Archive for the ‘மக்கள் டிவி’ Category

டிவி சேனல்களுக்கு ஆப்பு..! – சினிமா தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தடா உத்தரவு..!!!

ஒக்ரோபர் 6, 2009

07-10-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

எப்படி எங்களது பெயரை ‘அந்த’ லிஸ்ட்டில் சொல்லலாம் என்று நடிகைகள் பலரும் கொதித்துப் போய் புவனேஸ்வரியை கரித்துக் கொண்டிருக்க.. திரையுலகம் இதன் பிரச்சினையால் தகதகவென புகைந்தபடியேதான் உள்ளது.

இதற்கிடையில் வேறொரு பொருமல் வேறொரு இடத்தில் அமுங்கிக் கிடக்கிறது. பொருமிக் கொண்டிருப்பது சில தனியார் தொலைக்காட்சிகள்தான்.

தமிழ்நாட்டில் பெரிய கையாக இருக்கும் சன், கலைஞர், ஜெயா, ஜீ தமிழ் ஆகிய தொலைக்காட்சிகளைத் தவிர மற்ற சேனல்களை முற்றிலுமாக ஒழித்துக் கட்டும் முயற்சியில் முன்னணியில் உள்ள இரண்டு சேனல்கள் கண்ணும், கருத்துமாக இறங்கியிருப்பதாக மற்ற சேனல்கள் வட்டாரத்தில் கோபத்துடன் முணுமுணுக்கப்பட்டு வருகிறது.

கடந்த 1-ம் தேதி சென்னையில் நடந்த தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட ஒரு முடிவை மேற்கோள்காட்டித்தான் பல சேனல்காரர்கள் கண்ணைக் கசக்குகிறார்கள்.

“ஒவ்வொரு டிவி சேனலும் ஆண்டுக்கு நேரடி தமிழ்ப் படங்களில் 10 முதல் 15 படங்களாவது வாங்க வேண்டும். அப்படி வாங்காத சேனல்களுக்கு வரும் பொங்கல் முதல் எந்தவித ஒத்துழைப்பும் வழங்குவதில்லை”

– இது அந்தப் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் ஒன்று.

இப்போதே சன் தரப்பிற்கும், கலைஞர் தரப்பிற்கும் இடையில் படங்களை வாங்குவதில் போட்டோபோட்டி. இவர்கள் போட்டியிடுவது முதல் தரமான திரைப்படங்களைத்தான்.. பெரிய பேனர்கள், பெரிய நடிகர்கள் என்ற தரத்துடன் கூடிய திரைப்படங்களை இந்த சேனல்கள் இரண்டுமே வாங்கிவிடுகின்றன.

இதற்கு அடுத்த நிலையில், ஏதாவது ஒரு பிரிவில் முன்னணி வகிக்கும் நடிக, நடிகையரை கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் திரைப்படங்களை ஜெயாவும், ஜீ தமிழ்த் தொலைக்காட்சியும் வாங்கி வருகின்றன.

ஒரு வருடத்திற்கு 85 திரைப்படங்கள் வெளியானால் அதில் மாதத்திற்கு ஒன்று அல்லது இரண்டு திரைப்படங்களே ஹிட்டாகின்றன. அவற்றை சன்னும், கலைஞரும் சுருட்டிக் கொள்கின்றன. மிச்சம் இருப்பவற்றில் 8 அல்லது 9 ஆகியவை விளம்பர நிறுவனங்களிடம் பெயர் சொல்லவாவது உதவும் என்பதால் அவற்றை ஜெயாவும், ஜீ தமிழும் வாங்கிக் கொள்கின்றன.

மிச்சமிருக்கும் கிட்டத்தட்ட 60 திரைப்படங்களில், அனைத்தையுமே பெரிய சேனல்கள் வாங்குவதில்லை. காரணம், தங்களது சேனலில் வெளியிடவும் ஒரு குறிப்பிட்டத் தகுதி வேண்டும் என்று அவைகள் நினைப்பதுதான்.

உதாரணத்திற்கு சன் தொலைக்காட்சி ‘நாடோடிகள்’ திரைப்படத்தை ஒளிபரப்பும்போது, கலைஞர் தொலைக்காட்சி ‘சிவகிரி’ திரைப்படத்தை திரையிட்டால் சேனல் என்னவாகும்..? இது போன்ற போட்டா போட்டியை மனதில் கொண்டு அவைகள் வியாபாரம் செய்ய முடிந்தவைகளை மட்டுமே அள்ளிக் கொண்டு போகின்றன.

வியாபாரத்தை அள்ள முடியாத சில நோஞ்சான் படங்கள் ஒரு லட்சம், 2 லட்சம் என்றுகூட விற்க முடியாத சூழலில் மாட்டிக் கொள்கின்றன. இவர்கள்தான் சிறு தயாரிப்பாளர்கள். ஒரு பெரிய நோட்டில் படம் எடுத்தவர்கள் இந்தத் தயாரிப்பாளர்கள்.

தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இவர்களது எண்ணிக்கைதான் அதிகம். பெரிய அளவுக்கு காசை இறக்குபவர்கள், படத்தின் டிவி ரைட்ஸிலும் காசை அள்ளிக் கொள்ள.. தங்களது படத்தினை 1 லட்சத்திற்குக்கூட விற்க முடியாமல் தவிக்கும் தயாரிப்பாளர்களும் இருக்கின்றனர்.

இவர்களது இயலாமையை தங்களுக்குச் சாதகமாக்கிக் கொள்ளும் சில சேனல்கள், அடிமாட்டு விலைக்கு சில திரைப்படங்களை வாங்கி வைத்துக் கொண்டு நேரம் கிடைக்கும்போது சப்தமில்லாமல் வெளியிட்டுக் கொள்கின்றன. இப்படிகூட விற்க முடியாத திரைப்படங்களின் தயாரிப்பாளர்கள்தான் கண்ணைக் கசக்கிக் கொண்டிருக்கின்றனர்.

அவர்களுக்கு உதவும் பொருட்டு தயாரிப்பாளர் சங்கம் தங்களது உறுப்பினர்களின் விற்க முடியாத திரைப்படங்களை பெரிய சேனல்களிடம் சொல்லி பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடுகளை செய்துள்ளது.

கருவாடுக்கு இருக்கும் மவுசு, எருமை சாணத்துக்கு கிடையாதே.. அவைகள் எங்களுக்கு வேண்டாம் என்று பெரிய சேனல்கள் சொல்லிவிட்டதால் வேறு சிறிய சேனல்களுக்கு தங்களது திரைப்படங்களைத் தர வேண்டிய கட்டாயம் இந்தத் தயாரிப்பாளர்களுக்கு..

சிறிய சேனல்களான ராஜ், வசந்த், மெகா, விண், இமயம் ஆகிய சேனல்கள் ‘ஒரு முறை மட்டுமே படத்தைத் திரையிட்டுக் கொள்கிறோம்’ என்று ஒரு வர்த்தக உடன்பாட்டை செய்து அதற்கு வெறும் பத்தாயிரம், பதினைந்தாயிரம் என்று அடிமாட்டு விலைக்கு பேரம் பேசி வாங்கியிருக்கிறார்கள்.

இதையெல்லாம் பார்த்து மனம் வெதும்பிப் போயிருக்கும் அவர்களுக்கு ஊக்கம் கொடுக்கும்பொருட்டுதான் இந்த புதிய விதிமுறையை தயாரிப்பாளர் சங்கம் கொண்டு வந்திருக்கிறது என்று சொன்னாலும் பெரிய இரண்டு சேனல்களின் மறைமுக ஆதரவும் இத்திட்டத்திற்கு உண்டு என்கிறார்கள் தயாரிப்பாளர்கள் வட்டாரம்.

சிறிய சேனல் ஒன்று, குறைந்தபட்சம் 10 திரைப்படங்களையாவது வாங்கியே ஆக வேண்டுமெனில் ஆண்டுக்கு 15 முதல் 20 லட்சம் ரூபாயையாவது இதற்குச் செலவழித்தாக வேண்டும்.

‘விண் டிவி’யில் இப்போது விளம்பரக் கட்டணம் 100 ரூபாய்க்கெல்லாம் கிடைக்கிறது.. ‘வசந்த் டிவி’யில் 1000 ரூபாய், ‘மெகா டிவி’யில் 500 ரூபாய், ‘ராஜ் டிவி’யில் 300 ரூபாய் என்று எதை எடுத்தாலும் நூறு ரூபாய் கணக்கில் விளம்பரங்கள் வாங்கப்படுகின்றன. இவர்களும் ஆண்டுக்கு இவ்வளவு பெரிய தொகையை போட்டு புரட்ட வேண்டுமெனில் சத்தியமாக முடியாது.

ஏனெனில் புதிய திரைப்படமாகவே இருந்தாலும் இவர்களுக்கு வருகின்ற விளம்பரம் என்னவோ கத்திரிக்காய் வியாபாரம் மாதிரிதான்.. வாராவாரம் இப்படி நஷ்டக்கணக்கில் புதிய திரைப்படங்களை ஒளிபரப்புவது இந்த சேனல்களால் முடிகிற காரியமா என்பது தெரியவில்லை.

இப்போதே ‘விண் டிவி’யும், ‘தமிழன் டிவி’யும், தமிழ்த் திரைப்படங்களை ஒளிபரப்புவதில் மிகுந்த சுணக்கம் காட்டுகின்றன. தயாரிப்பாளர்கூட பார்த்திராத திரைப்படங்களைக்கூட வாங்கி ஓட்டி வருகின்றன. ஆனால் சினிமா கிளிப்பிங்ஸ்குகளை மட்டுமே நாள் முழுக்க திருப்பித் திருப்பிக் காட்டி வருகின்றன.

மக்கள் டிவியில் தமிழ்த் திரைப்படங்கள் அறவே கிடையாது. அவர்கள் ரஷ்ய திரைப்படங்களை மட்டுமே ஒளிபரப்பி வருகிறார்கள். அதோடு கூடவே திரைப்படங்கள் தொடர்பான நிகழ்ச்சிகள் அவற்றில் இல்லை என்பதால் அவர்கள் லிஸ்ட்டிலேயே இல்லை.

இதில் ‘விஜய் டிவி’, சுப்பிரமணியசுவாமி மாதிரி.. நடுவாந்திர நிலைமை. தன்னிடமிருக்கும் திரைப்படங்களையே திருப்பித் திருப்பிப் போட்டு மக்களை இம்சித்து வருகிறது. ‘கோழி கூவுது’ திரைப்படம் இதுவரையில் 100 முறையாவது இந்த டிவியிலேயே ஒளிபரப்பாகியிருக்கும். விஜய் டிவி புதிய திரைப்படங்களை வாங்குவதற்கு விருப்பமில்லாமல் ‘ஒன் டைம் டெலிகாஸ்ட்’ என்கிற ரீதியில்தான் திரைப்படங்களை வாங்குவதற்கு முன் வருகிறது. ஸோ இதற்கும் ஆப்புதான்..

இப்போதைக்கு பெரிய சேனல்களுக்கும் விளம்பரக் கட்டணங்கள் குறைந்து கொண்டேதான் போகின்றன என்கிறார்கள். பல்வேறு சேனல்கள் வந்துவிட்டதால் டி.ஆர்.பி. ரேட்டிங்கும் முன்பு போல் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் வராமல் போகின்றன என்கிறார்கள்.

இந்த நிலைமையில், இந்தக் கட்டுப்பாட்டுக்கு ஒத்து வராத சேனல்களுக்கு சினிமா டிரெய்லர்கள், கிளிப்பிங்ஸ், பாடல் காட்சிகள் வழங்கப்படுவது, பட பூஜை மற்றும் பாடல் வெளியீட்டு விழாவுக்கான அனுமதி ரத்து என்று ‘தடா’, ‘பொடா’ சட்டப் பிரிவுகளையெல்லாம் மிஞ்சி போடப்பட்டிருக்கும் இந்தத் தடை உத்தரவால் பணத்தை இறக்க வேண்டிய நிலைமைக்கு சேனல்களைத் தள்ளியிருக்கிறது தயாரிப்பாளர்கள் கவுன்சில்.

இந்த சேனல்கள் அனைத்துமே திரைப்படங்கள் தொடர்பான நிகழ்ச்சிகளை வைத்தத்தான் கல்லா கட்டிக் கொண்டிருக்கின்றன. புதிய பாடல்களும், கிளிப்பிங்ஸ்களும் கிடைக்கவில்லையெனில் ஊத்தி மூட வேண்டியதுதான்.. இதைத்தான் பெரிய சேனல்கள் ஆவலுடன் எதிர்பார்ப்பதாகச் சொல்கிறார்கள்.

இதில் இவர்கள் தேறுவார்களா இல்லையென்றால் மூடுவிழா நடத்துவார்களா என்பது தயாரிப்பாளர்கள் கவுன்சில் பொங்கலுக்குப் பின்பு நடந்து கொள்ளப்போகும் விதத்தை பொறுத்ததுதான் அமையும்..

இப்படியொரு நிலைமை வந்தால் பல நடுவாந்திர திரைப்படங்களுக்கான விளம்பரங்கள் தம்மிடம்தான் வரும். அப்போது அவற்றை வளைத்துப் பிடிப்பது சுலபம் என்று பெரிய சேனல்களின் எண்ணம். இந்த எண்ணத்திற்கு உரம் போட்டு, பயிர் வளர்த்தவர்கள் தற்போதைய தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாகிகள்.


இவர்களுக்கு ஒரு எண்ணம்.. அடுத்தத் தேர்தலிலும் தாங்கள் சுலபமாக ஜெயித்துவிட வேண்டும் என்று. அதற்காக சங்கத்தில் அதிகமான எண்ணிக்கையில் இருக்கும் சாதாரண சிறிய தயாரிப்பாளர்களுக்கு உதவுவதாகச் சொல்லி இப்படியொரு இக்கட்டை உருவாக்கியிருப்பதாக பத்திரிகையாளர்கள் கருதுகிறார்கள்.

அதோடு கூடவே “100 தியேட்டர்களுக்கு மேல் ரிலீஸ் செய்யப்படும் படங்களுக்கான சிடி, டிவிடி உரிமையை படம் வெளியான 100வது நாளிலும், 100 தியேட்டர்களுக்குக் குறைவான தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்படும் திரைப்படங்களின் சிடி, டிவிடி உரிமையை படம் வெளியான 50-வது நாளிலும் விற்கலாமா?” என்பது குறித்தும் தயாரிப்பாளர் கவுன்சில் யோசித்து வருகிறதாம்.

இது பற்றி வினியோகஸ்தர்கள் சங்கம், தியேட்டர் உரிமையாளர்களிடம் பேசி முடிவு செய்யப்படும் என்று சொல்லியிருக்கிறார்கள்.

இப்படியொன்றை கொண்டு வந்தால் வசூல் சுத்தமாக குறையும் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை. ஒரு மூணு மாசம் பொறுத்துக்க.. மெதுவாக பார்த்துக்கலாம் என்று பலரும் தியேட்டர்களை புறக்கணிக்கப் போவது நிச்சயம்.

இதேபோல் ஒரு மூணு மாசம் பொறுத்துக்குங்க.. எத்தனை சேனல்கள் தமிழ்நாட்டுல நிரந்தரமாக இருக்கும்ன்றதை சொல்லிரலாம்..!