Archive for the ‘மனம் திறந்த மடல்’ Category

மனம் திறந்த மடல்-பெறுநர் ‘மேதகு ஜனாதிபதி திரு.A.P.J.அப்துல்கலாம்’-3

ஜூன் 21, 2007

21-06-2007

முதல் பகுதி இங்கே

இரண்டாம் பகுதி இங்கே

‘இன்னுமொரு ஐந்தாண்டுகளுக்கு ஜனாதிபதி மாளிகையில் தங்க உங்களுக்கு அனுமதி உண்டா.. இல்லையா,,?’ என்று கிட்டத்தட்ட நாட்டில் உள்ள அனைத்து சர்வே கம்பெனிகளும் சர்வே எடுத்து சலித்துப் போனார்கள். 78 சதவிகிதமாமே.. நீங்கள்தான் மீண்டும் ஜனாதிபதியாக வேண்டும் என்று ‘சரக்கு’ அடிக்காமலேயே சொல்லிவிட்டார்கள் இந்தியத் திருமக்கள்.

நீங்களும்தான் இன்னொரு அஞ்சு வருஷமும் டெல்லில இருக்கணும்னு ஆசைப்பட்டீங்க.. ஆசைப்பட்டுட்டா மட்டும் போதுமா? அதுக்கு போஸ்டர் அடிக்கிற வேலையை யார் செய்யறது? போதாக்குறைக்கு கல்யாணமும் ஆகலே.. ஏதோ இந்தியால பொண்ணுகளே இல்லாத மாதிரியும், நாட்டுக்காக தியாகம் செஞ்சுட்ட மாதிரியும் வீணாப் போயிட்டீக.. அப்படி ஆயிருந்தாலும் பொஞ்சாதியோ, புள்ளைகளோ யாரைப் புடிக்கணுமோ அவுகளைப் புடிச்சு ஆக வேண்டிய காரியத்தை பண்ணிருப்பாக.. அதுதான் போச்சா..? உக்காந்த இடத்துல இருந்தே உங்களுக்கெதிரா நீங்களே குழியைத் தோண்டிக்கிட்டீகளே சாமி…

இந்தியாவே அன்னைன்னு ஒருத்தரை சொல்லிக்கிட்டிருக்க நீங்க ஒருத்தர் மட்டும் ‘நீங்க பாதி அயல்நாட்டு அன்னைங்கம்மா’ன்னு சொன்னா அவுகளுக்கே கோபம் வராது. அதுலேயும் அவுக சொல்லி, அவுக கட்சிக்காரங்க அல்லாரும் ஓட்டைக் குத்தித்தான நீங்க அங்கன போய் உக்காந்திருக்கீக. இப்ப போய் அப்படி பட்டுன்னு சொல்லலாமா? புடிச்சது முதல் சனியன்.. எம்புட்டு ஆசையா இருந்தாக அன்னை.. புருஷன் உக்காந்த சேர்ல உக்காரணும்னு.. மண்ணை அள்ளிப் போட்டுட்டீகளே.. அந்த ஒரேயரு கோபம்தான்.. இன்னிவரைக்கும் கர்ணனுக்கு கவசகுண்டலம் பறி போன மாதிரி, அவுகளோட ஆதரவு உங்களுக்கு கிடைக்காமயே போயிருச்சு..

உங்களுக்கு கிடைச்ச இரண்டாவது எதிரி கம்யூனிஸ்ட்காரர்கள்தான். கம்யூனிஸ்ட்களுக்கு உங்கள் மீது தீராத கோபமும் உண்டு. தீராத பாசமும் உண்டு. கம்யூனிஸ்ட்கள் நம் வீட்டுத் தந்தைகளைப் போன்றவர்கள். பாசத்தை மனதிற்குள் வைத்துக் கொண்டு கோபத்தை மட்டுமே வெளிக்காட்டுவார்கள்.

நீங்கள் டெல்லியில் குடியேறிய நான்கு மாதங்களுக்கு முன்பு குஜராத்தில் நடந்த கொடுமையிலும் கொடுமையான கலவரத்திற்கு அங்கே ஆட்சி செய்த கொண்டிருந்த பா.ஜ.க. அரசுதான் முதல் காரணம் என்று நாடே சொல்லிக் கொண்டிருக்க, நீங்கள் குஜராத்திற்கு சென்று நரேந்திரமோடியின் நிர்வாகத் திறமையை ‘ஆஹா.. ஓஹோ..’ என்று பாராட்டிவிட்டு வந்தீர்களே.. அன்றைக்கே ‘செங்கொடி’ உங்களுக்கெதிராகப் பறக்கத் தொடங்கிவிட்டது.

‘போதாக்குறைக்கு அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை எப்பாடுபட்டாவது நிறைவேற்றியே தீர வேண்டும்’ என்று துண்டுச் சீட்டெல்லாம் எழுதி ‘பிரதமர் பையனுக்கு’ அனுப்பி வைத்த கொடுமையையும் செய்திருக்கிறீர்கள். இதனையும் அந்த ‘பிரதமர் பையனே’, மதிய விருந்துக்கு தன் வீட்டுக்கு வந்த செங்கொடிக்காரர்களிடம் பெருமையாகச் சொல்லப் போக, அது அவர்களின் பொறுமையை சோதித்துவிட்டது.

பேதி மாத்திரையைவிட கொடிய வார்த்தையாக கம்யூனிஸ்ட்கள் உச்சரிக்கும் அமெரிக்காவுடனான இந்த ஒப்பந்தத்தை ‘நாட்டு நலன்’ அப்படீன்னு சொல்லி நீங்கள் முன் நோக்கி எடுத்துச் சென்றீர்கள்.. அதுவே இன்றைக்கு செங்கொடிக்காரர்கள் உங்களைப் பின் நோக்கி இழுக்க ஒரு காரணமாகவும் போய்விட்டது.

நீங்கள் அப்போதே சுதாரித்திருக்கலாம்.. விட்டுவிட்டீர்கள். அரசியல்ல சுதாரிப்பும், சூதானமும்தான் ஐயா சொத்து..

‘டாக்டர் இராஜேந்திரபிரசாத்தைத் தவிர வேறு ஒருவர் இரண்டாவதாக தொடர்ந்து ஜனாதிபதி பதவியில் அமர்ந்ததில்லை. அந்த வழக்கத்தை நாங்கள் இப்போதும் விரும்பவில்லை’ என்று ஆட்சிக்கு ஆப்பு வைக்கும் ஸ்டைலில் எப்போதுமே பேசும் மார்க்சிஸ்டு தலைவர் பிரகாஷ்காரத், உங்களுக்காக வாக்களித்த இளைய சமுதாயத்தினரின் நெஞ்சில் கொள்ளிக் கட்டையைத் தேய்த்துவிட்டுப் போனார்.

அது மட்டுமா..? தமிழகத்திற்கும் வந்தீர்கள். ‘தமிழய்யாவுக்கு’ விருதும் கொடுத்தீர்கள். ஆனால், ‘அவரால்தான் நான் இந்த உயர்ந்த பதவிக்கு வந்தேன்’ என்று சும்மனாச்சுக்கும்கூட ஒத்தை வார்த்தையை நீங்கள் உதிர்க்கவில்லை. நான் ‘அறிவியல்ல விஞ்ஞானியாக்கும்’ என்று அவரிடமே காலரைத் தூக்கிவிட்டுக் கொண்டீர்கள். அவர் யாரு? சூரியனுக்கே டார்ச் லைட்டான்னுட்டு, ‘நான் அரசியல்ல விஞ்ஞானியாக்கும்’ என்று சொல்லாமல் சொல்லி ‘என் ஓட்டு பெண் குலத்திற்கே’ என்று கவிதை பாடி இப்போது உங்களைக் கவிழ்த்துவிட்டார்.

சொந்த மாநிலத்துக்காரர்.. அவரே கை கழுவிய பிறகு என்ன செய்ய என்று கவலையோடு இருந்தீர்கள். தப்பித் தவறிகூட கடைசி மூன்று மாதங்களில் இந்தியாவின் அன்னை உங்களைத் தனிமையில் சந்திப்பதைப் போல் ஒரு சந்திப்பை வைத்துக் கொள்ளவில்லை. நீங்களும் அதை விரும்பலைன்ற மாதிரிதான் எங்களுக்கும் பட்டுச்சு.

அதான் பிரதீபா பாட்டீல்ன்னு ஒரு தாய்க்குலம் அடுத்து உங்க வீட்டுக்கு குடி வர்றாகன்னு தெரிஞ்சவுடனேயே எங்களுக்கு ஒண்ணும் ஆச்சரியமில்ல.

ஆனாலும் இதை அப்படியே விட்டா நான் எதுக்கு இங்க இருக்கேன்னுட்டு எங்க ‘அம்மா’ இடைல புகுந்தாங்க.. ‘ஒருத்தன் கேடி, இன்னொருத்தன் திருடனா இருக்கான்.. நாங்க தனி ஆளுகளாக்கும்..’ என்று சொல்லாமல் சொல்லி மூன்றாவது அணி அமைத்தார்கள்.

ஆலோசனைக் கூட்டத்தில் முதலில் தமிழகத்து ‘அம்மா’ சொல்லிய இன்னொரு கேரளத்து ‘அம்மா’வான பாத்திமா பீவியை, கேரளா எல்லை தாண்டி யாருக்குமே தெரியாது. வேண்டாம் என்று முகத்தில் அடித்தாற்போல் முலாயம்சிங் சொல்லிவிட்டார். வேறு யாரும் ‘அம்மா’வின் குட்புக்கில் இல்லை. ஏதாவது செய்து குட்டையைக் குழப்பினால்தான் உண்டு என்பதால் அனைவரும் உங்களது பெயரைச் சொல்லித் தப்பித்துவிட்டார்கள்.

பாருங்க.. இவ்ளோ பெரிய நாட்டுல உங்களைத் தவிர வேற யாருமே ஜனாதிபதி பதவிக்குப் பொருத்தமானவரா இல்லைன்னு படிச்ச, பட்டறிவு படைத்த, அனுபவம் வாய்ந்த அந்த மூன்றாவது அணித் தலைவர்களுக்கே தெரியலைன்னா சாதாரண பொது ஜனங்கள் எங்களுக்கு எப்படித் தெரியும் ஸார்..? நீங்களே சொல்லுங்க..

இதுக்கு என்ன ரியாக்ஷன் வருதுன்னு பார்க்குறதுக்காக நீங்களும் 24 மணி நேரம் அமைதி காத்து மறுநாள் அறிக்கை விட்டுட்டீக.. ‘எல்லாரும் என்னை தேர்ல உட்கார வைச்சு ஒண்ணா இழுக்கறதா இருந்தா, தேர்ல ஏறி உக்கார்றேன். இல்லாம ரெண்டு பேர் மட்டும் இழுத்து தேர் குடை சாய்ஞ்சு நான் கீழே விழ தயாராயில்லை’ன்னு தேடி வந்த மூன்றாவது அணித் தலைவர்களிடம் சொல்லிவிட்டீர்கள்..

இங்கனதான் ஒண்ண நீங்க இப்பவும் புரிஞ்சுக்கணும்.. இவுகளும் ஏதோ உங்க மேல இருக்குற பாசத்துனால ஓடி வரலே.. ஆளும் கட்சிக்கும், அவுகளுக்கு குடைச்சல் கொடுத்துக்கிட்டே சம்பந்தி முறை கொண்டாடும் கம்யூனிஸ்ட்களுக்கும் மக்கள் மத்தியில் ஒரு கெட்ட பெயரை உருவாக்கணும்னு செய்றதுதான்.. ஏன்னா.. நீங்கதான் தமிழ்நாட்டுல எம்ஜியாருக்கு அப்புறம் அல்லா பொம்பளைங்க மனசுலேயும் இருக்குற ஆம்பளை இல்லையா.. அதான்.. “நாங்க உங்க அப்துல்கலாமை கொண்டு வரணும்கிறோம்.. இவுக வேணாம்கிறாங்க.. பாருங்க.. பாருங்க”ன்னு ஒப்பாரி வைக்கிறதுதான் இது..

‘இந்திய அன்னை’ இனி நீங்க டெல்லியை காலி செய்ற அன்னைக்குத்தான், உங்க மூஞ்சில முழிக்கிறதுன்னு ஒரே கொள்கைல இருக்காக.. ஸோ அந்த வழி மூடப்பட்டது. கம்யூனிஸ்ட்களோ உங்களை தூக்கிட்டு வந்து அண்ணா யுனிவர்ஸிட்டி ரூம்ல திணிச்சுட்டுத்தான் மறுவேலைன்னு நினைச்சு அம்புட்டு பேரும் ஒண்ணா கும்மியடிச்சிட்டிருக்கா.. ஸோ.. அந்தப் பக்கமும் வழியில்லே..

கூட்டணியை முறியடிச்சு, சிதறடிச்சு ஓட்டைப் பிரிச்சு ஜெயிக்க வைச்சிரலாம்னு உங்ககிட்ட யோசனை சொல்ல.. ‘நீங்க அது வேணாம். என் பேர் ரிப்பேராயிரும்’னு மெல்ல சொல்லி நழுவிருக்கீங்க.. இத இப்ப யோசிச்சு என்ன ஸார் புண்ணியம்..? அவனவன் ஒன்றியச் செயலாளரா ஆகுறப்பவே, ‘நான் அமைச்சரானா நீதாண்டா என் பி.ஏ.’ன்னு சொல்லியே நாலு பேர்கிட்ட மாசாமாசம் மாமூல் கறந்துக்கிட்டிருக்கான்..

நம்ம தமிழ்நாட்டுல பொறந்து, வளர்ந்துக்கிட்ட இந்தச் சூட்சுமம் கூடத் தெரியாம அடுத்த 5 வருஷ ஜெகஜோதியான லைபை கோட்டை விட்டுட்டீகளே ஐயா..

ஆக மொத்தம் ஜூலை 23-ம் தேதியன்று நீங்க டெல்லியைக் காலி செய்யப் போவது கிட்டத்தட்ட உறுதியாகிருச்சு.

கிளம்பறதுக்கு முன்னாடி சில கோரிக்கைகளை உண்மைத்தமிழன் உங்ககிட்ட வைக்குறான்.. உங்களால் கண்டிப்பாக முடியும்.. நீங்கள் மனம் வைத்தால் நிச்சயம் செய்யலாம்.

முதல் கோரிக்கை : உங்கள் டேபிளில் பல வருடங்களாகத் தூங்கிக் கொண்டிருக்கும் தூக்குத் தண்டனை கைதிகளின் கருணை மனுக்கள் அனைத்திலும், “அனைத்து கருணை மனுக்களையும் ஏற்றுக் கொள்ளலாம்” என்று குறிப்பிட்டு எழுதி அதை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துவிட்டு, வெளியிலும் சொல்லி விடுங்களேன். ப்ளீஸ்..

இரண்டாவது கோரிக்கை : பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதாவை அரசியல்வாதிகள்தான் திட்டமிட்டு நிறைவேற்றவிடாமல் தடுத்தார்கள்; இப்போதும் தடுக்கிறார்கள் என்று வெளிப்படையாகச் சொல்லுங்கள்.

மூன்றாவது கோரிக்கை : ஆதாயம் தரும் பதவி பற்றிய மசோதாவில் எனக்கு எந்தவிதத்திலும் உடன்பாடில்லை. ஆனாலும் நமது அரசியல் சட்டம் ஜனாதிபதியான எனக்கு என்ன அதிகாரம் என்று சொல்லியிருக்கிறதோ அதற்குக் கட்டுப்பட்டு நான் கையெழுத்திட்டேன். என் மனமொப்ப அதில் கையெழுத்திடவில்லை என்பதை பகிரங்கமாகச் சொல்லுங்கள்..

நான்காவது கோரிக்கை : இதேபோல்தான் பொடா சட்டத்திலும் எனக்கு ஒப்புதல் இல்லை. ஆனாலும் கடமையின் காரணமாக நான் கையெழுத்திட்டேன். அதற்காக இப்போதும் வருத்தப்படுகிறேன். பொடா சிறைவாசிகள் சூழ்நிலைக் கைதியான என்னை எப்போதும் பெருந்தன்மையுடன் மன்னிக்க வேண்டும் என்று பெருந்தன்மையாகப் பேசுங்கள்…

ஐந்தாவது கோரிக்கை : “இன்னுமொருமுறை என்னை மாதிரி அறிவுஜீவிகள், மக்கள் அபிமானம் பெற்றவர்கள் யாருமே இந்த நாட்டில் ஜனாதிபதியாக முடியாது. ஆகவும் இந்த அரசியல்வாதிகள் விடவேமாட்டார்கள்…” இப்படி வெளிப்படையாகச் சொல்லிவிட்டு பிளைட் ஏறுங்கள் சென்னைக்கு..

வருக.. வருக.. என இருகரம் கூப்பி வரவேற்க, வந்தோரை வாழவைத்த, வாழ வைக்கும் தமிழகம் காத்துக் கொண்டிருக்கிறது.

எனக்கும் வேறு வழியில்லை. யாரிடமாவது இப்படிச் சொல்லிப் புலம்ப வேண்டும் என்று நினைத்தேன். புலம்பிவிட்டேன்..

உங்கள் காதுக்கு வந்து சேர்ந்தால் வந்தது என்று சொல்லி ஒரு கடிதம் அனுப்புங்கள். அந்த ஆறுதலாவது எனக்குக் கிட்டட்டும்.

நன்றி..

ஜெய்ஹிந்த்..

(முற்றும்)