Archive for the ‘பெண்ணியம்’ Category

கணவர்களைத் திருடும் நடிகைகள்..! பாலிவுட் சர்வே..!

ஜூலை 20, 2010

20-07-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

நடக்குமா? நடக்காதா? என்று தமிழ்த் திரையுலக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த அந்தச் சம்பவம் கடந்த மாதம் நடந்தேறிவிட்டது.

சட்டப்படி சுற்றமும், நட்பும் சூழ ஆடம்பரமான சூழலில் செய்து ஜொலிப்பான மண்டபத்தில் மணமக்களாக அமர முடியாத துர்பாக்கியத்துடன் ஒரு வீட்டுக்குள் மாலையை மாற்றிக் கொண்டு தம்பதிகளாகிவிட்டார்கள் பிரபுதேவாவும், நயன்தாராவும்.

“எத்தனை நாளைக்குத்தான் இப்படி சேர்ந்து வாழுறாங்கன்னு நாங்களும் சொல்லிக்கிட்டே இருக்குறது..! பேசாம கட்டிக்குங்க.. வர்றது வரட்டும்..” என்று தனது தாய் வீட்டார் சொன்னதையே பிரபுதேவா ஏற்றுக் கொள்ள.. திருமணம் நடந்தேறியுள்ளது.

ஆனால் சட்டப்படி இதனை வெளியில் சொல்ல முடியாததால் “யாகம் ஒன்று நடத்தினோம். அதில் அவர்களும் கலந்து கொண்டார்கள்” என்பது போல், தங்களது செல்வாக்கை வைத்து பத்திரிகைகளில் செய்திகளை வரவழைத்துக் கொண்டார்கள் பிரபுதேவா குடும்பத்தினர்.

தான் உயிருக்குயிராய் காதலித்து, மணந்து, தனக்காக மூன்று குழந்தைகளைப் பெற்றுக் கொடுத்த தன்னையே நம்பி வந்த ஒரு பெண், இதே ஊரில் 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வேறொரு வீட்டில் குடியிருக்கும்போது, பிரபுதேவாவுக்கு இப்படிச் செய்ய எப்படி மனம் வந்தது என்கிறார்கள் திரையுலகத்தினர்.

தயாரிப்பாளர் தாணுவின் ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ திரைப்படத்தில் நடித்த சூட்டோடு, தன்னுடன் படங்களில் ஜோடியாக நடனமாடிக் கொண்டிருந்த ஷம்ஷத் என்னும் முஸ்லீம் பெண்ணை தாணுவின் அலுவலகத்தில் வைத்துத்தான் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டார் பிரபுதேவா. அத்திருமணத்தை நடத்தி வைத்து, பிரஸ்மீட் வைத்து பத்திரிகையாளர்களிடம் தம்பதியினரை அறிமுகப்படுத்தி வைத்ததும் தயாரிப்பாளர் தாணுதான்.

நயன்தாரா இப்படிச் செய்வார் என்று யாரும் எதிர்பார்க்காத சூழலில் இது போன்று நடிகைகள் ஏன் ஏற்கெனவே திருமணமான நடிகர்களை விரும்புகிறார்கள் என்பதுகூட ஒரு சர்ச்சைக்குரிய விஷயமாகவே இருக்கிறது.

தமிழ்ச் சினிமாவில் இதற்கு பல முன்னோடிகள் இருக்கிறார்கள். இவர்கள் அனைவருக்குள்ளும் சில தனிப்பட்ட காரணங்கள் இருந்திருக்கின்றன. மீள முடியாமல் திருமண ஒப்பந்தத்தில் சிக்கிக் கொண்டார்கள் என்றாலும், அதனை வெற்றிகரமாக நடத்திக் காண்பித்தவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பது திரையுலக வரலாறு.

தமிழ்த் திரையுலகம் போலவே வடக்கத்திய ஹிந்தி திரையுலகத்தையும் இப்படி ஒரு சர்வே எடுத்தால் என்ன என்ற ஆசையால் உருவானதுதான் இந்தப் பதிவு..!

தர்மேந்திரா – ஹேமமாலினி

‘வெண்ணிற ஆடை’ தமிழ்ப் படத்தில் நடிப்பதற்காக மேக்கப் டெஸ்ட் எடுத்து, ‘இது ஸ்கிரீனில் காட்ட முடியாத முகவெட்டு’ என்று சொல்லி இயக்குநர் ஸ்ரீதரால் நிராகரிக்கப்பட்ட ஹேமமாலினி, பின்பு ஹிந்திக்குச் சென்று ‘முடிசூடா ராணி’யாகத் திகழ்ந்தது பாலிவுட் சரித்திரம்.

ஜெமினிகணேசன், சாவித்திரியைப் போலவே இங்கும் பிரபலமானது தர்மேந்திரா-ஹேமமாலினி ஜோடிதான்..! 

‘Sholay’, ‘Charas’, ‘Aas Paas’, ‘Jugnu ‘, ‘Seeta Aur Geeta’, ‘The Burning Train’ என்று புகழ் பெற்றத் திரைப்படங்களில் இந்த ஜோடி பலரது கண்களையும் உறுத்தினாலும் ‘ஷோலே’யிலேயே ஹேமமாலினியின் லொட லொட பேச்சில் தர்மேந்திரா கவிழ்ந்துவிட்டது பிற்பாடுதான் தெரிந்தது.

பிரகாஷ்கவுரை மணந்து இரண்டு ஆண் குழந்தைகளுக்குத் தந்தையாக இருந்த தர்மேந்திரா, ஹேமமாலினியின் தாயார் ஜெயா சக்கரவர்த்தியிடம் நேரில் சென்று பெண் கேட்டு ஹேமமாலினியை மணம் முடித்தார். ஆனாலும் இந்து மத முறைப்படி முதல் மனைவியிடமிருந்து சட்டப்படி பிரியாமல் இன்னொரு திருமணம் செய்ய முடியாது என்பதால் முஸ்லீமாக இருவருமே மதம் மாறித் திருமணம் செய்து கொண்டார்கள். இதன் பின்புதான் தர்மேந்திரா தனது முதல் மனைவியை டைவர்ஸ் செய்தார். ஆனாலும் சேர்ந்து வாழ்ந்து வருகிறார்..!???

இரண்டு பெண் வாரிசுகளுடன் இப்போதுவரையிலும் இணை பிரியாதவர்களாக இருக்கும் இந்த ஜோடியில் ஹேமமாலினியின் இந்தக் காதலுக்கு காரணம் என்னவாக இருக்கும் என்று யாரால் சொல்ல முடியும்..?

ஹெலன் – சலீம்கான்

“ஏன்? ஏன்? ஏன்? ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன்.. ஏன்.. ஏன்..?” என்று ‘வசந்தமாளிகை’யில் நடிகர் திலகத்துக்கு வக்காலத்து வாங்கியபடியே ஆடிய ஹிந்தித் திரையுலகின் ‘கவர்ச்சிக் கன்னி’ ஹெலன் இது போன்றதொரு முடிவைத்தான் தன் சொந்த வாழ்க்கையிலும் எடுத்தார்.


இவர் காதலித்தது சினிமா கதாசிரியர் சலீம்கான் மீது. சலீம்கான் அப்போதே திருமணமானவர். சல்மாகான் என்றொரு மனைவி இருந்தார். இந்த சல்மாகான் மூலமாக தற்போதைய ஹிந்தி சூப்பர் ஸ்டார் நடிகர் சல்மான்கான், சோகைல்கான், அர்பஜ்கான் என்ற மூன்று மகன்களும் அல்வீரா என்ற மகளும் இவருக்கு இருந்தனர். 

ஆனால் காதல் கண்ணை மறைத்துவிட்டது. சலீம்கான், ஹெலன் மீதான காதலில் உறுதியுடன் இருந்ததால் சல்மாகான் இதற்கு ஒத்துக் கொண்டார். ஹெலனையும் மணந்து கொண்டார் சலீம்கான்.

ஷப்னா ஆஸ்மி – ஜாவேத் அக்தர்..!

இந்தி திரையுலகில் கவர்ச்சி தவிர நடிப்பை மட்டுமே காட்டுவதில் முன்னணி நடிகைகளாக இருந்தவர்கள் ஒரு சம காலத்தில் இருவர் மட்டுமே. அதில் ஒருவர் ஸ்மிதா பாட்டீல். மற்றவர் ஷப்னா ஆஸ்மி.

தான் நடிக்கும் கலைச் சிற்பங்களைப் போன்ற படங்களுக்கு திரைக்கதையை வடித்துக் கொடுக்கும் சிற்பியான ஜாவேத் அக்தருடன் பல மாதங்கள் பழகிய பின்பு காதல் கொண்டார் ஷப்னா. ஜாவேத்தும் அப்போது திருமணமானவர்தான். 


ஹனி இரானி என்னும் திரைக்கதை ஆசிரியர்தான் ஜாவேத்தின் மனைவி. அவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் இருந்தன. ஆனாலும் ஷப்னாவின் காதலுக்காக தனது மனைவி ஹனியை டைவர்ஸ் செய்துவிட்டு ஷப்னாவை திருமணம் செய்து கொண்டார் ஜாவேத்.

இங்கே எந்தப் பெண்ணியமும் பேசப்படாமல், காதல் மட்டுமே பேசப்பட்டதை நினைவு கூர்க..!

ஜெயப்பிரதா – ஸ்ரீகாந்த் நகாதா

தெலுங்கு படவுலகில் கிளாமர் ஹீரோயின் என்று சுண்டிவிட்டால் ரத்தம் வரும் அளவுக்கு செக்கச் செவேல் என்றிருந்த ஜெயப்பிரதாவை, அன்றைக்கு இருந்த தெலுங்கு ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து ஆடினார்கள்..!


ஆனால் இவரது துரதிருஷ்டம் வேறு மாதிரியானது. 1979-ல் கே.விஸ்வநாத்தின் ‘சர்கம்’ என்கிற ஹிந்திப் படத்தில் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்ட ஜெயப்பிரதா மளமளவென முன்னேறி தெலுங்குலகின் முன்னணி நட்சத்திரமானார்.

அதே வேகத்தில் 1986-ல் ஸ்ரீகாந்த் நகாதா என்னும் திரைப்படத் தயாரிப்பாளரைத் திருமணம் செய்து கொண்டதாக அறிவித்தார். இந்த நகாதாவுக்கு சந்திரா என்ற பெண்ணுடன் ஏற்கெனவே திருமணமாகி அவர் மூலமாக 3 குழந்தைகளும் இருந்தன.

இத்திருமணத்தை ஏற்காத நகாதாவின் முதல் மனைவி சந்திரா ஜெயப்பிரதாவை பழி வாங்கிய விதம்தான், எல்லோருக்கும் பிலிம் காட்டும் இந்திய சினிமாவுலகத்துக்கே, பிலிம் காட்டிவிட்டது.

தனது கணவர் நகாதாவை மருத்துவமனைக்கு நைச்சியமாக அழைத்துப் போய் அவருக்கே தெரியாமல் குடும்பக் கட்டுப்பாட்டு ஆபரேஷனை செய்துவைத்துவிட்டார் சந்திரா. ஒரு மாதம் கழித்து இதனை பகிரங்கமாக வெளிப்படுத்திய சந்திரா, “இனிமேல் என் பிள்ளைகள் மட்டும்தான் ஸ்ரீகாந்த் நகாதாவின் குடும்ப வாரிசுகள்.. முடிந்தால் ஜெயப்பிரதா, என் கணவர் ஸ்ரீகாந்த் நகாதா மூலம் பிள்ளை பெற்றுக் காட்டட்டும்…” என்று பத்திரிகைகளில் சவால் விட்டதைக் கண்டு இந்தியத் திரையுலகமே ஆடிப் போய்விட்டது..!

ஜெயப்பிரதா அடைந்த அதிர்ச்சிக்கு அளவேயில்லை.. ஆனாலும் கணவருக்காக பொறுத்துக் கொண்டவர் நாளாவட்டத்தில் கட்சி, அரசியல் ஈடுபாடு காரணமாக தனது கணவரிடமிருந்து விலகியவர் இப்போது ஒட்டும் இல்லை; உறவும் இல்லை என்ற நிலையில் இருக்கிறார்.

“நான் வாழ்க்கையில் செய்த ஒரே முட்டாள்தனம், நகாதாவை திருமணம் செய்ததுதான்” என்று சொல்லி தனது மணவாழ்க்கைக்கு ஒரு முற்றுப் புள்ளியை சோகத்துடன் வைத்திருக்கிறார் ஜெயப்பிரதா.

சங்கீதா பிஜ்லானி – முகமது அஸாருதீன்

சிற்சில ஹிந்தி திரைப்படங்களில் நடித்து சல்மான்கானை லவ்விக் கொண்டு பாலிவுட்டில் பத்திரிகைகளுக்கு தீனி போட்டுக் கொண்டிருந்த  சங்கீதா பிஜ்லானி சல்மான்கானுடனான தனது காதல் முறிந்து போன சோகத்தில் கிரிக்கெட் ஆட்டத்தைப் பார்க்கப் போய் நல்லதொரு குடும்பத்தையே பவுன்ஸராக்கிவிட்டார்.


நிர்மா பவுடர் விளம்பரத்தில் பளிச்சென்று அத்தனை அழகிய உடையில் முகத்தைக் காண்பித்த சங்கீதா, ஒரு காதலை மறக்க அடுத்தக் காதலை ஏற்பதுதான் சரியான வழி என்று நினைத்திருந்த சூழலில்தான் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் முகமது அஸாருதீனை சந்தித்தார். கிளீன்போல்டு அஸாரூதின்.

தனது மனைவி, மகன் என்று அழகாக இருந்த முகமது அஸாருதீனை பார்த்த மாத்திரத்திலேயே இழுத்துப் பிடித்த சங்கீதாவுக்கு, அஸாருதினே ஷாஜகான் போல் தனக்குத் தெரிவதாகச் சொல்லிவிட.. தனது மனைவியை விவகாரத்து செய்வதைத் தவிர அஸாருதீனுக்கு வேறு வழியில்லாமல் போனது..!

அஸாரூதின் திருமணத்திற்கு முன்பு தன்னைப் பெண் பார்க்க வந்த தனது தந்தை வீட்டு வரவேற்பறையில், சில ஆண்டுகள் கழித்து அதே போன்றதொரு மாலை வேளையில் சுற்றிலும் மதப் பிரமுகர்களை வைத்துக் கொண்டு தன்னைப் பார்த்து ‘தலாக்’ ‘தலாக்’ ‘தலாக்’ என்று மூன்று முறை சொன்ன சூழலை பத்திரிகைகளில் அவருடைய மனைவி பேட்டியாகச் சொல்லியிருந்த துயரத்தைப் படித்தவர்களில் நானும் ஒருவன். இன்னமும் என்னால் அதனை மறக்க முடியவில்லை..!

பின்பு சங்கீதா பிஜ்லானியுடன் அமர்க்களமாக தனது திருமணத்தை முடித்துக் கொண்டார் அஸாருதீன். அவருடைய முன்னாள் மனைவியும் இப்போது வேறொரு திருமணம் செய்து கொண்டு துபாய் சென்றுவிட்டது வேறு கதை.

ஸ்ரீதேவி – போனி கபூர்

“இவருக்கு எப்பத்தான் கல்யாணமாம்.. ஒரு ச்சின்ன க்ளூவாவது கொடுங்கப்பா..?” என்று பத்திரிகையாளர்களை அங்கலாய்க்க வைத்தவர் ஸ்ரீதேவிதான். ‘நான் அடிமை இல்லை’ படத்தோடு தமிழ்ச் சினிமாவுக்கு ஒரு குட்பை சொல்லிவிட்டு பாலிவுட்டில் ராணியாக வலம் வந்த ஸ்ரீதேவிக்கு ஏற்பட்ட சொந்தப் பிரச்சினைகளே ஏற்கெனவே திருமணமாகி வயதுக்கு வந்த பிள்ளைகள் இருக்கும் சூழலிலும், போனி கபூர் என்னும் ஹிந்தி திரைப்படத் தயாரிப்பாளருக்கு கழுத்தை நீட்டும் சூழ்நிலையைக் கொடுத்தது.


தனது அப்பாவின் மரணம்.. தொடர்ந்து அம்மாவுக்கு ஏற்பட்ட உடல் நலக் குறைவு என்று துணைக்கு ஆள் இல்லாமல் அல்லல்பட்ட நேரத்தில் தான் தயாரிக்கும் ‘மிஸ்டர் இந்தியா’ படத்தில் நடிக்கும் ஹீரோயின் என்கிற முறையில், ஸ்ரீதேவிக்கு உதவிகள் செய்ய ஓடோடி வந்தார் போனி கபூர்.

ஸ்ரீதேவியின் அம்மாவுக்கு மூளை ஆபரேஷனில் ஏற்பட்ட குளறுபடிக்காக அமெரிக்க மருத்துவமனை நஷ்டஈடாகத் தந்த 75 கோடி ரூபாய்தான் ஸ்ரீதேவியை சட்டென திருமண முடிவெடுக்க வைத்தது.


போனிகபூரின் முதல் மனைவி இதனை கடுமையாக எதிர்த்தும், பிள்ளைகள் தடுத்தும் போனிகபூர் இதில் உறுதியாக நின்றார். தனது தம்பியும் நடிகருமான அனில்கபூரின் உதவியுடன் ஸ்ரீதேவியை ரகசியத் திருமணமும் செய்து கொண்டார்.

ஆனாலும் ஆத்திரம் தீராத போனிகபூரின் மாமியார் ஒரு நாள் நட்சத்திர ஹோட்டலில் போனிகபூருடன் பார்ட்டியில் இருந்த ஸ்ரீதேவியின் செவிட்டில் நாலு அறை கொடுத்து தனது ஆத்திரத்தை வெளிப்படுத்திய கதையும் நடந்தது. அத்தோடு போனியின் முதல் மனைவியுடனான சகவாசமும் முடிந்தது. போனி கபூருக்கு விரைவில் டைவர்ஸூம் கிடைத்தது.

நடிகர் விஜயகுமாரின் சென்னை வீட்டில் ஸ்ரீதேவிக்கு நடந்த வளைகாப்பு நிகழ்ச்சியின்போதுதான் ஒரு வருடமாக தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்த ஸ்ரீதேவியின் உண்மை வாழ்க்கை வெளியே வந்தது.

இந்தக் காதலுக்குக் காரணம் கொஞ்சம் பணமும், அதிகமாகத் தேவைப்பட்ட பாதுகாப்பும்தான் என்பது ஊரறிந்த விஷயம்..!

ரவீணா தாண்டன் – அனில் தண்டான்

நடிகர் அக்ஷய்குமாருடனான தனது தெய்வீகக் காதல் ஒரு பாரில் நடந்த சின்ன கருத்து மோதலில் முடிந்து போய்விட்டதில் சோகத்துடன் இருந்த ரவீணாவுக்கு, ஆறுதல் சொல்ல வந்தவர்தான் திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தரான அனில் தண்டான்.

போகிறபோக்கில் ரவீணாவின் வீட்டு வேலைகளையெல்லாம் செய்து அவரது அம்மாவுடன் நல்ல நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு “இப்படியொரு மாப்பிள்ளை நமக்குக் கிடைச்சா எப்படியிருக்கும்..?” என்று டிவி சீரியல் பாணியில் தனது வருங்கால மாமியார் மனதில் ‘பச்செக்’கென்று இடம் பிடித்துவிட்டார் அனில்.


வினை அனில் தண்டானின் முதல் மனைவிக்கு நடாஷா ஷிப்பிக்குத்தான் போனது. அரசல் புரசலாக செய்தியறிந்து கோபப்பட்ட நடாஷாவுக்கு, ஆறுதல் சொல்லும் விதமாக விவாகரத்து நோட்டீஸ் அனுப்பி புல்லரிக்க வைத்தார் அனில்.

ரவீணா ஷீட்டிங்கிற்கு போகின்ற ஊருக்கு முதல் நாளே அங்கே சென்று எல்லா வசதிகளும் ‘அம்மா’வுக்கு தோதாக இருக்கிறதா என்று சோதிக்கிற அளவுக்கு நல்லவராக இருந்த அனிலை, ரவீணாவாலும் மறக்க முடியவில்லை..!


அனிலுக்கு டைவர்ஸ் கிடைத்ததும், ஜெய்ப்பூர் கோட்டையில் வைத்து கோலாகலமாகத் திருமணம் செய்துகொண்டார் ரவீணா டாண்டன்.

கரீஷ்மா கபூர் – சஞ்சய் கபூர்

ஆரவாரமாக அமிதாப்பச்சனின் குடும்ப வாரிசு அபிஷேக்பச்சனுடன் நிச்சயத்தார்த்தம் செய்து வைக்கப்பட்ட ராஜ்கபூர் பேத்தி கரிஷ்மா கபூரின் அந்தத் திருமணம், ஏதோ ஒரு காரணத்தால் முறிந்து போனது சோகமயமானதுதான்..

இடையில் ஒரு குதிரைப் பந்தய மைதானத்தில் தான் சந்தித்த சஞ்சய் என்பவரைக் காதலிக்கத் துவங்கிய கரீஷ்மா, அவர் திருமணமானவர் என்பது தெரிந்தும் இன்னும் அதிகமாக காதலித்துவிட்டார். 


விளைவாக சஞ்சய் தனது மனைவியையும், குழந்தையையும் பிரிந்து ஓடி வந்து கரீஷ்மாவை திருமணம் செய்து கொண்டுவிட்டார். இதுக்கு காரணமெல்லாம் கேட்கக் கூடாது. தம்பதிகளுக்கு இப்போது ஆறு வயதில் சமீரா என்றொரு மகள் இருக்கிறாள். 

இந்தத் தம்பதிகளுக்கு இடையிலும் பல முறை சண்டை, சச்சரவுகள் ஏற்பட்டு அது வீதிக்கு வந்து நிற்க.. இப்போதுதான் பெரியவர்களாக பார்த்து ஏதோ ஒரு பெவிகால் போட்டு ஒட்டி வைத்திருக்கிறார்கள்.

ஷில்பா ஷெட்டி – ராஜ்குந்த்ரா

ராஜஸ்தானின் ராயல்ஸ் சேலஞ்ச் அணியில் ஜீரோ பங்குகள் வைத்திருந்தும் அதற்குச்  சொந்தக்காரராக இருக்கும் வித்தியாசமான முதலாளியான ஷில்பா ஷெட்டி திருமணம் செய்திருக்கும் ராஜ்குந்திரா லண்டனில் மிகப் பெரும் தொழிலதிபர்.

ஷில்பா, தன்னை உலகத்துக்கே அடையாளம் காட்டிய டிவி ரியலிட்டி ஷோவில் பங்கேற்கச் சென்றபோதுதான் ராஜ்குந்த்ராவை சந்தித்தார். பார்த்த மாத்திரத்தில் ராஜ்குந்த்ரா கவிழ்ந்துவிட.. ஷில்பாவும் அதனை ஏற்றுக் கொண்டார்.

ராஜ்குந்த்ராவுக்கு ஏற்கெனவே கல்யாணம் ஆகி குழந்தையும் இருந்தது. விரைவில் தன்னைத் திருமணம் செய்து கொள்வதற்கு ஏதுவாக மனைவியை விவாகரத்து செய்யும்படி ராஜ்குந்த்ராவுக்கு ஷில்பா உத்தரவிட ராஜ்குந்த்ராவும் அதை ஏற்று முதல் மனைவியை விவகாரத்து செய்துவிட்டு ஷில்பாவை திருமணம் செய்து கொண்டுவிட்டார்.


“இப்படி கல்யாணமான ஒருவரை மணக்க வேண்டிய அவசியம் என்ன?” என்று ஷில்பாவிடம் கேட்டபோது “எனக்கும் கஷ்டமாத்தான் இருக்கு. இதுனால என் பேமிலிக்கு ரொம்ப கெட்ட பேரு வந்திருச்சேன்னு வருத்தமாவும் இருக்கு. இருந்தாலும் ராஜ்குந்திராவை நான் டீப்பா லவ் பண்றனே..! அதை என்னால மறைக்க முடியலை.. அவரை மறக்கவும் முடியல.. நான் என்ன செய்யறது..?” என்கிறார் ஷில்பா. காதலுக்குக் கண்ணில்லையாமே..?

கரீனா கபூர் – சயீப் அலிகான்

இப்போதுவரையிலும் சேர்ந்து வாழ்கிறார்கள். “எப்போது திருமணம்..?” என்று கேட்டால் வானத்தைக் கை காட்டுகிறார்கள் இந்தத் தம்பதிகள்.

தன்னைவிட வயதில் குறைந்த நடிகர் ஷாகித்கபூருடன் சில ஆண்டுகளாக லவ்விக் கொண்டிருந்த கரீனா கபூர், ஒரு மதிய பொழுதில் ரெஸ்ட்டாரெண்ட் ஒன்றில்  இவர்கள் நாக்கோடு நாக்கு உரசி ஏதோவொரு ஆராய்ச்சி செய்து கொண்டிருந்ததை, செல்போனில் படம் பிடித்த எவனோ ஒருவன், ‘மும்பை மிட்டே’ பத்திரிகைக்கு அதைப் போட்டுக் கொடுத்ததினால் எழுந்த பிரச்சினையில் இவர்களது காதலும் காணாமல் போய்விட்டது.

இந்த வேகத்தில்தான் சிக்கினார் சயீப் அலிகான். பட்டியாலா ராஜ வம்சத்தைச் சேர்ந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் நவாப் மன்சூர் அலிகான் பட்டோடிக்கும், ஹிந்தியின் மற்றொரு கனவுக் கன்னி ஷர்மிளா தாகூருக்கும் பிறந்தவர். 


தன்னைவிட 6 வயது மூத்த அம்ரிதா சிங்(‘மாவீரன்’ படத்தின் ஹிந்தி மூலமான ‘மர்த்’ படத்தில் அமிதாப்பச்சனுக்கு ஜோடியாக நடித்தவர்)கை திருமணம் செய்து இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையாக இருந்த நிலையில், மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 2004-ம் ஆண்டில் அம்ரிதா சிங்கை விவாகரத்து செய்தார் சயீப். 

இதன் பின்பு கொலம்பியாவைச் சேர்ந்த ரோஸா என்கிற மாடலிங் பெண்ணுடன் இரண்டாண்டு காலமாக காட்சி தந்த சயீப், 2007-ம் ஆண்டு திடிரென்று அந்த உறவு கசந்து போனதாகச் சொல்லி முறித்துக் கொண்டார்.
 

மிகச் சரியாக இந்த நேரத்தில்தான் இணைந்தார்கள் கரீனா கபூரும், சயீப் அலிகானும். இவ்வளவு வேகமாக இதுவரையில் எந்த சினிமா ஜோடியும் நிஜவாழ்க்கையில் ஒட்டியதில்லை. அப்படியொரு ஒட்டுதலுடன் இருந்ததினால் அம்ரிதா சிங்கை டைவர்ஸ் செய்தார் சயீப் அலிகான்.

தம்பதிகள் இருவரின் டைரிகளுமே தற்போது கால்ஷீட்டுகளால் நிரம்பி வழிவதால், “முதலில் முடிந்தவரையில் கல்லா கட்டுவோம். பின்பு பார்த்துக் கொள்வோம்.. கல்யாணமானாத்தான் சேர்ந்திருக்கணுமா என்ன?” என்று கேள்வி கேட்டுவிட்டு இப்போதே தம்பதிகளாக வாழ்கிறார்கள்.

இப்படி ஒவ்வொருவரும் தங்களுக்கு வந்தது காதல்தான் என்று சொல்லி மனைவிகளுக்கு ரிவீட் அடிப்பதால் இந்தக் ‘காதல்’ என்கிற வார்த்தையை எதிர்த்து யாரும் எதுவும் சொல்ல முடியாத காரணத்தினால் இவர்கள் தப்பித்துக் கொள்கிறார்கள்..!

ஆனாலும் காதல் என்கிற உணர்வு இருக்கின்றவரையில் இதனைக் கட்டுப்படுத்துவது என்பது முடியாது என்றே தோன்றுகிறது..!

இதில் யார் செய்வது சரி.. யார் செய்வது தவறு என்று யாராலும் சொல்ல முடியவில்லை. இந்த பாழாய்ப் போன தனி மனித உரிமையும், கட்டற்ற சுதந்திரமும் இடையில் புகுந்து குடும்பம் என்கிற வார்த்தையை உடைப்பதால் இதில் மாட்டிக் கொள்வது மனைவிகளாகிய பெண்கள்தான்..!

பெண்ணுக்கே பெண்ணே எதிரி என்பதற்கு இதைவிடவும் சிறந்த உதாரணங்கள் இருக்க முடியாது..!

– ‘இவள் புதியவள்’ – ஜூலை-2010

டிஸ்கி : தமிழ்ச் சினிமாவில் இந்த லிஸ்ட், அடுத்து வரும் பதிவில்..!