Archive for the ‘மும்பை’ Category

நின்று விடுமா தீவிரவாதம்..?

திசெம்பர் 6, 2008


டிசம்பர் 6, 2008

என் இனிய வலைத்தமிழ் மக்களே.

மும்பை கொடுத்த அதிர்ச்சியை அனுபவிக்கவும் விடாத அளவுக்கு, வருண பகவான் எனக்குக் கொடுத்த இன்ப அதிர்ச்சியினால் தொடர்ந்து பதிவிட முடியவில்லை மக்களே…

எந்தவொரு தவறிலும் அது நடக்காமல் இருப்பதற்கு ஏதோ ஒருவித வாய்ப்பு இருக்கத்தான் செய்யும். மும்பை கடற்கரையில் கடலில் பயணித்து கரையேறிய அந்நியர்கள் பற்றி மீனவர்கள் தங்களிடம் சொன்ன எச்சரிக்கையை மும்பை போலீஸார் கொஞ்சம் கேட்டிருந்து அவர்களைத் தடுத்து என்ன, ஏதுவென்று கேட்டிருந்தால், ஒருவேளை ஏதேனும் ஒரு இடத்திலாவது அவர்களது படுகொலைகளை தடுத்திருக்க முடியும். என்றைக்கும் போலத்தான் இன்றைக்கும் என்ற அவர்களின் சோம்பேறித்தனமான எண்ணத்தினால் இறந்தவர்கள் எண்ணிக்கை சற்று கூடியிருக்கிறது.

ஒவ்வொரு முறை குண்டுவெடிப்பின்போதும் எதிர்க்கட்சிகள் ஆளும் கட்சியையும், ஆளும் கட்சி எதிர்க்கட்சியையும் காரணமாக்கிக் கொள்வது நமது இந்திய அரசியல் மரபு. அதை இந்த முறையும் பார்க்க வேண்டி வந்திருக்கிறது. “பொடா சட்டம் இல்லாததால்தான் இந்த அளவுக்கு குண்டுவெடிப்புகள் நிகழ்கின்றன..” என்கிறது பாரதீய ஜனதா. பொடா இருந்தாலும் கப்பலேறி வருபவர்கள் வரத்தான் செய்வார்கள். குண்டு வைக்கத்தான் போகிறார்கள். அது இருந்தால் என்ன? இல்லாமல் இருந்தாலென்ன..?

சென்ற முறை போல் அல்லாமல் இந்த முறை உடை மாற்றும் வைபவத்திற்கு இடம் தராமல் சிவராஜ்பாட்டீல் ஒரேயடியாக வீட்டிற்கே போய்விட்டார். சென்ற முறையே அவர் வீட்டிற்கு சென்றிருந்தாலும் இந்த குண்டுவெடிப்பு நிகழத்தான் செய்திருக்கும். குண்டு வைப்பவர்களெல்லாம் முன்கூட்டியே சொல்லிவிட்டா வந்து வைக்கிறார்கள் அவர்களைத் தடுப்பதற்கு..?

சிவராஜ்பாட்டீல் அமைச்சர் பதவியினை ஏற்றதே என்னைப் பொறுத்தவரையில் அரசியல் அநாகரிகம். சென்ற லோக்சபா பொதுத்தேர்தலில் தோல்வியடைந்த அவரை.. தொகுதி மக்களே புறக்கணித்திருக்கும் சூழ்நிலையில் அவரை அழைத்து தங்கத் தாம்பாளத்தில் வைத்து பதவியினை கொடுத்தது அரசியல் அநியாயம். மக்களவை சபாநாயகராக அவருடைய செயல்பாடுகளை மனதில் வைத்தே ‘அன்னை’ அவருக்குக் கருணை காட்டியிருக்கிறார் என்று நான் நினைக்கிறேன். சபாநாயகர் பதவிக்குப் பொருத்தமானவர்கள் தீவிரவாதத்தை அழித்தொழிக்கும் தொழிலுக்கு எப்படி பொருந்திவருவார்கள் என்பதனை ‘அன்னை’ நினைக்க மறந்துவிட்டது ஏனோ தெரியவில்லை. இவருக்குப் பதிலாக ஒரு பெயருக்காகவாவது அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஒரு காங்கிரஸ்காரருக்கு கொடுத்திருந்தாலும், அதனை நமது ஜனநாயகத் தேர்தல் முறைக்கு கிடைத்த பெருமையாகக் கருதலாம். ‘அன்னை’யின் மனது யாருக்குப் புரிகிறது..?

எவ்வளவுதான் மனித உரிமை மீறல்கள் பற்றி பொங்கி எழுந்து பதிவுகளில் எழுதி, பல்வேறு தளங்களில் பேசி வரும் சூழலிலும் அன்றைய பொழுதில் பல்வேறு தொலைக்காட்சிகளின் நேரடி ஒளிபரப்பைப் பார்த்த போது அந்த தீவிரவாதிகள் கையில் கிடைத்தால் விசாரணையே நடத்தாமல் அங்கேயே நிற்க வைத்தே சுட வேண்டும் என்ற எண்ணம்தான் என் மனதுக்குள் எழுந்தது. தவிர்க்கவே முடியவில்லை. அதிலும் இப்போது பிடிபட்டுள்ள தீவிரவாதியின் முகம் காட்டும் வெறியே, நம்மைச் சூழ்ந்துள்ள மத வெறியை நமக்கு அடையாளம் காட்டுகிறது.

அண்டை மண்ணிலிருந்துதான் தீவிரவாதம் கிளம்பி வருகிறது என்பது தெரிந்தாலும் நம்மால் எதுவும் செய்ய முடியாத நிலைமை. போர் என்றால் செலவாகும். தப்பித் தவறி அதில் தோல்வி கிடைத்துவிட்டால் லாயக்கில்லாத கட்சி, முட்டாள்தனமான பிரதமர் என்ற அவப்பெயர் கிடைக்கும். நாளைய பள்ளிப் புத்தகங்களில் நமது பெயர் இடம் பெறாது என்கிற கவலையிலேயே பிரதமரும், கட்சிக்காரர்களும் உயிரை விட வேண்டும்.

எதிர்பார்த்த வெற்றி கிடைத்தாலும் “இவ்வளவு செலவு செய்து, நாட்டின் சொத்தையே காலி செய்துவிட்டுத்தான் ஜெயித்திருக்கிறார்கள். அது யாருடைய பணம்? உன் வீட்டுக் காசு.. என் வீட்டுக் காசு.. மன்மோகன்சிங் வீட்டுக் காசில்ல..” என்ற எதிர்க்கட்சிகளின் கோஷத்திற்கு பதில் சொல்ல வேண்டும்..

இடையில் ஐ.நா.வோ, அமெரிக்காவோ, ஐரோப்பிய யூனியனோ தலையிட்டால் அவர்களையும் சமாளிக்க வேண்டும். ஏற்கெனவே அமெரிக்கா உட்காரச் சொன்னால் படுத்து விடுகிற நிலைமையில் இருக்கும் நமது மன்னமோகனசிங்கிற்கு சப்தமாக பேசவே தைரியம் இல்லை.

இந்த விஷயத்தில் சர்தாரியின் தைரியத்தை நாம் நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும். ஹோட்டலில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளை நமது படையினர் வேட்டையாடிக் கொண்டிருந்தபோதே, வெளியான சில தகவல்களைக் கொண்டு நிச்சயம் நம்மைத்தான் காவு கொடுக்கப் போகிறார்கள் என்பதனை புரிந்து கொண்டார்.

உடனேயே அனைத்து நாட்டுத் தூதுவர்களுடன் ஒரு மீட்டிங். “எங்களுக்கும் அதற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை.. இந்தியா வழக்கமான பல்லவியையே பாடுகிறது..” என்றார். நமது இந்தியத் தரப்பில் அதே அளவிற்கு தைரியமாக தீவிரவாதம் அவர்களது நாட்டில் இருந்துதான் வந்திருக்கிறது என்று சொல்வதற்கு எவருக்கும் துணிச்சல் இல்லை. பிரணாப்முகர்ஜி முதலில் “பாகிஸ்தான்தான் காரணம்” என்று சொல்லிவிட்டு பின்பு “இல்லை.. நான் அப்படி சொல்லவில்லை..” என்று வழக்கமான பல்டி அடித்து நாட்டையே அசிங்கப்படுத்தியதும் நடந்தேறியுள்ளது. அப்புறம் எதுக்கு நமக்கு அரசியல்..?

“20 தீவிரவாதிகளைப் பிடித்துக் கொடுங்கள்..” என்று கேட்டவுடனேயே இதற்கும் சர்தாரியிடமிருந்து டாணென்று பதில் வந்துவிட்டது. “அவர்கள் தவறு செய்திருக்கிறார்கள் எனில், நாங்களே விசாரித்து அவர்களுக்குத் தண்டனை வழங்குவோம். நீங்கள் உங்கள் வேலையைப் பாருங்கள்..” என்று.. இதற்கு ஏதாவது உருப்படியான பதிலை நமது அரசியல்வியாதிகள் சொல்லுவார்கள் என்று நினைத்தீர்களா..?

இந்த மதத் தீவிரவாதத்தை ஒழிப்பது நம்மால் முடியாத விஷயம். பாகிஸ்தான் தலைவர்களுக்கு தீவிரவாதிகள் பற்றிய உண்மை தெரிந்தும் அவர்களாலும் ஒன்றும் செய்ய முடியாமைக்கு காரணம் அரசியல்தான். அடுத்து ஆட்சிக்கு வர வேண்டும் என்ற ஒரே கொள்கைதான் அனைத்து நாட்டு அரசியல்வியாதிகளுக்கும். அவர்கள் மட்டுமென்ன கொள்கைக்காகவா அரியணை ஏறியிருக்கிறார்கள்..?

அமெரிக்காவுக்கு நம் மீதும் நேசம் உண்டு. அதே போல் பாகிஸ்தான் மீதும் பாசம் உண்டு. இரண்டையும் பேலன்ஸ் செய்துதான் நடந்து கொள்வார்கள். அமெரிக்காவே தாவூத் இப்ராஹிமை தீவிரவாதிகள் பட்டியலில் சேர்ப்பித்து 3 ஆண்டுகள் ஆகின்றன. இன்னமும் அவர்களால் அவனது நிழலைக் கூடத் தொட முடியவில்லை. தாவூத் கராச்சியில்தான் கொடி கட்டிப் பறக்கிறான் என்கிறார்கள். இருந்தும் என்ன செய்ய..? வீட்டு முகவரியைக் கண்டுபிடித்த பெருமை மட்டுமே நமக்குண்டு.

பனாமா, மெக்சிகோ நாட்டின் தலைவர்கள் போதை மருந்து கடத்தலில் ஈடுபட்டவர்கள். அவர்களை எங்களிடம் ஒப்படைத்தாக வேண்டும் என்று கேட்டு அவர்களை வளைத்துப் பிடிக்க முடிந்த அமெரிக்காவால் சாதாரண அகதி பிரஜையான தாவூத்தை பிடிக்க முடியாதா..? முடியும்.. ஆனால் அவர்களுக்கு தாவூத்தால் நேரடியான நஷ்டமோ, கஷ்டமோ இல்லை என்பதால் விட்டு வைத்திருக்கிறார்கள்.

தாவூத்தை விட்டு வைத்திருப்பதால், அது எப்போதுமே ஆபத்துதான் என்பதனால், தாவூத்தால் பிரச்சினை எனில் இந்தியா நமது அன்பை எதிர்பார்க்கும். பாகிஸ்தான் நமது ஆதரவுக்காக காத்திருக்கும் என்கின்ற அரிச்சுவடி அரசியல்கூட அமெரிக்கர்களுக்குப் புரியாததா என்ன..?

அவர்களைப் பொறுத்தவரையில் இந்தியாவும், பாகிஸ்தானும் இப்படி கர்புர்ரென்று முறைத்துக் கொண்டிருந்தால்தான் தங்களிடம் உதவி வேண்டி இரண்டு நாடுகளுமே கியூவில் நிற்கும் என்கிற எதிர்பார்ப்பு உண்டு. அதனை அடுத்து வரும் ஒபாமாகூட மாற்ற மாட்டார். வேண்டுமானால் பொறுத்திருந்து பாருங்கள்..

அடுத்து வந்திருக்கிறார் அண்ணன் சிதம்பரம். நிதித்துறையில் ஏராளமாக புதுமைகளையும், நன்மைகளைச் செய்து இந்தியாவை ‘ஊக்கு’வித்துக் கொண்டிருந்த சிதம்பரத்திடம், பிரணாப் முகர்ஜி “வேண்டாம்” என்று ஒதுக்கித் தள்ளியதால் உள்துறை திணிக்கப்பட்டிருக்கிறது. அவரும் வேண்டாவெறுப்பாகவே ஏற்றுக் கொண்டுள்ளதாகத்தான் எனக்குத் தெரிகிறது. கூடவே வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலின் கடைசிக் கட்டத்தில் செங்கொடியினரை அரவணைக்க நேரிடலாம் என்பதால் முன்கூட்டியே அவர்களது அனுதாபத்தை பெறுவதற்காக செங்கொடியினரின் ‘மிக நெருங்கிய நண்பர்’ என்கிற முறையில் சிதம்பரத்திற்கு ‘ஆப்பு’ வைக்கப்பட்டிருக்கிறது என்று நினைக்கிறேன். ஒரே கல்லில் மூணு மாங்கா..

சிதம்பரம் வருவதினால் மட்டுமே குண்டுவெடிப்புகளும், பயங்கரவாதமும் நிறுத்தப்படப் போவதில்லை. ஒரு அரசாங்கமே மறைமுகமாக தீவிரவாதத்தை வளர்த்து விடும்போது நாம் என்ன செய்ய முடியும்..? அடிக்கு அடி என்று இறங்கினாலும் ஆபத்து.. அமைதியாக இருந்தாலும் ஆபத்து என்கிற மத்தளத்தின் நிலைமை நமக்கு.

திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பதைப் போல் தீவிரவாதிகள் அவர்களாகவே திருந்தினால் ஒழிய பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்ட முடியாது.

வேண்டுமானால், இஸ்ரேலைப் போல பொங்கி எழுந்து திடுதிப்பென்று நாலைந்து குண்டுகளை கராச்சியின் மீதும், இஸ்லாமாபாத்தின் மீதும் வீசிவிட்டு எச்சரிக்கை செய்யலாம். தொடர்ந்து போர் வெடித்தால் போரில் குதிக்கலாம். ஆனால் இஸ்ரேலின் ‘எதையும் தாங்கும் மனது’ முன்பே சொன்னது போல் நமக்கில்லை. போர் என்று வந்தாலும் சரி.. போர் இல்லை என்று ஆனாலும் சரி.. நமது தலைவர்களின் அரசியல், கடைசியில் தேர்தலில்தான் வந்து நிற்க வேண்டும். ஆகவே அதுவும் நடக்காது.

வேறென்ன வழி..?

அமைதியாக இப்போது நடத்தியதைப் போல தீவிரவாதிகளைச் சுட்டுத் தள்ளிவிட்டு, உயிர்த் தியாகம் செய்தவர்களுக்கு உதவித் தொகைகளை வாரி வழங்கிவிட்டு இந்தியாவின் ஒற்றுமைக்கு குரல் கொடுப்பதைத் தவிர நம்மால் முடிந்தது வேறில்லை.