Archive for the ‘போட்டிகளில் பங்கு’ Category

மாயாவதியின் மாயாஜாலம்

மே 15, 2007
துரையில் நடந்த ஒரு நாள் வன்முறையைத் தாங்கிக் கொள்ள முடியாமல், ‘ரவுடிகளை அரசியலிலிருந்து அப்புறப்படுத்துங்கள்’ என்ற கோஷத்தை பிச்சைக்காரர்களைத் தவிர மற்றவர்கள் தமிழகத்தில் மனப்பாடம் செய்து ஒப்புவித்துக் கொண்டிருக்கிறார்கள்.(இந்தப் பாரா ‘எதற்கு?’ என்று எண்ணுபவர்கள் உடனடியாக கடைசி பாராவிற்குத் தாவவும்)
இந்த நிலையில் இந்தியாவிலேயே மிகப் பெரிய மாநிலமான உத்திரப்பிரதேசத்தின் புதிய பெண் முதல் மந்திரியாக பதவியேற்றிருக்கிறார் மாயாவதி. ஏற்கெனவே இதற்கு முன் மூன்று முறை முதல்வர் பொறுப்பை ஏற்றபோதும், ஒரு தடவைகூட முழுமையாக பதவிக் காலத்தை அனுபவிக்காத துர்பாக்கியம் மாயாவதிக்கு நேர்ந்திருக்கிறது.
1984-ம் ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி கன்ஷிராம், பகுஜன் சமாஜ் கட்சியைத் துவக்கியபோது, அவருடன் சேர்ந்து அரசியல் வாழ்க்கையைத் துவக்கியவர் மாயாவதி. காலப்போக்கில் “தலித் மக்களுக்கு தன்னையும் பகுஜன் சமாஜ் கட்சியையும் விட்டால் காப்பாற்ற வேறு நாதியே இல்லை.. எல்லோரும் என்னை வணங்குங்கள்..” என்று சொல்கின்ற அளவுக்கு தன்னை உ.பி. மக்களைக் காக்க வந்த துர்கையாகவே நினைத்துக் கொண்டார் மாயாவதி.
1993-ம் ஆண்டு முதன் முறையாக பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதி கட்சி ஆகியவை இணைந்து உ.பி.யில் ஆட்சி பீடத்தில் அமர்ந்தன. ஆனால், 1995-ம் ஆண்டு ஜூன் 2-ம் தேதி மாயாவதி மீது நடந்த ஒரு தாக்குதல் காரணமாக இரு தரப்பினருக்கும் இடையே உரசல் அதிகமாகிக் கூட்டணி ஆட்சி முடிவுக்கு வந்தது.
அடுத்த நாளே, இரவோடு இரவாக பாரதிய ஜனதாவின் ஆதரவைப் பெற்று அதாவது ஜூன் 3-ம் தேதி முதல் முறையாக உ.பி. முதல்வராக மாயாவதி பொறுப்பேற்றார். ஆனால், இதுவும் அக்டோபர் மாதமே அல்பாயுசில் முடிவுக்கு வந்தது.
இதன் பின்னர் மீண்டும் பாரதிய ஜனதாவுடன் இணைந்து ‘ஆறு மாதங்களுக்கு ஒரு முதல்வர்’ என்ற உடன்பாட்டில் 1997-ம் ஆண்டு மார்ச் 21-ம் தேதி மாயாவதி இரண்டாவது முறையாக முதல்வராகப் பொறுப்பேற்றார். ஆனால் ஆறு மாத காலத்துக்குப் பிறகு, இந்தக் கூட்டணியும் மாயாவதியின் பிடிவாதப் போக்கால் முடிவுக்கு வந்துவிட்டது. மாயாவதியும் ஆட்சிப் பொறுப்பை இழந்தார்.
பின்னர் 2002-ம் ஆண்டு மே 3-ம் தேதி முதல் 2003-ம் ஆண்டு ஜூலை 25-ம் தேதிவரை மூன்றாவது முறையாக மாயாவதி முதல்வராக இருந்தார். அமைச்சர் பதவி கிடைக்காமல் ஏங்கித் தவித்துப் போயிருந்த பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ.க்களை முலாயம்சிங் தன் சமாஜ்வாதிக் கட்சிக்கு குச்சி மிட்டாயைக் காட்டி அழைக்க அவர்களும் வந்தார்கள்.
அமைச்சர் பதவிக்காக முலாயம் சிங்கின் கட்சியில் அவர்கள் கோஷ்டி, கோஷ்டியாகச் சேர.. ‘உள்ளே-வெளியே’ ஆட்டம் உ.பி.யில் ஜோராக நடந்தது. தான் நினைத்ததை சாதித்தே விட்டார் முலாயம் சிங். உ.பி.யில் அவர் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி ஆட்சி அமைத்தது.
ஆனால், இந்த முறை தனிப்பெரும் மெஜாரிட்டியுடன் ஆட்சியைப் பிடித்தே தீர வேண்டும் என்கிற வெறியில் இருந்தார் மாயாவதி. கூடவே இன்னொரு தொல்லையும் மாயாவதிக்கு உண்டு.
சுப்ரீம் கோர்ட்டின் நேரடி கண்காணிப்பில் இருக்கும் தாஜ்மஹால் வணிக வளாக ஊழல் வழக்கு, மாயாவதியை இன்றுவரையிலும் தூங்க விடாமல் செய்து வருகிறது. கூடவே அரசியல்வாதிகளுக்கே உரித்தான சொத்துக் குவிப்பு வழக்கும் வகை, தொகையில்லாமல் அவர் மேல் குவிந்திருக்கிறது.. இத்தனையையும் அவர் சமாளிக்க வேண்டுமென்றால் அவர் கையில் பதவி இருந்தே ஆக வேண்டும் என்கிற கட்டாயமும் இருந்தது.
எதைச் செய்தாவது ஆட்சியில் அமர்ந்துவிட வேண்டும். தான் லக்னோவிலிருந்து அலகாபாத் சென்றால்கூட விதியை மீறியதாக வழக்குப்போடும் முலாயம்சிங்கையும், அவரது தோழர் அமர்சிங்கையும் விரட்டியே ஆக வேண்டும் என்ற வெறியை பதவியில்லாமல் இருந்த இந்த இரண்டு வருடங்களில் அதிகரித்துக் கொண்டேயிருந்துள்ளார் மாயாவதி.
பழைய பாட்டையே திரும்பவும் பாடிக் கொண்டிருந்தால் வழக்கமாகப் பிச்சை போடுபவர்கள்கூட போட மாட்டார்கள் என்பது மாயாவதிக்கும் தெரிந்தது. புரிந்து கொண்டார்.
உ.பி.யைப் பொறுத்தமட்டில், மண்டல் வழக்கு தீர்ப்பு மற்றும் அயோத்தி ராமர் கோவில் ஆகிய கோஷங்களின் மூலம் முற்பட்ட வகுப்பினர் ஓட்டுக்களை பாரதிய ஜனதா பெற்றிருந்தது.
உ.பி.யில் நீண்ட காலமாக ஆட்சியில் இருந்த காங்கிரஸ¤க்கு தலித், முஸ்லீம் மற்றும் பிராமணர்கள் ஆகிய சமூகத்தினரின் ஆதரவு அதிகம் இருந்து வந்தது. இந்த மூன்று சமூகங்களின் மக்கள் தொகை அம்மாநில மக்கள் தொகையில் 60 சதவிகிதம். இந்தச் சமூகங்களை கவர்ந்திழுக்கும் சக்தியை கொஞ்சம் கொஞ்சமாக காங்கிரஸ் இழந்து வந்தபோதுதான் அதை பகுஜன் சமாஜ் கட்சி சரியாகப் பயன்படுத்திக் கொண்டது.
பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனர் கன்சிராம் இதற்கான அடித்தளத்தை அமைத்தபோதும் அதை கடந்த 10 ஆண்டுகளாக மாயாவதி மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டார் என்றே சொல்ல வேண்டும்.
இந்தத் தேர்தலில் அனைத்துச் சமூகத்தினரையும் அரவணைத்துச் சென்று மிகப் பெரிய வெற்றியை ஈட்டியுள்ளார் மாயாவதி.
“பிராமணர்கள் உட்பட மேல் சாதியினரை எப்போது, எங்கு பார்த்தாலும் அடித்து உதை.. எது வந்தாலும் நான் பார்த்துக் கொள்கிறேன். இந்த மாயாவதியின் பெயரை எவன் வந்து கேட்டாலும் சொல்..” என்று அவர் கட்சித் தலைவர் கன்ஷிராமின் முன்னணியில் லக்னோவில் தன்னுடைய முதல் அறிமுகக் கூட்டத்திலேயே பேசி பரபரப்பை உண்டாக்கிய இந்த உன்னதத் தலைவி, இந்தத் தேர்தலில் அப்படியே பிளேட்டை தலைகீழாக மாற்றிப் போட்டார்.
அனைவரையும் அரவணைத்துச் சென்றால்தான் தான் லக்னோவில் கோலோச்ச முடியும் என்பதைக் கவனித்தில் வைத்தவர் முதலில் பிராமணர்களுடன் நெருங்கினார். “நான் முன்ன மாதிரியில்லே..” என்றெல்லாம் சொல்லி கோவில்களுக்கு அவர்களுடனேயே நடந்தார். வீடுகளுக்குள் நுழைந்து “பிராமணர்களின் தெய்வ வழிபாடு இளைய சமுதாயத்தினரை மிகவும் மேம்படுத்தும்..” என்றெல்லாம் புகழ்ந்து தள்ளினார்.
தனது கட்சி சார்பில் முஸ்லீம்கள் 65 பேருக்கும், 88 பிராமணர்களுக்கும் போட்டியிட சீட் கொடுத்தார். இதற்கு முன் எந்தக் கட்சியும் இந்தச் சமூகத்தினருக்கு இவ்வளவு சீட்டுக்கள் தந்ததில்லை என்பதால், மாயாவதி மீது அவர்களின் நம்பிக்கை மென்மேலும் உயர்ந்தது.
தேர்தல் பிரச்சாரத்திலும் தனது கட்சி சின்னமான யானையை மிக உயர்வாகக் குறிப்பிட்டு, “இது யானை மட்டுமல்ல.. கணேசர் கடவுள். அனைத்து கடவுள்களையும் உள்ளடக்கியது..” என்று புதிய கோஷத்தை முன்னிறுத்தினார். ஆஹா.. கடவுள்கள் யாருக்கெல்லாம், எங்கெல்லாம், எப்படியெல்லாம் உதவுகிறார்கள் பாருங்கள்..?
ஏற்கெனவே ராமர் கோவில் விவகாரத்தில் கோவிலை கட்டலாமா? வேண்டாமா என்பதிலேயே பாரதிய ஜனதா குழப்பிக் கொண்டிருக்க.. கல்யாண்சிங்கிற்கு பிறகு வலுவான தலைவரும் பாரதிய ஜனதாவிற்கு இல்லாமல் போக.. பிராமணர்கள் தங்களை வீடு தேடி வந்த தலைவருக்கு இப்போது ஆதரவு கொடுப்போம். ஜெயித்த பிறகு எது வந்தாலும் பார்த்துக் கொள்வோம் என்ற ரீதியில் ஆதரவு கொடுக்க முன் வந்தார்கள்.
முலாயம் என்னென்னமோ முனங்கிப் பார்த்தார். “ஜாதியைக் கை விட்டுவிட்டார் மாயாவதி. என் தம்பிகளே.. என்னிடம் ஓடி வாருங்கள்..” என்றார். ஏற்கெனவே அவருடன் ஓடிய மாயாவதியின் தம்பிகளை அவர் என்ன செய்தார் என்பதை நேரிலேயே பார்த்தவர்கள், தேர்தலில் சீட் கேட்டு கட்சி அலுவலகம் பக்கம்கூட வரவில்லை.
இந்தியாவின் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன், தன் மனைவி ஜெயாபாதுரியுடன் மேடை தோன்றி முலாயம் சிங்தான் ‘எனக்கும் நம்பிக்கை நட்சத்திரம்’ என்றார். ஆனால் உ.பி. இளைஞர்கள் தங்களுடைய கனவுக்கன்னிக்குத்தான் ஓட்டு. கனவுக் கன்னியோட மாமனாருக்கெல்லாம் ஓட்டுப் போட முடியாது என்று முடிவு கட்டிவிட்டார்கள்.
கருத்துக் கணிப்புகள் முலாயமை தூங்கவிடாமல் செய்ய.. ஜெயபிரதாவுடன் களத்தில் குதித்து சில டப்பா டான்ஸ் ஆடிப் போன நடிகர், நடிகைகளை வைத்து தேர்தல் பிரச்சாரத்தை நடத்தினார் கட்சியின் துணைத் தலைவர் அமர்சிங்.
கூடவே நம்ம அம்மா ஜெயலலிதாவும் பெரிய மனசு பண்ணி ஒரு நாள் கால்ஷீட் கொடுக்க.. லக்னோவின் 40 டிகிரி வெயிலில் 40000 மக்கள் மத்தியில் அம்மாவின் ஹிந்தி பேச்சு கலகலத்தது. இப்படி அம்மாவுக்கு ஹிந்து அட்சரப் பிசகாமல் வரும் என்பதை வெளிக்காட்ட ஒரு சந்தர்ப்பம் கொடுத்தமைக்காக முலாயம்சிங்கிற்கு தமிழர்கள் நன்றி தெரிவிக்க வேண்டுமாக்கும். ஆனாலும் இதன் பின்னும் கருத்துக் கணிப்புகள் முலாயம் கஷ்டம் என்று மூக்கு உடைப்பதைப் போல் சொல்லிவிட்டன.
புதிய மாற்றம் மாயாவதிக்கு பலனளித்துவிட்டது. முலாயம்சிங்கின் பழைய, ஓட்டை சைக்கிளை மாயாவதியின் யானை தூக்கியெறிந்துவிட்டது. மாயாவதியே எதிர்பார்க்காததுபோல் தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியைப் பிடித்துள்ளார்.
2002-ம் ஆண்டு தேர்தலில் 98 சீட்டுக்களை வென்றிருந்த மாயாவதிக்கு இப்போது தனிப்பெரும் மெஜாரிட்டியாக 206 தொகுதிகள் கிடைத்தன.
மாயாவதியின் உடன்பிறப்புகளாகப் போட்டியிட்ட 65 முஸ்லீம்களில் 29 பேரும், 88 பிராமணர்களில் 36 பேரும் வெற்றி பெற்று உ.பி.யின் வரலாற்றிலேயே ஒரு புதுவிதத் திருப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.
முதன்முறையாக மாயாவதி உ.பி.யின் முதல்வராகப் பொறுப்பேற்ற போதே இந்த தலித் பெண்மணி கோட்டையில் கோலோச்சும் காட்சியை மனதில் வைத்து, அன்றைய பிரதமர் நரசிம்மராவ் ‘அதிசயத்தில் அதிசயம்’ என்று வர்ணித்தார். அந்த ‘அதிசயத்தை’ மறுபடியும் நடத்திக் காட்டியிருக்கிறார் உ.பி.யின் தற்போதைய துர்க்கை..
143 தொகுதிகளை கைப்பற்றி 2002-ம் ஆண்டு தனிப்பெரும் கட்சியாக இருந்த முலாயம்சிங்கின் சமாஜ்வாதிக் கட்சி இப்போது 97 தொகுதிகளை வென்று பிரதான எதிர்க்கட்சியாக சட்டமன்றத்தில் அமர்கிறது.
அதே சமயம் 2002 தேர்தலில் 88 தொகுதிகளை வென்றிருந்த பாரதிய ஜனதா இந்த முறை 50 தொகுதிகளை மட்டுமே வென்றிருக்கிறது. காங்கிரஸோ, 2002-க்கு இப்ப பரவாயில்லை என்பதைப் போல் கூடுதலாக மூன்று தொகுதிகளுடன் 25-க்கு முன்னேறியிருக்கிறது.
காங்கிரஸ் தரப்பில் ராகுலை முன் வைத்து பிரச்சாரம் செய்யப்பட்டது. ராகுலோ பிரச்சாரத்தின்போது “நினைத்ததை முடிக்கும் குடும்பம் எங்களது..” என்று சொல்லி கன்யாகுமரிவரை அனைவரையும் சிரிக்க வைத்தார்.
இது கட்டுப்படியாகாது என்று நினைத்துத்தான் கடைசி கட்டப் பிரச்சாரத்தில் காங்கிரஸின் வருங்கால நம்பிக்கை நட்சத்திரம் பிரியங்கா வதேராவை(‘பிரியங்கா காந்தி’ அப்படின்னு யாரும் என்னைக் கூப்பிடக்கூடாதுன்னு அம்மணியே உத்தரவு போட்டுட்டாங்க) அழைத்துக் கொண்டு கிராமம், கிராமமாகச் சென்று பிரச்சாரம் செய்ய வைத்தார்கள்.
ஒரு ஆறுதலாக, ராகுல்காந்தி எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அமேதி தொகுதியின் ஐந்து சட்டசபைத் தொகுதிகளில் மூன்றை காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது.
அதேபோல் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் அன்னை சோனியாகாந்தியின் சொந்தத் தொகுதியான ரேபரேலியின் ஐந்து சட்டமன்றத் தொகுதிகளில் நான்கை காங்கிரஸ் தட்டிச் சென்றுள்ளது.
இதுவேறு சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்த ஆண்டியாக, “அக்காவுக்கு மவுசா? இல்லாட்டி தம்பிக்கு மவுசா?” அப்படீன்னு உ.பி. முழுக்க ஒரு சர்வே எடுக்குற அளவுக்கு பிரச்சினையைக் கிளப்பியிருக்கு.. ஓ.சி.நெல்சன் கம்பெனிக்காரங்களை அவுகளுக்குத் தெரியாது போலிருக்கு. யாராவது அட்ரஸ் சொல்லி அனுப்பி வைங்கப்பா..
பாரதிய ஜனதா தரப்பில் இந்துத்துவாவை விட்டுவிட்டு வளர்ச்சித் திட்டங்கள் பற்றிப் பேசியது. பிற்படுத்தப்பட்டச் சமூகத்தைச் சேர்ந்த கல்யாண் சிங்கை முன்னிலைப்படுத்தியது போன்றவற்றால் அவர்களுக்கு பிராமணர்களின் ஆதரவு கிடைக்காமல் போய்விட்டது.
ஆளும் கட்சியாக இருந்த சமாஜ்வாடி தோல்வியடைய சட்டம், ஒழுங்கு, மின் பற்றாக்குறை, ஆள் கடத்தல் ஆகியவையே முக்கியக் காரணங்களாக அமைந்துவிட்டது.
இவையெல்லாம் ஒரு புறமிருக்க தேசியக் கட்சிகளின் முக்கியத்துவம் மேலும் குறையத் துவங்கியுள்ளது என்பதும் இந்தத் தேர்தல் மூலம் தெளிவாகத் தெரிய வந்துள்ளது.
அதே போல் சென்ற 2002-ம் ஆண்டு மாயாவதியையும், முலாயம் சிங்கையும் தூங்க விடாமல் செய்த 49 சுயேச்சைகள் லிஸ்ட், இந்தத் தேர்தலில் 27-ஆக குறைந்துள்ளது ஒருவகையில் உ.பி.யின் அரசியலுக்கு ஆரோக்கியமான செயல் என்றே சொல்லலாம்.
பதவியேற்றிருக்கும் மாயாவதியின் தற்போதைய அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கும் அமைச்சர்களில் 17 பேர் பெரிய ரவுடிகள், தாதாக்கள் என அறியப்பட்டவர்களாம். இவர்களில் பலருடைய புகைப்படங்கள் வருடக்கணக்காக போலீஸ் ஸ்டேஷனின் ரவுடிகள் பட்டியிலில் தொங்கிக் கொண்டிருக்கின்றனவாம். ஆனால் இனி இவர்கள் மாண்புமிகு மந்திரிகள்.
இதில் ஒரு மந்திரி இப்போது ஜெயிலில் உள்ளாராம்.
பைசாபாத் மாவட்டத்தில் உள்ள மில்கிபூர் தொகுதியில் வெற்றி பெற்றுள்ள ஆனந்த்சென் என்பவர்தான் இந்த ஜெயில் மந்திரி.. இவர் ஜாமீனில் வெளியே வந்துதான் இனி மந்திரி பதவியை ஏற்று அதன் பின்புதான் மக்கள் சேவையில் இறங்க வேண்டுமாம்..
சத்தியவமே ஜெயதே..!
ஜெய்ஹிந்த்
குறிப்பு : இந்தப் பதிவு சற்றுமுன் 1000 பரிசு போட்டிக்காக ‘அரசியல்’ என்ற பிரிவில் போட்டியிடுகிறது.