என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
எழுதியே தீர வேண்டுமென முனைந்தால் சுமாராக 40 பக்கங்களுக்கு குறையாமல் எழுதக்கூடிய அளவுக்கு, பல பாடங்களை எனக்குக் கற்றுக் கொடுத்த நிகழ்வு ஒன்று கடந்த ஓராண்டுக்கு முன்பாக நிகழ்ந்தது.
பல வருடங்களாக என் மனதில் இருந்த ஒரு கருவை எழுத்தாக்கி, அதனை விரிவுபடுத்தி, செம்மையாக்கி ஒரு குறும்படமாக என் மனதிலேயே தேக்கி வைத்திருந்தேன்.
மனதில் நிறுத்தி வைத்திருந்த அக்குறும்படத்தைத்தான் 1 வருட காலத்திற்கு முன்பு, மிகுந்த போராட்டத்திற்குப் பின்னால் படச்சுருளில் படம் பிடித்தேன்.
வழி தெரியாதவன் விசாரிக்க பல வழிகள் இருக்கும் என்பதைப் போல, குறும்பட போட்டிகளுக்கு மட்டும் எனது படத்தினை அனுப்பிவிட்டு அமைதியாகி விட்டேன்.
என்ன காரணமோ தெரியவில்லை… அதனை எனது வலைப்பதிவில் போடுவதற்கு எண்ணமே வரவில்லை.
வலைப்பதிவர்களில் சிலருக்கு மட்டுமே நான் எடுத்திருந்த இந்த குறும்படம் பற்றித் தெரிந்திருந்தாலும், இதுவரையிலும் அந்தச் சிலரில் 4 பேருக்கு மட்டுமே இதனைப் பார்க்கும் கொடுமையை நான் கொடுத்திருந்தேன்.
வலையுலக வசிஷ்ட மாமுனி திரு.மா.சிவக்குமார், ‘தடாலடி புண்ணியவான்’ திரு.ஜி.கெளதம், ‘இனமானப் பேராசிரியர்’ திரு.தருமி, திருமிகு.ஓசை செல்லா ஆகிய நான்கு பேர் மட்டுமே இதுவரையில் கஷ்டப்பட்டு இக்குறும்படத்தைப் பார்த்த புண்ணியவான்கள்.. வாழ்க வளமுடன்..
இதனை வலைப்பதிவில் ஏற்றுவதற்குத் தேவையானதைப் போல மாற்றம் செய்து கொடுக்கும்படி திருமிகு.ஓசை செல்லாவிடம் 6 மாதங்களுக்கு முன்பே சொல்லியிருந்தேன். பின்பு நானே அதனை மறந்துவிட்ட காரணத்தால், திருமிகு.ஓசை செல்லாவிடம் இப்போது நான் இதுபற்றி கேள்வி ஏதும் கேட்க முடியாது..
வலைப்பதிவர்கள் மன்னிக்க வேண்டுகிறேன்..
இந்த மன்னிப்புக்கு காரணம் வேறு விஷயம்..
இதுவரையிலும் தப்பித்துக் கொண்ட வலைப்பதிவர்கள் தற்போது எனது குறும்படத்தை பார்க்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறார்கள் என்பதால் அவர்களிடம் எனது மன்னிப்பை முன்பே கேட்டு விடுகிறேன்.
வருகின்ற 25-05-08, ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு 8.30 மணியளவில் மக்கள் தொலைக்காட்சியில் நான் எழுதி, இயக்கிய ‘புனிதப்போர்’ என்னும் குறும்படம் ஒளிபரப்பாக உள்ளது என்பதனை மிக்க வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
வருகின்ற ஞாயிற்றுக்கிழமையன்று எனது குறும்படத்தை நீங்கள் பார்க்க முடியாமல் போனாலும் எனது கிரகமோ, அல்லது எனக்கு நடந்து கொண்டிருக்கும் காலத் திசையோ உங்களை விடப் போவதில்லை..
அடுத்த வெள்ளிக்கிழமை அதாவது வருகின்ற 30-05-2008 அன்று பகல் 12.30 மணியளவில் மீண்டும் ‘அந்தக் கொடுமை’ மக்கள் தொலைக்காட்சியில் அரங்கேற உள்ளதால்..
வருகின்ற ஞாயிற்றுக்கிழமை பார்க்க முடியாதவர்கள் அதற்கடுத்த வெள்ளிக்கிழமையன்றாவது பார்த்துத் தொலைக்குமாறு அன்போடும், பண்போடும், பணிவன்போடும் கேட்டுக் கொள்கிறேன்..
பார்க்க விரும்பும் அன்பு வலையுலக உள்ளங்கள் முடிந்தால் பாருங்கள்..
பார்த்துவிட்டு உங்களது கருத்துக்களை நேரமிருந்தால், தங்களுக்கு ஓய்வு கிடைத்தால், தங்கள் மனதுக்கு ஏதாவது தோன்றினால் உள்ளதை உள்ளபடியே எனக்கு எழுதியனுப்புங்கள்..
அல்லது வலைப்பதிவு செய்யுங்கள்.. அல்லது இனிமேல் டிவி நிகழ்ச்சியையே பார்க்க மாட்டேன் என்றோ, அல்லது இனிமேல் என் வாழ்க்கையில் குறும்படம் பக்கமே போக மாட்டேன் என்றோ சபதமெடுத்துக் கொள்ளுங்கள்.
எப்படியிருப்பினும் என் அப்பன் முருகப்பெருமான் உங்களுக்கும், உங்களது குடும்பத்தினருக்கும் நீண்ட ஆயுளை வழங்கி இன்னும் இது போன்ற நிறைய குறும்படங்களை பார்க்கும் வாய்ப்பையும் வழங்குவான் என்பதனை அவன் சார்பாகச் சொல்லி விடைபெறுகிறேன்.
டிஸ்கி : இந்த நிகழ்ச்சி நிரல் கடைசி நேர மாறுதலுக்குட்பட்டது என்பதனையும் மக்கள் தொலைக்காட்சி நிறுவனத்தார் குறிப்பிடுகின்றனர்.
எனவே, ஒருவேளை அந்த மாறுதலினால் எனது குறும்படம் அந்த நேரத்தில் திரையிடப்படவில்லையெனில், பதிவர்கள் என் மேல் கோபப்பட வேண்டாம்.. தப்பித்ததாக நினைத்துச் சந்தோஷப்பட்டுக் கொள்ளுங்கள்..