Archive for the ‘மாயவலை’ Category

முருகன்தான் காப்பாத்தணும்..!

ஜனவரி 15, 2009

15.01.2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..

‘மாயவலை’ வித்தகர் பா.ராகவன், தனது ‘யுத்தம் சரணம் கச்சாமி’ தொடரைப் படித்துவிட்டு ராஜபக்சே சகோதரர்கள் தன்னை ஏன் இன்னமும் தொடர்பு கொள்ளவில்லை என்ற வருத்தத்திலேயே வண்டியோட்டி வந்தபோது, பிரபாகரன் என்ற பெயருடைய யாரோ ஒருவர் அவர் மீது தற்கொலைத் தாக்குதல் தொடுத்ததால் படுகாயமடைந்து மட்டக்களப்பின் புகழ் பெற்ற மாவுக்கட்டைப் போட்டுக் கொண்டு வீட்டில் தொங்கவிடப்பட்டுள்ளார் என்பதையும் கேள்விப்பட்டபோது மனம் பொறுக்காமல் அவரிடம் தொடர்பு கொண்டு துக்கம் விசாரிக்க நினைத்தேன்.

முடியவில்லை.

பல இடங்களிலும் அவருடைய தொலைபேசி எண் தெரியவில்லை என்றார்கள். சில இடங்களில் “ஏன் இப்ப உன் உடம்பு நல்லாயிருக்கிறது பிடிக்கலையா..? உனக்கெதுக்கு இந்த வெட்டி வேலை..?” என்று அன்பாக விசாரித்தார்கள். ‘கிழக்கு’ திசை நோக்கியிருந்த கூட்டத்தினரோ சொல்லி வைத்தாற்போல் “வர்ட்ட கேளு.. இவர்ட்ட கேளு..” என்று கை காட்டியவர்கள், கடைசியாக, “யுத்தம் சரணம்’ முடியற வரைக்கும் அவர் தலைமறைவா இருக்கப் போறாராம். அதுனால போன் நம்பரை யாருக்கும் தரக்கூடாதுன்னு சொல்லிட்டாரு ஸார்..” என்றார்கள்.

இதைத்தான் பா.ரா.வின் இந்தப் பதிவில் உள்ளதைச் சொல்லி “நலம் பெற வாழ்த்துகிறேன்” என்று என் துக்கத்தை முடித்திருந்தேன்.

அடுத்த நாள் நான் எழுதிய இந்தப் பதிவில் முதல் முறையாக எனது வீட்டுக்குள் வந்து பின்னூட்டம் போட்ட பா.ரா., “சின்னதாக ஒரு பதிவு போட்டால் நானே தொலைபேசியில் அழைப்பேன்..” என்று சொல்லியிருந்தார்.

சரி.. சின்னப் பதிவொண்ணை போடுவோம்.. பேசுவாரான்னு பார்ப்போம் என்று நினைத்து யார் சொன்னா என்னால ‘சின்னப்’ பதிவு போட முடியாதுன்னு..? ஒரு பதிவைப் போட்டேன்.

காலைல போட்ட பதிவுக்கு மனுஷன் ராத்திரி 7.45 மணிக்கு போன் செஞ்சாருங்கப்பா.. நான் அந்த நேரத்துல குளிர் காய்ச்சல் ஆரம்பித்த வேகத்தில் புத்தகக் கண்காட்சியிலிருந்து வீடு வந்து கொண்டிருந்ததால் வாகனங்கள் சப்தத்தால் கேட்காமல் போய்விட்டது.

வீடு வந்து சேர்ந்த பின்புதான் நம்பரை பார்த்து யாரோ என்று நினைத்து பதில் போன் செய்தால், “உண்மைத்தமிழா” என்று ‘தீப்பொறி ஆறுமுகம்’ ஸ்டைலில் உறுமியது பா.ரா.தான். மனிதர் இப்போதும் ‘முன் ஜாக்கிரதை முத்தண்ணாவாக’ வீட்டு போனில் இருந்து அழைத்திருந்தார்.

முதலில் இருவரும் ஒருவரையொருவர் துக்கம் விசாரித்துக் கொண்டோம். நான் கம்பளிப் போர்வையைப் போர்த்திக் கொண்டு படுத்திருப்பதாகச் சொன்னேன்.. “முருகன் ரொம்ப சோதிக்கிறான்ல்ல” என்றார். “ஆமா ஸார்.. அதேதான் ஸார்..” என்றேன்.

நான் நேற்றைக்கும் புத்தகக் கண்காட்சிக்கு சென்று வந்ததை சொன்னேன். அவருடைய எக்ஸலண்ட் வொர்க் ‘மாயவலை’ கிழக்குப் பதிப்பகத்தில் மிரட்டிக் கொண்டிருப்பதையும் சொன்னேன். எல்லாவற்றுக்கும் “ம்..”, “ம்..” என்றார். “நீங்க எனக்கு ஒரு காம்ப்ளிமெண்ட்ரி காப்பி கொடுத்தவுடனே, அதைவிட ஒரு பக்கம் கூடுதலா வைச்சு விமர்சனம் எழுதிருவேன்..” என்ற போது மட்டும் அந்த “ம்..” என்ற ஒரு வார்த்தையும் இல்லாமல் போனது.

“வேலை எப்படி இருக்கு..?” என்றார். “அடுத்த ‘சத்யம்’ யாருன்னு நினைச்சீங்க..?” என்றதும் சிரித்துக் கொண்டார்.

கடைசியாகத்தான் மேட்டருக்கு வந்தார்.

“நீங்க இன்னிக்கு போட்டிருக்குற பதிவுகூட நீளம்தான்..” என்றார். எனக்கு பக்கென்றது..

“ஏன் ஸார்.. அஞ்சு வார்த்தைதான் ஸார்.. பிளாக்கோட அமைப்புனால ரெண்டு வரியா போயிருச்சு..” என்றேன்..

“அதெல்லாம் சரி.. ஆனா பதிவோட நீளத்தை பாருங்க.. ஒரு போட்டோ போட்டிருக்கீங்களே.. அது 6 column. இது நீளமில்ல..” என்றார்.

நான் பேச்சுமூச்சில்லாமல்போய் இந்தத் திடீர் கண்டுபிடிப்பால் சிரித்துத் தொலைத்துவிட்டேன்.

“அதுனால இது நீளமான பதிவுதான்.. ‘சின்னப் பதிவு’ன்னு ஒத்துக்க மாட்டேன்.. வேண்ணா, நாளைக்கு இதைவிட சின்னப் பதிவா போட்டுக் காட்டுக்குங்க.. பார்ப்போம்..” என்றார்.

நம்ம பெயரைக் காப்பாத்தணுமேன்றதுக்காக மீண்டும் ஒரு ‘சின்ன’ பதிவு! பா.ராகவனுக்காக!!! அப்படீன்னு ஒண்ணை போட்டுட்டு ஜெயிச்சுட்டதா நினைக்கிறேன்..

மனுஷன் இதையும் படிச்சிட்டு “பதிவின் தலைப்பு நீளமா இருக்கு”ன்னு சொல்லுவாரோன்னு பயமா இருக்கு..

முருகன்தான் காப்பாத்தணும்..!