Archive for the ‘புத்தக விமர்சனம்’ Category

வலையுலக வாத்தியார் சுப்பையா அவர்களின் கதைகள் – விமர்சனம்..!

ஜூலை 7, 2009

06-07-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

கல்வி எதற்காக..? உலகம் அறிந்து கொள்வதற்காக.. உலகமெனில் அசையும், அசையாப் பொருட்கள், அவற்றின் மூலதாரம், மனிதர்கள், இவர்தம் படைப்புகள், அந்தப் படைப்புகளின் வரலாறு, உலகத்தின் இயல்பு, நடப்பு, இவை அத்தனையையும் சுருக்கி ஒரு கடுகளவைவிட மிகக் குறைந்த அளவே நம்மால் கற்க முடிகிறது.

இதை வைத்து வாழ்ந்துவிட முடியுமா..? முடியாது.. கல்வி தரும் அங்கீகாரத்தில் கிடைக்கும் வாழ்க்கையை அனுபவிக்கும்போது கிடைக்கின்ற பாடங்களை நாம் எப்படி எதிர்கொள்கிறோம் என்பதில்தான் நமக்குக் கிடைத்த கல்வி நமக்கு உபயோகமாக இருக்கிறதா அல்லது வீணாகிப் போனதா என்பதே தெரிய வரும்.

“படித்தவன் பாழும் செய்தால் ஐயோவென்று போவான்” என்பார்கள். இதையே படிக்காதவன் செய்துவிட்டால் இந்த “ஐயோ..”வில் கொஞ்சம் இரக்கக் குணமும் சேர்ந்துவரும்.. “பாவம்.. படிக்காதவன்..” என்று..

ஆகக்கூடி வாழ்க்கையில் எது நல்லது.. எது கெட்டது என்று நாம் தெரிந்து கொள்ள கல்வி பயன்படுகிறது என்றாலும், அதனை பரிசோதித்து பார்க்கின்றபோது சில படித்தவர்கள் படிக்காதவர்கள் போலவும், பல படிக்காதவர்கள் படித்தவர்கள் போலவும் மாறிவிடுவது நம் வாழ்க்கையில் நாம் அன்றாடம் காணும் சில நிகழ்வுகள்.

அப்படிப்பட்ட சில நிகழ்ச்சிகளைத்தான் நமது வலையுலக வாத்தியார் திரு.சுப்பையா அவர்கள் தனது செட்டிநாட்டு மண்வாசனைக் கதைகள் மூலம் வெளிக்கொணர்ந்திருக்கிறார்.

ஒன்றல்ல இரண்டல்ல.. இதுவரையில் 52 கதைகளை எழுதியிருக்கும் நமது வாத்தியார் அவற்றில் தேர்ந்தெடுத்த 20 கதைகளை மட்டும் இந்த முதல் தொகுப்பில் வெளியிட்டுள்ளார். அத்தனையும் கற்கண்டுகள். சந்தேகமில்லை.

புத்தகத்தில் பக்கத்திற்கு பக்கம் செட்டி நாட்டு அறுசுவை மணக்கிறது. செட்டி நாட்டு மக்களின் பழக்க வழக்கங்கள், பேச்சுக்கள், எழுத்துக்கள், நடை, உடை பாவனைகள் என்று அத்தனையையும் கச்சிதமாகப் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார்.

ஒருவர் மீதான இனம் காணாத வெறுப்பும், பார்த்த மாத்திரத்திலேயே எழும் கோபம் சுடுகாடுவரையிலும் நீடிக்கும் தன்மையும் இன்றைக்கும் நாட்டு மக்களிடையே புழங்கி வரும் இன்றைய இயந்திரச் சூழலில் இரண்டுக்கும் முடிச்சுப் போடுவது போல அன்பான பேச்சிலும், நடத்தையிலுமே ஒருவர் மனதை ஒருவரால் வெல்ல முடியும் என்பதை தனது கதைகளில் சொல்லியிருக்கிறார் வாத்தியார்.

வார்த்தை ஜாலங்கள் இல்லை. வார்த்தை விளையாட்டுக்களை காணோம். முடிச்சுக்கள் தெரியவில்லை. சொற்றொடர்களின் ஆதிக்கம் உணரவில்லை.. ஆனால் அந்த செட்டி மண்ணின் மனம் மணக்கிறது. இந்த மணத்துடன் அனைத்து வகை மனிதர்களுக்கும் பொருந்தாற்போல் வாழ்க்கை அனுபவங்களை நம் முன் வைத்திருக்கிறார்.

செட்டி நாட்டு அரண்மனைகளின் வெளிப்புறம் நமக்கு அளிக்கும் தோற்றத்திற்கும் உட்புறமாக இருக்கும் மாந்தர்களின் மனப்போக்கிற்கும் இடையேயுள்ள பெரும் வித்தியாசத்தை வேறொரு கோணத்தில் மிக அழகாக படம் பிடித்திருக்கிறார் வாத்தியார்.

முதல் கதையான ‘மதிப்பும், மரியாதை’யுமே என்னை அசர வைத்துவிட்டது.. என்னே ஒரு கதைக்கரு..! நிமிடத்தில் ஏற்படும் கோபத்தின் விளைவால் பெற்றெடுத்த பிள்ளைகள் வேண்டாதவர்களாகி விடுவார்களா என்ன..? வேண்டாம் என்கிறார் வாத்தியார். ஆனால் அதற்காக அவர் சொல்கின்ற சமாதானம்தான் அருமை..

ஒவ்வொருவரின் ஊரிலும், ஏதோவொரு தெருவில் மீனி ஆச்சியைப் போல ஒருத்தரை நம்மால் பார்க்க முடியும். எனது சொந்த அனுபவத்திலும் நான் கண்டிருக்கிறேன். “அது, அது கொழுப்பெடுத்து அலையுதுக..” என்று காலம் முழுவதும் பழிச்சொல்லை சுமந்து கொண்டு திரிந்த அந்த ஜீவன்களின் அகத்தையும், புறத்தையும் ஒருசேர கண்டுணர்ந்திருக்கிறார் அந்தக் கதையில்.. மெளனமும் ஒரு மொழி என்பதை அவர் காண்பிக்கும் அந்த இடம் ஒரு ஹைக்கூ கவிதை..

கருப்பஞ்செட்டியாரின் கஞ்சத்தனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கின்ற கதையில் வாத்தியார் சொல்கின்ற நீதி, “போகும்போது எதைக் கொண்டு போகப் போகிறாய்..? இருக்கும்போது இருப்பவர்களுக்குக் கொடு.. அந்தப் புண்ணியமே நீ விடைபெறும்போது உடன் வரும்..” என்கிற தத்துவத்தை அழகாக போதிக்கிறது.

சந்தேகம்.. சந்தேகம்.. எல்லாவற்றையும் தானே இழுத்துப் போட்டு செய்துகொண்டு நேரமில்லை நேரமில்லை என்று அலுத்துக் கொள்வதிலும் சிலர் முனைப்பாக இருக்கிறார்கள். அவர்களுக்காகவும் ஒரு நீதிக்கதை உண்டு.. ‘நல்ல துணை’யில்.. உண்மையில் இது மாதிரியான ஒரு பக்கத்தை நாம் இதுவரையில் திரும்பிப் பார்க்காததால்தான் இந்த புலம்பல்கள் அதிகம் உலவுகின்றன என்று நினைக்கிறேன்.

உடன் பிறந்தோரை சந்தேகத்துடன் பார்க்கும் சில உடன்பிறப்புக்கள், பெற்ற தாயையும், கட்டிய மனைவியையும், ஒன்று சேர வைக்கத் துடிக்கும் கணவன்மார்கள், விதவையான மாமியாரை தங்களது குடும்பத்துடன் சேர்த்து வைக்க ஆசைப்பட்ட மனைவி, ஆசை, ஆசையாக வளர்த்த தனது பாட்டியின் பூர்வீக வீட்டை நிலை நிறுத்த ஆசைப்படும் பேரன்.. அம்மாவையும் அனுசரித்து மனைவி வீட்டாரையும் பெருமிதப்படுத்தும் கணவன், நட்சத்திரம், ஜாதகம் என்று நம்பிக் கொண்டு மகனுக்கு பெண் கிடைக்காமல் அல்லல்படும் ஒரு பெற்றோர் என்று நமது கண் முன்னே அக்கம்பக்கம் வீடுகளையே கொண்டு வந்து காட்டுகிறார் வாத்தியார்.

இவர்களுக்கு சொல்கின்ற தீர்வுதான் நாம் முன்பு யோசித்திராத கோணம். திரைப்படங்களில் இதுவரையில் பார்த்திராத காட்சியமைப்புகள்தான் கைதட்டல் பெறும். அதே போலத்தான் வாத்தியாரின் கதை சொல்லும் நீதி ஒவ்வொன்றும் தனித்தன்மை வாய்ந்தவை.

கோவிலுக்கு சமமான வீட்டையே இடித்துத் தரைமட்டமாக்கும் தொழில் தன்னைப் பொறுத்தவரையில் ஒரு தொழில் அவ்வளவுதான் என்று நினைத்த செட்டியாருக்கு, அதற்கான ‘பரிசு’ கிடைத்தவுடன் அவர் மூலம் கேட்கின்ற கேள்வியில் இருக்கிறது நமது வாத்தியாரின் பாடம் சொல்லித் தரும் திறமை.

கொஞ்சமும் வாய்ப்பைத் தவறவிடவில்லை. ஒவ்வொரு கதையாடலிலும் ஒரு விஷயத்தைச் சொல்லித் தருகிறார். பாடத்தைக் கற்றுக் கொடுக்கிறார். பூர்வீக மண்ணைத் துறந்து அயல் மண்ணில் பணம் ஈட்டும் மகனது குடும்பத்தைப் பற்றிக் கவலைப்படும் பாட்டிகள் அத்தனை ஊர்களிலும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் இவர்கள் கவலைப்படுகின்ற விஷயம் அயல் நாட்டில் இருக்கின்ற அந்த இளசுகளுக்குத் தெரியுமா? புரியுமா..? புரிந்தாலும், புரியாவிட்டாலும் பாட்டிகளின் மனநிலை இதுதான் என்பதை புரிய வைக்கிறார் ஒரு கதையில்..

‘மண் கெட்டது மனசால.. பெண் கெட்டது வாயாலே’ என்கிற பழமொழிக்கேற்ப பேசியே வம்பை வாங்கும் ஒரு மனைவியை திருத்த கணவன் செய்யும் முயற்சிகளை மிக, மிக வித்தியாசமாக அணுகியிருக்கிறார் வாத்தியார். சாட்சாத் இது மனோதத்துவ ரீதியான அனுபவம். சிறுகதைகளுக்குள் பெரும் உரையாடல் இது..

கதைகளைச் சொல்வதற்கு ரொம்ப மெனக்கெடவில்லை வாத்தியார். மிகச் சுலபமான சொற்றொடர்களைப் பயன்படுத்தி, மிக எளிமையாக, படிக்கத் தூண்டுகின்ற விதத்தில் ‘நச்’ என்று முடிவை மட்டும் முடித்து வைத்து அடுத்த கதையை படிக்க வைக்கிறார்.

“பாடம், படிக்காமல் கெட்டது.. பிள்ளை, கண்டிக்காமல் கெட்டது.. கடன், கேட்காமல் கெட்டது.. உறவு, பார்க்காமல் கெட்டது..” என்று நமது வாழ்க்கை ரகசியங்களை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறார் வாத்தியார்.

துணைக்கு என் அப்பன் முருகனையும், அவரது மற்றும் எனது ஆரூயிர்க் காதல் கவிஞன் கண்ணதாசனையும் அழைத்துக் கொண்டுள்ள வாத்தியார் பக்கத்திற்கு பக்கம் இவர்களை முறைப்படுத்தி பெருமிதப்பட்டுள்ளார்.

வாழ்க்கையை வாழ்வதற்கு யாருக்குத்தான் ஆசையிருக்காது. ஆனால் வாழ விடுகிறதா வாழ்க்கை அனுபவம்..? சோகங்களும், ஆற்றாமைகளும் சேர்ந்து மனிதரை துயரக்கடலில் தள்ளிவிடும்போது துணைக்கு நம்முடன் நிற்பது அந்த இறைவன் மட்டுமே எனும்போது அதுதான் நமது கடைசி நம்பிக்கை.. இந்த 20 கதையிலும் யாரோ ஒருவருக்கு அந்த அப்பன்தான் துணைக்கு இருக்கிறான். இதுவே நெஞ்சுக்கு நிம்மதி என்கிறார் வாத்தியார்.

நூறு சுய முன்னேற்ற நூல்களைப் படித்தாலும் இதில் இருக்கும் கதைகளின் அனுபவத்தினையும், பாடத்தினையும் உங்களால் பெற முடியாது..

இதுவே வாழ்க்கை என்கிறார் வாத்தியார்..!

அதை வாழ்ந்து பார் என்கிறார் வாத்தியார்..!

நன்றியிலும் நன்றி வாத்தியாருக்கு…!

படித்துப் பாருங்கள்..! மனித வாசனை புரியும்..!!!

செட்டி நாட்டு மண் வாசனைக் கதைகள்
எழுதியவர் : SP.VR. சுப்பையா
பக்கங்கள் : 160
விலை : ரூபாய் 75.

வெளியீடு

உமையாள் பதிப்பகம்
பழைய எண் 94 : புது எண் 14
சொர்ணாம்பிகா லே அவுட்
ராம் நகர்
கோயம்புத்தூர் – 641 009.
அலைபேசி : 94430-56624

சென்னையில் புத்தகம் கிடைக்குமிடங்கள்

உமா பதிப்பகம்
18 / 171, பவளக்காரத் தெரு
மண்ணடி
சென்னை – 600001
தொலைபேசி எண்-25215363

குமரன் பதிப்பகம்
19, கண்ணதாசன் சாலை
தி.நகர்
சென்னை-600017
தொலைபேசி எண் – 24353742