Archive for the ‘புனிதப்போர்’ Category

தைரியம் இருந்தா போட்டிக்கு வாங்க பதிவர்களே..!

ஒக்ரோபர் 16, 2009

16-10-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

குறும்படம் எடுத்தது பெரிசில்லை.. வீட்ல வைச்சு நானே ஆயிரம் வாட்டி பார்த்ததும் பெரிசில்லை. ஏதோ தெரியாத்தனமா பிரெண்டானவங்களையெல்லாம் பார்க்க வைச்சு கதறடிச்சதும் பெரிசில்ல.. ஊர்க்காரங்க பட்ட இம்சையை உலகம் பூரா பரப்பி அவுகளையும் நோகாம நொங்கெடுக்கணும்ன்றதுதான் இப்ப நம்மளோட கொள்கை.. லட்சியம்..

ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுன்னு நான் எடுத்த புனிதப்போர் குறும்படத்தைப் பத்தி நானே பெருமையா சொல்லிக்கக் கூடாது.

இருந்தாலும், “இவனெல்லாம் ஒரு படம் எடுத்திட்டானே.. அதுலேயும் முப்பதாயிரம் ரூபா செலவுல.. டைரக்டர்ன்னு வேற பேர் போட்டுக்கிட்டானானே”ன்ற வயித்தெரிச்சல்ல நிறைய பேர் ‘பொங்கித் தீர்த்த கதை’யையெல்லாம் அப்பவே நான் என் அப்பன் முருகன்கிட்ட ‘பாஸ்’ பண்ணிட்டு ‘லூஸ்’ல விட்டுட்டேன்.

ஆனாலும் நீங்க பட்ட அந்த இம்சையை ஸ்டேட் முழுக்க கொண்டு போகணும்னு நினைச்சுத்தான், தமிழ்நாட்டுல நடந்த அத்தனை குறும்படப் போட்டிகளுக்கும் அனுப்பி, போஸ்ட்லேயே எல்லாருக்கும் ‘தூக்குத் தண்டனை’ கொடுத்திட்டிருக்கேன்.

அந்த வகைல என்னுடைய.. இல்ல.. இல்ல.. தப்பு.. தப்பு.. நம்முடைய ‘புனிதப்போர்’ குறும்படம், இதுவரைக்கும் தமிழ்நாட்டுல இது மாதிரி போட்டி நடத்துற அத்தனை ஊர்களுக்கும் பயணப்பட்டு, தன்னோட கொடுமையை நிறைவேத்தியிருக்கு..

இப்போ இன்னொரு முயற்சியா டெல்டா மாவட்டத்தில் இருந்து டால்டா செய்ய ஒரு நல்ல ஆஃபர் வந்திருக்கு.. விட்டுற முடியுமா? களத்துல குதிக்குறதுன்னு முடிவு பண்ணிட்டேன்.

நம்ம திருவாரூர் மாவட்டத்துல இருக்குற பன்னாட்டு லயன்ஸ் சங்கம்(324-A2 மாவட்டம்) படைப்பிலக்கியப் பரிசுப் போட்டி 2009-2010 என்கிற தலைப்பில் ஒரு போட்டியை நடத்துது. கூடவே குறும்படப் போட்டியும் நடத்துதாம்.

இந்த மாசம் வெளிவந்த ‘கிழக்கு வாசல் உதயம்’ அப்படீன்ற புத்தகத்துல இந்த நியூஸ் வெளியாகியிருக்கு.

இந்தப் போட்டிக்காக சிறுகதை எழுத்தாளர்களும், குறும்படத் தயாரிப்பாளர்களும் அவங்கவங்க எழுதின சிறுகதைகளையும், குறும்படங்களையும் அனுப்பி வைக்கச் சொல்லியிருக்காங்க..

சிறுகதைப் போட்டிக்காக சில விதிமுறைகளைக் கொடுத்திருக்காங்க.. அது என்னன்னா..?

1. போட்டியில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். கதைகள் A4 அளவில் 7 பக்கங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும். அதே அளவில் ஈ-மெயிலிலும் அனுப்பலாம்.

2. இதுவரை பிரசுரமாகாத கதையாக இருத்தல் வேண்டும். போட்டி முடிவுகள் அறிவிக்கும்வரை வேறு எந்த இதழுக்கும் அனுப்புதல் கூடாது.

3. தழுவல் அல்லது மொழி பெயர்ப்புக் கதையாக இருக்கக் கூடாது. சொந்தக் கற்பனை என்ற உறுதி தேவை.

4. பரிசுக்குரிய கதைகள், அதற்கென அமைக்கப்படும் தேர்வுக் குழுவால், தகுதியின் அடிப்படையில் முடிவு செய்யப்படும். அந்த முடிவே இறுதியானது.

5. அனுப்பும் கதைகளுக்கு நகல் எடுத்துக் கொண்ட பின், கதைகளை அனுப்பவும். தேர்வு பெறாத கதைகளை திருப்பியனுப்ப இயலாது.

சிறந்த சிறுகதைகளுக்கு முதல் பரிசு ரூபாய் பத்தாயிரம். இரண்டாம் பரிசு ரூபாய் ஐந்தாயிரம்.. மூன்றாம் பரிசு ரூபாய் மூவாயிரம்.

இவை தவிர சில கதைகள் ஆறுதல் பரிசுக்குரியதாக தேர்வு செய்யப்படுமாம்.

குறும்படப் போட்டிக்கான விதிமுறைகள்

1. கடந்த 2000ம் ஆண்டிற்குப் பிறகு எடுக்கப்பட்ட குறும்படங்களாக இருத்தல் வேண்டும். ஆவணப் படங்கள் போட்டிக்கு ஏற்புடையதல்ல.

2. 30 நிமிடங்களுக்கு மேற்படாத கால அளவு கொண்டிருத்தல் வேண்டும்.

3. குறும்படத்தின் இரண்டு CDக்களை அல்லது DVDக்களை அனுப்ப வேண்டும்.

4. போட்டிக்கென குறும்படத்தை அனுப்புபவர் எந்த உரிமையின் அடிப்படையில் அதை அனுப்புகிறார் என்பதைத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.

போட்டிக்கு வரும் குறும்படங்களில் சிறந்த 5 படங்கள் பரிசுக்குரியவையாகத் தேர்ந்தெடுக்கப்படும்.

ஒவ்வொரு படத்துக்கும் தலா ரூபாய் ஐந்தாயிரம் பரிசாகத் தரப்படும்.

தேர்வுக் குழுவின் முடிவே இறுதியானது.

சிறுகதைகளும், குறும்படங்களும் அனுப்ப வேண்டிய முகவரி

லயன் உத்தமச்சோழன்
மாவட்டத் தலைவர் – கலை, இலக்கியம்
525, சத்யா இல்லம்
மடப்புறம்-614 715
திருத்துறைப்பூண்டி
தொலைபேசி எண் : 04369-223292
அலைபேசி எண் : 94433-43292
மின்னஞ்சல் முகவரிகள் : kizhakkuvaasal@gmail.com / kizhakku_vaasal@yahoo.co.in

படைப்புகள் அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய கடைசி தேதி 31-10-2009

என்ன பதிவர்களே.. முழுவதுமாக படித்து விட்டீர்களா..?

சிறுகதைப் போட்டியாம்.. ஆனால் ‘7 பக்கந்தான்’ அப்படீன்னு கண்டிஷன் போட்டிருக்கிறது எனக்கு ஒத்து வரலை. அதுனால வேற யாராச்சும் எனக்குப் பதிலா பரிசை வாங்கிக்கட்டும்னு ஒதுங்கிட்டேன்.

ஆனா அந்தக் குறும்படப் போட்டியை விடுறதா இல்லை..

கண்டிப்பா என்னோட ‘புனிதப்போர்’ காவியத்தை இந்தப் போட்டிக்கு அனுப்பப் போறேன்.. நிச்சயம் ஜெயிப்பேன் என்று இதுவரையில் அனுப்பிய அத்தனை போட்டிகளிலும் நம்பினதைப் போல இந்தத் தடவையும் உறுதியா நம்புறேன்..

நெஞ்சுல ‘தில்’ இருந்தா.. மனசுல ‘மாஞ்சா’ இருந்தா.. உடம்புல ‘வலு’ இருந்தா.. மைண்ட்ல ‘தைரியமிருந்தா’.. அவங்கவங்க எடுத்த குறும்படத்தை அனுப்பி என்னோட ‘புனிதப்போரோட’ போட்டி போடுங்க பார்ப்போம்..

ஒரு கை பார்த்திருவோம் மக்களே..!

வாங்க.. வாங்க.. தயாராயிருக்கேன்..!!!

மறந்திராதீங்க.. வர்ற அக்டோபர் 31, கடைசி நாளு..

அதுக்குள்ள உங்களோட படைப்புகளை அனுப்பிருங்க..

நன்றி..!!!