேணுவோடு சேர்ந்து ரசிகர்களுக்கும்தான் திகைப்பு..

இங்கே ஆரம்பிக்கும் பசுபதியின் கதையில் அந்த ஒரு சண்டைக் காட்சியைத் தவிர மற்றவைகளில் மறுக்க முடியாத உண்மை நடிப்பு.

தினமும் வானொலியில் அவர் நடத்தும் தன்னம்பிக்கை பற்றிய நிகழ்ச்சியில் மனதைப் பறி கொடுத்திருக்கும் கஜாலாவுக்கு நெடுமாறன் கண் பார்வையற்றவர் என்பது தெரியவில்லை. தெரிந்த பின்பு அவருடன் நெருங்கிப் பழகிவிட்டு நண்பி என்ற ஸ்தானத்திலிருந்து மனைவி என்ற ஸ்தானத்தை அடையும் தன் விருப்பத்தைச் சொல்கிறார்.

வாசல் கதவைத் திறந்து வைத்து “போங்கன்னு சொல்றேன்..” என்பதையே பதிலாகச் சொல்லும் நெடுமாறனுக்கு.. அவர் பாணியிலேயே கஜாலா அப்போதே பதில் சொல்லும் விதம் டச்சிங்தான். பக்கத்து வீட்டுக்காரம்மாவுக்கு கேட்பதுபோல், “இந்த நெடுமாறனுக்கு தாழ்வு மனப்பான்மை.. மத்த ஆம்பளைங்க மாதிரி தன்னால இருக்க முடியாதோன்னு தப்பா நினைக்கிறார். அதான் கல்யாணம்னு சொன்னவுடனே பயப்படுறார்” என்று வீட்டு வாசலில் நின்று பொறுமிவிட்டுப் போவது அழகு.

கஜாலாவின் ஆளுமை நெடுமாறனுக்குள் பரவியதும் அவரால் அதைத் தவிர்க்க முடியாமல், கஜாலாவை பெண் பார்க்க வந்திருக்கும் வைபத்தின் ஊடேயே போய் தான் கஜாலாவைத் திருமணம் செய்ய விரும்புவதாகச் சொல்லி பெண் கேட்டு திருமணம் முடிந்த கதையும் விரிவாகவே வர கதாநாயகன் சேரன் ஒரு அரை மணி நேரம் திரையிலேயே இல்லாமல் போனதைக் கண்டு நான் பயந்துதான் போனேன்.

ஆனாலும் பள்ளி செல்லும் குழந்தை, தன் ஊனத்தைப் பார்க்காமல் உள்ளத்தை நேசிக்கும் மனைவி என்ற குடும்பத்துடன் வேணுவுக்குக் காட்சியளிக்கும் நெடுமாறன் அளிக்கும் தைரியம் வேணுவுக்கு மறுபடியும் தொலைந்து போன வாழ்க்கையை அரை மணி நேரத்தில் மீட்டெடுத்து தருகிறது. “உங்களைப் பார்த்ததிலேயே எனக்குக் கொஞ்சம் தைரியம் வந்திருச்சு ஸார்..” என்று சொல்லிவிட்டுப் போகிறான் வேணு.

ஒரு வாசல் மூடினால் மறுவாசல் திறக்கும் என்பதைப் போல இந்த இடத்திலிருந்து ஓடிப் போன வித்யாவின் அப்பா மணிவண்ணன் வேணுவுக்கு கார்டியனாக மாறி அவரே அவனுக்காகப் பெண் பார்க்கத் துவங்குகிறார்.
முதல் பெண் பார்த்த அதே நாகர்கோவிலில் மறுபடியும் பெண் பார்க்க வந்த பின்புதான் கதை சூடு பிடிக்கிறது.

வந்த இடத்தில் வித்யாவை நிறை மாத கர்ப்பிணியாகப் பார்த்து அதிர்ச்சியடையும் வேணு, அவளை ஸ்கேனிங் செய்ய மருத்துவமனைக்கு அழைத்து வர அங்கே ரிசப்ஷனிஸ்ட்டாக இருக்கும் ரஞ்சனியைப் பார்த்து திகைத்துப் போய் நின்று, அவளிடம் தன்னுடைய ரிலேட்டிவ்ஸ் என்று வித்யாவை பொய் சொல்லி அறிமுகப்படுத்தி வைத்து அவளைக் கவனித்துக் கொள்ளும்படி சொல்லிவிட்டு பெண் பார்க்கும் படலத்தைத் துவக்குகிறான்.

இம்முறை பார்க்கும் காயத்ரி(கார்த்திகா) என்ற இந்தக் கேரக்டர்தான் படத்திலேயே எனக்கு மிகவும் பிடித்த கேரக்டர். நாகர்கோவில் வட்டார பேச்சு வழக்கில் தனது தெற்றுப்பல் தெரிய பேசுகின்ற பேச்சில் கவர்ச்சி நடிகைகளின் குலுக்கல் ஆட்டம்கூட மனதில் நிற்காது.

“நீங்க என்னை காயத்ரின்னே கூப்பிடலாம்.” என்று சொல்வதாகட்டும்.. “நானும் கொஞ்சம் டைம் எடுத்துக்குறேன்.. நீங்களும் கொஞ்சம் டைம் எடுத்துக்குங்க. அப்புறமா போன், மெயில்ன்னு நிறைய இருக்கே.. அதுல பேசிட்டு அப்புறமா நாம டிஸைட் பண்ணிக்கலாமே..?” என்று சொல்லும் மெச்சூரிட்டி கேரக்டர் அவருக்கு.

இந்தப் பெண் கிடைத்தாற்போலத்தான் என்ற திருப்தியுடன் ஆட்டோவில் திரும்பும் வேணுவுக்கும், மணிவண்ணனுக்கும் ஆட்டோ டிரைவர் ஒரு குண்டைத் தூக்கிப் போடப் போகிறான் என்பது தெரியவில்லை.

நடுவழியில் ஒரு இன்ஸ்பெக்டர் ஆட்டோவை நிறுத்தி டிரைவரான நிதின் சத்யாவை அழைத்து நாலு அறை அறைந்து “போடா” என்று சொல்லியனுப்ப மெளனமாகத் திரும்பி வந்து ஆட்டோவை எடுத்து ஓட்டி வருபவனிடம் அவனது கதையைத் தானே கேட்டு தனது கதையை முடித்துக் கொள்கிறான் வேணு.

“நான் திருடன்தான்.. ஒரு நாள் ராத்திரி ஒரு வீட்ல திருடப் போய் ஒரு பொண்ணைப் பார்த்துட்டேன் ஸார்..” என்று ஆரம்பித்து தனது காதல் கதையைச் சொல்லும்போது கதை இன்னொரு பக்கம் ஜெட் வேகத்தில் போகிறது.

அந்த இரவில் காயத்ரியின் வீட்டில் நடைபெறும் அந்தக் கூத்து ரசிக்கும்படியாகத்தான் இருந்தது. அதுவும் கொள்ளையடிக்கப்பட வேண்டிய நகைகளை மணப்பெண் போல அலங்காரம் பண்ணி போட்டுக் கொண்டு வரச் செய்து அவள் கையாலேயே காபியை வாங்கிக் குடித்துவிட்டு “அஞ்சு மணி வரைக்கும் பேசிட்டிருக்கலாமே” என்று நக்கல் செய்து அவள் முகத்தைப் பார்த்துக் கொண்டேயிருப்பது அக்மார்க் கலக்கல்..

அன்றைக்கு எப்படியோ தப்பிவிடும் சத்யா, தொடர்ந்து அவளிடம் தனது காதலை வெளிப்படுத்தப் போய், “நான் உன்னை மாதிரி திருடனை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்.. நல்லவனா, பொறுப்பா, நாலு பேர் பாராட்டுற மாதிரி இருக்குற ஒருத்தனைத்தான் கல்யாணம் பண்ணிக்குவேன்..” என்று காயத்ரி சொல்லும் வார்த்தைதான் அந்தத் திருடனை திருட்டுத் தொழிலுக்கு நாமம் போட்டுவிட்டு ஆட்டோ ஓட்டி பிழைக்க வைக்கிறது என்பதை அழகாகச் சொல்கிறான் சத்யா.

அவள் தன்னைக் காதலிக்கவில்லை என்றாலும், கல்யாணம் செய்து கொள்ள மாட்டாள் என்றாலும் தனக்கு அதனைப் பற்றிக் கவலையில்லை. அவள் நினைப்பிலேயே காலத்தை ஓட்டிவிடுவேன் என்று இயல்பாக அப்பாவியாகச் சொல்கிறான் சத்யா.

அவன் சொல்லும் அந்தப் பெண் காயத்ரிதான் என்பது டேஷ் போர்டில் அவன் மாட்டி வைத்திருக்கும் புகைப்படத்தில் இருந்து வேணுவுக்கும், மணிவண்ணனுக்கும் தெரிய வர அடுத்த அதிர்ச்சி.

“அவன் ஒரு பிராடு.. அவன் சொல்றான்னு.. நீ அதையெல்லாம் நம்பாத..” என்று மணிவண்ணன் அடுத்தக் காட்சியில் சொல்கிற வசனத்திற்கு கைதட்டல் தூள் பறந்தது தியேட்டரில். ஆனாலும், வேணு விடாப்பிடியாக காயத்ரியை வரவழைத்து அவளிடம் ஆட்டோ டிரைவரின் உறுதியான காதலைச் சொல்லி தனது தியாகத்தை பறை சாற்றுகிறான்.

இந்த இடத்திலும், “நான் பாக்குற பொண்ணுகளுக்கெல்லாம் சீக்கிரம் கல்யாணம் ஆயிரும்” என்ற வேணுவின் மெல்லிய பொறாமையுடன்கூடிய வசனத்திற்கு அரங்கம் அதிர்ந்தது என்பதையும் சொல்லத்தான் வேண்டும். இந்த இடத்திலேயே கதைக்குள் ரசிகர்களை இழுத்து உட்கார வைத்துவிட்டார் இயக்குநர் என்று உறுதியாகச் சொல்லலாம்.

அதற்குள் வித்யாவுக்கு பிரசவ வலி வந்து மருத்துவமனையில் சேர்க்கிறான் வேணு. அதை மணிவண்ணனுக்கு போன் போட்டுச் சொல்லி அவரை வரவழைத்து அவராலேயே அடியும் வாங்கிக் கொள்கிறான். உண்மையில் நடந்தது என்ன என்பதை அப்போதுதான் அறியும் ரஞ்சனிக்கு வேணுவின் மீது காதல் கூடுகிறது.

ரஞ்சனியின் அப்பா இறந்து போய் தற்போதைய குடும்பத்தின் வாழ்க்கையோட்டத்திற்கு ரஞ்சனியின் சம்பளமே உதவியாக இருக்கிறது என்பதுமே யதார்த்த வாழ்க்கையை இப்போது ரஞ்சனிக்கு காட்டியிருக்கிறது என்பதை இயக்குநர் வெகு இயல்பாக உணர்த்துகிறார்.

குழந்தையும் பிறந்து மணிவண்ணனும் தனது பேத்தியைப் பார்த்து உச்சி முகர்ந்து மகளைப் பார்த்து கதறியழுத பின்பும் அடுத்தது ரஞ்சனி-வேணுதான் என்ற நினைப்பில் இருக்கும்போது சென்னையில் இருந்து நெடுமாறன் மூலமாக இன்னொரு பெண் பார்க்கும் படலம் உறுதியாகிறது. இம்முறை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தாமரை.

தன் மனம் இப்போது வேணுவை விரும்புகிறது என்பதை தனது அம்மாவிடம் சொல்லும் ரஞ்சனியிடம் “மதியம், சாப்பாட்டுக்கு அவரை வீட்டுக்குக் கூப்பிடு. நான் பேசுறேன்..” என்ற அம்மாவின் பதிலைக் கேட்டு உற்சாகமாக இருக்கும் ரஞ்சனியிடம் “கோட்டாறு போலீஸ் ஸ்டேஷனுக்கு பெண் பார்க்கப் போகணும். துணைக்கு நீங்கதான் வரணும்” என்ற வேணுவின் அழைப்பு என்ன பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும்.?

இறுக்கமான முகத்துடன் போலீஸ் ஸ்டேஷனுக்குள் நுழையும் ரஞ்சனி லாக்கப்பில் வைத்து ஒருத்தனை ‘சாத்திக்’ கொண்டிருக்கும் செந்தாமரையைப் பார்த்து ஏற்படும் ஒரு திடுக் நமக்கும் ஏற்படுகிறது. பெண் பார்க்கும் படலம் என்றவுடன் செந்தாமரை(நவ்யா நாயர்)க்கு ஏற்படும் லேசான பதட்டத்தையும், சங்கடத்தையும் ரசிக்கவே முடிகிறது.

“சாயந்தரம் போலீஸ் குவார்ட்டர்ஸ¤க்கு வரச் சொல்லுங்க.. அங்க பேசிக்கலாம்.. நான் இப்ப மந்திரியோட பங்ஷனுக்கு போகணுமே..!’ என்று தர்மசங்கடத்துடன் சொல்கிறாள் செந்தாமரை. “சாயந்தரம் நான் வரலை. என்னை விட்ருங்க.. எனக்குத் தலைவலி..” என்று சொல்லி தப்பிக்கும் ரஞ்சனியின் வருத்தம் நியாயமானதுதான்.

சாயந்தரம்வரைக்கும் பொறுக்காத நமது ஹீரோ, மந்திரியின் பங்ஷனுக்கே சென்று அங்கு செந்தாமரையே பார்த்துவிடுவது என்ற நினைப்பில் அங்கே போவதுதான் ஒரு சுவையான திருப்பம்.

மந்திரிக்கு திடீரென்று கருப்புக் கொடி காட்டும் ஒரு கும்பலின் பக்கத்தில் எதேச்சையாக போய் நின்றுவிடும் வேணு தான் பார்க்க வந்த பெண்ணிடமே தர்ம அடி வாங்கித் தப்பித்து ஓடுவது சுவையான காட்சி.

“கை கொடுங்க தோழர்..” என்று சொல்லி வேணுவை அழைத்து அவன் தோளில் கை போட்டு நடந்தபடியே “எப்படி காட்டிட்டோம்ல.. மந்திரிக்கு வச்சுட்டோம்ல ஆப்பு..” என்று சிரித்தபடியே சொல்லும் அவனை வேணு கோபம்தீர மட்டும் அடித்துவிட்டு “எனக்கு வைச்சுட்டீங்களேடா ஆப்பு..” என்று கொதிப்பதைக் கேட்டு வருத்தப்பட வேண்டிய நிலையிலும் சிரிப்புதான் வந்தது.

இனி அடுத்தது என்ன என்பதிலும் ஒரு திருப்பத்தைக் கொடுத்து படத்தை நிறைவு செய்திருக்கிறார் இயக்குநர். இப்படி நெத்திலி மீன் குழம்பு வைக்கும் கதையாக பல்வேறு களங்களில் காட்சியமைப்புகளை வைத்திருந்தும் நேர்த்தியான, கச்சிதமான திரைக்கதை அமைப்போடு களமிறங்கியிருக்கும் இயக்குநருக்கு எனது முதல் பாராட்டு.

எவ்வளவு நல்ல கதையாக இருந்தாலும் திரைக்கதை மோசமாகிவிட்டால் முடிந்தது கதை என்பார்கள். இந்தப் படத்தில் திரைக்கதையை அடுத்தடுத்து லேசுபாசான திருப்பங்களோடு கலந்து கொடுத்திருப்பதுதான் படத்தின் பலம்.

இக்கதையில் நடிக்க முன் வந்திருக்கும் சேரனுக்கு அடுத்த சல்யூட். படத்தில் முதல் பாதியில் அரை மணி நேரமும், அடுத்த பாதியில் முக்கால் மணி நேரமும் தான் இருக்க மாட்டோம் என்பது தெரிந்தும் ஒரு ஹீரோ நடிக்க முன் வந்திருக்கிறார் எனில், இன்றைய சினிமா உலகில் அவர் நிச்சயம் பாராட்டத்தக்கவர்தான்.

சேரனின் நடிப்பு எப்போதும் இயல்புதான். ‘யதார்த்த நாயகன்’ என்ற பெயருக்கேற்றாற்போல் இப்படத்திலும் தனது ரோலை கச்சிதமாகச் செய்திருக்கிறார். வழக்கமாக அவர் அழும் காட்சியில் முதுகைக் காட்டித் தொலைக்கும் கொலைகாரச் செயலை இப்படத்தில் எந்தக் காட்சியிலும் வைக்காமல் சேரனைக் காப்பாற்றியிருக்கிறார் இயக்குநர்.

ரஞ்சனியுடனான தனது முதல் சந்திப்பில் தனது சர்டிபிகேட்டை காண்பித்தும், மனநல சிகிச்சை பெற்றதையும் திக்குவாயோடு திக்கித் திணறிச் சொல்கின்ற காட்சியில் அவருடைய படபடப்பு நம்மையும் தொற்றிக் கொள்கிறது.

படம் துவங்கி முதல் ரீலிலேயே இப்படியா என்ற லேசான பயம் எனக்குள்ளும் ஏற்பட்டது. இதற்கு முன்பான சேரனின் நடிப்பை அருகில் இருந்து பார்த்ததினாலோ என்னவோ இயக்குநர் சேரனின் நடிப்பிற்கு நிறையவே கட் கொடுத்திருக்கிறார் என்பது புரிகிறது.

“யதார்த்த நாயகன்” பட்டத்தை சேரனிடமிருந்து இப்போதைக்கு யாரும் பறிக்க முடியாது என்றே நினைக்கிறேன்.

நெடுமாறனாக வலம் வந்திருக்கும் பசுபதியையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். இது போன்ற சில காட்சிகளில் மட்டுமே வலம் வரும் நடிப்பிற்கெல்லாம் மெனக்கெட்டு பயிற்சி எடுத்து நடித்து வருவது பசுபதியிடம் இருக்கும் நடிப்பின் மீதான ஆர்வத்தைக் காட்டுகிறது.

பார்வையற்றவர்களைப் போலவே மூக்கைச் சுண்டுதல், பார்வைகளைத் திருப்புதல், முகத்தின் தசைகளை ஏற்றி இறக்குதல் என்று மிக அழகாக தனது பாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். அந்தச் சண்டைக் காட்சிகூட எதற்காக என்பது புரியவில்லை. வேறு மாதிரி வைத்திருக்கலாமோ என்று தோன்றுகிறது.

திருடனாக வரும் சத்யா திடீரென்று நல்லவனாக மாற விரும்பி மாரத்தான் ஓட்டத்தில் கலந்து கொண்டு வெறும் காலுடன் ஓடி வந்து முதல் பரிசைப் பெறும்போது இந்தக் காதல்தான் இளைஞர்களை என்ன பாடு படுத்துகிறது என்பதை யோசிக்க வைக்கிறது.

அந்தப் பரிசுப் பொருளோடு காயத்ரியிடம் வந்து ஐ லவ் யூ சொல்ல “என்னலே.. நான் என்ன சொன்னேன்.. நீ என்ன செஞ்சிருக்க..?” என்று அவனது காதலை நிராகரித்து அனுப்பி வைத்த பின்பும் தளர்ந்த நடையோடு போகும் சத்யாவின் அலட்டல் இல்லாத நடிப்பும் இயல்பாகத்தான் அமைந்துள்ளது.


நடிகைகளில் ரஞ்சனியான விமலாராமனை குளோஸப் காட்சிகளில் காட்டுகின்றபோது அவர் கண்கள்கூட பேசுகின்றன. கொள்ளை அழகு. அவருக்காக ஒரு பாடல் காட்சியையும் வைத்து அதிலும் கண் விளையாட்டைத் தொடர்ந்திருக்கிறார் இயக்குநர்.

வித்யாவாக ரம்யா நம்பீசன். பணக்காரக் குடும்பத்தில் பிறந்து, ஏழைக்கு வாழ்க்கைப்பட்டு அவனும் ஜெயிலுக்குப் போன பின்பு குழந்தைகளுக்கு டியூஷன் சொல்லிக் கொடுத்து பிழைத்து வருவதை சொல்கின்ற கட்டம் எத்தனையோ உண்மைக் காதல் கதைகளை நிச்சயம் கிளறும் என்பதில் சந்தேகமில்லை.

முதல் இரண்டு திரைப்படங்களின் தோல்வியினால் மனம் தளராமல் மூன்றாவது முயற்சியில் வெற்றி பெற்றிருக்கும் இயக்குநர் ஜெகன்னாத்திற்கு எனது பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்.

வியாபார ரீதியான காட்சியமைப்புகளுக்கு எவ்வளவோ வாய்ப்பிருந்தும் அதனைக் கவனமாகத் தவிர்த்துவிட்டு குடும்பத்துடன் வருபவர்களை சங்கடத்துடன் நெளிய விடாமல் சிரிக்க வைத்தும், அவரவர் ‘பெண் பார்க்கச் சென்ற கதை’யையும், ‘பெண் பார்க்க வந்த கதை’யையும் பற்றி யோசிக்க வைத்து அனுப்பியிருக்கும் இயக்குநருக்கு எனது நன்றிகள்.

இனி வலையுலக தைரியசாலிகள் தங்களது ‘பெண் பார்த்த’, அல்லது ‘பார்க்க வந்த’ அனுபவக் கதைகளை வெளியிட்டால், அடுத்த ஒரு வாரத்திற்கு வலையுலகம் பரபரப்பாகும் சாத்தியம் உண்டு.

நன்றி..!

படம் உதவிக்கு நன்றி : indiaglitz.com