Archive for the ‘யுவகிருஷ்ணா’ Category

சில பதிவர்கள் எழுதுவதெல்லாம் கருமமா..? மதிப்பீடு செய்யும் தகுதி யாருக்கு..?

ஒக்ரோபர் 2, 2009

02-10-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

அருமைத் தம்பி லக்கிலுக் என்னும் யுவகிருஷ்ணாவின் இந்தப் பதிவைப் படித்தேன்.

அந்தப் பதிவின் கடைசியில் இப்படி எழுதியிருக்கிறார்.

“தமிழ் பதிவுகளை எல்லாம் அவ்வளவாக பார்க்க நேரம் கிடைப்பதில்லை. எப்போதாவது எட்டிப் பார்த்தாலும் அரைகுறைகள் அரசியல் பேசுவதை கண்டால் அஜீரணமாக இருக்கிறது. கவிஞர்கள் கவிதையை மட்டுமாவது உருப்படியாக எழுதி தொலைக்கலாம். அரசியல் எழுதுபவர்கள் நாராசமாய் கவிதை எழுத முற்படாமல் இருக்கலாம். இரண்டுமே கண்ணறாவியாக இருக்கிறது.

சில பேர் தினவும் பதிவு போட்டே ஆகவேண்டும். இல்லாவிட்டால் உம்மாச்சி கண்ணை குத்திவிடுமோ என்ற பயத்தில் எந்த கருமத்தையாவது சக்கையாக எழுதி உயிரை வாங்குகிறார்கள். ம்ஹூம். இது ஆவறதில்லே!..”

இப்படி எழுதி தனது ஆற்றாமையைப் போக்கியிருக்கிறார் தம்பி யுவகிருஷ்ணா.

“அரைகுறைகள் அரசியல் பேசுவதைக் கண்டால் அஜீரணமாக இருக்கிறது” என்கிறார் தம்பி யுவகிருஷ்ணா. அவர் யாரை “அரைகுறைகள்” என்கிறார் என்று தெரியவில்லை. வலைப்பதிவர்களில் சிலர் ‘அரைகுறைகள்’ என்றால் “இவர் எப்போதும் நிறைகுடமாகத் தளும்புகிறவரா?” என்ற கேள்வி எழுகிறது. இவருடைய மதிப்பீட்டில் யார் அந்த அரைகுறைகள் என்பதையும் அறிய ஆவலாக உள்ளேன்.

ஏனெனில், இவரும் இதேபோல் அரசியல் கட்டுரைகள் எழுதியவர்தான் என்பது நமது அன்புத் தம்பிக்கு இப்போது வசதியாக மறந்துவிட்டது போலும்.

வலைப்பதிவர்கள் தங்களுக்கு எது வருகிறதோ, எவ்வளவு வருகிறதோ அவ்வளவுக்கு எழுதுகிறார்கள். ஒருவர் ஸ்டைல் ஒருவருக்கு வருவதில்லை. இதில் எதற்கு இந்த ‘அரைகுறைகள்’ என்ற பட்டப் பெயர். ஒருவேளை தான் மட்டுமே நிறைவான அரசியல் பேசும் வலைப்பதிவர் என்று நினைத்துவிட்டாரோ என்னவோ? இந்த மதிப்பீட்டைத் தருவதற்கு யாருக்காவது அத்தாட்சி கொடுத்திருக்கிறார்களா என்ன?

“கவிஞர்கள் கவிதையை மட்டுமாவது உருப்படியாக எழுதித் தொலைக்கலாம்” என்று நமது மாபெரும் கவிஞர் யுவகிருஷ்ணா கவிஞர்களுக்கு அறிவுரைச் சொல்லித் தொலைக்கிறார். வலையுலக் கவிஞர்களெல்லாம் தயவு செய்து கேட்டுத் தொலையுங்கள். இல்லாவிடில் தம்பி உங்களைத் தொலைத்துவிடுவார். அவருடைய அங்கீகாரத்தைப் பெறாமல் யாரும் கவிதை எழுதித் தொலைத்து, அவரை இன்னலுக்கு ஆளாக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

“அரசியல் எழுதுபவர்கள் நாராசமாய் கவிதை எழுத முற்படாமல் இருக்கலாம். இரண்டுமே கண்ணறாவியாக இருக்கிறது” என்று கூச்சப்படாமல் தனது மதிப்பெண்ணை வழங்கியிருக்கிறார்.

இதன்படி, வலையுலகத்தில் இனிமேல் கவிஞர்கள் அரசியல் எழுத வேணடும் என்றால் தம்பியிடம் ஒப்புதல் பெற்று, அவரிடம் படைப்புகளைக் காட்டி விமர்சனங்களைப் பெற்று, அதன் பின் திருத்தங்கள் செய்து கொண்டு கடைசியாக எழுத முன் வரும்படி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. புரிந்து கொள்ளுங்கள்.

“சில பேர் தினவும் பதிவு போட்டே ஆகவேண்டும். இல்லாவிட்டால் ‘உம்மாச்சி’ கண்ணை குத்திவிடுமோ என்ற பயத்தில் எந்த கருமத்தையாவது சக்கையாக எழுதி உயிரை வாங்குகிறார்கள். ம்ஹூம். இது ஆவறதில்லே!” – முத்தாய்ப்பாக இப்படிச் சொல்லி தனது ஆற்றாமையை முடித்துக் கொண்டுள்ளார் தம்பி..

‘தன்னைத் தவிர மற்றவர்கள் எழுதுவதெல்லாம் கருமாந்திரம்’ என்று சொல்வதற்கெல்லாம் ஒரு தகரியம் வேண்டும். அது வலையுலகத்தில் இந்தத் தம்பிக்கு மட்டுமே உண்டு என்பது எல்லாருக்குமே தெரியும்.. ஆனாலும் இப்படியா தனது பொச்செரிச்சலைக் காட்டுவது.

இந்த அளவுக்குத் தைரியமாக தான் யார் என்பதை வெளிக்காட்டிய அவரை நாம் பாராட்டத்தான் வேண்டும். அவருடைய அறிவுரையும், மதிப்பீடுகளையும் நம்பியே வலையுலகம் இருந்து தொலைத்து வருவதால், தயவு செய்து அனைவரும் தம்பியின் விருப்பத்திற்கேற்ப மாறிவிடுங்கள். இல்லையேல் உங்களுக்கு அவருடைய மதிப்பெண்கள் கிடைக்காமல் போய்விடும்.

“இதில் சில பேர் தினமும் பதிவு போட்டே ஆக வேண்டும்” என்கிற வார்த்தையில் இருக்கிற அரசியல் மிக பிரசித்தமானது.

நான் வலையுலகத்திற்குள் நுழைந்த காலத்தில் இந்த அருமைத் தம்பி லக்கிலுக் என்னும் யுவகிருஷ்ணாவும் இதே போல் ஒரு நாளைக்கு மூன்று, நான்கு பதிவுகளைப் போட்டுத் தள்ளிக் கொண்டிருந்தார்.

அதில் மூன்றைத்தான் நேற்றைக்கு ஒரே நாளில் மறுபடியும் மீள்பிரசுரம் செய்திருக்கிறார் ‘டமாரு கொமாரு’ என்று.. இது எப்படி இருக்கு..?

அப்போதெல்லாம் “ஏம்ப்பா வேற வேலை வெட்டியே இல்லையா..? இப்படி ஒரு நாளைக்கு மூணுன்னா எப்படிப்பா..?” என்று கேட்டதற்கு, “சும்மா இருண்ணே.. வலையுலகத்திற்கான அலெக்ஸா ரேக்கிங்ல முதலிடத்தைப் பிடிக்கணும். அப்புறம் என் பிளாக்கை டெய்லி ஆயிரம் பேர் வந்து படிக்கிறாங்க. இது ரெண்டாயிரமா மாறணும்.. அதுதான் எனது லட்சியம்..” என்றார். பரவாயில்லை.. தம்பி தெளிவாத்தான் இருக்கிறார் என்று நினைத்துக் கொண்டேன்.

ஏன் இன்றைக்கு இதேபோல் நினைத்து உழைக்கக் கூடிய வலைப்பதிவர்கள் இருக்கக் கூடாதா என்ன? நேரம் இருக்கும் வலைப்பதிவர்கள் இப்போது தொடர்ச்சியாக எழுதுவார்கள். என் அப்பன் முருகனின் விளையாட்டில் ஒரு கட்டத்தில் எழுத முடியாமல் போகும் சூழல் வரும்போது நிச்சயம் எழுத மாட்டார்கள்.(சமீபத்திய உதாரணம் சக வலைப்பதிவர் திரு.முரளிகண்ணன்) அது அனைவரின் வாழ்க்கையிலும் நிச்சயம் நடந்தே தீரும்.

நான்கூட இடையில் நான்கு மாதங்கள் பதிவு எழுதாமல் நிறுத்தியிருந்தேன். இப்போது எனக்கு நேரம் கிடைக்கிறது எழுதுகிறேன். நேரமில்லையெனில் எழுதமாட்டேன். பொழைப்பை பார்க்க போய்விடுவேன். எப்போது வாய்ப்பு இருக்கிறதோ அப்போது எழுதுவதில் என்ன தவறு..?

நேரம் வாய்க்கும்போதெல்லாம் எதையாவது எழுதுங்கள் என்று சொல்லித்தானே அவரவர்க்கு வலைப்பதிவு.. வலையுலக் கூட்டமே அதற்குத்தானே.. எழுத, எழுதத்தானே எழுத்து வரும்.. பதிவர்கள் எழுதுவதையெல்லாம் ‘கருமம்’, ‘குப்பை’ என்றெல்லாம் சொல்லும் அளவுக்கு, இங்கு யாருடைய எழுத்தும் சோரம் போகவில்லை. அவரவர் பாணி அவரவர்க்கு.. இதில் எதற்கு இந்தத் தம்பிக்கு இவ்வளவு கோபம் என்று தெரியவில்லை..

பதிவர்களின் கருத்து பிடிக்காவிட்டால் படித்துவிட்டு பேசாமல் போய்விடலாம். இதைத்தான் கிட்டத்தட்ட அனைத்துப் பதிவர்களும் கடைப்பிடிக்கிறார்கள். இருக்கவே இருக்கிறது தமிழ்மணத்தின் கருவிப்பட்டை. பிடித்தால் பிடிக்கிறது என்று குத்தலாம்.. இல்லாவிடில் பிடிக்கவில்லை என்று குத்தலாம். இதுவும் வேண்டாமெனில் மூடிவிட்டுப் போய்விடலாம்.

அதைவிட்டுவிட்டு, சக வலைப்பதிவர்களின் எழுத்துக்களையெல்லாம் ‘குப்பை’, ‘கருமம்’ என்று சொல்வதற்கெல்லாம் யாருக்கு என்ன தகுதி இருக்கிறது..?

ரொம்ப ரொம்பத் தவறாக எழுதியிருக்கிறார். மிகவும் வருத்தமடைகிறேன்..!