03-07-2009
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
பிரபாகரன் மரணம் – உண்மைதான் என்ன..?!!
பிரபாகரனின் மரணம் இன்னமும் சர்ச்சைக்குரிய விஷயமாகவே இருந்து வருகிறது. வாராவாரம் தமிழ்ப் பத்திரிகைகளின் சர்க்குலேஷனை தற்போது பிரபாகரனே தீர்மானித்து வருகிறார். நக்கீரனும், ஜூனியர் விகடனும், குமுதம் ரிப்போர்ட்டரும் கட்டாயமாக ஒவ்வொரு இதழிலும் 2, 3 பக்கங்களை பிரபாகரனுக்காகவே ஒதுக்கி வருகிறார்கள்.
அவர் மரணமடையவில்லை என்று சீமானும், வைகோவும், நெடுமாறனும் இன்ன பிற தீவிர ஆதரவாளர்களும் சொல்லி வருகிறார்கள். இறந்துவிட்டார் என்று எதிர்ப்பாளர்களும், நடுநிலையாளர்களும் சொல்லி வருகிறார்கள். இதில் எப்படி, எப்படியெல்லாம் செய்திகளை வெளியிட்டு பரபரப்பை உண்டாக்கலாம் என்று பத்திரிகைகள் தலையைப் பிய்த்துக் கொண்டுதான் உள்ளன.
நக்கீரனுக்கு பரவாயில்லை. ஜெகத் கஸ்பார் சிக்கியுள்ளார். மனிதர் ஒவ்வொரு வாரமும் புதிய புதிய புகைப்படங்களை வைத்து, புதிய புதிய சம்பவங்களைச் சொல்லி வருகிறார்.
30 பகுதிகளுக்குப் பின்பு இன்றைக்குத்தான் பிரபாகரனின் மகள் துவாரகாவும் சிங்களப் படைகளுடன் சண்டையிட்டு வீர மரணம் அடைந்ததாக கஸ்பார் சொல்லியிருக்கிறார். கஸ்பார் இதை எப்போது, எங்கே போய் முடிப்பார் என்று தெரியவில்லை.. அதற்குள் புத்தகத்திற்கு ஆர்டரே சேகரிக்கத் துவங்கிவிட்டார்கள். வாழ்க வளமுடன்..
ஜூனியர் விகடனும், குமுதம் ரிப்போர்ட்டரும் அனைத்து வலைத்தளங்களையும், இணையத் தளங்களையும் அலசி, ஆராய்ந்து, மேய்ந்து அதிலிருந்து பெயர்த்தெடுத்து செய்திகளைத் தொகுத்தளித்து வருகிறார்கள். ஏதோ அவர்களால் முடிந்தது..
உண்மையாகவே பிரபாகரன் மரணமடையவில்லை எனில் அந்த வீடியோவில் காட்டப்படுபவர் யார் என்பது கேள்விக்குறிதான். இல்லை என்பவர்கள் முக அடையாளம் சற்று மாறுபடுவதைச் சுட்டிக் காட்டுகிறார்கள். எதுவோ.. அவர்கள் நம்பிக்கையுடன் இருக்கட்டும். அது பிரபாகரன்தான் என்று உறுதியாகச் சொல்லும் ஜூனியர்விகடன் அவர் நெற்றியில் விழுந்திருக்கும் கோடாரி வெட்டு எப்படி விழுந்தது என்பதை கதையாகச் சொல்லியிருக்கிறது. வழக்கம்போல அர்ச்சனையை வாங்கிக் கொண்டுவிட்டார்கள்.
ஆனால் ஒன்று மட்டும் உறுதி.. தமிழகத்தில் பிரபாகரனின் மரணத்தை அவரது ஆதரவாளர்கள் ஒத்துக் கொண்டாலோ அல்லது இல்லை என்று நிரூபித்தால் ஒழிய, மறுபடியும் தமிழக மக்களிடையே ஈழம் குறித்தான கோபக்குரல் எழும்ப சாத்தியமில்லை.
———————-
ஒரு ஒப்புதல் வாக்குமூலம்..!
தமிழக சட்டசபையில் சென்ற வாரம் போக்குவரத்து துறை அமைச்சர் நேருவுக்கும், முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் செங்கோட்டையனுக்கும் இடையில் சொற்போர்.
“1000 கோடி, 2000 கோடி என்று போக்குவரத்துக் கழகங்களின் வசூல் தொகை வந்தாலும் எப்போதும் பற்றாக்குறை என்றே கணக்குக் காட்டுகிறீர்களே.. மிச்சம், மீதியிருக்கும் தொகையெல்லாம் எங்கேதான் செல்கிறது..?” என்றார் செங்கோட்டையன்.
பதிலளித்த நேரு, “உங்களது ஆட்சியிலும் இதே தொகையைத்தான் சொன்னீர்கள். இதே கணக்கைத்தான் காட்டினீர்கள்.. அப்போதும் மிச்சம், மீதிருந்த தொகையெல்லாம் எங்கே போனதோ, அதே இடத்திற்குத்தான் இப்போதும் செல்கிறது..” என்றார்.
அள்ளுவதிலும், மிஞ்சுவதிலும், விஞ்சுவதிலும், காட்டிக் கொடுப்பதிலும் கழகத்தினர் ஒருவருக்கொருவர் சளைத்தவர்களில்லை.
ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்றால் சும்மாவா..?
—————————–
கலைஞர்களை மதிக்கத் தெரிந்த கேரள அரசு..!
சென்ற 29-ம் தேதியன்று கொச்சியில் மரணமடைந்த மலையாளத் திரைப்படக் கதாசிரியரும், இயக்குநருமான நீலலோகிததாஸின் இறுதிச் சடங்கை தொலைக்காட்சியில் பார்த்து கொஞ்சம் பெருமிதப்பட்டேன்.
தேசிய விருதையும், மாநில அரசின் விருதையும் பெற்றிருக்கும் அந்தக் கலைஞனுக்கு துப்பாக்கிக் குண்டுகள் முழங்க, போலீஸ் மரியாதையுடன் இறுதிச் சடங்கை நடத்திக் கொடுத்திருக்கிறது கேரள அரசு. பாராட்ட வேண்டிய விஷயம்.
நடிகை ஸ்ரீவித்யாவையும் இதே போன்று போலீஸ் மரியாதையுடன்தான் மேலுலகம் அனுப்பி வைத்தது அப்போதைய கேரள அரசு.
இது போன்று கலைஞர்களை மதிக்கத் தெரிந்த அரசுகளும், மக்களும்தான் நமக்குத் தேவை. படிப்பறிவில் முதலிடம் என்பதோடு கலைஞர்களை கவுரவிப்பதிலும் முதலிடம் பிடிக்கிறது கேரளா.
வாழ்க அம்மாநில அரசும், மக்களும்..!
நம் ஊரிலும்தான் இந்த ஆண்டு மக்களால் போற்றத்தக்க கலைஞர்கள் மூவர் இறந்தார்கள். கண்டு கொண்டார்களா இவர்கள்..?
ம்.. எல்லாத்துக்கும் ஒரு கொடுப்பினை வேண்டும்..!
நமக்கு இம்புட்டுத்தான்..!
——————————
நல்லதொரு தீர்ப்பு..!
இன்றைக்கு டெல்லி உயர்நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது.
“ஓரினச் சேர்க்கை சட்டப்பூர்வமானதுதான்.. அது அரசியல் சட்டத்துக்கு விரோதமானதல்ல..” என்று தீர்ப்பு சொல்லியிருக்கிறார்கள் டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.ஷாவும், நீதிபதி மல்ஹோத்ராவும்.
வரவேற்க வேண்டிய விஷயம்.
புனிதம், புனிதம் என்று நமக்குள்ளேயே ஆயிரத்தெட்டு சாக்கடைகளை வைத்துக் கொண்டு மருத்துவ ரீதியான குணங்களை உடையவர்களை சமூகக் கேடுகள் என்று விமர்சிப்பது எந்தவிதத்திலும் நியாயமில்லை.
ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவதற்கான எண்ணம் ஒருவருக்கு எப்போது, எப்படி ஏற்படுகிறது என்பதை யாராலும் கண்டுபிடிக்க முடியாத சூழல் இருக்கின்றபோது அது பிறப்பிலேயே அப்படித்தான்.. மருத்துவ ரீதியான குணம் அல்லது குறைபாடு என்று நினைத்து நாம் அதை அரவணைத்துச் செல்லத்தான் வேண்டும்.
“உலக நாடுகளை பாருங்கள்.. என்ன வளர்ச்சி பாருங்கள்.. என்ன உழைப்பு பாருங்கள்..” என்றெல்லாம் வாய் கிழியப் பேசும், எழுதும் சிலர் இதை மட்டும் முகத்தைச் சுழித்துக் கொண்டு எதிர்ப்பது கேலிக்கூத்தான விஷயம்.
இது பொதுமக்களிடையே சாதாரண விஷயம் என்ற ரீதியில் வந்தால்தான் இது போன்ற கவர்ச்சிகள் பிஸ்கோத்தாகி வரவிருக்கும் நம்முடைய சந்ததியினரின் கவனம் வேறு பக்கம் திரும்பும். இந்தத் தீர்ப்பை மனதாரக் கை தட்டி வரவேற்கிறேன்.
இதேபோல் பாலியல் தொழில் செய்யும் தொழிலாளர்களுக்கும் அடையாள அட்டை கொடுத்து அவர்களையும் நெறிப்படுத்திவிட்டால் அதுவும் நியாயமானதுதான். எந்த ஆட்சி வந்தாலும், என்ன செய்தாலும் அந்தத் தொழிலை வீழ்த்த முடியாது என்பதால் நாம் அதற்கு இணங்கிப் போவதுதான் புத்திசாலித்தனம்.
ம்.. எல்லாம் நாம பேசலாம்.. நம்ம அரசியல்வியாதிகளுக்கு எங்க இதெல்லாம் தோணப் போகுது..?
—————————–
கிசுகிசு – 1
தமிழர்கள் எங்கே இருந்தாலும் ஒருவர் மாற்றி ஒருவர் காலை இழுத்துவிட்டுக் கொண்டுதான் இருப்பார்கள் என்று நண்டு கதையைச் சொல்லிக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.
அதேபோல் தமிழர்களின் தலையாய்ந்த புண்ணியமார்த்தமான குழுமத்திலும் இப்போது அடிதடி, உட்கட்சிப் பூசல். நான்தான் அடுத்த ஆய்வாளர்.. எனக்குத்தான் பதவி.. அவனுக்குக் கொடுக்கக் கூடாது.. நான் எத்தனை எழுதியிருக்கேன் என்று கண்ணீர் விடாத குறையாக அப்ளிகேஷன்களைத் தட்டிவிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
ஆரம்பித்த கனவான் பாவம்.. விழி பிதுங்கிக் கொண்டிருக்கிறார்.
கிசுகிசு – 2
பல வருடங்களாக வலையுலகத்திற்கு கண்ணாமூச்சி காட்டிக் கொண்டிருந்த வைரஸானவரின் தளத்திலும் இப்போது உட்கட்சிப் பூசல் உச்சக்கட்டத்திற்கு வந்துவிட்டது.
என்னால்தான்.. உன்னால்தான்.. இல்லை அவனால்தான் என்றெல்லாம் மாறி, மாறி எழுதிக் குவித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த லட்சணத்தில் தமிழை இருபத்திரண்டாம் நூற்றாண்டு அழைத்துப் போகப் போகிறார்களாம்.
தமிழ் வளரும்.. தமிழர்கள்..?
——————————–
அவங்க நடிகருங்க.. இவங்க..?
நடிகர் சங்கத்து பக்கம் டீ குடிக்கப் போயிருந்தேன். இரண்டு புள்ளிகள் பேசிக் கொண்டிருந்தார்கள். காது கொடுத்ததில் கிடைத்தது ஒரு பிட்டு நியூஸ்..
“கொச்சில அம்மா பங்ஷன்ல மோகன்லால் மேடைல உக்காந்திருக்கார். மம்முட்டி எதிர்த்தாப்புல கூட்டத்தோட கூட்டமா உட்கார்ந்திருக்கார். ஒருத்தர் பாக்கியில்லே.. அத்தனை நடிகர், நடிகைகளும் ஆஜர் ஆகியிருக்காங்க.. இங்க நம்ம சங்கத்துல வருஷத்துக்கு ஒரு தடவை நடத்துற பொதுக்குழுவுக்கு ஆயுட்கால உறுப்பினர்களே வர மாட்டேங்குறாங்க.. அப்புறம் எப்படிய்யா தமிழ் சினிமா வளரும்..?”
இன்னொருத்தர் சொன்ன பதில்.. “அவங்க மலையாள சினிமாவுக்காக நடிக்க வந்திருக்காங்க.. நம்மாளுக அவங்க குடும்பத்துக்காக நடிக்க வந்திருக்காங்க.. அவ்ளோதான்..”
“விடக்கூடாதுய்யா.. அடுத்த மீட்டிங்ல பாரு.. நான் எப்படி பேசுறேன்னு..?” என்றார் மூத்தவர்.
பார்ப்போம்.. என்ன நடக்கும்னு..?
—————————————–
பதிவர்களின் தாகசாந்தி சந்திப்பு..!
வலையுலக நண்பர் தண்டோரா மணியை பார்க்க அவரது அலுவலகத்திற்குச் சென்றிருந்தேன். மாலை மங்கியதும், அசத்தலான நடை, உடை பாவனையிலும், புல் மேக்கப்பிலும் கேபிள்சங்கர், நித்யகுமாரன், ஜாக்கிசேகர் மூவரும் வந்தனர்.
“சும்மா பதிவர் சந்திப்புதான்.. ஏன் நாங்க பேசக் கூடாதா..? பேசுவோம்ல.. என்ன அண்ணே..?” என்றெல்லாம் கொஞ்சியவர்கள், கெஞ்சியவர்கள் ஒரு மணி நேரம் கழித்து தாகசாந்தியில் ஐக்கியமான பின்பு பேசிய பேச்சு இருக்கிறதே பாருங்க..
எதையுமே எழுத முடியாதுங்கண்ணா.. அவ்ளோ மேட்டரை எடுத்து அள்ளி விடுறாங்க.. பவுன்ஸரா வருது.. சிக்ஸரா பறக்குது.. அண்ணன்ற வார்த்தை யோவ்ல போய் முடிஞ்சு எனக்கே ஜிகர்தண்டா சாப்பிடுற நிலைமை ஆயிருச்சு..
இனிமே இது மாதிரி தாகசாந்தி நிகழ்ச்சியை எல்லாம் ரகசியமா கேமிரால பதிவு பண்ணி வலையேத்தணும்யா.. எத்தனை பேர் வண்டவாளம்லாம் வெளில வரும்னு பார்க்கலாம்.
இதுல எனக்கே உலை வைக்கப் பார்த்தாரு ஜாக்கி. ரெண்டு ‘நெப்போலியனை’ கைல கொடுத்து “சும்மா தூக்கிப் பாருண்ணே”ன்னு சொல்ல, நானும் பாட்டிலை தூக்கிக் காட்டுன உடனேயே போட்டோ புடிச்சு பத்திரப்படுத்தி வைச்சிக்கிட்டாரு. எனக்கா தெரியாது என்ன செய்வாங்கன்னு..? நான் ரகசியமா அதை டெலீட் செஞ்சதுல ஜாக்கி தம்பிக்கு மனம் கொள்ளா வருத்தம்..
‘பிரபல பதிவரின் உண்மை முகம்’ன்ற தலைப்புல பதிவா போட நினைச்சிருந்தவரோட நினைப்புல, மண்ணள்ளிப் போட்டுட்டேன்னு பொறுமிக்கிட்டிருக்காரு.
கொஞ்சம் கூல் வாட்டரா குடிண்ணே..! வயித்தெரிச்சல் அடங்கிரும்..!
——————————–
அசராமல் சிரிக்க வைக்கும் ‘வில்லு..!‘
‘வில்லு’ படம் ஓடி முடித்து டப்பாவில் சுருண்டிருக்கும் இப்போதும் அது தொடர்பான நகைச்சுவைகள் குறைந்தபாடில்லை போலும்.
நண்பர் ஒருவர் எனக்கு மெயிலில் அனுப்பியிருந்த இந்த யூடியூப் படத்தில் இருக்கும் நகைச்சுவை ஏ ஒன் ரகம்.
கச்சிதமான வசனங்கள். அழுத்தமான, நியூஸ் ரீடிங்கை போன்ற படிப்பு, நல்ல குரல் வளத்தேர்வு, பேட்டி, முடிவுரை என்று கலக்கியிருக்கிறார்கள். பாராட்ட வேண்டிய விஷயம். நீங்களும் கேட்டுப் பாருங்கள்..
யூடியூபை வலைத்தளத்தில் இணைப்பது எப்படி என்று எனக்குத் தெரியவில்லை. ஆகவே முகவரியை மட்டும் தருகிறேன். கோபிக்க வேண்டாம்.
http://www.youtube.com/watch?v=9S4cEcwV0IA
——————————–
FACEBOOK-ல் ஒரு கலகம்..!
முகம் தெரியாத நண்பர்கள் தெரிந்தவர்களுடன் சங்கிலித் தொடர்போல தொடர்பு கொண்டபடியே செல்ல இத்தளம் மிகவும் உதவுகிறது. ஆர்க்குட்டைவிட எனக்கு இதனை மிகவும் பிடிக்கிறது.
ஆனால் இதிலும் ஆர்க்குட் போலவே போலித்தனம் தலைவிரித்தாடுகிறது. இதில் கலைஞரின் மகள் கனிமொழியின் பெயரில் ஒரு முகவரி இருக்கிறது. அதில் ஸ்டாலினின் மகன் உதயநிதியின் லின்க் இருப்பதால் பலரும் இணைந்துவிட்டார்கள். கடைசியில் பார்த்தால் அது கனிமொழி கிடையாதாம். யாரோ அவர் பெயரில் நடத்தி வருகிறார்களாம்.
இது போன்று பல பிரபலங்களின் பெயர்களில், பல நடிகைகளின் புகைப்படங்களுடன், பல அடையாளம் தெரியாத பெண்களின் புகைப்படங்களுடன் முகவரிகள் திறக்கப்பட்டிருப்பதாக தெரிந்த நண்பர் தெரிவித்தார்.
நானும் பார்த்து பார்த்துத்தான் இணைந்தபடியுள்ளேன். சிலருடைய நட்பு சுவையாகத்தான் இருக்கிறது. குறிப்பாக சூர்யா, தல அஜீத். நம்முடைய முன்னாள் வலைப்பதிவர் ஐகாரஸ் பிரகாஷ் தினமும் தவறாமல் இங்கு ஆஜராகி ஏதாவது ஒரு தத்துவத்தையோ, அல்லது செய்தியையோ சொல்லியபடியே இருக்கிறார். ஆனால் மூணே வரி.. பேஸ்புக்கின் பிரபலத்திற்கு இதுதான் காரணம் என்று நினைக்கிறேன்.
‘டயானா மரியம் கூரியன்’ என்ற பெயரில் நயன்தாராவின் புகைப்படத்துடன் கூடிய முகவரி ஒன்றும் உள்ளது. அதில் நேற்றில் இருந்து திடீரென்று பிரபுதேவாவும் நயன்தாரா நிற்கும் புகைப்படம் சுயவிவரப் பக்கத்தில் இருக்கிறது. கேட்பவர்களிடமெல்லாம் நான்தான் நடிகை நயன்தாரா என்று பதில் வருகிறது. ஆனால் உண்மையா என்று தெரியவில்லை. விசாரணை கமிஷன்தான் வைக்க வேண்டும் போலும்..!
அசத்துகின்ற நாடோடிகள் கூட்டம்..!
அருமையாக உள்ளது ‘நாடோடிகள்’ திரைப்படம். ‘நிச்சயம் சூப்பர் ஹிட்’ என்று இடைவேளையிலேயே சசிகுமாரின் சட்டையைப் பிடித்துக் கொஞ்சிப் பேசி சொல்லிவிட்டார்கள் ரசிகர்கள்.
இது போன்ற திரைப்படங்கள் இன்னும் நிறைய வர வேண்டும். அப்போதுதான் இந்த ‘அல்டாப்பு’, ‘சிக்ஸ்ட்டி பேக்கு’.. ‘பார்ட்டி பேக்கு’ ஹீரோக்கள் எல்லாம் டங்குவாரு அந்துபோயி வீட்டுக்கு ஓடுவாங்க..
கதைதாங்க ஹீரோ. அதைக் கச்சிதமா சுமக்கிறதுதாங்க ஹீரோத்தனம்.. இந்தப் படத்தின் வெற்றி சொல்லும் ரகசியம் என்னவெனில் இனிமேலும் தமிழ் சினிமா ரசிகனை ஏமாற்ற முடியாது என்பதுதான். வாழ்க சசிகுமாரும், சமுத்திரகனியும்.
எனது முழு நீள விமர்சனத்தை மிகச் சரியாக ‘நாடோடிகள்’ திரைப்படம் வெளியான 30-வது நாளில் வெளியிடலாம் என்று எண்ணியுள்ளேன். என்ன சரிதானே..?
மீண்டும் அடுத்த இட்லி-வடையில் சந்திப்போம்..!!!