Archive for the ‘ராஜ்யசபா’ Category

உங்ககிட்ட எவ்வளவு இருக்கு..?

ஜூன் 8, 2010

08-06-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

நோகாமல் நுங்கு உரிப்பதைப் போல தேர்தல் பிரச்சாரம், மீட்டிங், செலவு என்று எந்த ஒப்பாரியுமில்லாமல் ஆறு வருடங்கள் டெல்லி மேல்சபை உறுப்பினராக பதவி வகித்து சுருட்டுகின்றவரையில் சுருட்டிக் கொள்ள வாய்ப்பிருக்கும் ராஜ்யசபா தேர்தலில் நிற்கும் நமது மாநில வேட்பாளர்களை அந்தந்த கட்சியினரே தற்போது தேர்ந்தெடுத்து நிறுத்தியுள்ளனர்.

இன்றைய நிலைமையில் இந்த ஆறு பேருமே போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். நான் எப்போதும் தேடித் தேடிப் பார்ப்பது போல இவர்களது சொத்து மதிப்புக் கணக்கை மட்டும் தனியாகச் சுரண்டி எடுத்து வைத்திருந்தேன்.

எனக்கிருக்கும் சிறு மூளையைக் கசக்கி, கஷ்டப்படுத்தி புதிதாக ஒரு பதிவு போட தற்போது எனக்கு நேரமில்லாத காரணத்தினால் அந்தப் புதிய நாட்டாமைகளின் சொத்துக் கணக்கை இங்கே உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்..

படித்துப் பார்த்து பெருமூச்சுவிட்டு உங்களது சோகத்தை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்..!


1. தி.மு.க. வேட்பாளர் கே.பி.ராமலிங்கத்தின் சொத்துப் பட்டியல்..

கே.பி.ராமலிங்கத்துக்கு கையிருப்பில் ஆயிரம் ரூபாயும், அவரது மனைவியின் கையிருப்பில் ரூ.5 ஆயிரமும் உள்ளது.

கே.பி.ராமலிங்கத்தின் வங்கிக் கணக்கில் ரூ.23 லட்சத்து 89 ஆயிரத்து 850-ம், அவரது மனைவியின் வங்கிக் கணக்கில் ரூ.5 லட்சத்து 8 ஆயிரத்து 223 தொகையும் உள்ளது.

கே.பி.ராமலிங்கம் பெயரில் மொத்தம் ரூ.11.75 லட்சம் மதிப்புள்ள 3 கார்கள் உள்ளன.

அவரது பெயரில் பங்கு முதலீடாக ரூ.12 லட்சமும், மனைவியின் பங்கு முதலீடாக ரூ.19 லட்சமும் காட்டப்பட்டு உள்ளது.

மனைவிக்கு சொந்தமாக ரூ.16 லட்சம் மதிப்புள்ள 200 சவரன் தங்க நகைகள் உள்ளன.

இவர்களுக்கு ராசிபுரம், திருச்சி துறையூர், நாமக்கல் கொல்லிமலை, சேத்தமங்கலம், திருச்செங்கோடு, ஏற்காடு, சென்னை திருவான்மியூர் திருவள்ளுவர் நகர், அண்ணாநகர் மேற்கு அன்பு காலனி ஆகிய இடங்களில் விவசாய நிலம், விவசாயம் இல்லாத நிலம், வீட்டு மனை, வீடுகள், கட்டிடங்கள் உள்ளன.

கே.பி.ராமலிங்கத்தின் பெயரில் ரூ.1.57 கோடி மதிப்பிலும், அவரது மனைவியின் பெயரில் ரூ.2.44 கோடி மதிப்பில் நிலங்கள் இருக்கிறது.

ரூ.7 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் கடனும் இவர்களுக்கு உள்ளது.

2. தி.மு.க. வேட்பாளர் தங்கவேலுவின் சொத்துப் பட்டியல்..!

தங்கவேலு, பாக்கியம் கையிருப்பில் ரூ.22 ஆயிரத்து 500, பிள்ளைகளின் கையிருப்பில் ரூ.19 ஆயிரம் உள்ளது.

தங்கவேலிடம் ரூ.2 லட்சம் மதிப்புள்ள கார், ரூ.4 லட்சம் மதிப்புள்ள நகைகள், ரூ.10 லட்சம் மதிப்புள்ள பெட்ரோல் பங்க் உள்ளன. ரூ.1.28 கோடி மதிப்புள்ள நிலங்கள் உள்ளன.

பாக்கியம் பெயரில் 320 கிராம் தங்க நகைகள், ரூ.3.50 லட்சம் மதிப்புள்ள 10 சென்ட் நிலம் உள்ளன.

மகள் ரேணுகா பெயரில் 2,400 கிராம் தங்க நகைகள் உள்ளன.

மகன் ராஜராஜன் பெயரில் ரூ.3.50 லட்சம் மதிப்புள்ள 10 சென்ட் இடம் உள்ளது.

இவர்களுக்கு 21.50 லட்சம் ரூபாய் கடன் உள்ளது.

3. தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி சொத்துப் பட்டியல்..!

செல்வகணபதியிடம் ரூ.13 லட்சம், மனைவி பாப்புவிடம் ரூ.5 லட்சம், மகன்கள் அரவிந்தன் மற்றும் அஸ்வினிடம் தலா ரூ.25 ஆயிரம் ரூபாய் கையிருப்பில் உள்ளது.

இவர்களின் வங்கிக் கணக்கில் முறையே, ரூ.4.44 லட்சம், ரூ.2.48 லட்சம், ரூ.28 ஆயிரம், ரூ.58 ஆயிரம் உள்ளது.

இவரது மனைவி பாப்புவிடம் 108 சவரன் தங்கநகை உள்ளது. மேலும் ரூ.3.74 லட்சம் மதிப்புள்ள 5 கிலோ வெள்ளி, 2 காரட் வைரம் உள்ளன.

செல்வகணபதி பெயரில் ரூ.1.01 கோடி மதிப்புள்ள நிலம் உள்ளது.

மனைவி பாப்புவுக்கு ரூ.1.33 கோடி மதிப்பிலும், 2 மகன்களுக்கும் தலா ரூ.60 லட்சம் மதிப்புள்ள நிலங்கள் உள்ளன.

இவர்களுக்கு ரூ.39 லட்சம் ரூபாய் கடன் இருப்பதாக கணக்கில் காட்டப்பட்டு உள்ளது.

4. அ.தி.மு.க. வேட்பாளர் பால் மனோஜ் பாண்டியனின் சொத்துப் பட்டியல்..!

மனோஜ் பாண்டியனின் வங்கிக் கணக்கில் ரூ.4.80 லட்சம். அவரது மனைவி தீப்தியின் வங்கிக் கணக்கில் ரூ.24 ஆயிரத்து 673 ரூபாயும் உள்ளது.

மனோஜ்க்கு ரூ.12.86 லட்சத்துக்கான பங்கு பத்திரமும், மனைவி தீப்திக்கு ரூ.1.55 லட்சத்துக்கான பங்கு பத்திரமும் உள்ளது.

மனோஜிடம் பொதுசேமநல நிதி ரூ.46 ஆயிரம், ரூ.6 லட்சம் மதிப்புள்ள 2 கார் மற்றும் ஒரு வாகனம் உள்ளது.

மனைவி தீப்தியிடம் ரூ.4.75 லட்சம் மதிப்புள்ள 118 சவரன் தங்க நகை(சீதனம்), வேளச்சேரியில் ரூ.4.18 லட்சம் மதிப்புள்ள 2 ஆயிரம் சதுர அடி இடம்(தாய்வழி சொத்து), ரூ.5.48 லட்சம் மதிப்புள்ள கார் ஆகியவை உள்ளன.

சென்னை அண்ணாநகரில் பிளாட் வாங்க அட்வான்சாக 2 பேரும் கொடுத்த தலா ரூ.64.50 லட்சம், மகேந்திரா ரிசாட்ஸ் நிறுவனத்தில் உள்ள ரூ.2 லட்சம் பங்கு, சாத்தூர் நல்லிசத்திரத்தில் ரூ.1.51 லட்சம் மதிப்புள்ள 16.43 ஏக்கர் நிலம், கொடைக்கானல் அருகே ரூ.2 லட்சம் மதிப்புள்ள 11 சென்ட் நிலம், மதுரை ஆனையூரில் ரூ.11.62 லட்சம் மதிப்புள்ள நிலம்-ரூ.5.85 மதிப்புள்ள 758 சதுர அடி வீட்டுமனை, திருக்கச்சூரில் ரூ.3.20 லட்சம் மதிப்புள்ள ஒரு கிரவுண்டு நிலம், அயனம்பாக்கத்தில் ரூ.10.25 லட்சம் மதிப்புள்ள 7,417 சதுர அடி நிலம், குன்னத்தூர் கிழக்கு கடற்கரை சாலை அருகே ரூ.33 ஆயிரத்து 333 மதிப்புள்ள 18 சென்ட் நிலம் உட்பட பல்வேறு சொத்துகள் கணக்கில் காட்டப்பட்டு உள்ளன.

மனோஜ் கணக்கில் உள்ள ரொக்கம், நிலம், பங்கு உள்ளிட்ட அனைத்து சொத்துக்களின் மதிப்பும் சுமார் ரூ.1.30 கோடியாகவும், தீப்தியின் பெயரில் உள்ள அனைத்து சொத்துகளின் மதிப்பும் சுமார் ரூ.1.04 கோடியாகவும் காட்டப்பட்டு உள்ளது.

இவர்களுக்கு ரூ.54 லட்சம் கடன் இருக்கிறது.

5. அ.தி.மு.க. வேட்பாளர் கே.வி.ராமலிங்கத்தின் சொத்துப் பட்டியல்..!

ராமலிங்கத்தின் கையிருப்பு ரூ.25 ஆயிரம். இவரது அம்மா அம்மணி அம்மாள் கையிருப்பு ரூ.20 ஆயிரம். ஸ்கார்ப்பியோ கார் ஒன்று உள்ளது.

தாயார் அம்மணி அம்மாள் பெயரில் 493 கிராம் தங்க நகையும், மனைவி அம்மணி பெயரில் 525 கிராம் தங்க நகையும் உள்ளது.

ராமலிங்கத்துக்கு ரூ.80 லட்சம் மதிப்புள்ள 8.15 ஹெக்டேர் நிலம், தாயார் அம்மணி அம்மாள் பெயரில் ரூ.70 லட்சம் மதிப்புள்ள 8.5 ஹெக்டேர் நிலம், ராமலிங்கத்துக்கு நாமக்கல் மற்றும் தாராபுரத்தில் ரூ.13 லட்சம் மதிப்புள்ள நிலம் மற்றும் வீடு, மனைவி அம்மணி பெயரில் நாமக்கல்லில் ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள நிலம் உட்பட பல சொத்துகள் காட்டப்பட்டு உள்ளன.

ஒட்டு மொத்தமாக இவர்களுக்கு ரூ.1.85 கோடி மதிப்புள்ள சொத்துகள் இருப்பதாகவும், ரூ.18.22 லட்சம் கடன் இருப்பதாகவும் ஆவணங்களில் காட்டப்பட்டு உள்ளது.

6. காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் சுதர்சன நாச்சியப்பனின் சொத்துப் பட்டியல்..!

ரூ.20 ஆயிரம் ரொக்கம் கையிருப்பு, மனைவி தேவகி பெயரில் ரூ.5 ஆயிரம்; பல்வேறு வங்கிகளில் தனது பெயரில் ரூ.1.64 லட்சம், மனைவியுடனான கூட்டு வங்கிக் கணக்கில் ரூ.38 ஆயிரம்; பல்வேறு மியூச்சுவல் பண்ட்களில் ரூ.1.39 லட்சம்; எல்.ஐ.சி.யில் ரூ.25 லட்சத்துக்கான உறுதியளிக்கப்பட்ட பாலிசி, பொது சேம நலநிதியில் ரூ.50 ஆயிரம் ஆகியவை உள்ளன.

ரூ.27,984 மதிப்புள்ள 16 கிராம் தங்க மோதிரம், மனைவியிடம் ரூ.2.09 லட்சம் மதிப்புள்ள 120 கிராம் தங்க நகைகள்; ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள போர்டு ஐகான் கார், ரூ.2.3 லட்சம் மதிப்புள்ள குவாலிஸ் மற்றும் ரூ.4.11 லட்சம் மதிப்புள்ள செவ்ரோலே கார்;

சிவகங்கை மாவட்டம் எரியூரில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள விவசாய நிலம் மற்றும் விவசாயம் அல்லாத நிலம் ரூ.95 ஆயிரம் மதிப்புமிக்கது;

டெல்லியில் ரூ.76 லட்சம் மதிப்புள்ள வீடு, எரியூரில் ரூ.4.12 லட்சத்தில் வீடு, சிவகங்கையில் ரூ.9.2 லட்சம் மற்றும் ரூ.12 லட்சத்தில் வீடுகள், மனைவி பெயரில் சென்னை விருகம்பாக்கத்தில் ரூ.15 லட்சத்தில் வீடு ஆகியவை உள்ளன.

மேலும் இவர்களுக்கு வங்கியில் கார் கடனுக்கான பாக்கி ரூ.54,531 மற்றும் வீட்டுக் கடனுக்கான பாக்கியாக ரூ.38 லட்சம் கடன் தொகையும் உள்ளதாம்

ம்ஹும்…!

என்னோட வங்கிக் கணக்குல ஒரே ஒரு தடவைதான் இருபதாயிரம் ரூபாயைத் தாண்டுச்சு.. அதுக்கப்புறம் இன்னிக்குவரைக்கும் பத்தாயிரம் ரூபாகூட நிக்க மாட்டேங்குது..!

இதையெல்லாம் பார்த்தா..?

என்னதான் மண்ணுல விழுந்து அழுது புரண்டாலும், ஒட்டுற மண்ணுதான் ஒட்டுமாம்..!

தகவல் உதவிக்கு நன்றி : பல்வேறு செய்தித்தாள்கள்