Archive for the ‘ரஜினி’ Category

கலையுலகில் நடக்கும் உள்குத்துக்கள்! பாவமான ரஜினியும், அஜீத்தும்..!!!

பிப்ரவரி 22, 2010

22-02-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

‘படிக்காதவன்’ படத்தின் வெற்றிக்குக் காரணமான ‘ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன்; உலகம் புரிஞ்சுக்கிட்டேன் கண்மணி’ பாடல் காட்சிதான் தமிழ்த் தொலைக்காட்சி வரலாற்றிலேயே அதிக முறை ஒளிபரப்பப்பட்ட பாடலாக இருக்கும்.

இருந்தும் ரஜினி இப்போதும் அதே பாடலை மறுபடியும் ஹம்மிங் கொடுத்துக் கொண்டேயிருப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். என்றைக்கு அந்தப் பாடலின் அர்த்தம் புரிந்தவராகக் காட்சியளிக்கப் போகிறார் என்றுதான் தெரியவில்லை.


எதற்கெடுத்தாலும் ‘தமிழ்’, ‘தமிழ்’ என்று தமிழை கொத்துபுரோட்டா போடும் சில அரசியல் வியாபாரிகளின் கூச்சல், தமிழ்த் திரையுலகில் மறுபடியும் சப்தமில்லாமல் தலையெடுத்துவிட்டது. இந்த முறையும் இவர்கள் வாய்க்கு ஊறுகாய் ரஜினிதான். கூடவே துணைக்கு அஜீத்தையும் இழுத்து வைத்திருக்கிறார்கள்.

ஒருவருக்குப் பாராட்டு விழா என்றால் பேச்சாளர்களைத் தவிர்த்து மற்றவர்களை முறைப்படி அழைக்கலாம். “கண்டிப்பாக வரணும்” என்று சொல்வதோடு முடித்துவிடுவது நாகரிகம்.. “வரலைன்னா சொத்துல பங்கு கிடையாது.. உன்கூட ‘கா..” என்று நட்பு ரீதியாகவும், உறவு முறையிலும் அன்போடு மிரட்டுவதும் ஒரு வகையில் நடப்பதுதான்.

ஆனால், “வரவில்லையெனில் நீ தொழிலே பண்ண முடியாது.. ஊர்லயே இருக்க முடியாது” என்று சொல்லி அழைப்பது அந்த விழாவையே கேலிக்கூத்தாக்கும் விஷயம். இதைத்தான் கலைஞரின் பாராட்டு விழாவில் செய்திருக்கிறார்கள் திரையுலக சங்கத்தினர்.

வராவிட்டால் திரையுலகில் நீடிக்கத் தடை.. பணி புரிய முடியாது என்றெல்லாம் மிரட்டி அழைக்கப்பட்டிருப்பதால், வந்தவர்கள் எல்லாம் மனதார வாழ்த்தினார்கள் என்றா கருத முடியும்..? இதுவே கேவலமில்லையா..? ஒருவரின் கழுத்தில் கத்தியை வைத்து “என்னை நாலு வார்த்தை ‘நச்சு’ன்னு வாழ்த்திட்டுப் போடா பேமானி..” என்று மிரட்டி அவர் பயத்தில் எட்டு வார்த்தையில் கவிதை பாடிவிட்டுப் போனால் அதைக் கேட்டும் ஒருவர் நெக்குருகி போய் நிற்கிறாரென்றால் அவர் நிச்சயம் ‘நட்டு கழன்ற கேஸாகத்தான்’ இருக்க முடியும்.

இப்படியொரு தோற்றத்தை வலுக்கட்டாயமாக முதல்வருக்கு உருவாக்கிக் கொடுத்திருக்கிறார்கள் திரையுலகத்தினரும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும்.

“ரஜினி, கமல் இருவரும் வராவிட்டால் கூட்டம் வராது.. குத்துப் பாட்டு நடனங்கள், கேளிக்கைகள், கிண்டல்கள், குத்தல்கள் போன்ற கலைநிகழ்ச்சிகள் இல்லையெனில் நிகழ்ச்சிக்கு பெரிய அளவில் ஸ்பான்ஸர் கிடைக்காது.. சின்ன ஸ்பான்ஸர் கிடைத்தால் பணம் பெயராது.. பணம் வரவே இல்லையெனில் இவருக்கு பாராட்டு விழா நடத்துவதால் எங்க டிவிக்கு என்ன பிரயோசஜனம்..?” என்று கலைஞர் டிவியின் மார்க்கெட்டிங் டிபார்ட்மெண்ட் வரிந்து கட்டிக் கொண்டு களத்தில் இறங்கி போட்டுக் கொடுத்த திட்டப்படிதான் அத்தனையும் நடந்தது.

நிகழ்ச்சிக்கு பதினைந்து நாட்களுக்கு முன்பாக கமலஹாசன் முதல்வரை சந்திக்க அவரது வீட்டுக்கு வந்தார். கமலஹாசன் வரப் போவதை முன்கூட்டியே பெப்ஸியின் தலைவருக்கு பாஸ் செய்த டிவிக்காரர்கள் “கமல்ஹாசனையும் கலைநிகழ்ச்சியில் ஏதாவது ஒண்ணு செய்ய வைச்சிருங்க.. கமல், சி.எம்.கிட்ட பேசும்போது நீங்களும்கூட இருந்து பேசி முடிச்சிட்டீங்கன்னா கமல் தட்ட மாட்டார்” என்று ஒரு புது திரைக்கதை எழுதி சொல்லியனுப்பினார்களாம்.

தான் மட்டுமே பேச வந்து பெப்ஸியின் தலைவரே இந்த வீட்டில் வரவேற்கிறாரே என்கிற புதுமையில் சபையில் புகுந்த கமலுக்கு அவரே எதிர்பார்க்காத அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறார் குகநாதன், “ஐயா நீங்களே இவர்கிட்ட சொல்லிருங்க.. ஏதாவது ஒரு படத்தோட வசனத்தை மட்டும் ஒரு பத்து நிமிஷம் பேசுற மாதிரி இருந்தால் போதும்..” என்று கலைஞரிடம் போட்டுக் கொடுக்க.. ‘தேவர் மகன்’ புரியாமல் பார்த்தபடியிருக்க.. “நான் சொல்லிக்கிறேன்.. தம்பி நடிப்பாரு..” என்று கலைஞரும் ‘தானா வந்து மாட்டுறாங்க பாருங்க..’ என்ற நினைப்பில் சொல்லிவிட அன்றைக்கே பத்திரிகைகளில் செய்தி வந்து பரபரப்பூட்டியது கலைஞரின் வசனத்தை கமல் மேடையில் பேசி நடிக்கப் போகிறார் என்று..

தான் பேச வந்த விஷயத்தைவிட தன்னை சிக்க வைத்த காரண, காரியத்தால் சங்கடமாகிப் போன கமல், பிற்பாடு கலைஞர் டிவியில் இருந்து வந்த தொடர் நெருக்கடி கண்டு கடுப்பாகித்தான் போயிருக்கிறார். கடைசிநாள் வரையிலும் தன்னுடைய நிகழ்ச்சிக்கான நேரம் எவ்வளவு என்பதைச் சொல்லாமலேயே டபாய்த்துவிட்டு முதல் நாள்தான், “ஸ்டெடி பண்ண நேரமில்லை. பிராக்டீஸும் முடியலை.. சொதப்பலா நான் எதையுமே செய்ய மாட்டேன்னு உங்களுக்குத்தான் தெரியுமே.. விட்ருங்க..” என்று ஒரே போடாகப் போட்டுத் தப்பித்துக் கொண்டாராம்.

இந்த அதிர்ச்சியை சமாளிக்கத்தான் சம்பந்தப்பட்ட கிளிப்பிங்ஸை போட்டு முதல்வரை அழுக வைத்து சமாளித்துவிட்டார்கள். ஆனாலும் அஜீத் கொடுத்த அதிர்ச்சியை எதிர்பார்க்கவில்லைதான். ஆனால் இதே அஜீத்துக்கு பத்திரிகை வைத்து அழைப்புவிடுக்கப் போனவர்கள் கொடுத்ததும் ஒருவிதத்தில் அதிர்ச்சிதான்.

“நானும் வாழ்த்துறேன்.. பொதுவா நான் இந்த மாதிரி பங்ஷன்ல கலந்துக்குறதே இல்லையே.. என்னுடைய பங்களிப்பா எவ்வளவு வேணுமா சொல்லுங்க.. அதைக் கொடுத்துடறேன்..” என்றுதான் அஜீத் சொல்லியிருக்கிறார். ஆனால் அழைக்கப் போனவர்கள் அப்போது வைத்த நக்கலும், கிண்டலும், மிரட்டலும்தான் அஜீத்தை அப்படி பேச வைத்துவிட்டது என்கிறார்கள்.


அந்தப் பேச்சுக்கு ரஜினி மட்டுமல்ல அரங்கில் இருந்த முக்கால்வாசி பேரும் கைதட்டி ஓய்ந்துதான் போயிருக்கிறார்கள். இப்போது நெட்டில் ஓடும் கிளிப்பிங்ஸ்களை கேட்டுப் பாருங்கள். தெளிவாகவே தெரிகிறது. மறுநாளில் இருந்து பல இளம் நடிகர்கள், நடிகைள், இயக்குநர்கள், பிரபலங்கள் என்று பலருமே அஜீத்திற்கு போன் செய்தும், மெஸேஜ் அடித்தும் பாராட்டித் தள்ளிவிட.. தனது எதிர்ப்புக் குரல் திரையுலகிலும் மையமாக சுழன்றுவருவதை அஜீத்தும் புரிந்து கொண்டிருந்தார்.

அதேவேளை கலைஞர் டிவி நிர்வாகிகளையும், விழா அமைப்பாளர்களையும் அழைத்து “கூப்பிட்டு வைச்சு கேவலப்படுத்திட்டீங்களே..” என்று கலைஞர் காய்ச்சி எடுத்த பிறகுதான் இந்த பிரச்சினை வேறு முலாம் பூசி வெடிக்கத் துவங்கியுள்ளது.

சிங்கப்பூர் கலை நிகழ்ச்சி, நடிகர் சங்க நிகழ்ச்சிகள், நெய்வேலி ஊர்வலம், இராமேஸ்வரம் ஊர்வலம், ஈழத் தமிழருக்கான உண்ணாவிரதப் போராட்டம் என்று அத்தனைக்கும் அஜீத்தை அழைப்பதற்காக ஒரு தனிப்படையையே போட வேண்டிய நிலைமை என்று இருந்ததால் நடிகர் சங்க பொதுச்செயலாளர் ராதாரவி அஜீத் மீது காட்டமாகவே இருந்தார். அதனை நக்கீரன் பத்திரிகையில் அப்படியே பேட்டியாக அளித்திருந்தார்.

அஜீத்திற்கு எதிராகப் பேட்டியளிக்க கட்சி நடிகர், நடிகையர் தவிர மற்ற பொதுவானவர்கள் யாரும் முன் வராததால் சம்பந்தப்பட்ட டிவி வட்டாரத்தில் இருந்து கை காட்டிய பின்பே ஜாக்குவார் தங்கம் லைம்லைட்டிற்கு வந்ததாக கோடம்பாக்கத்தில் சொல்கிறார்கள். அவருடைய பேட்டியையே யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் விட்டுவிட.. விஷயத்தை பெரிதாக்கியே தீருவது என்ற நோக்கத்தில் உருவானதுதான் அவருடைய வீடு தாக்கப்பட்டது என்கிற சினிமா திரைக்கதையில் உருவான புகார் நடவடிக்கை.

அஜீத்தின் தூண்டுதல் என்று சொல்லி புகாரை பதிய வைத்து அதையை நடிகர் சங்கத்திலும் கொண்டு வந்து கொடுத்திருக்கிறார் ஜாக்குவார் தங்கம். அதே நடிகர் சங்கத்தில் வைத்து பத்திரிகையாளர்களுக்குப் பேட்டியளித்த ஜாக்குவார், “ரஜினி ஒரு ஜோக்கர். அவர் சொன்னதையெல்லாம் பெரிசா எடுத்துக்காதீங்க..” என்று சொன்னது மிகப் பெரிய அதிர்ச்சி.

இதற்கு இந்த நிமிடம்வரையிலும் நடிகர் சங்கத்தில் இருந்து எந்த ரியாக்ஷனும் இல்லை. ஆனால் கூட்டப்பட்ட சமரச பேச்சுவார்த்தையில் அஜீத் மன்னிப்பு கேட்டுத்தான் ஆக வேண்டும் எனவும், ரஜினிகாந்திற்கு கண்டனம் தெரிவிப்பதாகவும் அறிவித்து முடித்திருக்கிறார்கள். ஜாக்கிவாரின் ரஜினி பற்றிய கமெண்ட்டுக்கும், அஜீத் பற்றிய பேச்சுக்கும் எந்தவித ரியாக்ஷனும் அந்த அறிக்கையில் இல்லவே இல்லை.


நடிகர் சங்கத்தின் நிதி திரட்டும் நிகழ்ச்சிக்கு ரஜினி வந்தால்தான் சிங்கப்பூரில் கல்லா கட்ட முடியும் என்று சொல்லித்தான் அழைத்தார்கள். வந்தார். இப்போது வங்கியில் கல்லா நிரம்பி வழிகிறது. சென்சிடிவ்வான காவிரி பிரச்சினையில் தலையைக் கொடுக்க வேண்டாம் என்று மறுத்தும் வராமல் போனால் கர்நாடகாவிற்கு ஆதரவாளன் என்று பட்டம் சூட்டிவிடுவார்கள் என்று பயந்துபோய் வந்து பேசியதில் இரண்டு பக்கமும் குட்டு வாங்கிக் கொண்டு போனார். விதி வலியதாச்சே.. சங்கத்தின் மூலம் நடத்திய ஈழப் போராட்டத்திற்கு வந்தே தீர வேண்டும் என்றார்கள். வந்தார். பேசினார். தன் கடமையை சங்கத்திற்காக முடித்துவைத்துவிட்டுப் போனார்.

நடிகைகள் பற்றி ஆபாசமாக எழுதிய ‘தினமலர்’ பத்திரிகைக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்திற்கு வந்து இரு தரப்பினரையுமே பேலன்ஸ் செய்வதைப் போல் பேசிவிட்டுச் சென்றார். அதையே கிண்டல் செய்தவர்கள் பின்பு வந்து பேசியவர்கள் பேசிய பேச்சுக்களால் விளைந்த விளைவுகளைப் பார்த்த “ரஜினி பேசியது சரிதான்..” என்றார்கள் கடைசியில்.

‘ஜக்குபாய்’ திரைப்படம் இந்த 25-வது நாளான இன்றைக்கு சென்னையில் மட்டும் வெற்றிகரமாக 3 தியேட்டர்களிலாவது ஓடுகிறது என்றால் அதற்குக் காரணம் ரஜினிதான். ஏதோ தன்னால் முடிந்த அளவுக்காவது படத்தின் எதிர்பார்ப்பைக் கூட்டிவிடுவோம் என்ற எண்ணத்தில் படத்தின் கதையைப் பற்றிச் சொல்லி கிக் ஏத்தினார். ஆனாலும் படம் பெயிலியர் ஆனது வேறு கதை.

‘ஜக்குபாய்’ படத்தின் பிரிவியூவுக்கும் அழைத்தார்கள். கூட்டத்தோடு கூட்டமான பிரிவியூக்களுக்கு வராதவர் இந்த அழைப்பை மட்டும் ஏற்று வந்தார். நடிகர் சங்கத் தலைவருக்கு திருப்தியளிக்கும்வகையில் அவருக்கு இன்றுவரையிலும் முழு ஒத்துழைப்பு கொடுத்து வந்திருக்கிறார் ரஜினி. அப்படியிருந்தும் அந்தக் கூட்டத்தில் அவருக்கு ஆதரவாகப் பேச யாருமில்லை.. இதுதான் ரஜினியின் ராசி..!

ஏதோ இந்த சினிமா அமைப்புகளினால்தான் திரையரங்குகளில் திரைப்படங்கள் ஓடுகின்றன என்று அவர்கள் நினைக்கிறார்கள். கலைஞர் டிவிக்கு காசு பெயர்வதற்கு நாங்கள் ஏன் உயிரைக் கொடுத்து உழைக்க வேண்டும் என்கிறார்கள் நடிகர், நடிகைகள். ஒருவகையில் இவர்கள் சொல்வதும், கேட்பதும் நியாயம்தான்.

உண்மையான பாராட்டுவிழா என்றால் எதற்கு ஆடல், பாடல், கேளிக்கைகள்..? பேச்சு மட்டும் போதாதா..? பேசியே தீருவது என்றால் ஒருவரைப் பற்றி எத்தனை முறை, எத்தனை மேடைகளில்தான் பேசுவார்கள். அவர்களுக்கே எரிச்சலாக இருக்காதா..? கோபம் இருந்தாலும் மறைத்துக் கொண்டு, எரிச்சல் இருந்தாலும் இல்லாமல் காட்டிக் கொண்டு பேசிவிடு என்று சொன்னால் அந்தப் பேச்சில் என்ன உண்மையான அன்பா வெளிப்பட்டிருக்கும்..?

முதல்வர் இந்த பாராட்டு பற்றிய விஷயத்தில் உலகத்திலேயே மிக, மிக வித்தியாசமான மனிதர். இப்படியொரு விளம்பர வெறி பிடித்த மனிதரை வேறு எந்த லோகத்திலும்கூட நாம் பார்க்க முடியாது. அவருக்குத்தான் புரியாது என்றாலும் இந்த சினிமாக்காரர்கள் ஏன் இப்படி அநியாயத்திற்கு கூஜா தூக்குகிறார்கள்..? தூக்கினால் தூக்கட்டும். தூக்க மாட்டோம் என்பவர்களை விட்டுவிட வேண்டியதுதானே..? ஊரைவிட்டே ஒதுக்குவோம் என்று சொல்லும், இவர்களுக்கும் கிராமங்களில் மரத்தடி பஞ்சாயத்து செய்யும் நாட்டாமைகளுக்கும் என்ன வித்தியாசம்..?

ரஜினியும், அஜீத்தும் முதல்வரை சந்தித்த அன்று மாலை நடந்த ‘பாடகசாலை’ படத்தின் கேஸட் வெளியிட்டு விழாவில் பேசிய பெப்ஸியின் தலைவர் குகநாதன், “நாங்கள் பண்பாகவும் கேட்போம். பணிவாகவும் கேட்போம். வற்புறுத்தி அல்லது மிரட்டியும் கேட்போம். என்ன செய்துவிட முடியும் இவர்களால்? அப்படியும் கேட்காவிட்டால் அவர்களை எப்படி ஓரங்கட்ட முடியும் என்ற வழிமுறையும் எங்களுக்குத் தெரியும்…” என்று ஏதோ வில்லன் ரேஞ்சுக்கு பேசியிருக்கிறார். வருத்தப்பட வேண்டிய விஷயம். பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது என்பதைப் போல பெப்ஸி தலைவருக்குள் இருந்த ‘உடன்பிறப்பு’ பாசம் வெளியே வந்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

கலைஞரின் பாராட்டு விழாவுக்கு வந்தே தீர வேண்டும் என்று பல கலைஞர்களை மிரட்டிப் பணியவைத்த இவர்கள், நடிகர் சங்கத்தில் ஆயுள்கால உறுப்பினராக இருக்கும் செல்வி ஜெ.ஜெயலலிதாவை வற்புறுத்தினார்களா என்று தெரியவில்லை. புரட்சிக் கலைஞர் விஜயகாந்தை ஏன் வரவில்லை என்று கண்டித்தார்களா என்று தெரியவில்லை. கிராமத்து நாயகன் ராமராஜனுக்கு வராததற்கான காரணம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார்களா என்றும் தெரியவில்லை. எஸ்.எஸ்.சந்திரனுக்கு தந்தி அடித்தாவது அழைத்தார்களா என்பதும் தெரியவில்லை. ‘திரையுலக அஷ்டாவதனி’ விஜய டி.ராஜேந்தரை அழைக்க வண்டி போனதா என்றும் தெரியவில்லை. அவருடைய புதல்வர் நடிகர் சிம்பு என்ன காரணம் சொல்லி லீவ் லெட்டர் கொடுத்தார் என்பதும் தெரியவில்லை.. இது எல்லாவற்றையும்விட, குகநாதன் செயலாளராக இருக்கும் ‘தமிழ்நாடு திரைப்பட எழுத்தாளர்கள் சங்க’த்தின் தலைவர் இயக்குநர் விசு ஏன் வரவில்லை என்று அவரது சட்டையைப் பிடித்துக் கேட்டார்களா என்றும் தெரியவில்லை. ஆனால் இவர்களையெல்லாம் ஏன்.. எதற்கு.. என்று கேட்க முடியவில்லை.

இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகளுக்கு பொதுவானவனாக யாருமே இருக்க முடியாது என்பதுதான். ஒன்று நீ எனக்கு நண்பனா இரு. அல்லது அவனுக்கு நண்பனாக இரு. இரண்டுமே இல்லாவிடில் நீ எனது எதிரிதான் என்பதைச் சொல்லாமல் சொல்கிறார்கள் இரு தரப்பு அரசியல்வியாதிகளும். அந்த வியாதி இப்போது சினிமாவுலகத்தையும் தொற்றிக் கொண்டுள்ளது.

அந்த நிகழ்ச்சிக்கு வராதவர்களே தமிழ் இன உணர்வு இல்லாதவர்கள் என்கிற ரீதியில் பேச்சு எழுவது பிரச்சினை இப்போது எந்தத் திசையில் போகிறது என்பதை உணர்த்துகிறது. ஜாக்குவார் தங்கம் தான் சார்ந்திருக்கும் நாடார் இனத்தினரின் பெயரை போஸ்டரில் அடித்து மிரட்டிக் கொண்டிருக்கிறார். இனப் பிரச்சினையில் உட்புகுந்து இப்போது ஜாதிப் பிரச்சினையாகவும் உருமாறி வருகிறது. இந்த லட்சணத்தில் இதற்கு திருமாவளவனின் ஆதரவும் ஜாக்குவார் தங்கத்துக்காம். இப்படி எதையாவது செய்து வருங்கால முதல்வர் லிஸ்ட்டில் இடம் பிடித்துவிடலாம் என்று தீர்மானித்திருக்கிறார் திருமா. திருமாவின் ஆதரவு ஜாக்குவாருக்கு என்றவுடன் ரஜினிக்கும், அஜீத்துக்கும் ஆதரவு ஈரோட்டு நாயக்கரின் பேரன் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனிடமிருந்து கிடைத்திருக்கிறது. சபாஷ்.. மெல்ல மெல்ல அரசியலும் உட்புகுகிறது. எங்கே போய் முடியும் என்றுதான் தெரியவில்லை.

இதுவரையிலும் ரஜினி என்னும் தமிழின் சூப்பர்ஸ்டாரின் இருப்பிடத்தை அசைக்க முடியாத இயலாமையில் முடியாதவர்கள் பலரும் வைக்கின்ற ஒரு முட்டாள்தனத்தை இன்றைக்கு சினிமாக்காரர்களே முன் வைப்பது கேவலமானது. அவருடைய புகழ் அவர்களுக்கு வேண்டும்.. பணம் அவர்களுக்கு வேண்டும்.. ஆனால் அவர் மட்டும் வேண்டாம் என்பது இவர்களது புதிய சூத்திரமாக இருக்கிறது. வெட்கக்கேடானது.

கலையில் மொழி இல்லை என்று இவர்களுடைய முன்னோர்கள் சொல்லியதால்தான் தென்னிந்திய நடிகர் சங்கத்தை எம்.ஜி.ஆர்., சிவாஜி, நாகேஸ்வரராவ், என்.டி.ராமாராவ், ராஜ்குமார், பிரேம்நஸீர், மது என்று தென்னிந்திய ஹீரோக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஆரம்பித்தார்கள். காலப்போக்கில் அவரவர் தாய் மொழியில் சங்கங்களை ஆரம்பித்தாலும், இந்த மொழித் திரைப்படங்கள் அடுத்த மொழியிலும், அடுத்த மொழித் திரைப்படங்கள் இந்த மொழியிலும் மொழி பெயர்க்கப்பட்டுத்தான் வந்தன. எம்.ஜி.ஆர்., சிவாஜி, ராஜ்குமார், நாகேஷ்வரராவ், பிரேம்நசீர் என்று அக்கால ஹீரோக்கள் அனைவருமே தங்களுக்குப் பொருத்தமான அடுத்த மாநிலக் கதைகளை தனதாக்கி அதில் வெற்றியும் பெற்றியிருக்கிறார்கள்.

இன்றைக்கு ‘தமிழ்..’ ‘தமிழ்’ என்று பேசத் துவங்கியிருக்கும் பெப்ஸியின் தலைவர் குகநாதனே தெலுங்கிலும் எத்தனையோ திரைப்படங்களுக்கு பணியாற்றியிருக்கிறார். தமிழைவிட தெலுங்கில்தான் குகநாதன் கதை விஷயத்தில் ரொம்பவே பிரபலம்.. தெலுங்குலகில் ‘ரிப்பேர் திலகம்’ என்பார்களாம் அவரை. முடிச்சவிழ்க்க முடியாத ‘திரைக்கதை முடிச்சுக்களை அவிழ்ப்பதில் கில்லாடி குகன்’ என்று பாராட்டப்பட்டவர் அவர். ஆனாலும் இன்றைக்கு தான் தெலுங்கிலும் மற்ற மொழிப் படங்களிலும் பணியாற்றியதையும், சம்பாதித்தையும் மறந்துவிட்டு தமிழைத் தூக்கிப் பிடிக்க வேண்டிய நிலைமைக்கு ஆளாகியிருக்கிறார்.

ஆரம்பக் காலத்தில் ஏவி.எம்.மின். ஆஸ்தான கதாசிரியராக இருந்த குகநாதன்தான் எம்.ஜி.ஆர் நடித்த ‘குமரிக்கோட்டம்’, ‘புதிய பூமி’ படங்களுக்கு கதாசிரியர். எஸ்.பி.முத்துராமன் முதல்முதலாக இயக்கிய ‘கனமுத்துப்பாப்பா’வின் கதாசிரியரும், தயாரிப்பாளரும் இவர்தான். சிவாஜியின் ‘ராஜபார்ட் ரங்கதுரை’ படத்தின் தயாரிப்பாளரும் இவர்தான். அஜீத் நடித்த “மைனர் மாப்பிள்ளை” படத்தை இயக்கி தயாரித்ததும் குகநாதன்தான். ஆனால் இதுதான் தமிழில் குகநாதன் தயாரித்த கடைசி படம்.

ஒருவேளை அந்தப் படத்தின் தயாரிப்புப் பணியில் தனிப்பட்ட முறையில் அஜீத்திற்கும், குகநாதனுக்கும் இடையில் ஏதாவது மோதல் இருந்திருக்குமோ என்கிற ரீதியில் பத்திரிகையாளர்கள் இப்போது தோண்டித் துருவிக் கொண்டிருக்கிறார்கள்.

குகநாதனின் சர்ச்சைக்கிடமான அந்தப் பேச்சு சற்று ஓவரானது என்பதை திரையுலகப் பிரபலங்களே ஒத்துக் கொள்கிறார்கள். இப்போதைய சமாதானத்துக்காக அறிக்கையில் கையெழுத்திட்டதாக ராதாரவி சொல்கிறாராம். ஆனாலும் குகநாதனின் அந்த மேடைப் பேச்சு நடிகர்களை இப்போது உசுப்பிவிட்டிருக்கிறது.

பல கண்டன போன்கால்களுக்கும், வருத்தங்களுக்கும் பிறகு நடிகர், நடிகைககளை விழாவுக்கு வந்தே தீர வேண்டும் என்று பெப்ஸி அமைப்பின் பெயரில் குகநாதன் மிரட்டியதாகவும், கட்டாயப்படுத்தியதாகவும் இப்போது நடிகர் சங்கத்தின் மூலம் முறைப்படியான புகார், தயாரிப்பாளர் சங்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளதாம். குகநாதனின் பேச்சு எல்லை மீறியது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள். நடிகர் சங்கத்தின் இந்த நடவடிக்கை சரிவர பத்திரிகைகளில் வெளிவராமல் போயிருக்கிறது.. ஏன் என்று தெரியவில்லை.

அஜீத் இப்போதுவரையிலும் மன்னிப்பு கேட்கும் பேச்சுக்கே இடமில்லை என்று சொல்லி வருகிறார். ஆனாலும் “நமக்குள்ளதான.. ஒரு பேப்பர்ல எழுதி அறிக்கைவிட்டுட்டு ஆக வேண்டியதை பாருங்க.. அடுத்த நாளே எல்லாரும் மறந்திருவாங்க..” என்ற ரீதியில் அவரைச் சமாதானப்படுத்தும் முயற்சிகளும் நடந்துதான் வருகின்றன.

இடையில் அவர் தெம்பாக இருப்பதற்கு இன்னுமொரு அரசியல் காரணமும் உண்டு. தயாநிதி அழகிரிக்கு அடுத்து கால்ஷீட் கொடுத்திருக்கிறார் அஜீத். மன்னிப்பு கேட்காவிட்டால் படத்தை வெளியிடமாட்டோம் என்று திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் போர்க்கொடி தூக்கினாலும், மதுரையின் பட்டத்து இளவரசரால் அந்தத் தடையை நொடியில் தூக்கிவிட முடியும் என்கிறார்கள் சிலர்.

இதற்கு, நயன்தாராவுக்கு முன்பு ஒருமுறை பெப்ஸி அமைப்பு தடை போட்டிருந்தபோது “ஆதவன் படத்தின் ஹீரோயின் நயன்தாராதான்” என்று ஒரு அறிக்கையை வெளியிட்டு சப்தமில்லாமல் பெப்ஸியின் அந்த தடை உத்தரவை குப்பைக் கூடைக்குப் போகச் செய்ததை உதாரணம் காட்டுகிறார்கள் பத்திரிகையாளர்கள்.

தமிழ்.. தமிழ்.. என்று திரையுலகில் இன்றைக்குச் சொல்பவர்களெல்லாம் ஒரு காலத்தில் ஐந்து மொழியிலும் தங்களது படங்களை ஏதாவது ஒரு ரூபத்தில் ஓட வைத்துக் கொண்டிருந்தவர்கள்தான். அன்றைக்கு அவர்கள் சம்பாதிக்க அத்தனை மொழிகளும் வேண்டும்.. அத்தனை மொழிக் கலைஞர்களும் வேண்டும் என்று ஆளாய்ப் பறந்தவர்கள் இன்றைக்கு சூடு குறைந்து, சுதியிறங்கி மைக் மட்டுமே மிச்சம் என்ற நிலைமைக்கு வந்த பின்பு தமிழ் மட்டுமே நம் மொழி என்று பேசுவது நயவஞ்சகத்தனம்.

தாங்கள் கலைஞரை சந்தித்த பிறகும் தங்களுக்கு எதிராகக் கண்டன அறிக்கையும், தடைகள் வருவதையும், தமிழின் உச்ச நட்சத்திரங்களாக ஜொலிக்கின்றபோதும் சங்க அமைப்பின் பெயரில் தங்களை நோக்கி கல்லெறியும் சம்பவங்களைப் பார்க்கின்ற இந்த நேரத்திலாவது ரஜினியும் அஜீத்தும் இதற்கெல்லாம் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பதை புரிந்து கொண்டால் அவர்களுக்கு நல்லது.


ஆட்சி, அதிகாரத்தில் இருப்பவர்களைப் பகைத்துக் கொண்டால் எப்பேர்ப்பட்டவர்களாக இருந்தாலும் அவர்கள் அதோ கதிதான் என்பதை முதலில் கலைஞரும், பின்பு ஜெயலலிதாவும் இப்போது மீண்டும் கலைஞரும் அவ்வப்போது பலருக்கும் உணர்த்தி வந்தாலும் அனுபவப்பட்டவர்களே புரியாததுபோல் இருப்பதும், நடிப்பதும் ஏன் என்றுதான் தெரியவில்லை.

இந்த வெட்கக்கேட்டை செய்த, செய்யும் இருவருமே கலைத்துறையைச் சேர்ந்தவர்கள் என்பதுதான் இந்தக் கலைத்துறையின் துரதிருஷ்டம்.

புகைப்படங்கள் உதவி : http://www.indiaglitz.com