24.01.2009
என் இனிய வலைத்தமிழ் மக்களே..
இந்தச் செய்தி நேற்றைய ‘டெக்கான் கிரானிக்கல்’ பத்திரிகையில் நான் படித்தது. இதுவரையில் நான் அறிந்திராத செய்தியாக இருந்ததினால், அதனை இங்கே கூடுமானவரையில் மிகச் சரியாக மொழி பெயர்த்து பதிவிட்டுள்ளேன்.
US LAWYER SEEKS ACTION AGAINST LANKA OFFICIALS
இலங்கை பாதுகாப்புத் துறை செயலாளர் கோத்தபாய ராஜபக்சே, இலங்கை அதிபரின் அரசியல் ஆலோசகர் பஷில் ராஜபக்சே மற்றும் இலங்கை இராணுவத்தின் தலைமைத் தளபதி சரத்பொன்சேகாவுக்கு எதிராக 1000 பக்கங்கள் கொண்ட குற்றச்சாட்டுக்கள் அடங்கிய பட்டியல் ஒன்று அடுத்த வாரம் அமெரிக்க நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
இலங்கையில் வசிக்கும் தமிழர்களைத் திட்டமிட்டு படுகொலை செய்ததாக இந்த இருவர் மீதும் குற்றச்சாட்டுக்கள் உரிய ஆவணங்களின் மூலம் வைக்கப்பட்டுள்ளதாம்.
புரூஸ்பெயின் என்ற அமெரிக்காவைச் சேர்ந்த சர்வதேச வழக்கறிஞர்தான் இந்தக் குற்றச்சாட்டுக்களைத் தயார் செய்திருக்கிறார். இவர் ரொனால்டு ரீகனின் ஆட்சிக் காலத்தில் அஸோஸியேட் டெபுடி ஜெனரல் அட்டர்னியாகப் பணியாற்றியவர். மனித உரிமை அமைப்புகளில் அதிக காலம் ஆர்வத்துடன் பணியாற்றியிருக்கிறார். வாஷிங்டன் டைம்ஸ், நியூயார்க் டைம்ஸ் போன்ற பத்திரிகைகளில் மனித உரிமைகள் பற்றி பல காலம் கட்டுரைகள் எழுதியவராம். அமெரிக்க அரசியல் சட்டம் மற்றும் சர்வதேச நீதிமன்ற விவகாரங்களில் திறன் பெற்றவர்.
தற்போது TAG(Tamils Against Genocide) என்கிற அமைப்பின் வழக்கறிஞராக உள்ளார்.
கொடுங்கோலர் இலங்கை அதிபர் ராஜபக்சே, இவரது உடன்பிறப்பான கோத்தபாய ராஜபக்சே, இன்னொரு உடன்பிறப்பு பஷில் ராஜபக்சே, இராணுவத் தளபதி சரத் பொன்சாகே ஆகிய நால்வருக்கும் எதிரான படுகொலைக்கான எச்சரிக்கை தாக்கலை சமர்ப்பித்திருக்கும் புரூஸ், “இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டவுடன் இதன் மீது அமெரிக்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கும்..” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
“அமெரிக்க அரசாங்கமே தனித்து இது போன்ற படுகொலை வழக்குகளை கையாள முடியும்” என்கிறார் இந்த சட்டத் தரணி. இதற்கு இவர் சொல்லும் முதல் காரணம், “கோத்தபாய ராஜபக்சே, பஷில் ராஜபக்சே, சரத் பொன்சேகா மூவருமே அமெரிக்க குடியுரிமை பெற்றவர்கள்” என்பதுதான். இந்த மூவரும் அமெரிக்காவில் நிரந்தர குடியிருமைக்கான கிரீன் கார்டை பெற்றுள்ளார்களாம்.
கோத்தபாய ராஜபக்சே கலிபோர்னியாவில் San Dimas என்கிற இடத்தில் 1 மில்லியன் டாலர் மதிப்புள்ள வீட்டுக்குச் சொந்தக்காரராம்.
இவரது தம்பியும், மகிந்தாவுக்கு அரசியல் ஆலோசகருமான பஷில் ராஜபக்சே கலிபோர்னியாவில் Fontana என்கிற இடத்தில் 5 மில்லியன் டாலர் மதிப்பள்ள வீடு வைத்துள்ளாராம்.
இவர்களுக்கு சளைக்காத சரத்பொன்சேகா தன் மகள் பெயரில் ஓக்லஹாமாவில் சொத்துக்கள் வாங்கியுள்ளதாகவும் தெரிகிறது.
“கிரீன் கார்டு வைத்துள்ள அமெரிக்க குடிமக்கள் யாரேனும் ஏதாவது திட்டமிட்ட படுகொலைகளில் சம்பந்தப்பட்டிருப்பின் அவர்களுக்கெதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள அமெரிக்க சட்டமான US Genocide Accountability Act(18 U.S.C.1091) வலியுறுத்துகிறது..” என்கிறார் புரூஸ்.
இந்தச் சட்டத்தின்படிதான் தான் இந்த குற்றப்பத்திரிகையை தயார் செய்திருப்பதாக கூறுகிறார் புரூஸ். இந்த ஆயிரம் பக்க குற்றப்பத்திரிகையில் பக்சே சகோதரர்கள் மற்றும் சரத்பொன்சேகா நால்வரும் இலங்கையில் தமிழர்களைத் திட்டமிட்டு கொன்று குவித்துள்ளது குறித்து ஆதாரங்களுடன் விளக்கப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்.
“இந்த ஆதாரங்களை வைத்து அமெரிக்க குடிமகன்களான கோத்தபாயவும், சரத்பொன்சேகாவும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டாக வேண்டும்..” என்கிறார் புரூஸ்.
“ஒபாமா ஆட்சி இந்த அறிக்கைக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கும்..” என்ற கேள்விக்கு பதிலளித்திருக்கும் புரூஸ், “இதற்கான அழுத்தத்தை எமது அமைப்பும், தமிழ் மக்களும் அமெரிக்க அரசுக்குக் கொடுப்பார்கள்” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
2005-ம் ஆண்டு பக்சே சகோதரர்கள் ஆட்சிக்கு வந்த பின்னர், இதுவரையிலும் 13000 சாதாரண சிவிலியன்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள் என்றும், இதற்கான ஆதாரங்கள் இந்தக் குற்றப்பத்திரிகையில் சமர்ப்பிக்கட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். “இந்த கொடூர யுத்தத்தால் 1.3 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர்” என்று கவலை தெரிவித்துள்ளார்.
“உலக நாடுகள் மத்தியில் இலங்கை அரசின் இந்த கொடூரத்தனம் வெட்டவெளிச்சமாக இருந்த காரணத்தினால்தான் ஐ.நா.வுக்கான மனித உரிமை கவுன்சிலுக்கு நடந்த தேர்தலில் இலங்கை தோற்றுப் போனது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எப்படியோ.. எப்பாடுபட்டாவது எந்தத் திக்கிலாவது, இந்த கொடூர சகோதரர்களின் நிஜ முகம் வெளிப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டால் இலங்கை மக்களுக்கு ஓரளவேனும் நிம்மதி கிடைக்கும்.
பார்க்கலாம் என்ன நடக்கிறதென்று..?