Archive for the ‘ரத்தக்கண்ணீர்’ Category

ரத்தக்கண்ணீர் – நாடகம் – விமர்சனம்..!

ஓகஸ்ட் 24, 2009

24-08-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

தன் வாழ்நாள் முழுவதும் ஒரே ஒரு மனிதருக்கு மட்டுமே தொண்டனாக இருந்து அந்த தலைவரின் பிறந்த நாளில், தலைவர் இறந்த அதே நேரத்தில் தானும் இறந்து தனது விசுவாசத்தை வரலாற்றில் பதியச் செய்துவிட்டு பகுத்தறிவு உலகத்தில் அணையாத விளக்காக எரிந்து கொண்டிருக்கும் பகுத்தறிவுத் திலகம் நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் ‘ரத்தக்கண்ணீர்’ நாடகத்தை மிக நீண்ட வருட இடைவெளிக்குப் பின்பு சமீபத்தில் பார்த்தேன்.


தென்னிந்திய
நடிகர் சங்கத்தில் ‘நினைவலைகள்’ என்கிற தலைப்பில் நாடக விழா தொடர்ந்து ஒரு வார காலத்திற்கு நடைபெற்றது. இந்த நாடக விழாவில்தான் நடிகவேளின் புதல்வர் ராதாரவியால் ‘ரத்தக்கண்ணீர்’ நாடகம் மீண்டும் அரங்கேறியது.


எம்.ஆர்.ராதாவிற்குப் பின்பு அவருடைய மகன் எம்.ஆர்.ஆர்.வாசுவும், அவருக்குப் பின் ராதாரவியும் இந்த நாடகத்தை தமிழ்நாடெங்கும் நடத்திக் கொண்டிருந்தார்கள். 1980-ல் இருந்து 1999வரையிலும் ராதாரவி சினிமாவில் பிஸியாக இருக்கும் சமயத்திலும் இந்த நாடகத்தை தொடர்ந்து நடத்தி வந்தார். அதன் பின்பு வாசுவின் மகன் வாசுவிக்ரம் இந்த நாடகத்தைத் தொடர்ந்து நடத்தினார். இதுவரையிலும் இந்த ரத்தக்கண்ணீர் நாடகம் பத்தாயிரம் முறைக்கு மேல் அரங்கேறியுள்ளது. தற்போது மிக நீண்ட இடைவெளிக்குப் பின்பு ராதாரவி இந்த நாடகத்தை நடத்தினார்.

மாலை 6.30 மணிக்குத் துவங்கிய நிகழ்ச்சியில் வரவேற்று பேசிய நடிகை பாத்திமா பாபு, கிட்டத்தட்ட 50-க்கும் மேற்பட்ட நடிகர், நடிகையர் பெயர்களை மனப்பாடமாக சொன்னபோது கொஞ்சம் ஆச்சரியமாகத்தான் இருந்தது. இந்த ‘ரத்தக்கண்ணீர்’ நாடகம் பிறந்து, தவழ்ந்து, வெற்றிகரமாக உருவான கதையை சில நிமிடங்களில் சொல்லி முடித்தார் பாத்திமா. சேலத்திலும், கோவையிலும் தொடர்ந்து ஒரு வருட காலம் இந்த நாடகத்தை நடிகவேள் நடத்திக் காட்டினார் என்பதை கேள்விப்பட்டபோது, நாடகத்தின் மீது அவருக்கு இருந்த வெறியை புரிந்து கொள்ள முடிகிறது.


‘ரத்தக்கண்ணீர்’ என்கிற இந்த விலைமதிக்க முடியாத கலைச்சிற்பத்தை எழுதிய திருவாரூர் தங்கராசு என்கிற மனிதரை, இந்நேரத்தில் நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை.

தமிழில் அரங்கேறிய பழம்பெரும் நாடகங்கள் அனைத்தும் இன்றைக்கு துருப்பிடித்த வாளாகிப் போய் வேடிக்கை பார்க்கும் மனோபாவத்துடன் மக்களால் ஒதுக்கப்பட்ட நிலையில் இந்த ‘ரத்தக்கண்ணீர்’ நாடகம் மட்டுமே பொதுமக்களிடையே இன்றுவரையிலும் பெற்றிருக்கும் வெற்றிக்கு என்ன காரணம் என்று யோசித்துப் பார்த்தால் அது ஒன்றே ஒன்றுதான். நடிகவேளின் நடிப்புதான் அது.

அந்த நடிப்புக்குச் சற்றும் குறைவில்லாததுபோலத்தான் எனக்குத் தோன்றியது ராதாரவியின் நடிப்பை பார்க்கின்றபோது.. அண்ணன் திரைப்படங்களில்கூட இப்படியொரு நடிப்பை வெளிப்படுத்தியதில்லை..

நாடகத்தின் துவக்கத்தில் பேசிய ராதாரவி “என்னோட அம்மா இல்லாம இந்த நாடகத்தை நடத்துறது இதுதான் முதல் தடவை” என்று சொல்லி கண் கலங்கினார். சென்னையில் எங்கே ‘ரத்தக்கண்ணீர்’ நாடகத்தை நடத்தினாலும் அவருடைய அம்மா வந்துவிடுவாராம்.. அந்த அளவுக்கு அந்த நாடகத்தின் மூலம் தனது கணவரைக் கண்டு வந்தார் என்றார்கள் ராதாரவிக்கு நெருக்கமானவர்கள்.

இந்த நாளில் நாள், நட்சத்திரம் பார்க்காமல், நல்ல நேரம் பார்க்காமல் ஒரு புதிய நட்சத்திரம் ஒன்றும் உதயமானது. அது ராதாரவியின் மகன் ஹரி. அவரை பல பேர் திரைப்படத்தில் நடிக்க அழைத்தும் சம்மதிக்காத ராதாரவி, முதலில் நாடகத்தில் நடித்து பின்புதான் சினிமாவுக்குள் கால் வைக்க வேண்டும் என்று உறுதியாகச் சொல்லிவிட்டாராம். அதற்கான வழியாக இந்த நாடகத்தில் காந்தாவை வைத்து படமெடுக்க வரும் புதிய தயாரிப்பாளர் வேடத்தில் நடித்தார் நடிகவேளின் பேரன். அடுத்த கலைச்சேவைக்கு ஒருவர் ‘பராக்..’ ‘பராக்..!’

ஒரு பத்தாண்டுகளுக்கு முன்பாக மதுரை தமுக்கம் மைதானத்தில் நடந்த சித்திரைத் திருவிழாவில் பார்த்தது. அதற்குப் பின்பு இப்போதுதான்.

‘ரத்தக்கண்ணீர்’ நாடகத்தை ராதா நடத்தியபோது அன்றைக்கு காலையில் வருகின்ற தினசரி பேப்பர்கள் அனைத்தையும் வாங்கிப் படிப்பாராம். அதில் வந்திருக்கும் சின்னச் சின்ன செய்திகளை எல்லாம் மனதில் ஏற்றிக் கொண்டு, அதையே மாலையில் நடக்கும் நாடகத்தில் நகைச்சுவையாகப் புகுத்தி மக்களை சிரிக்க வைப்பாராம். இந்த முறையால்தான் வருடக்கணக்கில் நடத்தப்பட்ட இந்த நாடகத்தை, மக்கள் திரும்பத் திரும்ப வந்து பார்த்ததாகச் சொல்கிறார்கள்.

அதேபோலத்தான் இன்றும்.. நிறைய மாறுதல்கள்.. வசனங்களில் இன்றைய தமிழக, இந்திய அரசியல் நிலைமையை சகட்டுமேனிக்கு கிண்டலடித்திருக்கிறார் ராதாரவி.

மோகனாக ராதாரவியும், மனைவி சந்திராவாக குயிலியும், காந்தாவாக சோனியாவும் நடித்தனர். காட்சியமைப்புகளில் அதிகம் மாற்றம் செய்யாமல், வசனங்களில் மட்டும் துணிந்து அத்தனை நக்கல், நையாண்டியையும் செய்திருக்கிறார் ராதாரவி.

நாடகங்களில் டைமிங்சென்ஸ்தான் முக்கியம் என்பார்கள். அதனால்தான் நாடக நடிகர்கள் டயலாக் டெலிவரியில் நம்பர் ஒன்னாக இருக்கிறார்கள். இதிலும் அப்படித்தான்.. பேச்சுக்கு பேச்சு, வரிக்கு வரி சிரிக்க வைக்கிறார்கள். முக பாவனை, டைமிங்சென்ஸ் இரண்டும் சேர்ந்து கலக்கிவிட்டன.

“சிங்கப்பூர்ல இருந்து மெட்ராஸ் ஏர்போர்ட்ல வந்து இறங்குறதுக்கு ரெண்டு மணி நேரம்தான் ஆச்சு. ஆனா மெட்ராஸ் ஏர்போர்ட்ல இருந்து இந்த வீட்டுக்கு வர்றதுக்கு நாலு மணி நேரமாகுது.. என்ன நடக்குது இங்க..?” என்று நாடகத்தின் துவக்கத்திலேயே தனது அளப்பரையை ஆரம்பித்தார் ராதாரவி.

தனது மனைவியான சந்திரா குனிந்த தலை நிமிராமல் நிற்பதைப் பார்த்து “இப்படி முகத்தையே பார்க்காம தரையை பார்த்தே ஓகே பண்ணா நான் என்ன அவ்ளோ கேவலமாவா இருக்கேன்?” என்றொரு பரிதாபமான கேள்வி..முதல்
இரவுக்கு நாளும், நேரமும் குறிக்கும் அய்யர்கள் கிரகங்களை பற்றியெல்லாம் சொல்ல “எனக்கு இன்னிக்கு டைம் இல்லே மேன்.. அவங்களையெல்லாம் நாளைக்கு வரச் சொல்லு..” என்று சொல்லும் நக்கல் டயலாக்கை மறக்க முடியவில்லை..

அவருடைய மாமனாராக நடித்தவர் வருடக்கணக்காக நாடகங்களில் நடிக்கிறாராம்.. பின்னியிருக்கார். மோகன் சேரில் அமர்ந்திருக்க மாமனாரை வெளியே போகச் சொல்ல.. அவருடைய மரியாதையை கொஞ்சம், கொஞ்சமாக குறைத்துக் கொண்டே போய் “டேய்..!” என்பதுவரை சொல்லி நிறுத்திய காட்சியில் தொடர்ந்து அப்ளாஸ்தான்..

அவருடைய தாயார் இறக்கும் காட்சியில் ராதா தன் காலத்திய நாடகத்தில், “ம.பொ.சி.யே இன்னும் உசிரோடத்தான் இருக்கார். ஆனா எங்கம்மா போயிட்டாங்க..!” என்பாராம்.. அப்போது பெரியாரை, ம.பொ.சி. கடுமையாகத் தாக்கிப் பேசி வந்தாராம். அந்தக் கடுப்பில் எந்த ஊரில் நாடகம் போட்டாலும் இந்த வசனம்தானாம்..

ஆனால் இப்போது ம.பொ.சி. நிஜமாகவே இறந்துவிட்டதால், லாலுபிரசாத்யாதவை வம்புக்கு இழுத்திருக்கிறார் ராதாரவி. “எங்கம்மாவுக்கும் லாலு பிரசாத்துக்கும் ஒரே வயசுதான். ஆனா எங்கம்மா போயிட்டாங்க..” என்று மட்டும் சொல்லி இடைவெளிவிட்டு ஆடியன்ஸை பார்க்க புரிந்து கொண்டு சிரிக்கிறது கூட்டம்.

காந்தாவின் அம்மாவாக ‘பசி’ சத்யா அறிமுகமாகும் காட்சியில் ஒரு புதுமையாக மோகனும், அவரும் மோதிக்கொண்டு பேசும் பேச்சு கொஞ்சம் கிளுகிளுப்பு. இது மட்டுமா..? அவ்வப்போது அவரது மனைவியிடம் பேசுகின்ற பேச்சுகூட கொஞ்சம் கிளுகிளுப்புதான். இரட்டை அர்த்த வசனங்கள்தான்..! ‘ரத்தக்கண்ணீரில்’ இது போன்ற வசனத்தை நான் கேட்டது இதுதான் முதல் முறை.

‘வள்ளி திருமணம்’, ‘அல்லி அர்ஜூனா’ போன்ற ‘தெய்வீக’ நாடகங்களில் இருந்த இது மாதிரியான ‘தெய்வீக வசனங்களை’விட, இதில் கொஞ்சம் குறைவுதான். இதற்காக கொஞ்சம் மனசு திருப்தி.

மனைவியான குயிலி, கணவனுக்கு ஊத்திக் கொடுக்கும் காட்சியில் பரிதாபத்தைவிட நகைச்சுவையைத்தான் அதிகம் காட்டியது. ஒரு சிகரெட்டை பற்ற வைக்க குயிலி படும்பாடும், மோகனுக்கு விசிறி விடும்விதமாக விசிறியை வாங்கி கை வலிக்க மிக வேகமாக விசிறியை வீசுகின்ற இந்தக் காட்சிதான் அதிகமான கிளாப்ஸை எழ வைத்தது. குயிலி மேடம் சூப்பர்..

முன்பு மூன்றரை மணி நேரம். பின்பு மூன்று மணி நேரம்.. பின்பு இரண்டரை மணி நேரம்.. கடைசியாக இரண்டு மணி நேரம் என்று நேரத்தை சுருக்குவதற்காக கதையையும் கொஞ்சம் சுருக்கித்தான் ஆக வேண்டிய கட்டாயம். காலத்திற்கேற்றாற்போல் நாமும் மாறித்தானே ஆக வேண்டும்.

இடையிடையே ராதாரவி தான் செய்த அரசியல் ஜம்ப்புகள்.. தவறான முடிவுகள்.. இதனால் தான் இப்போது படும் கஷ்டங்கள் இதையெல்லாம் வசனத்தில் சேர்த்து வைத்து சொந்த சோகத்தைத் தணித்துக் கொண்டார்.

“எல்லாக் கட்சியும் கூட்டணி வைச்சே நிக்குறாங்க.. தனித்து நிக்க மாட்டாங்க.. நின்னாத்தான் தெரியும் செல்வாக்கு. ஆனா ஒருத்தர் மட்டும் தனியாத்தான் நிப்பேன்னு சொல்லி நின்னு தோக்குறாரு..” என்று விஜயகாந்தை சொல்லாமல் சொன்னார்.

ஆனாலும் அடுத்த நொடியில்.. “போதும்.. இதுக்கு மேல வேணாம்.. எனக்கெதுக்கு பொல்லாப்பு. அவர் அடுத்து ஒரு படம் டைரக்ட் பண்ணப் போறாராம்.. அதுல எனக்கு ஒரு வேஷம் கொடுத்திருக்காரு. இப்ப எதையாவது பேசி என் பொழப்ப கெடுத்துக்க விரும்பலை..” என்று சொல்லி தப்பித்துக் கொண்டார்.

காந்தாவின் வீட்டில் பேசிக்கொண்டிருக்கும்போது கை, கால்களை லேசாக சொரிந்து காட்டி, இரும.. அதற்குப் பின் அதுவரை அவரை “துரை” என்று அழைத்து வந்த காந்தாவின் தம்பி “யோவ்” என்று கூப்பிட.. “பாருங்க.. ஒரு தடவைதான் இருமுனேன். மரியாதையைக் குறைச்சிட்டான்..” என்ற டைமிங்கான நக்கல் வசனம் சூப்பர்..

அவருடைய சொறியும் குணம் அதிகமாவதைக் கண்டு டாக்டரை அழைத்து வருகிறார்கள். வந்த டாக்டரை உட்கார வைத்து ‘கிளாஸ்’ எடுக்கும்போது இன்றைய பிரச்சினைகளை கையாண்டிருப்பதற்காக ராதாரவி அண்ணனுக்கு எனது நன்றியையும், வாழ்த்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

“சிகரெட் டப்பாவோட அட்டையில ‘புகைப்பழக்கம் உடலுக்கு கெடுதி’ன்னு சின்னதா எழுதிட்டு, கம்பெனி பெயரை பெரிசா எழுதினா எவனுக்குத் தெரியும்..? உனக்கு நிஜமாவே மக்கள் மேல அக்கறையிருந்தா நீ என்ன செஞ்சிருக்கணும்.. கம்பெனி பெயரை சின்னதா போட்டு ‘உடலுக்கு கெடுதி’ன்றதை பெரிசா போட்டிருக்கணும்.. அதுதான் கவர்ன்மெண்ட்டு. ஆனா நீ என்ன செஞ்சிருக்க.. இதுதான் ஊர், உலகத்துக்கு அட்வைஸ் பண்ற யோக்கியதையா..?” என்று ஒரு தாக்குதல் நடத்தினார்.அடுத்து
அன்புமணியும் இவரிடம் மாட்டிக் கொண்டார். “இந்த பக்கம் இப்படி பேசிட்டு அந்தப் பக்கம் கம்பெனிக்காரன்கிட்ட துட்டை வாங்கி கம்பெனி, டிவியெல்லாம் நடத்துறாங்க. கேட்டா எல்லாம் கணக்குக் காட்டியாச்சுன்றாங்க.. நல்லவேளை இந்த எலெக்ஷன்ல அவங்க வரலை.. நாம தப்பிச்சோம்.. இல்லைன்னா நாளைக்கு சினிமால சிகரெட் அட்டையையே காட்டிருக்க முடியாது..” என்று நக்கல் விடவும் தவறவில்லை.ராதா
தனது காலத்திய நாடகத்தில் காந்தாவை “வேசி மகள்” என்று மட்டுமே அழைத்து வந்ததாகப் படித்திருக்கிறேன். ஆனால் இதில் “தேவடியாள் பெற்றெடுத்த தெய்வத் திருமகளே..” என்று கர்ணக் குரலில் அழைக்கிறார் ராதாரவி.

குஷ்டரோகம் வந்த பின்பான காலக்கட்டத்தில் “சொரிய சொரிய இன்பம்” என்கிற அந்த புகழ் பெற்ற வசனத்தை கஷ்டத்தோடு உச்சரித்த நடிப்பையெல்லாம் பார்த்தால், இதையெல்லாம் ஒரு சினிமாவில்கூட அவர் காட்டியிருக்க மாட்டார் என்றே எனக்குத் தோன்றுகிறது..

அவருடைய மகனான ஹரி சினிமா தயாரிப்பாளர் வேஷத்தில் காந்தாவை பார்க்க வீட்டுக்கு வர.. “அடியே காந்தா.. இந்த சினிமாக்காரனுகளையெல்லாம் நம்பாதடி.. யூஸ் பண்ணுவானுக.. அப்புறம் பாதில விட்ருவானுக.. புதுப் பார்ட்டி ஒண்ணு வந்தா பழசை கழட்டிவிட்டுட்டு புதுசைத் தேடி ஓடிருவானுங்க..” என்கிற டயலாக்கை இதற்கு முந்தைய நாடகங்களில் கேட்டிருக்கிறேன். ஆனால் இதை இப்போது சென்சார் செய்துவிட்டார் போலும்.. காணவில்லை..

இந்த முறை மகன் ஹரியை பேசவிட்டு இவர் அமைதியாக இருந்துவிட்டு கடைசியில், “ரொம்பப் பேசுறான் இவன்.. நம்மளையே கொஸ்டீன் கேக்குறான் பாருங்க… ஒரு வேளை நம்ம பரம்பரை போலிருக்கு..” என்று சொல்லி மகனுக்கும் கைதட்டல் வாங்கிக் கொடுத்திருக்கிறார்.

மோகனின் நச்சரிப்புத் தாங்காமல் போலீஸை விட்டு அவரை வீட்டில் இருந்து வெளியேற்றும் காட்சியில் இப்போதைய காவல்துறையினரை ஒரு பிடி பிடித்திருக்கிறார். வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் காந்தாவின் சினிமா பிரபலத்தை பார்த்து ஆட்டோகிராப் கேட்கும் காட்சியில் வசனமே இல்லாமல் ராதாரவியின் முக பாவனை அட்டகாசம்..

“குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி ஏது..?” என்கிற பாடல் காட்சியை மட்டும் வைத்து ஏதோ தங்களால் முடிந்த அளவுக்கு ரெண்டு வெங்காய வெடியையும், சினிமா பேனையும் வைத்து காட்டி முடித்துவிட்டார்கள். ஆனால் மதுரையில் நான் பார்த்தபோது அந்த பாடலை முழுவதுமாகவே நடித்துக் காண்பித்தார் ராதாரவி.


“தமிழ் படங்களுக்கே இப்பத்தான் தமிழ்ல பேர் வைக்க ஆரம்பிச்சிருக்காங்க. இதுவரைக்கும் எப்படி இருந்திருக்கானுங்க பாருங்க. ஆனா இவனுங்க எல்லாம் தமிழர்களாம்.. நமக்குள்ளயே ஒற்றுமை இல்லையே.. அப்புறம் என்ன பெரிய தமிழ்.. தமிழன்.. பக்கத்துல இருக்குற கேரளாவுக்குள்ள போய் சொல்லிப் பாரு.. உதை வாங்கிட்டுத்தான் வருவ.. ஏதோ ஒரு ‘பெரிய மனுஷன்’ இருக்காரு.. அவர் இருக்குறவரைக்கும் நாம சொல்லிக்க வேண்டியதுதான்.. அவரும் இல்லைன்னா அவ்ளோதான்.. என்று சொல்லி தனது ‘உள்ளக்கிடக்கை’யை தெரிவிக்கிறார் ராதாரவி.

இடையில் ஜீவகாருண்ய சங்கத்தையும் ஒரு பிடிபிடிக்கிறார். “எதையும் கொல்லாத.. சாப்பிடாத.. விட்ரு.. பாவமாம்.. மூட்டைப்பூச்சி கடிச்சா என்ன செய்வ..? ‘சபாஷ் போயிட்டு வா’ன்னு தட்டிக் கொடுத்து அனுப்பி வைப்பியா?” என்கிற நக்கலும் உண்டு.

கண்பார்வை இல்லாமல் தெருவில் பிச்சையெடுக்கும் மோகனை சற்றுத் தள்ளி நின்று பிச்சையெடுக்கும்படி சொல்ல.. “அந்த ஓரத்துல என்கூட அம்பானி உக்காந்து பிச்சையெடுக்குறான். அதான் நான் இங்கிட்டு வந்துட்டேன்..” என்ற நக்கல் ஓவரோ ஓவர்..

திருவண்ணாமலை தீபத்தை பார்த்தா கன்னத்துல போட்டுக்குற.. வீடு தீப்பிடிச்சா மட்டும் ஏண்டா வயித்துல அடிச்சிட்டு அழுவுற..?” என்ற வசனம் மிகச் சரியான சமயத்தில் பயன்பட்டிருக்கிறது..

தனது மனைவி சந்திராவிடமே வந்து பிச்சை கேட்டு கலாய்ப்பது செம சீன்.. சந்திரா சோறும்போட்டு, அவரது கையைப் பிடித்துத் தூக்கிவிட.. “நம்மளை யாருமே தொட மாட்டாங்களே. இந்தப் பொம்பளை எப்படித் தொட்டுப் பேசினா.. ஒருவேளை நம்மளை மாதிரியே இவளுக்கும் குஷ்டமோ..?” என்று சொல்லும் ராதாவின் டிரேட்மார்க் நக்கல் அப்படியே இங்கேயும் வருகிறது.

மோகனின் நண்பனே அவனை அடையாளம் தெரியாமல் ஹோட்டலுக்கு அழைத்துச் செல்ல.. “வெஜ்னா வரலே.. நான்வெஜ்னா வரேன்..” என்று சொல்வது செம காமெடி..

இறுதியில் ‘நடிகை காந்தா மரணம்’ என்று பேப்பர் செய்தியை மனைவி சந்திரா பார்த்து பதறிப் போய் “மாமாவோட நிலைமை என்னாச்சுன்னு தெரியலையே..?” என்று கேட்கின்றபோது பிச்சை சோறு சாப்பிட வந்து நிற்கும் மோகன், “என்ன காந்தா போயிட்டாளா..? உங்களுக்கு அவளைத் தெரியுமா..?” என்று விசாரித்து அவர்கள் யார் என்று கேட்டுத் தெரிந்து கொண்டு கதறுவது ஒன்றுதான் இந்த நாடகத்தில் சிரிக்க முடியாமல் இருந்த நேரம்..

அந்த கிளைமாக்ஸை கூட பட்டென்று முடித்துவிட்டதுதான் கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது.

மோகனைத் தொட வரும் சந்திராவை “என்னைத் தொடாத..” என்று சொல்லிவிட்டு மோகன் உள்ளே போக சந்திரா பின் தொடர.. நாடகம் முடிந்ததாகச் சொன்னது கொஞ்சம் உப்புச் சப்பில்லாமல் போய்விட்டது.

ராதா காலத்திய நாடகத்திலும், திரைப்படத்திலும் தனது நண்பனுக்கும், மனைவிக்கும் இடையில் பந்தத்தை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டு உயிரை விடுவார் ராதா. அது இதில் இல்லை. தான் உயிரை விடுவதைப் போல் காட்சி வேண்டாம் என்று ராதாரவி நினைத்துவிட்டாரோ என்னவோ..?

அதேபோல் ராதாவின் புகழ் பெற்ற “அரிக்குதடி காந்தா..!” என்கிற டயலாக்கை நான் ஆவலாக எதிர்பார்த்து காத்திருந்தேன். அது இதில் பேசப்படவே இல்லை என்பதிலும் எனக்கு வருத்தமே..

அதேபோல் ராதா குடும்பத்தின் குலச் சொத்தான அந்த வெண்கலக் குரல் பேச்சை ராதாரவி ஓரிரண்டு இடங்களைத் தவிர மற்ற இடங்களில் பயன்படுத்தாமல் சாதாரணமாகவே பேசியது ஏன் என்று தெரியவில்லை. அந்த உச்சரிப்பில் பேசியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்..

ராதாவின் காலத்தில் நாடகத்தில் இருந்த பகுத்தறிவு வசனங்கள், கடவுள் நம்பிக்கையை கிண்டல் செய்வது.. கடவுளர்களை கேலி செய்வது போன்றவைகள் இந்த நாடகத்தில் அதிகம் இல்லாமல் வழிக்கொழிந்து போயிருப்பது காலத்தின் மாற்றத்தைக் காட்டுகிறது.

நடிகவேளின் இளவல் ராதாரவி தீவிர கடவுள் பக்தராக மாறியிருப்பதுதான் அதற்குக் காரணம். அது போன்ற வசனங்களை அவரும் வைக்காததால்தான், சமீப வருடங்களாக இந்த நாடகத்தை அவர் தொடாமல் வைத்திருந்தார் என்கிறார்கள் அவருடைய நண்பர்கள்.

இருந்தபோதிலும் அதற்கு முந்தைய நான்கு நாட்கள் நடந்த நாடகங்களுக்கு வந்த கூட்டத்தைவிட, அன்றைக்கு அதிகமான கூட்டம் குவிந்திருந்தது இந்த நாடகத்தின் தனிச்சிறப்புக்கு அடையாளம்..

இந்த நாடகத்தின் மையக் கருத்தே பெண்களுக்கான மறுமணம்தான்.

இல்லற சுகத்தையே அனுபவித்திராத ஒரு பெண் கணவன் தொலைந்து போனாலோ, இறந்து போனாலோ அப்படியேதான் இருக்க வேண்டுமா..? கணவன் எப்படிப்பட்டவனாக இருந்தாலும் பொறுத்துக் கொண்டு அடங்கியிருக்க வேண்டுமா..? அவளுக்கென்று ஒரு வாழ்க்கை வேண்டாமா என்பதையெல்லாம்தான் தனது காலத்தில் கொஸ்டீன் மேல் கொஸ்டீன் கேட்டு இந்த நாடகமான, காவியத்தை பெரியாருக்கு காணிக்கையாக்கியிருந்தார் ராதா.

இந்த அளவுக்கு நடிகவவேள் அவர்கள் தனது பேச்சாலும், நடிப்பாலும் மக்களைச் சிரிக்க வைத்து, சிந்திக்கவும் வைத்ததுதான் இந்த நாடகத்தின் வெற்றிக்கு காரணம்..

திரைப்படத்தில் அவர் இறந்த பின்பு வருகின்ற அந்த கடைசி வசனம்கூட அவருடைய குரலில் கணீரென்று கேட்குமே..

மதத்தை காப்பாற்ற புறப்பட்டிருக்கும் மதிவாணர்களே;

சமூகத்தை காக்க முனையும் பெரியோர்களே;

இந்த மறுமணம் தவறா?

தமிழ் மண்ணில் பிறந்த எவரும் இதனை தவறென்று சொல்ல மாட்டார்கள்.

என்னைப் போன்ற கண்மூடிகளால் எத்தனையோ பெண்கள் பாதிக்கப்பட்டு தங்களின் உணர்ச்சிகளை மறைக்க முடியாமல் அவமானமாகி விடுமோ என ஆற்றிலோ குளத்திலோ விழுந்து ஆவி போக்கி கொள்கிறார்கள்.

இந்த அவல நிலை மாறட்டும்.

லட்சக்கணக்கான அபலைப் பெண்கள் சிந்தும் ‘ரத்தக்கண்ணீர்‘ இனியாவது நிற்கட்டும்”

பெண்கள் வடித்த அந்த ரத்தக்கண்ணீர் இப்போதும் இருந்து வருகின்ற இன்றைய நிலைமையில், இந்த நிஜமான ‘ரத்தக்கண்ணீர்’ உலகம் உள்ளவரையில் தமிழ் மொழி உள்ளவரையில், தமிழர்கள் உள்ளவரையில் எத்தனை தலைமுறைக்கும் நீடித்திருக்க வேண்டும் என்பதே எனது ஆவல்..!

வாழ்க நடிவேகள் எம்.ஆர்.ராதாவின் புகழ்..!