Archive for the ‘பெரியப்பா’ Category

கொடுமுடியில் ஒரு அனுபவம்..!

மார்ச் 17, 2008

17-03-2008

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


ஒவ்வொரு நாளும் புதிய நாளே..

ஒவ்வொரு புதிய நாளிலும் பல நிகழ்வுகள்..

ஒவ்வொரு நிகழ்வுகளிலிருந்தும் ஒரு அனுபவம்..

ஒவ்வொரு அனுபவமும் வாழ்க்கையின் புதியதோர் பாதையைக் காட்டும்.

இது அனைவருக்குமே கிடைப்பதுதான்..

இப்படிப்பட்ட புதிய அனுபவமொன்று நேற்று எனக்குக் கிடைத்தது.

‘தென்னாட்டு கங்கை’ என்ற பெயரோடு பல இடங்களில் புகழோடும், சில இடங்களில் சேறோடும், சிற்சில இடங்களில் பழியோடும் தயக்கமில்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் காவிரித் தாயின் வடமேற்குக் கரையோரம் சிவபெருமான் கொடுமுடிநாதனாய் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் கொடுமுடி ஆற்றின் கரையில் நேற்று எனக்கு கிடைத்த அனுபவம் மீண்டும், என்னையொரு அர்த்தம்புரியாத அனுபவத்தில் கொண்டு போய் தள்ளிவிட்டது.
பிறந்ததிலிருந்தே நான் நன்கறிந்து வந்த எனது தாய்வழி சித்தப்பா ஒருவர் திடீரென மரணமடைந்துவிட்டார்.

10 தினங்களுக்கு முன்பாக நன்றாகவே இருந்திருக்கிறார். திடீரென்று திண்டுக்கல்லில் இருந்து தனது ஊருக்கு மனைவியான எனது சித்தியைப் பார்க்க வந்தவர் இரவில் படுத்துறங்கி காலையில் எழுந்திருக்கும்போது எழ முடியாமல் படுத்தவர்தான்.. தொடர்ந்து வந்த பத்து நாட்களில் அப்பன் முருகனடி சேர்ந்துவிட்டார்.

இது போன்ற துக்கத்திற்கெல்லாம் இப்போதைய கால ஓட்டத்தில் தொலைதூரத்தில் இருப்பவர்களுக்கு அழைப்புவிடுத்து அவர்களைக் கஷ்டப்படுத்தக்கூடாது என்று நினைப்பவர்கள் எங்கும் இருக்கிறார்களே.. சித்தப்பாவை எரியூட்டிவிட்டு வீட்டிற்கு வந்து குளித்துவிட்டு சாவகாசமாக எனக்குத் தொலைபேசி செய்தார்கள்.

“முன்பே சொல்லியிருந்தா அலறியடித்து ஓடி வரணும்.. நீ வர்றதுக்குள்ள நாங்க எடுத்திட்டோம்னா, எல்லாருக்கும் சங்கடம். அதான் சொல்லலை.. அதுனால ஒண்ணுமில்ல.. மூணாம் நாள் விசேஷம் கொடுமுடில வைச்சிருக்கோம்.. வந்திரு..” என்றார்கள்..

கிளம்பினேன் ஒரு அனுபவம் கிடைக்கப் போகிறது என்பது தெரியாமலேயே.

காவிரித் தாய் சலசலத்து ஓடிக் கொண்டிருக்க, அன்று விடுமுறை நாளாததால் சுற்றுலாவிற்காக வந்தவர்கள் ஒரு புறம் ஆற்றில் குளியலாட்டம் போட்டுக் கொண்டிருக்க..

இன்னொரு புறம் காவடி எடுத்து கோவிலுக்கு காணிக்கைச் செலுத்து வருபவர்கள் வரிசை, வரிசையாக காவிரித் தண்ணீரை இரண்டாகப் பிளப்பதைப் போல் தண்ணீருக்குள் நடந்து அக்கரைக்குச் சென்று கொண்டும், வந்து கொண்டுமிருக்க..

மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலிருந்தும் தாயோ, தந்தையோ, உடன்பிறந்தவர்களோ.. அனைவரின் சாம்பலையும் கரைப்பதற்காக கொண்டு வந்து காரியம் செய்து கொண்டிருந்தவர்களும் நிறையவே இருந்தார்கள்.

நான் ஆற்றங்கரை செல்வதற்குள் எனது சித்தப்பாவின் குடும்பத்தினரும், உறவினர்களும் ஆற்றில் இறங்கி முங்கிக் கொண்டிருந்தார்கள்.

‘அறிமுகப்படலம்’ முடிந்ததும் வந்திருக்கின்ற உறவினர்கள் யார், யார் என்றெல்லாம் பார்த்தேன்..

காப்பு கட்டியது போன்ற கிராமத்தாள் கரங்களுடன் எனது தந்தை வழி, தாய் வழி உறவுகள் “வா ராசா.. இப்பத்தான் வந்தியா..” என்று ஒற்றை வரியைக் கேட்டுவிட்டு, கூடவே காதில் இருந்த எனது மிஷினைப் பார்த்துவிட்டு தங்களது வாயில் கை வைத்து அதிர்ச்சியும் அடைந்தார்கள்.

இந்த அதிர்ச்சியைவிட குளியலில் இருந்து ஒருவர் எழுந்து வந்ததைப் பார்த்து நான் அடைந்ததுதான் நிறைய.

எப்படியும் வயது 85 இருக்கும். கூன் விழுந்து குனிந்தபடியே வருகிறார். தலை ஆடிக் கொண்டேயிருக்கிறது. நடை தவழ்கிறது.. அவரை ஒருவர் பிடித்தபடியே கரைக்கு கொண்டு வந்து விட்டார்.

இவரை நான் என் வாழ்க்கையில் இப்போதுதான் முதன்முதலாக சந்திக்கிறேன்.

இந்தக் கிழவர் எனக்கு பெரியப்பாமுறை வேண்டும்.. இறந்து போன சித்தப்பாவின் மூத்த அண்ணன். இவருக்கும் நடுவில் இரண்டாவது அண்ணன் ஒருவரும் உண்டு. அவரும் லேசான தள்ளாட்டத்தில் இருந்தார்.

இவரும், இறந்து போன சித்தப்பாவும் வேறு, வேறு ஊரில் வசித்து வந்ததாலும், இறந்து போன சித்தப்பா மட்டுமே எனது குடும்பத்திற்கு நெருக்கமாக இருந்ததாலும் இந்தப் பெரியப்பா எனக்கு இதுவரை அறிமுகம் இல்லாமலேயே இருந்திருக்கிறார்.

குடும்ப இளையவர்கள் அனைவரும் குளியலில் மும்முரமாக இருக்க.. இங்கே அண்ணன், தம்பி இருவரும் தங்களது தம்பிக்கு செய்ய வேண்டிய கடமைக்காக, தாங்களே காரியம் செய்யத் துவங்கினார்கள்.

எப்போதும் ஐயரை வைத்துத்தானே நடத்துவார்கள் என்று நான் காத்திருக்க..

சென்னையிலிருந்து என்னுடன் வந்திருந்த எனது மாமா ஒருவரும் இதை பெரியப்பாவிடம் மெதுவாகச் சொன்னார்.

“கோவில் பக்கத்துல ஐயருங்க நிறைய பேர் இருக்காங்க.. வேண்ணா கூட்டிட்டு வரேன்.. உங்களுக்கெதுக்கு சிரமம்..?” என்றார் மாமா.

பெரியப்பா குனிந்தபடியே “இல்லப்பா.. அவங்களைக் கூப்பிட்டா அப்புறம் எல்லாமே அவுங்க சாங்கித்தியமா போயிரும். நமக்கு வேணாம்.. நானே பண்ணிக்கிறேன்..” என்றார் சன்னமான குரலில்.

பெரியவர் என்பதால் மாமா அதற்கு மேல் அழுத்தம் கொடுக்காமல் ஒதுங்கிக் கொள்ள.. தனது தம்பிக்கான அஸ்திக் கரைசல் காரியத்தைத் துவக்கினார் அண்ணன்.

உட்காரக்கூட முடியாத அந்த நிலையிலும் குனிந்து நின்றிருந்தபடியே அஸ்திக் கலசத்தை பாதுகாப்பான உறையில் இருந்து பிரித்தெடுத்து அதனுள் பூவைப் போட்டு.. அதற்குள் நெய் ஊற்றி, ஒரு கற்பூரத்தை வைத்து தனது கடைசி மகனை அழைத்து(இறந்து போன சித்தப்பாவிற்கு மகன்கள் கிடையாது. மூன்றும் பெண்கள்தான்) அதனைக் கொளுத்தச் செய்தார்.

இப்போது அனைவரும் கூடிவிட.. அனைவரையும் சுற்றி, சுற்றி வந்து ஒரு வார்த்தைகூட மற்றவரிடம் பேசாமல் தானே எல்லாவற்றையும் செய்துவிட்டு எனது சித்தியை அழைத்து அதை எடுத்து “புள்ளைகிட்ட கொடு” என்று ஒற்றைவரியைச் சொல்ல.. சித்தியும் அதே போல் செய்ய..

இப்போது சித்தி, அண்ணன், தம்பி, மகன் நால்வரும் அதைக் கையில் எடுத்துக் கொண்டு நிற்க.. வெளியில் விலகி நின்றிருந்த நாங்கள் அனைவரும் அந்தக் கலசத்தை வணங்கினோம்..

இறந்து போனவர் யாராக, எப்படிப்பட்டவராக இருந்தால் என்ன? நாமளும் இதே போல் ஒரு நாளைக்கு நாலு பேருக்கு ‘கையடக்கமாக’ இருக்கப் போகிறவர்தான் என்ற உயர்ந்த தத்துவம் மீண்டும், மீண்டும் நம் மனக்கண்ணுக்கு வந்து செல்வது இது போன்ற நிகழ்வுகளில் மூலம் கிடைக்கிறது.

கூன் முதுகின் வலியையும் பொருட்படுத்தாமல் அவர்களுடனேயே ஆற்றின் நடுப்பகுதிக்குச் சென்று அஸ்திக் கலசத்தை ஒரு சேர நால்வரும் கையிலிருந்து விடுவிக்க.. கரையிலிருந்து இளையவர்களான நாங்கள் கைகூப்பி ‘போயிட்டு வாப்பா’ என்று கண்களால் சொல்ல.. பிரியாவிடை பெற்றார் சித்தப்பா.

பெரியப்பாவோ, தனது ‘தம்பி’ சென்று கொண்டிருக்கும் அந்தக் கலசத்தை பார்த்தபடியே இருந்தார்.

வழியில் நதியில் விளையாடிக் கொண்டிருந்த சின்னப் பிள்ளைகள் அந்தக் கலசத்தைத் தொடப் போக.. கத்தவே முடியாத நிலையிலும், குனிந்த நிலையிலேயே கைகளை உயர்த்தி கத்தினார் பெரியப்பா.

உடனே நாங்களும் கரையிலிருந்தே அந்தப் பையன்களை நோக்கி கைகளை ஆட்டி கத்த.. அந்தப் பையன்கள் ஏதோ தொடக்கூடாத விஷயம் போல என்றெண்ணி அத்தோடு நின்று கொள்ள.. பெரியப்பாவுக்கு ஒரு நிம்மதி..

அஸ்தி தாங்கிய அந்த சொம்பு, ஓரிடத்திலும் நிற்காமல் சென்று, முதல் படிக்கட்டை அமைந்திருக்கும் பகுதியைத் தாண்டி மிக மெதுவாக மூழ்கி காவிரித் தாயுடன் ஐக்கியமான பின்பே, பெரியப்பா தனது பார்வையைத் திருப்பினார்.

அப்படியே தண்ணீரில் மூழ்கி எழுந்தவர் கோவில் பக்கம் திரும்பி கைகளை உயரே கூப்பி வணங்கியவர் கரைக்கு வந்தார். ஒரு நிமிடமும் உட்காரவில்லை.

தனது பேரன்களுக்காகவும், மகனுக்காகவும் வாங்கியிருந்த புது துணிகளை எடுத்துக் கொடுத்து அதை இங்கேயே அணிந்து கொள்ளச் செய்தார்.

கிடைத்த இடைவெளியில் அதுவரையிலும் காரியத்தில் கண்ணாக இருந்தவரிடம் சென்ற நான், அவரது கையைப் பிடித்து எனது நட்பை வலிந்து தெரிவித்தேன்.

ஒரு நொடியில் மட்டுமே அவரால் நிமிர்ந்து பார்க்க முடியும் என்பதாலும் குனிந்தபடியே பதில் சொல்லும், அந்த நோயின் கொடுமையும் அவரைத் தாக்கியிருக்க..

நானே அறிமுகப்படுத்திக் கொண்டதும், ‘விலுக்’கென்ற ஒரு அழுகையுடன், “சித்தப்பனுக்கு காரியம் சாத்த அங்கேயிருந்து வந்தியாப்பா.. கும்பிட்டீல்ல..?” என்றார்.. “செஞ்சேன்பா..” என்றேன்..

ஒரு நிமிடம் அவரின் பார்வை அஸ்தி கவிழ்ந்த இடத்திற்குப் போய்விட்டுத் திரும்பியது..

“அண்ணன், தம்பி, மூணு பேரு.. அம்சமா வளந்தோம்.. மூணு பேரும் பேரன், பேத்தி எடுத்து, பேரப் புள்ளைகளுக்கே பேத்தி எடுத்திட்டோம்.. முறையா நான்தான் மொதல்ல போயிருக்கணும்.. நடுவுல உள்ளவனும் இங்கதான் இருக்கான்.. கடைசித் தம்பி இவன் முந்திக்கிட்டான்.. போவட்டும்.. அதுவும் நல்லதுதான். என் தம்பிக்கு நான் காரியம் செஞ்ச திருப்தியாச்சும் கிடைச்சுச்சே..” என்றார்..

அனைவரும் புதிய ஆடைகளை உடுத்திக் கொண்டு கிளம்ப, ‘காரியத்திற்கு’ வந்ததால் கோவிலுக்குப் போகக்கூடாது என்ற பழக்கமுள்ளதால் சிவனை மற்றவர்கள் வணங்காமல்(நான் முன்பே காலையிலேயே போய் ஒரு ‘குட்மார்னிங்’ சொல்லிவிட்டேன்) ஊருக்குக் கிளம்பினோம்.

தார் பாய் மேலே போடப்பட்ட ஒரு மீன்பாடி வேனில் ஏறி உட்கார்ந்த கணத்திலிருந்து அந்த பெரியப்பாவின் மீதான கவனம் என் மனதை மிகவும் ஆக்கிரமித்திருந்தது.

மூன்று பேருமே பேரன், பேத்தி எடுத்தவர்கள்.. வாழ்க்கையின் இவ்வளவு தூரத்தை கடந்து வந்த பின்பும் ஈஸிசேரில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டோ, அல்லது ஆள் வைத்து செய்யச் சொல்லி நடக்க முடியவில்லை என்று கயித்துக் கட்டிலில் படித்துக் கொள்ளும் சராசரி மனிதரையே பார்த்து வந்தவன் என்பதால் இவர் மீதான மதிப்பு எனக்குள் நிரம்பியிருந்தது.

வண்டியில் வரும்போது எனது உறவினர்கள் சிலரிடம் பேசியதன் மூலம் எனக்குத் தெரிந்தது..

இந்த மூத்த பெரியப்பாவும், இளைய பெரியப்பாவும் படிக்காதவர்கள். ஆனால் இறந்து போன சித்தப்பாவை ‘இவனாவது நல்லாப் படிக்கட்டுமே’ என்றெண்ணி திண்டுக்கல்லில் ஹாஸ்டலில் தங்க வைத்து படிக்க வைத்திருக்கிறார் மூத்த பெரியப்பா.

அதே போல் மூத்தவரும், இளையவரும் மிகச் சின்ன வயதிலேயே உள்ளூர் பெண்களையே திருமணம் செய்து கொள்ள.. இவருக்கு மட்டும் படித்த பெண்ணாக வேண்டும் என்று முடிவு செய்து ஓரளவுக்குப் படித்த பெண்ணாக இருந்த எனது சித்தியை திருமணம் செய்து வைத்தாராம் மூத்தவர்.

ஏன்? எதற்கு? எப்படி? என்பதற்கெல்லாம் இந்த மாதிரி விஷயத்தில் கொஸ்டீனே கேட்க முடியாது போலிருக்கிறது. அப்படித்தான் இருக்கிறது இந்தப் பாசமெல்லாம்..

கனத்த மழையோடு கனத்த மனதோடும் ஊர் வந்து சேர்ந்த பின்பும் ‘அக்கடா’ என்று ஓரிடத்திலும் அமரவில்லை பெரியப்பா.

வந்தவுடனேயே விளக்கேத்தி அனைவரையும் சாமி கும்பிட வைத்தவர், உடனேயே “காக்கைக்கு சோறு போடணும்..” என்று சொல்லி இலையில் சோற்றை வைத்து ஓட்டு வீட்டின் மேலே அதை வைக்கச் சொன்னார்.

அதோடு நிமிர்ந்து பார்க்க முடியாத நிலையிலும் அந்த வீட்டைச் சுற்றிச் சுற்றி வந்து தனது கைகளைத் தட்டி காக்காவைக் கூப்பிட்ட நிலையில் அதை வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்த நான் உட்பட அத்தனை பேரும் நிச்சயமாய் சுயநலவாதிகளும், குற்றவாளிகளும்தான் என்று அடித்துச் சொல்லலாம்.

பல போராட்டங்களுக்குப் பிறகு, பல நிமிடங்களுக்குப் பின்பு ஒரு காக்கா பெரிய மனம் வைத்து ஒரு சோத்துப் பருக்கையை எடுத்துக் கொண்டு செல்ல..

கை தட்டியபடியே வீட்டைச் சுற்றி வந்து கொண்டிருந்த பெரியப்பாவிடம் பெரியம்மா ஓடிச் சென்று அவர் கையைப் பிடித்து நிறுத்தி “எடுத்திருச்சு..” என்று சொல்ல.. திரும்பி வந்தார் பெரியப்பா.

அடுத்த வேலையாக, நின்று கொண்டிருந்த உறவினர்கள் அனைவரின் கையையும் பிடித்து “சாப்பிடுப்பா.. சாப்பிடுங்கம்மா..” என்று ஒவ்வொருவரின் கையையும் பற்றி பெரியப்பா சொன்னது அச்சடங்கு ஒரு பழக்கம்தான் என்றாலும் முறையாகச் செய்ய வேண்டிய பெண் பிள்ளைகள் அமைதியாக இருக்க.. 65 தனது தம்பிக்காக, 85 வயது அண்ணன் இந்த வயதிலும் இவ்வளவு செய்கிறாரே என்ற ஆச்சரியம்தான் எனக்குள் எழுந்தது.

நான், மாமா, பையன்கள் என்று சிலர் சாப்பிடத் துவங்க.. சாப்பிட்டு ஓய்வாக ஓரத்தில் அமர்ந்திருந்த அனைவரின் அருகிலும் வந்து அவர்களின் கையையும் பற்றி “சாப்பிட்டியாப்பா..?” என்று கேட்ட பாங்கில் என்ன பேசுவது என்பதே தெரியவில்லை.

“கையைப் பிடிக்கின்ற சாக்கில் ஈரமாக இருந்தால் சாப்பிட்டு முடித்தாகிவிட்டது எனவும் இல்லையெனில் சாப்பிடவில்லை என்று ஊகித்து மேலும் மேலும் சாப்பிடச் சொல்வார்கள்.. இது கிராம வழக்கம்.. அதனால்தான் அப்படி..” என்று எனது மாமா விளக்கம் சொன்னாலும் எனக்கு அது மிகப் பெரிய விஷயம்தான்.

எல்லாரையும் சாப்பிடச் சொன்னவர் தொடர்ந்த சில நிமிடங்களில் வெறும் 60 குடும்பங்களே இருக்கும் அந்த ஊரின் எல்லாத் தெருக்களையும் வலம் வர ஆரம்பித்துவிட்டார்.

வழியில் காண்போர் யாராக இருந்தாலும் அவர்களை “சாப்பிட வாங்க.. சாப்பிட வாங்க..” என்றழைக்கத் துவங்க.. இது அவர் மீதான கணிப்பை என்னவென்று சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை.

அவருடைய மகனும், மருமகனும், பேரனும் எனதருகிலேயே உட்கார்ந்திருக்க.. “நீங்கள் போய்க் கூப்பிடலாமே..” என்றேன்..

மகன் சொன்னார், “அவர் பெரிய மனுஷன்.. அவர் போய்க் கூப்பிட்டாத்தான் வருவாங்க.. இப்பல்லாம் கிராமத்துலேயே டீஸன்ஸி பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க. நாங்க போய்க் கூப்பிட்டா வர மாட்டாங்க. நீங்களே வேண்ணா பாருங்க…” என்றார் வருத்தத்துடன்.

கிட்டத்தட்ட தவழும் நிலையில், தலை ஒரு நிலை கொள்ளாமல் ஆடிக் கொண்டிருக்கும் உடலுடன் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு தெருவிலிருந்தும் சிலரை கைப்பிடித்து இழுத்து வந்து வீட்டில் விட்டுவிட்டு அடுத்தாளைப் பிடிக்க அவர் சென்ற வேகம் இருந்தது பாருங்கள்.. பாசம் என்பதற்கு மட்டும் எல்லைக்கோடு எங்கே இருக்கிறது என்பதை யாரும் சொல்லிவிட முடியாது என்பதைத் தெளிவாக உணர்த்தியது.

நேற்று இரவே நான் சென்னை திரும்ப வேண்டியிருந்ததால் உடனே கிளம்ப வேண்டியாதாகிவிட்டது. நான் எனது பேகைத் தூக்கிக் கொண்டு நிற்பதைப் பார்த்ததும் அவசரம், அவசரமாக எனதருகில் வந்தவர் “உள்ள வா ராசா..” என்றழைத்தார்.

அவர் பின்னாலேயே நான் ஒரேயொரு அறையிருந்த அந்த குடிசை வீட்டுக்குள் செல்ல.. அங்கேயிருந்த ஒரு பையில் இருந்து ஒரு சட்டையை எடுத்து என் கையில் திணித்து, “முறையா உங்கப்பனுக்குத்தான் நான் செய்யணும்.. அவனும் முன்னாடியே போயிட்டான்.. அவனுக்குப் பதிலா உனக்குத் தரணும்.. இது செய்முறை.. வேணாம்னு சொல்லாதப்பா.. உன் சித்தப்பன் கொடுத்ததா நினைச்சுக்க.. நம்ம தலைமுறை குடும்பம் எங்க இருந்தாலும் நல்லாயிருக்கணும்ப்பா..” என்றார் குனிந்த தலை நிமிராமல்..

அப்போது நான் மறுமொழி பேச வேண்டியதாக இருந்தால் அவருக்குக் கீழே அமர்ந்துதான் பேச வேண்டும் என்ற கட்டாயத்துடன், இயல்பாகவே நான் பாச உணர்ச்சிமிக்கவன் என்பதால் எதுவும் பேசாமல் கண் கலங்கிப் போய் “சரிப்பா..” என்றேன்.

விறுவிறுவென அவர் வெளியே வர பின்னாலேயே நானும் வந்தேன். எனது பேகைத் தூக்கி எனது கையில் கொடுத்துவிட்டு.. “நல்லாயிருப்பா..” என்று சொல்லிவிட்டு தெருவில் நடந்தார்.

என்னுடன் வருவதாகச் சொன்ன மாமா என்னருகில் வந்து, “இது ‘காரியம்’ வீடு.. அதுனால ‘போயிட்டு வரேன்’னு சொல்லக் கூடாது.. ஒண்ணும் சொல்லாத.. அப்படியே வா..” என்றார் அவசரமாக.

உற்றார்களும், உறவினர்களும், அக்காமார்களும், மாமாமார்களும் கூடியிருக்க.. யாரிடமும் சொல்லாமல் கொடுத்த துணியை வாங்கிக் கொண்டு என்ன செய்வது என்ற எண்ணம்கூட இல்லாமல் திரும்பிப் பார்க்காமல் நடந்தேன்.

இறந்து போன வீட்டிற்கு வந்தவர்கள் ‘போய் வருகிறேன்’ என்று சொன்னால் ‘பிற்பாடு இன்னொரு சாவும் நிகழ்ந்து அதற்கும் வருவேன்’ என்று சொல்லும் அர்த்தமாகிவிடும் என்பதை நான் அறிந்திருந்தேன் என்றாலும் அந்த பெரியப்பாவின் பாச உணர்ச்சிகள் அனைத்தையும் மறக்கடிக்கச் செய்திருந்தது.

பலவிதமான எண்ணங்கள் சூழ.. பின்னால் அக்கா பார்த்துக் கொண்டிருக்குமோ, மாமா பார்ப்பாரோ.. நம் மடியில் தூக்கி வைத்துக் கொஞ்சிய அக்கா மகள் என் முதுகைப் பார்த்து என்ன பேசுவாளோ என்றெல்லாம் எண்ணங்கள் அலை மோதிக் கொண்டிருக்க..

எதிரில் தன் வயதையொத்த ஒரு கிழவரின் கையைப் பிடித்து சாப்பிட அழைத்து வந்து கொண்டிருந்தார் பெரியப்பா..

மாமா எதுவுமே பேசாமல் போக.. அவரின் பின்னால் சென்ற என்னால் அது முடியவில்லை.

‘செல்கிறேன்’ என்பதை உணர்ந்து கை கூப்பி வணங்கிய, அந்த பெரியப்பாவின் கைகளை ஒரு முறை எனது கைகளால் அழுத்திவிட்டு பேச்சில்லாமல் நடந்தேன்..

நிச்சயம் பெரியப்பா என்னைத ஒரு முறையாச்சும் திரும்பிப் பார்த்திருப்பார் என்றே நினைக்கிறேன்.

காலையில் சென்னை வந்து பேக்கில் இருந்து துணிகளை எடுத்து வெளியில் வைக்கும்போது பெரியப்பா கொடுத்த அந்த சட்டையில் கை வைத்து தடவிய போது, ஏனோ அந்த ஆடியபடியே இருந்த தலையும், கூன் முதுகும், மனக்கண்ணில் தோன்றி ஒரு நிமிடத்தில் கண்ணீரை வரவழைத்தது.

சனிக்கிழமையன்று கடைசி நிமிடத்தில் முடிவு செய்ததால் பேருந்தின் கடைசி சீட்டில் பயணம் செய்து கொடுமுடிக்குத் தூக்கமில்லாமல் சென்ற அலுப்பும், கொடுமுடியில் இருந்து எனது ஊருக்கு வேனில் செல்லும்போது அரைமணி நேர பலத்த மழையினால் தார்பாய் ஒழுகி கிட்டத்தட்ட ஷவர் பாத்தில் குளித்ததைப் போல் நனைந்து கொண்டே 3 மணி நேரம் நின்று கொண்டே சென்ற களைப்பும், பின் இரவில் மீண்டும் திண்டுக்கல்லில் சென்னைக்கு டிக்கெட் கிடைக்காமல் திருச்சிவரை 2 மணி நேரம் நின்று கொண்டே வந்து, திருச்சியில் பிளாக்கில் பேருந்து டிக்கெட் வாங்கி அரைகுறைத் தூக்கத்தில் சென்னை வந்து சேர்ந்த அசதியும் ஒன்று சேர்ந்து என்னை அழுத்தியிருந்தும்..

அந்தக் கிழவரின் பாச உழைப்பை பற்றி நினைத்த அக்கணத்தில், எனது களைப்பு பற்றிய பேச்சே எனக்குள் எழவில்லை.

அன்பிற்கும், பாசத்திற்கும், கடமைக்கும் பில் போட முடியுமா என்ன..?

65 வயதானால் என்ன? அவன் என் தம்பி.. அவனுக்கு நான் அண்ணன்.. என் கடமையை நான் செய்தே தீர வேண்டும். செய்வேன்.. என்ற இந்தப் பெரியவரின் கடமையுணர்ச்சிக்கு, பாசவுணர்ச்சிக்கு யாரேனும் அளவுகோல் வைத்துவிட முடியுமா..?

இது சாதாரண மரணம்தான்.. வீட்டுக்கு வீடு நிகழ்வதுதான்.. ‘அப்படியே கொண்டு போய் போட்டுட்டு திரும்பிரலாம்…’ என்று இன்றைய காலப் போக்கில் நாம் பேசிக் கொண்டிருக்க..

அதுவும் ஒரு வாழ்வியல் அனுபவம்.. அதிலும் ஒரு குடும்பக் கடமையொன்று இருக்கிறது.. அதற்கு வயதெல்லாம் ஒரு தடையில்லை என்பதை எனக்கு உணர்த்தியது இந்த அனுபவம்.

யாரோ சொன்னார்களாம் “நாம் உணர்ச்சிவயப்பட்டவர்கள். உணர்ச்சிகளால் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்..” என்று..

யார் சொன்னால் என்ன? உண்மைதான்..

இதிலிருந்து நாம் விடுபட வேண்டுமா என்பதுதான், இப்போதைய பொருளாதாரம் சார்ந்த நம் சமூகச் சூழலில் நம் கண் முன்னே இருக்கும் ஒரு கேள்வி.

உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துதல் அல்லது இல்லாதிருத்தல் நல்ல சமூகத்தை உருவாக்குமா என்பது எனக்குத் தெரியவில்லை.. ஆனால் நானும் அதில் கட்டுண்ட ஒரு இளைஞன்தான் என்பது இந்தக் கட்டுரையை டைப் செய்தபோதுதான் தெரிந்தது.

எப்படியெனில், எனது பெரியப்பாவிடம் நான் கட்டாயம் கேட்டிருக்க வேண்டிய ஒரு கேள்வி, அல்லது அறிந்து கொண்டு வந்திருக்க வேண்டிய ஒன்றை நான் கேட்காமலேயே அல்லது தெரிந்து கொள்ளாமலேயே வந்திருக்கிறேன் என்பது இப்போதுதான் தெரிந்தது..

அது..

“உங்களது பெயர் என்ன பெரியப்பா..?”