22-11-2009
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
அரசியல்வாதிகளை ‘அரசியல்வியாதிகள்’ என்றே நான் குறிப்பிட்டு வருவதைக் குறித்து பல அரசியல் விமர்சனப் பதிவர்கள் நேரிலும், எழுத்திலும் ரொம்பவே வருத்தப்பட்டுக் கொண்டார்கள். ‘எனது அரசியல் விமர்சனங்கள் ரொம்பவே ஓவராக இருப்பதாக’ அவர்கள் குறை சொல்லி வருகிறார்கள்.
நான் என்ன வேண்டுமென்றே பொச்செரிச்சலுடனா அவர்களைக் கடித்துக் குதறிக் கொண்டிருக்கிறேன். முகமூடி அணிந்து கொள்ளையடிக்கும் திருட்டுக் கும்பலைப் போல, முகமூடி அணியாமல் வெள்ளை வேஷ்டி, சட்டையில் கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் இந்தக் கும்பலுக்கென்ன மாலை, மரியாதையா செய்ய முடியும்..?
நமது மாநிலம்தான் இப்படி என்றால் கேள்வி கேட்பாரே இல்லாத புதுவை மாநிலத்தில் கேட்கவா வேண்டும்? புகுந்து விளையாடுகிறார்கள் அமைச்சர்கள்..
மக்கள் ஏதேனும் குற்றம், குறைகளை சுட்டிக் காட்டிப் பேசினால் மட்டும் “ஐயையோ.. நம்ம ஸ்டேட்டை பத்தி உங்களுக்கே தெரியாதா? எல்லா பைலும் டெல்லிக்கு போய் கையெழுத்தாகிதான் வரணும்.. கொஞ்சம் லேட்டாகும்.. எல்லாத்துக்கும் டெல்லிதான் காரணம்..” என்று கூசாமல் பொய்யை மொழுகி அதன் மேல் சாணியைத் தெளித்து கோலம் போட்டும் வாய்ச்சொல் வீரர்கள் அல்லவா இவர்கள்..
ஆனால் தங்களது சொந்த நலன்களுக்காக கொள்ளையடிக்க இறங்கிவிட்டால் மட்டும் தயங்காமல் உடனுக்குடன் காரியங்களைச் செய்து கொள்கிறார்கள். அதிலும் உடன் இருந்தே குழி பறிப்பது, காலை வாரி விடுவது என்பதெல்லாம் புதுவை அரசியலில் மிக சர்வசாதாரணமான விஷயம். எல்லாம் ஒரு லெவல் வரைக்கும்தான்.. ஆட்சிக்கு வந்துவிட்டால் அந்தப் பதவியைத் தக்க வைத்துக் கொள்ள எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கூட்டுக் கொள்ளையடிக்க தங்களுக்குள் ஒப்பந்தம் செய்து கொள்வார்கள்.
இதோ இங்கே பாருங்கள்.. புதுவையில் ஆட்சி செய்யும் காங்கிரஸ் தலைமையிலான அரசின் முதலமைச்சரும், சில அமைச்சர்களும் மக்களின் வரிப்பணத்தை எப்படியெல்லாம் கொள்ளையடித்திருக்கிறார்கள் என்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது.
தகவல் கேட்புரிமைச் சட்டத்தின்கீழ் பெறப்பட்ட சில உண்மைத் தகவல்கள் இந்த அரசியல் வியாதிகள் சிறையில் இருக்க வேண்டிய வியாதிகள்தான் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
புதுவை முதல்வர் வைத்திலிங்கம் தனது சொந்த வீட்டில் குடியிருந்து கொண்டே வீட்டு வாடகையை அரசிடம் இருந்து வசூலித்து வருகிறார். மாத வாடகை 39000 ரூபாயாம். இவரல்லவோ முதல் அமைச்சர்..?
2008, ஆகஸ்ட் 9-ம் தேதியன்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் திண்பண்டங்களுக்காக முதல்வர் செலவிட்ட தொகை 1 லட்சத்து 6000 ரூபாயாம். இதே போல் ஒன்பது மாதங்களில் திண்பண்டங்களுக்காக மட்டுமே 10 லட்சத்து 4000 ரூபாயை செலவழித்திருக்கிறார் முதல்வர் வைத்திலிங்கம். இவரை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை..
இவர் மட்டுமா? தலையே இப்படி இருந்தால் ‘வாலுகள்’ எந்த லட்சணத்தில் இருக்கும்..?
தொழிலாளர் துறை அமைச்சர் கந்தசாமி தனது சொந்த வீட்டிற்கு வாடகையாக அரசிடமிருந்து பெறும் தொகை 14000 ரூபாய். திண்பண்டங்களுக்காக ஒன்பது மாதங்களில் இந்த அமைச்சர் செலவிட்டுள்ள தொகை, அதிகமில்லை ஜென்டில்மேன்ஸ்.. 9,47,000 ரூபாய் மட்டுமே. இதுபோக டீ, பிஸ்கட்டுக்கான செலவு மட்டும் 3,49,648 ரூபாயாம்.
கல்வித்துறை அமைச்சர் ஷாஜகான் தனது சொந்த வீட்டிற்கு அரசிடமிருந்து வாடகையாக பெறும் தொகை 69,940 ரூபாய். இதில் இதுவரையில் அந்த வீட்டை அழகுபடுத்த வேண்டி அவர் செலவிட்ட அரசுப் பணம் 17,49,187 ரூபாய். இன்னமும் 15,03,000 ரூபாய்க்கு கொட்டேஷன் கொடுத்திருக்கிறாராம்.. அதுவும் மத்திய அரசிடமிருந்து சாங்ஷன் ஆகிவிட்டதாம்..
2008, அக்டோபர் 28-ம் தேதி ஒரு நாளில் மட்டும் 78,000 ரூபாய்க்கு திண்பண்டங்கள் வாங்கியதாக கணக்குக் காட்டியிருக்கிறார். இவர் செலவிட்டுள்ள நான்கு மாத திண்பண்டங்கள் செலவுத் தொகை 1,50,000 ரூபாய். ஒன்பது மாத திண்பண்டச் செலவு 2,79,000 ரூபாய் என்று மொத்தக் கணக்கும் காட்டி பில் பட்டுவாடா செய்யப்பட்டுவிட்டது.
பொது சுகாதாரத் துறை அமைச்சர் நமச்சிவாயம் தனது அலுவலகத்தை அலங்காரப்படுத்த செலவழித்த தொகை 13,25,511 ரூபாய். இனி செய்யப் போகும் செலவுக்கான எஸ்டிமேட் தொகை ரூபாய் 9,88,880. அக்டோபர் 28-ம் தேதியன்று ஒரு நாளில் மட்டும் திண்பண்டங்களுக்காக இவர் செலவிட்ட தொகை 75,000 ரூபாய். இவருடைய ஒன்பது மாத திண்பண்டங்களுக்கான மொத்தச் செலவு 6,88,000 ரூபாய்.
உள்துறை அமைச்சர் வல்சராஜ் டிசம்பர் 5, 2008 அன்று ஒரு நாள் மட்டும் திண்பண்டங்களுக்காக 60,000 ரூபாயை செலவழித்திருக்கிறார். இவருடைய ஒன்பது மாத திண்பண்டச் செலவு 4,35,000 ரூபாயாம்.
போதுமா..?
கிராமப்புறங்களில் தங்களுடைய குடிசை வீட்டை மராமத்து செய்யவே வக்கில்லாமல் எத்தனையோ ஏழை மக்கள் அல்லாடிக் கொண்டிருக்க..
இந்த வெட்கங்கெட்ட ஜென்மங்கள் லட்சம், லட்சமாக தின்றே தீர்க்கிறார்களே.. இவர்களையெல்லாம் அரசியல் வியாதிகள் என்று சொல்லாமல் வேறு எப்படி சொல்வது..?