Archive for the ‘மனம் திறந்த மடல்’ Category

மனம் திறந்த மடல்-பெறுநர் ‘மேதகு ஜனாதிபதி திரு.A.P.J.அப்துல்கலாம் அவர்கள்’-2

ஜூன் 19, 2007

19-06-2007

முதல் பகுதி இங்கே

சரி.. பரவாயில்லை.. அதை விடுங்க.. காங்கிரஸ்க்கு எப்போதுமே உறுதுணையாய் இருக்கும் உத்திரப்பிரதேசத்தில் இப்போது கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக ஸிங்கில் டிஜிட்டில் எம்.எல்.ஏ.க்களை வைத்திருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு அங்கு சமாதியாகிப் போன தனது கட்சியின் மேல் தாஜ்மஹால் கட்டப் போகும் கிறுக்குத்தனமான ஆசை வந்துவிட்டது.

முலாயம்சிங்கை எந்த அளவுக்கு நெருக்க முடியுமோ அந்த அளவுக்கு நெருக்கிப் பார்த்தார்கள். சிறுபான்மையினரின் சிற்றன்னை நான்தான் என்று சொல்லி நூறு கோடி ரூபாய் அளவுக்கு ‘புண்ணியம்’ சேர்த்த துர்காதேவி மாயாவதியின் புண்ணியத்தால் முலாயமை அசைக்க முடியவில்லை.

எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் இருந்த காங்கிரஸ¤க்கு காலம் கை கொடுத்தது. முலாயம் மீதான ஊழல் வழக்குகளை விசாரிக்கும்படி சுப்ரீம் கோர்ட் அனுமதியளிக்க.. இதைத்தான் எதிர்பார்த்தோம் என்பதைப் போல் மத்திய அரசு குட்டிக்கரணம் போட்டு நிமிர்ந்து நின்றது.

நாளை காலை பல்லு விளக்குகிறோமோ இல்லையோ.. உ.பி. அரசு கலைக்கப்பட்டது என்ற செய்தியைத்தான் கேட்க வேண்டும் என்ற நினைப்பில் நள்ளிரவு மந்திரி சபை கூட்டமெல்லாம் நடந்தது. ஆனாலும் உங்கள் வீட்டுக் கதவு இதற்காகத் திறக்கப்படுமா என்பது இப்போது சந்தேகம் என்று ஆந்தையோ, கழுகோ மன்மோகன்சிங் வீட்டு செக்யூரிட்டிகளிடம் பற்ற வைக்க அப்போதைக்கு உ.பி. அரசு தப்பித்தது.

இதோ இப்போது அங்கே தேர்தலும் நடந்து முடிந்து, கணக்குக் காட்டியிருக்கும் 100 கோடியை நான் வளையல் விற்றுத்தான் சம்பாதித்தேன் என்று ‘உண்மை’யைச் சொல்லிய நவீன பில்கேட்ஸ் மாயாவதி தேவியார் ஆட்சிக் கட்டிலில் ஏறிவிட்டார். இனி உ.பி.யை நீங்களும், நானும், மத்திய அரசும், ஏன் இந்திய மக்களும்கூட மறந்துவிடலாம். அதன் தலைவிதி அவ்வளவுதான்..

ஆனாலும் ஒண்ணு ஸார்.. இந்த நான்கரையாண்டு காலத்தில் நீங்கள் மறைமுகமாக செய்த ஒரேயரு நல்ல காரியம்.. ஜனாதிபதி என்ற ஒருவர் இருக்கிறார். அவருக்கும் கொஞ்சூண்டு அதிகாரம் உண்டு என்பதை அவ்வப்போது லேசாக கோடு போட்டு காட்டியிருப்பதுதான். எது நடந்தாலும் அது நன்மைக்கே என்ற இந்தியாவின் முதியவர்கள் முக்கால்வாசிபேர் மூக்கால் சொல்லும் சொல்லுக்கான அர்த்தத்தை இதுவரையில் நீங்கள் கடைப்பிடித்துவிட்டீர்கள். வாழ்த்துக்கள்..

இரண்டு மாதங்கள் முன்பு பெங்களூருவுக்கு Infosys நிறுவன விழாவில் கலந்து கொள்ள வந்தீர்கள். வந்த இடத்தில் Infosys நிறுவனத்தைப் ‘பிடிக்காத’ பத்திரிகையாளர்கள், “உங்களுக்கு அடுத்த ஜனாதிபதியாக இன்போஸிஸ் தலைவர் நாராயணமூர்த்தி வரலாமா?” என்று கேட்டார்கள். நீங்களும் பத்திரிகையாளர்களின் ‘அறிவு’ புரியாமல் “அற்புதம்.. அற்புதம்.. அற்புதம்..” என்று ஏதோ சாய்பாபா ஸ்டைலில் சொல்லிவிட்டீர்கள்.

அந்த ‘அற்புதம்’ அடுத்த நாளே, இன்னொரு ‘அற்புத’த்தை நிகழ்த்திக் காட்டினார். இன்போஸிஸில் நடந்த ஒரு விழாவின் இறுதியில் நாட்டுப்பண்ணை முழங்காமலேயே நிகழ்ச்சியை முடித்துவிட்டார். அத்தோடு விட்டுத் தொலைந்திருக்கலாமே.. அதைவிட்டுவிட்டு இந்தியாவின் மிகப் பெரும் கோடீஸ்வரர் கெட்டப்பில், “இந்த நிகழ்ச்சிக்கு வெளிநாட்டினரெல்லாம் வந்திருக்கிறார்கள். அவர்களுக்குப் புரிகிற மொழியில் ரவீந்திரநாத் தாகூர் தேசிய கீதத்தை எழுதவில்லை. மொழி புரியாமல் இருக்கும் அவர்களை, எதற்காக இரண்டு நிமிடங்கள் ஆடாமல், அசையாமல் நிறுத்த வேண்டும் என்கிற பகுத்தறிவு காரணத்தால்தான் நாட்டுப்பண்ணை இசைக்கவில்லை..” என்று நமக்கே இதுவரையில் தெரிந்திராத ஒரு விஷயத்தைச் சொன்னார்.

மறுபடியும் பூதம் முருங்கை மரம் ஏறிவிட்டது. பத்திரிகையாளர்கள் இதன் பின் உங்களிடம் இந்த நிகழ்ச்சி பற்றிய கருத்தைக் கேட்டுக் கேட்டு சலித்துப் போனார்கள். ஆனாலும் கேள்வி கேட்டவுடன், அதைக் காதில் வாங்காததைப் போல் நகர்ந்தீர்கள் பாருங்கள்.. ஐயா.. செத்தானுங்கய்யா எங்க வெள்ளித்திரை நடிகர்கள்.. பாருங்க.. நாலரை வருஷ டெல்லி வாழ்க்கை, உங்களுக்கு என்னத்தைச் சொல்லிக் கொடுத்திருக்குன்னு..?

இது மட்டுமா..? ‘உங்களுக்கு சூனியம் வைச்சே தீருவோம்’னு நம்ம தமிழ்நாட்டுக்காரங்களே கடைசி நேரத்துல நினைச்சிட்டாங்க.

இங்கன பொழுது விடிஞ்சு பொழுது போனா, “உலகத் தமிழர்களின் ஒரே தலைவர்’னு கூப்பாடு போடுற கலைஞரின் பொன்விழா நிகழ்ச்சிக்கு நீங்க கண்டிப்பா வந்தே தீரணும்.. வரலைன்னா நாளைலேர்ந்து கலைஞர் மீனம்பாக்கம் போற ரோட்டுக்கே வரமாட்டார்”ன்னு ‘செல்லமா’ கொஞ்சி உங்ககிட்ட டேட் வாங்கிட்டாங்க. அத்தோட நிறுத்திட்டு, கடைசியா அதைச் சொல்லித் தொலைய வேண்டியதுதான..? உடனே பட்டுன்னு பிளாஷ் நியூஸ்ல போட்டுத் தள்ள..

இங்க, நம்ம ‘அம்மா’வுக்கு தூக்கமே போச்சு.. எங்க ஐயா நீங்க வந்துட்டீகன்னா.. தான் இல்லாத சட்டமன்றத்துல, தான் ஆட்சிப் பீடத்தில் இல்லாத சமயத்துல கருணாநிதியை வாழ்த்திட்டீகன்னா, நம்ம பொழப்பு என்னாகப் போகுதோன்னு சொல்லி என்னென்ன செய்யணுமோ அத்தனையையும் செஞ்சாக.. எப்படியும் அந்தச் சமயத்துல உங்க ஆபீஸ் பேகஸ் மிஷின் எல்லாமே ரிப்பேராயிருக்கும்னு நினைக்கிறேன்.. அம்புட்டு பேக்ஸ் வந்திருக்குமே..?

அவுக நியூஸ்ல உங்களுக்காக டெய்லி அஞ்சஞ்சு நிமிஷம் ஒதுக்கி பவ்யமா வேண்டுகோள் விடுத்ததையும் பார்த்தீங்க.. எப்படியும் வந்து சேரப் போறீங்கன்னுதான் நான் நினைச்சிட்டிருந்தேன்.. திடீர்ன்னு “எங்கயோ வெளிநாடு டூர் போறேன். அன்னிக்கு வர முடியாது.. ஸாரி…”ன்னு ஒத்த வார்த்தையச் சொல்லிப்புட்டு எஸ்கேப்பாயிட்டீங்க.. ம்.. தப்பிச்சீங்க ஸார்.. தப்பிச்சீங்க.. இல்லைன்னு வைங்க.. நாளைப் பொழுதுக்கு ஆட்சி மாறி வேற ஆட்சி வந்து.. நீங்களும் இங்கனேயே அண்ணா பல்கலைக்கழகத்துல வேலை பார்த்திட்டிருக்க.. “ஜனாதிபதி மாளிகைல இருந்தவுக, அண்ணா பல்கலைக்கழகத்துல வேலை பார்க்கலாமா?”ன்னு ஏதாவது ஒரு ‘ஒன்றியம்’ கோர்ட்ல கேஸ் போட்டு.. அதுக்காக நீங்க கோர்ட்டுக்கு நடக்க ஆரம்பிச்சு.. எம்புட்டு சிரமம் பாருங்க.. தப்பிச்சிட்டீங்க ஸார்.. தப்பிச்சிட்டீங்க..

(தொடரும்)