Archive for the ‘பாலபாரதி’ Category

நினைத்தேன் எழுதுகிறேன்-28-08-2008

ஓகஸ்ட் 28, 2008

28-08-2008

என் இனிய வலைத்தமிழ் மக்களே..

ரசன் அன்றே கொல்வான்; தெய்வம் நின்றே கொல்லும் என்ற பழமொழி பல நிலைகளில் பலித்திருப்பதை நான் கண்கூடாகக் கண்டிருக்கிறேன். நேற்றும் கண்டேன்.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சசிகலாவின் உறவினர் பாஸ்கரனுக்கும், அவருடைய மனைவிக்கும் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

இந்த பாஸ்கரனும் அம்மாவின் முதல் ‘பொன்னான’ ஆட்சிக் காலத்தில் சப்தமில்லாமல் கொடி கட்டிப் பறந்து கொண்டிருந்தார். அதிலும் அப்போதைய பத்திரிகையாளர்கள் சுலபத்தில் இவரை மறந்துவிட முடியாது.

சென்னை, நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் இருந்த அமலாக்கப் பிரிவு அலுவலகத்திற்கு சசிகலா ஆஜராக வந்தபோது பத்திரிகையாளர்கள் பெருமளவு கூடியிருந்தார்கள். அவர்களின் கேமிராக்களில் சசிகலாவின் முகம் பதியாத வண்ணம் எங்கிருந்தோ அழைத்து வரப்பட்டிருந்த வாட்டசாட்டமான ஆட்கள் வட்டவடிவில் நின்று கொண்டு தங்களது கைகளை ஒரு சேரத் தூக்கி இணைத்துக் கொண்டு பத்திரிகையாளர்களை இடித்துத் தள்ளி கோரத் தாண்டவமாடியதை நான் கண்கூடே கண்டேன். அந்த அரும்பணியைச் செய்து புண்ணியம் தேடிக் கொண்டவர் இந்த ரிசர்வ் பேங்க் பாஸ்கரன்தான் என்பதை பத்திரிகைகள் பிற்பாடு புலனாய்வு செய்து சொல்லியிருந்தன.

அந்த ‘ராமராஜ்ய’ கட்டத்தில் சின்னம்மாவின் சீற்றத்திற்குள்ளான அனைத்து விஷயங்களிலும் பாய்ந்தவைகள் இவருடைய வில் சேனையிலிருந்து கிளம்பிய அம்புகள்தான். ஆனாலும் எதிலும் ஆதாரமில்லை என்று சொல்லி அப்போதும் சரி.. அதற்குப் பின்னான தி.மு.க. ஆட்சியிலும் சரி ‘கை’ வைக்க முடியாத நிலையில்தான் இருந்தார்.

ஆனாலும் ஒரு முறை ஒன்று சேர அடித்த சி.பி.ஐ.யின் ரெய்டில் மட்டுமே சிக்கினார். பத்திரிகைகளின் கைகளுக்கு நியூஸ் போகாதவண்ணம் நடந்து முடிந்த இந்த சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற விசாரணையின் முடிவு மட்டும், அனைத்து கண்டங்களுக்கும் தெரிந்துவிட்டது.

ஆடும்வரை ஆடுங்கள். எல்லாம் முடிந்த பின்பு கிடைக்க வேண்டியது கண்டிப்பாக கிடைத்தே தீரும்.

* * * * * * *

சிபுசோரன் தனது நீண்ட நாள் கனவான முதல்வர் பதவியை அடைந்துவிட்டார். மாயாவதி மாநிலம் முழுவதும் அரசு செலவில் தன்னுடைய உருவச் சிலையை அமைக்கச் சொல்லி உத்தரவிட்டுவிட்டார். லாலூ பிரசாத் யாதவ் அடுத்தத் தேர்தலில் கூட்டணி பற்றி சரத்யாதவுடன் பேசத் தயாராகிவிட்டார். ஜெயலலிதா பாரதீய ஜனதாவுடன் கூட்டணி வைக்காதபட்சத்தில் கம்யூனிஸ்ட்கள் அ.தி.மு.க.வுடன் இணைய வாய்ப்புண்டு என்று மார்க்சிஸ்ட் கட்சியினர் தெரிவித்துவிட்டார்கள்.

ஆக மொத்தத்தில் லஞ்சம், ஊழல், முறைகேடு, சி.பி.ஐ., கோர்ட், வழக்கு, தீர்ப்பு என்று எல்லா ஜல்லியையும் ஓட்டுப் போட்ட அப்பாவிகளும், பொழுது போகாத நமது பதிவர்களும்தான் பேசவும், எழுதிக் கொள்ளவும் வேண்டும். யாருக்கும் இங்கே வெட்கமில்லை என்பதனை மீண்டும், மீண்டும் நாம் நிரூபித்தே வருகிறோம்.. வாழ்க ஜனநாயகம்..

* * * * * *

டைசியாக நேற்று இரவு கிடைத்த செய்திகளின்படி தம்பி பாலபாரதி திருமணப் பந்தத்தில் சிக்கிக் கொண்டதாக அவரே ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளதாகத் தெரிகிறது.

அவர் பதினாறு செல்வங்களும் பெற்று பெருவாழ்வு வாழ என் அப்பன் முருகப் பெருமானை வேண்டிக் கொள்கிறேன்.